ஆதாம்-ஏவாள் கதைகள்!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: September 23, 2012
பார்வையிட்டோர்: 25,239 
 

முதல் முறையாக ஆதாம் அழுதான்!

கண்ணீரின் சுவை, உப்பு. கண்ணீரின் காரணம், காதல்.

ஆதாமின் விலா எலும்பிலிருந்துதான் ஏவாள் தோன்றி னாள். ஆனால், அவனது உயிர்ப் பறவை துடித்ததோ அவளது நெஞ்சுக்கூட்டில். அவனது பொழுதுகளை அவளே சிருஷ்டித்தாள். அவளது பார்வை யின் ஒளியில் பகல் உருவானது. அணைப்பின் இருளில் இரவு கரு வானது. செல்லக் கோபங்களின் சிவப்பில் அந்தி திரண்டது. தீராத கிறுக்கில் பூமி சுழன்றது.

ஏகாந்தத்தின் இலை மறைவில் இதயக்கனி ஊசலாடும் காலம்… சாயங் காலம். நெருப்புக்குக் கற்கள் தேடிப் போயிருந்த ஏவாளுக்காகக் காத்திருந் தான் ஆதாம். ஆப்பிள் தந்துவிட்டுப் போன சாத்தான் சந்தர்ப்பம் பார்த்து வந்து நின்றது,

‘‘என்ன மாப்ள, டல்லா இருக்கே?’’

‘‘இல்லியே… ஏவாள் கல்லு பொறுக் கப் போயிருக்கா! அதான் டைம் பாஸ§க்கு எதுவும் இல்லாம…’’

‘‘கல்லுதான் பொறுக்கப் போயிருக் காளா..?’’ – வார்த்தைகளால் வலை பின்னி, அவனது காதலின் கால் தடத் தில் விரித்துச் சிரித்தது சாத்தான்.

‘‘ஆமா… அப்படியே எனக்குப் பழம் பறிச்சுட்டு வரேன்னு சொன்னா…’’

‘‘போடா மொக்க..! நானும் கவனிச்சுட்டுதான் இருக்கேன். ஏவாள் இப்பல்லாம் முன்ன மாதிரி இல்ல. பார்ட்டி செம தெளிவு, பார்த்துக்க! கல்லு பொறுக்க, கனி பறிக்கன்னுதான் போவா… எங்க, என்ன பண்றானு யாருக்குத் தெரி யும்? வலுவா சிக்கிக்கிட்டு, வாழ்க்கையைத் தொலைச்சுப்புட்டு, கட்டிங் பழரசம் வேணும்னு வந்து கண்ணைக் கசக்காத, ஆமா..!’’ – சொல்லிவிட்டுச் சாத்தான் சடசடத் துப் பறந்தது. ஆதாமின் ஆறாம் அறிவில், குழப்பத்தின் முதல் ஜன்னல் படபடத்துத் திறந்தது.

அவனுக்காக ஏவாள் காதல் கசிய பார்த்துப் பார்த்துப் பறித்து வந்த கனிகள் சிதறிக்கிடந்தன.

‘‘எங்கடி போன… என்னை ஏமாத்துறியா நீ?’’- கத்தினான் ஆதாம்.

‘‘அப்போ, நீ என்னை சந்தேகப் படுறியா?’’ – கலங்கினாள் ஏவாள்.

ஏதேன் வனத்தின் தூக்கமற்ற பாழ்வெளியில் பசித்துக்கிடந்தனர் இருவரும். அவனது இதயத்தை சாத்தானின் சொற்களும் ஏவாளின் நினைவும் பங்கு போட்டுத் தின்றன. அவளது கண்ணீரில் ஆதாமே வழிந்து உலர்ந்து கரித்தான். ஒரு கணம், ‘உசுரா இருந்தவளை தப்பா நினைச்சுட்டமோ?’ என ஆதாம் இருண்டு புரண்டான். ‘ஏன்டா இப்படிப் பண்ணே… என்னைப் புரியாதா?’ என ஏவாள் புரண்டு இருண்டாள். இரவு பகலாகி, உறவு பிரிவாகி… கடித்துவைத்த ஆப்பிளில் அன்பின் உதிரம் பெருகி வழிந்தது; காலம் உருகிக் கரைந்தது.

‘‘மவனே… எங்க அம்மாவைப் பத்தி எவனாச்சும் தப்பாப் பேசினா, மண்டையப் பொளந்துருவேன்டா..!”- – சிந்தாதிரிப்பேட்டை டாஸ்மாக் ஒன்றில், கையில் காலி பீர் பாட்டிலுடன் ஆவேசமாக நின்றான் ஆதாம். பொடி மாஸ் தட்டு சிதறிப் பறக்க, போதையில் மிரண்டார்கள் சகாக்கள்.

‘‘ஏய் ச்சீ… அந்த பாட்டிலைப் புடுங்குரா. ஆளையும் மூஞ்சியையும் பாரு. டேய்! இவனுக்கு இன்னொரு பீர் சொல்றா…”- அவனை இழுத்து உட்காரவைத்தார் இஸ்திரிச் சட்டைப் பெரிய மனிதர் ஒருவர்.

‘‘சும்மா சூடாகாத மாப்ள… டப்புனு பாட்டிலைத் தூக்கிட்டியே, சொருவுடா! சொர்க்கம்தான்…” –

பிளாஸ்டிக் குவளையில் நுரைத்து முறைத்த பீரை கல்படித்தான் ஆதாம்.

‘‘உங்க அப்பன் ஏன்டா பொட்டுனு தூக்குப் போட் டுக்கினு பூட்டான் சொல்லு… அவஞ் செத்த அன்னிக்கு நானே தாங்க முடியாம அழுதேன்டா! ஆனா, உங்க அம்மா எப்பிடி கொஸ்த்துகணக்கா நின்னானுதான் பார்த்தமே..! இப்பவும் ஏதாவது கொறஞ்சிருக்கா. இன்னாத்துக்கு அவன் புல்லட்டுல குந்திக்கினு திரியுது சொல்லு..?”- கரகரவென பிளாஸ்டிக் குவளைகள் முறிந்து விழுந்தன.

நாய்கள் குரைத்தோடும் மஞ்சள் வெளிச்சத் தெருக் களில் சித்தம் கலங்கி நடந்தான் ஆதாம். கல்யாணமான புதிதில் அம்மாவும் அப்பாவும் மகாபலிபுரம் யானைச் சிலையின் காலடியில் வாய்கொள்ளாத சிரிப்புடன் அமர்ந்திருக்கும் புகைப்படம் மூளையில் மடிந்தது. தடுமாறி விழுந்தான். தலை உதறி எழுந்து உத்தேசமாக வீடடைந்து கதவை இடித்தான். அவனது சட்டைக்கு பட்டன் கோத்தபடி கதவைத் திறந்தாள் அம்மா.

‘‘குடிச்சியா..? ராஸ்கல், நான் இன்னும் உசுரோட இருக்குறது உனக்குப் புடிக்கலையா? ஏன்டா இப்பிடிப் பண்ற..?”

‘‘பேசாத..! நான்தான சாவேன்? செத்துப் போறேன். நீ புல்லட்ல போ!”-

அவனைப் பயத்தோடு பார்த்தாள் அம்மா. இதயம் சுண்டித் துடித்து கண்ணீர் விசுக்கென்று இமை உடைத்தது.

‘‘உங்கப்பனைப் பாக்குற மாதிரி இருக்குடா… பாவிப் பயலே, வாடா!” – அவனைப் பிடித்து இழுத்து உட்கார வைத்தாள். சாப்பாடு எடுத்து வந்து பிசைந்தாள். ‘‘சாப்புட்டுப் படு… கொடலு என்னத்துக்குடா ஆவும்..?”

‘‘போ போ! சாப்பாடும் வேணாம், ஒண்ணும் வேணாம்…”- தட்டு தெறித்து விழுந்தது. கதவைப் படீரென்று சாத்தி, தூக்கத்தில் விழுந்தான் ஆதாம்.

சட்டமிட்ட போட்டோவில் சந்தன மாலையுடன் புன்னகைத்த புருஷனைப் பார்த்தாள் அம்மா. ஒண்டுக்குடித்தன வீட்டில் புருஷன் குடித்துவிட்டு வந்து சண்டையிடும் ராத்திரிகள் நினைவில் எரிந்தன. தாளாத கடனோடு அவன் தூக்கிட்டுச் செத்துப்போன நடுப்பகலில் அவள் சேலைக்குள் ஒளிந்துகொண்ட ஆதாம் இதோ… ‘நானும் செத்துப்போகிறேன்’ எனத் தூங்குகிறான். எக்ஸ்போர்ட் கம்பெனிகளிலும், டெலி போன் பூத்துகளிலும் அவனைச் சுமந்துகொண்டு வேலை பார்த்த நாட்கள் கண்களில் உருண்டன. ஒரு கணம் செத்துப்போய்விடலாம் எனத் தோன்றியது. ஆதாம் இருக்கிறான்… நமக்காக இருக்கிறான் என உயிர் தேற்றினாள். ‘ஆதாம்… உனக்காக ஒருத்தி வருவா… அவளை நல்லா பார்த்துக்கடா’ எனத் தூங்கிப்போன மகனின் தலை கோதினாள்.

‘‘ஏய்… எத்தனை கால் பண்ணியிருக்கேன் தெரி யுமா..? எங்கடி போய்த் தொலைஞ்ச..?” – மொபைலில் கிர்ர்ரென வைப்ரேட் ஆனான் ஆதாம்.

‘‘ஹே! சைலன்ஸ்ல போட்டிருந்தேன்… பார்க்க லைப்பா! ஆமா, நீ என்ன ஓவரா டென்ஷன் ஆகுற? நாங்க போன் பண்ணும்போதெல்லாம் மதிக்கவே மாட்டீங்க… நீங்களா ஃபீல் பண்ணும்போது நாங்க வழியணுமா..?”- சிரிப்பில் ரிங்கினாள் ஏவாள்.

சாஃப்ட்வேர் கம்பெனி சம்பளக்காரி. ஏ.ஸி. கேபினுக்குள் ஒல்லிப்பிச்சான் கம்ப்யூட்டரில் பீட்டர் பெடலெடுக்கும் அவளுக்கும், +2-வில் நாலு அட்டை வாங்கி ரிச்சி ஸ்ட்ரீட்டில் எலெக்ட்ரானிக்ஸ் உதிரி பாகங்கள் விற்கும் ஆதாமுக்கும் காதல் வந்தது கெமிஸ்ட்ரியில் ஒரு ஹிஸ்ட்ரி!

‘‘மச்சான்! அஞ்சு ஆஃபாயிலை அப்பிடியே உடையாம மொங் கிட்டின்னா அம்பது ரூபா பெட்ரா..!” -எனும் ரேஞ்சில், எப்போதும் ஏரியா பசங்களின் சிறுபிள்ளை விளையாட்டு களிலேயே சிக்கிச் சீரழிந்தான் ஆதாம். பெண் வாசமே இல்லாத அவனது பேட்டையில் ஆஃபாயில்கள் உடைந்து கொண்டே இருந்தன. பிக்சர் டியூப் போன டி.வி-யாகக் கிடந்த அவனுக்குள் டிஜிட்டல் சவுண்டுடன் நுழைந்தாள் ஏவாள். கடைக்கு ஸ்பேர் பார்ட்ஸ் வாங்க வந்தவளிடம் மனசையே சர்வீஸ§க்கு விட்டான். செல் நம்பர்கள் பரிமாறினார்கள். கண் வழியும் செல் வழியும் செம்புலப் பெயல் நீர் கலந்தன.

‘‘இப்படியே இருந்துடறதா எண்ணமா..? லைஃப்ல என்ன பண்ணப்போற..?”-முத்த மிட இழுத்தவனை நிறுத்திக் கேட்டாள் ஏவாள்.

‘‘ஏன், இப்படியே இருந்தா கட்டிக்க மாட்டியா?”

‘‘ஸ்டுப்பிட்! நான் அதைச் சொல்ல லைடா…”

‘‘ஆமாமா… அன்னிக்கு பார்ட்டில வந்தானே உன் ஃப்ரெண்டு… இங்கிலீஷ்ல பேசி, மாசம் 60,000 சம்பாதிக்கிறானே… அவனை மாதிரில்லாம் எங்களால இருக்க முடியாதுல்ல..?”

‘‘ச்சீ… நான்சென்ஸ்! நீ இப்படின்னு நான் நினைக்கவே இல்லை. இனிமே மூஞ்சில முழிக்காத… ச்சே!” -கண்கள் கலங்கி, அவன் கூப்பிடக் கூப்பிடத் திரும்பாமல் ஓடினாள் ஏவாள்.

நண்பர்களோடு இருந்தான் ஆதாம். ஏவாள் எடுக்காத அவனது செல் அழைப்பு கள் உள்ளே இடி இடித்துக்கொண்டு இருந்தன.

‘‘நான் அப்பவே சொல்லலே, அதெல் லாம் வேற உலகம் மச்சான்! ஆர்குட்ரா… கம்ப்யூட்டர்ல பாய் ஃப்ரெண்ட், கேர்ள் ஃப்ரெண்ட்னு பிக்கப் பண்ணிட்டே இருக் கலாம். அந்த பொண்ணுங்கள்லாம் பாதி நாள் அதுலதான் உக்கார்ந்துக்கும்.”

‘‘ச்சீய்… அவ அப்பிடி இல்லைடா!”

‘‘போடியேய்..! அந்தப் பொண்ணுக் கெல்லாம் ஃபாரின் மாப்ள வருவான்டி. நாமெல்லாம் கலீஜு…. டிச்சி ஏரியா.”

வெதும்பித் ததும்பினான் ஆதாம். இதயத்துக்கும் மூளைக்கும் எலெக்ட்ரிக் டிரெய்ன் ஓடியது. எல்லா ஸ்டேஷனி லும் ஏவாளே ஏறி, ஏவாளே இறங்கினாள். ஒயின் ஷாப் பில் நீள்தாடி பிச்சைக்காரச் சாமியார் மடியில் மட்டை யானான். பொறுத்துப் பார்த்து ஏவாளே அவனைத் தேடி வந்தாள்.

‘‘ஏன்டா இப்பிடிப் பண்றே..? நான் உன்னை எவ்ளோ லவ் பண்றேன் தெரியுமா..?”

‘‘தோடா! உனக்குலாம் அன்பு காட்ட நிறைய பேர் இருக்காங்கம்மா… நான்லாம் வேஸ்ட்! விட்ரு!”

‘‘ஏன்டா, என்னைப் புரிஞ்சுக்கவே மாட்டியா? போடா இடியட்!” – ஏவாள் அழுது சென்றாள். அவள் சென்றபின், அவன் அழுதான்.

‘‘இப்போ எதுக்கு நீ வேலைக்குப் போறே… அதுவும் நைட் ஷிஃப்ட்..?”- படபடத்தபடி நின்றான் ஆதாம். கல்யாணமாகி ஆறு மாதக் குழந்தைக்கு அப்பன். ஸ்டாஃப் நர்ஸாக இருந்த மனைவி ஏவாள் பிரசவ லீவில் இருந்தாள். திரும்ப வேலைக்குக் கிளம்புகிற நாளில்தான் சண்டை.

‘‘ஏன் வேலைக்குப் போகக் கூடாது..? குழந் தைக்கு ஆறு மாசமாச்சு. நாளைக்கு ஆயாவை வரச் சொல்லியிருக்கேன். எனக்கு இந்த வேலை வேணும்.”

‘‘ஆமா… ஹாஸ்பிட்டல்ல உக்காந்து கூத்தடிக் கலைன்னா தூக்கம் வராது… அதானே?”

கதவைப் படீரென்று சாத்திவிட்டுக் குழந் தையை தூக்கிக்கொண்டு கிளம்பிச் சென்றாள் ஏவாள். கோபம் தலைக்கேறி மொபைலை எடுத்து அவள் நம்பரை அழுத்தினான். எதிர் முனை ‘ஸ்விட்ச் ஆஃப்’ என்றது. டி.வி. ரிமோட் டைக் கண்டபடி அமுக்கினான். எழுந்து நடந்து, டீக்கடை தேடினான். தூக்கமில்லாமல் புரண்டான்.

மறுநாளிலிருந்து அவன் பேசுவதே இல்லை. அவள் காபி கொடுப்பாள். சாப்பிட அழைப்பாள். அழும் குழந்தையோடு ஓடி வருவாள். எதற்கும் பதில் பேசாமல் மூஞ்சைத் திருப்பி வாழ்ந் தான். அவன் உள்ளே கருகினான். அவள் அவனைச் சமாதானப்படுத்த முடியாமல் மருகினாள்.

ஒரு இரவு… தாள முடியாமல் டைவர்ஸ் பேப்பர்களுடன், ஏவாள் வேலை பார்க்கும் ஆஸ்பத்திரிக்குச் சென்றான் ஆதாம். முதல்முறை மனைவியாய் அவள் கை பற்றிய வெப்பம் இரவை எரித்தது. ஆஸ் பத்திரிக்குள் சென்றான். தூரத்தில் ஒரு மேஜையில் இரண்டு டாக்டர் களோடு சிரித்துப் பேசிக்கொண்டு இருந்தாள் ஏவாள். எரிந்த இரவு, சாம்பலை உதிர்க்கத் தொடங்கி இருந்தது.

சட்டென்று உள்ளேயிருந்து ஒரு குரல்… ஏவாள் எழுந்து ஓடினாள். படுக்கையில் கிடந்த ஒருவர் விலுக் கென்று உதறி வாந்தி எடுக்க, அதைக் கைகளில் பிடித்து வாஷ்பேஸினில் கொட்ட வந்தாள். அவன் எதிரே நின்றான்.

‘‘என்னங்க… ஐயே, தள்ளுங்க. மேல பட்றப் போகுது!” -அவன் அப்படியே நின்றான். உள்ளே சென்று அவருக்குத் துணி மாற்றினாள். ‘‘பொண்ணு இப்போ எப்பிடி இருக்காங்க..? சிசேரியன்கிறதால அதிகம் வெயிட் தூக்காம பார்த்துக்குங்க” என்றாள், பக்கத்தில் பதறி நின்ற வயதான தம்பதியிடம்.

‘‘நல்லாயிருக்காம்மா… நீதான் பக்கத்துலயே இருந்தியே! உன் குடும்பத்துக்கே புண்ணியம்மா!” என அவள் தலை தடவினார் அந்தப் பெரியவர். ஏவாள் அவசரமாக வெளியே வந்து பார்க்க, தூரத்தில் பைக்கில் போய்க்கொண்டு இருந்தான் ஆதாம். அவள் மொபைலில் அழைத்துக் கொண்டே இருந்தாள். அவன் எடுக்கவே இல்லை.

வீடு சென்றான். டைவர்ஸ் பத்தி ரத்தை எடுத்து வெறித்தான். கல்யாண ஆல்பம் எடுத்துப் புரட்டினான். விடிய விடிய விழித்தான். அதிகாலை யில் அவள் வர, கதவைத் திறந்து மௌனமாக நடந்தான். இருவரும் பேசவில்லை. அவள் வாஷ்பேஸினில் முகம் கழுவி நிமிரும்போது பின்னால் கலங்கி நின்றான்.

ஏவாள் திரும்பினாள். ஆதாம் அப்படியே கீழே உட்கார்ந்து, அவள் கைகளைப் பற்றி முத்தமிட்டு உயிரி லிருந்து சொன்னான்…

‘‘ஸாரி… எப்பவும் ‘ஐ லவ் யூ’டி!”

– 22nd ஆகஸ்ட் 2007

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *