நாயர் ஒரு டீ

 

நாயர் டீ கடையில் வந்தமர்ந்தான் கார்த்திக். பேச்சுலர். சென்னையில் வந்து கடந்த 4 மாதங்களாக வேலை தேடிக் கொண்டிருக்கிறான். காலையில் குடிக்கும் அந்த டீ தான் காலை உணவு. நாயர் ஒருத்தர் தான் கடன் கொடுப்பார். அதனால் அவர் விஷத்தைக் கொடுத்தாலும் அதை குடித்துதான் ஆக வேண்டும்.

‘என்ன நாயர் டெய்லி நீங்க லிட்டர் லிட்டரா பால் வாங்குறிங்க, வாங்குற பாலெல்லாம் என்ன பண்றிங்க, டீ கேட்டா வெறும் டிக்காஷன் கொடுக்குறிங்க’

‘ம், பால் இல்லாம் டீ போடுறதுக்கு நான் என்ன மந்திரவாதியா, நக்கல் பண்ணாம சாயாவ குடி’

‘நீதான் சொல்ற சாயான்னு, ஆனா வெறும் சாயம் மட்டும் தான் இருக்கு’ சலித்துக்கொண்டான் கார்த்திக்.

‘நாயர் இன்னைக்கு பேப்பர் எங்க நாயர்’

‘தெரியலை’

‘என்னது தெரியலையா’

‘யோவ் பேப்பர் படிக்கணும்னா 2 ருபாய் கொடுத்து வாங்கிப் படி, அத விட்டுட்டு ஓசி பேப்பர் எல்லாம் எங்கிட்ட கேக்கக் கூடாது புரியுதா?’

‘ம் ……, உங்கிட்ட கேக்காம சி.பி.ஐ கிட்டயா போய் கேக்கமுடியும்’

‘போய் கேளேன் குடுத்தா வாங்கிக்கோயேன்’

‘சர்ர்ரிரி நாயர் இப்ப ஏன் கோவிச்சுக்கற, பேப்பர் தான கேட்டேன், இன்னைக்கு கிளாசிபைட்ஸ் வரும், ஏதாவது வேலைக்கு அப்ளை பண்ணலாம்னு கேட்டேன், அதுக்கு போய் இப்படி கோச்சுக்கிறியே’

உர்ரென்று கோபத்துடன் டீ போட்டுக் கொண்டிருந்தார் நாயர்.

‘இத மொதல்லயே சொல்ல வேண்டியதுதான, இந்தா புடி’ அடியிலிருந்து பேப்பர் எடுத்து கொடுத்தார் நாயர்.

‘நாயரே வர வர உமக்கு குசும்பு ஜாஸ்தியா போச்சு, எனக்கும் வேலை கிடைக்கட்டும் பாத்துக்குறேன்’

கைலியைத் தூக்கி கட்டியபடி ஓரக்கண்ணால் நாயரை முறைத்துப் பார்த்தபடி கையில் பேப்பருடன் நடையைக் கட்டினான் தனது அறைக்கு. கார்த்தியின் அறை நாயர் டீ கடைக்கு மேல் அடுக்கு மாடி குடியிருப்பில் இருந்தது. அறைக்கு சென்றவன் செய்தித்தாளைப் பார்த்து 2 முகவரிகளை குறித்துக் கொண்டான். கையோடு சென்று அப்ளை பண்ணினான். ஒரு வாரத்திற்குப் பிறகு இன்டர்வியூ கார்டு வந்தது. ஒன்று செவ்வாய் கிழமை மற்றொன்று புதன் கிழமை.

செவ்வாய் கிழமை காலை வழக்கம் போல் நாயருடன் சண்டை போட்டு முடித்துவிட்டு வேகவேகமாக கிளம்பி இன்டர்வியூற்கு சென்றான். மூன்று பகுதியாக இன்டர்வியூ நடந்தது. முதல் பகுதியில் தேறி விட்டான். இரண்டாவது பகுதி சற்று கடினமாக இருந்தது. மிக கடினமாகப் போராடி எப்படியோ தேறிவிட்டான். மூன்றாவது பகுதி ஜெனரல் டாக்கிங். சொதப்பி எடுத்து விட்டான். அத்தனை பேர் முன் ஆங்கிலத்தில் பேச முடியாமல் திணறியது, அவமானமாகி விட்டது. வெளியேற்றப்பட்டான்.

மாலை வேளையில் மனம் நொந்தவனாய் நாயர் டீ கடையில் வந்தமர்ந்தான்.

‘என்ன கார்த்திக் தம்பி…….. டீ ……ஓ சாரி டிக்காஷன் வேணுமா’

கார்த்திக் எதுவும் பேசாமல் அமைதியாக சென்றான். நாயர் அவனையே உற்று பார்த்துக் கொண்டிருந்தார்,

‘நாம் பேசா விட்டாலும் அவனாக வம்புக்கிழுப்பானே இன்னைக்கென்ன சோகமா போறான்’ நாயர் குழப்பத்துடன் அவன் போன திசையையே பார்த்துக் கொண்டிருந்தார்.

சோகமாக உள்ளே சென்ற கார்த்திக் மறுநாள் காலை தான் வெளியே வந்தான்.

‘நாயர் ஒரு டீ’

‘என்ன கார்த்திக் நேத்து வேலைக்கு ஆள் எடுக்குறாங்கன்னு போனியே என்னாச்சு’ சிரித்துக் கொண்டே இயல்பாக கேட்டார்.

‘என்ன நாயர் நீ சிரிச்சுக்கிட்டே கேக்குறத பாத்தா நான் இன்டர்வியூல செலக்ட் ஆகாம போனத நெனைச்சு ரொம்ப சந்தோஷபடுற போல இருக்கு’

‘அப்படியெல்லாம் ஒண்ணுமில்ல’ என இழுத்தார்.

‘சரி இந்தா டீயக் குடி’

டீயை வாங்கி மெதுவாக உறிஞ்சினான்.

‘என்ன நாயர் இன்னைக்கு டீயில எதாவது கலந்துட்டியா’

‘ம், ஒரிஜினல் ஆரோக்கியா பால்ல போட்டது, ஒரிஜினல் டீ இப்படித்தான் இருக்கும்’

‘என்ன நாயர் திடீர் கரிசணம்’

‘அதெல்லாம் ஒண்ணுமி;ல்லே, நீயும் இன்டர்வியூ அது இதுன்னு போற, நாளைக்கே வேலை கிடைச்சுடுச்சுன்னா என் கடன் பாக்கிய செட்டில் பண்ணிடுவல்ல அதான்’

‘ம்ம்ம்………… அப்படி சொல்லு சோழியன் குடுமி சும்மாவா ஆடும்’

டீயைக் குடித்து விட்டு அடுத்த இன்டர்வியூவிற்குப் போனான், நம்பிக்கை குறைந்தவனாய் காணப்பட்டான். ‘நாம எவ்வளவு தான் முயற்சி பண்ணினாலும் நடக்குறது தான் நடக்கும்’ மனதிற்குள்ளேயே கூறிக்கொண்டான். இன்டர்வியூ நடந்தது. ஒவ்வொரு சுற்றையும் சுமாராகத்தான் முடித்தான். மூன்றாவது சுற்றை முடித்து விட்டு வெளியே வந்தான். மனதெல்லாம வெறுமை அப்பியிருக்க பொடி நடையாக நடந்தே வந்தான். சோகமாக நாயர் கடையை கடந்து மாடிக்கு சென்றான்.

3 நாட்களுக்குப் பிறகு, கார்த்திக்கிற்கு ஒரு போன்கால் வந்தது. புதன் அன்று நடந்த இன்டர்வியூவில் செலக்ட் பண்ணப்பட்டிருப்பதாகவும், இன்னும் இரண்டு நாட்களுக்குள் வந்து மேனேஜரை பார்க்கும்படியும் கூறப்பட்டது. கார்த்திக் துள்ளி குதித்தான். அந்த அபார்ட்மென்டில் உள்ள அனைவரிடமும் தனது சந்தோஷத்தைப் பகிர்ந்து கொண்டான். நண்பர்கள் அனைவரும் ட்ரீட் கேட்டார்கள். அவன் நிலைமை அனைவருக்கும் தெரியும். அட்லீஸ்ட் ஒரு டீ அது போதும் என்றார்கள். அனைவரையும் கூட்டிக் கொண்டு கீழே போனான்.

நாயர் கடைக்கு எதிர்த்தாற் போல் ஒரு டீ கடை இருந்தது. நாயரை வெறுப்பேற்ற வேண்டுமென்றே அனைவரையும் அந்த டீக்கடைக்கு அழைத்துச் சென்றான். நாயரின் முகம் செத்துப் போனது. அந்தப் பக்கமாக ஒரு தெரு நாய் போய் கொண்டிருந்தது. வெறுப்பில் இருந்த நாயர் கொஞ்சம் தண்ணீரைப் பிடித்து அந்த நாயின் மேல் ஊற்றினார்.

நாயை பார்த்து ‘இனிமே இந்த பக்கம் வந்தன்னா சுடுதண்ணியப் புடிச்சு மேல ஊத்திடுவேன் ஜாக்கிரதை’

கார்த்திக் வேண்டுமென்றே சத்தமாக கத்தினான்.

‘அண்ணே ஒரு ஏழு டீ போடுங்கண்ணே’

நாயர் கடையில் டம் டும் என்று பாத்திரம் உருண்டது.

இரண்டு நாட்களுக்கு முன் இளமாறன், நாயர் டீ கடைமுன் தனது டூ வீலரை பார்க் செய்தான்

‘என்ன நாயர் நல்லா இருக்கிங்களா? பாத்து ரொம்ப நாளாச்சு’

‘;அடடே இளமாறன் தம்பியா, நல்லாருக்கியாப்பா, பாத்து ரொம்ப நாளாச்சு, இப்ப என்ன பண்ணிகிட்டு இருக்க, ம், கல்யாணம் எதுவும் ஆயிடுச்சா ஆள் தடிச்சு போயிருக்க’

‘உங்ககிட்ட சொல்லாமையாண்ணே’

‘சரி இப்ப என்ன பண்ற’

‘டி.சி.எஸ் ல ஹெச் ஆரா இருக்கேன்’

‘அப்படீன்னா’

‘அதெல்லாம் உங்களுக்கு புரியாதுண்ணே விடுங்க’

‘எப்படியோ நல்லாருந்தா சரி’

‘சரி ஒரு டீயப் போடுங்க’

நாயர் இளமாறனுக்கென்று ஒரு ஸ்பெசல் டீயை போட்டார். அப்பொழுது கார்த்திக் சோகமாக மாடியிலிருந்து கீழே இறங்கி இன்டர்வியூ சென்று கொண்டிருந்தான். பாத்திரம் கழுவிக் கொண்டிருந்த நாயர் திரும்பி திரும்பி அவனையே பார்த்தார்.

‘என்ன நாயர் அந்த பையனையேப் பாத்துக்கிட்டுருக்கிங்க’

‘ஒண்ணுமில்ல நம்ம பையன் தான். பேரு கார்த்திக். மாடிலதான் குடியிருக்கான். எப்பவும் கலகலன்னு இருப்பான். என்னய சீண்டி பாக்கலண்ணா அவனுக்கு நிம்மதியாவே இருக்காது. இன்னைக்கு என்னமோ சோகமா போறான்’

‘என்ன பிரச்சனைன்னு உங்களுக்குத் தெரியாதா?’

‘அந்த பையன் ஊரவிட்டு வந்து நாலு மாசமா வேலை தேடிகிட்டு இருக்கான். ஒண்ணும் கை கூட மாட்டேங்குது. நேத்து கூட ஏதோ ஒரு பெரிய எடத்துக்குப் போய்ட்டு சோகமா வந்தான்’

‘தம்பி நீ தான் ஏதோ பெரிய கம்பெனில வேலை பாக்குறல, அவனுக்கு எதாவது பாத்து செய்யேன்’

இளமாறன் நேரத்தைப் பார்த்துவிட்டு எழுந்தான்.

‘சரிண்ணே பாக்குறேன், அப்ப நான் கௌம்புறேன்’

‘சரி தம்பி’

இன்று

நாயரின் வெறுப்பிற்கு நடுவே டீ பார்ட்டீ கோலாகலமாக முடிந்தது. நாயரை வெறுப்பேற்றியதில் அனைவருக்கும் உள்ளுர மகிழ்ச்சி. அன்று முழுவதும் அறையில் ஒரே கூத்தும் கும்மாளமுமாக கழிந்தது. ரேடியோவில் பாட்டை சத்தமாக வைத்து கொண்டு நடனம் ஆடினார்கள். நாயர் கடையில் அக்பர் காலத்தில் அடிக்கப்பட்ட வெள்ளை சுண்ணாம்பிற்கு பின்னிருந்த காரை பெயர்ந்து விழ ஆரம்பித்தது. நாயர் தனது கோபத்தை எல்லாம் பாத்திரங்களின் மேல் காட்டிக்கொண்டிருந்தார்.

இரண்டு நாட்களுக்குப் பிறகு

கார்த்தி கையில் அப்பாய்ன்மென்ட் ஆர்டருடன் சோகமாக வந்து கொண்டிருந்தான். நண்பர்கள் ஆர்டரை வாங்கி ஆவலுடன் பார்த்தார்கள். அதில் 22 ஆயிரம் ருபாய் சம்பளம் போட்டிருந்தது. தட்டிக் கொடுத்தார்கள். கட்டிப்பிடித்து கொண்டாடினார்கள். வாழ்த்துக்கள் கூறினார்கள். நாயர் மேலே குதிக்கும் சத்தம் கேட்டு கீழிருந்து கத்தினார்.

‘டேய் ரொம்ப குதிக்காதிங்கடா கீழே கடை இருக்குள்ள’

ஒருவன் மேலிருந்து கத்தினான் ‘நாயர் ரொம்ப பேசுன உன் கடை டீய எடுத்து உன் வாயிலேயே ஊத்திடுவேன் ஜாக்கிரதை’

‘டேய் டேய், காலைல டீ குடிக்க கீழ வருவதான, வா, டீல எலி மருந்த கலக்கி குடுக்குறேன்’

‘நாயர் நீ குடுக்குற டீயே எலி மருந்து மாதிரி தான் இருக்கு, நீ ஏன் டீ கடைன்னு போர்டு போட்டிருக்க எலி மருந்து கடைன்னு மாத்திரலாம்ல’

‘டேய் ராஸ்கல்களா யாருடா பல்லு மேல நாக்க போட்டு பேசுறது, அவ்ளோ ரோசம் இருந்தா கடன் பாக்கிய செட்டில் பண்ணிட்டு பேசுங்கடா, துச்சா பசங்களா’ நாயர் கோபத்தில் உறுமினார்.

மணி 10 தொட்டது. நாயர் பாத்திரங்களை கழுவிக் கொண்டிருந்தார். யாரோ டீ கேட்டார்கள்.

‘நாயர் டீ’

‘டீ யெல்லாம் முடிஞ்சு போச்சு சார்’ எங்கேயோ கேட்ட குரல் மாதிரி இருந்தது. திரும்பிப் பார்த்தார். கார்த்திக் உட்கார்ந்திருந்தான். நாயர் ஒன்றும் பேசவில்லை வேலையைப் பார்க்க ஆரம்பித்தார். பின் மனம் கேட்காமல் எழுந்து தனக்கு வைத்திருந்த பாலில் டீ போட்டு கொடுத்தார். கார்த்திக் அமைதியாக குடித்தான். அமைதியாக எழுந்து படியேறினான். பாத்திரம் கழுவிக்கொண்டிருந்த நாயர் பாதியில் எழுந்து வந்து ஆச்சர்யத்துடன் பார்த்தார் அமைதியாக செல்லும் கார்த்திக்கை.

‘என்னாச்சு இவனுக்கு’ யோசனையாக வந்தவர், கார்த்திக் உட்கார்ந்திருந்த இடத்தில் ஒரு பைவ் ஸ்டார் சாக்கலேட் இருந்ததைப் பார்த்தார்.

மெலிதாக சிரிப்பு வர அதை இடது கையால் எடுத்து பிரித்து சாப்பிட ஆரம்பித்தார். 

தொடர்புடைய சிறுகதைகள்
கமலாவிற்கு காலை ஐந்து மணியிலிருந்து வேலை ஆரம்பமாகி விடும். வாசல் தெளித்து கோலம் போடுவதிலிருந்து. காபி. சமையல் என ஒரு சுற்று முடித்து கடைக்குட்டி வித்யாவிற்கு பல் தேய்த்து விட்டு. குளிப்பாட்டி. சாதம் ஊட்டி பள்ளிக்கு செல்லும் ஆட்டோவில் திணிக்கும் வரை ...
மேலும் கதையை படிக்க...
வாழ்வில் கடைபிடிக்‍க வேண்டிய பல்வேறு நல்ல குணங்களில் நிதானம் என்பது அரிதான ஒன்றாகவே இருக்‍கிறது. பலரிடம் இந்த குணம் இருப்பதற்கான அறிகுறியே இல்லை. நிதானம் என்பது அவ்வளவு கடினமான ஒரு விஷயமா? ஏன் பல நேரங்களில் நம்மை மீறி நிதானம் தவறி ...
மேலும் கதையை படிக்க...
அறைக்குள் நுழைந்த பொழுதே அவனை ஐந்தாறு பேர் முறைத்துப் பார்த்தார்கள். ஒவ்வொருவரும் வித்தியாசமான கோணங்களில் படுத்திருக்கிறார்களா? உட்கார்ந்திருக்கிறார்களா? என்று சரியாக கூற முடியாத நிலையில் கிடந்தார்கள். ஆனால் அனைவரும் தொலைக்காட்சியை பார்த்துக் கொண்டிருந்தார்கள் என்பது மட்டும் நிச்சயம். அவர்களில் ஒரு ஓரமாக ...
மேலும் கதையை படிக்க...
ஆனால் ஊருக்குள் புதிதாக நுழைபவர்களுக்கு ஊர்க்கட்டுப்பாடு மற்றும் விதிமுறைகள் எதுவும் தெரிவதே இல்லை. தான் தோன்றித் தனமாக ஊருக்குள் நுழையும் இவர்கள் சில விஷயங்களைப் பார்த்து, மனம் கொதித்த பின்னரே மாற்றமடைகிறார்கள். ஊர் பெரிய மனிதர்கள் ஊர் பழக்கவழக்கததை, கட்டுப்பாட்டை எவ்வளவுதான் ...
மேலும் கதையை படிக்க...
வாரத்திற்கு 10 நாட்கள் சண்டையிட்டு நிம்மதியை கெடுக்‍க வேண்டும் என்பதுதான் அவளின் எண்ணம், லட்சியம், கொள்கை, கோட்பாடு, நியாயம், தர்மம், நீதிநெறி, நம்பிக்‍கை, எல்லாம். ஆனால் துரதிர்ஷ்டவசமாக வாரத்திற்கு 7 நாட்கள் மட்டுமே நிர்ணயிக்‍கப்பட்டு விட்டது. சண்டை என்று வந்துவிட்டால் "சிவகங்கைச் சீமையிலே ...
மேலும் கதையை படிக்க...
தாத்தா இது அவ்வளவு சாதாரணமான விஷயமாகத் தோன்றவில்லை. இதுகுறித்து முழு விசாரணை நடத்தியே ஆகவேண்டும். யோசித்துப் பார்த்தால் உலகில் சகஜமாக நடக்கக் கூடிய விஷயமாகத்தான் தோன்றியது. ஆனால் அவன் சற்று எல்லை மீறியிருக்கிறான். அதை எப்படி சொல்வது. இந்த தள்ளாத வயதில் என்னை ...
மேலும் கதையை படிக்க...
கழுத்தில் டையுடன் நீட்டாக உள்ளே வந்தவரைப் பார்த்தவுடன் சற்று மிரண்டு போனதற்கு காரணம், அந்த 28 வயது இளைஞர் இடுப்புக்‍கு கீழ் அணிந்திருந்தது அரைக்‍கால் டவுசர் மட்டுமே. அவரிடமிருந்து வார்த்தைகள் கோர்வையாக வெளிவரவில்லை. அவரது வார்த்தைகள் தெளிவற்று காணப்பட்டன. அதற்குக்‍ காரணம், ...
மேலும் கதையை படிக்க...
மொழி என்று ஒன்று இருக்கும் வரை அதற்காக போராடவில்லை என்றால் (அது ஆரோக்கியமானதாகவே இருப்பினும்) சாப்பிடக்கூடிய உணவானது தொண்டைக் குழியை விட்டு உள்ளே போகமாட்டேன் என்று அடம் பிடிக்க ஆரம்பித்துவிடும் சில அரசியல் பிரமுகர்களுக்கு. தேவையில்லை என்றாலும் போராடித்தான் ஆக வேண்டும் ...
மேலும் கதையை படிக்க...
பரிதாபகரமாக பார்க்‍கப்படும் ஒரு பார்வைக்‍குப்பின்னர் பயங்கரத்தை பார்ப்பது இதுவே முதல் முறை.... அவனை சிறு வயதில் பார்த்த போது அவன் கண்களில் பரிதாபகரமான சிறு ஒளி தெரிந்தது. என்மீது பரிதாபமே இல்லையா என்பது போல் ஒரு பார்வை பார்ப்பான். அந்தப்பக்‍கமும் இந்தப்பக்‍கமுமாக எதையோ ...
மேலும் கதையை படிக்க...
நான் டாம்க்ரூஸ் போல் மிக அழகாக தினமும் மீசையை ட்ரிம் செய்து (சிரைத்து) கொண்டு கண்ணாடியில் அப்படியும், இப்படியும் பார்ப்பதற்கு மிக முக்கிய காரணம், என்னை திருமணம் செய்து கொள்ளப் போகும் பெண்ணின் தந்தைக்கு என் வயது 34 அல்ல என்பதை ...
மேலும் கதையை படிக்க...
கமலா
மண்-மோகன்
அன்புள்ள நாஸ்ட்ரடேமஸ்
பேருந்து நிலையம்
தோற்றுப் போகக்‍ கற்றுக்‍ கொள்வோம்
தாத்தா பேரன்
மனநல மருத்துவர்
கடவுளின் ராஜினாமா கடிதம்
அவன்
வயது 34

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)