Warning: Cannot modify header information - headers already sent by (output started at /home/content/42/10186442/html/index.php:2) in /home/content/42/10186442/html/wp-content/themes/Clipso/functions.php on line 189
Sirukathaigal - Sirukathai - Short Stories in Tamil

துளிர்களும் ஒரு நாள் பழக்கமும்!

 

இன்று விடியும் போதே மிகவும் சோர்வாக இருந்தது வாணிக்கு. அன்றைய நாளின் வேலைகள் குறித்த நினைவுகள் மண்டைக்குள் நிரந்தரமாக தங்கி விட்டதாகத் தோன்றியது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாகத்தான் விடிகிறது. வாரத்தின் எல்லா நாட்களுக்கென்றும் ஒரு மனநிலை இருக்கிறது. திங்கள்கிழமைகள் கொஞ்சம் ஆசுவாசமாக விடியும். அன்று அவளது வேலைகள் அத்தனை சிரமமில்லை. செவ்வாய்க்கிழமை ஒரு பதட்டம் தொற்றிக் கொள்ளும், புதன் கிழமைகளில் பெரும்பாலும் முந்தைய நாளின் இரவே எதையாவது செய்து வைத்துக் கொண்டு அதை எடுத்துக் கொண்டு ஓட வேண்டும். வியாழக்கிழமைகள் பெருமூச்செடுத்துக் கொள்ளக் கூடியவை. வெள்ளிக் கிழமைகளுக்கு என்று அவள் தனியாகச் சக்தி சேமிக்க வேண்டியிருக்கும். சனிக்கிழமைகள், நேரடியாக ஞாயிற்றுக்கிழமைகள் வந்தால் நன்றாயிருக்கும் என்ற ஏக்கத்தோடு விடியும். ஞாயிற்றுக்கிழமைகள் அவளுக்கு அடுத்த வாரத்திற்கான புத்துணர்வு தருவதற்காகவே விடிபவை. அதை தவற விடாமல் முழுமையாய் அனுபவிப்பாள் அவள்.
இன்று செவ்வாய்க்கிழமை. கர்ப்பிணிகள் பரிசோதனை நாள், ஆய்வுக்கூட்டம், அது இது என்று இன்று வாணியின் அலுவலக வேலை கொஞ்சம் பதட்டமானது தான். ஊரிலிருந்து மாமியார் வந்திருந்தார். சர்க்கரை நோயாளியான அவருக்கு, தனியாகச் சமைத்து வைத்து விட்டுத்தான் அவள் கிளம்ப வேண்டும். இந்த மாதம் முழுக்க மாமியார் இங்கு தான் இருப்பார்கள். அடுத்த ஒரு மாதம் அவளுக்கு சமையல் வேலை குறையும். அவள் கணவனின் தம்பி வீட்டுக்கு போய் விடுவாள் மாமியார். பரபரவென்று வேலைகளைத் தொடங்கினாள். வெளியில் வாக்கிங் போயிருந்த அவள் கணவன் வந்து மின்விசிறியைச் சுழல விட்டு, “”அப்பாடா” என்று அமர்ந்தான். மாமியாருக்கும், கணவனுக்கும் தேநீர் கொண்டு போய் கொடுத்தாள். யாரைப் பற்றியோ மாமியார் கணவனிடம் பேசிக்கொண்டிருந்தார். அந்த தெருவிலிருந்த பலரும் மாமியாரின் தோழிகளாயிருந்தனர். அவர்களின் கதைகள் அடிக்கடி அந்த வீட்டின் பேசு பொருளாயிருக்கும். லீலாவதியின் மருமகள் குறித்தோ, கமலாவின் மகன் குறித்தோ, மீனாட்சியின் கணவன் குறித்தோ பேச அவள் மாமியாரிடம் நிறைய விஷயங்கள் இருந்தன. கேட்கத் தான் வாணிக்கு நேரமிருப்பதில்லை. காலை நேரங்கள் தன் மகனிடம் கதை பேசும் நேரமாயிருந்தது மாமியாருக்கு. சில சமயம் காதில் விழும் செய்திகளுக்கு கருத்து சொல்வதோடு வாணி அதை மறந்து வேலைக்குக் கிளம்பி விடுவாள். இன்றும் ஏதோ மீனாட்சியின் கணவன் பற்றித் தான் பேசிக்கொண்டிருந்தார்கள். “பாவம், பாவம்’ என்ற வார்த்தைகள் மட்டும் தான் அவள் காதில் விழுந்தன.
வேலைகளை முடித்து, சாப்பாட்டு கூடையுடன் கிளம்பி விட்டாள் வாணி.
“”என்னங்க, போயிட்டு வரேன். உங்களுக்கு மதிய சாப்பாடு பையில வச்சிருக்கேன். அத்தே, சாப்பாடு மேசையில எல்லாம் எடுத்து வச்சிருக்கேன், மாத்திரை எல்லாம் மறக்காமச் சாப்பிடுங்க. கீரைக் கூட்டு கட்டாயம் சாப்பிடுங்க. சாயங்காலம் சீக்கிரம் வர்றேன்” என்று சொல்லிக் கொண்டே செருப்பை மாட்டிக் கொண்டாள்.
“”சரிம்மா, கோயிலுக்குப் போகணும் இன்னைக்கு, மறக்காம சீக்கிரம் வந்துடு”
மாமியார் நினைவூட்டலுக்கு “”ம்ம்ம். சரி..” என்றபடி பேருந்து நிறுத்தம் நோக்கிப் போனாள் வாணி. அருகிலேயே வீடு இருப்பது ஒரு வசதி அவளுக்கு. இன்னும் நிறுத்தம் மக்களால் நிரம்பத் தொடங்கவில்லை. அது சரி, நம்மை மாதிரி ஏழு மணிக்கே வந்து பேருந்தைப் பிடிக்க எல்லோருக்கும் அவசியமா என்ன? என்று நினைத்துக் கொண்டாள். அதிலும் இது மே மாதம் பள்ளிகள் விடுமுறை என்பதால் அடுத்த தெரு புவனா டீச்சர் கூட வரவில்லை. இல்லையென்றால் அவளும் இவளைப் போலவே காலை ஏழு மணி பேருந்துக்கே வந்து நிற்பாள். “ம்ம்ம், பெண்களுக்கு ஆசிரியை வேலை தான் சரியாயிருக்கும்’ என்று அவள் அம்மா அடிக்கடி சொல்வாள். புவனா டீச்சர் வராத நாட்களில் எல்லாம் அம்மா சொன்னது நினைவுக்கு வந்து வாணிக்கு வருத்தமாக இருக்கும். இந்த மருந்தாளுநர் பணிக்கு படிக்காமல் டீச்சர் வேலைக்குப் படித்திருக்கலாம் என்று தோன்றும். “”எப்போதாவது யாராவது நீங்க நேத்து தந்த மாத்திரையில் இடுப்பு வலி நல்லா குறைஞ்சிடுச்சும்மா”ன்னு சொன்னா, இந்த வேலைக்கு வந்தது நினைத்து சந்தோஷம் வந்து விடும். என்ன மனசு இதுன்னு நினைத்துக் கொள்வாள்.
மருத்துவமனைக்குள் நுழையும் போதே அங்கு நிறைந்திருந்த கூட்டத்தைப் பார்த்து அவளுக்கு மலைப்பாக இருந்தது. பதிவேட்டில் கையொப்பமிட்டு விட்டு தன்னறைக்கு வந்து, மாத்திரைகள் அடங்கிய பிளாஸ்டிக் ட்ரேக்களை எடுத்து மேசையில் அடுக்கி வைத்தாள். இன்று வரப்போகும் கர்ப்பிணிகளுக்கான மாத்திரைகள் தனியாக எடுத்து வைத்தாள். மருத்துவர் வந்து நோயாளிகளைப் பார்க்கத் தொடங்கியதும், மெல்ல மெல்ல மக்கள் அவள் அறையின் சன்னலில் சேரத் துவங்கினர். கொஞ்சம் இயந்திரத்தனமாய் அவள் வேலை துவங்கியது. நேரம் செல்லச் செல்ல, கூட்டம் அதிகமாகத் துவங்கியது. கையில் சீட்டுக்களை வாங்குவதும், அதற்கான மாத்திரைகளைப் பொறுக்குவதும், சாப்பிடும் முறைகளைச் சொல்லியபடி அவற்றைச் சன்னலுக்கு வெளியே தெரியும் மரப் பலகையில் வைப்பதுமாய் அவள் ஓர் இயந்திரம் போல இயங்கிக் கொண்டிருந்தாள். இடையில் வந்த ஒரு சீட்டுக்கு தலை நிமிர்த்திப் பார்த்தாள். அது இரத்த அழுத்தத்திற்கான மாத்திரைச் சீட்டு. ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை இரத்த அழுத்தம், சர்க்கரை நோய்க்கான பரிசோதனை மற்றும் சிகிச்சை நாளாக இருந்தது. அந்த நாட்களில் பெரும்பாலும் ஏற்கெனவே அதற்கான மருந்துகளை வாங்குபவர்கள் வருவார்கள். புதிதாக வரும் நோயாளிகள் வாரத்தின் எந்த நாளும் வருவதுண்டு. வாணியின் முன் ஒரு முதியவர் நின்று கொண்டிருந்தார்.
“”என்னப்பா, இன்னைக்குத் தான் புதுசா இரத்த அழுத்தம் பரிசோதனை செய்தீங்களா?” என்ற அவளது கேள்விக்கு, அவர் “”இல்லம்மா” என்றார்.
“”அப்புறம் ஏன் இன்னைக்கு வந்திருக்கீங்க? வெள்ளிக் கிழமை வரணும்னு தெரியாதா?” கொஞ்சம் வேகம் கூடியிருந்தது வாணியின் கேள்வியில்.
விநாடி நேரம் மெüனித்தவர் மெல்லச் சொன்னார், “”இல்லம்மா, ஊருக்குப் போயிட்டேன். அதான் வெள்ளிக் கிழமை வர முடியல”.
“”நோட்டைக் கொடுங்க”, என்றபடி அவரது கையிலிருந்த நோட்டை வாங்கினாள். அவர் கடந்த வெள்ளிக்கிழமையே மாத்திரை வாங்கியிருக்க வேண்டியவர் என்பது தெரிந்ததும்,வாணிக்கு சர்ரென்று கோபம் வந்தது.
“” ஏன் இப்படி பண்றீங்க? போன வெள்ளிக் கிழமையே வந்து மாத்திரை வாங்கியிருக்கனும். ஏன் வரலை?”
“”அதான் சொன்னேனேம்மா, ஊருக்குப் போனேன், போன இடத்தில வர முடியாம போச்சு. இந்த ஒரு வாட்டி தாங்க. அடுத்த முறை சரியா வந்துடுவேன்” சின்னப் பிள்ளை போல பேசும் அவரை முறைத்துப் பார்த்தாள் வாணி.
“”சொல்ற மாதிரி ஒழுங்கா வந்து மாத்திரை வந்து வாங்கறதில்ல. ஊருக்குப் போனேன், அது இதுன்னு ஒரு சாக்கு போக்கு. கொஞ்சமாவது அக்கறை இருக்கா உங்களுக்கு. ஊருக்கு போறது தான் முக்கியமா? போய் அங்கே கொஞ்ச நேரம் உக்காருங்க, நான் மாத்திரை எடுத்து தர்றேன்”
பட படவென்று அவள் பொரிந்தாலும், அந்த முதியவர் எதுவும் பேசவில்லை. “”சரிம்மா” என்றபடி அவர் விலகி எதிரில் இந்த நீளமான திண்டில் அமர்ந்து கொண்டார்.
கூட்டம் குறைந்து கொண்டே வந்தது. வாணி அவரை மறந்தே போனாள். அநேகமாக அவள் சன்னலை சாத்தும் நேரம் வந்த போது தான் எதிரில் அமர்ந்து தன்னையே பார்த்துக் கொண்டிருந்த அந்த முதியவரைப் பார்த்தாள். அவளுக்கு பாவமாகி விட்டது.
“”அய்யா, இங்கே வாங்க. முன்னாடியே வந்து இன்னொரு முறை எனக்கு நினைவு படுத்தியிருக்கலாமே, மறந்தே போயிட்டேன்பா” என்றபடி அவர் சீட்டை வாங்கினாள்.
“”இல்லம்மா, நீங்க வேலையா இருந்தீங்க. நான் தாமதமா வந்துட்டு உங்களைத் தொந்திரவு பண்ணக் கூடாதில்ல. அதான் அப்படியே உக்கார்ந்திட்டேன்” அமைதியாய் சொன்னார்.
“”எந்த ஊருக்குப் போயிருந்தீங்க. மகன் வீட்டுக்குப் போயிருந்தேம்மா, திருச்சிப் பக்கம்”
“”எங்க போயிருந்தாலும், அங்க பக்கத்தில இருக்கிற ஆஸ்பத்திரியில காட்டி இந்த மாத்திரைய வாங்கியிருக்கலாமே, இப்ப ரெண்டு நாளா என்ன பண்ணினீங்க? மாத்திரைக்கு வெளியில வாங்கினீங்களா?”
“”இல்லம்மா, அங்கே ஆஸ்பத்திரி எங்கே இருக்குன்னு தெரியல, நான் நோட்டையும் கொண்டு போகல. ரெண்டு நாளா மாத்திரை சாப்பிடலைம்மா”
“”அப்படி இருக்கக் கூடாதுப்பா. முறையா பரிசோதனை செய்துக்கணும், ஒழுங்கா மாத்திரை சாப்பிடணும். சரியா இப்படி விட்டு விட்டு சாப்பிடக் கூடாது” பேசியபடியே மாத்திரைகளை எடுத்து வைத்தாள் வாணி.
“”ஆமா, மாத்திரை சாப்பிட்டு எதுக்கு தான் உயிரோட இருக்கனும். போய் சேந்தா தேவலை. இன்னும் வேளை வரலையே அங்கே கொஞ்ச நாள் இங்கே கொஞ்ச நாளுன்னு எத்தன நாளைக்கு இந்த அலைச்சலோ” புலம்பிக் கொண்டே மாத்திரைகளை எடுத்து வைத்துக் கொண்டார் அவர்.
“”ஏம்பா, என்ன ஆச்சு, எங்கே அப்படி அலையிறீங்க” என்றாள் வாணி.
“”ம்ம்ம், வயசாகக் கூடாதும்மா” சொல்லிக் கொண்டே கிளம்பினார். பாவம், அவருக்கு என்ன பிரச்சனையோ என்றபடி தன் அடுத்த வேலைகளில் கவனமானாள் வாணி.

மாலை பேருந்தைப் பிடித்து வீடு வருவதற்குள் வழக்கத்தை விடவும் தாமதமாகி விட்டது. எல்லா செவ்வாய்க்கிழமையும் அவள் மாமியாருடன் அருகிலிருந்த முருகன் கோயிலுக்குச் சென்று வருவாள். இன்று தாமதமாகிவிட்டது. இனி குளித்து கிளம்ப முடியுமா என்று யோசித்தபடியே உள்ளே நுழைந்தாள்.
“”வா வாணி உனக்காகத் தான் காத்துகிட்டிருக்கேன்”
“”கோயிலுக்கு தானே அத்தே. இருங்க வந்துடறேன்”
“”இல்ல வாணி, நம்ம பக்கத்து வீட்டு மீனாட்சி புருஷன போய் பாத்துட்டு வரலாம் வா”
“”என்ன அத்தே என்ன சொல்றீங்க அவங்களுக்கு என்ன ஆச்சு”
“”அய்யோ பாவம் அவங்க கத. காலையில நான் ராஜேஷ் கிட்டெ சொல்லிகிட்டு இருந்தத நீ கேக்கலையா?”
எரிச்சல் வந்தது வாணிக்கு. காலையில கதைக் கேக்கவா நேரம் இருக்கு என்று நினைத்துக் கொண்டே, “”என்ன அத்தே சொல்லுங்க”
“”அந்த மனுஷனுக்கு ஒரு கையும் காலும் வரலயாம் வாணி”
இப்போது வாணிக்கு சுரீரென்றது. அய்யோ என்று அவள் மனமும் அடித்துக் கொண்டது. “”ஏன் அத்தே, எப்படி அவர் பீ.பி க்கு மாத்திரை சாப்பிட்டுகிட்டு இருந்தார் தானே விட்டுட்டாராமா?” கேட்டபடியே மறுபடியும் வெளியில் வந்து காலை செருப்புக்குள் திணித்து மாமியாருடன் மீனாட்சி வீட்டுக்கு கிளம்பினாள்.
இரண்டு வீடு தள்ளியிருந்தது மீனாட்சியம்மாவின் வீடு. பாதி நாட்கள் பூட்டிக் கிடக்கும் அந்த வீடு. அவர்களது பிள்ளைகள் வீட்டுக்கு சென்று விடுவார்கள்.
“”மீனாட்சி” அத்தையின் குரலுக்கு வெளியே வந்த மீனாட்சி தளர்ந்து போயிருந்தாள். “”வாங்க” என்று பொதுவாக இருவரையும் அழைத்தாள். உள்ளறைக்குப் போனார்கள். கட்டிலில் படுத்திருந்த மீனாட்சியின் கணவர் கண்கள் நிறைந்திருந்தது. எதையோ பேச விரும்பி, இயலாமல் கண்களை மூடிக் கொண்டார்.
“”என்னம்மா, என்ன ஆச்சு?” வாணியின் கேள்விக்கு மீனாட்சியம்மா பதில் சொன்னாள்.
“”கொஞ்ச நாளாவே அவருக்கு உடம்பு சரியில்ல. சரியா மாத்திரை சாப்பிடாம இப்படி வந்திடுச்சுன்னு டாக்டர் சொல்றாங்க” புடவைத் தலைப்பால் வாயை மூடிக் கொண்டாள்.
“”உங்க பிள்ளைகளுக்கு சொல்லிட்டீங்களா” தலையை மட்டும் அசைத்தார்.
“”பிள்ளைங்க வீட்டுக்குத் தானே அடிக்கடி போவீங்க? அவங்க கவனிச்சுக்க மாட்டாங்களா? ஏன் அவர் மாத்திரை சாப்பிடலை” வாணியின் கேள்விக்கு பதிலாக மீனாட்சியம்மாவின் கண்களில் கண்ணீர் வழிந்தது.
“”எங்களுக்கு ரெண்டு பிள்ளைங்க. பத்து நாள் இந்த பையன் வீட்டில, பத்து நாள் அந்த பையன் வீட்டிலன்னு அலையறோம். இவர் சம்பாரிச்ச காலத்தில பிள்ளைங்களுக்காகன்னு செலவு பண்ணினோம். எங்க எதிர்காலத்துக்குன்னு எதுவும் சேத்து வைக்க முடியல. இப்ப சாப்பாட்டுக்கு பிள்ளைங்க கைய எதிர்பார்த்து இருக்கோம். அவங்களுக்கு நாங்க சுமையா இருக்கோம். பத்து பத்து நாளு பிள்ளங்க வீட்டில, பத்து நாளு எங்க வீட்டிலன்னு அலையறோம். இதில வைத்தியம் எங்க சரியா பண்ணிக்க முடியுது? ஊருக்குப் போகும் போது சில சமயம் மாத்திரைய மறந்துட்டு போயிடறோம். அங்க போயி அவங்களுக்கு இருக்கிற வேலையில நம்ம விஷயத்த சொல்லவா முடியுது? இப்பொ இப்படி படுத்திட்டாரு. சரி பண்ணிடலாமுன்னு டாக்டர் சொல்றாங்க. செலவுக்கு என்ன பண்றதுன்னு தெரியல. பசங்களுக்கு சொல்லியிருக்கேன். என்ன செய்றாங்களோ தெரியல?” சொல்லிக் கொண்டே போனவர் உடைந்து அழ ஆரம்பித்தார்.
வாணிக்கு அவரை எப்படித் தேற்றுவது? என்று தெரியவில்லை. காலையில் அவள் சந்தித்த முதியவர் நினைவுக்கு வந்தார். அவர் புலம்பியது நினைவுக்கு வந்தது. அய்யோ அவரைக் காக்க வைத்ததும் இல்லாமல், கடுமையாக வேறு பேசினோமே என்று தன்னை நொந்து கொண்டாள்.
“”கவலைப்படாதீங்க மீனாட்சிம்மா. நான் எங்க டாக்டர் கிட்டே } என்ன செய்யலாம் என்னன்னு கேக்கறேன், கவலப்படாதீங்க” வேறு என்ன சொல்வது என்று தெரியாமல் வெளியில் வந்தாள் வாணி.
வழியெல்லாம் புலம்பிக் கொண்டே வந்தாள் மாமியார். இந்த மகன் வீட்டிலும், அந்த மகன் வீட்டிலுமாய் காலம் தள்ளும் தன்னைப் பற்றி பயம் வந்திருக்க வேண்டும் அவளுக்கு.
வீட்டிற்குள் நுழைந்ததும், “”நீங்க பேசாம எங்க கூடவே இருந்துடுங்களேன் அத்தே, அங்கேயும் இங்கேயுமா என்னத்துக்கு அலைச்சல்?” வாணியின் கேள்விக்கு பதில் பேசாமல் கண் கலங்கி அவள் கைகளைப் பற்றிக் கொண்டாள். அடுத்த வெள்ளிக்கிழமை அந்த முதியவர் வரும் போது அவரிடம் தன்மையாகப் பேச வேண்டும் என்று நினைத்துக் கொண்டாள் வாணி. தனக்கும் வயதாகுமே என்ற நினைவு ஆட்கொண்டது அவளை.

- கிருஷ்ணப்ரியா (செப்டம்பர் 2013)

தினமணி – நெய்வேலி புத்தகக் கண்காட்சி நடத்திய சிறுகதைப் போட்டியில் ஆறுதல் பரிசு பெற்ற கதை 

தொடர்புடைய சிறுகதைகள்
ஏங்க,ஏங்க சத்தம் கேட்டு கண்விழித்த பாபுவுக்கு முன் அவன் மனைவி கையில் ஆவி பறக்க காப்பியை கையில் வைத்துக்கொண்டு போய் மூஞ்சிய கழுவிட்டு வந்து பேப்பரை படிச்சுட்டு இந்த காப்பிய குடிங்க, என்று அருகில் இருந்த டேபிளில் வைத்துவிட்டு சென்றாள். இவனுக்கு ...
மேலும் கதையை படிக்க...
அன்றோடு அப்பாவை ஆஸ்பத்திரியில் சேர்த்து ஒரு வாரம் ஆகியிருந்தது.இதுவரையில் எந்த முன்னேற்றமும் தெரியவில்லை என்பதோடு இனிமேலும் பிரமாதமாக அவரது உடல் தேறி விடுமென்றோ ..முந்தைய நிலைக்கு வந்து விடுமென்றோ எந்த நம்பிக்கையும் கன்னையாவுக்கு இல்லை. அதைப் பற்றிய வருத்தமும் அவனுக்கு இருந்ததாகச் ...
மேலும் கதையை படிக்க...
உடைத்தெறியபட்ட கற்கள் சதுரங்களாயும்,செவ்வகங்களாயும் முக்கோண வடிவிலும் அருங்கோணமாயுமாய் இன்னமும் இன்னமுமான வடிவம் காட்டியுமாய் காட்சி தருகிறது.கூடவேகொஞ்சம் சிமெண்ட் மற்றும் செங்கல் காரையும் தூசியுடனுமாய் ஏதாவதுஒரு வீட்டின் தரைத்தளம், மற்றும் அடுப்படி மேடை சிங்க தொட்டியை உடைத்தெடுத்திருக்கவேண்டும்.நல்லதல்லாததைஉடைத்துவிட்டு நல்லதை வைத்திருக்க நடந்த ...
மேலும் கதையை படிக்க...
அடி
பலராமன் உட்கார்ந்து கொண்டிருந்த இடத்துக்கு, இப்போது சூரியன் வந்து விட்டான். சுள்ளென்று உறைக்கும் வெய்யிலில் இருந்து தப்பிக்க நிழல் படும் இடத்தைத் தேடினார். கடந்த ஒரு மணி நேரமாக அவர் அந்தப் பார்க்கில்தான் இருந்தார். காலையில் வாக்கிங் வந்து அந்தப் பார்க்கைச் ...
மேலும் கதையை படிக்க...
சஞ்சீவி போட்ட சத்தத்தில் பதறித்தான் போனாள் மல்லிகா. இத்தனைக்கும் வீட்டுக்குள் இருந்துதான் கத்தினான் அவன். அது தெருப் பூராவும் கேட்கும்படி இருந்தது. “ஏன் இப்டிக் கத்துறீங்க? மெதுவாச் சொன்னாப் போதாதா? உள்ளே வாடீங்கிறதை இத்தனை சத்தமாவா சொல்லணும்? வந்துட்டேன்…எதுக்குக் கூப்டீங்க?” “ஏண்டீ, தலை வாரிக்கிறதை ...
மேலும் கதையை படிக்க...
வேதகிரியின் முன்னால் பத்துப் பேராவது இருப்பார்கள். சுவாமிகள் அந்த ஊருக்கு வந்ததிலிருந்து, தினமும் வேத பாரயணமும் ஆன்மீக உரையாடலும், பூஜையும், பஜனையுமாக அமர்க்களப்பட்டுக் கொண்டிருந்தது. ஞானப்பழமாக, ஒளிரும் விளக்காக, அருளும் ஆசானாக விளங்கிய அந்தப் பூஜ்யரின் முன்னால், ஒவ்வொருவரும் அடக்கமுடனும், பணிவுடனும் ...
மேலும் கதையை படிக்க...
இவ்வளவு பணத்தையும் கொண்டு போவது பற்றி என்னைப் போலவே அவருக்கும் பிரச்சனை இருந்தது. ஒரு ஆட்டோவைப் பிடித்துப் போகும் படிக்கு எனக்கு ஆலோசனை வழங்கினார். ஆட்டோவைப் பிடிப்பது என்றாலும் அதற்காகும் பணத்திற்கும் இந்தப் பணத்திலிருந்து தான் எடுத்துக் கொள்ள வேண்டுமென்ற சங்கடம் ...
மேலும் கதையை படிக்க...
தீபாவளி வரப்போகிறது என்றால், எல்லோருக்கும் ஆனந்தமாக இருக்கும். எனக்கோ வயிற்றைக் கலக்கும். காரணம்... வள்ளி அத்தை! தீபாவளிக்கு முன்னமே எங்கள் வீட்டுக்கு வந்துவிடுவாள் வள்ளி அத்தை. அதற்கான முன்னேற்பாடுகளில் அதிகம் பாதிக்கப்படுவது, நான்தான். ''சாரு... வள்ளி அத்தை வரப்போவுது. வீட்டை ஒட்டடை அடி, ...
மேலும் கதையை படிக்க...
பிரசம் கலந்த வெண்சுவைத் தீம் பால் விரி கதிர்ப் பொற்கலத்து ஒரு கை ஏந்திப், புடைப்பின் சுற்றும் பூந்தலைச் சிறு கோல் ‘உண்’ என்று ஓக்குபு புடைப்ப தெண் நீர் முத்து அரிப் பொற்சிலம்பு ஒலிப்பத் தத்துற்று, அரி நரைக் கூந்தல் செம் முது செவிலியர் பரி மெலிந்து ஒழிய ...
மேலும் கதையை படிக்க...
இன்றைய சுமதியின் கனவு மிகவும் வித்தியாசமானதாக இருந்தது. வழமையான கனவுகள் போல கட்டிலில் இருந்து தொப்பென்று விழுவதாயோ திடுக்கிட்டு விழித்து அழுவதாயோ இருக்கவில்லை. நேற்றிரவு படுக்கையிலேயே சுமதிக்கும் அவள் கணவனுக்கும் காரசாரமான சண்டை வந்து விட்டது. சண்டை என்னவோ வழமையாக வரும், ...
மேலும் கதையை படிக்க...
ஏக்கம்
தரிசனம்
மாவுக்கல்லும் தூசியும்…
அடி
இவன் வேறே மாதிரி…!
விலை
யதார்த்தம்
வள்ளி அத்தை
யாதுமாகி நின்றவள்..!
கனவான இனிமைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)