Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

அன்புள்ள அம்மா….

 

அன்புள்ள அம்மா,

இக்கடிதத்தைக் கண்டதும் உனக்குள் ஏற்படும் உணர்ச்சி கோபமா? வருத்தமா? வெறுப்பா? என்பதை என்னால் நிர்ணயிக்க முடியவில்லை.

நீ மட்டுமல்ல எந்த அம்மாவா இருந்தாலும் இம்மூன்றில் ஏதோ ஒரு உணர்ச்சியை அடைந்தே தீருவார்கள்.

உன்னைவிட்டு நான் விலகி வந்திருக்கிறேனே தவிர, உன்னிலிருந்தோ, உன் எண்ணங்களிலிருந்தோ நான் ஒரு நொடி கூட விலகவில்லை. நான் நன்றி கெட்டவள் அல்ல அப்பா இல்லாமல் என்னை நீ வளர்க்க என்ன பாடுபட்டாய் இன்றளவும் மறக்கவில்லை. பாசமில்லாதவளும் அல்ல, உன்னைவிட்டுப் பிரிய எனக்கு மட்டும் மனம் வந்ததா என்ன?

உன்னுடைய அந்த எண்ணத்திற்காக நான் பெரிதும் வருந்துகிறேனே தவிர, உன் மீது ஏனோ என்னால் கோபப்பட முடியவில்லை. இன்னும் சொல்லப் போனால் உன்மீது எனக்கு அளவில்லாப் பரிதாபமும் உண்டாகிறது.

பலநூறு மைல்களுக்கு அப்பால் இன்று நான் இருந்தாலும் என் மனம் மட்டும் உன்னைத்தான் சுற்றி வருகின்றது.

சிறு வயதிலேயே அப்பா இறந்து போனதும் என்னை நம்பித்தான் நீ உயிர்வாழ்ந்தாய் உன் அன்பு முழுவதையும் என்னிடம் செலுத்தினாய். உன் வாழ்க்கையின் பற்றுகோலே நான் ஆகிப் போனதால் என்னை நீ அதிகமாக நேசித்தாய் நேசித்தாய் என்பதைவிட என்னை ஆண்டாய் என்று சொல்வதுதான் பொருந்தும்.
நம் வீட்டு முற்றத்தில் உட்கார்ந்து நிலாவில் சோறு ஊட்டும்பொழுது எத்தனையோ கதைகளைச் சொல்லியிருக்கிறாய். அந்த நாட்கள்தான் எத்தனை ரம்மியமானவை!

நான் எது கேட்டாலும் வாங்கித்தந்து என்னுடன் விளையாடி, நற்புத்தியை புகட்டி எத்தனையோ சிறப்பாக என்னைச் சீராட்டினாய். நான் இப்பொழுது நினைக்கிறேன் அந்தக் குழந்தைப் பருவத்திலேயே நான் இருந்திருக்கக் கூடாதா என்று!

ஒரு சமயம் தீபாவளியப்ப, எதிர்வீட்டு ரம்யா பக்கத்து வீட்டு அர்ச்சனா எல்லாம் பட்டுப்பாவாடை கட்டியிருந்தபொழுது நம் நிலை தெரியாமல் எனக்கும் பட்டுப் பாவாடை தான் வேணுமின்னு பிடிவாதமா அழுதப்ப, நீ இரவெல்லாம் தையல் மிஷினோடும், பகலில் பல வீட்டில் பலகாரம் போட்டும் எனக்குப் பட்டுப்பாவாடை எடுத்துத்தந்தே. அப்பக்கூட உடல் அழற்சியால் உடம்பு முடியாமபோயி இரண்டு நாள் படுக்கையில் இருந்தாய். இன்னொரு சமயம், படுக்கையில் இருந்த தேள் என்னை கொட்டினப்ப, என்னோடு சேர்ந்து நீயும் அலறி என்னை ஒவ்வொரு டாக்டர் வீடா தூக்கிக்கிட்டுப் போய் என் குழந்தையை நல்லாப்பாருங்க, அவதான் என் வாழ்வின் ஆதாரமே என்று நீ துடிச்ச துடிப்பை நினைச்சா இப்பக் கூட என் கண் கலங்குது.

இப்படியெல்லாம் அன்பைக் கொட்டின அம்மா தான் நான் பருவம் அடைஞ்சதும் அடியோடு மாறிப்போனே? எது உன்னை மாறவைத்தது? நான் பருவம் அடைஞ்ச விஷயத்தை நீ மகிழ்ச்சியோடு எதிர்வீடு, பக்கத்து வீடுகளிலெல்லாம் சொன்னப்ப அவர்கள் “ரொம்ப மகிழ்ச்சி, இனிமேல் தான் உனக்குக் கஷ்டம். அவளைக் கல்யாணம் பண்ணிக் கொடுத்துட்டு நீ எப்படி இருக்கப் போகிறாயோ” என்று கேட்ட பொழுதுதான் உனக்குள் அந்த மாறுதல் தோன்றியிருக்கக் கூடும்.

அதற்கப்புறம் பாசத்தைப் பொழிந்து கொண்டிருந்த உன் கண்கள் கண்டிப்பைக் கக்க ஆரம்பித்தன. பள்ளியிலிருந்து வரத் தாமதமானாலும் கூட நீ என்னைத் திட்ட ஆரம்பிச்சே! கதைப் புத்தகத்தைத் தொடக்கூடாதுன்னு தடைபோட ஆரம்பிச்சே!

காரணமில்லாமல், அர்த்தமில்லாமல் அறிவுரைகளை சதா எனக்கு வெறுப்பு ஏற்படற அளவுக்குச் சொல்ல ஆரம்பிச்சே, அதுமட்டுமா மேட்சா டிரஸ் போட்டுக்ககூடாது, சிரித்துப் பெண்களிடத்தில் கூட பேசக் கூடாது என்றெல்லாம் சொன்னது மட்டுமில்லாமல் நான் எங்கு சென்றாலும் என்னை நிழல்போலப் பின் தொடர்ந்தே.

எல்லாவற்றிற்கும் நான் பொறுமையாகத்தான் இருந்தேன். நாள் போக்கில் உன் நிலை மாறிவிடும் என்று நினைத்தேன். ஆனால் நாள் ஆக, ஆக உன் கண்காணிப்புகளும் கண்டிஷன்களும் அதிகமாயின. என்னை நீ உளவு பார்க்கக் கூட துணிந்தாய். இத்தனையும் உனக்கு என்னிடம் உள்ள அன்பால் விளைந்தது என எண்ணி உனக்குப் பயந்து உன் பேச்சைக் கேட்டுக் கொண்டு உன்னைச் செக்குமாடு மாதிரிச் சுற்றிக் கொண்டிருந்த பொழுதுதான் அந்த முரளிதரனைச் சந்திச்சேன். அவர்தான் என் அகக் கண்களைத் திறந்து விட்டவர். வீடு, கல்லுhரி என்று இருந்த எனக்கு உலகத்தில் அனுபவிக்கவும், ரசிக்கவும், தொண்டு செய்யவும் இன்னும் எத்தனையோ விஷயங்கள் இருக்கு என்று அறிவுறுத்தினார்.

கலீல் கிப்ரானையும், பைரனையும் அவர்தான் எனக்கு அறிமுகப்படுத்தினார்.

அவரின் நட்பு பாலைவனத்தில் ஒரு சோலையைப் பார்த்தது மாதிரி இருந்தது. உன்னைவிட என் உணர்வுகளை அவர் சுலபமா புரிஞ்சுகிட்டார். நானும் அவரும் கலீல் கிப்ரானையும், பைரனையும் நாட்கணக்கில் பேசினோம். பொழுது கிடைத்தபோதெல்லாம் ஆற்றின் சலசலப்பையும், செழு மரங்களின் செம்மார்ந்த மதமதர்ப்பையும் நேரம் போவது தெரியாமல் ரசித்தோம். ஆனால் நீ இது அத்தனையும் தப்பா புரிஞ்சுகிட்டே. காமாலைக் கண்களுக்குப் பார்ப்பதெல்லாம் மஞ்சள்தானே! நீ மட்டும் விதிவிலக்கா?

அவனோடு ஓடிப்போய் விடுவேனோ என்று நீயாகவே நினைச்சுகிட்டு அவனைத் தனியாகப் பார்த்து கண்டபடி திட்டினாய். என்னையும் சாடைமாடையாகத் திட்டினே. அதையும் நான் பொறுத்துக்கிட்டேன். ஆனால் அதற்கு மேலும் உச்சக்கட்டமாக நான் கல்யாணம் பண்ணிக்க அலையறதா நீயாக நினைச்சுகிட்டு வலுக்கட்டாயமாக அந்த மிருதங்கக்காரனை எனக்கு கட்டிவைக்கத் திட்டம்போட்டே எத்தனையோ எடுத்துச் சொல்லியும் கேட்காம என்னை, பெத்த பெண்ணையே நம்பாமல் அறையில் சிறை வைச்சே, நான் சம்மதிக்காட்டி தூக்குப்போட்டுக்குவேன்னு மிரட்டினே. நான் உன்மீது வைச்சிருந்த அன்பையே என்னை எதிர்க்கக் கூடிய ஆயுதமாப் பயன்படுத்த ஆரம்பிச்சே.

அதனால்தான் நான் ஓடிப்போனேன். முட்டாள் தனமான அன்பினால் யாருக்கும் எந்தவிதப் பயனும் இல்லேம்மா. நான் உன் மூலமாக வந்திருக்கலாம் ஆனால் உன்னுடையவள் அல்ல அம்மா. உன் அன்பை நீ அளிக்கலாம். உன் எண்ணங்களை அளிக்கக்கூடாது. உன் தேவைகளையும், எண்ணங்களையும் திணிக்கக் கூடாது. நான் இப்படி ஓடிவந்ததிற்குக் காரணமே உன் அன்பால் ஏற்பட்டது தான். ஆமா, நீ நினைச்ச மாதிரியே நான் ஓடி வந்து விட்டேன். ஆனால், நீ நினைத்த மாதிரி முரளிதரனுடன் அல்ல.

ஆமாம் அம்மா, நான் எல்லா உயிர்களிடத்திலும் அன்பு செய்யவே புறப்பட்டு வந்தேன். அப்ப… கல்யாணம் அப்படின்னு நீ கேட்கிறத காதில் விழுகிறது. நான் கல்யாணம் பண்ணிக்கலே. ஏன்னா நானும் உன்னை மாதிரியே ஒரு பெண்ணைப் பெற்றெடுத்து அதன்மீது என்னோட ஆசைகளையும், தேவைகளையும், எண்ணங்களையும் திணிக்க நான் விரும்பலே. அதைவிட உலகத்தில் உள்ள அத்தனை பேர்களிடத்திலும் அன்பு செலுத்தவே விரும்பறேன்.

ஆமாம் அம்மா, நான் அன்னை தெரஸாவிடம் அடைக்கலம் ஆகியிருக்கிறேன். அவர் பணிகளில் நானும் பங்கெடுத்துக் கொள்கிறேன். அதிலே எனக்கு ஆத்மதிருப்தி கிடைக்குது. நீ வளர்த்த மகள் தவறான பாதையில் போகலை என்கிறதை நீ உணர்ந்தா போதும். அதற்காகவே இந்தக் கடிதம் எழுதுகிறேன். நீயும், நானும் பிரிஞ்சு இருக்கிறது தான் உனக்கும் நல்லது, எனக்கும் நல்லது.
கடைசியாக ஒன்று, என்னை மன்னித்துவிடு உன்னை விட்டுப் பிரிந்து வந்ததற்காக.

என்றென்றும் உன் பிரிய மகள்
சு. ரமாதேவி 

தொடர்புடைய சிறுகதைகள்
சிறிய வீடு, சுற்றிலும் அடக்கமான தோட்டம் ஆசிரமம் போன்ற சூழ் நிலை, அந்த அமைதியான சூழ்நிலை மனதுக்கு இதமாக இருந்தது சாரதாவிற்கு. கையிலுள்ள பெட்டியை கீழே வைத்துவிட்டு காலிங் பெல்லை அழுத்தினாள்......கதவைத்திறந்த வசந்தா முன்னைவிட பாதியாக இளைத்துவிட்டிருந்தாள், நடையிலும் ஒரு தளர்ச்சி. "உடம்புக்கு என்ன? ...
மேலும் கதையை படிக்க...
அம்மா வாங்கி வந்த பேனாவைப் பார்த்ததும் கோபுவுக்கு ஒரே மகிழ்ச்சியாக இருந்தது. ஓடிச்சென்று அம்மாவைக் கட்டிப் பிடித்துக் கன்னத்தில் முத்தமிட்டான். “ரொம்ப நன்றி அம்மா. பேனாவைக் கொடுங்க அம்மா,” கேட்டான் கோபு. “கோபு, இந்தப் பேனா உனக்கல்ல!” அம்மா சொன்னதும் ஆவலெல்லாம வடிந்துவிட அதிர்ச்சியுடன், “பின் ...
மேலும் கதையை படிக்க...
“ஏம்மா திலகா, புது கணக்கு ஆசிரியர் வசந்தகுமார் எப்படி? நல்லா பாடம் சொல்லிக் கொடுக்கிறாரா?” தலைமையாசிரியர் தன் மகளைக் கேட்டார். “ரொம்ப விரட்டல் ஜாஸ்தியா இருக்கு. சரியான சிடுமூஞ்சியா இருக்காரு. சந்தேகம் கேட்கவே என் தோழிகள் எல்லாம் பயப்படுறாங்கப்பா.” தலைமையாசிரியர் சிந்தனையோடு நடந்தார். சின்ன வயசு, நல்ல ...
மேலும் கதையை படிக்க...
“எனக்கு அப்பவே தெரியும். நான் எத்தனை படிச்சு, படிச்சு சொன்னேன். கேட்டியா? ரொம்ப மேதாவியா உன்னை நினைச்சு செஞ்சே, இப்ப என்ன ஆச்சு? அத்தனையும் போச்சு” – அப்பா. “பணம், பணமுன்னு பறந்தியே, இருக்கிற வேலை போதாதா? ஏன் அகலக்கால் வைக்கணும்” – ...
மேலும் கதையை படிக்க...
இப்பவெல்லாம் அந்த வீட்டில் வைத்த சாமான்கள் வைத்த இடத்தில் உள்ள ஒழுங்கும் எவர்சில்வர் பாத்திரமெல்லாம் கண்ணாடி போலப் பளபளப்பாயிருக்கிறதும் அஞ்சலை வந்த பிறகு தான். அஞ்சலையிடம் விமலாவுக்கு ரொம்ம நாளாகவே ஒரு கண். அதனால் தான், மானேஜர் வீட்டைவிட்டு அவள் வந்ததும் உடனடியாகச் ...
மேலும் கதையை படிக்க...
சின்ன விஷயம்
அம்மா வாங்கிய பேனா
வசந்தகுமார்
உன் பங்கு…என் பங்கு…
நாய் வால்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)