வெண் புறா

 

(1955ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“உங்களுக்கு என்ன வேண்டும்?”- பம்பரமாகச் சுற்ச் சுழன்று சேவை செய்து கொண்டிருந்தவள், அந்தச் சீன மரப் பார்த்து ஆங்கிலத்தில் கேட்கிறாள். உதட்டில் தெளியும் சிரிப்புடன் குழைந்து வெளிவரும் சொற்களின் ஓசை அந்நியமாக இருப்பினும், அவை மனித குலத்தை இணைக்கும் சங்கிலி அசைவின் துல்லிய நாதத்தினைப் பிரசவிப்பதை உணர்கின்றார்.

அவருடையமுகம் முறுவலில் மலர்கிறது. உதடுகளை அசைத்து, “இந்தி-சீனி பாய்! பாய்!” என்கிறார். அவருடைய கண்களில் தேசபக்தியும், சர்வதேசியக் கூட்டுறவு உணர்ச்சியும் சுடர்விட்டுப் பிரகாசிக்கின்றன.

…வெகு கீழே, கீழே, மேகக் கூட்டங்களுக்கும் கீழே பூமி…

…மேலே, எங்கும் விசும்பின் எல்லையற்ற விரிப்பு…

…அந்தரத்தில் பறந்து கொண்டிருக்கும் விமானம்…

விமானம் முழுவதையும் நான்கே நான்கு வார்த்தைகளில் தொனிக்கும் இனிமையும்- நட்பும் வியாபித்திருக்கிறது.

அந்த வார்த்தைகள் அவளுடைய, உடலைத் துளைக்கின்றன. மயிர் சிலிர்க்கின்றது. மனம் நிறைகிறது. முகம் விரிகிறது. இதழ்கள் மலர்ந்து, புன்னகை பொலிகிறது. பவளச்சாயம் தீட்டப்பெற்ற நகங்களை உடைய விரல்கள் பத்தினையும் நட்பின் அடையாளமாகக் கோர்த்துக்கொண்டு “இந்தி-சீனி பாய்! பாய்!” என்கிறாள். அதில் மொழிச்சுவர்கள் எழுப்பியிருக்கும் பிரிவினையைக் கிழித்துப் பரந்திருக்கும் மனிதனின் மானசீக உணர்ச்சிகள் மண்டிக் கிடக்கின்றன.

***

‘காஷ்மீர் இளவரசி’ என்ற பெயர் தாங்கி, ‘ஏர் இந்தியா இண்டர்நேஷனல் சர்வீ’ஸில் சேவை செய்யும் மேற்படி விமானம் மானஹம்ஸத் தடாகத்தினை நோக்கிப் பறந்து செல்லும் அன்னப்புள்ளின் லாவண்யத்துடன் பதினோராயிரம் அடி உயரத்தில் பறந்துகொண்டிருக்கிறது.

நேற்றுக் காஷ்மீர் இளவரசி சாண்டாகுரூஸ் விமான நிலையத்திலிருந்து புறப்பட்டுப் பீக்கிங்கை அடைந்தது, அங்கிருந்து ஹாங்காங் நகரிற்குப் பறந்து வந்து சிறிது நேரம் தங்கிற்று. அங்கிருந்து ‘ஜிவ்’ வென ஆகாயப் பாதையில் எழுந்து, புதிதான விழிப்புணர்ச்சியுடன் தேசிய சுதந்திரம் பெற்று, அதனைக் கண்ணின் மணியாகக் காப் பாற்ற வேண்டுமென்ற எழுச்சிபெற்ற ஆசிய ஆப்ரிக்க நாடு களின் பிரதிநிதிகள் கூடும் பாண்டுங் மகாநாட்டிற்கு, சமா தானச் செய்தி சுமந்து வெண்புறா ஒப்பப் பறந்துகொண்டிருக்கிறது.

ஹாங்காங் விமானத் தளத்திலிருந்து காஷ்மீர் இள வரசி, புறப்பட்டு முக்கால் மணி நேரமிருக்கும். பிரயாணி களாக இரண்டு போலீஷ் நிருபர்கள், ஒன்பது சீனர்கள் இருக்கிறார்கள். இவர்களுக்கு ஏதாவது சிற்றுண்டி வழங்கும் நோக்கத்துடன் தான் “உங்களுக்கு என்ன வேண்டும்?’, என்று கேட்டாள், அந்த விமானச் சேவகி.

“இந்தி-சீனி பாய்! பாய்!”

…கருநீல ஜால வித்தைக்குள் சங்கமித்துக் , கிடக்கும் பஸிபிக் சமுத்திரத்தின் மேலே ‘காஷ்மீர் இளவரசி’ எழிலுடன் பறந்து கொண்டிருக்கிறது….

அதன் ‘ஏர் ஹோஸ்டஸ்’-விமான சேவகி-மிஸ் குளோரியா பெர்ரி எழில் கக்கும் புன்னகைகளைச் சிந்திக் கொண்டிருக்கிறாள்…

***

மாம்பழத்தில், ஒட்டு மாம்பழந்தான் சுவைமிக்கது என்று சொல்வார்கள். அதைப் போன்று இந்திய மேற்கத்திய அழகுகளின் கலவியல் அறுவடையான–ஆங்கிலோ இந்தியன் மாதான-செல்வி குளோரியா பெர்ரி நல்ல அழகி. சர்வதேச அழகிகள் போட்டியில் கலந்திருந்தால், நிச்சயம் ஒரு பரிசைத் தட்டியிருப்பாள். அவள் பள்ளிக்கூட நாட் களில் படிப்பிலும், விளையாட்டுகளிலும் கெட்டிக்காரி; சதா சிரித்த முகக்காரி,

1951-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 15-ம் நாள். அவளுக்கு இருபதே வயதாக இருந்தபொழுது, இந்த உத்தியோகத்தில், அமர்த்தப்பட்டாள். அன்றிலிருந்து பறந்து திரிகிறாள். விமானம் பறக்கும்; அதில் அவளும் பறப்பாள். உலகின் நாகரிக நகரெங்கும் தொட்டு வாழும் அந்த வாழ்க்கை பிடித்தமாகத்தான் இருந்தது. நிர்வாகிகளுக்கு அவள் மீது விசேஷித்த நன்மதிப்பு. ‘ஏர் ஹோஸ்டஸ்’களுக்கு இடையில் அவள் ராணியாக மதிக்கப்பட்டாள்.

…இருப்பினும், பாண்டுங்கிலிருந்து விமானம் இந்தியாவுக்கு மீண்டதும் அவள் இந்த வேலைக்கு முழுக்குப் போட்டு விடுவாள்.

பின்?

குடும்ப வாழ்க்கை . அதில் ஈடுபட எல்லாம் தயார்.

வாலிபப் பருவத்து எழுச்சியும், துணையுடன் வாழ வேண்டுமென்கின்ற பாதுகாப்பு உணர்ச்சியுந்தான் பெண்களின் உள்ளங்களில் காதலை மலர்விக்கின்றது. இந்தக் காதல் விவகாரத்திற்குள் குளோரியாவும் சிக்கிக் கொண்டாள்.

***

லிஸ்பன் நகரத்து வாலிபன் ஒருவன் – ஏர் இந்தியா இண்டர் நேஷனல் சர்வீ’ஸில் அடிக்கடி கோவைக்கு. வந்து’ செல்வான். அவன் ஒரு பெரிய வியாபாரி, அவனுடன் விமானத்தில் அவளுக்கு முதற் சந்திப்பு ஏற்பட்டது. இரு வரும் மனம் விட்டுப் பரஸ்பரம் பேசத் தலைப்பட்டனர். காலக் – கிரமத்தில் அவர்களுள் அரும்பிய நட்பு காதலாகப் பரிணமித்தது.

மூன்று தினங்களுக்கு முன்னர் அந்த வாலிபனிட மிருந்து அவளுக்கு ஒரு கடிதம் வந்தது. முறுவலின் மத்தி யிலே, இப்பொழுதும்கூட நெஞ்சுச் சட்டைக்குள் இருக்கும் அக்கடிதத்தினைத் தடவிப் பார்க்கிறாள்…….

அந்தக் கடிதத்தில்…

“என் அன்பே!

‘காதல் என்பது இன்பமயமான கனவு. அது விடிந் தால் நிலைப்பதில்லை’ என்று சொல்வார்கள். காதல் விவ காரத்தில் தோல்வியடைந்தவர்களுடைய வீண்கூச்சல் அது. கண்ணே, உன்னையல்லாத ஓர் இல்வாழ்வினை என்னால் கற்பனைகூடச் செய்து பார்க்க இயலாதே.

உண்மையில், நமது திருமணம் அதிகம் காலந் தாழ்த்தப் பட்டுவிட்டதென்றே எனக்குப்படுகிறது. நமது தேன்மதிக் – , கான நாளை இன்னும் ஒத்திப்போட நான் விரும்பவில்லை; நீயும் விரும்ப மாட்டாயென்பதும் எனக்குத் தெரியும், – இது கண்டதும் ரோமுக்கு வா. அங்குள்ள வெனிஸ்’ ஓட்டலில் 10-ம் நம்பர் அறையை எடுத்திருக்கின்றேன். இங்கு நமது திருமணத்தை முடித்துக் கொண்டு, தேன் மதிக்கு நைஸ் அல்லது ஜெனிவா செல்வோம்.

என் இனிய வெண்புறாவே! கடிதம் கண்டதும் பறந்து வா! தாமதத்தை என்னால் தாங்க முடியாது…..

***

கடிதத்தைக் கண்டதும் ரோமுக்குப் புறப்படச் சகல ஆயத்தங்களையும் செய்தாள். ராஜினாமாக் கடிதத்தையும் எழுதி அனுப்பிவிட்டு, அந்தக் கனவுலகில் நடத்தப் போகும் தேன்மதியைப் பற்றிய நினைவுகளில் சஞ்சரித்துக் கொண்டிருக்கும் பொழுது-

டெலிபோன் மணி கணகணத்தது.

“ஹலோ …”

“ஹலோ ..”

“மிஸ் குளோரியா பெர்ரியா? முக்கியமான செய்தி. சீனத் தூதுகோஷ்டி ஒன்று பீக்கிங்கிலிருந்து, பாண்டுங் செல் வதற்கு நமது காஷ்மீர் இளவரசியை ‘புக்’ செய்திருக்கிறார்கள். நாளைக்கே சாண்டாகுரூஸ் விமான நிலையத்திலிருந்து புறப்ப டும்…” .

“ஏன் சீனரிடம் விமானங்கள் கிடையாதா?”

“இது பாதுகாப்பு விவகாரம். அதனாலேதான் அந்த விமானத்திற்கு உன்னையே ‘ஏர் ஹொஸ்டஸாக நிய மித்திருக்கிறோம்.”

“மன்னியுங்கள். நான் வேலையை ராஜினாமாச் செய்ய உத்தேசித்திருக்கிறேன். என் கடிதத்தைக் கூடத் தபாலில் சேர்த்துவிட்டேன்.”

“குளோரியாவா பேசுவது? இது சர்வதேச அரங்கில் இந்திய மண்ணின் பெருமையினை நிலைநாட்டும் காரியம். பிரதமர் நேருவே தலையிட்டிருக்கிறார். என்ன தான் சொந்த விருப்பு வெறுப்புகள் இருப்பினும், நாம் பிறந்த இந்திய மாதாவின் கௌரவத்தினை நிலைநாட்டுவது நமது கடமை. உன்னைத் தவிர இந்தப் பணியினைச் செய்யவல்லவர்கள் கிடையாது என்பது நமது எண்ணம்”

“அதற்காக?”

“மிஸ் பெர்ரி! விந்தையாக இருக்கிறது. உன் பேச்சு. உன் உதிரத்தில் சுரந்தோடும் கடமை உணர்ச்சி எங்கே ? “சொன்ன சொல்லைக் காப்பாற்றத் தவறுபவன் தான் இந்தி யன்’ என்ற அவச்சொல்லினைத்தான் நீ பிறந்த மண் ணிற்குச் சம்பாதித்துத் தரப்போகின்றாயா?”

“சரி.”

“வெரி குட்… வினாடிகளுக்குள் புறப்படு…”

“நான் பாண்டுங்கிலிருந்து திரும்பியதும் என் ராஜி னாமா அங்கீகரிக்கப்படுமல்லவா?”

“நிச்சயம். அத்துடன் உன் திருமணமும் சீக்கிரம் நடைபெறும். விஸ் யூ குட் லக்…”

விமானச் சேவை அதிபருக்கும் அவளுக்குமிடையில் நடந்த சம்பாஷணை.

***

ரோமாபுரிக்குப் பிரயாணியாகப் பறக்கத் தயாராக இருந்தவள், பீக்கிங்கிற்கு ஏர் ஹொஸ்டஸாகப் பறந்தாள்.

இதுதான் கடைசி முறையாக, உத்தியோக ரீதியில், பறப்பது.

அப்புறம்?-

தேன்மதி!

இன்பமான நினைவுகள் மனதிலே குதிர்கின்றன-

பிரயாணிகளின் சகல சௌகரியங்களையும் கவனிக்க வேண்டும் என்ற எழுச்சி மேலோங்குகின்றது..

***

“ஏதாவது பத்திரிகை”-சில சீனப் பத்திரிகைகளை அந்தச் சீனரிடம் நீட்டுகிறாள்.

“தாங்ஸ்” – அவர் பெற்றுக் கொள்ளுகிறார். -

விமானம் மூன்று என்ஜின்கள் கொடுக்கும் வேகத்தில் பறக்கிறது……

விமானத்திற்குள் ஆசிய ஆப்ரிக்க நாடுகளின் சுதந்திரத் தைப் பேணிக் காக்க இச்சை கொண்ட சீனரும், போலிஷ் நிருபரும், அவர்களுக்கு மகிழ்ச்சி யூட்டிக்கொண்டிருக்கும் பெர்ரியும்……..

“உங்களுடைய பெயரை அறியலாமா?” – என்று சீனர் தனக்குத் தெரிந்த இரண்டொரு ஆங்கிலச் சொற்களைக் கோர்த்து, சீன அபிநயத்துடன் உச்சரித்துக் கேட்கிறார்.

“டுமீல்!”

ஏதோ வெடிச் சப்தம். விமானம் ஒரு குலுங்கு குலுங்கு கின்றது. நின்று கொண்டிருந்த மிஸ் குளோரியா பெர்ரி அந்தச் சீனருடன் முட்டி மோதி, எழுந்து நிற்கிறாள்.

தொடர்ந்து நிர்ச்சுவாசப் பேரமைதி நிலவுகிறது.

என்ஜின்கள் மூன்றும் வேலை செய்து விமானம் பறக்கிறது…….

ஆனால், இடது பக்கத்து இறகு தீப்பிடித்து எரிகிறது.

அவளுக்குப் புரிகிறது…..

சதியைப் பற்றி எச்சரித்தது நினைவில் மிதக்கிறது….

எது நடக்கக் கூடாது என்று நினைத்தார்களோ, அதே நடந்துவிட்டது.

சிரிப்பைத் தவிர வேறு எதுவும் பரவியிராத அந்தப் பிரயாணிகளுடைய முகங்களில், கவலையின் ரேகைகள் விம்மிப் புடைத்து….

‘சதிகாரர்கள் தங்கள் திட்டத்தை நிறைவேற்றி விட் டார்கள். இவ்வளவு முன்னேற்பாடெல்லாம் பயன்தர வில்லை. ஹாங்காங்கில் எது காரணம்பற்றியும் விமானம் தரித்திருக்கக் கூடாது’ என்று சீனத்தில் ஏதோ சொல்கின்றார். அவர்களுடைய முகங்களில் பீதியின் சாயல் பரவி மூட்டம் போட்ட கறுத்த வானைப்போல, அந்தகாரம்…

குளோரியா நிலைமையைச் சரிவரப் புரிந்து கொள்ளு கிறாள். கடமை உணர்ச்சி அவள் முகத்தில் பேரமைதியை நிலைநாட்டுகிறது…அதே புன்முறுவல்.

“எதற்கும் பயப்படாதீர்கள்” என்று சொல்லிச் சுறு சுறுப்பாக வேலையில் ஈடுபடுகிறாள். பிரயாணிகள், விமான ஓட்டிகள் சகலருக்கும் பாதுகாப்புச் சாதனங்களை விநியோ கிக்கிறாள். சிலருக்கு அவற்றை அணிய உதவி புரிகிறாள். நீரில் நீந்துவதற்கு மிதப்பங்களையும் விநியோகிக்கிறாள்.

‘ம்…!’- தனது கடமைகளைச் செய்து முடித்து, மனச் சுமை இறக்கும் பெருமூச்சு.

‘டுமீல்!’

மீண்டும் சப்தம்; விமானம் பயங்கரமாகக் குலுங்கி…

வலது பக்கத்து இறகும் தீப்பற்றி எரிகிறது.

புகைமயம். தீ நாக்குகளைப் பரப்பி, அக்கினி உள்ளே பரவுகிறது.

விமானம், குண்டுபட்டு நிலத்தில் விழும் பட்சியைப் போல, கீழே, கீழே இறங்குகின்றது….

தன்னுடைய பாதுகாப்பிற்குள் விடப்பட்ட பிரயாணி களைப் பார்க்கிறாள்.

எல்லோரும், தங்களுடைய உயிர்களைப் பாதுகாக்கத் தேவையான சாதனங்களுடன் தயாராக நிற்கிறார்கள்,

அவள்?

நேரமில்லை. வீண் முயற்சி. சாதனங்களைத் தேடி எடுத்துக்கொள்வதற் கிடையில் விமானம் நீருக்குள் அமுங்கி விடும். . அவள் நிதானத்தை இழக்கவில்லை. இந்திய மண்ணில் ஜனித்த தியாகச் சுடர் அவளுடைய முகத்தில் ஒளிர்கின்றது.

அவளை அறியாத உணர்ச்சி வேகத்தில், கரங்களைக் போர்த்தபடி, “இந்தி-சீனி பாய்! பாய்!” என்கிறாள்.

சீனர்களும் “இந்தி-சீனி பாய்! பாய்!” என்று கோஷிக்இறார்கள்.

விமானம் முழுவதும் தீ.

அதைக் கிழித்துக் கிளம்பும் நட்பின் துல்லிய ஒலி.

‘இந்தி-சீனி பாய்! பாய்!’

திறக்கப்பட்ட விமானக் கதவுகளின் வழியே, பிரயாணிகள் சமுத்திரத்தில் குதிக்கிறார்கள்.

தன்னால் காப்பாற்றப்பட்டு வெளியேறும் பிரயாணிகளைப் பார்த்து முறுவலித்துக் கொண்டே நிம்மதியாக மூச்சு விடுகின்றாள் மிஸ் குளோரியா பெர்ரி……

…… விமானம் நீரில் மோதி, நீருக்குள் அமுங்குகின்றது.

***

பாண்டுங் மகாநாடு நடைபெறுகிறது.

சமாதானவாதிகளின் நெஞ்சைப் போன்ற வெள்ளை உள்ளம் படைத்த வெண்புறாவே-கடமையின் திரு உருவே காதலை மனதிலே சுமந்தும், இந்திய மண்ணின் மிக நீண்ட தியாக பாரம்பரியத்தின் அங்கமாக விளங்கும் குளோரி யாவே- இனியவளே-நீ எங்கே?- எங்கே?

ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பாளரின் கொடு நெஞ்சைப் போன்று பேராசை பொங்கும் பஸிபிக் சமுத்திரத்தின் நீர்ப் பரப்பில் உன்னை எப்படித் தேடுவது? எங்கே தேடிப் பிடிப்பது?

‘நீரில் நீ அமிழ்ந்த போது, ரோமில் உனக்காகக் காத்திருக்கும் லிஸ்பன் நகரத்து வாலிபனை நெஞ்சில் நினைத்தாயா? -அல்லது ‘இந்தி-சீனி – பாய்! பாய்!’ என்று உச்சரித்துக்கொண்டே இருந்தாயா…?

- 19-6-1955 தண்ணீரும் கண்ணீரும் – சரஸ்வதி வெளியீடு – முதற் பதிப்பு – ஜூலை 1960 

தொடர்புடைய சிறுகதைகள்
(2010ல் வெளியான சீர்திருத்த நாடகம், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) உள்ளங்காலைத் தகித்த உஷ்ணம் உச்சம் தலையில் போய் உறைந்த போது, பதைபதைப்புடன் தட்டுத் தடுமாறி இடது கால் பாதத்தை தூக்கித் திருக்கூத்தாடிய பாவத்துடன் துள்ளிக் குதித் தான், ...
மேலும் கதையை படிக்க...
(1958ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) நூற்றி ஐம்பது ஆண்டுகளாக நம்மீது-இலங்கை மக்கள்மீது-ஆட்சி செலுத்திய ஆங்கிலேயர், கட்டிக் காத்த ஆட்சி அமைப்பு. இயந்திரத்தின் உபயோகமுள்ள இரும்புச் சக்கர அங்கங்கள் தான் விதானைமார்கள். இந்தத் திருக் ...
மேலும் கதையை படிக்க...
(1960ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) “ஹை , ஹை!...த்தா!...த்தா ! சூ...! சூ...!" என்று வாயால் ஓசை செய்த வண்ணம் கையில் பூவரசந் தடியுடன் குறுக்கும் மறுக்குமாக நாற்புறமும் சிதறி ஓடிய மாடுகளை ...
மேலும் கதையை படிக்க...
(1955ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) “மாத்தயா..." டாக்டர் இராஜநாயகம் திரும்பிப் பார்த்தார்.. ஹார்பர் தொழிலாளி அப்புஹாமி அங்கு நின்றுகொண்டிருந்தான். அப்புஹாமி ஏதோ சொல்ல விரும்பினான். ஆனால் வார்த்தைகள் மட்டும் கோர்வையாக வாயைவிட்டு வெளி வரத் தயங்கின. மீண்டும் ...
மேலும் கதையை படிக்க...
(1960ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) யாழ்ப்பாணம். மூன்றாம் குறுக்குத் தெரு, கிட்டங்கி ரோட்டினைக் கட்டித் தழுவும் சந்தி. அதன் மேற்குப் புறமாகப் 'பவுண் மார்க்' ஓட்டுக் கிட்டங்கி. கிட்டங்கியிலிருந்து பத்து கஜ தூரத்தில், ...
மேலும் கதையை படிக்க...
(1955ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) காக்காய் பிடிப்பது ஒரு கலையென்றால், கயிறு திரிப் பதும் ஒரு கலைதான் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை வைத்திருப்பவர்தான் நமது நித்தியலிங்கம் அவர்கள். கயிறு திரிப்பது என்பது ...
மேலும் கதையை படிக்க...
(1954ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) 'சுந்தரம்ஸ் அன்ட் கோ'வின் பிரதம பங்காளியும்' மானே ஜிங் டைரக்டருமான ஸ்ரீமான் சுந்தரம்பிள்ளை அவர் களும், 'ஆறுமுகம் பிள்ளை அன்ட் சன்ஸ்' உரிமையாளர் திருவாளர் ஆறுமுகம் பிள்ளை ...
மேலும் கதையை படிக்க...
(1960ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) வகுப்பறையிலிருந்து எழுந்து கொண்டிருந்த சமுத்திர ஆரவாரம் தீடீரென்று கரைந்து, மடிந்து, மறைகிறது. இடுகாட்டின் சலனமற்ற அமைதி - வகுப்பெங்கும் ஆழ்ந்த மௌனம் நிலவுகின்றது. கந்தவனம் வாத்தியார் குமுறும் எரிமலையாய்த் ...
மேலும் கதையை படிக்க...
(1958ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) பாரிஸ்டர் பரநிருப சிங்கர் பாமரனாக மதிக்கப்பட்டார். நேற்றைக்கு இருந்த கௌரவம்? அந்தஸ்து ? இராஜ நடை போட்ட மிடுக்கு ? எல்லாம் ஒருசேர நொறுங்கி... தாங்க இயலாத நெஞ்சக்குமுறல். பெரிய ...
மேலும் கதையை படிக்க...
(1959ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) நாவல்களையும் சிறுகதைகளையும் திடுதிப்பென்று ஆரம்பிக்க வேண்டும். அப்பொழுது தான் அவை விறுவிறுப்பாக வும், சுவாரஸ்யமாகவும் இருக்குமாம். இப்படி யாரோ ஒரு பெரிய எழுத்துப் புலி சொல்லி இருக்கும் ...
மேலும் கதையை படிக்க...
பாதுகை
காலத்தால் சாகாதது
முற்றவெளி
கொச்சிக் கடையும் கறுவாக்காடும்
ஞானம்
செய்தி வேட்டை
இவர்களும் அவர்களும்
கரும்பலகை
தீர்க்கதரிசி
சிலுவை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)