மாத்தி யோசி!

 

கல்யாண விநாயகர் கோவில் எதிரில் ஒரு நடுத்தரமான வீடு. அந்த வீட்டின் முன்புறம் விசாலமான காலியிடம். அந்தக் காலியிடத்தில் வரிசையாக இரு சக்கர வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தன. அந்த வீட்டினை ஒட்டிய இடத்தில் ஒரு தனியார் வங்கியும் செயல்பட்டுக் கொண்டிருந்தது. அந்த வங்கிக்கு வரும் வாடிக்கையாளர்கள் வந்த இரு சக்கர வாகனங்கள்தான் அந்த வீட்டின் முன்புற காலியிடத்தில் நிறுத்தப்பட்டிருந்தது. இதன் காரணமாக தினமும் யாரிடமாவது உரத்த குரலுடன் சப்தம் போடுவது வழக்கமாகக் கொண்டிருந்தான் பட்டதாரி சம்பத்குமார்.

அன்றும் அப்படித்தான் ஒருவர் வங்கியில் தான் வந்தவேலை முடிந்து, சம்பத்குமார் வீட்டிற்கு முன்பு நிறுத்தியிருந்த தனது இரு சக்கர வாகனத்தை எடுத்துக் கொண்டு இருக்கும்போது , அப்போது தற்செயலாக வீட்டிற்கு வெளியே வந்த சம்பத்குமார் ,வேகமாக வந்து இரு சக்கர வாகனத்தை மறித்து நின்றான். இரு சக்கர வாகனத்துகுரியவருக்கு நாற்பது வயது இருக்கும்.

அவர் “ என்ன தம்பி வண்டியை எடுக்க முடியாமல் , மறித்து நிற்கரே. நீ யார் ? “ என்று அமைதியாகத்தான் சம்பத்குமாரைப் பார்த்துக் கேட்டார்.

“நான் யாரா ?! இந்த வீட்டுக்குச் சொந்தக்காரர் , தினமும் இதே எனக்கு வேலையாய்ப் போச்சு . எங்க வீட்டுவாசலை மறித்து இப்படி எங்க வீட்டுக்கு முன்னாடி இப்படி வரிசையாக வண்டியை நிறுத்திடுறாங்க . இது என்ன வாகனக் காப்பகமா? இதே தொந்தரவாப் போச்சு. ஏனய்யா இங்க வண்டியை நிறுத்தினே…”

“ தம்பி. நான் என்ன உங்க வீட்டுக்குள்ளே வந்து நிறுத்தியிருப்பதுபோல கோபப்படரயே, என்னோட வண்டியை யாருக்கும் இடைஞ்சல் இல்லாமல் வெளியேதானே நிறுத்தியிருக்கேன்” என்று அவர் அமைதியாகத்தான் பதில் சொன்னார்.

“ என்னய்யா பேசுறே எங்க வீட்டுக்கு முன்னாடி உள்ள இந்தக் காலியிடம் எங்களுக்கு சொந்தமானது. நீங்க வீட்டுக்குள்ளே வேறு வந்து நிறுத்துவீங்களா ! ” என மேலும் சம்பத்குமார் உரக்கக் கத்தினான்.

மேலும் அவனிடம் பேசினால் தனக்குத்தான் அவமானம் என அந்தப் பெரியவர் தனக்குள் நினைத்துக்கொண்டு அமைதியாக வண்டியை எடுத்துச் சென்றுவிட்டார்.

சம்பத்குமாரின் தந்தையார் சிறு விவசாயி. ஆனால் பெருங்குடும்பம். அவருக்கு சம்பத்குமார் மூத்த மகன் மற்றும் திருமணத்திற்கு காத்திருக்கும் இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். அவர் தனது மகனை மிகவும் கஷ்ட்டபட்டுத்தான் எம்.காம். வரை படிக்க வைத்தார். தந்தை கஷ்ட்டப்பட்டு தன்னைப் படிக்க வைத்ததை நினைத்து ,தான் படித்து முடித்தவுடன், வேலைக்குச் சென்று விடலாம் என சம்பத்குமார் நினைத்திருந்தான்.

அவன் பட்டப்படிப்பு முடித்து ஆறு வருடங்களுக்கு மேலாகிவிட்டது. அவனும் பல இடங்களுக்கு மனுப் போட்டும், தனியார் நிறுவனங்களிலும், வேலைக்காக ஏறி இறங்கியும் அவனுக்கு அலுத்து விட்டது. அவன் வேலை கிடைக்காமல் விரக்தி அடைந்ததைப் பார்த்து, அவனுடைய அப்பா தினமும் ஆறுதல் கூறிக் கொண்டுதானிருந்தார். இருந்தாலும் விரக்தியின் மிகுதியில், தன்னோட வீட்டிற்கு முன் நிறுத்தும் இரு சக்கர வாகனக்காரர்களிடம் , அவன் ஏதாவது வம்புக்கிழுத்து கத்திக்கொண்டே இருப்பான். அப்போதெல்லாம் அவன் தந்தை வந்து அவனது கோபத்தைத் தணித்து சமாதானப்படுத்துவார்.

அன்றும் அப்படித்தான் சம்பத்குமார் வீட்டை விட்டு வாசலுக்கு வரும்போது, ஓர் இளைஞர் தன் இரு சக்கர வாகனத்தை வேகமாக ஓட்டி வந்து சம்பத்குமார் வீட்டின் முன்பாக நிறுத்தப் போனான். அப்போது அங்கே வேகமாக வந்த சம்பத்குமார் “ சார் இங்கே வண்டியை நிறுத்தக்கூடாது ” எனக் கூறித் தடுத்தான்.

அந்த இளைஞரும் மெதுவாக “ சார் பாங்கில் ஒரு வேலை, பத்து நிமிடத்தில் முடிந்து விடும். நான் வந்து உடனே வண்டியை எடுத்துக் கொள்கிறேன் ” என்றான்.

அவன் கூறியதைக் காதில் வாங்கிக் கொள்ளாமல் “சார் எங்க வீட்டுக்கு முன்பாக வண்டியை நிறுத்தக்கூடாது. இந்தக் காலியிடம் எங்களுக்குச் சொந்தமானது. வண்டியை வேறு எங்கேயும் கொண்டு போய் நிறுத்துங்கள்” எனக் கத்தினான்.

அந்த இளைஞனுக்கு உடனே கோபம் வந்து விட்டது. “உங்க காலியிடம்னா . ‘பென்ஸ்’ போட்டு இருக்கணும். ‘பென்ஸ்’ போட்டால் யாரும் இங்க வந்து என்னை மாதிரி வண்டியை நிறுத்த மாட்டங்க “ என பதிலுக்கு கத்த ஆரம்பித்தான்.

“ ஆமா துரைகள் வந்து வண்டியை நிறுத்தக்கூடாதுன்னு பென்ஸ் போடுவாங்க. மிஸ்டர் அநாவசியமாக பேசாமல், வண்டியைக் கொண்டு வேறு இடத்தில் நிறுத்துங்கள்.” எனக் கத்தினான்.

இருவருக்கும் வாக்குவாதம் அதிகமானதை கண்டு சிறு கூட்டமே கூடி, வேடிக்கை பார்க்க ஆரம்பித்தது. கூட்டத்தில் இருந்த ஒரு பெரியவர் சம்பத்குமாரைப் பார்த்து “தம்பி அவர்தான் வண்டியை அரைமணி நேரத்திலே வந்து எடுத்துக் கொள்கிறேன்னு சொல்றாரில்லே. சரி உங்க இடம்தான் உங்களுக்கும் போக வர இடஞ்சல்தான் , நீங்க சொல்வதிலும் நியாயம்தான்” என சமாதானப்படுத்தும் நோக்கில் பேசினார்.

சம்பத்குமார் “ அய்யா அவர் என்ன சொல்றார்னு பாருங்க. நான் அவர் வண்டியை நிறுத்தக்கூடாதுன்னா பென்ஸ் போடணுமாம் அப்பத்தான் அவர் வண்டியை இங்கே நிறுத்தமாட்டாராம் என்கிட்டே வந்து சட்டம் பேசுறார். அதனாலே அவர் வண்டியை இங்கே நிறுத்தக்கூடாது “ என்று சம்பத்குமார் பிடிவாதம் பிடித்தான்.

அப்போது அவ்வழியே வந்த தனியார் வங்கி மேலாளர் கூட்டத்தை விலக்கி விட்டு, வாக்குவாதம் செய்து கொண்டிருந்த சம்பத்குமாரிடம் என்ன விபரம் எனக் கேட்டார். சம்பத்குமார், வங்கி மேலாளர் என்பதால் மரியாதையுடன் அவரிடம் அந்த இளைஞன் தன்னிடம் பேசியதையெல்லாம் ஒன்றுவிடாமல் எடுத்துக் கூறினான்.

வங்கி மேலாளர் சம்பத்குமார் கூறியதையெல்லாம் கவனமாகக் கேட்டு விட்டு , இரு சக்கர வாகனத்தை வைக்க வந்த அந்த இளைஞனைப் பார்த்து “ தம்பி வண்டியை இங்கு வைத்து விட்டுப் போங்கள். நான் இவரிடம் பேசிக்கொள்கிறேன். “ என்று சமாதானப்படுத்தி, அந்த இளைஞரை அனுப்பி வைத்தார். அந்த இளைஞர் இரு சக்கர வாகனத்தை வைத்து விட்டுச் சென்றவுடன், வேடிக்கை பார்த்தக் கூட்டமெல்லாம் கலைந்து சென்றது.

அந்த இளைஞரும் கூடிய கூட்டமும் சென்ற பிறகு வங்கி மேலாளர் சம்பத்குமாரிடம் ,அவன் படிப்பு வேலை மற்றும் அவன் குடும்ப சூழ்நிலை அனைத்தையும் விசாரித்து விட்டு, சம்பத்குமாரிடம் வேறு எதுவும் பேசாமல் “ தம்பி இன்று ஈவினிங் ஆறு மணிக்கு மேலே நீங்க என்னைப் பாங்குக்கு வந்து பாருங்க “ என்று சொல்லிவிட்டுச் சென்று விட்டார்.

சம்பத்குமார் வேகமாக வீட்டிற்குள் ஓடினான். அவன் சந்தோஷத்துடன் தந்தையைப் பார்த்து “அப்பா நம்ம வீட்டுக்குப் பக்கத்திலிருக்கும் பாங்க் மானேஜர் நான் இன்னிக்கி சாயந்திரம் அவரை வந்து தவறாமல் பார்க்கும்படி கூறியிருக்கிறார். நான் அவரை நம்ம வீட்டு வழியாக செல்வதை அடிக்கடி பார்த்திருக்கிறேன்.அனேகமாக அவருடைய வங்கியில் அவர் செல்வாக்கிலே எனக்கு வேலை ஏதாவது போட்டுக் கொடுப்பார்ன்னு நெனைக்கிறேன்.” என்று கூறினான்.

சம்பத்குமார் தனக்கு எப்படியும் பாங்க் மானேஜர் மூலம் அல்லது அவர் செல்வாக்கினால் வேலை கிடைத்து விடும் படித்த படிப்பு வீண்போகவில்லை என மனதிற்குள் கற்பனையை வளர்த்துக் கொண்டான். தனக்கு வேலை கிடைத்தவுடன் முதலில் வீட்டுக்கு முன்னால் பென்ஸ் போட்டு விடவேண்டும். அப்போதுதான் இந்த இரு சக்கர வாகனங்கள் வீட்டுக்கு முன்னாடி நிறுத்தும் தொந்தரவு இல்லாமல் இருக்கும். என்று அவன் யோசித்துக் கொண்டு இருக்கும்போது, அவன் அம்மா சாப்பிட அழைத்தபோதுதான் தன் நினைவுக்கு வந்தான்.

அவன் சாப்பிட்டு முடிந்தவுடன் தான் இதுவரை படித்த சான்றிதழ்களை வரிசையாக எடுத்து அடுக்கி வைத்தான். மணியைப் பார்த்தான் மணி ஐந்தைக் காட்டியது. அப்போது கடிகாரம் மெதுவாக ஓடுவதுபோல் அவனுக்கு தோன்றியது.

சம்பத்குமார் அன்று மாலை ஆறு மணியானதும் வங்கி மேலாளரை சான்றிதழ்களுடன் சென்று பார்த்தான். வங்கி மேலாளர் சம்பத்குமாரைப் பார்த்தவுடன் புன்முறுவலுடன் அவனை எதிரில் இருக்கும் நாற்காலியில் அமரும்படி கூறினார். அவன் கொடுத்த சான்றிதழ்களை ஒவ்வொன்றாக எடுத்துப் பார்த்தார்.

சான்றிதழ்களை பார்த்துக்கொண்டே “ மிஸ்டர் சம்பத்குமார் நீங்க ஏன் சுயதொழில் செய்யக்கூடாது. எல்லாருமே கவர்மெண்ட் வேலையை எதிர்பார்த்துக்கொண்டு இருக்கலாமா ! நீங்கள் சுயதொழில் செய்தால் உங்கள் மூலம் ஒரு சில பேருக்காவது நீங்கள் வேலை கொடுக்கலாமே “ என்று விளக்கிக் கூறினார்.

“ சார் சுயதொழில் செய்ய வேண்டுமெனில் சிறிய முதலீடுக்காவது பணம் வேண்டுமே மேலும் என்னைப் பொறுத்தவரை எந்தவிதத் தொழிலும் எனக்குத் தெரியாது “ என்று சம்பத்குமார் வெளிப்படையாகப் பேசினான்.

“ சம்பத்குமார் உங்க வீட்டு முன்னாடி டூ வீலர்ஸ் நிறுத்தி இடைஞ்சல் பண்ணுகிறார்கள் என்று நீங்க நினைப்பது, அவர்கள் மீது கோபப்படுவது எல்லாமே , உங்களுக்கு ஒரு வேலையோ , ஒரு வருமானமோ இல்லாத விரக்தியில்தான் அப்படி நடந்து கொள்கிறீர்கள் என்று எனக்கு நினைக்கத் தோன்றுகிறது. நீங்களே அதைக் கொஞ்சம் சிந்தித்து மாத்தி யோசித்துப் பாருங்களேன்.

உங்க வீட்டு முன்பாக போதுமான காலியிடம் இருக்கு. அதில் ஒரு டீக்கடையை ஒரு டீ போடத் தெரிந்தவரை வைத்து ஆரம்பிக்கலாமே.” என்று யோசனை கூறினார்.

“ ஏன் சார் என்னை டீக்கடையை ஆரம்பிக்கச் சொல்கிறீர்கள் எனக்குப் புரியவில்லையே “

“ எங்க வங்கிக் வரும் வாடிக்கையாளர்கள் எல்லாம் இங்கிருந்து ஒரு கிலோமீட்டர் தூரம் போய்த்தான் டீயோ காபியோ சாப்பிட வேண்டியிருக்கு. ஏன் எங்க பாங்க் ஸ்டாப்களுக்கு எல்லாம் அவ்வளவு தூரம் போய்த்தான் டீயோ காபியோ வாங்கி வந்து அவர்களுக்கு கொடுக்கிறார்கள்.”

“ மேலும் இந்த வங்கிக்கு வரும் வாடிக்கையாளர்கள் உங்க வீட்டு முன்னாடி டூ வீலர்களை நிறுத்தி விட்டு டீயோ காபியோ கண்டிப்பாக சாப்பிட்டு விட்டு செல்வார்கள். அதனால் உங்களுக்கும் டீக்கடையில் வியாபாரம் நல்ல லாபத்தில் ஓடும். அப்போது உங்களுக்கும் டூ வீலர்கள் உங்க வீட்டு முன்னால் வைப்பது இடஞ்சலாகத் தோன்றாது. மாறாக சந்தோசப்படுவீர்கள். என்ன சம்பத்குமார் இப்போது உங்களுக்குப் புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். ” என்று நீண்ட விளக்கம் வங்கி மேலாளர் கொடுத்தார்.

‘வங்கி மேலாளர் கூறியபடி நான் ஏன் மாத்தி யோசிக்காமல் இதுவரைக்கும் இருந்து விட்டேன். நல்லவேளையாக, இப்போதாவது என்னை வங்கி மேலாளர் மாத்தி யோசிக்க வைத்து விட்டாரே, அதை நினைத்து சந்தோசப்பட்டுக் கொள்ள வேண்டியதுதான் ‘ என்று சம்பத்குமார் சிந்தித்துக் கொண்டிருக்கும்போது…..

“ என்ன சம்பத்குமார் “ வங்கி மேலாளர் குரல் கொடுத்த பிறகுதான் தன் நிலைக்கு வந்த சம்பத்குமார் அவரிடம் “ சார் நீங்க சொன்னபடி டீக்கடை ஆரம்பிக்க முடிவு செய்து விட்டேன். என்னை மாத்தி யோசிக்க வைத்த உங்களுக்கு ரெம்ப நன்றி சார் “ என நம்பிக்கையுடன் எழுந்து சென்றான்.

- ஜனவரி 2017 பாக்யா தமிழ் வார இதழில் பிரசுரமானது. 

தொடர்புடைய சிறுகதைகள்
பிள்ளையார்குளம் கிராமத்தில் உள்ள மிகப்பெரிய விநாயகர் கோவில் அதுதான். சுற்றுப்பட்டிக் கிராமங்களிலே மிகப்பெரிய விநாயகர் கோவில், அதில ஆறடி உயரத்தில் அதிவீர விநாயகர் என்ற பெயரில் வீற்றிருக்கிறார். கோவில் பின்புறத்தில் தார்ச்சாலை அதை அடுத்து மிகப் பெரிய கண்மாய் இருந்தது. அந்தக் ...
மேலும் கதையை படிக்க...
பல்லவ மன்னன் நந்திவர்மன் சிவனடியார் போன்று வேடமிட்டுக் கொண்டான். அவனுடைய தலைமை அமைச்சர் இறையூர் உடையான் சிவனடியாரின் சீடன் போன்று வேடமிட்டுக் கொண்டான். அவர்கள் இருவரும் தெள்ளாற்றுக்கு அருகில் உள்ள ஒரு கல் மண்டபத்தில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள். மன்னன் நந்திவர்மன் அமைச்சரை ...
மேலும் கதையை படிக்க...
விநாயகனே வேழமுகத்தோனே. . . . . .! எங்கோ சீர்காழி கோவிந்தராஜன் பாடிய பக்திப் பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது . அப்போது “குட்மார்னிங் பாபு ! “ என்று லதாவும் , மைதிலியும் கோரஸாக காலை வணக்கம் பாபுவுக்கு கூறினார்கள். “வெரிகுட்மார்னிங் ...
மேலும் கதையை படிக்க...
விநாயகர் படத்தருகில் இருந்த வெளிவாசல் லைட்டுக்குரிய சுவிட்சை ‘ஆன்’ செய்து விட்டு, சுவாமிநாதன் , வீட்டின் கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்து எட்டிப் பார்த்தார். அப்போது அங்கிருந்த நாய் விடாமல் குரைத்துக் கொண்டிருந்தது. என்ன இந்த நேரத்திலே நாய் கொரைக்குதுன்னு ...
மேலும் கதையை படிக்க...
திருவல்லிக்கேணியில் உள்ள பிள்ளையார் கோவில் திருப்பத்தில் தனியார் நிறுவனம் ஒன்று இயங்கி வந்தது. அதில் நூற்றுக்கு மேற்பட்ட பணியாளர்கள் பணியாற்றி வந்தார்கள். அந்த நிறுவனம் காலை பத்து மணிக்கு இயங்கி மாலை ஆறு மணிக்கெல்லாம் முடிந்து விடும். அந்த நிறுவனத்தில் சரியான ...
மேலும் கதையை படிக்க...
ஸ்ரீ கணேஷ் பிளாஷ்டிக் கம்பெனி அலுவலகத்திற்குள் வித்யா நுழையும்போது சுவர்க்கடிகாரம் பத்தடித்து ஓய்ந்திருந்தது. அவள் இருக்கையில் சென்று அமரவும் மேஜையில் இருந்த தொலைபேசி ‘ டிரிங் டிரிங் ‘ என்று ராகம் பாடியது. வித்யா கையில் எடுத்து ஹலோ என்று பேசிவுடன், ...
மேலும் கதையை படிக்க...
அசோகச் சக்கரவர்த்தி நாடு பிடிக்கும் போர் வெறியில் கலிங்க நாட்டின் மீது படையெடுத்து விட்டான். அவனிடம் ஆன்றோர் பலர், அறிவுசார்ந்த அமைச்சர் பெருமக்கள், அவன் கொண்ட போர் வெறியை போக்குமாறு, எடுத்துக் கூறியபோதும், அவன் செவிமடுக்கவில்லை. புத்தசாமியார்களும் அவனுக்கு உயிர்க்கொலைபுரியும் போர் ...
மேலும் கதையை படிக்க...
“ ஏ...வெள்ளையம்மா! ஒன்னோட புருஷன் ஆலமரத்து பிள்ளையார் கோவில் பக்கத்திலே நெனைவு இல்லாமல் குடித்துப்போட்டு விழுந்து கிடக்கான். நீ வெரசாப் போய்ப் பார் !“ என்று வெள்ளையம்மாள் வசிக்கும் குடிசையில் வந்து குரல் கொடுத்தாள், எதிர்வீட்டில் குடியிருந்து வரும் பொன்னம்மாள். ‘ ...
மேலும் கதையை படிக்க...
காளியம்மாள் காலை ஐந்து மணிக்கு எழுந்திருந்து அவசர அவசரமாகக் குளித்து விட்டு, ஒட்டுப் போட்ட பாவாடை தாவணியை எடுத்து உடுத்திக் கொண்டாள். பானையில் கிடந்த பழைய சோற்றை அவக்கு அவக்கென்று அள்ளி விழுங்கி விட்டு, மீதம் இருந்த சோற்றை தூக்குச் சட்டியில் ...
மேலும் கதையை படிக்க...
பிள்ளையார் படத்தினருகில் இருந்த சுவர்க்கடிகாரத்தைப் பார்த்தேன். மாலை ஐந்து மணியைக் காட்டியது அலுவலகத்திலிருந்து விவேக் வீட்டிற்கு வருவதற்கு இன்னும் மூன்று மணி நேரம் இருக்கிறது. நான் வீட்டில் எல்லா வேலைகளையும் முடித்து விட்டேன். அடுத்து என்ன செய்யலாம் என்று யோசித்து குப்பை ...
மேலும் கதையை படிக்க...
காவல் தெய்வம் !
குடிக்குறை துடைத்த நாச்சியார்!
இலவு காத்தக் கிளி !
மகராசனாய் இரு !
உயர்ந்த உள்ளம்!
வித்யா மீண்டும் வேலைக்குப் போகிறாள் !
அன்புதான் இன்ப ஊற்று !
உள்ளத்தில் விழுந்த சவுக்கடி !
மருதாணி
இரு கடிதங்கள் !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)