பிழைத்தோம்

 

மாலை நாலு மணியாயிருக்கும்.

நான் சிறிது ஆயாசத்தினால் படுத்து இலேசான தூக்கம் தூங்கி விழித்துக் கண்ணைத் துடைத்துக் கொண்டு தாம்பூலம் போட்டுக் கொள்ள யோசனை செய்து கொண்டிருந்தேன். அப்போது வீரபுரம் கிருஷ்ணய்யங்கார் வந்து சேர்ந்தார். இவர் நமக்கு ஆப்த சிநேகிதர். நல்ல யோக்கியர். ஆனால், சூதுவாது தெரியாத சாதுவான பிராணி.

இவர் வந்தவுடனே “ஓராச்சரியம்?” என்று கூவினார். “என்ன விஷயம்?” என்று கேட்டேன். “நேற்று ராத்திரி ஒரு கனவு கண்டேன்” என்றார். “என்ன கனவு? சொல்லும்” என்றேன்.

வீரபுரம் கிருஷ்ணய்யங்கார் பின்வருமாறு சொல்லலானார்.

“டாம், டாம், டாம் என்று வெடிச் சத்தம் கேட்கிறது. எங்கு பார்த்தாலும் புகை. அந்தப் புகைச்சலுக்குள்ளே நான் சுழற் காற்றில் அகப்பட்ட பட்சி போலே அகப்பட்டுக் கொண்டேன். திடீரென்று எனக்குக் கீழே ஒரு வெடி கிளம்பும். அது என்னைக் கொண்டு நூறு காதவழி தூரத்தில் ஒரு க்ஷணத்திலே எறிந்துவிடும். அப்படிப்பட்ட வேகத்தை சாமானியமாக விழித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் நம்மாலே ஸ்மரிக்கக்கூட முடியாது.

“மனோவேகம் என்பதின் பொருளை நேற்று ராத்திரி தான் கண்டேன். அடே ராமா! ஒரு தள்ளுத் தள்ளினால் நேரே தலையை வானத்திலே கொண்டு முட்டும். அங்கே போனவுடன் மற்றொரு வெடி. அது பாதாளத்திலே வீழ்த்தும். எட்டுத் திசையும் பதினாறு கோணமும், என்னைக் கொண்டு மோதினபடியாக இருந்தது. வெடியின் சத்தமோ சாமானியமன்று. அண்ட கோளங்கள் இடிந்து போகும் படியான சத்தம். இப்படி நெடுநேரம் கழிந்தது. எத்தனை மணிநேரம் இந்தக் கனவு நீடித்ததென்பதை என்னால் இப்போது துல்லியமாகச் சொல்ல முடியாது. ஆனால் சொப்பனத்திலே அது காலேயரைக்கால் யுகம் போலிருந்தது. மரணாவஸ்தை இனிமேல் எனக்கு வேறு வேண்டியதில்லை. மூச்சுத் திணறுகிறது, உயிர் தத்தளிக்கிறது. அந்த அவஸ்தை ஒரு முடிவுக்கு வருமென்றாவது, என் பிராணன் மிஞ்சுமென்றாவது எனக்கு அப்போது தோன்றவேயில்லை.

“நெடுநேரம் இப்படி என்னைப் புரட்டித் தள்ளிய பிறகு ஒரு சுவர்மேலே கொண்டு மோதிற்று. அந்தச் சுவரில் ‘ஓம் சக்தி’ என்று ஒளி எழுத்துக்களால் பலவிடங்களில் எழுதப்பட்டிருந்தது. அவற்றுள் மிகவும் ஒளி பொருந்திய எழுத்தின் கீழே ஒரு சிறு பொந்திருந்தது. அந்தப் பொந்துக்குள்ளே போய் விழுந்தேன். ஆரம்பத்தில் இவ்வளவு சிறிய பொந்துக்குள் நாம் எப்படி நுழைய முடியுமென்று நினைத்தேன். பிறகு சொப்பனந்தானே? எவ்விதமாகவோ அந்தப் பொந்துக்குள் என் உடம்பு முழுதும் நுழைந்திருக்கக் கண்டேன். அதற்குள்ளே போனவுடன் புகைச்சலுமில்லை, வெடியும் நின்று விட்டது. மூச்சுத் திணறவுமில்லை, ஆறுதலுண்டாயிற்று. ‘பிழைத்தோமப்பா’ என்று நினைத்துக் கொண்டேன். இவ்வளவுதான் கனவு. இந்தக் கனவின் பொருளென்ன? இது என்ன விஷயத்தைக் குறிப்பிடுகின்றது?” என்று கிருஷ்ணய்யங்கார் கேட்டார்.

“கனவுக்குப் பொருள் கண்டுபிடித்துச் சொல்லும் சாஸ்திரம் எனக்குத் தெரியாது” என்று சொன்னேன்.

கிருஷ்ணய்யங்காருக்குத் திருப்தி ஏற்படவில்லை. நான் கனவு சாஸ்திரத்திலேயே ஒரு வேளை நம்பிக்கையில்லாமல் இருக்கலாமென்று நினைத்து அவர் கொஞ்சம் முகத்தைச் சிணுக்கினார். பிறகு சொல்லுகிறார்:

“அப்படி நினையாதேயுமையா, கனவுக்குப் பொருளுண்டு. பலமுறை கனவிலே கண்டது நனவிலே நடப்பதை நான் பார்த்திருக்கிறேன்” என்றார்.

‘காலைச் சுற்றின பாம்பு கடித்தாலொழிய தீராது’ என்று வசனம் சொல்லுகிறது. ஆதலால், நான் இவருக்கு ஏதேனும் விடை சொல்லித்தான் தீர வேண்டுமென்று கண்டுபிடித்துக் கொண்டேன். எனவே பின்வருமாறு சொன்னேன்:

“அந்த வெடிப்புத்தான் உலகநிலை; அந்த சக்தி மந்திரமே தாரகம். அந்தப் பொந்து விடுதலை. அதற்குள் நுழைவது கஷ்டம். தெய்வ வெடியினாலே தள்ளினாலொழிய மனிதன் ஜீவன் முக்தி நிலையில் நுழைய முடியாது. உள்ளே நுழைந்து விட்டால் பிறகு அது விஸ்தாரமான அரண்மனையாகக் காணப்படும். அதற்குள்ளே நுழைந்தவர்களுக்கு அதன் பிறகு எவ்விதமான அபாயமுமில்லை. அதற்குள்ளே போனவர்கள் உண்மையாகவே பிழைத்தார்கள்” என்று சொன்னேன். கிருஷ்ணய்யங்கார் இதைக் கேட்டு மிகவும் சந்தோஷத்துடன் விடை பெற்றுச் சென்றார்.

- நன்றி: https://www.projectmadurai.org, கதைக் கொத்து, சி.சுப்ரமணிய பாரதி. பாரதி பிரசுராலயம், 1967. 

தொடர்புடைய சிறுகதைகள்
ஹஸ்தினாபுரத்தில் துரோணாசாரியாரின் பள்ளிக்கூடத்தில் பாண்டு மகாராஜாவின் பிள்ளைகளும் துரியோதனாதிகளும் படித்து வருகையில், ஒரு நாள் சாயங்கால வேளையில் காற்று வாங்கிக்கொண்டு வரும்போது, அர்ஜுனன் கர்ணனைப் பார்த்து:- ''ஏ, கர்ணா சண்டை நல்லதா? சமாதானம் நல்லதா?'' என்று கேட்டான். (இது மஹாபாரதத்திலே ஒரு ...
மேலும் கதையை படிக்க...
முகவுரை ஒரு ஜாதி ஓர் உயிர்; பாரத நாட்டிலுள்ள முப்பது கோடி ஜனங்களும் ஒரு ஜாதி. வகுப்புகள் இருக்கலாம்; பிரிவுகள் இருக்கலாகாது. வெவ்வேறு தொழில் புரியலாம்; பிறவி மாத்திரத்தாலே உயர்வு தாழ்வு என்ற எண்ணம் கூடாது. மத பேதங்கள் இருக்கலாம்; மத விரோதங்கள் ...
மேலும் கதையை படிக்க...
காட்டில் ஒரு ரிஷி பதினாறு வருடம் கந்தமூலங்களை உண்டு தவம் செய்து கொண்டிருந்தார். அவர் பெயர் வாமதேவர். ஒரு நாள் அவருக்குப் பார்வதி பரமேசுவரர் பிரத்யக்ஷமாகி, "உமக்கு என்ன வரம் வேண்டும்" என்று கேட்டார்கள். "நான் எக்காலத்திலும் சாகாமல் இருக்க வேண்டும்" ...
மேலும் கதையை படிக்க...
ஓம், ஓம் ஓம் என்று கடல் ஒலிக்குது, காற்று சுழித்துச் சுழித்து வீசுது, மணல் பறக்குது, வான் இருளுது, மேகம் சூழுது. கடற்கரையில் காற்று வாங்க வந்த ஜனங்கள் கலைந்து வீட்டுக்குத் திரும்புகிறார்கள். நானும், ராமராயரும் வேணு முதலியும், வாத்தியார் பிரமராய அய்யரும் ...
மேலும் கதையை படிக்க...
வேதபுரத்துக்கு வடக்கே இரண்டு கல் தூரத்தில், சித்தாந்த சாமி கோவில் என்றொரு கோயில் இருக்கிறது. அதற்கருகே ஒரு மடம். அந்த மடத்தில் பல வருஷங்களுக்கு முன்பு சித்தாந்தசாமி என்ற பரதேசி ஒருவர் இருந்தார். அவருடைய ஸமாதியிலே தான் அந்தக் கோயில் கட்டியிருக்கிறது. ...
மேலும் கதையை படிக்க...
நேற்று சாயங்காலம் என்னைப் பார்க்கும் பொருட்டாக உடுப்பியிலிருந்து ஒரு சாமியார் வந்தார். “உம்முடைய பெயரென்ன?” என்று கேட்டேன். “நாராயண பரம ஹம்ஸர்” என்று சொன்னார். “நீர் எங்கே வந்தீர்?” என்று கேட்டேன். “உமக்கு ஜந்துக்களின் பாஷையைக் கற்பிக்கும் பொருட்டாக வந்தேன். என்னை ...
மேலும் கதையை படிக்க...
வேதபுரம் எலிக்குஞ்சு செட்டியார் மகளுக்குப் பேய் பிடித்திருக்கிறது. பெயர் காந்திமதி. பெண் நல்ல அழகு. சிவப்பு நிறம். முகத்தில் ஒரு மாசு மறு இல்லாமல் நிலா வீசும். மென்மையான பூங்கொடியைப் போல் இருப்பாள். இரண்டு மூன்று பாஷைகள் தெரியும். நேர்த்தியாகப் பாடுவாள். வீணை ...
மேலும் கதையை படிக்க...
நாரதர் கைலாசத்துக்கு வந்தார். நந்திகேசுரர் அவரை நோக்கி, "நாரதரே, இப்போது சுவாமி தரிசனத்துக்கு சமயமில்லை. அந்தப்புரத்தில் சுவாமியும் தேவியும் ஏதோ பேசிக் கொண்டிருக்கிறார்கள். இன்னும் ஒரு ஜாமம் சென்ற பிறகு தான் பார்க்க முடியும். அதுவரை இங்கு உட்கார்ந்திரும், ஏதேனும் வார்த்தை ...
மேலும் கதையை படிக்க...
எண்ணூறு வருஷங்களுக்கு முன்பு திருவண்ணாமலையில் மிளகாய்ப்பழச்சாமி என்றொரு பரதேசி இருந்தான். அவன் நாள்தோறும் இருபது மிளகாய்ப்பழத்தைத் தின்று ஒரு மிடறு தண்ணீரும் குடிப்பான். அவனிடம் ஒரு கிளியுண்டு. மடத்துக்கு வரும் ஜனங்களிடம் ஸ்காந்த புராணம் சொல்லிப் பிரசங்கம் செய்வது அந்தப் பரதேசியின் ...
மேலும் கதையை படிக்க...
நேற்று சாயங்காலம் நான் தனியாக மூன்றாவது மெத்தையில் ஏறி உட்கார்ந்திருந்தேன். நான் இருக்கும் வீட்டில் இரண்டாவது மெத்தையிலிருந்து மூன்றாம் மெத்தைக்கு ஏணி கிடையாது. குடக்கூலி வீடு. அந்த வீட்டுச் செட்டியாரிடம் படி (ஏணி) கட்டும்படி எத்தனையோ தரம் சொன்னேன். அவர் இன்றைக்காகட்டும், ...
மேலும் கதையை படிக்க...
அர்ஜுன சந்தேகம்
ஆறில் ஒரு பங்கு
அபயம்
மழை
பிங்கள வருஷம்
காக்காய் பார்லிமெண்ட்
புதுப் பேய்
தேவ விகடம்
கிளிக் கதை
சும்மா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)