நான் தோற்றேன்!!

 

என் வயதான அந்த வாலிபனுக்கு முன் நான் தோற்று அவன் கண்களை சந்திக்க திராணி அற்று அமர்ந்து இருந்தேன் பேருந்து இருக்கையில்… அவன் என்னை கடந்து சென்றுவிட்ட போதும் அவன் என் மனத்தைவிட்டு நீங்க மறுக்கிறான் இன்றளவும். சரி அவன் யார்? என்ன நடந்தது…

அவன் வட, மத்திய மாநிலம் ஒன்றில் இருந்து கட்டட பணிக்கு சித்தாளாக வந்திருக்க வேண்டும் என்று ஊகிக்கிறேன்.

ரயிலின் மூச்சை திமிர வைக்கும் கூட்டத்தில் இருந்து விடுபட்டு காத்திருந்து விட்டு பேருந்தில் ஏறிய எனக்கு இருக்கை கிடைக்காமல் போனது சிறு சலிப்பை ஏற்படுத்தியது. ஒரு இருக்கை வேளச்சேரியில் காலி ஆகிவிடும் என்று தெரியவே அந்த இருக்கையை இன்னொருவர் நெருங்க முடியாத வகையில் அணைத்து நின்றேன்.

ஐந்து பர்லாங்க் சாலை முடிவில் இருந்த பேருந்து நிறுத்தத்தில் நான் முன்பு கூறின இளைஞன் மற்றும் அவன் கூட்டாளிகள் ஐந்தாறு பேர் ஏறி கொண்டார்கள். அந்த இளைஞன் என் அருகில் நின்றிருந்தான்.

பேருந்தில் கூட்டம் அதிமாகவே அவனுக்கும் எனக்குமான இடைவெளி குறைந்தது. ஆனால் என் கவலை அந்த இருக்கையினை ஆக்கிரமிப்பதுதான். அதற்கு அவன் குந்தகம் விளைவிப்பான் என்று என் அறிவோ மனதோ ஏதோ ஒன்று தப்பான வழியில் என்னை செலுத்தவே அவனை சற்று தள்ளி நிற்குமாறு பணித்தேன்.

நான் சொன்னது தான் தாமதம் அவன் பொரியும் கடுகை போல வெடிக்கலானான். ‘அங்கு இடமில்லையா என்ன.. நீ சற்று நகர்ந்து நிற்கலாமே.. கூட்டத்தில் சிறிது கூட அனுசரனை உனக்கு இல்லை’ என்றான் (எனக்கு தெரிந்த சிறிது இந்தியின் உதவியுடன் நான் கண்டுகொண்ட அர்த்தம் இது).

மேலும் விவாதத்தை தொடர விரும்பாமல் நான் அச்சமயம் காலியான மற்றோர் இருக்கையை அடைந்தேன். உட்கார்ந்து சில நிமிடங்களில் நான் என் தவறை உணர்ந்தேன்.

அவனை ஒரு கூலி தொழிலாளி என்பதால் உதாசீன படுத்திவிட்டோம் என்று எண்ண வெட்கமாக இருந்தது. என் சிந்தனைகள், பண்புகள், மனிதம் அவ்வளவு தாழ்ந்து விட்டனவா..??

அவன் கோபத்தில் ஓர் ஆழ்ந்த கருத்து இருப்பதாக புலப்பட்டது எனக்கு. நிராகரிப்பிற்கும் உதாசீனதிற்கும் எதிராக ஒரு பெரிய மக்கள் கூட்டம் எழுப்பும் எதிர்ப்பின் அடையாளமாகவே நான் அவன் கோபத்தை பார்க்கிறேன். அந்த இளைஞன் போல பல ஆண்களும் பெண்களும் வட மற்றும் மத்திய மாநிலங்களில் இருந்து தரகர்களால் அழைத்து வரப்பட்டு இங்கு பல கடினமான வேலைகளில் சொற்ப ஊதியத்திற்கு தினக்கூலிகளாக பணியமர்த்தப்படுகின்றனர். அவர்களை நாம் அன்றாடம் கடந்து போகின்றோம்… பேருந்தில், ரயிலில், அலைபேசி கடைகளில், தெரு முக்கத்து பெட்டி கடைகளில், ஏன் நம் வீட்டிற்கு அருகில் கட்டப்பட்டு கொண்டிருக்கும் கட்டடங்களில். நம்மில் சிலருக்கு அவன் அருவருப்பான மனிதனாக தெரிகிறான்… வாய்நிறைய பானுடன் அழுக்கேறிய உடையுடன் செம்பட்டை முடியுடன். இன்னும் சிலருக்கு அவனும் மனிதன் என்றே மறந்து விடுகிறது. (இந்த தொழிலாளிகளின் நீதிக்காகவும் உரிமைகளுக்காகவும் சிலர் பாடுப்படுகின்றனர் என்பதில் எனக்கு மாற்று கருத்து இல்லை; அவர்களை நான் பெருமளவு மதிக்கிறேன்).

ஆனால் அவனின் உண்மை நிலை வேறு.. வாராவாரம் ருபாய் ஆயிரத்துக்கோ அல்லது இன்னும் சில சொற்ப நூறுகளுக்கோ சொல்லமுடியாத அளவு துன்பப்பட்டு, அதில் தன் அன்றாட தேவைகளில் பலவற்றை களைந்து சிலவற்றை மட்டும் நிறைவேற்றிகொண்டு தன்னால் இயன்ற அதிகபட்ச தொகையை, தன் பிள்ளையின் கல்வித்தேவை என்ற எட்டா கனியை எட்டி பிடிக்க, காசோலை மூலமாக அனுப்பி வைக்கும் இந்தத் திருநாட்டின் மிகவும் பாவப்பட்ட தந்தை அவன்.

அவனது தியாகங்கள் உன்னதமானவை. அந்த மிக கடினமான வாழ்க்கைச் சூழலிலும் அவன் சிரித்து வாழ பக்குவப்பட்டு இருக்கிறான். அவனிடம் இருந்து வாழ்க்கையை நாம் கற்றுக்கொள்ளவில்லை என்றாலும் அவனை சம மனிதனாக மதிக்க என்று கற்றுக்கொள்ள போகிறோமோ… (நான் இந்த நாள் கற்று கொண்டுவிட்டேன்)

…. சரி என் கதைக்கு வருவோம். நான் அமர்ந்த பிறகு நான் நின்ற இடத்திற்கு ஒரு முதியவர் நகர்ந்து வந்தார். என் உடல் அசதி என்னை அவருக்கு இருக்கையை அளிப்பதில் இருந்து தடுத்தது (நானா இப்படி ஆனேன்… ??).

தற்போது வேளச்சேரி வந்துவிடவே முன்பு நான் கவர்ந்து கொள்ள எண்ணிய இருக்கை அந்த இளைஞனை அமர்த்தி கொள்ள ஆயத்தமானது. ஆனால் அந்த இளைஞன் தான் நகர்ந்து கொண்டு அந்த முதியவரை அதில் அமரச் செய்தான்.. அந்த நொடிக்கணத்தில் அவன் மிகப்பெரிய மனிதனாகவும் நான் அவன் முன் கூனி குறுகி நிற்கும் ஓர் அற்ப ஜீவனை போலவும் ஒரு பிம்பம் என் அடிமனத்தில் எழுந்து மறைந்தது.

ஏனோ அந்த கணத்தில் என் மனிதத்தை எங்கோ தொலைத்துவிட்டேன். வெட்கிப்போய் அவன் கண்களை நேரடியாக சந்திக்கும் துணிவை இழந்தேன். அவனுக்கு ஒரு சிறு உதவியாக அவனது கனமான தோள் பையை நான் பெற்று கொண்டிருக்கலாம். ஆனால் அன்று மட்டும் ஏனோ மிகவும் சிறுமைபட்டுபோன என் அறிவு அதை அவனிடம் மன்னிப்பு கோரும் செயல் என்ற வாதத்தின் பேரில் நிராகரித்தது. அந்த சந்தர்பத்தை தவறவிட்டு பிறகு, அவனிடம் மன்னிப்பு கேட்டிருந்தால் தான் என்ன என்று தோன்றிற்று.. அந்த நொடிப்பொழுதில் அவன் என்னை விடவும் குணத்தில் சிறந்த மனிதன் ஆனான்.. அவனிடம் தோற்றுபோனேன் நான் !!! 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)