Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

தீர்ப்பு

 

ரவுண்டானா தாண்டியிருந்த ஒரு கம்ப்யூட்டர் பயிற்சி மையத்துக்கு முன்னால் அந்த விபத்து நடந்தது.

இரண்டு மோட்டார் சைக்கிள்கள். முன்னால் போனதைப் பின்னால் சென்றது மோதியதில், முன்னது மூன்று குட்டிக்கரணம் போட்டது. பம்பர் வளைந்து ஹெட்லைட் உடைந்து சிதறியது. பின்னாலிருந்த டேஞ்சர் லைட்டும் உடைந்து போயிற்று. மோதிய வாகனத்துக்கும் அதை ஓட்டிய சங்கரனுக்கும் ஏதும் சேதமில்லை. குட்டிக்கரணம் போட்ட வாகனத்துக்குச் சொந்தக்காரன் சதீஷ், மோதியபோதே தூக்கி எறியப்பட்டதால் அடி எதுவும் பலமாகப் படாமல் பிழைத்து விட்டான். ஆனால், விழுந்த இடத்தில் சேறு குட்டை போலத் தேங்கியிருந்ததில் ஆடைகள் கறை படிந்தன.

கம்ப்யூட்டர் மையத்திலிருந்து வெளியே வந்த நாலைந்து இளைஞர்கள், “சதீஷ்!” என்று குரல் கொடுத்தபடி பாய்ந்து சென்று பாதிப்புக்குள்ளானவனைத் தூக்கினார்கள்.

“ஏன்யா, கண்ணைப் பொடரியில் வெச்சுக்கினு வண்டி ஓட்டறியா? மோட்டார் சைக்கிள்ல ஏறிட்டா ஏரோப்ளேன்ல போறதா நெனப்பா?” சங்கரனை நோக்கிக் கத்தினான் சதீஷ்.

“என்ன சார், நீங்கதானே ரைட் ஸைடுல போறது போலக் கை நீட்டி எனக்கு சிக்னல் கொடுத்தீங்க! ஆனா திடீர்னு லெஃப்ட்டுல வண்டியைத் திருப்பிட்டீங்க. அப்படித் திருப்புவீங்கன்னு நான் கொஞ்சமும் எதிர்பார்க்கலை. அதான் இடிக்கும்படி ஆயிடுச்சு!..”

“தோ பாரு… பின்னால வர்றவன் நீ. நிதானமாத்தான் வண்டியை ஓட்டணும். மரியாதையா என் வண்டியை செலவு செஞ்சு புதுசு போல ஆக்கிக் கொடுத்துடு. இல்லேன்னா நடக்கறதே வேற!”

சங்கரனுக்கு வயிற்றில் புளியைக் கரைத்தது.

ஒரு போலீஸ்காரரின் தலை தெரிந்தது.

சதீஷின் நண்பர்களில் ஒருவன் அவரை ஒரு ஓரமாக அழைத்துச் சென்று ஏதோ ரகசியம் பேசினான். அவரிடம் ஒரு விறைப்பும் மாற்றமும் தெரிந்தது.

போலீஸ்காரர் சங்கரனிடம் வந்தார். “ஏன்யா குடிச்சிருக்கியா? வாயை ஊது!” என்று கோபமாகச் சொன்னார்.

“குடியா? நானா? எங்க பரம்பரையிலேயே யாரும் குடிக்கறதில்லை சார். நான் இங்கே இஞ்சினீயரிங் காலேஜில் படிக்கிற ஸ்டூடண்ட் சார். நான் ஏன் சார் குடிக்கிறேன்?”

“வண்டியை மோதி இப்பிடி ஒடைச்சிருக்கியே? அதை எல்லாம் சரி பண்ணணுமேய்யா. ஐநூறு ரூபா ஆகும்னு தம்பிக சொல்லுதுங்களே.. கையில் துட்டு ஐநூறு வெச்சிருக்கியா?”

“சார், எம்மேல தப்பே கிடையாது. நான் ஏன் சார் பணம் தரணும்?”

“ஓகோ அப்ப காம்ப்ரமைஸுக்கு நீ வர மாட்டே? சரி, நடய்யா °டேஷனுக்கு!”

“°டேஷனுக்கா? எதுக்கு சார்?” என்றான் சங்கரன் பரிதாபமாக.

“அங்க வந்தா நீயே தெரிஞ்சுக்குவே. அங்க வெச்சுப் பேசற வழியில் பேசினாத்தான் நீ வழிக்கு வருவே!”

“சரியான ஐடியா!” என்றான் சதீஷ். சுற்றி நின்ற அவன் நண்பர்களும் அதை ஆமோதித்தனர்.

சதீஷ் தன் வாகனத்தைத் தள்ளிக்கொண்டு நண்பர்களுடன் ஜமாவாக நடக்க, அவர்களுடன் சங்கரனும் தலைவிதியே என்று தன் மோட்டார் சைக்கிளுடன் சென்றான்.

போலீஸ் ஸ்டேஷனின் சிவப்புச் சுவர் சங்கரனை மிகவும் கலங்க வைத்தது. முதல் ரூமில் பெரிய மீசையும், பருத்த தொந்தியுமாக இருந்த ஒருவரிடம் இவர்களைக் கூட்டிச் சென்ற போலீ°காரர் ஒரு சல்யூட் அடித்து, “ஆக்சிடெண்ட் கேஸ் ஏட்டய்யா!” என்றார்.

தலை நிமிர்ந்து சதீஷைப் பார்த்த ஏட்டு, “நீயா, அடப்பாவி! இன்னா ஆச்சு?” என்று வியப்புக் காட்டினார்.

“இந்த ஆளு வேகமா விட்டு என் வண்டியை மோதிட்டாம்ப்பா. ஹெட்லைட், டேஞ்சர் லைட்டெல்லாம் ஒடைஞ்சு போச்சு. பம்பர் வளைஞ்சு போச்சுப்பா. ஐநூறு ரூபாயாவது வெச்சாத்தான் சரியாக்க முடியும்!” என்றான் சதீஷ்.

ஓ, இவ்வளவு உரிமையோட பேசறானே, சதீஷுக்கு இந்த ஏட்டு தெரிந்தவர் போலிருக்கு. நாம் தொலைந்தோம் என்று சங்கரனுக்குத் தீர்மானமாகப் புரிந்தது. ஐநூறு ரூபாய்க்கு எங்கே போவது, யாரிடம் கடன் கேட்பது? – மனசுக்குள் யோசனை ஓடியது.

இருவர் தரப்பையும் ஏட்டு நாயுடு விசாரித்தார். பிறகு ஒரு வெள்ளை பேப்பரை எடுத்துக் கொண்டார். சதீஷப் பார்த்து, “தம்பி, இப்ப சொன்னியே, அதை மறுக்கவும் ஒரு தபா நிதானமாச் சொல்லு!.. நீ ரவுண்டாணா தாண்டி மோட்டார் சைக்கிள்ல போனே. போனியா? அப்புறம்..?” காகிதத்தில் சாலையைப் படம் வரைந்தார். கோடு இழுத்தார். “கம்ப்யூட்டர் ஆபீசுகிட்டே ரைட் ஸைடுல போக நீ கை காட்டினே. காட்டுனியா? அப்புறம் என்ன ஆச்சு கண்ணு?”

சதீஷை நாயுடு இதமாக, பதமாகக் கேட்டார். சங்கரனுக்கு துட்டு கறக்கத்தான் இந்த நைஸ் பேச்சு என்பது புலப்பட, மனசு கசந்து போயிற்று.

தான் வலப்புறம் கை நீட்டியபிறகு. மனம் மாறி இடப்புறம் வாகனத்தைத் திருப்பியதையும் பின்னால் வந்த வாகனம் வேகமாக வந்ததால் இடித்துவிட்டதையும் சதீஷ் விவரித்தான்.

“நீ என்ன கண்ணு சொல்றே?” என்று சங்கரனிடம் கேட்டார் ஏட்டு நாயுடு.

“சொல்றதுக்கு என்ன சார் இருக்கு? நீங்கதான் எல்லாத்தையும் கேட்டீங்களே. ஒங்க இஷ்டப்படி முடிவு சொல்லுங்க. அதுக்கு நான் கட்டுப்படறேன்” என்று விரக்தியுடன் சொல்லி சங்கரன் ஒதுங்கி நின்றான்.

கொஞ்ச நேரம் எதிர்ச்சுவர் கடிகாரத்தின் விநாடி முள்ளை வெறித்துப் பார்த்த ஏட்டு கனைத்துக் கொண்டார். பிறகு பேச ஆரம்பித்தார்:

“சதீசு கண்ணு.. எல்லாம் ஒரு நொடிதான்.. கண் சிமிட்டற நேரம்தான். நீ கையைக் காட்டினது ரைட் சைடுல போறதுக்கு. ஆனா மனசு மாறி லெஃப்ட்டுல வண்டியைத் திருப்பிட் டேன்கிறே. நீ மனசை மாத்திக்கிட்டது ஒரு நொடியில். அது பின்னால் வந்த ஆளுக்கு எப்படித் தெரியும்? அவரை நஷ்ட ஈடு கேக்கறது ரொம்பத் தப்பு!” என்றார் ஏட்டு.

சதீஷுக்கு முகம் கறுத்தது. “அந்த ஆளு ரொம்ப வேகமா வந்தாம்ப்பா!” என்றான்.

“உனக்கு அவரு வேகமா வந்தது எப்படித் தெரியும்? பின்னால் பார்த்துக்கிட்டேவா வண்டியை ஓட்டினே? இந்தாப்பா சங்கரு கண்ணு, நீ உன் வண்டியை எடுத்துக்கினு கிளம்பு.”

“சார்! பேச வாய் வராமல் இரு கைகளையும் கூப்பினான்” சங்கரன்.

“உம்மேல தப்பு இல்லை கண்ணு. நீ சதீஷோட கை குலுக்கிட்டுப் போயிக்கோ!”

சதீஷுக்கு முகம் கோபத்தில் சிவந்தது. அந்தத் தீர்ப்பு அவனுக்கு ஏற்புடையதாக இல்லை. ஆனாலும் ஏட்டின் முன் தலையைக் குனிந்து நின்றான்.

“சார், நீங்க மட்டும் இல்லேன்னா..?” என்று சங்கரன் தழுதழுத்தான்.

“அதெல்லாம் ஒண்ணுமில்ல கண்ணு. வர்றவங்க பிரச்னைகளை சுமுகமாகத் தீர்க்கத்தான் நாங்க இருக்கோம்… சம்பளம் வாங்கறோம்.. போயிட்டு வா கண்ணு!”

அவரை வியப்புடன் பார்த்தபடியே ஸ்டேஷனுக்கு வெளியே வந்தான் சங்கரன். மரத்தடி நிழலில் நிறுத்தியிருந்த தன் மோட்டார் சைக்கிளை எடுத்தபோது சற்றுத் தள்ளி ஒரு கான்ஸ்டபிள் இன்னொருவரிடம் பேசிக் கொண்டிருந்தது காதில் விழுந்தது.

“பாருய்யா. ஏட்டு நாயுடுவின் சொந்த மகனோட வண்டியைப் பின்னாலிருந்து ஒருத்தன் மோதி உடைச்சிருக்கான். மோதினவன் மேல் தப்பு இல்லன்னு தீர்ப்புச் சொல்லி, அவனைப் போகச் சொல்லிட்டாரு. நானா இருந்தால் அவன் முட்டியைப் பேத்து ஆயிரம் ரூபா நஷ்ட ஈடும் கறந்து, கேஸும் போட்டிருக்க மாட்டேன்?”

பக்கத்தில் இருந்தார் மெல்லச் சொன்னார்: “அதனாலதான் நீ கான்ஸ்டபிள்… அவரு ஏட்டு!”

(ஆனந்த விகடன்) 

தொடர்புடைய சிறுகதைகள்
``நீட்டு கையை!'' பாலா பயந்தபடி கையை நீட்ட, படீரென்று பிரம்பால் ஒரு அடி. இடது கையை நீட்டச் சொல்லி இன்னொரு அடி. பாலாவின் கண்களில் மளுக்கென்று நீர் கோர்த்துக் கொள்ள, தான் ஏன் இப்படி நடந்து கொள்கிறோம் என்று தன் மீதே ஆத்திரம் எழுந்தது ...
மேலும் கதையை படிக்க...
சாலை ஓரத்தில் ஒரு அடி உயரத்துக்கு கம்பு ஒன்றை நட்டு, வலை ஒன்றைப் பொருத்தி இருபுறங்களிலும் முளைக்குச்சிகளை இறுக்கிக் கட்டினான் நாச்சான். பிறகு மெல்ல நடந்து யானை படுத்திருப்பதான தோற்றம் கொடுத்திருந்த மலைப் பாறையில் ஏறி உட்கார்ந்து மடியிலிருந்த பீடிக்கட்டை எடுத்தான். ...
மேலும் கதையை படிக்க...
''அம்மாடியோ!'' என்று அலறினான் அவன். சில்லி மூக்கு உடைந்து ரத்தம் வழிந்தது. ''இன்னாடா சவுண்டு விடுறே?'' என்றபடி அவன் வயிற்றில் ஓங்கி உதைத்தான் ஓர் ஆள். சின்னக் கடைத் தெருவும் ஆணிக்காரன் தெருவும் இணையும் இடத்தில் ஒரு திடல். பக்கத்திலேயே வேலுமணி வாத்தியார் வீடு. ...
மேலும் கதையை படிக்க...
எப்படியோ லாரிக்காரரைக் கெஞ்சி சாக்கு மூட்டையின் மீது இடம் பிடித்து உட்கார்ந்தான். அவனைப் போல இன்னும் இரண்டு பேர் அந்த லாரியில் ஏறியிருந்தார்கள். ``பொளுது விளறதுக் குள்ளாற காங்கயம் போயிறலாமா, ஏனுங்க?'' பக்கத்திலிருந்த வரைக் கேட்டான். ``ஆருது, அம்புட்டு நாளி எதுக்கு? உச்சிக்கே சேந்துடலாங்க!'' இவன் ...
மேலும் கதையை படிக்க...
பகீரென்றது. சென்னை ஹெட் ஆபீசிலிருந்து ஜெனரல் மேனேஜரே திடுதிப்பென்று என் மொபைலுக்கு ஃபோன் செய்வார் என்று கனவிலும் நினைத்ததில்லை. ``நான் ஜி.எம். பேசறேன் மிஸ்டர் பல்ராம்! எப்படி இருக்கீங்க?'' என்று அவர் கேட்டபோது, படபடப்பு. குப்பென்று வியர்த்தது. .. ``மிஸ்டர் பல்ராம், ...
மேலும் கதையை படிக்க...
நெஞ்சில் ஒரு முள்
வேட்டை
வாத்தியார்
மனைவியைத் தழுவும்போது…
சிங்கப்பூருக்கு சில கழுதைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)