Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

தனபாலன்

 

I

யூரொப்பிலிருந்து ஆப்ரிகாவைச் சுற்றிக்கொண்டு இந்தியாவுக்கு வருவதும் போவதுமான கடல் வழியைக் கண்டு பிடிப்பதற்கு முன்னே, இந்தியாவுக்கும் யூரோப்புக்கும் நடந்திருந்த வர்த்தகமெல்லாம் நிலவழியாகவே நடந்துவந்தது. அக்காலத்தில் அவ்வழியில் இடையிடையில் சில உள்நாட்டுப் பட்டணங்களும் சில துறைமுகப் பட்டினங்களும் செல்வம் பெருகிச் செழித்தோங்கியிருந்தன. இடலிதேசத்தில் பாட்யுவா என்கிற பட்டணமும் வெனிஸ் என்கிற பட்டினமும் இப்படிப்பட்டவை. உள்நாட்டுப் பட்டணமான பாட்யுவாவில் காசிப்பட்டும் காஸ்மீர் சால்வையும் ஸரிகை வஸ்திரங்களும் ஸல்லாவகைகளும் அணிவடங்களும் அணிகலங்களும் காடுபடுதிரவியங்களும் மலைபடுதிரவியங்களும் விலை ஸரஸமாக விற்பனைசெய்யும் வ்யாபாரிகள் அநேகர் நிலைத்திருந்தனர். அவர்களில் ஸாதாரணமானவர்கள் லக்ஷாதிபதிகள். லக்ஷாதிபதிகளும் கோடீசுவரர்களும் அங்கே நிலைத்திருந்ததனால், துறைமுகப் பட்டினமான வெனிஸ்தானும் அந்தப் பட்டணத்துக்கு இணையாகாமல் இளைப்பதாயிற்று.

அந்தப் பட்டணத்தில் தனபாலன் என்று பெயர்பெற்ற ஒரு ஸாவகாரி இருந்தான். அவனுக்கு அதிர்ஷ்டம் ஆறாகப் பெருகியது. கோடீசுவரரென்று கொடிபிடித்தவர்களெல்லாம் அவனுக்குத் தாழ்ந்தவர்களே. அவன் ஆற்றுப் பாலத்தின் அருகில் அரமனைபோல் அழகிய மாளிகை கட்டி அதில் குடியிருந்தான். பாட்யுவா என்கிற பெயர் தெரியாதவர் இடலியில் சிலர் இருப்பினும் இருப்பர்; தனபாலன் என்கிற பெயர் தெரியாதவர் ஒருவரும் இரார். அவனுடைய செல்வத்தைக் கோடானுகோடியென்று ஒரு பரியாயமாகச் சொல்லலாமேயன்றி, அதன் அளவை அறதியாகக் கணக்கிட்டுச் சொல்வது அவனுக்கே அஸாத்யம். யூரொப்பில் எந்த அரசனுடைய வாழ்க்கையும் அவன் வாழ்க்கைக்கு ஸமானம் ஆகாது. பல சிற்றரசர்களுடைய உரிமைகளையெல்லாம் ஒருசேர விலைக்கு வாங்க விரும்பினாலும் அவ்விதமே செய்யக்கூடிய அவனுடைய ஸம்பத்தைக் குபேரஸம்பத் தென்றாலும் உபமானபங்கம் உண்டாகும்.

தேசாந்தர ப்ரயாணமாக அங்கே வருகின்ற கனவான்களும் தனவான்களும் காசுமாற்றுவதில் கிடைத்தலான வட்டமெல்லாம் அவனுடைய கந்தாயமே. துரைத்தனத்தாருக்குப் புதிய கட்டடங்களைக் கட்டித்தருதல் பழைய கட்டடங்களைப் புதுக்கித்தருதல், தண்டுக்குரிய தளவாடங்களை ஸர்பரா செய்தல், முதலியவெல்லாம் அவனுடைய குத்தகையே. தர்மபரிபாலன ஸபைகளில் அவன் தர்மகர்த்தனாக இல்லாத ஸபை அங்கே ஒன்றும் இல்லை.
ஸந்ததியில்லாதவர் அநேகர், தாங்கள் கருதிய தர்மங்களை நடத்துதற்குரிய தர்மகர்த்தனாக அவனையே தங்கள் மரணசாஸனத்தில் குறித்து வந்தனர். நிராதரவான தங்கள் பெண்டிர் பிள்ளைகளுக்குத் தங்கள் ஆஸ்தியைக் கொண்டு செய்யத்தக்கவைகளைச் செய்யும்படி அநேகர் தங்கள் மரணசாஸனத்தில் அவனையே இயற்றுதற்கர்த்தாவாக நியமித்து வந்தனர். எல்லாவற்றையும் ஈடுகொடுத்து நிர்வகிப்பது கஷ்டமாகையால், சிலவற்றை அவன் வேண்டாமென்று மறுத்தாலும், அவரவர்கள் அவனை பலவந்தப்படுத்தி இணங்கு விப்பார்கள். பொருளும் புகழும் ஓங்கிய அவன் வாழ்க்கையானது, தனலக்ஷ்மியும் கீர்த்தி லக்ஷ்மியும் இருக்க வேறிடமின்றி அவனை இருப்பிடமாகக் கொண்டதுபோல் தோன்றியது.

இல்லாரை இகமுதலாகிய இழிகுணம் அவனிடம் இல்லை. கருணனைப்போல் பொருள் கொடுக்கும் கொடைமடம் அவனிடம் இல்லை. பாத்ரம் அறிந்தவிடத்து அவன் வருணனைப் போல் கொடுப்பான். ப்ரதிஷ்டைக்காகப் பொருள் சிறிதும் கொடுக்க மாட்டான். உறவினரில் நொந்த குடிகளுக்கு உபகாரச் சம்பளம் கொடுத்துவருவான். அவசியமான பொது நன்மைகளுக்கு அள்ளியள்ளிப் பொருளைக் கொடுப்பான். சித்ரகுப்தன் கணக்கு மயிரிழை புரண்டாலும் புரளும்: அவனுடைய கொடுக்கல் வாங்கல் கணக்கு இம்மியளவும் தவறி யிராது. வர்த்தக ஸூக்ஷ்மங்களில் மற்ற வ்யாபாரிகள் அவனிடத்தில் பாடம்படிக்கத்தக்க வல்லமையுள்ளவன். அஷ்டாவதானி சதாவதானிகளெல்லாம் கார்யாகார்யங்களில் அவனுடைய ஸஹச்ராவதானத்தைக் கண்டு தலைசாய்ந்து வெட்கமடைவர். வேலையில் தவறுதலான வேலையாட்களிடம் ஓரொரு சமயம் காட்டும் சினக்குறிப்பன்றி அவன் சினங்கொள்ளுதல் எங்கும் இல்லை. உலுத்தரைக் கண்டு பொறாமையன்றிச் செல்வரைக்கண்டு பொறாமை என்றும் இல்லை. சுருக்கமாகச் சொல்லுமிடத்தில், அவன் ஸத்யத்தில் அரிச்சந்திரன் சாந்தத்தில் தர்மராஜன் என்பதும் போதும்.

குன்றிமணியிடத்திலும் கொஞ்சம் கறுப்பு உண்டாயிருப்பது போல், தனபாலனிடத்திலும் ஒரு தோஷம் உண்டாயிருந்தது. பகவானுடைய கடாக்ஷமின்றி நாம் கடைத்தேற மாட்டோம் என்கிற எண்ணம் அவன் மனதில் உதிப்பதே யில்லை. “அவனருள் அற்றால் அனைவரும் அற்றார்: அவனருள் உற்றால் அனைவரும் உற்றார்” என்று எவராயினும் சொன்னால், அவன் அதற்கு எதிர்த்தட்டாக “முயற்சியுடையார் இகழ்ச்சியடையார்” என்று சொல்வான். “கடவுளை நம்பினோர் கைவிடப்படார்” என்பதைக் கேட்டால், “வருந்தினால் வராததில்லை” என்பதை நினைத்துக்கொள்வான். அதிர்ஷ்டம் என்கிற வார்த்தையை அகராதியில் கண்டாலும் அழித்து விடுவான். முயற்சி என்கிற வார்த்தையை எங்கே கண்டாலும் அதனடியில் கோடிழுத்துவைப்பான். சும்மா கிடைக்கிற பிதுரார்ஜிதத்தைக் கண்டு மகிழ்வது எல்லாருக்கும் இயல்பு. வருந்திக் கிடைக்கிற ஸ்வயார்ஜிதத்தைக் கண்டு மகிழ்வதே அவனுக்கு வழக்கம். “ஊக்கமுடைமை ஆக்கத்திற்கழகு” என்பதே அவனுடைய வேதப்ரமாணம். தெய்வத்தை இகழ்வதில்லையாயினும், அளவில்லாத தன் செல்வத்துக்குக் காரணம் தன் முயற்சியேயன்றி வேறில்லையென்றே அவன் நம்பியிருந்தான். “பெருமையும் சிறுமையும் தான்றர வருமே” என்பது அவன் கொள்கை.

இவ்விதம் நடந்துவருகையில், அவனுக்கு இறங்குபடியான காலம் கிட்டியிருப்பதாகப் புலப்பட்டது. வழியில் பெரிய பெரிய ப்ரதானிகளைக் கண்டாலும் லக்ஷ்யம் பண்ணாத ப்ரபுக்கள், அவனைக் கண்டால் குனிந்து கும்பிடுகின்றவர்கள், சில நாளாக அவனைக் கண்டவிடத்தில் வேறு பராக்காகப் போவார்போல் போவாராயினர். முன்னே வழிவிட்டு விலகிச் செல்பவரெல்லாம், இப்போது அவனை ஏறிட்டுப் பாராமல், தங்கள் பாட்டிலே நேராகச் செல்வாராயினர். பரிபாலனம் செய்யும்படி இவன்வசம் விட்டிருந்த தர்மங்களுக்கு உரியவர்கள் சிலர் அவ்வுரிமையை மீட்டுக்கொண்டனர். சிலர் தர்மபரிபாலன வரவு செலவு கணக்குகளைக் கேட்கவும், கேட்கும்போது தருமபரிபாலன சட்டவிதிகளையும் கடமைகளையும் சுட்டிப்பேசவும் தொடங்கினர். அவனைத் தேடிவருபவர் தொகை நாளுக்கு நாள் குறைந்து வந்தது. உபகாரச் சம்பளம் பெறுவோர் தவிர வேறெவரும் அவனிடம் வருவது அபூர்வமாயிற்று. தான் சிலரைத் தழுவப்போனாலும் அவர்கள் அதற்கிடங் கொடாமல் நழுவிப்போவதைக் கண்டான். இவ்வேறுபாட்டின் காரணம் இன்னதென்று அவனுக்குப் புலப்படவில்லை; எல்லாம் அதிசயமாகவே இருந்தது.

பட்டணவாசிகள் தேவாலய பொக்கிஷ பரிபாலனத்தின் பொருட்டு ஒவ்வொரு வருஷமும் ஓரதிகாரியைத் தேர்ந்தெடுத்து நியமிப்பார்கள். அவ்வதிகாரம் தன்னை விட்டுத் தப்பிப்போகாதென்று தனபாலன் உறுதியாக நம்பியிருக்கையில், அநாமதேயமான வர்த்தகன் ஒருவன் அவ்வதிகாரத்தைப் பெற்றான். அதனால் மனச்சலிப்படைந்து தன்னுடைய கார்யா கார்யங்களை ஸாவகாசமாக ஆராய்ந்துபார்த்தான். “என்னை நாடிவருவதும் எனக்குக் கௌரவம் செய்வதும் போய், எல்லாரும் ப்ரத்யக்ஷத்தில் என்னைப் பழிக்கின்றார்கள். நான் எவரையாகிலும் ஏமாற்றியிருக்கிறேனா? அவரவர்க்குச் சேர வேண்டிய தொகைகளை உரிய காலத்தில் ஒப்படைத்தே வருகிறேன். வ்யாபாரத்திலும் தர்மபரிபாலனத்திலும் எவ்வித மோசமும் நேரிட்டிருப்பதாக எனக்குப் புலப்படவில்லையே. பின்னை இந்த வேறுபாடு எவ்விதம் உண்டாயிற்று?” என்று சிந்தாகுலம் அடைந்தான்

“இந்த ஸாவகாரிக்கு இந்த மஹதைச்வர்யம் எங்கிருந்து கிடைத்தது. பாவி இவன் அக்ரமமாகவே பொருள் தேடினான்” என்று ஒரு வதந்தி அங்கங்கே பரவுதலாயிற்று. “இவன் கள்ளக்காசுகளைச் செய்து செல்வத்தைப் பெருக்கினான். பொன் வெள்ளி ஸரிகைவேலையில் இவன் நிபுணனல்லவா! கள்ளக்காசு செய்வது இவனுக்குக் கடினமான வித்தையா? ஐயோ, இவனுடைய அந்யாயத்தால் எத்தனை குடித்தனம் குட்டிச்சுவராகுமோ” என்று அங்கங்கே அந்தரங்கமாகவும் பகிரங்கமாகவும் குடிகள் பேசுதலாயினர்.

பொழுதுபோகும்படி வேடிக்கையாக வார்த்தை சொல்லிக் கொண்டிருந்தவர்களில் ஒருவன்,-”தனபாலன் என்ன பைத்தியக்காரனா, தன் ஸாமர்த்யத்தையெல்லாம் மூட்டைகட்டி வைத்துவிட்டுச் சும்மா இருக்க? அவன் பக்காத் திருடன் ஐயா” என்றான்.

பக்கத்திலிருந்தவன். – எந்தப் புற்றில் எந்தப் பாம்பு இருக்குமோ? அவஸரப்பட்டுப் பேசலாமா? இத்தனை காலமாக எவராவது அவனைப்பற்றி அவதூறாகப் பேசினதுண்டா? அவனை நான் ஸத்யஸந்தன் என்றே எண்ணியிருக்கிறேன்.

முதல்பேசினவன். – அவனை அரிச்சந்திரன் என்றுதான் நானும் நம்பியிருந்தேன். இதோ இந்த ரூபாவைப் பாரும்.

மற்றவன் (அதைத் தட்டிப்பார்த்து) – இதற்கென்ன? சப்தம் ஸரியாகத்தான் இருக்கிறது.

முதல்வன். – பரிசோதித்துப் பார்க்கிறவரையில் நானும் அதை நல்ல ரூபாவென்று நினைத்திருந்தேன். இது அந்த ஸாவகாரியிடத்திலிருந்து வந்த ரூபாதான். வேண்டுமானால் உம்முடைய உரைகல்லில் உரைத்துப்பாரும். பார்த்த பிறகானால் என் வார்த்தையை நம்புவீர்.

அப்படியே இருவருமாகப் பரிசோதித்துப் பார்க்கையில், அது கள்ளரூபா என்பதும் அதில் கால்பங்கு செம்பு கலந்திருக்கிறது என்பதும் தெளிவாயிற்று.

இங்ஙனம் இந்த மோசத்தைக் கண்டறிந்தவன் தனபாலனுடைய மாளிகைக்கு ஸமீபத்தி லிருப்பவன். அவன் வெகு நாணயமான வர்த்தகன்; மடிமாங்காய் போட்டுத் தலைவெட்டுகிறவன் அல்லன்; தன்னிலும் மேலான வர்த்தகன் சில அஸந்தர்ப்பங்களால் சீரழிவதைக் கண்டால், ஸந்தோஷப்படாமல், மிகவும் இரக்கம்கொண்டு தன்னாலான உதவியெல்லாம் செய்பவன். தர்மபாலன் என்று அவனுக்குப் பெயர் வழங்கியிருந்தது. தனபாலனிடத்தில் லாவாதேவி உள்ளவனாகையால், தனபாலனுடைய குணவிசேஷம் அவனுக்கு நன்றாய்த் தெரிந்திருந்தது. “இந்தத் தனபாலன் இத்தனை காலமாய் ஸத்யம் தவறாமல் ஸரியாக நடந்துவந்தவன் இப்பொழுது மோசக்காரன் ஆய்விடுவானா? நான் நம்ப மாட்டேன். நாம் உரைகல்லில் உரைத்துப்பார்த்த ரூபா எவ்விதமாக அவனிடத்தில் வந்ததோ? கள்ளம் பாராமல் ஒருவன்மேல் கள்ளம் நினைக்கலாமா?
ப்ரத்யக்ஷத்தில் பரிக்ஷித்துப் பார்க்காமல் தனபாலனை மோசக்காரனென்று நான் கொள்ளமாட்டேன்” என்றாலோசித்து, ஓர் உபாயம் பண்ணினான்.

உடனே தர்மபாலன், தன் வீட்டை அடைந்து, பெட்டியைத் திறந்து ஆயிரம் ரூபா எடுத்து ஒரு பையில் போட்டுக் கட்டிக்கொண்டு, தனபாலனிடம் போனான். போய், “ஐயா, தனபாலரே, முன்பின் பாராமல் நான் ஒரு வ்யாபாரத்தில் தலையிட்டுக்கொண்டேன். நஷ்டம் வந்தால் இரண்டாம் பேருக்குத் தெரியாமல் பரதேசம் போய்விட வேண்டும். ஆபத்துக் குதவியாக இந்த முடிப்பை எவரும் அறியாதபடி தங்களிடத்தில் வைத்துப் போகலாமென்று வந்தேன். இதில் ஆயிரம் ரூபா இருக்கிறது. உங்களை நான் அறிவேன். என்னை நீங்கள் நன்றாய் அறிவீர்கள். இது உங்களிடத்தி லிருப்பது என் பெட்டியில் இருப்பதைப் பார்க்கிலும் பதின்மடங்கு பத்ர மல்லவா? என்று சொல்லிப் பையைக் கொடுத்தான். தன்னைத் தேடி வருவார் எவரும் இல்லாத காலம் ஆகையால், தனபாலன் அதிசயமடைந்து, பையை வாங்கிப் பெட்டியில் வைத்துப் பூட்டினான். தர்மபாலன் விடைபெற்று, “அவரவர்கள் சொல்லித்திரிகிற அபவாதமெல்லாம் பொய்ப்படும். என் கொள்கையே மெய்ப்படும்”
என்றெண்ணிக்கொண்டே வீட்டுக்குத் திரும்பினான்.

சிலநாள் சென்றபிறகு, தர்மபாலன் ஒருநாள் திடும் ப்ர வேசமாய்ச் சென்று, தனபாலனிடம் “ஐயா, வெளியில் போய்விட்டீர்களோ என்னவோ என்று பயந்தேன். தாங்கள் வீட்டிலிருப்பது வெகு ஸந்தோஷம். அவஸரமாக ஒரு தண்டற்காரன் வந்திருக்கிறான். தயவுசெய்து தங்களிடம் வைத்த முடிப்பைத் தரவேண்டு. ச்ரமத்தைப் பொறுத்துக் கொள்ளவேண்டும்” என்றான். தனபாலன் “இதற்கு இத்தனை முகவுரை வேண்டுமா? என் முடிப்பைக் கொடும் என்றால் கொடுத்து விடமாட்டேனா?” என்று சொல்லி, எதிரிலிருந்த பெட்டியைத் திறந்து, ஓர் உள்ளறையை இழுத்து, “இதோ அன்று உங்கள் எதிரில் வைத்தது, வைத்தபடியே இருக்கிறது. பையை எடுத்துக் கொள்ளும். என்னால் ஆகவேண்டிய ஸஹாயம் எதுவானாலும் செய்யக் காத்திருக்கிறேன். எப்போது வேண்டுமானாலும் வாருங்கள்” என்று சொல்லி விடைகொடுத்தான்.

பையை எடுத்துக்கொண்டு போய், தர்மபாலன் பணத்தை எண்ணி, ரூபா ஆயிரமும் மேனி வேறுபடாமல் ஸரியாயிருக்கக் கண்டு, அவைகளை ஒவ்வொன்றாகத் தட்டிப் பார்க்கத் தொடங்கினான். கொஞ்சநேரத்தில் ஒரு ரூபாவின் சத்தம் வேறுபட்டது.

ஸந்தேகத்துக்கு இடமுண்டாகி, “நான் கொடுத்தபோது எல்லாம் ஸரியாகவே இருந்தன, ஆயினும் ஏதோ கைப்பிசகாக இருத்தல் கூடும்” என்று நினைத்து, மற்றவைகளைத் தட்டிக்கொண்டு போகையில், மறுபடியும் ஒன்று சப்தம் மாறுபட்டது.

ஸந்தேகம் அதிகரித்தது. பின்னும் சிலவற்றைத் தட்டிப்பார்க்கையில், எல்லாவற்றையுமே உரைத்துப் பரீக்ஷிக்க வேண்டும் என்கிற துணிவு உண்டாயிற்று. அவ்விதம் பரீக்ஷித்துப் பார்த்தவிடத்தில், நூறு கள்ளரூபா கலந்திருக்கக் கண்டான்.

தர்மபாலன் மனங்கலங்கி, மறுபடியும் ஸாவகாரியிடம் போய், “ஐயா, உம்மிடம் வைத்த முடிப்பில் நூறு ரூபா வேறுபட்டிருக்கிறது. இதோ பாருங்கள்” என்று காட்டினான்.

தனபாலன். – வேறுபாடோ இல்லையோ, நான் என்ன கண்டேன்? உம்முடைய பையை நான் அவிழ்த்துப் பார்க்க வில்லை. வைத்தது வைத்தபடியே பை பெட்டியில் இருந்தது.

தர்மபாலன். – ஐயா, இத்தனை காலமாக உங்களிடத்தில் எத்தனை விவகாரமாக வந்திருக்கிறேன். எப்பொழுதாவது குறைகூறின துண்டா? இதில் ஏதோ பிசகு நடந்திருக்கிறது.

தனபாலன். – இந்த அல்பத்துக்கு ஆசைப்பட்டு மோசம் பண்ணுவேனா? என்ன பைத்தியம் பிடித்திருக்கிறதா உனக்கு? யோசனையில்லாமல் பேசுகிறாயே, போ போ.

தர்மபாலன். – ஐயா, கோபம் சண்டாளம். நான் என்ன முழுமூடனா? ப்ரத்யக்ஷமான ஸாக்ஷியில்லாமல் தங்களெதிரில் இப்படிக்கென்று வாய்திறந்து பேசுவேனா? எவ்விதத்திலோ மோசம் நடந்திருக்கிறது. நானாகிலும் மோசம் செய்திருக்க வேண்டும். நீராவது மோசம் செய்திருக்கவெண்டும். நானும் நாணயமான வர்த்தகனென்று பெயர் வைத்திருப்பவன் நீரோ
பெரிய ஸாவகாரி. இந்த விஷயம் சிக்கறுதல் வேண்டும். நான் நியாயஸ்தலத்தில் முறைப்பாடு செய்ய உத்தேசிக்கிறேன்.

தனபாலன். – புண்யத்துக்குக் கொடுத்த மாட்டைப் பல்லைப் பிடித்துப் பார்ப்பதுபோல், பத்ரமாய் உன் பணத்தை வைத்திருந்து கொடுத்ததற்கு என் தலையில் சொட்டுவைக்க வந்தாய். போ போ. தாமஸம் பண்ணாமல் இப்படியே போய் ந்யாயாதிபதியிடத்தில் முறையிட்டுக்கொள். போ. இங்கே நிற்க வேண்டாம்.

அங்கிருந்து தர்மபாலன் நேராக ந்யாயாதிபதியிடம் போய் நடந்த செய்தியை நடந்தபடியே சொல்லிக் கொண்டான்.

ந்யாயாதிபதி தனபாலனை அழைத்து, “ஐயா தனபாலரே, தர்மபாலருடைய பணமுடிப்பை நீர் வைத்திருந்து கொடுத்ததில் ஏதோ பிசகு நடந்திருப்பதாய் அவர் முறையிட்டிருக்கிறார். உம்முடைய ப்ரதிவாதம் என்ன?” என்று கேட்டார்.

தனபாலன். – ஐயா, தர்மபாலர் ஆயிரம் ரூபா என்று சொல்லி என்னிடம் கொடுத்த முடிப்பை அவரெதிரிலே என் பெட்டியின் உள்ளறையில் வைத்துப் பூட்டினேன். ரூபாவை நாண் எண்ணிப் பார்க்கவுமில்லை; தட்டிப் பார்க்கவு மில்லை. அவர் சிலநாள் கழித்துவந்து கேட்டபோது, அவரெதிரிலே பெட்டியைத் திறந்து, வைத்தது வைத்தபடியே இருந்த பையை எடுத்துக் கொடுத்தேன் கொஞ்சநேரம் சென்ற பின் அவர் திரும்பிவந்து ‘இதில் ஏதோ பிசகு நடந்திருக்கிறது’ என்றார்.
‘ந்யாயாதிபதியிடத்தில் முறையிட்டுக் கொள்ளும்’ என்று சொல்லி அனுப்பிவிட்டேன்.

ந்யாயாதிபதி. – உங்கள்மீது குற்றம் ஒன்றும் இல்லையென்று ஸத்யம் பண்ணுகிறீரா?

தனபாலன். – ஆ ஹா! பண்ணுகிறேன்.

உடனே எதிரில் கொண்டுவந்து வைத்த வேத புஸ்தகத்தைக் கையிலெடுத்து, ஸாவகாரி, “நமது வேதத்தின்மேல் ஆணை. நான் ஒரு பாவமும் அறியேன்” என்று ஸத்யம் பண்ணினான்.

அதைக் கண்டு ந்யாயாதிபதி ப்ரதிவாதிமேல் குற்றம் இல்லையென்று தீர்மானம் பண்ணிவிட்டார்.

“பெரிய யோக்யன் மஹா ஸத்யவான் என்று நாம் எண்ணியிருந்த தனபாலன், அடட! மோசம் பண்ணின தல்லாமலும், பொய்ஸத்யமும் பண்ணத் துணிந்தானல்லவா” என்று மனம் கிடுகிடுத்துத் திடுக்கிட்டுத் தர்மபாலன் தன் வீட்டுக்குப் போய்விட்டான்.

இந்த முறைப்பாடு இவ்விதம் முடிந்ததைக் கண்டு, சிலர், “கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளையில் தெரியாதா? பலநாள் திருடன் ஒருநாள் அகப்படாமல் போகான். இவனுக்கு யோக காலம் இன்னும் முடிவாக வில்லை” என்று எண்ணினர்.

சிலர், “தனபாலன் நெடுநாளாகப் புரட்டு செய்து வருகிறான். மஹா சுசீலனான தர்மபாலன் இவன்மேல் வழக்குத் தொடுத்ததே இதற்கு ப்ரத்யக்ஷ ப்ரமாணம். இந்த வழக்கிலே பொய்ஸத்யம் செய்து தப்பினான். கிடக்கட்டும், எங்கே போகிறான்” என்று பேசிக் கொண்டனர்.

III

கொத்தவால்களும் ஊர்க்காவலாளிகளும் ஸாவகாரியின் திருட்டுப் புரட்டுகளை எவ்விதத்திலும் கண்டுபிடிக்க வேண்டுமென்று கங்கணங் கட்டிக்கொண்டனர். இடலி தேசத்தவர் மஹாபாயமெல்லாம் அறிந்தவர்கள்: அவர்கள் கொத்தவால்களும் ஊர்க்காவலாளிகளும் திருட்டுப் புரட்டுகளைக் கண்டுபிடிப்பதில் வெகு ஸாமர்த்யமான தந்த்ரோபாய முடையவர்க ளாகையால், அவர்களில் சிலர் வேறுதேசத்து வர்த்தகர்போல் மாறுவேஷம் பூண்டு தனபாலனிடம் சென்றனர்.
எளிதில் கண்டுபிடிக்க முடியாதபடி குறிப்பிட்ட ரூபாக்களையும் ஸவரன்களையும் ஒரு பையில் கட்டி முடிந்து தனபாலன் கையில் கொடுத்து, “ஐயா, நாங்கள் வடதேசத்திலிருந்து வர்த்தக நிமித்தமாக வந்தவர்கள். ஐங்காத தூரத்துக்கப்பால் ஓரூரில் ஒரு வேலை இருக்கிறது. அதைப் பார்த்துக்கொண்டு நாலைந்து நாளில் திரும்பி வருவோம். அது வரையில் இந்தப் பணமுடிப்பைக் கொடுத்துவைக்கத்தக்க இடம் தெரியாமல் அலையும்போது, உங்கள் நினைவு வந்தது. இதை வைத்திருந்து, நாங்கள் வந்து கேட்கும்போது கொடுக்கவேண்டு மென்று ப்ரார்த்திக்கிறோம்” என்று அதிக விநயமாக வேண்டிக் கொண்டார்கள். சிலநாள் கழித்து முன்போலவே மாறு வேஷத்தோடு வந்து, முடிப்பை வாங்கிக்கொண்டுபோய்த் தங்கள் அதிகாரிகளின் எதிரிலே காவலாளிகள் பணத்தைப் பரீக்ஷித்தார்கள். முடிப்பில் முக்கால் பங்கு கள்ளக்காசு கலந்திருப்பது தெரியவந்தது. ‘கண்ணால் கண்டதற்கு ஏன் அகப்பைக் குறி?’ தர்மபாலன் தொடுத்த வழக்கில் ஸாவகாரி செய்தது பொய்ஸத்யம் என்பதற்கு வேறு சாக்ஷி வேண்டுமா?

அடுத்த நாள் கொத்தவால்கள் ஸாவகாரியைத் தூக்குந் தள்ளுமாகக் கொண்டுபோய்க் காவலில் வைத்துவிட்டு, அவன் மாளிகையில் சோதனை பண்ணினார்கள். காசு அடிப்பதற்கு அவசியமான கருவிகள் பெட்டிகளின் அடியறைகளில் உள்ளறைகளுள் வைத்திருந்தன. கள்ளக்காசில் கலப்பதற்குச் செம்பு முதலிய ஸாமான்களும் கூடவே வைத்திருந்தன. வெவ்வேறு அறைகளில் வெவ்வேறு பெட்டிகளில் கள்ளக்காசுகள் வைத்திருந்தன.

இந்த ஸங்கதி வெளிவந்தவுடனே, கையுங் கட்டாரியுமாக அநேகர் பேராரவாரம் செய்து புறப்பட்டனர். ‘கெட்டால் பெரிய வெட்டரிவாள்’ ‘கெட்டார்க்கு உற்றார் கிளையிலும் இல்லை’ என்பது பொய்யாகுமா? பலபேர் “பார்த்தீர்களா, இந்த ஸாவகாரி இவ்விதமான புரட்டு செய்துகொண்டு இத்தனை காலமாக அரசமாளிகை கட்டி ஆடம்பரத்துடன் வாழ்ந்தானே. இந்த்ரஜாலம் மஹேந்த்ர ஜாலமெல்லாம் இவன் ஜாலத்துக்கு நிகராகுமா? எல்லாருடைய கண்ணிலும் மண்ணைத்தூவி என்ன வேலை செய்துவந்தான்! அடட! இந்த நகரத்தின் பஞ்சாயத்தில் ஒருவனாகி இந்த யோக்யன் நியாய பரிபாலனங்கூட நடத்திவந்தா னல்லவா! ந்யாயம் என்பது ஏழைகளுக்கு மாத்ரமேயோ? குற்றம்செய்தால் தனவான்களுக்கு ந்யாயவிசாரணை இல்லையா? இப்படிப்பட்ட சண்டாளனை என்ன செய்தால் தீரும்?” என்று முழங்கினார்கள்.

இக்கலிபலியைக் கண்ட நீதிபதிகள் தனபாலனுடைய குற்ற விசாரணையை விரைந்து நடத்தலானார்கள். அவனை ந்யாயஸ்தலத்தில் நிறுத்திக் கொத்தவால்கள் அவனுடைய குற்றத்தை விவரித்து அதற்குண்டான ஸாக்ஷியும் காட்டினார்கள்.

எல்லாம் அவனுக்கு விரோதமாக இருந்ததனால், அவன் ப்ரதிவாதம் பண்ணாமல் மௌனமாக இருந்தான். அன்றைக்கு ஐந்தாவது நாள் காலையலை் சந்தைவெளியில் எட்டு மணிக்கு அவனைத் தூக்கிலே போடுவதென்று தீர்மானம் ஆயிற்று.அவன் தேவத்யானம்பண்ணி ஆத்மரக்ஷணை பெறும்பொருட்டாக இடையில் நான்குநாள் விட்டுவைத்தார்கள்.

தீர்மானம் ஆனவுடனே, அவனைச் சிறைச்சாலையில் கைகால்களை நீட்ட முடியாது நான்கடி சதுரமான ஓர் இடுக்கறையில் விட்டுக் கதவைப் பூட்டிவைத்தார்கள். ஆக்கத்துக்கு ஊக்கம் துணைக்காரணமாயினும் முதற்காரணமாகிய தெய்வாநுகூலம் இல்லாமல் ஊக்கம் மாத்ரமே ஒருவனை ஈடேற்றுமா என்கிற எண்ணம் அவன் மனதில் உதித்தது. திக்கற் றவர்களுக்குத் துணை தெய்வமே என்கிற நம்பிக்கை பிறந்தது. சாகிற காலத்தில் சங்கரா என்பதுபோல், அவன் அந்த்ய காலத்தில் ஆராமையடைந்து பகவத்யானம் பண்ணியிருந்தான்.

மஹா பதிவிரதையான அவன் பெண்டாட்டியையும் ஏக புத்ரியான பெண்ணையும் ஓர் அறையில் இருக்கவிட்டு, காவலாளிகள், மாளிகையின் மற்ற அறைகளைப் பூட்டிவிட்டு, ஸாவகாரியின் ஸொத்துக்கள் எல்லாவற்றையும் மறியல்செய்தனர். அந்த மாளிகையில் உள்ள தட்டுமுட்டு ஸாமான்கள் எந்த அரமனையில் கிடைக்கும்!

தீரமானம் ஆன நாலாநாள், ஸாவகாரியின் கணக்கப் பிள்ளை, ஸாவகாரி மனைவியிடத்தில் ஒரு ஸங்கதி தெரிவிக்கும்படி மெத்தைப் படிக்கட்டில் ஏறியிருந்தவன், கால் இடறித் தலைகீழாகச் சாய்ந்து உருண்டுபோய்க் கீழேவிழுந்து கழுத்து முறிந்து மரணமடைந்தான். அவன் மனைவி நெடு நாளாய்த் துர்ப்பலையாக இருந்தவள், கணவன் இறந்ததைக் கேட்ட மாத்ரத்தில், புண்ணின்மேல் பூச்சியும் கடித்தவாறாகக் கலக்கம் அடைந்து, தானும் சீக்ரத்தில் மரணமடைவது நிச்சயமென்று கண்டு, அன்றிரவு பின்மாலை வேளையின் தன பாலனுடைய மனைவியை அழைத்துவரும்படி அண்டையிலிருந்தவர்களை வேண்டினாள். தனபாலன் மனைவி வந்தவுடனே, அருகிலிருந்தவர்களை அப்புறம் போகச்சொல்லி, “அம்மா, நான் பேசி முடிகிறவரையில் குறுக்கிட்டுப் பேசவேண்டாம். உங்கள் புருஷன் நிரபராதி. என் புருஷனே குற்றவாளி. என் புருஷன் முன்னமே செய்துள்ள பாதகங்களோடு கொலைப்பாதகமும் சேர்ந்து, அவனுடைய ஆத்மா அதோகதி அடையாதபடி, நீங்கள் உடனேபோய் இது செய்தியை நியாயாதிபதியிடத்தில் தெரிவியுங்கள். உம்முடைய புருஷன்……. ” என்று அப்புறம் பேசமுடியாமல் கண்ணை மூடிக்கொண்டாள். கைகால்களெல்லாம் சில்லிட்டன.

இனி தன் பர்த்தாவின் தலை தப்பும் என்கிற உறுதியோடு, தனபாலன் மனைவி, ஓட்டமும் நடையுமாக ந்யாயத் தலைவரிடம் சென்று, தங்கள் கணக்கப்பிள்ளையின் மனைவி மரணத்தறுவாயில் வாய்விட்டுரைத்த ரகஸ்யத்தை வெளியிட்டாள்.

ந்யாயத்தலைவர்:– (தலையை அசைத்துக்கொண்டே) இந்த ரகஸ்யத்தைச் சொன்னவள் இன்னும் உயிரோடு இருக்கிறாளா?

தனபாலன் மனைவி:– எடுத்த ஸங்கதியை முடிவாகச் செல்வதற்குள் அவள் பிராணன் போய்விட்டது.

ந்யாயத்தலைவர்:—-அவள் கணவன் எங்கே இருக்கிறான்? தனபாலன் மனைவி:—- அவனும் நேற்றைப் பகல் துர்மரணம் அடைந்தான்.

ந்யாயத்தலைவர்—- உங்கள் கணக்கன் மனைவி உம்மோடு இந்த ஸங்கதியைச் சொல்லும்போது கூடேயிருந்த ஸாக்ஷிகள் எவராயினும் உண்டா?

தனபாலன் மனைவி:—-இல்லை. என்னைப் பார்த்ததும் பக்கத்தி லிருநதவர்களை வெளியில் அனுப்பி விட்டாள்.

ந்யாயத்தலைவர்:—- அப்படியானால், அவள் தெரிவித்த ரகஸ்யத்தால் உங்களுக்கு ஒன்றும் நன்மை யில்லை. நாங்கள் சட்டத்தின்படி நடத்தக்கடவோம்.

இதைக் கேட்டதும், தனபாலன் மனைவி அடியற்ற மரம் போல் கீழே விழுந்துவிட்டாள். அதைக்கண்டு நியாயத் தலைவர், அவளை ஓர் உத்தியோகஸ்தருடைய வீட்டுக்குக் கொண்டுபோய் சைத்யோபசாரம் பண்ணிக் கொண்டிருக்கும்படி சில ஆட்களை ஏவினார். அதற்குள் ஏழரைமணி ஆயிற்று.

தூக்குப்போடுகிற இடத்தில் சுற்றிலும் திரையிட்டிருந்தது.திரையின் வெளியிலே ஒரு மேஜையும் அதன் பக்கத்தில் சில நாற்காலிகளும் போட்டிருந்தன. மேஜையின் மேல் தூக்கு விளம்பரம் முதலிய காகிதங்கள் வைத்திருந்தன. கொலைக்கள அதிகாரிகள் வந்து கூடினமாத்ரத்தில், சிறைக் கவலர் குற்றவாளியை விலங்குங்கையுமாக அழைத்துவந்து எதிரில் நிறுத்தினர்.
“பொழுதாயிற்று. நீ ஏதாகிலும் சொல்ல விரும்பினால், தாமஸ மில்லாமல் சொல்லலாம்” என்று அதிகாரிகள் சொன்ன வார்த்தையைக் கேட்டு, தனபாலன் “நான் நிரபராதி. ‘நெஞ்சை யொளித்தொரு வஞ்சகமில்லை.’ மனதறிய நான் ஒரு குற்றமும் செய்யவில்லை. என் கர்மம் என்னை இப்படி ஆட்டிவைக்கிறது. எவரையும் நொந்துகொள்ளாமல் மனவமைதியோடு பகவத்யானம் பண்ணிக்கொண்டிருக்கிறேன். இனி நீங்கள் செய்வது செய்க” என்று சொல்லிக் கண்களை மூடிக்கொண்டு கைகளைக் கூப்பி நின்றான். கொலையாளிகள் அவனைத் தூக்குமரத்தில் ஏற்றி, தூக்கிலிடுகிற கயிற்றை அவன் கழுத்தில் மாட்டப்போனார்கள். “ஊரையடித்து உலையில் போட்டுவந்த பாவி செத்தான். சண்டாளன் செத்தான்” என்ற ஜனங்கள் இரைந்து கொண்டிருந்தார்கள்.

IV

அப்போது ஒரு சேவகன் குதிரையின்மீது காற்றாய்ப் பறந்து வருவதைக் கண்டு, ஜனங்கள் இருபுறமாக ஒதுங்கி வழிவிட்டார்கள். என்ன அவஸரமான நிருபம் கொண்டு வருகிறானோ என்று அதிகாரிகள் இமைகொட்டாமல் பார்த்திருந்தனர். ஸேவகன் மேஜையின் எதிரிலே குதிரையை நிறுத்தி, கையில் கொண்டுவந்த காகிதத்தை அதிகாரிகையில் கொடுத்து, கொலையாளியைப் பார்த்துக் கையமர்த்தினான். காகிதத்தைப் பார்த்தவுடனே, தனபாலனை இறக்கிச் சிறைச் சாலைக்குக் கொண்டுபோகும்படி உத்தரவளித்து, அதிகாரிகள் அவ்விடம்விட்டு அப்புறப்பட்டார்கள்.

மர்மத்தை அறியாத ஜனங்கள், “இதென்ன மாயம்! இதுவெல்லாம் கனவா நனவா? தொலைந்தான் என்றிருந்தோமே. மறுபடியும் கழுதையை இறக்கி எங்கே கொண்டுபோகிறார்கள்? அவனுடைய சிநேகிதர்கள் இந்த ந்யாயாதிபதிகளுக்கு ஏதாவத பரிதானம் கொடுப்பதாக எழுதியனுப்பினார்களோ? கடைசியாகக் கார்யம் இப்படி முடிந்ததே. நம்முடைய பட்டணம் நல்ல பட்டணம்! பணம் இருந்தால் போதும்; என்ன அக்ரமம் செய்தாலும் ஏனென்று கேட்பார் இல்லை. நன்றாக இருக்கிறது நம்முடைய ந்யாய பரிபாலனம்” என்று பலவிதமாக நிந்தித்துக்கொண்டு போனார்கள்.

தாங்கள் செய்த பாதகங்களை அந்த்யகாலத்தில் ஒரு மதாசாரியனிடம் ரகஸ்யமாக வெளியிட்டால், அந்த மதாசாரியன் அவைகளுக்குப் பரிகாரம்பண்ணிப் பாவ நிவாரணம் உண்டாக்குவான் என்பது கிறிஸ்தவர்களுடைய கொள்கை. இதன் பொருட்டு ஒவ்வொரு சிறைச்சாலையிலும் ஒவ்வொரு மதாசாரியனை நியமித்திருப்பார்கள். அன்று காலையில், அவ்வித மதாசாரியன், சிறைச்சாலைத் தலைவனை அடைந்து, “ஐயா, இங்கே காய்ச்சலாகப் படுத்திருந்த ஒரு குற்றவாளி நேற்றிரவில் இறந்துபோனான். இறக்கு முன்னே அவன் என்னிடத்தில் தான் கள்ளக்காசு செய்கிற ஆள்களில் ஒருவன் என்றும், தனபாலனுடைய கணக்கப்பிள்ளை அவ்வாள்களுக்குத் தலைவன் என்றும், அந்தக் கணக்கப்பிள்ளை தனபாலனுடைய பெட்டிகளைக் கள்ளச்சாவி போட்டுத் திறந்து நல்ல ரூபாக்களையும் ஸவரன்களையும் எடுத்துக்கொண்டு கள்ளக்காசுகளைக் கலந்து பைகளைப் பழைய படியே கட்டிவைப்பதும், அந்த வேலைக்குரிய கருவிகளை அவன் தன் வீட்டில் வைக்காமல் தனபாலனுடைய பெட்டிகளில் அடியறைகளில் வைப்பதும் வழக்கம் என்றும், தன்னோடு உடந்தையாய் வேலை செய்வோர் இன்னார் என்றும், வேலைசெய்யும் இடம் இன்னதென்றும், எல்லா ஸங்கதிகளையும் வெளியிட்டு, பாவநிவாரணம் பண்ணும்படி வேண்டினான்” என்று விவரித்தான்.

சிறைச்சாலைத் தலைவன் உடனே அந்த ஸங்கதியைச் சுருக்கமாக எழுதி, எழுதிய காகிதத்தை ஒரு ஸேவகன் கையில் கொடுத்து, “வாயுவேகம் மனோவேகமாகக் குதிரையேறிப்போய் இந்தக் காகிதத்தைக் கொலைக்கள அதிகாரியிடம் கொடுக்க வேண்டும்” என்று உத்தரவு செய்து, ஊர்க்காவலாளிகளை ரகஸ்யமாக அனுப்பிக் கள்ளக்காசு செய்கின்ற ஆள்களைப் பிடிப்பித்துவிட்டான்.

அன்று மாலையே அவர்களை ந்யாயஸ்தலத்தில் விசாரணை செய்தபோது, அந்த ஆள்களில் ஒருவன் தனக்குச் சேர வேண்டிய க்ரமமான பாகம் பெறாமையாலே, தன் கூட்டாளிகளின் மர்மத்தை வெளிப்படுத்திவிட்டான். மதாசாரியன் சொன்னதும் இந்த ஆள் சொன்னதும் ஒத்திருந்தமையால், தனபாலன் நிரபராதி என்பது நியாயத்தலைவருக்குத் தெளிவாயிற்று.

தனபாலன்மீது வீணாக உண்டான அபவாதத்துக்குப் பரிகாரம் பகிரங்கமாகச் செய்யவேண்டுமென்று ஆலோசித்து, ந்யாயத்தலைவர், பட்டணத்திலுள்ள முக்கியமான கனதனவான்களெல்லாம் ந்யாயமண்டபத்தில் மறுநாள் வந்து கூடுகவென்று அறிக்கைசெய்தனர். எல்லாரும் வந்து கூடினவளவில், தனபாலனைச் சிறைச்சாலையினின்றும் அழைப்பித்து, ந்யாயத்தலைவர் தமது பீடத்திலிருந்து இறங்கிவந்து தனபாலனைக் கைபிடித்து அழைத்துப்போய்த் தமது பீடத்தின் பக்கத்தில் ஸமானமாக இருக்கச்செய்தார். பின்பு ந்யாயத்தலைவர், சிறைச்சாலையில் காய்ச்சலால் இறந்துபோன குற்றவாளியின் வாக்குமூலத்தை வாசித்தார். தனபாலன் நிரபராதி என்பதற்கு ஆதாரமான எல்லா அம்சங்களையும் விளக்கினார்.

எல்லாரும் ஆநந்தமடைந்து ஸங்கீத வாத்யகோஷத்துடன் தனபாலனை அழைத்துக்கொண்டுபோய் அவன் மாளிகையில் விட்டனர். மறியல் செய்த பொருள்களை ந்யாய உத்யோகஸ்தர் அவனிடம் ஒப்படைத்தனர்.

- அபிநவ கதைகள் (1921)

நன்றி: http://www.projectmadurai.org/ 

தொடர்புடைய சிறுகதைகள்
I கிழக்கில் பெத்துநாய்க்கன் பேட்டைக்கும், மேற்கில் வேப்பேரிக்கும், வடக்கில் உப்பளத்துக்கும், தெற்கில் பூந்தமல்லி சாலைக்கும் இடையில், சென்னைக்கு நடுநாயகமாய் ஒரு பூங்காவனம் உண்டு. ஸாதாரண ஜனங்கள் அதை ராணி தோட்டம் விக்டோரியா தோட்டம் சிங்காரத் தோட்டம் என்றும், இங்க்லிஷ் படித்தவர்கள் பீபில்ஸ் பார்க் ...
மேலும் கதையை படிக்க...
பெங்களூரில் ராமசாமி முதலியார் என்பவர் ஒருவர் வர்த்தகம் செய்துகொண்டிருந்தார். அவருக்கு மாணிக்கம் மரகதவல்லி என்றிரண்டு பெண்பிள்ளைகளும், கிருஷ்ணன் கோவிந்தன் என்றிரண்டு ஆண்பிள்ளைகளும் உண்டு. மரகதவல்லி நால்வரிலும் இளையவள்; நான்கு வயதானவள். ஆண்பிள்ளைகள் இருவரும், சென்னையில் தங்கள் அத்தையம்மாளுடைய வீட்டில் இருந்துகொண்டு, ஒரு பாடசாலையில் ...
மேலும் கதையை படிக்க...
தமிழ்நாடு முற்காலத்தில் சேரமண்டிலமென்றும் பாண்டி மண்டிலமென்றும் சோழமண்டிலமென்றும் மூன்று பிரிவினையுடையது. திருவாங்கூர் மலையாளம் கொச்சி குடகு கோயமுத்தூர் முதலியவை சேரமண்டலத்தைச் சேர்ந்தவை. மதுரையும் திருநெல்வேலியும் பாண்டிமண்டலத்தைச் சேர்ந்தவை. திருவேங்கடம் முதல் திரிசிரபுரம் வரையில் சோழமண்டிலம் பரவியிருந்தது. காவிரியாறு கடலொடு கலக்கின்ற சங்கமுகத் துறையில் ...
மேலும் கதையை படிக்க...
1 காலையில் ஏழரை மணி இருக்கும். அரமனைத் தோட்டத்தினின்றும் புஷ்ப வாஸனை கமகமவென்று வந்துகொண்டிருந்தது. கிளிகள் கொஞ்சிக் குலாவியிருந்தன. கன்றுக் குட்டிகள் துள்ளியோடின. மான் கூட்டங்கள் மிரண்டு மிரண்டு தாவிப் பாய்ந்து கொண்டிருந்தன. எதிரில் ஏரிகரையில் கொக்குகளும், நாரைகளும் மீன்களைக் கொத்தித் தின்று ...
மேலும் கதையை படிக்க...
Iசென்னையில் ஜெனரல் ஹாஸ்பிடலிலிருந்து வண்ணாரப் பேட்டைக்குப் போகும் தங்கசாலை வீதியும் கடற்கரையிலிருந்து ஆனைகெவுனிக்குப் போகும் கொத்தவால்சாவடி வீதியும் கலக்கிற நாற்சந்தியில் உள்ள அடிபட்ட பிள்ளையார் கோயிலுக்குக் கிழக்கே கால் பர்லாங்க் தூரத்தில் ஒரு சிறிய சந்து உண்டு. அந்தச் சந்து கோமுட்டி ...
மேலும் கதையை படிக்க...
ஸுப்பையர்
கிருஷ்ணன்
கோமளம்
கற்பலங்காரம்
ஆஷாடபூதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)