‘சிலம்பு’ செல்லப்பா

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: May 15, 2017
பார்வையிட்டோர்: 8,479 
 

(1995ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) 

‘சிலம்பு’ செல்லப்பா என்று முகத்துக்கு முன்னாலும், ‘அலம்பல்’ செல்லப்பா என்று முதுகுக்குப் பின்னாலும் அழைக்கப்படும் செல்லப்பாவை நான் முதன் முதலில் நாலு வருடங்களுக்கு முன்புதான் சந்தித்தேன். மறக்க முடியாத சந்திப்பு அது. பல வருடங்களாக வெளிநாடுகளிலேயே உத்தியோகம் பார்த்துவந்த நான், ஒரு ப்ரொஜெக்ட் விஷயமாக ஓர் ஆறுமாத காலம் கொழும்பில் வேலை பார்க்க வேண்டிவந்தது. அந்த சமயத்தில்தான் என் பழைய நண்பர் சண்முகத்தின் தரிசனமும் அவர் மூலம் செல்லப்பாவின் நட்பும் எனக்கு கிட்டின.

ஆறு மாதங்களுக்கு ஒரு தன்வீடு எடுத்து இருப்பது எனக்கு தோதுப்படவில்லை. ஒரு வாரத்திற்கு மேல் ஹோட்டல் சாப்பாடும் தாங்காது. காலிரோடும், சென்ற ரோரன்ஸ் வீதியும் சேரும் சந்திப்பில் நின்றபடி ஒரு மாலை நேரம் இதுபற்றி நான் தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்த போதுதான் என் குருகுலவாச நண்பரான சண்முகம் தென்பட்டார். அந்தக் காலத்திலேயே என்னைத் ‘தம்பி’ என்று பாசத்தோடு அழைத்தவர்; இருபது வருடம் ஆகியும் வெகு சுலபமாக என்னை அடையாளம் கண்டுகொண்டு விட்டார்.

அதன் விளைவுதான் என்னுடைய ‘சமறி’ வாழ்க்கை. விடாப்பிடியாக கையைப் பிடித்து அழைத்து வந்துவிட்டார் சண்முகம். அவருடைய உடம்பைப் போலவே அவருக்கு தாராளமான மனசு. அவர்தான் எனக்கு ‘சிலம்பு’ செல்லப்பாவை அறிமுகம் செய்து வைத்தவர். ‘சிலம்பு’ என்ற அடைமொழி வந்த விருத்தாந்தத்தை நான் இங்கே விளக்கத் தேவையில்லை. அந்த மகத்தான காரியத்தை நீங்களே ஏற்கனவே செய்து முடித்திருப்பீர்கள். சிலப்பதிகாரத்திற்கு நடமாடும் authority செல்லப்பா தான். இளங்கோ அடிகள் உயிரோடு இருந்திருந்தால் அவரே வந்து இவரிடம் சில ஐயங்களை தீர்த்துக் கொண்டிருப்பார்.

செல்லப்பாவுக்கு வயது 45க்கு மேலே இருக்கும். நித்தமும் ஏகாசி விரதம் அநுட்டிப்பார் போன்ற மெலிந்த தோற்றம். நாலு நாள் தாடி. வெள்ளை மயிரும் கறுப்பு மயிரும் சரிசமமாக பங்குபோட்டு அவர் தாடையிலே படர்ந்திருக்கும். உணர்ச்சிவசப்படும் மெல்லிய நீண்ட மூக்கு; ஆழ்ந்து யோசிக்கும் கண்கள். வெற்றிலைப் பிரியர். நாறப்பாக்கு, பிஞ்சுப்பாக்கு, களிப்பாக்கு என்று அலங்காரமாக அடுக்கி வைத்து, தன் கையால் žவி, வாய்க்கு ஒய்வு கொடுக்காமல் மென்று கொண்டேயிருப்பார். பேசத் தொடங்கினார் என்றால் பாத்திரம் அலம்புவது போல நீட்டுக்கு பேசிக்கொண்டே போவார். அவருக்கு வேண்டாதவர்களை ‘பிரேக் இல்லாத சைக்கிள்’ என்று அவரை வர்ணித்தால் அதை நீங்கள் கண்டு கொள்ளக் கூடாது.

தமிழ் தினசரி ஒன்றில் கடந்த பதினைந்து வருடங்களாக வேலை பார்த்து வந்தார். அவர் பத்திரிகையில் தொடர்ந்து எழுதிய ‘சிலம்பின் சிறப்பு’ கட்டுரைகள் புத்தகமாக வந்திருந்தது. இலக்கியத்தில் இடைவிடாத ஆர்வம். தானும் தன் வெற்றிலையுமென்று இருப்பார். சிலப்பதிகாரத்தில் அவருடைய ஈடுபாட்டை கேள்விப்பட்ட உடனேயே பள்ளி நாட்கள் தொட்டு எனக்கு இருந்து வந்த ஒரு சந்தேகத்தை கேட்டுவிடுவதென்று தீர்மானித்துக் கொண்டேன். சாப்பிடும்போதுதான் இதற்கு சரியான வசதி. பல விவாதங்களும், போர்களும், சிரிப்புகளும் அதே சாப்பாட்டு மேசையை சுற்றியே அங்கே நடைபெற்றன. நான் உண்மையில் என்னுடைய ஐயத்தை கிளப்பிய தன் காரணம் அவருடைய ஆழ்ந்த புலமையை சோதிப்பதற்காகவும் இருக்கலாம்.

“சிலப்பதிகாரத்தில், புகார்க் காண்டத்தில் வரும் மங்கல வாழ்த்துப் பாடல், ‘திங்களைப் போற்றுதும்! திங்களைப் போற்றுதும்!’ என்று தொடங்குகிறது. அதற்குப் பிறகுதான் ‘ஞாயிறு போற்றுதும்’ என்று வருகிறது. இது என்ன நியாயம்? உயிர்களுக்கெல்லாம் ஆதாரம் சூரியன் அல்லவா? சூரியன் இல்லாவிடில் சந்திரன் ஏது? சந்திரனை முன் வைத்து, சூரியனை பின் வைத்தது சரியா? என்பதுதான் என் ஐயம்.

செல்லப்பா சிறிது நேரம் என்னையே உற்றுப் பார்த்தார். அவர் என்னுடைய கேள்விக்கு அவகாசம் வேண்டி நேரத்தை கடத்தவில்லை. ‘இவர் என்னைச் சோதிக்கிறாரோ?’ என்பது போலத்தான் அந்த பார்வை இருந்தது. அதை நிச்சயம் செய்துகொண்டு செல்லப்பா கதைக்கத் தொடங்கினார்.

“சிலப்பதிகாரத்தை படிக்கும்போது அவசரம் கூடாது. அதில் சொல்லாத விஷயங்களே இல்லை. இந்தக் கேள்விக்குப் பதில் பின்னால் ‘அந்திமாலைச் சிறப்புச்செய் காதையில் வருகிறது.

“நீங்கள் ஒரு நண்பர் வீட்டுக்கு போகும்போது அவர் குழந்தைக்கு பிஸ்கட் வாங்கி போகிறீர்கள் அல்லவா? குழந்தைக்கு செய்வது பெற்றோர்க்கு செய்வதுபோல. பெருங்காப்பியங்கள் பாடும்போது விநாயகருக்குத்தானே முதல் வணக்கம்; மற்றக் கடவுளருக்கு பின்னால்தான். பிள்ளையை வணங்கினால் பெற்றோரை வணங்கியதற்கு சமம்.

“சூரியன் கடலிலே மறைந்து விட்டான். பூமாதேவி தன் ஆசைநாயகனை காணாது வருந்துகிறாள். ‘கதிர்கள் எல்லாம் பரப்பி என்னை ஆள்பவனை திடீரென்று காணவில்லையே! நிலவுக்கதிர்களை விரித்து ஒளிசெய்யும் என் செல்வன் சந்திரனையும் காண்கிலேனே!’ என்று நிலமடந்தை புலம்புகிறாள்.

“பூமியை அரசியாகவும், சூரியனை அரசனாகவும், சந்திரனை அவர்கள் செல்வனாகவும் கண்ட புலவருடைய கற்பனை இது.

விரிகதிர் பரப்பி, உலகம் முழுதாண்ட ஒருதனித் திகிரி உரவோன் காணேன்; அங்கண் வானத்து, அணிநிலா விரிக்கும் திங்கள் அம் செல்வன் யாண்டுளன் கொல்?

“இந்தக் கண்ணோட்டத்தில் பார்த்தால் ‘திங்களைப் போற்றுதல்?’ முதலடியாக வந்தது பெரிய குற்றமாகத் தெரியாது. எமக்கு முன் வந்துபாடி வைத்துப் போன முனிவர்கள். தியானத்தில் இருந்துவிட்டு பாடியவை இவை. ஒவ்வொரு வார்த்தையையும் ஆழ்ந்து சிந்தித்த பின்தான் அவர்கள் பாடலை இயற்றினார்கள்” என்றார்.

செல்லப்பாவின் புலமையில் எனக்கு ஏற்பட்ட சந்தேகத்துக்கு நான் எனக்குள் மன்னிப்புக் கேட்டுக் கொண்டேன்.

‘சமறி’ வாழ்க்கை எனக்கு புதுமையாகவும், வசதியாகவும் இருந்தது. சமைத்துப் போட ஒரு நல்ல சமையல்காரர் இருந்தார்; வீட்டைக் கூட்டி சுத்தமாக வைப்பதற்கு ஒரு மனுசி வந்து போகும்; ஞாயிறு தோறும் சலவைக்காரர் வருவார். எல்லாமாக அந்த சமறியில் எட்டுப் பேர் குடியிருந்தார்கள். மாதமுடிவில் கணக்குப்பண்ணி செலவை எட்டில் ஒரு பங்காக பிரித்துக் கொள்வோம். எல்லோருமே மணமுடித்த பேர்வழிகள். சிலர் மனைவியை இழந்தவர்கள்; சிலர் ஓய்வெடுத்தவர்கள்; சிலர் பிள்ளைகளின் படிப்புக்காக குடும்பத்தை பிரிந்து வந்தவர்கள்.

அங்கே பிரதானமாக மூன்று ‘குரூப்கள்’ இருந்தன. கடுதாசி சிளையாடி. தண்ணி அடிப்பதை தலையாய பொழுதுபோக்காகக் கொண்டது ஒன்று; அடுத்து, அலுவலகத்தில் ஓவர் டைம் செய்து வீட்டிலே வந்து நித்திரை கொண்டு தீர்க்கும் கும்பல். இது தொல்லையில்லாத, சத்தமேயில்லாத குரூப். மூன்றாவது குழுவில்தான் செல்லப்பாவும், சண்முகமும் நானும் அடங்குவோம். படங்கள் பார்ப்பது, சஞ்சிகைகள், புத்தகங்கள் படிப்பது, இலக்கிய சர்ச்சை இப்படியாக எங்கள் பொழுது போகும்.

அடுத்து வந்த ஞாயிறு ஒன்றில் சமையலறை அல்லோல கல்லோலப்பட்டது. சண்முகம் சமையற்காரனை அனுப்பிவிட்டு தானே கருவாட்டுக்கறி சமைப்பதற்கான ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்தார். இப்படி அடிக்கடி அங்கே சமையலறை ஆட்சி மாறும். சுதுமலையாருடைய முறைப்படி கருவாட்டுக்கறி வைப்பதில் இவர் ஒரு விண்ணர். கருவாட்டை நீளநீளமாக வெட்டி எண்ணெய்ச் சட்டியில் போட்டு ‘தீய்ச்சுக்’ கொண்டிருந்தார்.

கல்லோயா சாராயம் ஒரு ‘பெக்’ அடித்திருந்ததினால் ஒரு சாண் உயரத்தில் மிதந்து கொண்டிருந்தார். எனக்கு கனநாளாக கேட்கவேணும் என்றிருந்த ‘அந்த விஷயத்தை’ கேட்பதற்கு இது நல்ல சந்தர்ப்பம் போல பட்டது.

நாங்கள் படிக்கும்போது நாகலிங்க மாஸ்டர் தான் எங்களுக்கு ஆங்கிலம் எடுத்தவர். நேற்றுத்தான் சிவதனுசை முறித்தவர் போன்ற தோற்றம். விலத்தி, விலதிதிதான் நடப்பார். எங்கள் கிளாஸ’ல் தங்கரத்தினம் என்று ஒரு பெட்டை. நெருப்பில் சுட்ட ராசவள்ளிக் கிழங்குபோல் சிவப்பாய் இருப்பாள். எந்த நேரமும் பசலை நோய் வாட்டும் கண்கள். சண்முகத்துக்கு அப்ப காதல் செய்யும் வயசு. சும்மா இருப்பாரா? இரவும் பகலும் கண்விழித்து அவளுக்கு ஒரு காதல் வாசகம் எழுதினார். சமயம் வரும்போது கொடுப்பதற்காக ‘Tale of Two Cities` புத்தகத்தின் கடைசி ஒற்றையில் ஒளித்துவைத்திருந்தார். அன்றைக்கென்று பார்த்து இவருடைய புத்தகத்தை வாங்கி பரடம் எடுத்தார் நாகலிங்க மாஸ்டர். இவருடைய காதலின் ஆழத்தையும் ஆங்கில விசாலத்தையும் காட்டுவதற்காக தீட்டப்பட்ட அந்தக் கடிதம் சமய சந்தர்ப்பம் தெரியாமல் மாஸ்டரின் காலடியில் விழுந்தது.

My dear Thangaratinam, When your father and mother went to see saparam (சப்பரம்) tonight I will come to your house.

இவ்வளவுதான் கடிதத்தின் வாசகம். மாஸ்டருக்கு கோபம் கட்டுக்கடங்காமல் வந்தவிட்டது. நுனியிலே சுட்டு பதப்படுத்தப்பட்ட துவரந்தடியை எடுத்து விளாசத் தொடங்கினார். அவர் அடிக்கும் போது “இங்கலீஸ’ல் எழுதுவியா? இங்கிலீஸ’ல் எழுதுவியா?” என்று சொல்லிச் சொல்லித்தான் அடித்தார். பார்க்க பாவமாயிருந்தது. பெட்டைக்கு முன்னால் அடி வாங்குவது எவ்வளவு அவமானம்! அந்தப் பள்ளிக்கூடத்தில் இந்த Tale of Two Lovers கொஞ்ச காலமாக மூலை முடுக்கெல்லாம் இழுபறிப்பட்டது.

அந்த விவகாரத்தின் முடிவு என்ன? அதைப்பற்றித்தான் கேட்பதற்கு நான் ‘சுழன்று, சுழன்று’ வந்து கொண்டிருந்தேன். நான் துணிவை வரவழைத்து அவரைக் கேட்டபோது, “தம்பி, சிவப்பு பெட்டையளை நம்பக்கூடாது; அவள் சும்மா எனக்கு போக்கு காட்டினவள். பிறகு ஒரு சப்இன்ஸ்பெக்டரை முடிச்சுக்கொண்டு ஓடிப் போட்டாள்” என்று கதைக்கு முத்தாய்ப்பு வைத்தார்.

யாழ்ப்பாணத்தில் சமையலறையை ஆண் பிள்ளைகள் அண்ட முடியாது. சண்முகம் என்னவென்றால் கை தேர்ந்த பரிசாரகனைப்போல சமைத்து வைத்திருந்தார். அந்த மணத்துடன் அரைப்பானை சோறு சாப்பிடலாம். கருவாட்டை பல்லிலே கடித்து இழுத்து ரசித்தபோது நாலாவது பரிமாணத்துக்கு ஆளைத் தூக்கிப் போனது. ‘எங்கே இப்படி வைக்கக்கற்றுக் கொண்டார்?’ என்று கேட்கத் தோன்றியது. சித்திரகூட மலையில் இலக்குமணன் தன்னந்தனியாக கட்டிய பர்ணசாலையை பார்த்த ராமன் ‘என்று கற்றனை நீ இதுபோல்? என்று கட்டி அணைத்து அழுதார் அல்லவா? அதுபோல் சண்முகத்தை கட்டி அணைக்கத்தான் தோன்றியது. அவர் பலூன்போல மிதந்து கொண்டிருந்த படியால் அந்த எண்ணத்தை நான் கைவிட வேண்டி வந்தது.

சாப்பிடும்போது வழக்கம்போல செல்லப்பா வந்து கலந்து கொண்டார். சாப்பாடோ நல்ல உறைப்பு. சண்முகம் சிறிது தலையை ஆட்டியபடி, கண்களிலே நீர் ஓட, சாப்பிட்டுக் கொண்டிருந்தார். தங்கரத்தினத்தன் ஞாபகம் வந்ததோ? என்னவோ? அப்படிச் சாப்பிட்டவர் சடுதியாக செல்லப்பாவின் பக்கம் திரும்பினார்.

சண்முகத்துக்கு சிலப்பதிகாரப் புத்தகத்தின் அட்டைகூட எப்படி இருக்கும் என்று தெரியாது; ஆனால் எங்கள் வாக்குவாதங்களில் உற்சாகமாக ஆலவட்டம் பிடித்து, ‘சிரித்துக் கொடுத்து’ கதைக்கு சுவை சேர்ப்பதுதான் அவருடைய பங்கு. சண்முகம் வாய் திறந்தால் அநேகமாக அது செல்லப்பாவை žண்டுவதற்காகத்தான் இருக்கும். கருவாட்டைக் கடிச்சு இழுத்துக்கொண்டு செல்லப்பாவை நோக்கி ஒரு கேள்விக் கணை தொடுத்தார். சண்முகம், நான் சுவாரஸ்யமாகப் பார்த்துக் கொண்டிருந்தேன்.

“ஏன் ஐஸே! சிலப்பதிகாரத்தில் கோவலன், கண்ணகியெல்லாம் கருவாடு சாப்பிட்டிருப்பினமோ?” என்று துருவினார்.

செல்லப்பா சிரித்துவிட்டு பேசாமல் இருந்துவிடுவார் என்றுதான் நான் நினைத்தேன். ஆனால் அவர் வாயிலிருந்து கடைசி கருவாட்டுத்துண்டை சப்பி விழுங்கிவிட்டு, தாடையைத் தடவி, புருவத்தை நெரித்து, சண்முகம் கேட்ட கேள்விக்கு žரியஸாக பதில் சொல்லத் தொடங்கினார். கதை கேட்பதற்கு அவருக்கு முன்னால் ஆட்கள் இருந்தால் அவர் அவ்வளவு சுலபத்தில் அந்த சான்ஸை இழக்க சம்மதிப்பாரா?

“அரச வம்சத்தினர் முறையாக வேட்டையாடியதை உண்பது தர்மம் என்று வாழ்மீகியே கூறியிருக்கிறார். சிலப்பதிகாரம், வணிக குலத்தின் சிறப்பை சிதிதரிக்க எழுந்த முதல் நூல். இதிலே கானல் வரியிலே கடற்கரையில் காயப்போட்ட கருவாட்டை பறவைகள் கொத்தாமல் அழகிய பெண்கள் காத்துக்கொண்டு நின்றார்கள் என்று வருகிறது. கருவாட்டை விருப்பமுடன் தின்பவர்கள் அப்போது நிறைய இருந்திருக்கிறார்கள். ஆனால் கோவலன் உண்டானா என்பது தெரியவில்லை? அவன் மதுரைக்கு போய் கொலை படுமுன் கண்ணகி கையால் உண்ட கடைசி உணவைப் பற்றி சிலப்பதிகாரம் அழகுடன் வர்ணிக்கிறது.

“‘குமரி வாழையின் குருத்தகம் விரித்து’ கண்ணகியானவள் கோவலனுக்கு உணவு பரிமாறுகிறாள். என்ன சாப்பாடு?

கோளிப் பாகல், கொழுங்கனித் திரள்காய் வாள்வரிக் கொடுங்காய், மாதுளம் பசுங்காய் மாவின் கனியொடு, வாழைத் தீங்கனி

இவற்றுடன் சோறும் சமைத்து, பால் நெய் மோருடன் கோவலனுக்கு கடைசி முறையாக உணவு பரிமாறுகிறாள், கண்ணகி. அந்த சாப்பாடு செரிக்குமுன்பே அவன் இறக்கப்போவது அவளுக்கு அப்போது தெரியாது.”

உருக்கமாக செல்லப்பா வர்ணித்ததைக் கேட்டபோது அவர் புலமையை வியக்காமல் இருக்க முடியவில்லை. அத்துடன் நின்றிருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்? ஆனால் அதற்கு அடுத்து வந்த ஞாயிற்றுக்கிழமைகளில் ஒருநாள் தெரியாமல் போய் ஒரு கேள்வியை கேட்டு நான் எல்லாவற்றையும் கெடுத்துவிட்டேன்.

சண்முகம் என்னோடு ஒரே பள்ளியில், ஒரே வகுப்பில், ஒரு வருடம் படித்தவர். ‘கற்க கசடறக் கற்க’ என்பதற்கிணங்க ஆறஅமரப் படிக்கவேண்டும் என்ற அசைக்க முடியாத ஆசையுள்ளவர். அந்த லட்சியத்தை சாதிப்பதற்காக ஒவ்வொரு வகுப்பிலும் இரண்டு மூன்று வருடம் தங்கி தன் அறிவை விருத்தி செய்தவர். அவர் எட்டாம் வகுப்பில் ‘வாங்கு தேய்ச்சுக்’ கொண்டிருந்தபோது நான் அவரை எட்டிப் பிடித்துவிட்டேன். அப்பவோ அவர் இளந்தாரி; என்னைத் ‘தம்பி’ என்றுதான் அழைப்பார். வஞ்சகமில்லாத அவருடைய உடம்பு வத்தகப்பழம் போல ‘பொதுக், பொதுக்’ என்று இருக்கும். எந்தக் கிளாஸ”க்கு போனாலும் கடைசி வாங்கு ஆட்சியுரிமை அவருக்குத்தான்.

அவருடைய முகம் ‘பக்கீஸ்’ பெட்டி வடிவத்தில் சதுரமாக இருந்தால் ‘சப்பட்டை’ சண்முகம் என்று ஆசையாக அழைக்கப்பட்டார். இலவசமாகக் கிடைக்கும் கோயில் தளிசைக்கு உயிரையும் கொடுப்பார். சின்னப்பெடியன் கூட சேட்டைவிடும் அளவுக்கு நல்ல மனிதர்.

அவருடைய உயரத்தையும், அகலத்தையும் பார்த்து உதைபந்தாட்ட அணியில் அவரை சேர்த்துக் கொண்டார்கள். எங்களுக்கு பெருமை. எட்டாம் வகுப்பில் இருந்து எடுபட்டவர் இவர் ஒருவரே. Right full back ஆக பதவியேற்றார். பந்து வரும் போதெல்லாம் ஓங்கி, ஓங்கி அடிப்பார். காலில் பந்து பட்டுதோ எட்டுமூலைக் கொடிபோல விண் கூவிக் கொண்டு பறந்து அடுத்த கோல் போஸ்டுக்கு கிட்டப் போய் விழும். ஆனால் பத்துக்கு ஒன்பது தடவை மிஸ் பண்ணிவிடுவார்.

அந்தக் காலத்தில் இப்படி தவறி விடுவதை ‘ஓலம் விடுதல்’ என்று சொல்லுவார்கள். அது ‘தமிழ் வார்த்தையா, ஆங்கில வார்த்தையா’ என்பது எனக்கு இன்றுவரை தெரியாது. ஒருநாள் முற்றவெளியில் நடந்த ஒரு முக்கிய மாட்ச்சில் இப்படி இவர் ‘காலைத் தூக்கி ஆடி’ அளவுக்கு அதிகமாக ‘ஓலம் விட்டு’ எங்களுக்கு தோல்வியைத் தேடித் தந்தார்.

அடுத்த நாள் காலை எங்கள் தமிழ் மாஸ்டர் வகுப்புக்குள் நுழைந்தார். அவருடைய சொண்டுகள் சிறியவை; அவருடைய எடுப்பான பற்களை மூட தைரியமில்லாதவை. அறமிஞ்சி கோபம் வந்தாலொழிய அடிக்க மாட்டார். அவர் வந்ததுமே என்றுமில்லாத வழக்கமாக பின்வரும் கந்தப்புராணப் பாடலை கரும்பலகையில் எழுதினார்:

நண்ணுதற் கினியாய் ஓலம்
ஞான நாயகனே ஓலம்
பண்ணவற் கிறையே ஓலம்
பரஞ்சுடர் முதலே ஓலம்

இதை எழுதிவிட்டு ‘என்ன, சண்முகம் சரிதானே?’ என்று கேட்டார். கிளாஸ் முழுக்க ‘கொல்’ என்று சிரித்தது. கொஞ்ச நாளாக அவர் ‘ஓலம் சண்முகம்’ என்று அழைக்கப்படாத ஞாபகம். காலப்போக்கில் இந்த சங்கதி மறந்து அவர் பழையபடி ‘சப்பட்டை’ சண்முகமானார்.

இது தவிர, மறக்கமுடியாத உற்ற நண்பராக நான் அவரை கருதுவதற்கு இன்னொரு காரணமும் இருந்தது. அவர்தான் முதன்முதலாக எனக்கு ‘எப்படி சோதனைக்கு படிப்பது?’ என்ற தேவரகஸ்யத்தை உபதேசித்தவர். ஒரு பெரிய அண்டாவில் சுடுநீர் நிரப்பி அதற்குள்ளே காலை வைத்து இரவு ஒரு மணி, இரண்டு மணி என்று படிப்பாராம். இந்த சூட்சுமத்தை எனக்கு மட்டுமே கூறியிருந்தார். ஆனால் இந்த வழியைப் பின்பற்றி அவர் அடைந்த வெற்றி வாகைகளை கணக்கெடுத்த நான் அதிக நாள் தொடர்ந்து இந்த முறையை அநுசரிக்கவில்லை என்றே நினைக்கிறேன்.

இப்படியாக பல விதங்களில் குருவாகவும், நண்பனாகவும் இரு நத சண்முகம் எனக்கு சமறி வாழ்க்கையின் நெளிவு சுழிவுகளை நுணுக்கமாக கற்றுத் தந்தார். சமறி வாழ்க்கையின் அநுகூலங்கள் தெரியாமல் ‘இவ்வளவு நாளும் என் வாழ்க்கையை வீணாக்கிவிட்டேன்’ என்று வருத்தப்பட்டேன். அது சொர்க்கத்துக்கு அடுத்தபடி தின்னவேலி சூத்திரக்கிணறு சுத்துவதுபோல எல்லாம் ஒரு கிரமத்துடன்தான் அங்கே நடக்கும். பிச்சுப்பிடுங்கல் இல்லை; அதிகாலைகளில் மனைவியின் சுப்ரபாதம் போன்ற நச்சரிப்பு கிடையாது. ‘தேடிச்சோறு நிதம் தின்று, பல சின்னம் சிறுக்தைகள் பேசி’ சோம்பலை வளர்ப்பதற்கு இதைவிட சொர்க்கம் பூலோகத்திலே இல்லையென்று அடித்துச் சொல்லலாம்.

இந்த மாதிரி அமைதியாகப் போகும் வாழ்க்கை, சனிக்கிழமை காலை வேளைகளில் திறை மாறிவிடும். ‘சனி நீராடு’ என்று ஓளவையார் எழுதிவைத்தது யாழ்ப்பாணத்து கோழிகளின் எண்ணிக்கை கணிசமாகக் குறையும். சைக்கிள் கரியரில் உமலைக் கட்டியபடி பெரியகடைக்கு கணவாய் வாங்கப் போகும் ஜனக்கூடங்களும் இந்த நாட்களில்தான். சமறி குடும்பத்தினர் எல்லாம் வழிய, வழிய எண்ணெய் வைத்து முழுகி தங்கள் பாரம்பரிய தர்மத்தை நிலைநாட்டுவதும் இந்தச் சனிக்கிழமைகளில்தான்.

எல்லோரும் இப்படி எண்ணெய் தேய்த்து, சுவறவிட்டு ‘தப்பு தப்பு’ என்று தப்பி நிற்கும்போது பார்த்தால் ஏதோ மல்யுத்த விளையாட்டுக்கு தயார் செய்வதுபோலத் தோன்றும். அதிலும் சண்முகம் சப்பாத்திக்கு தட்டுவதுபோல ‘தப்தப்’ என்று தப்பாமல் தட்டியவாறே இருப்பார். செல்லப்பா தப்பல் பிரியல் அல்ல; அவருடைய சித்தாந்தம் சூடுபறக்கத் தேய்ப்பது. ஆகவே அவர் இந்த நாட்களில் தேய்த்து தேய்த்து கால் இஞ்சி கட்டையாகிவிடுவார்.

சண்முகம், அச்சரக்கூட்டை அரக்கிவிட்டு, வயிற்றிலுள்ள சுருக்கங்களை இழுத்து நெளிவெடுத்து எண்ணெய் தேய்ப்பது பார்க்க அம்சமாக இருக்கும். முன்னொரு காலத்தில் ஒரு பிரம்மாண்டமான யாவாரி நல்லூரில் இருந்தாராம். அவருடைய வயிற்று மடிப்புகளை கலைத்து எண்ணெய் பூச இரண்டு பேரை வேலைக்கு அமர்த்தியிருந்தாராம். ஒருமுறை அவருடைய வயிற்று மடிப்பை குலைத்த போது தேரை ஒன்று துள்ளிப் பாய்ந்ததாம், அப்படித்தான், சண்முகம் மடிப்புகளை விரித்து விடும்போது நான் கண்களை ஆவலோடு மேயவிட்டு காத்துக் கொண்டிருப்பேன். ஆனால் இந்த அற்புதமான மத்தியான ஆர்ப்பாட்டங்கள் என்னுடைய ஒரு மடைத்தனமான கேள்வியால் ஒருநாள் சரிந்து வீழ்ந்தன.

சாலிவாகனன் என்று ஒரு பிராம்மணச் சிறுவன். சிக்கலான வழக்குகளுக்கு தீர்ப்புக் கூறுவதில் வெகு சமர்த்தன். அரசன் கைவிட்ட ஒரு கேஸை எடுத்து அதிசாமர்த்தியமாக தீர்ப்பு வழங்கி அரசனுடைய கோபத்துக்கு ஆளாகியவன்.

சாகக் கிடந்த ஒரு வைசியன் தன் நாலு பிள்ளைகளையும் அழைத்து தான் இறந்த பிறகு தன் திரவியம் எல்லாவற்றையும் தன்னுடைய கட்டில் காலின் கீழ்வைத்திருக்கும் குறிப்பின்படி பகிர்ந்து கொள்ளும்படி கூறி இறந்துவிட்டான். ஒரு கட்டில் காலின் கீழ் உமியும், ஒரு காலின் கீழ் மண்ணும், மற்றதின் கீழ் சாணமும், கடைசிக் காலின் கீழ் ஒரு பொற்காசும் இருந்ததை கண்டார்கள். இந்த குறிப்பின்படி மன்னன்வடத் தீர்ப்பு கூறு முடியவில்லை. ஆனால் சாலிவாகனன் அந்தக் குறிப்புகளை சரியாக உணர்ந்து முதல் பிள்ளைக்கு நெல்தானியமும், மற்றவனுக்கு நிலமும், அடுத்தவனுக்கு மாடுகளும், கடைசிப் பிள்ளைக்கு தங்க நகைகளுமாகப் பிரித்து கொடுக்கும்படி தீர்ப்பு வழங்கினானாம். இப்படி நீதி வழுவாத மூதாதையரைக் கொண்ட நாட்டின் வழிவந்த பாண்டியன் நெடுஞ்செழியன் செய்த காரியம் அட்டூழியமாகப் பட்டது. இதைச் சொல்லப் போய் தான் எனக்கு ஒரு பெரிய சோதனை ஏற்பட்டது.

“பாண்டியன் மன்னன் ஊடலில் இருக்கும் தேவியைத் தணிப்பதற்காக அவளுடைய அந்தப்புரம் நோக்கி வேகமாகப் போகிறான். அந்த நேரம் பார்த்து பொற்கொல்லன் வந்து சிலம்பு திருடிய கள்வனைப் பற்றிய விபரம் சொல்கிறான். அதற்கு அரசன், தன் அவசரத்தில் நிதானம் இழந்து ‘கொன்று அச்சிலம்பு கொணர்க ஈங்கு’ என்று கூறி விடுகிறான். ஓர் அரசனுடைய தலையாய கடமை நீதிவழுவாது ஆட்சி புரிவது. இங்கே அந்த நீதித்துறை அமைச்சையே வெறும் ஊர்க்காவலரிடம் கொடுத்து விடுகிறான்.

“இரண்டாவதாக, கோவலனிடமிருந்து ஊர்க்காவலர் பிடுங்கி வந்த சிலம்பை அரசியாருடைய சிலம்புடன் ஒப்பிட்டுப் பார்த்திருக்கலாம்; அரசன் செய்யவில்லை. ஓசையை ஒத்துப் பார்த்திருக்கலாம், அதுவுமில்லை. சிலம்பின் மூட்டுவாயை திறந்து உள்ளிருக்கும் பரல்கள் முத்தா? மாணிக்கமா? என்றாவது ஆராய்ந்திருக்கலாம்; அதையும் செய்யவில்லை.

“சரி கடைசியில் நடந்ததைப் பார்ப்போம். விரித்த குழலும் கையில் தனிச்சிலம்புமாக பாண்டியன் சபையில் நுழைகிறான், கண்ணகி. அந்தச் சமயத்திலாவது அரசன் நிதானமாக கோபலனிடமிருந்து கைப்பற்றிய சிலம்பை தன் அதிகாரிகளிடம் கொடுத்து விசாரித்திருக்கலாம், இல்லையா? மாறாக இந்த ஒரே evidence ஐயும் கண்ணகியிடம் கொடுக்க அவள் சபை நடுவே அதை உடைத்து வீசுகிறாள். இதுதான் நீதி வழுவா நெறிமுறையா?” என்று நான் மூச்சு விடாமல் ஆவேசத்துடன் சொல்லி நிறுத்தினேன்.

செல்லப்பாவுக்கு கோபம் வந்து நான் இதற்கு முன்பு கண்டதில்லை. சண்முகம் எவ்வளவு žண்டினாலும் சிரித்துவிட்டு போகும் அவர் என்மீது எரிகொள்ளிபோல் பாய்ந்தார். “என்ன, நான் கடந்த இருபது வருடங்களாக இதைத்தான் படிக்கிறேன்; எழுதுகிறேன்; சிந்திக்கிறேன். நேற்று வந்த உமக்கு அவ்வளவு தெரியுமா? அரையும், குறையுமாய் படித்துவிட்டு ஆகாயத்தில் குதிக்கிறீரே? சிலப்பதிகாரத்தின் சாரம் ஒருவர் தன் ஆயுளில் படித்து அறியக் கூடியதோ?

“வழக்குரை காதையில் சொல்லியுள்ள கடைசி செய்யுளை படித்துப் பாரும். தீர விசாரிக்காம அவசரத்தில் செய்த காரியம் பாண்டியன் மனதை நெருடிக் கொண்டே இருந்தது. தான் செய்தது பெருங்குற்றம் என்பதை அவன் ஏற்கனவே உள்ளூர உணர்ந்திருந்தான். காதல் மயக்கத்தில் ஒரு கணம் அறிவிழந்து விட்டான். அது எவ்வளவு பாரதூரமான நிகழ்ச்சியாக உருவெடுத்துவிட்டது. ‘ஒரு பெண் விரித்த கூந்தலும், நீர்வழிந்த கண்களுமாக, கையில் தனிச் சிலம்புடன் வந்திருக்கிறாள்’ என்றதுமே பாண்டியனுக்கு தான் நீதி தவறியதும், தன் முடிவுகாலம் நெருங்கியதும் தெரிந்து விடுகிறது. அவன் பிராயச்சித்தமாக தன் உயிரைக் கொடுத்தான்; கோப்பெருந்தேவியை பலி கொடுத்தான்; மதுரை மாநகரத்தையே தீக்கிரையாகக் கொடுத்தான்.

“மெய்யிற் பொடியும், விரித்த கருங்குழலும் கையில் தனிச்சிலம்பும் கண்­ரும் – வையக்கோன் கண்டனவே தோற்றான், அக்காரிகைதான் சொற் செவியில் உண்டளவே தோற்றான் உயிர்.”

“இன்ன குற்றத்திற்க இன்ன தண்டனை என்று வரைமுறை உண்டு. பாண்டியன் அநுபவித்த தண்டனையோ மகா கொடியது. இதிலும் பார்க்க வேறு என்ன ஐயா வேண்டும்?” இப்படிக் கோபாவேசமாகச் சொல்லிக் கொண்டே கையை துவாலையில் வேகமாகத் துடைத்து கொண்டார். பிறகு துணியை மேசைமீது விசுக்கென்று வீசிவிட்டு போய்விட்டார்.

எனக்கு நாதாளி முள் குத்தியபோல சுருக்கென்றது. ‘ஏன்டா இப்படிக் கேட்டோம்? சாதுவான இந்த மனுசன் சாரைப் பாம்புபோல என்மேல் žறி விட்டாரே!’ என்று வருத்தப்பட்டேன்.

சண்முகத்துக்கு தெரியாத பூர்வாங்கமே கிடையாது. மனைவியையும், மகளையும் பிரிந்து செல்லப்பா சமறியில் வாழும் காரணத்தை அவர் ஒருநாள் எனக்கு விளக்கினார்.

அப்ப செல்லப்பாவின் மகளுக்கு பதினான்கு வயதிருக்குமாம். ஒரே மகள். சில்லறைக் காசைக் கிலுக்கியதுபோல எப்பவும் சிரித்தபடியே இருப்பாள். இவரை எட்டியெட்டி கொஞ்சுவாள். அவள்மேல் இவரும் அளவு கடந்த பாசம் வைத்திருந்தார். ஒருமுறை கொபம்பிலிருந்து விடுப்பில்போய் இவர் நின்றபோதுதான் அது நடந்தது. அவர்கள் வீட்டு வேலியில் ‘ஓஸோன்’ ஒட்டை போல ஓர் ஒட்டை. அந்தப் பொட்டு வழியாக அடிக்கடி போவதும் வருவதுமாக இருந்த இவருடைய மகள் பக்கத்து வீட்டுப் பெடியனோடு சிரித்துப் பேசிக் கொண்டிருந்தபோது கையும் களவுமாகப் பிடிபட்டுவிட்டாள். ஆத்திரத்தில் மதிகெட்டுப்போன செல்லப்பா அவள் கன்னத்தில அஞ்சு விரலும் பதிய அறைந்துவிட்டார். அவள் திடுக்கிட்டுவிட்டாள். பிறந்த நாளிலிலிருந்து அவளை அணைப்பதற்கு மட்டுமே தொட்ட கை அது. அவளால் நம்பவே முடியவில்லை. ‘பட்சமுள்ள அப்பா, பட்சமுள்ள அப்பா’ என்று கிழமை தவறாமல் கடிதம் எழுதியவள் பிறகு எழுதவேயில்லை; கதைக்கவுமில்லை. அவர் கொழும்பில் வீடு பார்த்த பிறகும் வர மறுத்து விட்டாள். தீர விசாரிக்காமல் அவசரப்பட்டு ஒரு குழந்தையின் நட்பை விகாரப்படுத்தியதற்காக செல்லப்பா தன்னை பெரிதும் வருத்திக் கொண்டார்.

சிலப்பதிகாரத்தை மட்டுமே நெங்சிலே சுமக்கிறார் என்று நான் நினைத்திருந்த செல்லப்பா இப்படி ஒரு பாரத்தையும் தாங்குகிறார் என்ற விஷயம் எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. கன்னத்திலே ஒரு தட்டு தட்டியதற்காக ஐந்து வருடங்களாகியும் அவள் கதைக்கவில்லை. எவ்வளவு பெரிய தண்டனை! அப்போதுதான் இனிமேல் எங்கள் சம்பாஷணைகளில் ‘சிலப்பதிகாரம்’ தவறியும் புகுந்துவிடாமல் பார்க்க வேண்டுமென்று நான் சங்கல்பம் செய்துகொண்டேன்.

யேசு ஆணவர் கடைசி உணவு அருந்தியபின் தன் பிரதம žடரான பீட்டரைப் பார்த்து “என் அன்புக்குரியவனே, இன்றிரவு சேவல் கூவுமுன் நீ என்னை மூன்றுதரம் மறுதலிப்பாய்” என்று கூறினார். பீட்டர் “அது நடக்காத காரியம்” என்று சங்கல்பம் செய்து கொண்டார். ஆனால் யேசுபிரான் உரைத்த பிரகாரம் பீட்டர் மூன்றுதரம் மறுதலிக்க வேண்டி வந்தது அல்லவா?

அதுமாதிரி இந்த விஷயத்திலும் நான் எடுத்த சங்கல்பம் விரைவிலேயே தவிடு பொடியாகியது. ஆனால் குற்றவாளி நான் அல்ல.

இந்த சொற்ப காலத்தில் கிடைத்த அற்புதமான சிநேகிதத்தை அநியாயமாக இழப்பது எனக்கு வருத்தமாக இருந்தது. அவர் செய்த குற்றத்திற்கு அவருக்கு கிடைத்த தண்டனை அதீதமானதுதான். ஆனால் நான் செய்த மகாபாபம் என்ன? என்னை அறியாமல் ஒரு மெல்லிய நரம்பை உரசிவிட்டேன் போலத் தோன்றியது. அந்தச் சம்பவத்திற்கு பிறகு செல்லப்பா திண்ணையில் காயப் போட்ட தேங்காய் மூடிபோல எட்டிப் போய்விட்டார். என்னுடன் முகம் கொடுத்து பேசவுமில்லை; பழகவுமில்லை. முன்புபோல் சத்தம்போட்டு எங்களோடு கதைப்பதற்கும், சிரிப்பதற்கும் எதோவொன்று அவரைத்தடுத்து வந்தது.

என்னுடைய பயணச்žட்டு வந்துவிட்டது, இன்னும் சில நாட்களே இருந்தன. ஒரு மத்தியான வேளை நாங்கள் மூவரும் மேசையில் வந்து அமர்ந்தோம். மற்றவர்கள் சாப்பிட்டுவிட்டு சிறு தூக்கம் போட போய்விட்டார்கள். நாங்கள் சாப்பிட்டு முடியுந்தறுவாயில் சமையல்காரன் தயிர் கொண்டுவந்து வைத்தான். தயிர் இல்லாவிட்டால் எனக்கு சாப்பிட்டது போலவே இருக்காது. எல்லோருக்கும் அது தெரிந்த விஷயம். செல்லப்பா ஒரு சிறங்கை தயிர் அள்ளி சாப்பிட்டுவிட்டு ‘ஆஹ்’ என்றார்.

வழக்கமாக சட்டியில்தான் தயிர் வரும். ஆனால் அன்று சூப்பர்மார்க்கெட்டில் வாங்கிய பிளாஸ்டிக் பெட்டியில் வந்திருந்தது. “என்ன இண்டைக்கு இப்பிடி தயிர்?” என்றேன். அதற்கு வேலைக்காரன் “இல்லை ஐயா, இது ரண்டுரூவாதான் கூட. பிளாஸ்டிக் பெட்டி பார்க்க வடிவாயிருக்கு; இப்ப எல்லாரும் இதுதான் வாங்கினம்” என்றான்.

நான் அன்று தயிரைத் தொடவில்லை. பிளாஸ்டிக் பெட்டிகளில் வரும் உணவை நான் தொடுவதில்லை என்ற விஷயம் சண்முகத்துக்கு தெரியாது. அவருக்கு மனசு வருத்தமாகிவிட்டது. “என்ன தம்பி, இதில ஏதாவது கெடுதலா?” என்றார்.

“இல்லை, முன்னேற வேண்டிய நாங்கள் இப்படி பின்னாலே போய்க் கொண்டிருக்கிறோமே! சட்டியில வாற தயிர் என்ன வடிவு? எவ்வளவு ருசி? இப்ப என்ன அவசரத்துக்கு பிளாஸ்டிக்குக்கு மாற வேண்டும்? சட்டியென்றால் தயிரிலே மிதக்கும் உபரித்தண்ணியை அது உறிஞ்சுவிடும். அதைச் செய்யும் ஏழைக் குயவனுக்கு வேலை கிடைக்கிறது. அதே சட்டியை திருப்பித் திருப்பி பாவிக்கலாம்; உடைந்து போனால் மண்ணுடன் சேர்ந்துபோகும்; சுற்றுச் சூழலுக்கு ஒருவித கெடுதலும் இல்லை.

“ஆனால், பிளாஸ்டிக் என்று வரும்போது விலை கூடுகிறது. பாவித்து விட்டு எறிந்து விடுகிறோம்; திருப்பி பாவிக்க முடியாது. இதனால் எவ்வளவு கெடுதல் தெரியுமா? இந்த பிளாஸ்டிக் சாகாவரம் பெற்றது. நூறு வருடங்கள் வரை உயிர் வாழும். இதை அழிப்பது மகா கஷ்டம் மண்ணோடு முற்றும் கலக்க நானூறு வருடங்கள் வரை பிடிக்குமாம். இதை எரித்தால் வரும் நச்சுப் புகை காற்றுமண்டலத்தில் சேர்ந்து நாசம் விளைவிக்கும். எங்களுக்கு ஏனப்பா இந்த அவசரம்?”

“பிளாஸ்டிக்கில் இவ்வளவு கெடுதலா? எனக்கு தெரியவே இல்லை, தம்பி?” என்றார் சண்முகம்.

“பூமாதேவி பொறுமையானவள். பிறந்த நாளிலிருந்து அவளுக்கு நாங்கள் ஏதாவது ஆக்கினைகள் செய்துகொண்டே இருக்கிறோம். நாம் போகுமுன் ஏதாவதொரு நல்ல காரியம் திருப்பி செய்ய வேண்டாமா? அவன் ‘செமிக்க முடியாதபடி’ நாள் ஒன்றுக்கு கோடிக்கணக்கான பிளாஸ்டிக் பைகளையும், பெட்டிகளையும் அவள்மீது திணித்தபடியே இருக்கிறோமே! எவ்வளவு நாளைக்குத்தான் அவள் பொறுக்க முடியும்?”

“அப்ப கடலில் போடமுடியாதா?”

“அங்கேதான் வந்தது வினை. இந்த பிளாஸ்டிக் சாமான்களின் முக்கால்வாசி கடைசியில் போய்ச்சேருவது கடலில்தான். சூரிய வெளிச்சத்துக்கு மின்னும் இந்த பிளாஸ்டிக் பைகளை கணவாய் என்று நினைத்து கடல் ஆமைகள் விழுங்கிவிடும். அது தொண்டையில் சிக்கி எத்தனையோ கடல் ஆமைகள் மரணம். அதைச் சாப்பிடும் மீண்களும் அதே கதிதான். நாரை, பெலிகன் போன்ற பறவைகளம் இதிலிருந்து தப்புவதில்லை.

“முந்தியெல்லாம் நாங்கள் சாக்கு, உமல், கடகப்பெட்டி என்று பயன்படுத்துவோம். திருப்பி திருப்பி அவற்றை பாவித்து முடிந்தவுடன் தூக்கி எறிந்துவிடுவோம். இவையெல்லாம் சுற்றுச்சூழலுக்கு ஒருவித கெடுதலுமின்றி மண்ணோடு கலந்துவிடும். ஐம்பது வருடத்துக்கு முன்பு இந்த பிளாஸ்டிக் அரக்கனின் கொடுமையில்லையே?”

“அப்ப பிளாஸ்டிக்கே தேவையில்லையென்று சொல்லுறீரோ?”

“அப்படியில்லை. ஆனால் தவிர்க்க முடியாதென்றால் சுழல்பாவிப்பு (recycline) முறையையாவது கடைப்பிடிக்கலாமே? அதாவது, ஒருமுறை பாவித்துவிட்டு தூக்கி எறியாமல் நாலு முறையாவது திருப்பித் திருப்பி பாவிக்கலாமே? பூமாதேவியின் பாரம் நாலு மடங்கு குறைந்து விடுமே?”

நாங்கள் இப்படி காரசாரமாக கதைத்துக் கொண்டிருந்தபோது, செல்லப்பா ஒன்றுமே சொல்லாமல் வெற்றிலையைக் குதப்பியவாறு அவதானித்த படியே வந்தார். அவர் சம்பாஷணையில் தலையை நுழைக்கவில்லை. அப்ப பார்த்து இந்த வம்பு, சண்முகம், அவரை எங்கள் சண்டையில் இழுக்கும் முயற்சியாக, “ஏன் செல்லப்பா, சிலப்பதிகாரத்தில் இந்த சுழல்பாவிப்பு முறை சொல்லியிருக்கோ?” என்று நோண்டினார்.

உடனே செல்லப்பா தியானத்தில் இருந்து திடுக்கிட்டு விழித்து “சிலப்பதிகாரத்தில் சொல்லாததே இல்லை; என்ன சுழல்பாவிப்பு முறைதானே? அதாவது ஒரே பொருளை திருப்பித் திருப்பி பாவிப்பது, அப்படித்தானே!” என்றார்.

“ஓமோம்” என்றார் சண்முகம்.

நான் அப்ப மூன்றாம் வகுப்பு என்று ஞாபகம். எங்கள் கணக்கு வாத்தியாரை எல்லாரும் K P என்று தான் கூப்பிடுவார்கள். அவருடைய பெயர் ஒருவருக்கம் தெரியாது. கிட்ணன் அவருடைய பெயர் ‘குறுக்கால போவான்’ என்று சொன்னதை நான் கனகாலம் நம்பிக்கொண்டு இருந்தேன். ‘கேப்பி’ கணக்கு கேட்கும்போதே ஆரவாரத்துடன் மோதிரத்தை சுழட்டி மற்றக் கை விரலில் போட்டு ஆயத்தங்கள் செய்வார். எங்கள் கண்கள் அவருடைய கைகளில் அசைவையே ஆராய்ந்து கொண்டிருக்கும். அவர் குட்டினால் ‘ஓரு பட்டை தண்ணி நிக்கும்’ என்று அந்தக் காலத்திலேயே புகழ்கொடி நாட்டினவர்.

‘எட்டும் அஞ்சும் எவ்வளவு?’ என்று கேட்டுவிட்டு மோதிரத்தை தடவிக்கொண்டு நிற்பார். எங்கள் கண்கள் அலைபாயும். ‘எட்டும் அஞ்சோ? எட்டும் அஞ்சோ?’ என்று மூச்சு விடுவதற்கு அவகாசம் எடுத்துக்கொண்டு, கைவிரல்களை ரகஸ்யமாக விரித்து, ‘விடை பத்துக்குமேல் வரும் போலிருக்கே’ என்று விசனப்பட்டு, கால்விரல்களையும் துணைக்கு கூப்பிட்டு, ஒரு கண்ணை விரல்களிலேயும், மறு கண்ணை வாத்தியாரின் மோதிரத்திலேயும் அலைய விட்டு, தவித்து….

ஆனால் மூச்சு விடுவதற்குகூட அவகாசம் எடுக்காமல், இமைவெட்டும் நேரத்தில் சாவதானமாக கதையை சொல்ல ஆரம்பித்தார் செல்லப்பா. அதுதான் அவருடைய விசேஷம். யோசிப்பதற்கு என்று நேரம் எடுப்பதே கிடையாது.

“கோவலனும் கண்ணகியும் கவுந்தியடிகளும் சூரியனுடைய வெப்பத்தைத் தவிர்க்க இரவு நேரத்தில் மதுரையை நோக்கி நடக்கிறார்கள். விடிந்ததும், கோவலன் மட்டும் தண்­ர் வேண்டி ஒரு நீர் நிலையை தேடிச் செல்கிறான். அப்போது மாதவியிடமிருந்து ஓர் ஓலை€யை கொண்டுவந்து கோவலனிடம் தருகின்றான், கௌசிகன். மாதவியிடமிருந்து வந்த அந்த ஒலையை தவிப்புடன் வாங்குகிறான் கோவலன்:

“அடிகளே, உம்முன்னே நான் பணிகின்றேன், என் சொற்கள் தெளிவற்றதாயினும் என்னில் மனமிரங்க வேண்டும். முதுமைப் பிராயம் அடைந்த இருவரு ககு தொண்டு செய்ய மறந்தது பிழையன்றோ? உயர்கடிப் பிறந்த மனையாட்டியுடன் நள்ளிரவில் ஊரைவிட்டுப் போயினதும் பிழையன்றோ? என் தவறு யாதென்று தெரியாது நெஞ்சம் செயலிழந்தேன்; பொய்மையின்றி உண்மை காண்பவரே, உம்மை போற்றுகின்றேன்.

“அடிகள் முன்னர் யான் அடி வீழ்ந்தேன்; வடியாக்கிளவி மனக்கொளல் வேண்டும்; குரவர் பணி அன்றியும் குலப்பிறப்பு ஆட்டியோடு இரவிடைக் கழிதற்கு, என் பிழைப்பு அறியாது; கையறு நெஞ்சம் கடியல் வேண்டும்; பொய்தீர் காட்சிப் புரையோய், போற்றி!

“கோவலன் ஒலையைப் படிக்கின்றான்; மாதவியிடம் அவனுடைய மனம் அலைக்கழிக்கின்றது. பெற்றோர்களை நினைந்து வருந்துகிறான். பிறகு கௌசிகனைப் பார்த்து “இந்த ஓலையில் உள்ள வாசகம் என் பெற்றோருக்கு நான் எழுதியது போலவும் பொருந்துகிறது; ஆகவே இதை எடுத்துப்போய் என் பெற்றோரிடம் சேர்த்து அவர்கள் துயரை தீர்ப்பாயாக” என்று கூறி அதே ஓலையை திருப்பி கௌசிகனிடமே கொடுக்கின்றான்.”

“அப்ப பார்த்தீரா, 1800 வருடங்களுக்கு முன்னாலேயே ‘சுழல்பாவிப்பு’ முறை வழக்கத்தில் இருந்திருக்கிறது” என்று சொல்லிவிட்டு செல்லப்பா கெக்கட்டம் விட்டு சிரிக்கத் தொடங்கினார். அதை தொடர்ந்து நானும் பலமாகச் சிரித்தேன். சிறிது நேரம் திகைத்தபடி இருவரையும் மாறி மாறி பார்த்துவிட்டு சண்முகமும் எங்கள் சிரிப்பில் கலந்துகொண்டார்.

ஆனால் நாங்கள் ஒவ்வொருவரும் வெவ்வேறு காரணங்களுக்காக சிரித்தோம்.

அப்படித்தான் எனக்குத் தோன்றியது.

– 1995, வம்ச விருத்தி, மித்ரா வெளியீடு, முதல் பதிப்பு 1996

– அ.முத்துலிங்கம் கதைகள், முதற் பதிப்பு: டிசம்பர் 2003, தமிழினி, சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *