Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

சிஸ்டர் கருமி

 

எனக்குத் தெரிந்து சகாய மேரி ஜெனிட்டா என அவளை யாரும் அழைத்ததேயில்லை. தாத்தா சகாயம், இறந்துபோன அத்தை மேரி. கடலோரக் கவிதை ரேகா ‘ஜெனிஃபர்’ என ‘பேருண்மைகளைப்’ பொருத்தி அவளுக்குப் பெயர் வைத்திருந்தார்கள். ஆனாலும் கருமி என்பதே அவள் பெயராய் நிலைத்தது.

பிறந்ததும் அவள் கையிலெடுத்துச் சொன்னாள் பாட்டி ‘கருமி’. கண்களைச் சுருக்கி அவளைப் பார்த்து சிரித்தது குழந்தை.

உங்கள் ஊரில் எப்படியோ தெரியவில்லை எங்கள் ஊரில் கறுப்பாயிருக்கும் பெண்களை கருமி என்பது வழக்கம். தெருவில் நான்கு வீட்டுக்கு ஒரு கருமி இருப்பதுண்டு. ஆனால் ஊருக்கெல்லாம் தெரிந்த கருமி இவள் மட்டும்தான்.

எஸ்தர், க்ளெமண்ட் தம்பதிக்கு மூன்றாவதாயும் பெண் குழந்தை பிறந்த ‘சோகத்தை’ விட அது கருப்பாய் பிறந்ததைத்தான் ஊரில் பேசிக் கொண்டார்கள். ‘எல கிளமென்சி புள்ளையப் பாத்தியா. கர்சீப்ப எடுத்து தொடச்சா கர்ச்சீப் கருப்பாயிரும் பாத்துக்க.’ க்ளமெண்ட் எனும் ஆங்கிலப் பெயர் மீனவர்த்தமிழில் கிளமென்சி ஆயிருந்தது. ‘முந்தா நேத்து கரண்ட் போனப்ப கொழந்தைய வீடு பூரா தேடியிருக்கா. இருட்டுல தெரியுத மாறியா(மாதிரியா) இருக்கு அந்த புள்ள.’

இன்னும் கருமியின் கருத்த குழந்தைப் பருவம் குறித்த சுவாரஸ்யக் கட்டுக் கதைகள் ஏராளம்.

க்ளெம்ட்ண்டுக்கு கருமியை மிகவும் பிடித்திருந்தது. ‘எங்க பாட்டி கலரு.’ எனப் பெருமையடித்துக் கொள்வான். அவன் பாட்டி குறித்து அவருக்கு நியாபகம் இருப்பது அவளின் நிறமும், முட்டத்தாள் எனும் அவளின் பட்டப் பெயரும், அவள் வாங்கித் தரும் ‘கிருமி’ மிட்டாய்களுந்தான். அந்த சொற்ப நியாபகங்களின் நீட்சியாய் கருமி தெரிந்தாள்.

கருமியை பார்த்த முதல் கணமே எஸ்தருக்குத் தோன்றியது ஒன்றுதான். ‘இந்தக் கருப்பிய எப்டி கட்டி குடுக்கப் போறோம்?’. ஏற்கனவே கொஞ்சம் கலராய் பிறந்திருக்கும் இரு ‘பொட்ட’ பிள்ளைகளையும் கரை சேர்ப்பது குறித்தான கவலைகளுக்கே விடிவில்லை. ‘சுகர் வந்ததுலேந்து மனுசன் எப்போதோதான் கடலுக்குப் போறதும்.’

இடது கால் கட்டையாய் பிறந்த தன் தங்கை கல்யாணத்துக்கு விலை போன தென்னந்தோப்பில் பகுதி தனக்கு வரவேண்டும் என கிளமெண்ட் போட்ட சண்டையும் அது முதல் விலகிப் போன பிறந்த வீட்டுச் சொந்தமும் அவளுக்கு நினைவுக்கு வந்து போயின.

கருமி மூன்றாம் வகுப்பில் சேர்ந்ததும் வெள்ளைச் சீருடை அணிந்து விட்டு வந்து நின்றபோது எஸ்தருக்கு கருமியின் நிறம் இன்னும் உறுத்தியது.

“சகாயம்.” எஸ்தர் கருமியை பெயர் சொல்லி அழைத்தால் முக்கியமாக ஏதோ சொல்லப் போகிறாள் அல்லது ஓங்கி முதுகில் அடிக்கப் போகிறாள் என அர்த்தம். “மக்கா. நீ பொறக்குமுன்னே நான் கடவுள்ட ஒரு சத்தியம் செஞ்சு குடுத்தேன். எனக்கு ஆம்ப்ள பையனந்தான் வேணும். அப்டி பொறந்தா அவன சாமியாருக்கு அனுப்பிடுதேன்னு.” அம்மா அழுதுவிடுவாளோ என பார்த்துக் கொண்டிருந்தாள் கருமி. “பெறவு நீ பொறந்த. அம்மா ஒன்னத்தான் சிஸ்டரா அனுப்பணும்னு ஆசப் படுதேன். ஏசுவுக்கு ஒரு புள்ளையக் குடுக்கணும்னு..” கண்களைத் துடைத்தாள் எஸ்தர்.

‘நீ பெருசாயி என்னவாகப் போற’ எனும் கேள்விக்கு அன்றிலிருந்து அவளிடம் வந்த ஒரே பதில் “நான் சிஸ்டராகப் போறேன்” என்பதுதான். அதன்பின் கருமி எனும் பெயர் மாறி ‘சிஸ்டர் கருமி’ ஆனது.

கருமிக்கு தன் நிறம் குறித்த எந்த கவலையும் இருந்ததேயில்லை. அவளை கருமி என பிறர் அழைப்பதற்கும் முட்டத்தா பேத்தி எனச் சொல்வதற்கும் எந்த வேறுபாட்டையும் அவள் உணர்ந்திருக்கவில்லை. தன் அக்கா இருவரையும் நோட்டமிடும் பையன்கள் யாரும் தன்னைப் பார்ப்பதில்லை என்பதில் கவலையில்லை. யாரும் தன்னைத் தீண்ட மாட்டார்கள் என்பதில் தைரியமே உருவாகியிருந்தது.

அவளுக்கு கோபம் வந்தால் கிளமெண்ட்டே அடங்கிப் போய் விடுவார். “எக்கி.. சிஸ்டராப் போறேன்னு சொல்லுத இந்தக் கோவப் படுத?” என்பதைத் தவிர வேறெதுவும் சொல்வதில்லை அவர்.

“நேத்து சிஸ்டர் கருமி தமிழ் வாத்தியார்ட்ட சண்ட போட்டுருக்கா.” பக்கத்து வீட்டு ஸ்டெல்லா டீச்சர் எஸ்தரிடம் ஒருநாள் புகார் தெரிவித்தார்.

“எதுக்கு?”

“ஏதோ ஆகு பெயர்ணா என்னண்ணு சொல்லதுக்கு இவள எக்சாம்பிளா யூஸ் பண்ணிட்டாராம். கிளாஸ்ல எல்லாரும் சிரிச்சுட்டாவு. அவரு சட்டையில இங்க் தெளிச்சிருக்கா. அவருக்கா அழவா சிரிக்கவான்ணு தெரில. ஸ்டாஃப் ரூம்ல வந்து என்னாண்ணு கேட்டா ‘சிஸ்டர் கருமி’ சிஸ்டராப் போனா போப்பாணடவருக்கு மதிப்பிருக்காதுன்னு சொல்லி சிரிக்காரு மனுசன்.”

வீட்டுக்குப் போய் கருமியை அழைத்தாள் எஸ்தர் “சகாயம்..”

கருமி ஐந்தாவது படிக்கும்போது பள்ளி விட்டு வீடு வந்ததும் அங்கே ஒரு சிஸ்டர் எஸ்தருடன் பேசிக்கொண்டிருந்தாள்.

“இவதான் சிஸ்டர்.” எஸ்தர் அறிமுகப் படுத்தினாள். கருமி கைகள் குவித்தாள். வந்திருந்த சிஸ்டர் கருமியை பார்த்தார் பின்னர் அவளின் அக்காள் இருவரையும் பார்த்தார். இரண்டு நிமிடமாய் திரும்பித் திரும்பி மூவரையும் பார்த்துவிட்டு கருமியை அருகில் கூப்பிட்டார்.

“வாம்மா. பேரென்ன?”

“கருமி.”

சிஸ்டர் புன்னகைத்தார்.

“ஞான ஸ்னானப் பேரு?”

“சகாய மேரி ஜெனிட்டா.”

“நீ சிஸ்டராப் போகணுமா?”

“ஆமா. ”

“எதுக்கு.”

“அம்மா சொன்னாங்க.”

எஸ்தர் சங்கடமாய் சிரித்தாள்.

“சிஸ்டராப் போனா என்ன செய்வ?”

“ம்..ப்ரேயர்.”

“அப்புறம்.”

“ப்ரேயர்தான் செய்வேன்.”

“எப்பவுமே ப்ரேயர்தானா?”

“இல்ல. கோவில்ல பூ ஜாடில பூ வைப்பேன். நன்ம குடுப்பேன். கோவில் டெக்கரேசன் பண்ணுவேன்.” எஸ்தர் தந்த காப்பியை குடித்துவிட்டு. வீட்டில் அலங்காரமில்லாமல், மெழுகுதிரியோ, அகர் பத்தியோ மின்னும் எலக்ட்ரிக் விளக்கோ ஏற்றிவைக்கப்ப இயேசுவின் படத்தை நோட்டம் விட்டுவிட்டு சென்றார் சிஸ்டர்.

அதன் பின்னர் எஸ்தர் கருமியிடம் சிஸ்டராவது குறித்து அதிகம் பேசுவதில்லை.

கருமி எட்டாவது படிக்கும்போது கத்தாரில் மீன் பிடிக்கும் வேலைக்காய் சென்றார் க்ளமெண்ட். அடுத்த சில வருடங்களில் ஓட்டைப் பிரித்து மச்சி கட்டிவிட்டு முதல் மகளுக்கு கல்யாணம் முடித்து வைத்தார். எஸ்தர் சீட்டு நடத்தி பணத்தை இன்னும் பெருக்கினாள்.

கருமி சென்னை சென்று படித்தாள். இரண்டாமவளுக்கு மெட்ராசில் மாப்பிள்ளை. என் கையில் இப்போது இருப்பது நாளை திருநிறைச் செல்வன். ஸ்டனிஸ்லாஸ் B.E., M.B.A (Virginia USA) க்கும் திரு நிறைச் செல்வி. சகாய மேரி ஜெனிட்டா M.A., விற்கும் நடக்கவிருக்கும் திருமணத்திற்கான அழைப்பிதழ்.

கருமியின் ‘சிஸ்டர்’ கனவுகள் அவளின் பழைய ஒட்டை ஓட்டு வீட்டில் எங்காவது ஒரு மூலையில் கிடக்கலாம்.

- டிசம்பர் 2008 

தொடர்புடைய சிறுகதைகள்
"ஹெலோ வா.. வா." டி.வியை அணைத்துவிட்டு என்பக்கம் திரும்பினார் வாத்தியார். வாத்தியாருக்கு 40 வயதிருக்கும். நாகர்கோவில் காலேஜ் ப்ரொஃபெசர். ஊர்ல எவனுக்குமே ப்ரொபசர்னு சொல்லத் தெரியல. எடுத்துச் சொன்னா "அவரு பாடந்தானே எடுக்காரு?"ண்ணு சண்டைக்கு வருவாங்க. 'விரிவுரையாளர்' பரவலாக இன்னும் பல காலம் ...
மேலும் கதையை படிக்க...
பருத்த தலை. குரங்கையொத்த முகவடிவு. நீள விரல்கள். உடலெங்கும் முடி. குரூரப் பார்வை. அருங்காட்சியகங்களில் நீங்கள் பார்த்திருக்கலாம் அந்தக் குரங்கு மனிதர்களின் வடிவத்தை, அவை அசையாமல் நின்றுகொண்டிருப்பதை. மனித பரிணாமப் படிக்கட்டில் கடைசியிலிருந்து இரண்டாம் ஆள். அவனும் அவனது சுற்றமும் வாழ்ந்து ...
மேலும் கதையை படிக்க...
நாயர் டீ கடையில் கூட்டம் அவ்வளவாக இல்லை. நண்பர்களை தேடினேன். லாங்டன் மட்டும்தான் கிடைத்தான். அமெரிக்கன். இந்தியாவைத் தெரிந்துகொள்வதில் அதிகம் பிரியம் காட்டுவான். கோப்பில் பழைய தமிழ் படங்களை பார்த்துவிட்டு எனக்கே தெரியாத விஷயங்களை அலசுவான். சிலநேரம் எரிச்சலூட்டுமளவுக்கு கேள்வி கேட்பான். ...
மேலும் கதையை படிக்க...
'மதுரை 20 கி.மீ'. ஊரை விட்டு வெகுதூரம் வந்துவிட்டதை உணர்ந்தான் செல்வம். காலையில் வாங்கிய அடி இன்னும் முதுகில் வலித்தது. அல்லது வெறும் தோன்றலா தெரியவில்லை. 'மதுரையில எறங்கி ஊருக்குத் திரும்பப் போயிரலாமா' யோசித்தான். சட்டை பாக்கெட்டில் இருந்த காசை எடுத்து ...
மேலும் கதையை படிக்க...
இந்தப் பையனுக்கு அரசாங்கமே ரெக்கமெண்டேஷன் தந்திருக்குன்னு சொல்லலாம்லியா. மாநாட்டிலிருந்து கடைசி மந்திரி விமான நிலையத்துக்கு வந்து சேர்ந்தார். காலையிலிருந்து காத்திருப்பும் தொடர் சல்யூட்களுமாய் ஏட்டு வேலுமணியின் உடலை வருத்தியிருந்தன. இன்னும் முக்கால் மணிநேரமாவது ஆகும் அவர் வீடு செல்ல. "சார். நல்லா இருக்கியளா?" குரல்கேட்டுத் திரும்பினார் வேலுமணி. "டேய் ...
மேலும் கதையை படிக்க...
மட்டுறுத்தல்
பலி
2060 தேர்தல்
செல்வம்
ஊனம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)