Warning: Cannot modify header information - headers already sent by (output started at /home/content/42/10186442/html/index.php:2) in /home/content/42/10186442/html/wp-content/themes/Clipso/functions.php on line 189
Sirukathaigal - Sirukathai - Short Stories in Tamil

கொடி(ய)ப் பருவம்

 

மார்த்தாண்டம், அந்தத் தெருவை குறுக்கும் நெடுக்குமாய், இடதுபக்கம் நடந்து வலதுபக்கம் திரும்பியுமாய், பலதடவை நடந்து விட்டாலும், இன்னும் நடையை நிறுத்தவில்லை. பனியன் போடாததால், அவரது வெள்ளைச் சட்டை வேர்வை பெருக்கில் முதுகில் சரிகைபோல் ஒட்டி, இடுப்பிற்கும் கழுத்திற்கும் இடைப்பட்ட பகுதியை கேரிபேக்கில் வைக்கப்பட்ட சதைப்பிண்டமாய் காட்டியது. பலதடவை அந்தத் தெருவை அளவெடுத்து விட்டதால், அவர் உடம்பில் துருப்பிடித்த முதுமை, கால்களை நடக்க வைக்காமல், நகர்த்திக் கொண்டிருந்தது. ஆனாலும், உடம்பை சுமக்கமுடியாமல் சுமந்தபடியே, தொடர் நடையாய் நடந்தார். அந்த குறிப்பிட்ட இடத்தருகே வரும்போது மட்டும், சிறிது நிற்பார். பல்லைக் கடித்து சாடை மாடையாய்ப் பார்ப்பார். பின்னர் அங்கே காணும் காட்சியை கண்வாங்கினாலும், மனம் வாங்க முடியாமல், முணுமுணுத்தபடியே நகருவார். கால்கள் நகர்ந்து கொண்டிருந்தாலும் சிந்தனை அலைகள், அந்த இடத்தைச் சுற்றிச் சுற்றியே வந்தன. யோசித்து யோசித்து யோசனையே ஒரு செயலாகிவிட்டது.

அந்த பச்சை மழலையை எப்படியாவது காப்பாற்றியாக வேண்டும். அந்தப் பாம்புப் பயலும் ஒரு வழியாக வேண்டும். அந்தச் சிறுமியும் சேதாரம் இல்லாமல் வழிப்படுத்தப்படவேண்டும். எப்படி என்பதுதான் பிரச்சனை. அதைக் கண்டுபிடிக்கவே இந்த நடை.

மார்த்தாண்டம், குறிப்பிட்ட அந்த இடத்தருகே வழக்கம் போல் மூச்சிளைக்க நின்றார். உள்ளே ஓரங்கட்டிப் பார்த்தார். இப்போது பார்க்க முடியாத அளவிற்கு நிலைமை மாறிவிட்டது. இவர் கண்களை மூடிக்கொண்டே சிந்தித்தார். இப்போது செயல்படவில்லையானால், எப்போதும் செயல்பட முடியாது. ஆனாலும், அவர், மனோவேகத்திற்கும், உடல் தளர்ச்சிக்கும் இடையே அல்லாடிக் கொண்டிருந்தார்.

இருபக்கமும் விதவிதமான கட்டிடங்களை, அலங்கார வேலியாகக் கொண்ட அந்தத் தெருவில், ஒரே ஒரு மொக்கையான காலி மனை… அதன் முன்பக்க காம்பெளவுண்ட் சுவர் மத்தியில் கேட் இல்லை. அதன் வாசல் வெளியில் நின்று பார்த்தால், நன்றாகவே தெரிகிறது. அரைகுறை ஆடைபோன்ற செடிகொடிகளான குட்டைப் புதர் மத்தியில், ஒரு ஆட்டோ… அதன் முன்னிருக்கையில் அலுமினிய டிபன் டப்பா… பின்னிருக்கையில், ஒரு சிறுமி. பதிமூன்று வயது இருக்கலாம். பெரியவளாகி விட்டாளோ… ஆகப்போகிறாளோ… சிறிது நேரம் வரை, அருகே இருக்கும் காக்கிச் சட்டைக்காரன் மீது குழைவாய் சாய்ந்திருந்தவள். இப்போது இருக்கையின் ஒருபுறத்து விளிம்புப் பிடியில் புத்தகப் பையை தலையணையாய் சரித்து, அதில் மல்லாக்க சரிந்து கிடக்கிறாள். அவளது நீலநிற குட்டைப் பாவாடை, மேலும் குட்டையாகிப்போனது. அவளது நிர்வாணக் கால்கள் அந்தப் பயலின் மடியில் மேலோங்கி கிடக்கின்றன. அவளது வெள்ளைச்சட்டையை பெருக்கல் குறியாய் அழுத்திய பெல்ட் துணி, முறுக்கேறி கிடக்கிறது. கழுத்தில் கட்டப்பட்ட ஊதாநிற டை சிறிது அகன்று, துuக்கு வளையம் போல் தோன்றுகிறது. இவ்வளவுக்கும், பட்டப்பகல் பதினோறு மணி…. ஆங்காங்கே ஆட்கள் நடமாட்டம்… சிலநடமாடிகள், அந்த இடத்திற்கு வந்ததும், மலைத்துப் பார்க்கிறார்கள்… சிலர் ரசித்து நெளிகிறார்கள்… பெண்களில் பெரும்பாலோர் கூனிக்குறுகி ஓடுகிறார்கள். சில மூதாட்டிகள் தலைகளில் வலிதெரியாத அளவிற்கு அடித்துக் கொள்கிறார்கள்.

மார்த்தாண்டத்திற்கு, அந்தக் காட்சி அநியாயமாகப்பட்டது. அதற்கு தடங்கல் ஏற்படுத்த வேண்டியது அவசியமாகவும் தோன்றியது. மலங்கலான பார்வை கொண்ட – அதேசமயம் கலக்கலான மேனிகொண்ட சிறுமி… உடல் தாகத்தை, காதல் தாகமாய் நினைக்கும் பாசாங்குப் பருவம்… கல்லிலும் முள்ளிலுங்கூட, படரும் கொடிய பருமான கொடிப்பருவம். முட்டாளின் சொர்க்கம் போன்ற மூடத்தனமான கற்பனையில் வாழும் பிஞ்சுப் பருவம், காயாகாமலேயே பழமாக நினைக்கும் பாழும் பருவம். ஆனால் அந்தப் பயல் அப்படியில்லை, முப்பது வயதை நெருங்கியவன்… அவனது வட்டமான முகத்தில் கண்களில் சூழ்ச்சிவலை…. உதட்டோர குறுநகை… மான்கூட்டத்தில், ஒன்றை மட்டும் தனிப்படுத்தி தாக்கும் கழுதைப்புலி போல, இந்த குட்டி மானுக்கு, ஒருவேளை ஏற்பட்டிருக்கக் கூடிய தனிமை- வெறுமையை, இவன் சாதகமாக்கி பாதகம் செய்கிறான்.

மார்த்தாண்டம், தனக்கு மட்டும் கேட்கும்படியாக பேசிக்கொண்டார். பெண்ணின் திருமண வயதை இருபத்தி ஒன்றாக வரையறை வைத்திருப்பதுபோல், ஒருபெண், காதலிப்பதற்கும் வயது வரம்பை நிச்சயிக்கணும்… பால்ய விவாகத்தை அந்தக் காலத்தில் தடை செய்தது போல், இந்தக் காலத்தில், பால்ய காதலையும் தடைசெய்ய வேண்டும்… போகட்டும். இந்தப் பெண்ணை அவள் பெற்றோரிடம் எப்படியாவது கொண்டுபோய் விடவேண்டும். தேவைப்பட்டால், அவர்களோடு சேர்ந்து, தானும் இவளுக்கு அறிவுரை சொல்லவேண்டும். ஆனால் எப்படி அவளை மீட்பது? அங்கே போய் அந்தப் பயலை ஒரு அதட்டுப் போடலாமா? போடணும்… போட்டே ஆகணும்….

மார்த்தாண்டம், அந்த ‘காலி’ மனையின் வாய்க்குள் பாதி நுழைந்து விட்டார். உடனே அந்தச் சிறுமி அலறியடித்து, படுத்தகோலத்தை, இருந்த கோலமாக்கினாள். இருக்கையில் உட்கார்ந்து அவரை எட்டிப் பார்த்தபடியே, கைகளை உதறினாள். பயத்தோடு பார்த்தாள். இவள் மேல் கைகளை இயக்கி, கண்களை எங்கோ வைத்திருந்த அந்தப் பயலை, உசுப்பிவிட்டாள். இவர் நின்ற தோரணையைக் கண்டு பயந்துபோய், அவனை முன்புறமாய்த் தள்ளி பின்புறமாய் அவன் முதுகுக்கும் இருக்கைக்கும் இடைப்பட்ட வெளியில் நெருப்புக்கோழியாய் மூழ்கிக்கொண்டாள். அவன், அவள் முதுகை தட்டிக் கொடுத்தபடியே வர்த்தையில் அடங்காத ஏச்சாய் ஒரு கத்துக் கத்தினான். ஆட்டோவில் இருந்து துள்ளிக் குதித்து தரைக்கு வந்து, மார்த்தாண்டத்தை ஒரு பார்வையும், இவளை மறுபார்வையுமாய் பார்த்தபடியே சவடாலாய் பேசினான்.

“நான். இருக்கும்போது… நீ ஏன் பயப்படுறே…? ஒன்ன காப்பாத்துறதுக்கு நான் கொலைகாரனாகூட மாறத்தயார்…”

அந்தப் பயல், மார்த்தாண்டத்தை பகைப்பார்வையாய், கராத்தே பாணியில் பார்த்தான். அவன் அளவிலேயே, அவர் செயலை அனுமானித்தான். கிழட்டுப் பயல் பங்கு கேட்க வந்திருப்பானோ…

இதற்குள், அந்தச்சிறுமியும் ஆட்டோவில் இருந்து வெளிப்பட்டு ஓடப்போனாள். பயல் அவள் கையை பிடித்து, தன் பக்கமாய் இழுத்துக் கொண்டான். அப்படியும் அவள், தனது கைகள் இரண்டையும் இறக்கைகளாய் மேலும்கீழுமாய் ஆட்டியபடியே வலையில் சிக்கிய குருவிபோல் துடித்தாள். விதவிதமான அவலக்குரல் எழுப்பினாள். இதைப்பொறுக்காத அந்தப் பயல், மார்த்தாண்டத்தை, சினிமாக் கதாநாயகன் போல் மிரட்டினான்.

‘ஏய்…. பெருசு… உனக்கு அறிவு இருக்குதா. உன் ஆசைக்கும் ஒரு அளவு வேண்டாமா? என்கிட்ட மோதாதே… மரியாதையா போயிடு… எதாவது ஏடாகூடமா கிட்டநெருங்குன… மவனே ஒரே போடுதான்… அதோட, வெளிலபோய் ஏதாவது ஏடாகூடமாச் செய்தே… நாள் குறிச்சு உதைப்பேன்… சர்த்தான் போடா…’

ஒருகாலத்தில் பயப்படாத மார்த்தாண்டம், பயந்துதான் போனார். ‘இப்படிபட்ட வனோடா உன் சகவாசம்?’ என்பதுபோல அந்தச் சிறுமியை ஓரங்கட்டியும் பார்த்தார். இரட்டைச் சடை போட்டிருக்கிறாள். அதற்கு மேல் ரிப்பன் கட்டியிருக்கிறாள். காதுகளில் சின்னச் சின்ன மினுக்கந்தான். ஆகவே ஏழைப் பெண்ணாகத்தான் இருப்பாள். ரெண்டுங்கெட்டான் வறுமைச் சூழலில், வாழும் பெற்றோர். இவளை, தமிழ் கெடுத்தான் பள்ளிக்கு அனுப்பிப் பார்த்து ஆனந்தப்பட்டுக் கொண்டிருப்பார்கள். ஆனாலும், வறுமையின் வெளிப்பாடாய், அம்மாக்காரி, இவள் தலையில் குட்டியக் குட்டு, இவளை இவனிடம் முத்தம் பெறவும் தரவும் தூண்டியிருக்கும். அப்பா திட்டியத் திட்டும். இவனது ஆசைவார்த்தைகளில் மயங்க வைத்திருக்கும்.

அந்தப்பயல், இப்போது இவரை நோக்கி நகருவதுபோல் தோன்றியது. வேறு வழியில்லாமல், மார்த்தாண்டம் பின்வாங்கினார். மனோபலத்திற்கு ஏற்ப தனக்கு உடல் பலம் இல்லை என்பதை அறிந்து துடித்துப்போனார். அதேசமயம், அந்த ஆட்டோ எண்களை கண்கள் வழியாய் மூளையில் பதிவுசெய்து கொண்டே திரும்பி நடந்தார். காவல் நிலையத்தில் புகார் செய்ய வேண்டும்…. அய்யய்யோ… அதுகூடாத செயல்…. யானை வாய்க்குள் போன கரும்பும், காவல் நிலையம் போன பெண்ணும் சக்கையாகும். அப்போ என்ன செய்யலாம்?

மார்த்தாண்டம், புறமுதுகு காட்டி நடந்து கொண்டிருந்தார். சொல்லி வைத்தது போல், இரண்டுபேர் எதிர்பட்டார்கள். முதியவர் நண்பர். இளையவன் தெரிந்தவன். அவர்கள் காதுகளில் இவர் கிசுகிசுத்தார். மூவருமாய் போய், அவனை அதட்டி அந்தப் பெண்ணை மீட்க வேண்டும் என்று அபிநயமாய் கையாட முகமாட கேட்டுக் கொண்டார். அவர் கிசுகிசுப்பை ரசித்துக் கேட்ட அவர்களோ சிரித்தார்கள். பின்னர் இந்தக் காட்சியை, தாங்கள் இதேதெருவில் மார்னிங், மேட்னி, நைட்டாக பலதடவை பார்த்ததாய் பதிலுக்குக் கிசுகிசுத்தார்கள். முதியவர், தன் மோவாயைத் தாங்கிய மார்த்தாண்டத்தின் கைகளை விலக்கியபடியே, யதார்த்தத்தைச் சுட்டிக் காட்டினார்.

“நீங்க சொல்றதுபோலவே… அந்தப் பயல விரட்டிட்டு, அந்தப் பெண்ணை மீட்டி, அவள் வீட்டுல ஒப்படைக்கிறதா வச்சுக்குவோம். அப்புறமும், இந்தப் பொண்ணு இவனோட சரசமாட மாட்டாள் என்பது என்ன நிச்சயம்? ருசிகண்ட பூணை பாருங்க… சரி… அப்படியே இவளை, அவன்கிட்ட இருந்து நிரந்தரமாக பிரிச்சுட்டோமுன்னு வச்சுக்குவோம். இந்தப் பயல், அவள் கிடைக்காத வெறுப்புல, நம்மையும் நடுரோட்டுல வெட்ட மாட்டான் என்கிறதுக்கு என்ன உத்தரவாதம்? ஜாமின் கிடைக்கிற தைரியத்துல நம்ம வீட்டுப் பெண்களையும் மானபங்கப் படுத்தமாட்டான் என்பதற்கு என்ன கியாரண்டி? அதனால, பேசாம வீட்டுப் போங்க இது கலிமுத்துன டெலிவிஷன் காலம் பெத்தவங்க சரியா வளர்க்காட்டால், மத்தவங்க என்ன செய்ய முடியும்?”

மார்த்தாண்டம், சமவயது நண்பரை விட்டு விட்டு, அந்த இளைஞனைப் பார்த்தார். ஒரு கம்பெனியில் காரோடும் சீரோடும் வேலைபார்ப்பவன். அவனும் தன்பங்குக்கு விவகாரத்தில் சிறிது மண்ணள்ளிப் போட்டுப் பேசினான்.

“அந்தப் பொண்ணு சம்மதிச்சுத்தானே வந்திருக்காள்… உங்களுக்கு என்ன அங்கிள்? அனுபவிக்க வேண்டிய வயது அனுபவிக்கட்டுமே. லெட் தெம் என்ஜாய்… டோன்ட் பீ எ கில் ஜாய்.”

மார்த்தாண்டம் அழாக்குறையாய் முறையிட்டார்.

“என்ன வேற, அடிப்பேன் பிடிப்பேன்னு அடாவடியாய் திட்டுனாப்பா”,

“உங்களுக்கு அங்கே என்ன வேலை அங்கிள்? அடிக்காம விட்டானே. அதுவரைக்கும் சந்தோஷப்படுங்க”

மார்த்தாண்டம் துக்கப்பட்டார். அதிலும் ஒரு ஆறுதல். அவரைப் பார்த்த அந்தப் பெண், அந்த பயல் வற்புறுத்தினாலும் இடங்கொடுக்க மாட்டாள். அந்த ஆட்டோ விரைவில் வெளிப்படும்… நாளையில் இருந்து வேறு இடம் தேடிப்போவார்கள். ஒருவேளை அது மனித நடமாட்டம் இல்லாத காடாகவும் இருக்கலாம். அந்த ஆட்டோவே, ஒரு நடமாடும் படுக்கை அறையாச்சே ஆனால் ஏன் இன்னும் அந்த ஆட்டோ புறப்படல? ஒருவேளை, அவள் ஆடைகளை சரிசெய்வதற்கு அவகாசம் தேவைப்பட்டு இருக்கும்…

மார்த்தாண்டம், வெறுப்போடு நடந்தார். அந்த இடத்திற்கு திரும்பப்போவதில்லை என்பது போல் வேக வேகமாய் நடந்தார். அதேசமயம், அந்த ஆட்டோ தன்னை ‘விபத்தாய்’ மோதிவிடக்கூடாதே என்பதுபோல் திரும்பித்திரும்பி பார்த்தபடியும் நடந்தார். யாரும் எக்கேடும் கெடட்டும். ஆனாலும் மனசு கேட்கமாட்டுக்குதே கேட்டே ஆகனும், அந்தப்பயல அதட்டுனால் அவன், அடிச்சு ரோட்டுல வீசுவான். கூட்டம் கூடும்… தெரிஞ்சக் கூட்டமாவே இருக்கும். ஆனாலும், அந்த ஆட்டோவுக்கு பயபக்தியோட வழி விட்டுவிட்டு, இவரைத்தான் வேடிக்கைப் பார்க்கும். இவரை மக்காகவும் தன்னை புத்திசாலியாகவும் அனுமானிக்கும். போதாக்குறைக்கு இவருக்கு புத்திமதி சொல்லும். இன்னும் ஒரு படி மேலே போய் ‘இவருக்கும் அந்த ஆட்டோக்காரனுக்கும் ஒரு பொம்பள விவகாரமா அடிதடியாம்’ என்று முதுகுக்கு பின்னால் பேசினாலும் பேசும். ஊரெல்லாம் தூங்கும்போது நமக்கேன் விழிப்பு?

மார்த்தாண்டத்திற்கு, தனது வீடு இருக்கும் அந்தத் தெருவைவிட்டு. அப்போதைக்கு, எங்கேயாவது தொலைந்து போகவேண்டும் என்பது போல் தோன்றியது. பாதையில் கண்வைக்காமல் கால்களை மட்டும் மாற்றிமாற்றிப் போட்டார். ஒரு வேப்பமர தூரில் முட்டாக் குறையாக நின்றார். வேப்ப இலைகள் சரவிளக்குகளாய் மின்னிய மரம்… தரையில் வேப்பங்கொட்டைகள்… ரத்தம் சிந்திய மனிதர் போல் பால்சிந்திகிடந்தன. அதன் மேல் அதேமரத்துப் பூக்கள் ஆடைகள் போல் வியாபித்து இருந்தன. இதை ரசித்து பார்க்காமல், மேற்கொண்டு நடக்கப் போனவர், தலையில் ஒரு குட்டை உணர்ந்தார். வழுக்கைத்தலை என்பதால் வலி தாங்க முடியவில்லை. ஏறிட்டுப் பார்த்தால், ஒரு காகம், அவர் தலைக்கு மேல் வட்ட வட்டமாய் பறக்கிறது. உடனே இவர், அங்கே செல்லாத கோபத்தை, இங்கே செல்லுபடியாக்கப் போனார். கீழே குனிந்து, ஒரு குச்சியை எடுத்தார். மேலே பறந்த காக்கைக்கு குறிவைத்தும் தற்காப்பாகவும் அந்தக் குச்சியை தலைக்குமேல் சுழற்றினார். உடனே அந்தக் காகம் அங்குமிங்குமாய் பறந்து வீறிட்டுக் கத்தியது. அவ்வளவுதான்… அத்தனை காகங்களும், எங்கிருந்து வந்தனவோ, அவரைச்சுற்றி வியூகம் வகுத்து தாழப் பறந்தன. இறக்கைகளால் சிலம்பாடின. கால்களை ஆயுதங்களாய் நீட்டின. அவற்றின் வேகவேகமான கூக்குரல் அவை தங்களயே காக்கா காக்கா என்று அழைத்துக் கொள்வதுபோல் தோன்றின.

மார்த்தாண்டம் புரிந்து கொண்டார். வேப்பமரத்தில் காக்கைக்கூடு இருக்கும். அதற்குள் கண்விழிக்காத குஞ்சுகளும் இருக்கும். இவற்றைப் பெற்ற காகங்கள், பெறாத காகங்கள் என்ற வேறுபாடு இல்லாமல், அத்தனை காகங்களும் அந்தக் குஞ்சுகளுக்காக துடிக்கின்றன. எந்தச் சந்தர்ப்பத்திலும் மனிதனுக்குப் பயந்து ஒதுங்கும் இந்த கரும்பறவைகள் இப்போதோ வீரப்பறவைகளாகின்றன. பயப்படுபவை, பயமுறுத்துகின்றன. பிரிந்து பறந்தவை ஒன்றுபடுகின்றன.

மார்த்தாண்டம், அந்த காக்காக் கூட்டத்திலிருந்து லாவகமாய் தப்பித்தபடியே தொடர்ந்து நடக்கிறார். அந்தத் தெருமுனையில் ஏழெட்டு ஆட்டோக்கள். ஒரு யூனியன் கொடியின் கீழ் நிற்கின்றன. ஒற்றைச் சக்கரப்பல்லை மறைக்கும் ஒற்றை உதட்டோடு, அதற்குமேல் மின்னும் பல்பை மூக்குத்திகளாய் கொண்ட வாகனங்கள்… ஒருவர் ஆட்டோவை குடைகிறார். சிலர் இரவு டுட்டி என்பதாலோ என்னமோ பயணிகள் இருக்கையில் துங்குகிறார்கள். எஞ்சியவர்கள் – ஆங்காங்கே பேசிக்கொண்டிருக்கிறார்கள். மார்த்தாண்டம், அங்கேயே நின்று அவர்களை அழுத்தம் திருத்தமாய் பார்ப்பதை கண்ட ஒரு ஆட்டோ இளைஞன் கேட்கிறான்.

‘என்ன சார் சவாரியா?’

‘ஒங்களமாதிரி ஆட்டோ ஒட்டுற ஒருத்தன. அதோ அந்த பதுக்கலான இடத்துல ஒரு அப்பாவிப் பொண்ண…

“பேசாம அந்த இடத்திற்கு காதலர் பூங்கான்னு பேரு வைச்சிடுங்க..”

“விளையாடுறதுக்கு நேரம் இல்லப்பா… அது பிஞ்சுப் பொண்ணுப்பா…”

“எங்கள என்ன செய்யச் சொல்லுறீங்க? உங்க தெருக்காரங்கக்கிட்ட சொல்லி ஒழுங்கு பண்ணுங்க”

“அவங்க பேடிங்கப்பா…”

“ஒரு ரூபாய் அதிகமாக கேட்டாலே சவடாலாப் பேசறாங்க”

“பேடிங்க அப்படித்தான் பேசுவாங்க. ரத்தம் கெட்ட மனுசங்கப்பா… ஆனால், நீங்க அப்படி இல்ல. உழைப்பாளிங்க. நல்ல உடம்புலதான் நல்ல புத்தி இருக்கும். அதனால அந்த ஆட்டோக்காரன மடக்கி… அந்தச் சின்னப் பொண்ண….”

“ஆட்டோக்காரன் காதல் பண்ணக்கூடாதா?”

“பண்ணலாம். ஆனால் ஆட்டோவுக்குள்ள பண்ணக்கூடாது. அதவிட முக்கியம் ஒரு அப்பாவி சிறுமியை சிதைக்கக்கூடாது. இது உங்க ஆட்டோ தர்மத்துக்கே அவமானம். எனக்கும் பொண்ணு இருக்கு. உங்களுக்கும் அக்கா, தங்கை இருக்கும்.”

“எங்களுக்கே சூடு வைக்கிறியா. ஏண்டா ராமு! எவண்டா அந்தக் கம்மனாட்டி?”

“ஒனக்குத் தெரியாதா…. அதான்… நம்மக்கிட்ட உதை தின்னுட்டுப் போனானே…. அந்த சோமாறிப்பய குமார்… அந்தப்பயதான். அவனுக்கு என்ன ராசியோ பொம்மனாட்டிகளுக்கு அவன் முகம் மட்டுமில்ல… பேச்சே போதையா இருக்கும்… அப்படியும் வசியாட்டால், கஞ்சா அபினுன்னு கொடுத்து சின்னப்பொண்ணுங்கள சிக்கவைப்பான். பலே கில்லாடி…”

“அல்பம்… அல்பம்…. இது சிரிச்சுப் பேசுற விஷயம் இல்லடா. அடிச்சு நொறுக்குற விவகாரம். நம்ம ஆட்டோ தொழிலுக்கே கேவலமான சமாச்சாரம். பெரியவரே!, நாங்க பாத்துக்கிறோம். அவனுக்கு நாளும் கிழமையும் இன்னைக்குத்தான் வந்திருக்கு. புறப்படுங்கடா! பயமாய் இருந்தால் நீங்க வீட்டுக்கு போங்க சார்… இனிமேல் இது எங்க சமாச்சாரம்”

அதுவரை ஆட்டோவுக்குள் முடங்கிக் கிடந்து, அங்கிருந்து எம்பிக்குதித்து ஆவேசமாய்பேசும் அந்த நடுத்தர ஆட்டோக்காரரிடம் மார்த்தாண்டம் கைகூப்பிய படியே பேசினார்.

“உங்கள பார்த்ததும் என் பயம் பஞ்சா பறந்து போய்ட்டு. அப்புறம் ஒரு விஷயம்… அந்த அற்பப் பயல இவங்க எப்படி கனிச்சுக்கனுமோ அப்படி கவனிக்கட்டும். நீயும் நானும், அந்தப் பொண்ண, அவள் வீட்டுல ஒப்படைச்சிட்டு வரணும். அதோட அந்தப்பயல ரகளை இல்லாம பக்குவமா மடக்கணும். இல்லாட்டி, அந்தப் பொண்ணு அவமானம் தாங்காம தற்கொலை பண்ணிக்கக் கூடாது பாருப்பா”

அந்த ஆட்டோ தலைவர் மார்த்தாண்டம் சொல்வதை ஆமோதிப்பது போல் தலையை ஆட்டுகிறார். அவர் கேள்விக் குறிக்குப்பதிலாக அத்தனை பேரும் வீரப்பாய் நிற்கிறார்கள். அந்தச் சமயத்தில் -

காலி மனையில் இருந்து, அந்த ஆட்டோ தள்ளாடித்தள்ளாடி வெளிப்படுகிறது. அந்தப் பயலின் ஒரு கை, பின்புறமாய் வளைந்திருக்க, இன்னொருகை ஆட்டோவை இயக்குகிறது.

மனோபலத்திற்கு இணையாக உடல்பலம் பெற்றதைப்போல் உணர்ந்த மார்த்தாண்டம், அந்த ஆட்டோக்காரர்களுடன் இரண்டறக் கலக்கிறார். அத்தனைபேரும் அந்த ஆட்டோவை எதிர்நோக்கி, அமைதியாய் நிற்கிறார்கள். புயலுக்கு முன் அமைதியாய்.

- குமுதம் – நவம்பர், 1999 – சிக்கிமுக்கிக் கற்கள், ஏகலைவன் பதிப்பகம், முதல் பதிப்பு – டிசம்பர் 1999 

தொடர்புடைய சிறுகதைகள்
அந்த நால்வரும், அந்த வீட்டில் உள்ளவர்களை மிருகங்களைப் போலக் கட்டிப் போட்டிருந்தார்கள். குடிசை வாசிகளுக்கு பங்களாவாகவும் பங்களாக்காரர்களுக்கு அவுட் ஹவுஸாகவும் தோன்றும் அந்த வீட்டின் பின்கதவின் அருகே போடப்பட்டிருந்த இரும்புக் கட்டிலோடு சேர்த்து கோமதி கட்டப்பட்டிருந்தாள். அவள் வாயில் தரையைத் துடைப்ப ...
மேலும் கதையை படிக்க...
முத்துக்குமார், தேனுக்குள் விழுந்து, இறக்கை நனைந்து தவிக்கும் வண்டு போலவே கிடந்தான். சுருட்டி வைக்கப்பட்ட போர்வைத் துணி போல், உடம்பு முழுவதையும் சுற்றிக்கொண்டு உருளை வடிவமாக கட்டிலில் கிடந்தான். இவ்வளவுக்கும் கொட்டும் பனிக்காலத்தில் கூட, மின் வி சிறியின் சுழற்சிக்கு கீழே, முடிச்சவிழ்ந்த ...
மேலும் கதையை படிக்க...
தண்டோராக்காரன், தான் செல்வதற்கு, அந்த குக்கிராம குடிசை மண்டிக்கு தகுதியில்லை என்று கருதியதுபோல், ஊருக்கு புறம்பாக உள்ள மயானத்தில் நின்று நெளித்தபடி, டும் டும் ஒலிகளோடு, திருவாங்கூர் சமஸ்தான அரச அறிவிப்பை வெளியிட்டான். "ஸ்ரீ உத்திரம் திருநாள் மகாராஜா திருமனஸ் அவர்கள், ஸ்ரீ ...
மேலும் கதையை படிக்க...
மீனாட்சி, வீட்டுக்கு வெளியே, காலிங் பெல்லை அழுத்தி அழுத்திப் பார்த்து அலுத்து, மின்சாரக் கோளாறாக இருக்கலாம் என்று நினைத்து, கதவைத் தாம் துரம் என்று தட்டினாள். அது வாசலுக்கு மூடியாகவே இருப்பதைப் பார்த்துவிட்டு, ஒருவேளை உள்ளே மனிதக் கோளாறோ என்று சந்தேகப்பட்டு, ...
மேலும் கதையை படிக்க...
எல்லாம் அடங்கிய தாவரசங்கமமே, நித்திரையில் ஒடுங்கிப் போனதுபோல் தோன்றுமே ஒரு நேரம்... இடம், பொருள், ஏவல் என்ற முப்பரிமாண தாக்கங்களைக் கடந்த காலவுதிர் காலம்... அந்த நேரத்தில், ஆயாவிற்கு வழக்கம்போல் விழிப்புத் தட்டிவிட்டது. ஐந்தாறு நிமிடங்கள் முந்தியும், பிந்தியும் வரும், இந்த இரண்டு ...
மேலும் கதையை படிக்க...
அந்த ரயில் வண்டியின் குளிர்சாதனப் பெட்டியின் வாசலில், அக்னிநாத், உடலைக் காட்டாமல், தலையை மட்டுந்தான் காட்டியிருப்பான். அதற்குள், கூட்டம் அலை அலையாய் மோதியது. ரயில் இரைச்சலை தவிடுபொடியாக்கும் மனித இரைச்சல், கோஷக் கூச்சல்கள். தூங்கி எழுந்ததும் வெளிப்படுமே மிருகச் சத்தங்கள் - ...
மேலும் கதையை படிக்க...
நெல் பிரிந்து அரிசியாகவும் உமியாகவும் மாறியதுபோல் தாயும், மகளும் தத்தம் போக்கில் ஊருக்குள் நுழைந்து கொண்டிருந்தார்கள். செல்லாத்தாவின் வலது கையில் அகத்திக்கீரைக் கட்டு இருந்தது. மகள் ராஜகுமாரியின் தலையில் ஒன்றிற்கு மேல் ஒன்றாக இரண்டு புல்கட்டுக்கள். சற்றத் தொலைவில் அம்மாவால் புல்லுக்கட்டுடன் ...
மேலும் கதையை படிக்க...
அந்த கன்றுக்குட்டி, புலிப்பாய்ச்சலில் காட்டைக் கிழித்தும், காற்றைப் பிடித்தும், பறப்பதுபோல் பாய்ந்து கொண்டிருந்தது. ஒரே மலையை, இரு மலையாய்க் காட்டும் மடிப்பு வெளி: மரித்ததுபோல் இறங்குமுகமும், மறுபிறவி எடுத்ததுபோல் ஏறுமுகமும் கொண்ட மலைப்பூமி, இந்த இரு முகங்களுக்கு இடையேயான மலைத்தொட்டில். பூமிப்பெண்ணின் மார்பகமாய் ...
மேலும் கதையை படிக்க...
"இவருல்லாம் கிளாஸ் ஒன் ஆபீசராம்... பொல்லாத கிளாஸ் ஒன்." "அதிலென்னடி சந்தேகம்? ஒண்ணாவது கிளாஸ் பையன் மாதிரி நடந்துக்கிறாரோ இல்லியோ..." அலுவலக வாசல் படியில், திரைத்துணி மூடிய இரட்டைக் கதவுகள்போல நின்றபடி வாயாடிக் கொண்டிருந்த 'கேஷியர்' வசந்தாவும், வம்பாடிக் கொண்டிருந்த அஸிஸ்டெண்ட் மங்கையும், மூன்றடிக்கு ...
மேலும் கதையை படிக்க...
அலுவலகமே அல்லோல கல்லோலப் பட்டது. கொடியவன் என்று கொடிகட்டிப் பறந்த பழைய சேல்ஸ் மானேஜர் கழிவதாலும், புதிய சேல்ஸ் மேனேஜர் புகுவதாலும் அலுவலகத்தினர் அனைவரும் மகிழ்ச்சியில் திளைத்தார்கள். பழையவரைவிட எவரும், மோசமானவராக இருக்க முடியாது என்ற அனுமானமே, புதியவருக்கு, ஒரு தகுதியாக ...
மேலும் கதையை படிக்க...
கோபுரம்
கடைசியர்கள்
முகம் தெரியா மனுசி
கட்டக் கூடாத கடிகாரம்
அகலிகைக் கல்
வெள்ளித் திரையும் ⁠வீதித் திரையும்
வைராக்கிய வைரி
பொருள் மிக்க பூஜ்யம்
பாம்புக் கயிறு
ஒருவழிப் பாதை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)