Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

கிட்டிப் புள்

 

கிட்டத்தட்ட இருபது வருட அமெரிக்க வாழ்க்கைக்குப் பிறகு மீண்டும் அவனது கிராமமான ஆழ்வார் குறிச்சியில் காலடி வைத்தான் பாஸ்கர். கோடையின் முடிவு நெருங்குகிற்து என்பதன் அறிகுறியாக நல்ல புழுதிக் காற்று அடித்துக்கொண்டிருந்தது.ஆனந்தம் , வருத்தம் , பிரிவுத்துயரம் எல்லாம் சேர்ந்த கலவையாக இருந்தது அவன் மனம். நல்லவேளை அவன் மட்டும் பிடிவாதம் பிடித்து அண்ணா பல்கலையில் பொறியியல் படிக்கப் போயிராவிட்டால் பாஸ்கரும் இதே புழுதிக்காட்டிலேயே தான் இருந்திருக்க வேண்டும்.நீச்சல் குளத்தோடு கூடிய அவன் அமெரிக்க வீடு ஞாபகத்தில் வந்து போனது. அமெரிக்காவில் அவன் வாழ்ந்த வருடங்களில் அவன் கற்றுக் கொண்ட பாடமும் ஓதிய வேதமும் பணம் தான் எல்லாம் என்பது தான். அது இன்று வரை மட்டுமென்ன என்றுமே சரியாகவே இருக்கும் என்பதில் அவனுக்கு அசைக்க முடியாத நம்பிக்கை. தூரத்தில் தெரிந்த மேற்கு தொடர்ச்சி மலையும் , வெள்ளிக்கோடாய் விழும் அகத்தியர் அருவியும் எத்தனை தடவை பார்த்தாலும் சலிக்கவே சலிக்காத காட்சிகள்.மெதுவாக நடந்து ஊருக்குள் வந்திருந்தான்.ஒரு நூதன பிராணியைப் பார்ப்பதைப்போல பலர் அவனை வேடிக்கை பார்த்தனர். பல வருடங்கள் முன்பு அவனும் அப்படி வேடிக்கை பார்த்தவன் தான். ஆனாலும் ஏனோ எரிச்சல் வந்தது. “சே! இவங்க திருந்தவே மாட்டாங்க!” என்று முனகினான்.சற்று தள்ளி நாலைந்து சிறுவர்கள் கிட்டிப்புள் விளையாடிக் கொண்டிருந்தார்கள். அது இவன் ஞாபகப்பேழையை திறக்கும் சாவியானது.சண்முகத்தின் மனம் மனதில் வந்து போனது.

சண்முகத்தின் நினைவே பாஸ்கரின் பெருமிததை கேலி செய்தது.சண்முகம் ! ஒன்றாம் வகுப்பிலிருந்து பத்தாம் வகுப்பு வரை ஒன்றாகவே படித்தவன்.ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவன் என்றாலும் மிகவும் திமிராக நடந்து கொள்வான். யாருக்குமே அடங்க மாட்டான்.படிப்பில் மிக மிக சுமார். ஆனால் விளையாட்டுகளில் அசகாயசூரன்.இன்ன விளையாட்டு என்று இல்லை , எல்லாவற்றிலும் தேர்ச்சி பெற்றவன்.உடனே நீங்கள் கிரிக்கெட் , ஹாக்கி என்று பணக்கார விளையாட்டுகளாக யோசித்தால் அது உங்கள் தவறு. பம்பரம் , பச்சைக்குதிரை , கபடி முக்கியமாகக் கிட்டிப்புள். கில்லி தாண்டு என்று மற்ற பகுதிகளில் பெயர் பெற்ற இவ்விளையாட்டு நெல்லை மாவட்டத்தில் அழகு தமிழில் கிட்டிப்புள் என்று அழைக்கப்பட்டது. எப்போதும் பாஸ்கருக்கும் , சண்முகத்துக்கும் தான் போட்டி. மற்ற விளையாட்டுகளில் பத்துக்கு ஒரு முறை பாஸ்கர் ஜெயித்திருக்கலாம் , ஆனால் கிட்டிப்புள்ளில் ஊஹ்ஹூம்! ஒரு தடவை கூட சண்முகம் தோற்றதே இல்லை.தான் நன்றாகப் படிப்பதால் தன்னிடம் இவன் பணிந்து போனாலென்ன? என்ற ஆங்காரம் பாஸ்கருக்கு உண்டு. ஆனால் சண்முகமாவது பணிந்து விட்டுக் கொடுப்பதாவது! ஒரு முறை பம்பரத்தில் தொடர் வெற்றியைத்தழுவிய திமிரில் பாஸ்கர் , சண்முகத்தை மிகவும் இளக்காரமாகப் பேச அவன் “நீ மட்டும் தைரியமான ஆம்பளப்பயன்னா எங்கூட கிட்டிப்புள் ஆட வா! நான் தோத்தா கிட்டிப்புள் ஆடறதையே விட்டுடறேன்! ஆனா நீ தோத்துட்டா உன் ராசியான பேனா என் கைக்கு வரணும் சம்மதமா?” என்று சவால் விட்டான்.பாஸ்கருக்கு அவன் பேனா உயிர் என்பதும் , அந்தப் பேனாவால் எழுதுவதாலேயே தனக்கு நல்ல மதிப்பெண்கள் கிடைப்பதாக அவன் நம்புவதும் ஊருக்கே தெரிந்த இரகசியம். அப்படியிருந்தும் சவாலை ஒப்புக்கொண்டான் பாஸ்கர் வேறு வழியில்லாமல்.

போட்டி நடந்தது. அன்று பதட்டத்தில் வழக்கத்தை விட சுமாராக ஆடினான் பாஸ்கர்.சண்முகம் சுலபமாக வென்று விட்டான்.பாஸ்கர் எவ்வளவோ கெஞ்சியும் , வேறு ஒரு புதுப் பேனா வாங்கித் தருவதாகச் சொல்லியும் சண்முகம் விடவில்லை. மனதிற்குள் அழுது கொண்டே பேனாவைக் கொடுத்தான் பாஸ்கர். ஆனாலும் இன்றுவரை பத்தாம் வகுப்பில் தான் எதிர்பார்த்ததை விட சற்று குறைந்த மதிப்பெண் வாங்குவதற்கு சண்முகம் தான் காரணம் என்று நம்பினான் அந்த காயத்தின் வடு ஆழமாகவே பதிந்திருந்தது..அதன் பிறகு எத்தனையோ பரீட்சைகள் உலக அளவில் எழுதி மிகச் சிறப்பாக வெற்றியும் பெற்றிருக்கிறான் , ஆனாலும் அவன் மனதில் இருந்த அந்த காயம் ஆறவேயில்லை.

மெதுவாக நடந்தபடியே “இப்போது சண்முகம் எங்கே இருப்பான்?எப்படி இருப்பான்? என்று சிந்தித்தவன் “என்ன இருந்தாலும் என் அளவுக்கு வாழ்க்கையில் உயர்ந்திருக்க வாய்ப்பே இல்லை” என்று அகங்காரத்தொடு நினைத்தான். நாம் ஒருவரைப் பற்றி நினைத்துக் கொண்டிருக்கும் போது அவர்களே நேரில் வருவது என்பது சிலசமயம் நடக்குமல்லவா? அது போல எதிரே சண்முகமே வந்து கொண்டிருந்தான்.வழுக்கை விழுந்து , உடல் பெருத்துப் போயிருந்தாலும் கண்களின் பிரகாசமும் , திமிரும் மட்டும் குறையவேயில்லை.அதை வைத்து தான் அடையாளம் கண்டு பிடித்தான் பாஸ்கர். அழுக்கேறிய லுங்கியும் , அதை விட அழுக்கான சட்டையும் தோளில் துண்டுமாக அவனைப் பார்த்தவுடன் பாஸ்கரின் மனது ஒரு வினாடி குரூரமாக மகிழ்ந்தது. தன்னைத்தானே கடிந்து கொண்டவன் சண்முகதோடு பேசினான். அவனும் பாஸ்கரை இனம் கண்டு கொண்டான்.சந்தோஷமாகப் பேசினான்.உள்ளூர ஒரு சிறு ஏமாற்றம் பாஸ்கரின் மனதில்.மற்றவர்களைப் போல சண்முகம் பொறாமையோ , வியப்போ காட்டவில்லை.இவனுக்கு சற்று மிகையான மரியாதையும் காட்டவில்லை.குழந்தைப்பருவ நண்பனோடு இயல்பாகப் பேசினான்.இவையெல்லாம் பாஸ்கரின் அமெரிக்கத் திமிருக்கு எரிச்சலூட்டின. அவன் மேலும் அந்தப் பேனா பந்தயத்தையும் நினைவு படுத்திச் சிரிக்கவே அதற்கு மேல் தாள முடியாமல் போனது பாஸ்கருக்கு. வேண்டுமென்றே “அப்போ வேணும்னா நீ ஜெயிச்சிருக்கலாம் இப்போ வெளயாடினா கண்டிப்பா நான் தான் ஜெயிப்பேன் ” என்றான். அதைக் கேட்டு இன்னும் அதிகமாகச் சிரித்தான் சண்முகம்.

பாஸ்கருக்கு வெறியேறியது.இவ்வளவு ஏழ்மை நிலையில் இருப்பவனுக்கு அமெரிக்காவில் இருக்கும் தன்னை எள்ளி நகையாட உரிமையே இல்லை என்று அவன் திமிர் அவனிடம் சொன்னது.அவன் மனம் வக்கிரமாக சிந்திக்க ஆரம்பித்தது.” என்ன பெருசா சிரிக்கிற? உன்னால இப்போ எங்கூட விளையாட முடியுமா அந்த தைரியம் உனக்கு இருக்கா?”என்று எகத்தாளமாகக் கேட்டான் பாஸ்கர். “என்னப் பாத்தா கேக்கற தைரியம் இருக்கான்னு?இப்பவே நான் ரெடி!சொல்லு உன் பந்தயத்தை”என்று கொதித்தெழுந்தான் சண்முகம்.எத்தனையோ கம்பெனிகளுடன் தனக்கு சாதகமாக வியாபார ஒப்பந்தம் போட்ட பாஸ்கர் கிடைத்த வாய்ப்பைப் பயன் படுத்திக்கொள்ள முடிவு செய்தான். “சரி இப்போவே விளையாடலாம் , நான் தோத்துட்டா உனக்கு நூறு டாலர் தரேன் , நீ தோத்துட்டா எனக்கு நூறு ரூபா குடுத்தா போதும் என்ன சம்மதமா?”என்றான். சண்முகம் சம்மதிக்கவே விளையாட்டு சண்முகத்தின் வீட்டு அருகில் ஆரம்பமானது. இவர்கள் விளையாடுவதைப் பார்க்கவே ஒரு கூட்டம் கூடி விட்டது. அதில் தனக்குத் தெரிந்தவர்கள் யாரேனும் இருக்கிறார்களா என்று நோட்டம் விட்டான் பாஸ்கர். “ஆ அதோ அது முருகன் தானே” என்று அவனைக் கூப்பிட்டுக் கேட்டான் .அது முருகனே தான்.முருகனுக்கு ஒரே பெருமை பாஸ்கர் இன்னும் தன்னை நினைவு வைத்திருக்கிறானே என்று.

ஆயிற்று விளையாட்டு ஆரம்பமாகி விட்டது. சண்முகத்தின் திறமை சற்றும் குறையவில்லை.பாஸ்கருக்கும் தான். விளையாட்டு தொடர்ந்தது , கண்டிப்பாக சண்முகம் தான் ஜெயிக்கப்போகிறான் என்று தோன்று விட்டது பாஸ்கருக்கு. என்ன தான் நன்றாக விளையாடினாலும் இருவருக்கும் வயதாகி விட்டதல்லவா அதனால் இடையே ஓய்வு தேவைப்பட்டது.அந்த இடைவேளையில் பாஸ்கர் முருகனைப் பார்த்து “டேய் முருகா என்னால இன்னும் நல்லா ஆட முடியும்டா ஆனா சண்முகம் நெலமய நெனச்சுப்பாரு, பாவம் குடும்பத்த நடத்தவே ரொம்பக் கஷ்டப் படறான்னு கேள்விப் பட்டேன், அதுனால அவனுக்கு மறைமுகமா உதவி பண்ணலமேன்னு தான் இந்தப் பந்தயத்தையே சொன்னேன்”என்று மெதுவாக அதே சமயம் சுற்றியிருப்பர்களுக்கும் சண்முகத்துக்கும் கேட்குமாறு சொன்னான் பாஸ்கர்.பிறகென்ன! பாஸ்கரின் கணக்குத் தப்பவில்லை. அடுத்து வந்த சில நிமிடங்களில் விளையாட்டு முடிவுக்கு வந்தது . பாஸ்கர் வென்று விட்டான் . இல்லையில்லை சண்முகம் விட்டுக்கொடுத்து விட்டான்.

கையிலிருந்த கட்டையை கீழே போட்டவாறே பாஸ்கரின் அருகில் வந்த சண்முகம் “இப்பவும் நீ ஜெயிச்சிட்டதா நினைக்காதே! பாஸ்கர்! ஜெயிச்சது என் தன் மானம் தான்.இப்போ உனக்குத் தர வேண்டிய தொகைக்கு நான் என்ன பாடு படணும்னு எனக்குத் தான் தெரியும் , இருந்தும் உங்கிட்ட நான் தோத்துப் போகலன்ற சந்தோசம் எனக்கு போதும் ” என்று சொல்லி விட்டு மனைவியின் சங்கிலியோடு தலை நிமிர்ந்து அடகுக் கடைக்குப் போகும் அந்த ஏழைத் தமிழனைக் கண்டு பாஸ்கரின் தலை தானாகக் கவிழ்ந்தது. 

தொடர்புடைய சிறுகதைகள்
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் பக்கத்தில் தான் நான் அவரைப் பார்த்தேன். அசப்பில் குமார் அண்ணாவைப் போல இருந்தது. அந்த ஆள் பஞ்சகச்சம் உடுத்திக் குடுமியோடும் , கையில் தர்ப்பைக் கட்டோடும் போய்க் கொண்டிருந்தார். அண்ணா பலகலைக் கழகத்தில் பொறியியல் படித்த குமார் ...
மேலும் கதையை படிக்க...
சரயு நதி சலலத்து ஓடிக்கொண்டிருந்தது.அயோத்தி மாநகரம் இன்னும் தூக்கத்திலிருந்து விழித்திருக்கவில்லை.புள்ளினங்கள் கூட முழுமையாகக் கண் விழிக்காத அதிகாலைப்பொழுது.நதியை ஒட்டிய குடிசையின் சாளரத்து வழியாக ஒரு முகம் வெளியே வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தது. சுருக்கம் விழுந்து காலம் என்னும் பேராற்றில் எதிர் நீச்சல் போட்டுக் ...
மேலும் கதையை படிக்க...
பத்து அருவா
முதுகில் சாணைச் சக்கரம் சுமந்து போய்க் கொண்டிருந்தான் முருகேசன். வெயில் வாட்டி எடுத்தது. வியர்வை ஆறாகப் பெருக பாரம் பெரும் சுமையாக முதுகில் அழுத்தியது. சிறுகதை "ஆச்சு! இன்னும் கொஞ்சம் தூரம் தான். அடுத்த ஊரு வந்துரும்." என்று நொந்த மனசையும் வலித்த ...
மேலும் கதையை படிக்க...
ஒரு பெரிய கட்டடத்தின் ஏழாவது மாடியிலிருந்த அந்தப் பன்னாட்டு நிறுவனம் பரபரப்பாக செயல்பட்டுக் கொண்டிருந்தது. "சிஸ்டம் அனலிஸ்ட்" என்று பெயர் பொறிக்கப்பட்ட கட்டத்தினுள் உட்கார்ந்தபடி கணினித் திரையையே வெறித்தபடி இருந்தாள் அகிலா. இன்று சாயந்திரம் அவளை பெண் பார்க்க வருகிறார்கள். அதற்குண்டான ...
மேலும் கதையை படிக்க...
வாய்க்காலோரம் ஒரு பாறையில் உட்கார்ந்து தன் மாடுகள் மேய்வதைப் பார்த்துக் கொண்டிருந்தார் சம்முவம். அரையில் ஒரு வேட்டி. அதை வேட்டி என்று சொல்வது மரியாதை கருதித்தான். ஒரு நாளும் அது அவருடைய முழங்காலுக்குக் கீழ் நீண்டதில்லை. மேலே ஒரு நீலத் ...
மேலும் கதையை படிக்க...
குமார் அண்ணா
மந்தரை
பத்து அருவா
அகிலா
ஆற்றோரம் மணலெடுத்து

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)