காடெல்லாம் பிச்சிப்பூவு

 

சென்னை, அண்ணாநகரில் இரண்டு அறைகள்கொண்ட ‘ஆண் பண்ணை’ எங்கள் வீடு. அறைவாசிகளுக்கு அப்பாலும், இரவு நேரங்களிலும், விடுமுறை நாட்களிலும் அறை ‘மந்தை’யைப் போல விளங்குவதற்கு வேறு காரணங்கள் இருந்தன.

வீட்டு உரிமையாளர் அருகில் இல்லை. கழிப்பறையில் தீப்பெட்டி வசதி உண்டு. பெண்களை மணக்காத பிரம்மச்சாரிகள் நாங்கள். சமையலறைக்கு இணையாகக் கட்டப்பட்ட ஓர் அறையில் அழுக்குத் துணிகளின் அம்பாரம். அறையின் ஓரத்தில் காற்றடைத்த காலி மதுப் புட்டிகள் கிடக்கும். உபயோகத்துக்குச் சற்று முன்னரே கழுவப்படும் கண்ணாடி டம்ளர்கள் ஆறு உண்டு.

அறைக்கு முதன் முதலில் அட்வான்ஸ் கொடுத்த பிரேம் இப்போது அமெரிக்காவில் கணினி விற்பன்னம் கொண்டு திகழ்கிறான். வருஷத்துக்கு ஒரு முறை வந்து ”எப்படி இருந்த ரூம் இப்படி ஆயிருச்சு?” எனப் புலம்புவான். அறை, விழாக் காலத்துச் சிறப்புப் பேருந்து மாதிரியே பெரும்பாலும் இருந்தது. எங்கள் அறுவருக்கும் கணினி, கால் சென்டர், கட்டடத் தொழில், ஆடிட்டிங் என வகைவகையான வேலைகள் இருந்தன. வந்தவர்களை உபசரிக்கும் செழிப்பும் இருந்தது.

அறையில் ஒரு விடுமுறை நாள் காலையில் நினைவில் தட்டிய சில கனவு மிச்சங்களுக்கு ஒரு வடிவம் கொடுத்து, கனவுகளின் வழியாகவே மீண்டும் உறக்கத்தைப் பிடிக்கப் புரண்டு போராடிக்கொண்டு இருந்தேன். அறையின் மற்ற நண்பர்கள் விழித்துக்கொண்டதும் யாரோ புது நபர்களுடன் பேசிக்கொண்டு இருந்ததும் மங்கலாக உணர்வுக்கு வந்தது. பேச்சினூடாக ‘ஹீரோ… ஹீரோ’ என்றும் ‘நிலவு தேய்வதில்லை’ என்றும் அடிக்கடி கேட்டது. இந்தப் பகலில் நிலவுக்கு என்ன கேடு வந்தது என எரிச்சலாக விழித்து எழுந்தேன். அறையின் புதிய இருவரைப் பார்த்து குசலப் புன்னகை சிந்திவிட்டு, முகம் கழுவி வந்தேன்.

ஜெயப்பிரகாஷ், பிரேம் இருவருக்கும் தெரிந்தவர்கள் எனும் அடிப்படையில் அறைக்கு வருகை புரிந்திருக்கிறார்கள் – கோயமுத்தூர் பக்கமிருந்து கிளம்பிய சினிமாக் கனவர்கள். ஜெயப்பிரகாஷ் இருவரையும் எனக்குஅறிமுகம் செய்தான்.

”இது கவிஞர் பூந்துறை பாரதி. இவரு எம்.ஆர்.பி.”

”எம்.ஆர்.பி-யா?”

”மகாராஜன் பழனிச்சாமிங்க. பழனிச்சாமி, அப்பாவோட பேரு” என்று விளக்கமளித்த மகாராஜனைக் காட்டிய ஜெயப்பிரகாஷ், ”இவருதான் ‘நிலவு தேய்வ தில்லை’ படத்துல ஹீரோ” என்றான்.

”யாரு டைரக்டர்?”- ஆர்வமாக செல்வகணபதி கேட்டான்.

”ஒடவை காமராஜ்.”

”ஒடவையா?”

”ஒடவைன்னா ஒட்டன்சத்திரங்க.”

பூந்துறை பாரதியை அறிமுகப்படுத்தியதும் மகத்தான புன்னகை செய்தார் அவர். ஒலிப் பின்னணியுடன் நான் சந்தித்த முதல் புன்னகை அது. கவிஞர் பூந்துறை பாரதியின் சொந்தப் பெயர் ராமதுரை. சொந்த ஊர், ‘அவல் பூந்துறை’. தட்டையானவர், தலை சொட்டை யானவர். உடல்வகைப்பட்ட இந்த எதுகை மோனை தவிர, தாம் கவிஞர் என்பதற்கான வெளிப்பாடுகளை அவர் கடைசி வரையிலும் காட்டிக்கொள்ளவில்லை. எப்போது பேசினாலும் நடிகைகளின் ‘ரேட்’ எவ்வளவு என்றே கேட்டுக்கொண்டு இருந்தார்.

எம்.ஆர்.பி-யின் மன ஏரியில் முதல் கல் எறிந்தது வஞ்சிப்பாளையத்து ஜோசியர் செங்குட்டுவன். ஆடு மேய்க்கிற, உணவு எடுக்கிற, உறங்குகிற நேரம் தவிர, வானியல் ஆராய்ச்சியில் ஈடுபட்டு ஜோசியம் கைவரப் பெற்றவர்.

செங்குட்டுவன், மகாராஜனிடம் ”இருபத்தேழு வயதுக்கு மேல் கீர்த்தி வரப்பெறும்!” என்றும், ”அவமா னங்களைத் தாங்கினால் விமானம் ஏறலாம்!” என்றும் கூறிய அதே நேரம், மகாராஜனிடம் திரைப்படக் கனவை ஏர் பூட்டி விதைத்து நீர் பாய்ச்சி வளர்த்தார் ராமதுரை. பிறகு, ஏதோ ஒரு சுழிவில் இயக்குநர் ஒடவையாரிடம் அறிமுகமாகி இருக்கிறார்கள்.

மேடு, காடு, தோட்டம், துரவு, பால் மாடு, பைக், டிராக்டர் உள்ளிட்ட நிலக்கிழார் வாழ்வின் சகல சம்பத்துகளையும் பெற்றிருந்த மகாராஜன், பெற்றோருக்கு ஒரே பையன். சிவந்த நிறம். அறைக்கு வரும்போது 55 கிலோ இருந்தார். கண்ணாடியில் தன்னைத் தானே பார்த்தவாறிருந்தும் தான் ஒரு நாயகன் என நம்பவே செய்தார்.

பூந்துறை ராமதுரை தொழிலால் மெக்கானிக். கிணறு, இறவை மோட்டார்கள், டீசல் எஞ்சின்கள் பழுது நீக்குதலில் வின்னன். தேவைப்பட்டால் கவிதை, மடை திறந்த வெள்ளம் போலக் கொட்டும் என நம்புகிறவராக இருந்தார்.

அவர்கள் தங்கியிருந்த இரண்டு மாதத்துக்கிடையில் ஒரு நாள் படத்தின் இயக்குநர் எங்கள் அறைக்கு வந்து இரவு உற்சவத்தின்போது படத்தின் கதையை (நட்புக்காக) சொன்னார். கடைசியில் இரண்டு ஜோடித் திருமணங்கள் நடக்கின்றன என்பதைத் தவிர, சிறப்பம்சம் ஒன்றும் இருப்பது போலத் தெரியவில்லை. ஒரே ஒரு சிறப்பம்சம், அரச வம்சாவளிக் கதை என்பதுதான்.

செஞ்சி அரண்மனையின் கடைசி (ஆண்) வாரிசைச் சுற்றி தற்காலத்தில், சமகால உடைகள் மற்றும் பகைப் புலத்தில் கதை நடக்கிறது. ”அப்டின்னா, ஹீரோ காலேஜுக் குப் புரவியில் செல்வானா?” என்று முருகா னந்தம் குறுக்கிட்டான்.

”புரவியா, புதுசா அப்படி ஒரு பைக் வந்திருக்கா?”என விசாரித்த மகாராஜனிடம் புரவி = குதிரை என விளக்க வேண்டியதாக ஆயிற்று.

”பட்ஜெட் எவ்ளோ சார்?” என்று ஜெயப்பிரகாஷ் வினவினான். இயக்குநர், ”எழுபது ரூவா” என்றார்.

”முடியுமா… ரொம்பக் கம்மியாச் சொல்றீங்க?”

”எல்லாம் மாடர்ன் டெக்னாலஜி. ஸ்கிரிப்ட் பக்காவா ரெடி பண்ணிக்கறோம். நல்லா ரிகர்சல் பாத்துட்டு ஒரே டேக்குல அத்தனை ஸீனுகளையும் ஓ.கே. பண்றம். காஸ்ட்யூமெல்லாம் அவங்கவங்களேதான் பாத்துக்கணும். எம்.ஆர்.பி-க்கு 75 செட் டிரெஸ். அவரே பொறுப்பெடுத்துக்கறாரு. அதில்லாமப் பணமும் மூணு லட்சம் ஏற்பாடு பண்ணிடறாரு. தட்ஸ் ஆல்.”

ஜெயப்பிரகாஷ், ”அப்படிங்களா எம்.ஆர்.பி?!” என அதிர்ச்சி தெரிவித்தான்.

அவர் தலையசைத்து ஒப்புக்கொண்டவாறு கூறினார். ”தோட்டத்துல நம்ம டிராக்டர் சும்மாதான நிக்குது. அத வித்துடலாம்னு இருக்கேன்.”

செல்வகணபதி, ”நடிக்க நமக்குத்தானங்க அவங்க காசு தரணும்?” என்றான்.

இயக்குநர் குறுக்கிட்டு, ”இல்லீங்க. இது எல்லாருக்குமே முதப் படம். இப்படியெல்லாம் கணக்குப் பாத்தா ஆகாது. போட்ட காசைப் படம் மூணு நாள் ஓடுனா எடுத்திரலாம். ஜெயிச்சிட்டம்னு வைங்க… லட்சம், கோடின்னு எகிறிக்கிட்டே இருக்க வேண்டியதுதான்.”

இயக்குநரை நான் வியந்தவாறிருந்தேன். முருகானந்தன் விழிப்புடன் இருந்து கேள்வி கேட்டான். ”நீங்க எந்தெந்தப் படத்துல வொர்க் பண்ணீருக்கீங்க?”

”விளக்கு வைக்கப் போறோம்… மச்சு வீட்டு மச்சான் ரெண்டுலயும் அசோசியேட்டு” என்றார்.

”என்னங்க கேள்விப்பட்ட மாதிரி இல்லியே. படம் தியேட்டர்ல ஓடிச்சா… பெட்டிக்குள்ளயே ஓடிச்சா?”

”நல்லா சொன்னீங்க சார். அதுகள்ல வேல பண்ணினதுல என்னென்ன பண்ணக் கூடாதுன்னு தெளிவாத் தெரிஞ்சுக்கிட்டேன்.”

”படத்துல ரெண்டு ஹீரோன்னீங்க?”

”ஆமாங்க! ரெண்டு பேருக்குமே ஈக்குவல் வெயிட். இன்னொரு ஹீரோ விமல்நாத். அந்தப் பையன் திருச்சீல ரிட்டயர்டு டி.எஸ்.பி-யோட பையன். பத்து லட்சம் ஃபைனான்ஸூம் பண்றாப்டி.”

அப்பா காந்தி போட்டோவின் கீழ் கண் விழித்துச் சம்பாதித்ததை பையன் இப்படி முதலீடு செய்கிறான் என்று தோன்றியது.

”ஹீரோயினப் பாக்கறம்னு கேரளா போனீங்களே சார். பாத்துட்டு வந்துட்டீங்களா?”- இதை ஆவலுடன் கேட்டது கவிஞர்.

”உம் உம்… மூணு லட்சம் இல்லீனா ஒப்புக்க மாட்டேங்குது. நம்ம படத்துலயே அதுக்கு மட்டும்தான் காசு குடுக்கவேண்டி வரும் போல இருக்கு”- இயக்கு நரின் குரலில் மெல்லிய சோர்வும் சலிப்பும் இருந்தது. ஆனால், நாயகியின் அழகைப் பற்றி வினா எழுப்பியபோது சோர்வு அகன்றுவிட்டது. அவரது வர்ணிப்பிலிருந்து நாயகி பலாச்சுளை நிறத்திலோ உரிக்காத நேந்திரம் பழத்தின் நிறத்திலோ இருப்பாள் என யூகித்தேன்.

”இன்னொரு ஹீரோயின்?”

முருகானந்தன் விட்டால் படமே எடுத்துவிடுவான் போலக் கேள்விகளைப் போட்டுத் தாக்கிக்கொண்டு இருந்தான்.

”நீங்கதான் தயாரிப்பாளரா?”

”காசு எங்கிட்ட இருந்தா இவ்வளவு நாளு சும்மா இருந்திருப்பேனாங்க? விழுப்புரம் விநியோகஸ்தர் ஒருத்தரு கிடைச்சிருக்காரு. எவ்வளவு நாள் தெலுங்கு டப்பிங், டப்பாப் படம்னு மத்தவங்களதா எடுத்து ஓட்டறது. நம்மளா ஒரு தமிழ்ப் படம் பண்ணணும்னு அவருக்கு ஒரு ஆசை. என்ட்ரி ஆகறாரு. அம்பது லட்சம் வரைக்கும் தாங்குவேன். அதுக்கு நான் பொறுப்பு தம்பீன்னு சொல்லிட்டார். மேல்மலையனூர் அம்மன் பிக்சர்ஸ்…”

”மியூஸிக்??”

”சக்தீஷ்னு ஒரு பையன். மதுரை கேபிள் டி.வீ-ல மெட்டுக்குப் பாட்டுன்னு ஒரு நிகழ்ச்சி நடக்குது. அதுல மியூஸிக் போட்டுக்கிட்டிருக்கான். குடும்பமே இசைக் குடும்பம். அவங்க தாத்தா மணப்பாறை சுந்தரி நாடக செட்டுல ஆர்மோனிஸ்ட்.”

”கேமரா யாரு?”

”அதுக்குத்தான் இன்னும் ஆள் ஏற்பாடாகல. உங்களுக்கு தெரிஞ்சவங்க யாராவது இருந்தாக்கூட சொல்லுங்க. நமக்கு சார்… திறமை எங்க இருந்தாலும் வெளீல கண்டுபிடிச்சுக் கொண்டுவரணும். பெஸ்ட் வொர்க். எக்சலன்ட் அவுட்புட். எக்ஸ்டிராடினரி ஹிட்.”

”சார், மேக்-அப்?”

”சாரி முருகானந்தம். இப்பவே மணி பத்தரைக்கு மேல ஆயிடுச்சு. இன்னிக்கு கொஞ்சம் டிஸ்கஸ் இருக்கு. நான், எம்.ஆர்.பி, பாரதி மூணு பேரும் டிஸ்கஷன்ல உட்கார்றோமே. ப்ளீஸ்…” என்றவாறு வேறு அறைக்குள் நுழைந்தார். நுழைவதற்குச் சற்று முன் ஜெயப்பிரகாஷைப் பார்த்து, ”மிஸ்டர் ஜே.பீ! இவ் யூ டோன்ட் மைண்ட், நீங்க வரலாம்.” ஜேப்பீ முகப்பிரகாசனாக உள்ளே நுழைந்தான். அந்த அறைக் கதவு தாழிடப்பட்டது.

அன்றைக்குத்தான் இயக்குநர் ஒடவை காமராஜை நான் கடைசியாகப் பார்த்தது. காலை நான் விழிக்கும் முன்னரே சென்றுவிட்டார்.

அதற்குப் பிறகு சுமார் ஒரு மாத காலம் எம்.ஆர்.பி-யும் கவிஞரும் அறையில் தங்கியிருந்தார்கள். மகாராஜன், நாயகனுக்கு உடற்கட்டு முக்கியம் என உணர்ந்திருந்ததால் மது, புகை ஆகியன தவிர்த்துவந்தார். இயற்கை உணவுகளை விரும்பி உண்டார். பச்சைக் கொய்யா, ரத்த வண்ணத் தக்காளி, ஃபேன்டா வண்ண கேரட் ஆகியவற்றை அடிக்கடி சாப்பிட்டார். ஒயின் அருந்தினார். கலர் சாராயக் கடைகள் அவ்வளவும் ஒயின்ஸ் என அழைக்கப்பட்டாலும் ஒயின் மது அல்லவாம். கன்னம் சிவப்பதற்காகவும் மேனி பளபளக்கவும் ஒயின் எடுத்துக்கொண்டார் அவர்.

கவிஞர் இப்படியான கட்டுத்திட்டங்கள் வைத்துக்கொள்ளவில்லை. கவிஞருக்கு உடம்பா முக்கியம். தலைதானே முக்கியம். மது அருந்த வரும்போது மட்டும் ”கண்ணதாசனே இப்படித்தான்…” என்பதை ‘சியர்சு’க்கு மாற்றாகக் கூறினார்.

தினமும் காலையில் கிளம்பி மகாராஜனும் ராமதுரையும் வெளியே சென்றார்கள். மாலையில் வந்து துணை நடிகர்களை, நடிகைகளைப் பேசி ஒப்பந்தம் செய்ததாகத் தெரிவித்தவண்ணம் இருந்தார்கள். சில நாட்கள் கவிஞர் அறையிலேயே இருந்துவிடுவார்.

கவிஞர் ஒரு நாள் காலை அறைவாசிகள் ஒவ்வொருவரிடமும், ”ஏனுங்க, இன்னிக்கு ரூமுல இருக்கீங்களா? வெளீல போறீங்களா?” எனத் தனித்தனியாக வினவினார். அவர் அவ்விதம் கேட்டுக்கொண்டு இருந்தது நாங்கள் தெரு முக்குக் கடையில் டீ குடிக்கும்போது நிகழ்ந்த உரையாடலின் எதேச் சைப் புள்ளி ஒன்றில் வெளிச்சத்துக்கு வந்துவிட்டது. செல்வகணபதி உஷாராகி, ”ஏன்டா! ரூமுல ஆள் ஏத்தற பிளான் ஏதும் இருக்குமோ?” என ஐயம் கிளப்பினான்.

பிறகு, முருகானந்தம் கவிஞரிடம் சென்று, ”எக்காரணத்தைக்கொண்டும் சினிமா ஆளுக ரூமுக்கு வரக் கூடாது. குறிப்பா லேடீஸ்…” என்று கூறிவிட்டான்.

இரண்டு மாதம் முன்பு அவர்கள் கிளம்பிப் போவதற்குள், உப விளைவுகளாக ஜெயப்பிரகாஷ் டான்ஸ் கிளாஸில் சேர்ந்தான். கம்ப்யூட்டர் இருக்கும் அறையிலேயே தாழிட்டுத் தூங்கினான். தூங்கும் முன் அதிர்ந்திருக்கும் பாடல்களுக்கு வியர்வை உதிர்த்துஉதிர்த்து நடனமாடி நடுராத்திரிக் குளியல் ஒன்று போட்டுவிட்டுப் படுத்தான். காலை நேரங்களில் காய்ந்த வாழை மட்டை போலக் கிடக்கும் அவனைப் பார்த்தால் பரிதாபம் மேலோங்கியது. பாடல் காட்சிகள் கேரளாவில் எடுக்கப்படும்போது உடன் நடனமாடி சினிமாவில் கால், கை மற்றும் உடம்பெல்லாம் பதிக்கத் திட்டம். தவிர, படம் வெளியானதும் கோவை, ஈரோடு விநியோக உரிமையை ஜே.பி-க்கே தருவதாக வாக்களித்திருக்கிறார்கள்.

நேற்று ஜெயப்பிரகாஷிடம், ”ஊர்ல உங்க கார யாரு ஓட்டிக்கிட்டிருக்காங்க? அப்பாவா!” என்று கேட்டேன்.

”உனக்கு விஷயம் தெரியாதா? லொகேஷன் பார்க்க எம்.ஆர்.பி. சார் எடுத்துக்கிட்டுப் போயிருக்காரு” என்றான்.

”நீ படத்துல டான்ஸ் ஆடறது.?”

”அடுத்த வாரம் சாலக்குடி வரச்சொல்லி டைரக்டர் சொல்லிட்டாரு” என்று கே.பி.என்னில் கோயமுத்தூருக்கு எடுத்துவைத்திருந்த டிக்கெட்டைக் காட்டினான்.

படம் வருவதை நம்பியாக வேண்டிய சூசனைகள் அதிகமாகிக்கொண்டு இருந்தன. படம் வெளியானால் – அது வெளியான ரகசியத்தை – சூட்சுமத்தை எம்.ஆர்.பி-யின் வீட்டு டிராக்டர் சக்கரத்து டியூப்பில் இருக்கும் காற்றிடம் கேட்க வேண்டும். ஒருவேளை அது வெற்றியும் பெற்றுவிட்டால், அதன் தங்கச் சூத்திரத்தை அறிய ஒரு நடை செஞ்சிக்கோட்டை போய்விட்டு வந்துவிட வேண்டியதுதான்!

- 01 அக்டோபர் 2008 

தொடர்புடைய சிறுகதைகள்
மனைவியின் அப்பா
பக்கத்தில் எங்கேயோ கரும்புச் சோகை களில் தீயைப் பற்றவைத்ததுபோல எங்கும் புகை மூட்டமாக இருந்தது. ஆனால், இது சுடரும் சேதாரமும் இல்லாத பனி மூட்டம்தான். கண்ணுக்கு எட்டிய தூரத்திலும் கண்ணுக்கு முன்னேயும் பனியே பரவி இருப்பதால், உலகம் எங்கும் பனியே மேவி ...
மேலும் கதையை படிக்க...
பகவதி அம்மன் கோயிலின் மார்கழி மாத இரவு நேரத் தப்படிப்புப் பறைச் சத்தத்தின் துள்ளல் துல்லியமாகக் கேட்கும் தூரத்தில் அந்த அலுவலகம் இருக்கிறது. கிராம நிர்வாக அலுவலகம். அதன் வடக்குப் பக்க ஜன்னலைத் திறந்துவைத்தால், கோயிலின் மஞ்சள் பூசிய 3 கலசங்களைப் ...
மேலும் கதையை படிக்க...
தட்டின் முன்னால் அமர்ந்து உணவில் கை வைப்பதற்குள் ஒரு கட்டளை வந்துவிட்டால், சில சமயங்களில் அது முக்கியத்துவம்கொண்டதாக இருக்கலாம். ஐ.ஆர்-20 அரிசிச் சோற்றுக்கு, பீர்க்கங்காய்க் குழம்பை அம்மா ஊற்றியிருந்தாள். இரண்டும் சூடு. பாசிப்பயறைக் கடைந்து தாளித்த பீர்க்கங்காய். கறிவேப்பிலைகள் முறுகி இருக்கவில்லை. செடிப் ...
மேலும் கதையை படிக்க...
கிளிவலம் வந்த நல்லூர் என்னை ஆவலுடன் வரவேற்றது. வேறு மாநிலத்தில் அன்றாடப்பாடுகளுடன் ஜீவித்திருந்த என்னைத் தொலைபேசியில் அழைத்தார் அப்பா. ‘‘எலெக்சன்ல மெம்பருக்கு நிக்கிறேன்யா... உடனே வா!’’ ஊருக்குப் போய் இறங்கி யதும், நான் முதலில் சந்தித்த வேட்பாளர் அப்பா அல்ல. அவரது தற்காலிக வைரியான ...
மேலும் கதையை படிக்க...
ஈடில்லாததும் வீடில்லாததுமான அந்த நாய், கறுப்பு வெள்ளை நிறமுடையது. எங்கள் வீட்டின் தாவாரத்திலும் வெளித்திண்ணையிலும் தங்கி ஊரில் உலவி வருவதால், அது எங்கள் நாயாக அறியப்படுகிறது. 'பூவரச மரத்து வீட்டு நாய்' என்று ஊரில் அதை அடையாளப்படுத்துகிறார்கள். நாய்களுக்கு, ஷாரூக், இந்தியா என்பன ...
மேலும் கதையை படிக்க...
அறுபது ஆடுகளின் ஓனரே… ஆறுமுகத்தாரே…
'ஒன்றியச் செயலா ளரே... எங்கள் மனதில் ஒன்றியச் செயலாளரே!’ என்று பேனர் வைத்த போதுதான் குமாரு, நம்ம ஒ.செ. கதிரேசனின் நெஞ்சத்தில் நீங்காத இடம் பெற்றான். நீங்காத இடமே மங்காத இடமாக மாறப்போகும் சந்தர்ப்பத்துக்காகத்தான், மறுபடியும் அந்த இடத்தில் குமாரு உட்கார்ந்திருந்தான். அது ...
மேலும் கதையை படிக்க...
செவிநுகர் கனிகள்
வெகுகாலம் தாவர வாசனையும் காற்றும் மணந்து கிடந்த இடம் அது. ஊர்க் கடைவீதியின் பரபரப்பான பகலில் அடங்கிய தோற்றமளிக்கும் அந்த இடம், அந்தி மாலையிலும் அதிகாலையிலும் பறவை இனங்களின் கெச்சட்டமும் இறக்கையோசையுமாக இருக்கும். வெயில் காலங்களில் பாம்பு, பாம்பிராணி, ஓணான் வகைகளின் ...
மேலும் கதையை படிக்க...
மரகத மலை அடிவாரத்தில் ஒரு தேவாங்கு
தோட்டத்து வீட்டின் பட்டாசாலையில் கட்டில் போட்டுப் படுத்திருந்த புருஷோத்தமன் நள்ளிரவில் கண் விழித்தபோது, யாரோ தன்னை உற்றுப் பார்த்துக்கொண்டு இருப்பதான உணர்வு மேலிட்டது. மின்சாரமும் மின் விளக்கும் இல்லாத அந்த இடத்தில் அவனது தலையணைக்கு அடியில் பேட்டரி லைட் இருந்தது. சுற்றிலும் மேலும் ...
மேலும் கதையை படிக்க...
எட்டாம் நாள் நிலா. முருங்கைத் தடியின் மேல், இரண்டு புறமும் காட்டிக் காட்டி மேல் நோக்கியும் கீழ் நோக்கியும் விளிம்பு காட்டியவாறு பயணித்துக்கொண்டு இருந்தது ஆறுமுகத்தின் பாளைக் கத்தி. லாகவமாகத் தீட்டிக் கொண்டு இருந்தார். கூர்மையை அதிகரிப்பதற்கு வேண்டி வெங்கச்சாங்கல் பொடியைத் ...
மேலும் கதையை படிக்க...
தேனி தேனரசன். தேனரசன் தான் தேனியில் தான் பிக்க வேண்டுமென முன்பிவியில் முடிவு ஏதும் எடுத்திருக்கவில்லை. தமிழ்ப் பற்றாளரும் ஒரு கிராமப் பஞ்சாயத்து அலுவலக கிளார்க்கான அவரது தந்தை துரைசாமியும் தன் மகன் பின்னாளில் தேனி தேனரசன் எனப் பெரும் புகழ் ...
மேலும் கதையை படிக்க...
மனைவியின் அப்பா
இந்த நாள்… இனிய நாள்
ரசாயனக் கலப்பை
ஒரு ஊர்ல ஒரு தேர்தல்!
தி நேம் இஸ் மணி
அறுபது ஆடுகளின் ஓனரே… ஆறுமுகத்தாரே…
செவிநுகர் கனிகள்
மரகத மலை அடிவாரத்தில் ஒரு தேவாங்கு
கட்டுச் சேவல் மனிதர்கள்
அமிழ்து…. அமிழ்து…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)