Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

கவண் வைத்திருந்த சிறுவன்

 

பள்ளியில் எங்கள் வகுப்பில் இருந்த பையன்கள் ஒரு விசித்திரக் கலவை. ஹர்பன்ஸ் லால் என்றொரு பையன். கடினமான கேள்வி கேட்கப்பட்டால், அவன் தனது மைப்புட்டியிலிருந்து சிறிது மையை உறிஞ்சுவான். அது தன் அறிவை கூர்மைப்படுத்தும் என அவன் நம்பினான். ஆசிரியர் அவன் கன்னத்தில் அறைந்தால், “கொலை! உதவி!” என கூச்சலிடுவான். அதைக் கேட்டுப் பக்கத்து வகுப்புகளிலிருந்து ஆசிரியர்களும் பையன்களும் என்ன நடந்தது என்று காண ஒடிவருவார்கள். இது ஆசிரியருக்கு குழப்பம் தரும் ஆசிரியர் அவனைப் பிரம்பால் அடிக்க முயன்றால், அவன் அவரைக் கட்டிப் பிடித்துக் கொண்டு கெஞ்சுவான்: “என்னை மன்னியுங்கள், மாட்சிமை மிக்கவரே! நீங்கள் மகா அக்பர் போன்றவர். நீங்கள் தான் அசோக சக்ரவர்த்தி. நீங்கள் தான் என் அப்பா, என் தாத்தா, கொள்ளுத் தாத்தா.”

இது பையன்களைச் சிரிக்க வைக்கும். ஆசிரியரை முகம் மாறச் செய்யும். இந்த ஹர்பன்ஸ் லால் தவளைகளைப் பிடிப்பான். தவளை கொழுப்பை உங்கள் கைகளில் தேய்த்துக் கொண்டால், ஆசிரியரின் பிரம்படி உறைக்கவே உறைக்காது” என்று எங்களிடம் சொல்வான்.

ஆனால், போதி ராஜ் தான் எங்கள் வகுப்பில் மிக விசித்திரமானவன். நாங்கள் எல்லோரும் அவனுக்குப் பயப்பட்டோம். அவன் ஒருவரின் கையைக் கிள்ளினால், அந்தக் கை, பாம்பால் கடிபட்டது போல் வீங்கி விடும். அவன் ஈவு இரக்கமில்லாதவன். ஒரு குளவியை வெறும் விரல்களால் பிடித்துவிடுவான். அதன் கொடுக்கை நீக்கி, குளவியை ஒரு நூலில் கட்டி, பட்டம் போல் பறக்க விடுவான். பூ மீது இருக்கிற வண்ணத்துப் பூச்சியைப் பிடித்து, தன் விரல்களால் நசுக்கிக் கொல்வான். அல்லது, அதன் உடம்பில் குண்டுசியைச் செருகி, அதை தன் நோட்டுப்புத்தகத்தில் வைப்பான்.

ஒரு தேள் போதி ராஜைக் கொட்டினால், அந்தத் தேள்தான் செத்து விழும் என்று சொல்வார்கள். போதி ராஜின் இரத்தத்தில் விஷம் நிறைந்திருந்தது; பாம்பு கடித்தால் கூட அவனைப் பாதிக்காது என்று பலரும் நம்பினார்கள். அவன் சதா கையில் கவண் வைத்திருந்தான். குறி தவறாது கல்லெறிவான். பறவைகள் தான் அவனுக்குப் பிடித்தமான குறிகள். அவன் ஒரு மரத்தின் கீழ் நிற்பான். குறிபார்ப்பான். மறுகணம் பறவையின் அலறல் மேலெழும் சிறகுச் சிதறல்கள் கீழே மிதந்து வரும். அவன் மரத்தின் மேலே ஏறி, முட்டைகளை எடுப்பான்; கூட்டை அடியோடு நாசம் செய்வான்.

அவன் பழிவாங்கும் குணமுள்ளவன். பிறரைக் காயப்படுத்துவதில் மகிழ்ச்சி அடைந்தான். எல்லாப் பையன்களும் அவனுக்கு அஞ்சினர். அவன் அம்மா கூட அவனை ராட்சசன் என அழைத்தாள். அவன் நிஜார்ப் பைகள் விசித்திரப் பொருள்களால்-உயிருள்ள கிளி, பலவித முட்டைகள் முள்ளெலி போன்றவற்றால்-எப்போதும் உப்பியிருக்கும்.

போதி ராஜ் யாருடனாவது சண்டையிட்டால், அவன் மாடு மாதிரி தலைநீட்டிப் பாய்ந்து மோதுவான்; அல்லது தாறுமாறாக உதைப்பான், கடிப்பான். பள்ளி முடிந்ததும், நாங்கள் வீடு திரும்புவோம். ஆனால் போதிராஜ் சுற்றித் திரியப் போவான்.

அவனிடம் விநோதக் கதைகளின் ஸ்டாக் நிறைய இருந்தன. ஒரு நாள் அவன் சொன்னான். “எங்கள் வீட்டில் ஒரு உடும்பு வசிக்கிறது. உடும்பு என்றால் என்ன என்று தெரியுமா?”

“தெரியாது. உடும்பு என்பது என்ன?” அது ஒரு வகை ஊரும் பிராணி. ஒரு அடி நீளம் இருக்கும். அதுக்கு நிறைய கால்களும் கூரிய நகங்களும் உண்டு”

நாங்கள் நடுங்கினோம்.

“எங்கள் வீட்டில் மாடிப்படியின் கீழே ஒரு உடும்பு வசிக்கிறது-என்று அவன் தொடர்ந்தான். அது ஒரு முறை ஒன்றைப் பிடித்துக் கொண்டால், என்ன வந்தாலும் சரி, தன் பிடியை தளரவிடாது.

நாங்கள் திரும்பவும் நடுங்கினோம்.

“திருடர்கள் உடும்புகள் வைத்திருப்பார்கள். உயரமான சுவர்களில் ஏற அவற்றை உபயோகிப்பார்கள். அவர்கள் உடும்பின் பின்கால்களில் ஒரு கயிற்றைக் கட்டி, அதை உயரே விட்டெறிவார்கள். உடும்பு சுவரைத் தொட்டதும், அதை இறுகப் பற்றிக் கொள்ளும். பத்துப் பேர் சேர்ந்து இழுத்தால் கூட அந்தப் பிடியை விலக்க முடியாது. அவ்வளவு உறுதி. பிறகு திருடர்கள் கயிற்றின் உதவியால் சுவர் மீது ஏறுவார்கள்.”

“உடும்பு எப்போது பிடியைத் தளர்த்தும்?”

“திருடர்கள் மேலே ஏறியானதும், அதற்குச் சிறிது பால் கொடுப்பார்கள். உடனே அது தன் பிடியை விட்டுவிடும்.” இப்படிப்பட்ட கதைகளை போதிராஜ் சொல்வான்

என் தந்தைக்குப் பதவி உயர்வு கிட்டியது. நாங்கள் ஒரு பெரிய பங்களாவில் குடிபுகுந்தோம். அது பழங்காலத்து பங்களா. நகரின் வெளியே இருந்தது. செங்கல் தரை, உயரமான சுவர்கள், சரிவான கூரை எல்லாம் இருந்தன. ஒரு தோட்டம். அங்கு மரங்களும் செடிகளும் நிறைந்திருந்தன. பங்களா வசதியானது தான். ஆனால் பெரிதாய், காலியாய்த் தோன்றியது. அது நகரிலிருந்து மிகத் தள்ளி இருந்ததால் என் நண்பர்கள் அபூர்வமாகவே என்னைக் காணவந்தார்கள்.

போதி ராஜ் மட்டும் விதி விலக்கு. அவனுக்கு அது நல்ல வேட்டைக் களமாகத் தோன்றியது. மரங்களில் அநேகம் கூடுகள் இருந்தன. குரங்குகள் சஞ்சரித்தன. புதர்களின் அடியில் ஒரு ஜோடி கீரிப்பிள்ளைகள் வசித்தன. வீட்டின் பின்னே ஒரு பெரிய அறை. அதிகப்படியான சாமான்களை அம்மா அங்கே போட்டு வைத்திருந்தாள். இந்த அறை புறாக்களின் புகலிடமாக அமைந்திருந்தது. அவற்றின் கூவலை நாள் முழுதும் கேட் முடியும். வென்ட்டிலேட்டரின் உடைந்த கண்ணாடி அருகில் ஒரு மைனாக் கூடு இருந்தது. அறையின் தரை நெடுக சிறகுகள், பறவை எச்சங்கள் உடைந்த முட்டைகள், மற்றும் கூடுகளிலிருந்து விழுந்த வைக்கோல் துணுக்குகள் சிதறிக் கிடந்தன.

ஒரு முறை போதி ராஜ் ஒரு முள் எலி கொண்டு வந்தான். அதன் கரிய வாயும் கூரிய முட்களும் என்னைக் கலவரப்படுத்தின. போதி ராஜூடன் நான் நட்புக் கொள்வதை என் அம்மா அங்கீகரிக்கவில்லை. ஆயினும், நான் தனித்து இருப்பதையும், எனக்குத் துணை தேவை என்பதையும் அவள் உணர்ந்ததால் எதுவும் சொல்லவில்லை. என் அம்மா அவனைப் பிசாசு என்று குறிப்பிட்டாள். பறவைகளைத் துன்புறுத்தக் கூடாது என்று அவனிடம் அடிக்கடி சொன்னாள்.

ஒரு நாள் என் அம்மா என்னிடம் கூறினாள்: “உன் நண்பன் கூடுகளை அழிப்பதில் ஆசை உடையவன் என்றால், அவனை நம் சாமான் அறையைச் சுத்தப்படுத்தச் சொல். பறவைகள் அதை ரொம்ப அசிங்கப்படுத்திவிட்டன.”

நான் மறுப்புத் தெரிவித்தேன். “கூடுகளை நாசப்படுத்துவது கொடுமை என்று சொன்னாயே.”

“அவன் பறவைகளைக் கொல்ல வேண்டும் என்று நான் சொல்ல வில்லை. அவற்றைக் காயப்படுத்தாமலே அவன் கூடுகளை அகற்ற முடியும்”

மறுநாள் போதிராஜ் வந்ததும் நான் அவனை சாமான் அறைக்கு இட்டுச் சென்றேன். அது இருண்டிருந்தது. ஏதோ மிருகத்தின் குகைக்குள் நுழைந்தது போல் நாற்றமடித்தது.

உண்மையில் எனக்குக் கொஞ்சம் பயம்தான். போதிராஜ் அவன் இயல்புப்படி நடந்து, கூடுகளை அழித்தால், பறவைகளின் சிறகுகளைப் பிய்த்தால், அவற்றின் முட்டைகளை உடைத்தால், என்ன பண்ணமுடியும்? எங்கள் நட்பை ஆதரிக்காத அம்மா, சாமான் அறையைச் சுத்தம் செய்ய போதி ராஜை அழைத்துப் போகும்படி என்னை ஏன் ஏவினாள்? இது எனக்குப் புரியவில்லை.

போதிராஜ் தன் கவணைக் கொண்டு வந்திருந்தான். கூரையின் கீழிருந்த கூடுகளின் நிலைகளை அவன் கவனமாக ஆராய்ந்தான். கூரையின் இரண்டு பக்கங்களும் கீழ்நோக்கிச் சாய்ந்திருந்தன; அவற்றின் குறுக்கே நீண்ட உத்திரம் பாதுகாப்பாக இருந்தது. அதன் ஒரு முனையில், காற்றோடி அருகே, ஒரு மைனாக்கூடு இருந்தது. இலவம் பஞ்சுத் துணுக்குகளும் கந்தையும் அதிலிருந்து தொங்குவதை நான் கண்டேன். புறாக்கள் சில ஒன்றுக் கொன்று கூவிக் கொண்டு உத்திரத்தில் உல்லாச நடை பழகின.

போதி ராஜ் கவனால் குறிபார்த்தபடி, “மைனாக் குஞ்சுகள் கூட்டில் இருக்கின்றன” என்றான்.

சின்னஞ்சிறு மஞ்சள் அலகுகள் இரண்டு எட்டிப் பார்ப்பதை நான் கவனித்தேன்.

“பார்! இது கங்கா மைனா, இவ்வட்டாரத்தில் இது சாதாரணமாகக் காணப்படுவதில்லை. பெரிய மைனாக்கள் தங்கள் இனத்திலிருந்து பிரிந்து இங்கே வந்திருக்க வேண்டும்” என்று போதி ராஜ் விளக்கினான்.

“பெரிய மைனாக்கள் எங்கே?” என்று கேட்டேன்.

“இரை தேடிப் போயிருக்கும். சீக்கிரம் வந்துவிடும்.” அவன் தன் கவணை உயர்த்தினான்.

நான் அவனைத் தடுக்க விரும்பினேன். ஆனால் நான் என் வாயைத் திறக்கும் முன் ஒரு இரைச்சல் எழுந்தது. பிறகு, சிறு கல் கூரையின் தகரத்தைத் தாக்கியதால் எழுந்த உரத்த ஒசை கேட்டது.

சின்ன அலகுகள் மறைந்தன. கூவலும் கிளுகிளுப்பும் ஒடுங்கின. எல்லாப் பறவைகளும் பயந்து வாய் மூடிவிட்டதாகத் தோன்றியது.

போதி ராஜ் மற்றுமொரு கல்லைப்பறக்க விட்டான். இம் முறை அது உத்திரத்தில்பட்டது. போதி ராஜ் எப்பவும் குறி வைப்பதில் பெருமைப் படுபவன். இரு முறை குறி தவறிவிட்டான். அவன் தன் மீதே கோபம் கொண்டான். குஞ்சுகள் கூட்டின் விளிம்பில் எட்டிப் பார்க்கவும், அவன் மூன்றாவது முறை முயன்றான். இம்முறை கல் கூட்டின் ஒரு பக்கத்தைத் தாக்கியது. சிறிது வைக்கோலும் பஞ்சும் விழுந்தன-ஆனால் கூடு அதே இடத்தில் இருந்தது.

போதி ராஜ் மீண்டும் தன் கவணை உயர்த்தினான். திடீரென்று ஒரு பெரிய நிழல் அறையின் குறுக்கே படிந்தது. காற்றோடியின் வெளிச்சத்தை அது மறைத்தது. திடுக்கிட்டு நாங்கள் மேலே பார்த்தோம். எங்களை அச்சுறுத்தும் விதத்தில் நோக்கியபடி ஒரு பருந்து தன் இறக்கைகளை விரித்து நின்றது.

“இது பருந்துக் கூடாகத் தான் இருக்கும்” என்றேன்.

“இல்லை. பருந்து எப்படி இங்கே கூடு கட்டும்? பருந்து எப்பவும் மரத்தில் தான் கூடு கட்டும். இது மைனாக் கூடுதான்.”

குஞ்சுகள் தங்கள் இறக்கைகளை அடித்து, பலமாகக் கத்தத் தொடங்கின. நாங்கள் மூச்சடக்கி நின்றோம். பருந்து என்ன செய்யும்?

பருந்து காற்றோடியிலிருந்து நகர்ந்தது. உத்திரத்தில் தங்கியது. அது தன் சிறகுகளை மடக்கிக் கொண்டது. மெலிந்த கழுத்தை அசைத்தது. இப்படியும் அப்படியும் உற்று நோக்கியது.

பறவைகளின் பீதியான கூச்சல் காற்றை நிறைத்தது.

“இந்தப் பருந்து தினசரி இங்கே வருகிறது” என்று போதி ராஜ் சொன்னான்.

பிய்ந்த சிறகுகள், வைக்கோல், பறவைகளின் இறைச்சித் துண்டுக்ள் எல்லாம் ஏன் தரையில் சிதறியிருந்தன என்பதை நான் புரிந்து கொண்டேன். பருந்து அடிக்கடி கூடுகளை வேட்டையாடியிருக்க வேண்டும்.

போதி ராஜ் பருந்தின் மீதிருந்து தன் பார்வையை அகற்றவில்லை. அது மெதுவாகக் கூட்டை நோக்கி நகர்ந்து சென்றது. பறவைக் கூச்சல்கள் உச்சிநிலை எய்தின.

நான் பரபரத்தேன். மைனாக் குஞ்சுகளைப் பருந்து அல்லது போதி ராஜ் கொல்வதில் என்ன வித்தியாசம் இருக்கப் போகிறது? பருந்து வந்திராவிட்டால் போதி ராஜ் நிச்சயம் கூட்டை ஒழித்துக் கட்டியிருப்பான்.

போதி ராஜ் கவணை உயர்த்தி, பருந்தைக் குறி வைத்தான்.

“பருந்தை அடிக்காதே. அது உன்னைத் தாக்கும்” என நான் கத்தினேன். ஆனால் அவன் சட்டை செய்யவில்லை. கல் பருந்து மீது படவில்லை, கூரையைத் தாக்கியது. பருந்து சிறகுகளை அகல விரித்து, கீழே உற்று நோக்கியது.

நான் பயந்து, “இங்கிருந்து போய்விடுவோம்” என்றேன்.

‘பருந்து குஞ்சுகளைத் தின்றுவிடுமே.’ இப்படி அவன் சொன்னது விசித்திரமாகத் தொனித்தது.

போதி ராஜ் திரும்பவும் குறி வைத்தான். பருந்து உத்திரத்தை விட்டு நகர்ந்தது. தன் சிறகுகளைப் பரப்பி, அரை வட்டமாய்ப் பறந்து, குறுக்குச் சட்டத்தில் அமர்ந்தது. குஞ்சுகள் தொடர்ந்து அலறின.

போதி ராஜ் கவணையும், தன் பையிலிருந்த கற்கள் சிலவற்றையும் என்னிடம் தந்தான்.

பருந்தைக் குறிவை அடித்துக் கொண்டே இரு அதை உட்கார விடாதே” என்று கூறினான். பிறகு அவன் ஒடி சுவர் ஒரத்தில் இருந்த ஒரு மேஜையை அறையின் மத்திக்கு இழுத்தான்.

கவணை எப்படி உபயோகிப்பது என நான் அறியேன். ஒரு தடவை முயன்றேன். ஆனால் பருந்து அந்த இடத்தைவிட்டு அகன்று, வேறு இடம் பறந்தது. போதி ராஜ் மேஜையை மைனா கூட்டுக்கு நேர்கீழே கொண்டு வந்தான். மேஜை மேல் ஏறி, மெதுவாகக் கூட்டை எடுத்தான். நிதானமாய் கீழே இறங்கினான்.

“நாம் இங்கிருந்து போய் விடுவோம்” என்று கூறி அவன் கதவை நோக்கி ஒடினான். நானும் தொடர்ந்தேன்.

நாங்கள் வண்டி அறைக்குள் சென்றோம். அதற்கு ஒரே ஒரு கதவு தான். பின்பக்கச் சுவரில் ஒரு சிறு ஜன்னல் இருந்தது. அறையின் -அகலத்துக்கு ஒரு உத்திரம் குறுக்கே காணப்பட்டது.

பருந்து இங்கே வரமுடியாது” என்று சொல்லி, அவன் ஒரு பெட்டி மேல் ஏறி, கூட்டை உத்திரத்தில் வைத்தான்.

மைனாக் குஞ்சுகள் அமைதியுற்றிருந்தன. பெட்டி மேல் நின்று போதி ராஜ் முதல்முறையாக கூட்டுக்குள் எட்டிப் பார்த்தான். அவன், வழக்கமாகச் செய்வது போல், இரண்டு குஞ்சுகளையும் எடுத்துத் தன் பைக்குள் போட்டுக் கொள்வான் என நான் எண்ணினேன். ஆனால் அவன் நெடுநேரம் அவற்றைப் பார்த்து நின்ற பிறகு “கொஞ்சம் தண்ணீர் கொண்டு வா. குஞ்சுகளுக்கு தாகம். நாம் நீரைச் சொட்டுச் சொட்டாக அவற்றின் வாய்க்குள் விடுவோம்” என்றான்.

நான் ஒரு கிளாஸ் தண்ணிர் கொண்டு வந்தேன். இரு குஞ்சுகளும், அலகுகளைத் திறந்து, பெருமூச்சு விட்டன. போதி ராஜ் அவற்றுக்கு நீர்த்துளிகளை ஊட்டினான். அவற்றைத் தொடக்கூடாது என்று அவன் எனக்குச் சொன்னான். அவனும் தொடவில்லை.

“இவை இங்கே இருப்பது பெரிய மைனாக்களுக்கு எப்படித் தெரியும்?” என்று கேட்டேன்.

“தேடிக் கண்டுபிடிக்கும்”.

அந்த அறையில் நாங்கள் நீண்ட நேரம் இருந்தோம். சாமான் அறையின் காற்றோடியை, பருந்து மீண்டும் அங்கே உள்ளே வர இயலாதபடி அடைப்பதற்கான யோசனைகளை போதி ராஜ் சொன்னான். அன்று மாலை அவன் வேறு எதுவும் பேசவில்லை.

மறுநாள் போதி ராஜ் வந்தபோது அவன் கவனோ கற்களோ வைத்திருக்கவில்லை. ஒரு பை நிறைய விதைகள் கொண்டு வந்தான். நாங்கள் மைனா குஞ்சுகளுக்குத் தீனி கொடுத்தோம். அவற்றின் சேட்டைகளை மணிக்கணக்கில் வேடிக்கை பார்த்தோம்.

- பீஷம் ஸாஹனி (ஹிந்திக் கதை) 

தொடர்புடைய சிறுகதைகள்
முத்துத் தீவு என்று ஒரு சிறு கிராமம் இருந்தது. ஆனால் அந்த ஊரில் முத்துக்கள் சேகரிக்கப்படவுமில்லை; அது ஒரு தீவுமில்லை. அந்த ஊர் வெகு தூரத்தில் தன்னந்தனியாக இருந்தது; அதை அடைவது சிரமம், அதனால் அந்தப் பெயர் ஏற்பட்டிருக்கலாம். பக்கத்து நகரம் ...
மேலும் கதையை படிக்க...
பன்னிரண்டு வயது சுந்தர் ஊர்ப்பசுக்களை மேய்த்தான். அவன் உழைப்புக்காகச் சோறும் கறியும் அவனுக்குக் கிடைத்தன. கோடையில் ஒருநாள் அதிகாலையில் அவன் மூன்று பசுக்களை மேய்ச்சலுக்கு இட்டுச் சென்றான். 'சுருள் கொம்பு', 'கருங்கண்', 'புள்ளி வால்' என்று அவன் அவற்றுக்குப் பெயரிட்டிருந்தான். தனது உணவை ...
மேலும் கதையை படிக்க...
கண்ணாடி முன் நின் சிங்காரம் மார்பை நிமிர்த்திக் கொண்டான். கைகளை உயர்த்தியும் தாழ்த்தியும், மூச்சை உள்ளுக்கு இழுத்தும் நீளமாக வெளியிட்டும், தன் அழகைத் தானே பார்த்து மகிழ்ந்தான். தலையை ஆட்டினான். முகத்திலே ஒரு சிரிப்பை படரவிட்டான். தம்பி சிங்காரம்! நீ சாமானிணன் இல்லை. ...
மேலும் கதையை படிக்க...
மாலை உலா வந்த சுந்தரம் அந்த இடத்தில் அப்படி ஒரு காட்சியை எதிர்ப்பார்க்கவில்லை. அதனால் அவர் ஆச்சரியம் அடைந்தார். நகரத்தை விட்டு விலகி இருந்தது அந்த இடம். வெறிச்செனக் கிடந்த மேட்டு நிலம். சுத்தமான காற்றை நாடுவோர் மாலை நேரங்களில் அங்கே வருவார்கள். ...
மேலும் கதையை படிக்க...
‘இந்த வருஷம் எப்படியும் ஊருக்குப் போய் விடவேண்டியது தான்!’ இப்படி பூவுலிங்கத்தின் மனம் தீர்மானம் நிறைவேற்றியது. இவ்வாறு அது தீர்மானம் நிறைவேற்றிக் கொண்டது இதுதான் முதல் தடவையோ அல்லது மூன்றாவது தடவையோ அல்ல, முப்பதாயிரத்து ஓராவது தடவையாகவே இருக்கலாம்! பூவுலிங்கம் பட்டணத்துக்கு ...
மேலும் கதையை படிக்க...
அப்புவின் கதை
சுந்தரும் புள்ளிவால் பசுவும்
வானத்தை வெல்பவன்
மதிப்பு மிகுந்த மலர்
பேரிழப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)