கடவுள் பாதி மிருகம் பாதி…

 

இரண்டாவது ஆட்டம். கொட்டிக் கவிழ்த்து நெல்லிக்காய்கள் போல கூட்டம் கொலேரென்று சிதறி பிரிந்தது.

நேற்று வெளியான படம் நான்காட்டத்தோடு கடைசி என்பதால் பார்க்க வேண்டிய நிலை. நண்பன் நடித்தான் என்பதற்காக கஷ்டம்.

சாந்தியிலிருந்து மாம்பலம் போகவேண்டும்.

ஆட்டோவைப் பார்த்தான் சேகர். இரண்டு மூன்று நின்றதில் கிடைத்தவர்கள் ஏறிப் போக…. இறுதியாக நின்றதில் டிரைவர் ஏறினான்.

”சார் ! ஆட்டோ மாம்பலம் வருமா ?”

”நானே படம் பார்;த்த வெறுப்புல இருக்கேன். வராது போ.” எரிந்தான்.

”சார்….”

”போய்யான்னா… !! அடுத்து பேசினால் அடித்துவிடும் கோபத்தில் வண்டியைக் கிளப்பி வேகமாக விட்டான்.

சேகர் படம் எடுத்தவனை நொந்தான். அதில் பணம் கொடுத்து நடித்த நண்பனை நினைத்து பல்லைக்கடித்தான்.

அண்ணாசாலையில் மருந்துக்கும் ஆளில்லை. பூக்கடை பேருந்து நிலையம் புழக்கத்தில் இருந்தபோது பகல் இரவு ஓய்வு ஒழிச்சலில்லாமல் வாகனங்கள் பறக்கும். இரவில் பேருந்து, லாரிகள் கடக்கும். பேருந்து நிலையம் கோயம்பேடு மாறியதிலிருந்து பாதி மட்டு. தற்போது பறக்கும் ரயில் திட்ட வேலைக்காக வாகனப்போக்குவரத்தை மாற்றி விட்டதின் விளைவு பதினோரு மணிக்கெல்லாம் சாலை கழுவி விட்ட சுத்தம்.

என்னதான் பகல் போல் வெளிச்சம், வரிசையாய்க் கட்டிடங்கள் என்று இருந்தாலும் சாலை ஹாவென்று விரிந்து கிடப்பதைப் பார்த்த சேகருக்கு அதில் தனி ஒரு மனிதனாக நடக்க…நடுக்காட்டில் நடக்கும் பயம் வந்தது. செய்து என்ன செய்ய? நடு சாலையிலோ. ஓரத்திலே படுத்து உறங்க முடியாது. அறைக்குச் சென்றே ஆகவேண்டும்.

படம் பார்த்ததை நினைத்து நொந்தான். ஏதாவது வாகனம் வருகிறதா என்று திருடனைப் போல் திரும்பிப் திரும்பிப் பார்த்துக் கொண்டே நடந்தான். இவன் நேரம் சைக்கிளைக் கூட ஒருத்தனும் ஒட்டிவரவில்லை.

காட்டு வழி பயணமென்றால் ‘ஹே! என்னதான் நடக்கும் நடக்கட்டுமே !’ பாட்டுப்பாடி பயத்தை மறைத்துக்கொண்டு நடக்கலாம். இது இந்தியாவில் நான்காவது பெரிய நகரம். ரோந்து வரும் போலீசார் சந்தேகக் கேசில் அழைத்துச் சென்று அநாவசியமாக விசாரிப்பார்கள். கேசுக்காவது பிடிப்பார்கள்.!!

அட கிரகமே ! நாட்டு நாய்கள் கூட இல்லை. குரைக்க. இதே கிராமமாக இருந்தால் ஒரு நாய் குலைத்து ஒன்பது நாய்களை உசுப்பும். எல்லாம் ஓலமிடும். வீட்டில் திருடிக்கொண்டிருக்கும் திருடர்கள் ஆள் வருகிறார்கள் என்ற எச்சரிக்கையில் பதுங்குவார்கள்.! நினைத்துக் கொண்டே நடந்தான்.

தூரத்து மெர்க்குரி விளக்கு கம்பத்தின் கீழ் வெளிச்சத்தில் ஒரு உருவம் குத்துக்காலிட்டு தலையைத் தொங்கப் போட்டுக் கொண்டு உட்கார்ந்திருந்தது. முகம் தெரியவில்லை. அழுக்கு வேடிட்டி அழுக்கு சட்டை. நாற்பது நாற்பத்தைந்து தோற்றம்.

‘இப்படி தனி ஆளாக ஒருத்தன். யாரைப் போட்டுத் தள்ள காத்திருப்பு ?’ நினைக்கும் போதே சொரக்கென்று உள்ளுக்குள் தீ பிடித்து நடுக்கம் வந்தது சேகருக்கு. விளைவு… கடந்து போக பயம். எப்படிப்; போக….? என்று ஒருகணம் நின்று யோசிக்கவும் நடுக்கம். பயத்தை வெளியில் காட்டினால் எதிரிக்கு இளக்காரம் பிறக்கும். சாதாரணமானவனுக்கும் சீண்டிப் பார்க்கும் துணிவு வரும் ! புரிந்தது. கடப்பதைத் தவிர வேற வழி இல்லை.! துணிந்து நடந்தான்.

என்னதான் நெஞ்சுக்குள் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு நடந்தாலும்…நெருங்க நெருங்க… திக் திக் திடும்.. என்று இதயம் குதித்து பயமுறுத்தியது. அருகில் செல்ல செல்ல.. கண்ணை மூடிக்கொண்டு வேகமாக நடந்து தாண்டினான்.

”தம்பி நில்லுங்க…” அவனிடமிருந்து குரல் சாதாரணமாகத்தான் வந்தது. ஆனாலும் இவன் மனம்…

‘ஓடு! நிற்காதே!’ எச்சரித்தது.

”என்ன ?” நின்றான்.

”ஒரு உதவி!”

”சொல்லுங்க ?”

”மாம்பலத்துக்கு வழி ?”

‘ஆள் தெரிந்து கேட்கிறானா தெரியாமல் கேட்கிறானா, திருடனா, கொலைக்காரனா, கொள்ளைக்காரனா ?’ என்று அடுத்தடுத்து உள்ளுக்குள் கேள்விகள் பிறந்தாலும்…..

”இப்படியே அண்ணா மேம்பாலத்துல ஏறி, தேனாம்பேட்டை போய், மேற்கால திரும்பினா…. மாம்பலம்.” வழி சொன்னான்.

”மேற்கு எது ?”

”சென்னைக்குப் புதுசா ?”

”ம்ம்….”

”எப்படி வந்தீங்க ?”

”லோடு லாரியில வந்தேன். அங்கே இறக்கி விடுறதுக்குப் பதில் இங்கே இறக்கி விட்டுட்டாங்க. திக்கும் தெரியலை திசையும் தெரியலை.”

”எந்த ஊரு?”

”மானாமதுரை!”

”நான் மதுரை. மாம்பலத்துல யாரு இருக்கா ?”

”யாருமில்லே. பொழைப்பு அங்கே கெடைக்கும் சொன்னாங்க.”

”யாரு ?”

”எங்க ஊர்ல.”

‘பாவம்! மனுசனுக்கு மனுசன் உதவி !’ சேகர் மனது இளகியது.

”வாங்க. நான் அங்கேதான் போறேன்.” நடந்தான்.

அவனும் இவன் கூடவே நடந்தான்.

‘உங்க பேரு ?” சேகர்

”கார்த்திகேயன்.!”

சிறிது தூரம் நடந்த பின், ”சார் ?” அவன் அழைத்தான்.

”சொல்லுங்க கார்த்திகேயன்.”

”வந்து இறங்கினதுமே சகுனம் சரி இல்லே. லாரியோட பை போச்சு. எனக்கு இந்த ஊரு புடிக்கலை. திரும்பிப் போகனும்.”

”அதுக்கு நான் என்ன செய்யனும் ?”

”ஐநூறு ரூபாய் கொடுத்தீங்கன்னா….ஊர் போய் திருப்பிடுவேன்.”

‘ஆகா ! வழி காட்டி அழைச்சி வந்ததுக்கு வம்பு! – பணம் தண்டம். முகம் தெரியாத ஆள். கொடுத்தால் வராது. ‘ மனம் எச்சரிக்கை செய்தது.

”இல்லே கார்த்திகேயன்.”

”சார். சத்தியமா என் கையில பைசா இல்லே. அவசரமா இறங்கினதால லாரியில பையை விட்டுட்டேன். தயவு செய்து கொடுத்தீங்கன்னா…ஊர் போய் கண்டிப்பா திருப்பிடுவேன்.” அவன் குரல் கெஞ்சியது.

”இல்லே கார்த்திகேயன். பணம் இல்லாமத்தான் ஆட்டோவுல போகாம நடந்துவர்றேன்.”

”சார் ! ஒரு நூறு…” அவன் குரல் இன்னும் இறங்கியது.

”ம்கூம்…..”

தேனாம்பேட்டை திருப்பம். டீக்கடையில் நான்கு காக்கி உடைகள் டீ குடித்துக் கொண்டிருந்தார்கள். அருகில் ரோந்து வண்டி.

”சார்! ரொம்பப் பசி. ஒரு டீ… ?” கார்த்திகேயன் இழுத்தான்.

”வாங்க சாப்பிடலாம்.”

கடை அருகில் சென்றார்கள்.

”யார்டா நீங்க ?” இது போலீஸ்காரர்களுக்கே உள்ள குணம். டீ குடித்துக்கொண்டிருந்தவர்களில் ஒருத்தர் அதட்டினார்.

”தி.நகர் சார். சினிமா பார்த்துட்டு வர்றோம். டிக்கெட் காட்டட்டுமா ?” சேகர் பதில் சொன்னான்.

”வேணாம்.” அவர் டீயைக் குடித்து முடித்துவிட்டு வண்டிக்குச் சென்றார். கிளம்பினார்கள்.

”சார் நீங்க மாம்பலம் சொன்னீங்க. போலீசுக்கிட்ட தி. நகர் சொல்றீங்க ?” என்றான் கார்த்திகேயன்.

”ரெண்டும் ஒன்னுதான். அது பழைய பெயர். இது புதுப் பெயர். மாஸ்டர் ரெண்டு டீ!”

இருவரும் குடித்துவிட்டு நடந்தார்கள்.

போக் ரோடு தொட்டதும், ”கார்த்திகேயன் ! இதுதான் மாம்பலம். நோரா போனா பாண்டி பஜார்,பனகல் பார்க், ரங்கநாதன் தெரு. நான் இப்படியே திரும்பனும். வர்றேன்.!” சேகர் திரும்பினான்.

”நில்லு !” வந்தவன் குரல் திடீரென்று மரியாதைக் குறைவாய் ஒலித்தது.

”ஏன் ?”

”என் கையைப் பாரு.”

பார்த்தான். வலது கையில் கத்தி ! உறைந்தான்.

”கா….கார்த்திகேயன்!!”

”பர்சை எடு.” இடது கையை நீட்டினான்.

”வந்து… வந்து….”

”பேசாதே! உன் பர்சுல பணம் இருக்கான்னு பார்க்கத்தான் டீ வாங்கிக் குடுக்கச் சொன்னேன். இருக்கு… எடு.”

உயிர் பயம். விழி இல்லாமல் சேகர் நடுக்கத்துடன் எடுத்துக் கொடுத்தான்.

வாங்கி பிரித்து இரண்டு நூறு ரூபாய்த் தாட்களை மட்டும் எடுத்த கார்த்திகேயன், ”நான் கேட்டபோது கொடுத்திருந்தீன்னா 100. நானா எடுத்துக்கிட்டதால வட்டி 100. ஆக 200. பாவம்….எனக்கு அதிகம் வேணாம். நீயும் பொழைக்க வந்தவன் பொழைச்சுப்போ. உண்மையிலேயே நான் ஊருக்குப் புதுசு. வழி தெரியாம நின்னவன்தான். ஊர் புடிக்கலை… திரும்பறேன். லாரியில் இந்த கத்தியைக் காட்டி ஓசியில் வந்து இறங்கினது போல திரும்பிப் போறேன். போய்த் திருப்பறேன். நன்றி, வர்றேன்” சொல்லி பர்சை மறுபடியும் பிரித்து விசிட்டிங்க் கார்டு எடுத்துக் கொண்டு, இவன் கையில் திணித்து விட்டு நடந்தான்.

சேகர் திக் பிரமை பிடித்து ஆணி அடித்து நின்றான். 

தொடர்புடைய சிறுகதைகள்
பாமினிக்குத் தன் கணவனை நினைக்க... பொச பொசவென்று எரிச்சல், கோபம். பின்னே! தன் தம்பி. தங்கக் கம்பியைப் பற்றி முகம் தெரியாத நபரிடம் இல்லாததும் பொல்லாததுமாய்ச் சொன்னால் யாருக்குத்தான் கடுப்பு, வெறுப்பு வராது. சேதி கேட்ட அந்த அம்மாள் ஓ.... அந்தப் பெண்ணின் ...
மேலும் கதையை படிக்க...
''அம்மா. .! அம்மா ...! '' முகம் நிறைய மகிழ்ச்சியைச் சுமந்து கொண்டு விரைவாய் வரும் மகனைக் கண்டதும் அப்படியே மலை த்துப் போய் நின்றாள் தாய் விசாலாட்சி. சட்டென்று கையில் வைத்திருந்த மைசூர் பாக்கை அவன், தன் தாயின் வாயில் திணித்தான். வாய் ...
மேலும் கதையை படிக்க...
மந்திராலோசனை மண்டபத்தில் நெற்றியில் விரல் வைத்து தலை குனிந்து தனித்து அமர்ந்திருந்த எமதர்மனைப் பார்த்த சித்ரகுப்தனுக்குள் சின்ன திடுக், அதிர்ச்சி. ''மன்னா !'' அழைத்தான். ''என்ன ? '' நிமிர்ந்தார். ''தங்கள் மனைவி, மக்கள், அந்தப்புரத்தில் ஏதாவது சிக்கல், பிரச்சனையா ? '' ''இல்லை.! ஏன் ? ...
மேலும் கதையை படிக்க...
வீட்டில் தன்னந்தனியாய் படுத்தப் படுக்கையில் இருக்கும் அன்னபூரணியைப் பார்க்க அழுகை முட்டிக்கொண்டு வந்தது சுமதிக்கு. ' எப்படி நாறுந்தோலுமாய்ப் போய்விட்டாள் அம்மா..? !! ' - நினைக்க அழுகை முட்டிக்கொண்டு வந்தது. இதே ஊரில் இரண்டு அண்ணன்கள் ... மனைவி , மக்களுடன் நல்ல ...
மேலும் கதையை படிக்க...
வெகு நேர யோசனைக்குப் பின் ஒரு முடிவிற்கு வந்த சுந்தர் இருக்கையை விட்டு எழுந்தான். தொலைபேசியை நெருங்கி ஒலி வங்கியைக் காதில் வைத்து எண்களை அழுத்தினான். '' ஹலோ. .! '' எதிர் முனையில் அவள்தான் எடுத்தாள். '' பிரதீபா ! நான் சுந்தர் பேசறேன் ...
மேலும் கதையை படிக்க...
பாவம்…!
தாய் நண்டு..!
மந்திராலோசனை!
வேணாம் பதினாறு..!
பெண் அடிமை இல்லை…!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)