ஆர்ஏஜேஏ ராஜா

 

மூடியிருந்த பிரஸ் வாசலில் ராஜா சித்தப்பா உட்கார்ந்திருந்ததை வண்டிக்கு ஸ்டாண்ட் போடும்போது தான் கவனித்தேன்.

நரைத்த ரோமம் மண்டியிருந்த ஒட்டிப்போன கன்னங்களுக்கு மேலே சாராயம் வழிந்து கொண்டிருந்த பிதுங்கின பெரிய விழிகள் என்னைப் பார்த்ததும் நொடி நேரத்தில் தாழ்ந்து பதுங்கின.

ஆர் ஏ ஜே ஏ ராஜா நான் ராஜா வந்திருக்கேன் சித்தப்பாவின் குரல் காதுகளில் ஒலித்தது.

அப்பா வகையில் துாரத்து சொந்தம்.கௌரவமான குடும்பத்தில்தான் பிறந்தார். அவருடன் பிறந்தவர்கள் பஞ்சாயத்து ஆபிசில் எழுத்தராகவும் தலைமையாசிரியராகவும் இருக்கையில் இவர் மட்டும் இப்படி ஆனதற்கு என்ன காரணம் சொல்ல முடியும்? ஒரு மரத்தின் இருவிதைகளில் ஒன்று பூத்துக் குலுங்குவதற்கும் மற்றொன்று பட்டுப் போவதற்கும் யார் காரணம் சொல்ல முடியும்

அந்தக் குடிகாரப் பயகிட்ட மனுஷன் பேசுவானா என்று உறவினர்களும்,அவனிடம் நமக்கெதற்கு வம்பு என்று ஊர்க்காரர்களும் ஒதுங்கிக் கொண்டு விட்டதால்தான் ராஜா சித்தப்பா கேட்பாரற்று கோவில் காளை போல் திரிய ஆரம்பித்திருக்க வேண்டும்.

கேபிள் டிவி,டிஷ் டிவிகள் ஏன் சாதா டிவி கூட(துர்தர்ஷன்) இல்லாத ஆசிர்வதிக்கப்பட்ட என் பள்ளி நாட்களில் என்னைப் போன்ற சிறுவர்களின் ஆகப் பெரிய பொழுதுபோக்கு, ஹட்ச் விளம்பரத்தில் வரும் நாயைப் போல ராஜா சித்தப்பாவை பின்தொடர்வதுதான்.

திருஆவினன்குடி வாசலில் சூடம் வாங்கிக் கொண்டிருந்தவனின் சைக்கிளில் ஏறி மிதித்தபடி வையாபுரி குளத்தினுள் (அப்போதெல்லாம் பைபாஸ் பாலம் கட்டப்படவில்லை) சென்று கொண்டிருந்தார்.சைக்கிள் சொந்தக்காரன் திருடன் திருடன் என்று கத்தியதும் யூ டர்ன் அடித்து திரும்பியது அவன் விதி.அருகில் வந்ததும் சைக்கிளை அப்படியே கீழே போட்டு விட்டு ஒரு அறை.ஏன்டா……………..,என்ன திருடன்னா சொன்ன?

அவன் வாயோரம் சூடாக வழிந்த ரத்தம் அவனிடம் சொன்னது ஆர் ஏ ஜே ஏ ராஜா வந்திருக்கிறார் என்று.

நீங்களெல்லாம் சைக்கிள் ஓட்டிப் பழகும்போது எலெக்ட்ரிக் கம்பம்,புளிய மரம் அல்லது எருமை மாடு தானே குறுக்கே வரும்.நான் ஓட்டிப் பழகும் போது ராஜா சித்தப்பா வந்தார்.அவர் மேலே மோதிச் சரிந்த வினாடியில்,சைக்கிள் பழகித் தர வந்த கண்ணன் போன இடம் தெரியவில்லை.

டாம் அண்ட் ஜெரியில் பூனையிடம் சிக்கிக் கொண்டு மடமடவென உயிலெழுதும் எலியின் மனநிலையில் இருந்தேன்.சற்றுமுன்புதான் ப்ளாடர் காலி செய்யப்பட்டிருந்ததால் டவுசர் தப்பியது.நியாயத்தீர்ப்பு நாளின் பாவி போல் காத்திருந்த என்னை சிவந்த விழிகளால் முறைத்துப் பார்த்த சித்தப்பா,டேய் அண்ணன் மகனே பாத்து ஓட்றா என்று மன்னித்துச் சென்றது என் வாழ்வில் நிகழ்ந்த மிகச் சில அற்புதங்களில் ஒன்று.

ஒருமுறை வேறு ஏரியாவில் சென்று ப்ரச்சனை செய்தாரென்று ஆறுபேர் திருஆவினன்குடி வாசலில் வைத்து பின்னி எடுத்து விட்டார்கள்.வாய்,முகமெல்லாம் ரத்தம் வழிய வழிய தள்ளாடி எழுந்து டேய்……………… ஆம்பளையா இருந்தா ஒத்தைக்கொத்தை வாங்கடா என்று அறைகூவல் விடுத்த போதுதான் சித்தப்பா எங்களுக்கெல்லாம் பெரிய ஹீரோவாகிப் போனார்.
பின்னொரு நாள் சன்னதி வீதியில் பழைய தேவஸ்தான ஆபிசுக்கு முன்னால் காசு வாங்கிக் கொண்டு ஆசிர்வாதம் தந்து கொண்டிருந்த யானையிடம் முழு போதையில் சென்ற வணக்கம் சொன்னார்.அது ரோட்டில் கிடந்த வாழைப்பழத்தை எட்டி எடுக்கும் முயற்சியில் இருந்ததால் இவரை கவனிக்கவில்லை.

அவ்வளவுதான் ரௌத்ரமூர்த்தியாக மாறிப் போன சித்தப்பா ஏய் நாயே(???),இந்த ஆர்ஏஜேஏ ராஜா உனக்கு வணக்கம் சொல்றேன்,திமிரா பண்ற ஒரு அப்பனுக்கு பொறந்திருந்ததா வா மோதிப் பாக்கலாம் என்று ருத்ரதாண்டவம் ஆடினார்.ராஜா வேணாம் தள்ளிப் போயிரு அதுக்கு தண்ணி வாட ஆகாது சிக்கின அவ்ளவுதான் என்ற பாகனின் வார்த்தைகளுக்கெல்லாம் கட்டுப்படாமல் சலம்பிக் கொண்டிருந்தவர்,வாழைப்பழத்தை மறந்து விட்டு துதிக்கையால் துளாவியபடி ஓரடி முன்னேறிய யானையைக் கண்டதும் உன்ன அப்புறமா கவனிச்சுக்கறேன் என்று யானைக்கும் பாகனுக்கும் பொதுவாக சொல்லியபடி தன் வீரத்திற்கு சற்றும் பொருந்தாமல் தள்ளாடி நடந்து போனார்.

ராஜா சித்தப்பாவை அரெஸ்ட் பண்ண போலீஸ் வந்திருப்பதாக கோபால் சொன்னதை எங்களால் நம்பவே முடியவில்லை.வீரையா மாமாவிடம் ஏதோ பிரச்சனை செய்ததால் அவர் கம்ளைன்ட் கொடுத்துததான் போலீஸ் வந்திருந்தது.அவரது கைகளை பின்புறமாக மடக்கிக் கட்டுவதற்கு உதவும் தைரியம் கோபாலுக்கு எங்கிருந்து வந்ததென்று தெரியவில்லை.
மாமா கொஞ்சம் பொறு சாப்பிட்டுட்டு வந்துர்றேன் என்று சாப்பிட்டுக் கொண்டே போலீசிடம் சொல்ல, குதிரை வண்டியில் ஏற்றிய பின்னும் மாமா, வா வண்டில எடமிருக்கு என்று போலீஸை அழைக்க ராஜா சித்தப்பாவைத் தவிர வேறு யாருக்கு துணிச்சல் இருக்கிறது.

அவ்வளவுதான் ராஜாவோட ஆட்டம் முடிஞ்சது. ஒரு வருஷம் உள்ள போட்ருவாங்களாம் என்று வீரையா மாமா சொன்னதாக கோபால் சொன்னதைக் கேட்டதும் எங்களுக்கு துக்கம் தாளவில்லை. ராஜா சித்தப்பா இல்லாமல் அடிவாரமா?

பெரிய கடைவீதியில் வாங்கிய என்னுடைய புது பம்பரம் குத்தப்படும் ஆக்கர்களால் சிதைந்து கொண்டிருந்த துக்கத்தில் நான் தவித்துக் கொண்டிருந்த நேரத்தில்தான் கண்ணன் ஓடி வந்து சொன்னான்.நாயர் டீக்கடையில் ராஜா சித்தப்பா உட்கார்ந்திருக்கும் செய்தியை.

நாயர் டீக்கடைக்குப் பக்கத்தில் பெட்டிக்கடையில் பீடி வாங்கப் போன கோபால்,இதைக் கேட்டதும்,அங்கே போகாமல் ரெண்டு தெரு தள்ளிப் போய் பீடி வாங்கியதும்,ரொம்ப நாட்களுக்கு ராஜா சித்தப்பாவின் கண்களில் படாமல் பதுங்கியதும் இன்றுவரை நண்பர்களிடையே பிரசித்த பெற்ற நகைச்சுவையாக வழங்கி வருகிறது.

கிருஷ்ணா ஸ்டோரில் கல்கண்டு பொட்டலங்களை சூறை விட்ட போதும்,சொன்ன நேரத்தில் சட்டையை தைத்துத் தராததால் ஷோகேஸ் கண்ணாடியை உடைத்து தன் துணியை ரத்தம் வழியும் கைகளால் எடுத்துச் சென்ற போதும் பின்தொடர்ந்த நான் அறிந்திருக்கவில்லை,கால ஓட்டத்தில் சாராயமும்,போலீசில் வாங்கிய அடிகளும் தின்றது போக மிச்சமிருக்கும் தளர்ந்து ஒடுங்கின முதிர்ந்த பறவையாய் அவரை பின்னாட்களில் பார்க்க நேரிடுமென்று.

டீ போடட்டுமா என்று ஜானகி கேட்டதும்தான் சித்தப்பாவை காபி சாப்பிடக் கூட கூப்பிடவில்லையே என்ற குற்றஉணர்வு உறுத்தியது.

சட்டென்று எழுந்து வெளியே போய் பார்த்தேன்.

பிரஸ் வாசல் காலியாக இருந்தது.அவர் உட்கார்ந்திருந்த இடத்தில் நாலைந்து ஈக்கள் மொய்த்துக் கொண்டிருந்தன.

அன்று மாலை,இனி எப்போதுமே நான் காபி சாப்பிட கூப்பிட இயலாதபடிக்கு ராஜா சித்தப்பா இறந்து போனார். 

தொடர்புடைய சிறுகதைகள்
இந்த வரிகளை நீங்கள் படித்துக் கொண்டிருக்கும் வேளையில்,குற்றவுணர்வு கழுவிலேற்றியிருக்கும் நான்,மனம் சுருங்கிப் போன மனித மந்தையில் ஒரு துளி. அலுவல் நிமித்தமாக வாரத்தில் நான்கு நாட்கள் பேருந்தில் பயணம் செய்யும்படி விதிக்கப்பட்டவன். பேருந்தில் ஏறியதும் ஜன்னலோர சீட்டைத் தேடி அமர்ந்து கொள்வேன் .ஜன்னலோர சீட் ...
மேலும் கதையை படிக்க...
எம் மேல கோபமா? அலைகளின் மேல் தாழப்பறந்து விழுந்து பரவும் அலைகளின் இரைச்சலில் விலகி பின்னும் பறந்து காகமொன்று ஏதோ ஒரு சிவப்பு நிறப் பொருளை அலகுகளில் கவ்வி வந்தது. ஈரமணலில் அமர்ந்து பரவும் அலைகளுக்கு விலகி அலகுகளால் குத்தியது. சுற்றுமுற்றும் ஒர ...
மேலும் கதையை படிக்க...
ஏம்ப்பா மணி ஒன்பதரை ஆச்சு ஒன்பது மணின்னு டிக்கெட்ல போட்டு இருக்கு எப்பத்தான் எடுப்பீங்க? ஏழு மணிக்கு மேல சிட்டிக்குள்ள பஸ்சை விடமாட்டான் தெரியுமில்ல. அஞ்சு நிமிஷம் சார் ஒருத்தர் வந்துக்கிட்டு இருக்கார். பழனி பேருந்து நிலையத்தில் வெளிப்புறமாக நின்று கொண்டிருந்த தனியார் பேருந்தில் ...
மேலும் கதையை படிக்க...
சிவா இப்ப என்ன பண்ணிட்டிருக்கீங்க என்று ஆரம்பித்த ஜானகியின் கடிதத்தை படித்துக் கொண்டிருந்தேன். ஸ்கூலிருந்து வந்ததும் யூனிபார்மைக் கூட கழற்றாமல் அம்மா இன்னைக்கு ஸ்கூல்ல என்று ஆரம்பிக்கும் குழந்தை மாதிரி ஆர்டர் செய்யப்பட்ட காபி, குவளைகளின் நுண்ணிய துளைகள் வழியாக வெப்பத்தை இழந்து ...
மேலும் கதையை படிக்க...
அவள் காத்திருந்தாள்.வெகு நாட்களாக எதிர்பார்த்திருந்த வேட்டைநாள் இன்றுதானென்பது அவளுக்குத் தெரிந்து விட்டது. கொப்பளிக்கும் கோபம் நாடி நரம்புகளிலெல்லாம் கசியும் ரௌத்ர சூரியன் பற்ற வைத்த நெருப்பு, அந்த பொட்டல் வெளியெங்கும் பற்றியெறிந்து கொண்டிருந்தது.நா வறணடு துவணடு நகர்ந்தது முடமான காற்று. மேகங்களற்ற வானில் ...
மேலும் கதையை படிக்க...
ஹலோ என்றதும் மறுமுனையில் உற்சாகமாய் வழிந்தது அம்மாவின் குரல். பேத்தி பொறந்திருக்காடா அப்படியே உன்னை உரிச்சு வச்சிருக்கு. சுகப்ரசவம். ஜானகி நல்லாருக்கா நீ உடனே புறப்பட்டு வந்துரு. அப்பாவாகி விட்டேன். கடவுளே நன்றி. பத்து மாத புதிர் அவிழ்ந்து கிடைத்த விடை. ஒரு புதிய ...
மேலும் கதையை படிக்க...
ஆயுள் உள்ளவரை இன்ப துன்பம் பகிர்வேன் என்று அக்னி சாட்சியாய் கரம் பிடித்து ஆறே மாதத்தில் பலவீனமாய் இயற்கையால் சபிக்கப்பட்டவளை,. திருப்பித் தாக்க இயலாதவளை. பெற்றோர் உறவினர் நண்பர்களை விட்டு என்னையே சதம் என்று நம்பி வந்தவளை, என்னில் ஒரு துளியை ...
மேலும் கதையை படிக்க...
எல்லோருடைய கண்களும் குழைவாக வடிக்கப்பட்ட சாதம்,காய்கறிகள்,அப்பளம்,இனிப்புகள் இவற்றோடு பாலாடை மிதக்கும் காபி எல்லாம் சேர்த்து கலவையாக படைக்கப்பட்டிருந்த இலையிலும் எதிரே இருந்த வேப்பமரத்திலும் மாறி மாறி பதிந்து மீண்டன. மரணத்தின் காட்டமான நெடி சுவாசங்களில் நிறைந்திருக்க எல்லோருடைய முகங்களிலும் வியர்வை வழிந்து கொண்டிருந்தது. ...
மேலும் கதையை படிக்க...
ஜானகியைப் பார்ப்பேனென்று நான் நினைக்கவேயில்லை. அலங்கரிக்கப்பட்ட யானை,கோவில் மரத்திலிருந்து பிடுங்கிய தென்னை மட்டையின் கீற்றுக்களை துதிக்கையால் வளைத்து இழுத்து உடைத்து உண்பதை அவள் காலருகில் இருந்த குழந்தை மிரட்சியுடனும் ஆர்வத்துடனும் கவனித்துக் கொண்டிருந்தது. மாப்பிள்ளை அழைப்புக்கான கார்,ஜெனரேட்டர் பொருத்தப்பட காத்திருந்தது.பட்டுப் புடவைகளில்,மின்னும் நகைகளில், ...
மேலும் கதையை படிக்க...
எனக்கு தண்ணீர் குடிக்க வேண்டும் போலிருந்தது. இந்த நேரம் ஜனனியும் பாப்பாவும் என்ன செய்து கொண்டிருப்பார்கள்? ஜனனி டிவியில் பாடல்கள் கேட்டபடி வேலை செய்து கொண்டிருக்கலாம். பாப்பா ஸ்கூலில் இருப்பாள். பேங்கில் எவ்வளவு பணம் இருக்கிறது? சரியாகத் தெரியவில்லை.சுமாராக ஒரு ஐம்பதாயிரம் இருக்கும். ஜனனிக்கு ...
மேலும் கதையை படிக்க...
அற்பப் புழுவாகிய நான்…
கானல் வரி
இறந்தவனின் அலைபேசியிலிருந்து வரும் அழைப்பு
ஆசையில் ஓர் கடிதம்
எதிர் வினை
மகாலட்சுமி
நிறம் மாறும் தேவி
அம்மா என்றால்…
காதலெனப்படுவது யாதெனின்…
தாகம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)