Warning: Cannot modify header information - headers already sent by (output started at /home/content/42/10186442/html/index.php:2) in /home/content/42/10186442/html/wp-content/themes/Clipso/functions.php on line 189
Sirukathaigal - Sirukathai - Short Stories in Tamil

ஆசிரியர்

 

பிரம்ம நாயகம் வயது 70. தமிழாசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். பள்ளியில் பணியாற்றிய போது சில ஆண்டுகளுக்கு உதவி தலைமை ஆசிரியராகவும் இருந்தார். அவரின் பார்வைக்கும், பேச்சுக்கும் கட்டுப்பாடாத மாணவர்கள் உண்டெனில் அது ஆச்சர்யம்தான்!. இறை வழிபாட்டில் ஆரம்பித்து உலக அரசியல் வரை பேசத் தெரிந்தவர். ஆங்கிலத்தில் அவர் பேசுகிற போது, இவர் தமிழாசிரியர் தானா என்ற சந்தேகம் ஒருவர் மிஞ்சாமல் ஏற்படும் என்றால் மிகையாகாது.

பிரம்மநாயகம் பணியாற்றிய ஊர் தளபதி சமுத்திரம். பெயரில் சமுத்திரம் இருந்ததே ஒழிய, அவ்வூரில் சமுத்திரம் இல்லை. தண்ணீர் பஞ்சம் என்ற பேச்சுக்கே இடமில்லா அளவுக்கு ஊர் இயற்கையின் செல்லப் பிள்ளையாய் இருக்கிறது. ஊருக்குள் நுழையும் போதே ஒரு ரயில்வே கேட் வரவேற்கும். அதைத் தாண்டின இடப்புறத்தில், மண் குயவர்கள் மண் பாண்டங்களைத் தயாரிக்கிற அழகே அழகு. மாலை நேரங்களில் பிரம்ம நாயகத்தின் பொழுதுபோக்கு அவ்விடமே. அதனருகில்தான், மிகப் பெரிய தெப்பக்குளம் உள்ளது. பிரம்ம நாயகத்தின் வீடிருந்த வீதி, அக்ரஹார வீதி. பெருமாள் கோவிலின் இரு புறங்களிலும் ஒன்றையொன்று ஒட்டிய வீடுகள். ஒவ்வொரு வீட்டின் நீளமும் சொல்லி மாளாத அளவுக்கு நெடியது. தெருவின் கடைசி வீட்டில் இருந்த படியே பெருமாளை வணங்க முடியும். அந்த வகையில்தான் அவ்வீதி வடிவமைக்கப் பட்டிருந்தது. காலையிலும் மாலையிலும் ஆண்டாள் பாசுரமும், திருப்பாவையும் ஊரை இறைப் பக்திக்கு அடிமையாக்கி இருந்தது.

ஊர், பிரம்ம நாயகத்தின் மீது மிகுந்த மரியாதை கொண்டதற்கு எதைக் காரணமாகக் கூறுவது? அவரது உலக அறிவா? அரசுப் பதவியா? நேர்மையான பேச்சா? துணிவோடு ஊர் பிரச்சினைகளுக்காக உழைப்பதா? அத்தனையும் என்று ஒற்றை வரியில் சொல்லிவிட்டுப் போய் விடலாம். இப்போதெல்லாம் புத்தகம் படிப்பதும், மாலை நேரங்களில் வீட்டின் வெளியே சாய்வு நாற்காலியில் ஓய்வெடுப்பதும் தான் வழக்கமாக உள்ளது.

அவரைக் காண ஒரு இஸ்லாமியர், அவர் வீடு தேடி வருகிறார். வயது 40 இருக்கும். மகன் கோமதி சங்கரன் தான் வரவேற்கிறார். அவர் யாரெனத் தெரியாதெனினும் வாங்க… உள்ளே வாங்கன்னு அன்போடு வரவேற்கிறார். இது பிரம்ம நாயகம் ஐயா வீடுதானங்க என்கிறார். அந்நேரம் பிரம்ம நாயகமும் அங்கு வருகிறார். அவரைக் கண்டவுடன், இஸ்லாமியர் , ஐயா நீங்க மட்டும் இல்லன்னா நான் இன்னைக்கு இப்படி இருப்பேன்னு கனவுல கூட நினைக்க முடியல என்று ஓவெனக் கதறி அழுதவர், என்னை ஆசிர்வாதம் பண்ணுங்கன்னு காலில் விழுகிறார்.

பிரம்ம நாயகம் அவரை ஆசிர்வதித்த காயோடு , தம்பி நீங்க யாருன்னே எனக்கு ஞாபகப் படுத்த முடியல….

ஐயா நான் தான்யா, இஸ்மாயில் உங்ககிட்ட 10 ஆம் வகுப்பு படித்த மாணவன். இப்ப ஞாபகம் வருதுங்களா… என்றான்.ஆ….ன் சரி…சரி… ஞாபகம் வந்திருச்சுப்பா. இல்லைய்யா , கல்லிடைக்குறிச்சி வீட்டுக்குப் போய் பார்க்கப் போனேன். நீங்க தளபதிசமுத்திரத்துக்கு வந்து செட்டிலாகிட்டிங்கன்னு சொன்னாங்க . உங்க அறிவுரையால் தான், நான் இன்னைக்கு சமூகம் மதிக்கிற அளவுக்கு உயர்ந்திருக்கேன். தான் ஒரு டிடி ஆர் -ஆக பணியாற்றுவதாகவும் , ரொம்ப நாளா உங்களைப் பார்க்கணும், ஆசிர்வாதம் வாங்கனும்ன்னு மனசு கிடந்து அரிச்சுக்கிட்டே கிடந்தது ஐயா.. இன்னைக்கு ரொம்ப ஆத்ம திருப்தியா இருக்குது என்று, பிரம்ம நாயகத்தின் கேள்விகளை எதிர்பார்க்காதவனாய் மனதில் தோன்றியதை ஒருவித படபடப்புடன் கூறுவதை கோமதி சங்கரன் கவனித்துக் கொண்டிருந்தார்.

கோமதி சங்கரனும் தந்தை வழியில் தமிழாசிரியர் தான். தந்தையைப் போலவே தன் பணியை நேர்மையோடும் திறம்படவும் செயல்படும் சில ஆசிரியர்களில் ஒருவரான அவருக்கு, தன் கண்முன் நிகழ்கின்றவற்றை நெகிழ்வோடு கண்டு கொண்டிருந்தார்.

இஸ்மாயில் மதிய உணவை அவர்களோடு கழித்து விட்டு சென்று விட்டார். கோமதி சங்கரன், யாரப்பா உங்க பழைய மாணவனா என்று கேட்டார். ஆமாப்பா, இஸ்மாயில் வகுப்பில ரொம்ப மக்கு மட்டுமல்ல. ரொம்ப முரட்டு சுபாவம் கொண்டவனாகவும் இருந்தான். ஒவ்வொரு வகுப்பிலும் பெயிலாகி ..பெயிலாகிப் படிச்சான். வீட்டிற்காக பள்ளிக்கு வந்தானே ஒழிய, படிப்பின் மீது சுத்தமாக ஆர்வமும் குறைந்திருந்தது. பள்ளியில், தான் செய்கிற அடாவடிகளுக்கு மற்ற மாணவர்கள் அடி பணிவதால் தனக்குள் ஹீரோன்னு நினைப்பான்பா…

சரிப்பா, அப்புறம் எப்படி இன்னைக்கு இவ்வளவு நல்லவனா திருந்தி இருக்கான்னு கோமதி சங்கரன் கேட்க , தன் பள்ளியில் நடந்த இஸ்மாயில் சம்பந்தப்பட்ட நினைவுகளை மகனோடு பகிர்ந்து கொள்கிறார்.

இஸ்மாயில் ரொம்ப முரட்டு சுபாவம்னு தெரியும். ஆனா அவனுடைய முரட்டு சுபாவம் எப்ப, ஆசிரியர்களையும் பள்ளியில் பணியாற்றுபவர்களையும் மதிக்கலன்னு தெரிஞ்சப்ப தான் பிரச்சினை ஆரம்பமாச்சுப்பா.

அவன் கூடவே படிச்ச அப்துல் காதிர் கிளெர்க் வேலை கிடைச்சு , எங்க பள்ளிக் கூடத்துக்கே வேலைக்கு வந்தான். ஒருநாள் தலைமை ஆசிரியர் அப்துல் காதிரை அனுப்பி அட்டெண்டன்ஸ் எடுத்து வரச் சொன்னார். மற்ற மாணவர்கள் ப்ரெசென்ட் சார்னு சொல்ல, இஸ்மாயில் மட்டும் சுந்தர காண்டம் படத்தில வர்ற மாணவன் மாதிரி ப்ரெசென்ட் ன்னு மட்டும் சொல்ல, அப்துல் தலைமை ஆசிரியரிடம் கம்ப்ளைன்ட் பண்ணினார்.

தலைமை ஆசிரியர் இஸ்மாயிலைக் கூப்பிட்டு ஏம்பா இப்படி பண்ணுறன்னு கேட்க, அவனை நான், எப்படி சார்னு கூப்பிடுவேன்னு கேட்க, அந்த சமயத்தில தலைமை ஆசிரியர் , விடு அப்துல் அவன் அவ்வளவுதான்னு சொல்ல, இஸ்மாயில் தலைக்கனம் கொண்டான்.

மறுநாள் நான் வகுப்பில் வருகைப் பதிவேடு எடுக்க , எல்லா மாணவர்களும் தமிழில் உள்ளேன் ஐயா என்று சொல்ல, இஸ்மாயில் மட்டும் உள்ளேன் என்றான். நான் திரும்பவும் அவன் பெயரை அழைக்க மீண்டும் உள்ளேன் என்று மட்டும் சொன்னானே தவிர , உள்ளேன் ஐயா என்று சொல்லவில்லை. நான் டேய் , ஆசிரியருக்கு மரியாதை எல்லாம் கொடுக்க மாட்டியா என்றேன்.

துளியும் தாமதமில்லாமல், வேணும்னா போய் தலைமை ஆசிரியரிடம் புகார் அளிச்சுக்கோங்க என்றான். டேய் , உனக்கு மரியாதைக் கிடைக்கலன்னா என்ன பண்ணுவன்னு கேட்ட போது , போங்க தமிழ், இப்படி பேசுனால்லாம் சார்னு சொல்லிருவன்னு நினைக்கிறீரோ … அப்துல் காதிருக்கு மரியாதைக் கொடுக்காதப்பவே இவனுக்கு சரியான முறையில் அறிவுறுத்தி இருந்தா, இப்படி பேச மாட்டான்னு புரிஞ்சுகிட்டேன்.

நீ என்னைக்கு என்னைப் பார்த்து மன்னிச்சுக்கோங்கன்னு சொல்றியோ அன்னைக்கு , வகுப்புக்குள்ள வந்தா போதும்னுட்டேன். இஸ்மாயில் பள்ளியில் நடப்பதை வீட்டில் எதுவும் கூறவில்லை. இப்படியாக இரண்டு மூன்று நாட்கள் போனது. நாலாவது நாள் எல்லா மாணவர்கள் முன்னும் , யோவ் தமிழ்….. தைரியம் இருந்தா இன்னைக்கு செக்கடி சந்தைக்கு வாரும்யா …. உம்மைக் கத்தியாலேயே குத்துறன்னா இல்லையான்னு பார்ப்போம்ன்னு தனக்கே உரிய முரட்டு சுபாவத்துடன் சவால் விட்டான். சரிப்பா, நான் இன்னைக்கு வர்றேன் . உன்னோட அசட்டு தைரியத்தைப் பற்றி நான் பயப்படப் போறதில்லன்னு சொல்லிட்டேன்.

இந்த விடயம் பள்ளி முழுக்கப் பரவ பள்ளியில் இருந்து அவன் வீட்டுக்கும் யாரோ தகவல் அனுப்பி விட்டார்கள். அன்று மாலை நான் அவன் குறிப்பட்ட செக்கடி சந்தைக்குப் போனேம்பா…. அவனும் அங்க வந்திருந்தான். வந்தவன் இன்னைக்கு எப்படிக் கால்ல விழுந்தானோ, அப்படியே அன்னைக்கு சாயங்காலமும் காலில் விழுந்து கதறி அழுதான்.

தமிழ் ஐயா , என்னை மன்னிச்சிருங்க. நீங்க புத்தி சொன்னப்பவோ , எங்க அப்பா புத்தி சொன்னப்பவோ எனக்கு உரைக்கில . இன்னைக்கி மட்டும் அந்த சம்பவம் நடக்கலன்னா நான் நிச்சயம் உங்களைக் கத்தியால் குத்தி இருப்பேன் ஐயா என்றவன், ஐயா எங்க அண்ணன் பையனுக்கு ஏழு வயசிருக்கும். என்னைப் பார்த்து பேர் சொல்லிக் கூப்பிட்டான். டேய், சித்தப்பான்னு சொல்லுன்னு ரெண்டு தடவை சொன்னேன். ஆனா அவன் திரும்ப திரும்ப என்னைப் பெயர் சொல்லிய படியே இருந்தான். ஓங்கி கோபத்தில அடிச்சுட்டேன். அப்பத்தான் அப்பா என் புத்தியில உரைக்கிற மாதிரி சொன்னார்.

துரைக்கு , வாத்தியாரை ஐயான்னு சொல்ல முடியாது. ஆனா ஏழு வயசுப் பையன் மரியாதை கொடுக்கலன்னா கோபம் வருதோ…. ன்னு கண்டபடி திட்டிட்டார். நீ இன்னைக்கு மட்டும் ஐயா கால்ல விழுந்து மன்னிப்புக் கேட்கலன்னா, நானே ஒன்னை வெட்டிப் போடுவேன்னு சொல்லிட்டார்ன்னு சொல்லிக் கதறி அழுதான்.

என்னால் அவன் அழுத அழுகையைக் கட்டுபடுத்த முடியவில்லை. கேவிக் கொண்டே, ஐயா எனக்குப் படிப்பே வர மாட்டேங்குது. பத்தாக்குறைக்கு எல்லாரும் என்னை மண்டு மண்டுன்னு சொல்லியே நான் முரடனாகிட்டேன்னு சொன்ன நிமிடம் ஒரு ஆசிரியனாக நான் உடைந்தே போனேன். மகனிடம் சொல்லிய போது அவர் கண்ணில் நீர் வழிந்து கொண்டிருந்தது. அப்புறம் என்னப்பா நடந்தது என்று கோமதி சங்கரன் கேட்டார்.

இஸ்மாயில், உன்னால நிச்சயம் படிக்க முடியும்டா… நீ மனசு வச்சா.. என்றேன். நாளையில் இருந்து நீ என்னோட வீட்டுக்கு வாப்பா. நானே உனக்கு எல்லாப் பாடத்தையும் சொல்லிக் கொடுக்கன்னு சொன்னேன். அதுக்கப்புறம் அவன் நல்ல மார்க் எடுத்து தேர்வானான். அப்பப்ப பள்ளிக்கு வருவான். ரொம்ப வருடத்துக்கு அப்புறம் இன்னைக்கு பார்க்க வந்ததை நெகிழ்வோடு சொல்லிக் கொண்டிருந்தார்.
ஆசிரியனான கோமதி சங்கரனுக்கு, தன் காலத்தில் பணிபுரிகிற ஆசிரியர்களையும், பள்ளிகளின் செயல்பாடுகளையும், இன்றைய பெற்றோர்களின் மனநிலையையும், மாணவர்களின் நடவடிக்கைகளையும் எண்ணிப் பார்த்தவனுக்கு , யார் நன்மனம் கொண்டவர்கள் என்பதற்குப் பதிலாக யார் இவர்களில் அதிகக் குற்றத்திற்கு உரியவர்கள் என்று சிந்தித்துக் கொண்டிருந்தார். 

தொடர்புடைய சிறுகதைகள்
மணி இரவு பத்து. மூன்றாம் பிறை வந்து போய் விட்டிருந்தது. கும்மிருட்டு. ஆலமரத்தடி. நான் மட்டும் தனியாக!. தென்றலாய்க் காற்று வீசுகிறது. தூரத்தில் தெரியும் சைக்கிளின் டைனமோ வெளிச்சம். மரத்திலிருந்து வரும் பறவையின் மெல்லிய முனங்கல். எதையும் ரசிக்க இயலாதவனாய் நான். ...
மேலும் கதையை படிக்க...
கதிரவன் தன் கண்களை மூடிக்கொள்ளும் நேரத்தில்தான் , நான் பயணம் செய்த தமிழ்நாடு எக்ஸ்பிரஸ், டெல்லிக்கு விடை கொடுத்து சென்னையை நோக்கி பயணப்பட ஆரம்பித்திருந்தது. எனக்கு எதிரே முகத்திற்கு மெல்லிய வர்ணம் பூசிய 19 வயது வண்ணக்குயிலொன்று தன் தாய் தந்தையுடன் ...
மேலும் கதையை படிக்க...
சார்…. சார்… உங்களை ரவிக் குமார் சார் கூப்பிடுறார். உடனே வரணுமாம். ஆபீஸ் அசிஸ்டன்ட் சொல்லி விட்டுப் பதிலை எதிர்பார்க்காமல் சென்றான். அவனைப் பொறுத்த வரையில் மெசேஜை பாஸ் பண்ணனும். அவ்வளவு தான். என்ன மனுசன்டா இவன்னு நினைச்சுக்கிட்டே பாஸ் அறைக்குள் சென்றேன். சார்….. ...
மேலும் கதையை படிக்க...
கதிரவன் தன் கண்களை விழித்துக் கொள்ளும் நேரம், கதிரேசனின் கைபேசி ரீங்காரமிட்டுக் கொண்டிருந்தது. தூக்கக் கலக்கத்தில் கதிரேசன் வேண்டா வெறுப்புடன் அழைப்பை ஏற்றான். கைபேசியில் அழைத்தது அக்காள் தெய்வநாயகிதான். தெய்வநாயகி கிராமத்து நடுநிலை பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றுகிறாள். கைபேசி அழைப்பை ஏற்ற ...
மேலும் கதையை படிக்க...
அப்போது எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். அன்று சனிக்கிழமை. இப்போது போல், பள்ளிகளில் சனிக்கிழமைகளில் எல்லாம் பள்ளிக்கூடத்தைத் திறந்து வைத்துக் கொடுமை பண்ணியதில்லை. அப்பா என்னைக் கூப்பிட்டு, டேய்… மூர்த்தி அப்பா என்ன கொண்டு வந்திருக்கேன் தெரியுமா …. இங்க பாரு, ...
மேலும் கதையை படிக்க...
மனிதர்களை எப்படி புரிந்து கொள்வது என்பது இறுதி வரை புலப்படாமல் போய்விடுமோ என்று யோசித்துக்கொண்டே இருக்கிறேன். பொருளாதார அளவில் வாழ்க்கையில் மேலெழுவதும் கீலெழுவதும் மனிதர்களுக்கு நடந்திருக்கிறது என்பதில் அவ்வளவு வியப்புகள் ஏற்படுவதில்லை. அவை பற்றிய நிறைய கதைகளையும் அனுபவங்களையும் நேரில் கண்டதாலோ ...
மேலும் கதையை படிக்க...
எல்லா நாட்களிலும் மாலையில் இருட்டு ஒரே மாதிரி வருவதில்லை. எத்தனையோ நாட்களில் அது, தான் விரும்புவது போல வந்து விடுகிறதோ என்று எண்ணத் தோன்றுகிறது. அதுவும் மாலை நேரத்து மஞ்சள் வெயில் பார்ப்பதற்கு வானத்தில் நிறத்தையே ஓரிடத்தில் மாற்றிக் காண்பிக்கிற அந்த ...
மேலும் கதையை படிக்க...
தவிப்பு
ஐ லவ் யூவும் ஏடாகூடமும்
கவரி மான்
கோயில் கொடை
ஜிக்கி
கோகிலாவின் வருகைக்குப் பின்னால்…
காக்க…. காக்க….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)