ஸ்ரீ ராம ஜெயம்

 

கிரிக்கும் பிரமிளாவுக்கும் திருமணமாகி இரண்டு வருடங்கள் ஆகிறது. இவர்களுடைய பெற்றோர் பார்த்து நிச்சயித்து செய்து வைத்த திருமணம்தான் என்றாலும் இருவருடைய சம்மதத்துடன்தான் இந்த திருமணம் நடந்தது.

கிரி மிகவும் பொறுமைசாலி. கோபம் வராது, வந்தால் எளிதில் போகாது. பிரமிளா இதற்கு நேர்எதிர். அடிக்கடி கோபப்படுவாள், ஆனால் சில மணி நேரத்தில் அந்த கோபம் மறைந்துவிடும்.

திருமணமாகி முதல் ஆறு மாதங்கள் எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல், மகிழ்ச்சி நிறைந்திருந்தது இவர்களது வாழ்க்கை. அப்போதெல்லாம் கிரியின் அலுவலகத்திலும் அவனுக்கு வேலைப்பளு அதிகமாக இருந்ததில்லை. அதனால் வீட்டிலும் சரி, அலுவலகத்திலும் சரி, நிம்மதி இருந்தது.

ஆனால் கடந்த ஒன்றரை வருடங்களாக வேலைப்பளு அதிகமாகியிருந்தது கிரிக்கு. பல ஞாயிற்றுக்கிழமைகளில் கூட அவன் அலுவலகத்துக்குச் செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டது. இதனால் இவர்களது வீட்டில் சின்னச் சின்ன சண்டைகள் அவ்வப்போது தோன்ற ஆரம்பித்தன.

நாளடைவில் இந்த சண்டைகள் அதிகமாயின. கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன கதை போல, நிலைமை இன்னும் மோசமாகி, தினம் ஒரு சண்டை என்றானது. கிரியின் பொறுமையின் எல்லை குறைந்து கொண்டே வந்தது.

அன்றொரு நாள், கிரி அலுவலகத்தில் இருந்த சமயம். பிரமிளாவிடம் இருந்து கிரியின் செல்ஃபோனுக்கு அழைப்பு வந்தது. இரண்டு முறை அழைப்பைத் துண்டித்து செல்ஃபோனை கீழே வைத்தான்.

மூன்றாவது முறை அவளிடமிருந்து வந்த அழைப்பை ஏற்று பேச ஆரம்பித்தான். ஒரு நிமிடம்கூட ஆகியிருக்காது. அதற்குள் கிரிக்கு கோபம் வந்துவிட்டது.

“ஆமா, இன்னிக்கும் லேட்டாதான் வருவேன். வேலை இருக்கு. இதெல்லாம் உங்கிட்ட சொல்லி புரிய வெக்கணும்னு எனக்கு அவசியம் இல்ல” என்று கோபமாகப் பேசிவிட்டு அடுத்த நொடி அந்த அழைப்பைத் துண்டித்தான்.

“டெய்லி இதே டார்ச்சராப் போச்சு. எப்போ பாத்தாலும் சீக்கிரம் வா, ஏன் லேட்டுன்னு.. ஒரே தொல்லை” என்று முணுமுணுத்தபடியே தன் செல்ஃபோனை அணைத்தான்.

அன்று அலுவலக வேலையை முடித்துவிட்டு வீட்டுக்கு வந்து சேரும்போது மணி இரவு பத்து ஆகியிருந்தது. வீட்டின் காலிங்க் பெல்லை அடித்தவுடன் பிரமிளா வந்து கதவைத் திறந்தாள்.

“என்ன கிரி, இன்னிக்கும் இவ்ளோ லேட்டு? லேட்டாகும்னு முன்னாடியே சொல்லிருக்கலாமில்ல?” என்று பதற்றத்துடன் கேட்டாள் பிரமிளா. அதற்கு கிரி, “நான்தான் அப்பவே சொன்னேனே லேட்டாகும்னு. எத்தனை தடவை அதையே சொல்லணும்னு நெனைக்கிறே?” என்று வேண்டாவெறுப்பாக பதில் சொல்லிவிட்டு உள்ளே நுழைந்தான்.

“அந்த பாழாப்போன செல்ஃபோனை எங்க வெச்சு தொலைச்சீங்க?”

“எங்கிட்டதான் இருக்கு. ஏன், அது எதுக்கு உனக்கு?”

“கொஞ்சம் உங்க செல்ஃபோனை ஆன் செஞ்சு பாருங்க. எத்தனை தடவை கால் பண்ணேன் தெரியுமா?”

“அதெல்லாம் அப்பறமா பாக்கறேன். நான் ஆஃபீஸ்லயே சாப்பிட்டுட்டேன். தூக்கம் வருது. நாளைக்கும் நெறைய வேலை இருக்கு. சீக்கிரம் ஆஃபீஸுக்குப் போகணும்” என்று எதையுமே பொருட்படுத்தாமல் தங்கள் அறைக்குச் சென்று உடை மாற்றிக்கொண்டு கட்டிலில் படுத்தான். இதற்கு மேல் என்ன பேசுவது என்று தெரியாமல் வாயடைத்துப் போனாள் பிரமிளா. சிறிது நேரத்தில் அவளும் வந்து, கிரியின் வலது பக்கத்தில் படுத்துக்கொண்டாள்.

யாரோ அழுவது போல் சத்தம் கேட்டதால், தன் வலது பக்கம் திரும்பிப் பார்த்தான் கிரி. பிரமிளா அந்தப் பக்கமாக திரும்பிப் படுத்துக்கொண்டு அழுதுகொண்டிருந்தாள். “ஒன்னுமில்லாத விஷயத்துக்கு என்னோட சண்டை போட்டுட்டு இப்போ அழுது நாடகமாடுறா இவ” என்று நினைத்தபடியே அதைக் கண்டுகொள்ளாமல் மீண்டும் திரும்பிப் படுத்தான்.

ஒரு மணி நேரம் போனது. அழுகை சத்தம் நின்றிருந்தது. இப்போது என்ன செய்கிறாள் என்று பார்ப்பதற்கு மீண்டும் தன் வலது பக்கம் திரும்பிப் படுத்தான் கிரி. பிரமிளா அந்த இடத்தில் இல்லை. வீட்டுக்கூடத்தில் விளக்கு எரிந்து கொண்டிருப்பது தெரிய, எழுந்து கூடத்திற்குப் போனான் கிரி.

கூடத்தின் வலது பக்கத்தில், சாமி படங்களை மாட்டி வைத்திருக்கும் ஒரு சின்ன பூஜை அறையில் உட்கார்ந்து பிரமிளா எதையோ படித்துக்கொண்டிருப்பதைப் பார்த்தான் கிரி. வெகு நேரம் அழுதுகொண்டிருந்ததால் அவள் கண்கள் சற்று சிவந்திருந்தன.

“ஏன் அழுதிட்டு இருந்தே நீ?” என்று பிரமிளாவைக் கேட்டான் கிரி. பதில் ஏதும் வரவில்லை அவளிடமிருந்து.

“கேக்கறேன்ல. எதுக்கு அழுதுட்டு இருந்தே?”

“நான் அழுததை நீங்க பாத்தீங்கன்னு எனக்குத் தெரியும். இப்பவாவது ஏன்னு கேக்கறீங்களே! சந்தோஷம்” என்று வருத்தத்துடன் சொன்னாள் பிரமிளா.

“ஆமா, நீ இப்பல்லாம் சும்மாவே அழ ஆரம்பிச்சுடறே. அதான் எல்லாத்தையும் கேக்கறதில்லை”

“உங்களுக்கு இப்படித்தான் தோணும்”

“சரி, விஷயத்தை சொல்லு. ஏன் அழுதுட்டு இருந்தே?”

“இன்னிக்கு சாயங்காலம் நான் வெளியே போய் காய்கறி வாங்கிட்டு வரும்போது நம்ம மெயின் ரோடுல ஒரு பெரிய ஆக்ஸிடென்ட் நடந்திருந்தது. அதுல ஒரு பைக் பயங்கரமா அடி பட்டு, சொட்டையா இருந்தது. அது நீங்க வெச்சிருக்கற அதே கறுப்பு கலர் பல்சர் பைக். நம்பர் ப்ளேட் நொறுங்கி போயிருந்துச்சு. பார்த்து பதறிட்டேன். என்ன செய்யறதுன்னே தெரியலை எனக்கு”

“எனக்கு ஃபோன் பண்ணியிருக்க வேண்டியது தானே?”

“நான் ஆறு தடவை உங்க செல்ஃபோனுக்கு கால் பண்ணேன். நீங்கதான் உங்க ஃபோனை அணைச்சு வெச்சிருந்தீங்க”

தான் வேண்டுமென்றே செல்ஃபோனை அணைத்து வைத்திருந்தது நினைவுக்கு வந்தது கிரிக்கு. பதில் ஏதும் பேச முடியவில்லை அவனால்.

“பதட்டத்துல அங்க இருந்தவங்ககிட்ட அந்த பைக்கை ஓட்டிட்டு வந்தவரோட அடையாளத்தைக் கேட்டு தெரிஞ்சுக்கிட்ட அப்பறம்தான் அது நீங்க இல்லைன்னு தெரிய வந்தது. ஆனாலும் நீங்க வீட்டுக்கு வர்ற வரைக்கும் பயந்துக்கிட்டே இருந்தேன். அதனாலதான் நீங்க வீட்டுக்குள்ள நுழைஞ்சவுடனே உங்ககிட்ட அப்படிக் கேட்டேன். நீங்க கோபிச்சுக்கிட்டீங்க”

தான் செய்த தவறு புரிந்தது கிரிக்கு. எங்கே போனது தன்னுடைய இயல்பான பொறுமை என்று தன்னைத்தானே கேட்கத் தொடங்கினான்.

சில நொடிகளுக்குப் பிறகு, “ஸாரி பிரமிளா, ஆஃபீஸ் டென்ஷன்ல அப்படி பேசிட்டேன்” என்று தன் தவறை உணர்ந்தவனாக சொன்னான். மீண்டும், பழைய கிரி போல் பொறுமையாக, அடிக்கடி கோபப்படாமல் இருக்க வேண்டும் என்று நினைத்தான்.

“நான்தான் ஸாரி சொல்றேன்ல பிரமிளா. இனிமே இப்படி செய்யமாட்டேன். இன்னும் ஏன் இங்க உக்காந்துட்டு இருக்கே? தூங்கலாம் வா” என்றான் கிரி.

அதற்கு பிரமிளா, “இல்லைங்க. நீங்க போய் தூங்குங்க. அந்த ஆக்ஸிடெண்டான வண்டியைப் பார்த்தவுடனே ரொம்ப பயந்து போயிட்டேன். உங்களையும் தொடர்பு கொள்ள முடியலை. அந்த நேரத்துல நீங்க நல்லபடியா வீட்டுக்குத் திரும்பணும், அதுக்காக ஆயிரம் தடவை ஸ்ரீ ராம ஜெயம் எழுதறதா வேண்டிக்கிட்டேன். அது இப்போதான் ஞாபகம் வந்தது. அதை முதல்ல எழுதி முடிச்சிட்டு வர்றேன்” என்றாள்.

பிரமிளா தன் மீது வைத்திருக்கும் உண்மையான பாசமும், காதலும் புரிந்தது கிரிக்கு. தன் செயலை நினைத்து தன்னைத்தானே மனதுக்குள் திட்டிக்கொண்டான். இனி இப்படி நடந்துக்கொள்ளக்கூடாது என்று முடிவெடுத்து கூடத்தில் போடப்பட்டிருந்த நாற்காலியில் உட்கார்ந்தான்.

“நீங்க போய் தூங்குங்க. நான் எழுதி முடிச்சிட்டு வர்றேன். இன்னும் கொஞ்ச நேரம் ஆகும்” என்றாள் பிரமிளா, “பரவாயில்லை பிரமிளா. நான் வெயிட் பண்றேன். நீ பொறுமையா எழுது. ஸ்ரீ ராம ஜெயம் எழுதறதுக்கு ஸ்பெல்லிங் கரெக்ட்டா தெரியுமில்லை உனக்கு?” என்று கிரி கிண்டல் செய்ய, பிரமிளா புன்னகைத்தாள். 

தொடர்புடைய சிறுகதைகள்
ஞாயிற்றுக்கிழமை, நேரம் காலை 6 மணி. காலிங் பெல் சத்தம் கேட்டது. தூக்கத்திலிருந்து முழித்தார் கணேசன். “நீ தூங்கு மீனா. இன்னிக்கு நான் சமையல் வேலை எல்லாத்தையும் பாத்துக்கறேன்” என்று சொல்லிவிட்டு எழுந்து சென்றார். மீனா வேறு யாரும் இல்லை, அவர் ...
மேலும் கதையை படிக்க...
சென்னை ஏ. ஜி. எம் மருத்துவமனையில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தாள் சாந்தி. தவறு அவளுடையது அன்று. சாலையோரத்தில் இருந்த ஓர் இளநீர் கடையில், இளநீர் வாங்கி குடித்துக் கொண்டிருந்தாள். ஆனால் அப்போது அந்த சாலையில் நடந்த விபத்தினால், எதிர்பாராத விதமாக ஒரு ...
மேலும் கதையை படிக்க...
வருடம் 1945. திருச்சி அருகே காட்டுப்புத்தூர் என்று ஒரு சிறு கிராமம். மேட்டுத்தெருவில் அடுத்தடுத்த வீடுகளில் வசித்து வருகின்றனர் மாடசாமியும், கோபாலும். இருவரும் ஒரு விவசாய நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் பார்த்து வருகின்றனர். மாடசாமியின் மனைவி மீனாவும், கோபாலின் மனைவி ...
மேலும் கதையை படிக்க...
தாம்பரம் ரயில் நிலையம். காலை 8 மணி. ரயிலுக்காகக் காத்துக் கொண்டிருந்தான் சந்துரு. நேற்று நடந்ததை எண்ணினான். மயிலை ரயில் நிலையத்தில் நேற்றுதான் அவளை முதன்முதல் பார்த்தான். 5 அடி 8 அங்குலம் உயரம் அவள். கடலை மாவு நிறம், சுருள் முடி, சற்றே ...
மேலும் கதையை படிக்க...
“வாங்கடா சீக்கிரம், படம் ஆரம்பிச்சிடப் போறாங்க” என்று தன் நண்பர்களான சிவா, பாபு, மணி ஆகியோரை கிளப்பிக்கொண்டு திரையரங்கத்திற்கு உள்ளே சென்றான் ரவி. படம் விறுவிறுப்பாகப் போய்க்கொண்டிருந்த்த போது இடைவேளை வந்தது. “சரிடா, சாப்படறதுக்கு ஏதாவது வாங்கிட்டு வரலாம் வா” என்று ...
மேலும் கதையை படிக்க...
வெற்றி நாயகன் தேவா என்றால் தமிழ் நாட்டில் எல்லோருக்கும் தெரியும். சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த ஒரு ஹீரோ. அவர் இது வரை 70 திரைப்படங்களில் நடித்துள்ளார். அவற்றில் 50 படங்களுக்கு மேல் சூப்பர் ஹிட். இவர் ஒரு ...
மேலும் கதையை படிக்க...
நேரம் காலை பத்து மணி. தாய் ராஜலக்ஷ்மி, தந்தை சிவப்ரகாஷ், மனைவி மீனாக்ஷியிடம் சொல்லிவிட்டு சென்னையில் அடையாரில் இருக்கும் தன் எலெக்ட்ரானிக்ஸ் ரிப்பேர் கடைக்குச் செல்ல தயாரானான் பாபு. சிவப்ரகாஷுக்கு வயது 70 ஆகிறது, ராஜலக்ஷ்மிக்கு வயது 60. தஞ்சாவூர் மாவட்டத்தில் ...
மேலும் கதையை படிக்க...
பெங்களூர் விமான நிலையம். சென்னை செல்லும் ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் ஏதோ சின்ன கோளாறு இருப்பதால், அதை சரி செய்து அதற்குப் பிறகுதான் விமானம் கிளம்ப முடியும். அதற்கு இன்னும் 2 மணி நேரமாவது ஆகும் என அறிவிப்பு வந்தது. எப்படி நேரத்தைக் ...
மேலும் கதையை படிக்க...
வீட்டிலிருந்து பத்து மணிக்கு மனைவி அம்பிகா, மகள் அஞ்சலி, மகன் அரவிந்தனுடன் லண்டன் ஹீத்ரோவ் விமான நிலையத்திற்கு புறப்படுகிறான் கார்த்திக். இரட்டையர்களான அஞ்சலி, அரவிந்தனுக்கு ஐந்து வயது. ஒரு மென்பொருள் நிறுவனத்தின் இணை இயக்குனரான கார்த்திக்கும், லண்டன் பல்கலைக்கழகத்தில் பேராசிரியையாகப் பணிபுரியும் ...
மேலும் கதையை படிக்க...
“அம்மா, என்னை ஆசீர்வாதம் பண்ணுங்கம்மா” அம்மாவின் காலில் விழுந்தேன். “எழுந்திருப்பா. இதே மாதிரி இன்னும் நிறைய பிறந்த நாள் உனக்கு வரணும். சந்தோஷமா, நிம்மதியா இருக்கணும்” என் தோளை தொட்டு தூக்கினார். எழுந்து பார்த்தபோது அம்மாவின் கண்களில் அன்பு, பாசம் வழிந்து கொண்டிருந்தது. “என்னம்மா, ...
மேலும் கதையை படிக்க...
உன்னருகே நானிருந்தால்
அப்பனுக்குப் பிள்ளை…
மார்கோனி
ரயிலில் வந்த மயில்
பயம்
ஹீரோ
தூக்கம்
காதல் – 21ம் நூற்றாண்டு
சிவப்பு மஞ்சள் பச்சை
தீதும் நன்றும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)