Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

வேட்கை!

 

காற்றின் ஓலம் அதன் வேகத்தைக் காட்டிக்கொண்டிருந்தது.. வெள்ளைப் புழுதியாய் பனிமணல் அலைந்து பறந்து ரோட்டில் கோலம் போட அதில் உருவங்கள் தேடித் தேடி நேரத்தைக் கொண்டுகொண்டிருந்தாள் வசந்தமலர்.. .வேலை முடியும் நேரத்திற்கு இன்னும் ஒருமணி நேரம் இருப்பது அலுப்பைத் தந்தது. நீண்ட நேரமாக காருக்குள் அடங்கியிருந்ததால் விறைத்துப்போன ஒற்றைக்காலை மேலே தூக்கி நீவி விட்டாள்..

முகுந்தன் சுருண்டு போய்க்கிடந்தான்.. சின்னதாய் ஒரு குறட்டை அவனிடமிருந்து வெளிப்பட்டுக் கொண்டிருந்தது.. காதில் வெள்ளி வளையம்.. நெல்வரம்பாய் பின்னிவிடப்பட்ட தலைமயிர் உச்சியில் தூக்கிக் கட்டப்பட்டிருந்தது.. கன்னத்தின் ஓரத்தில் ஒற்றைவரியாய் கோடாய் கச்சிதமாய் வெட்டப்பட்ட மெல்லிய மயிர் மோவாயில் ஆட்டுத்தாடியாய் முடிவுகண்டது.. கழுத்தில் வெள்ளி ஆரம் கறுத்துப்போய் நெஞ்சு மயிரோடு சிக்கி அவன் மெல்லிய மூச்சிழுப்பில் மேலும் கீழும் அசைந்துகொண்டிருந்து.. கழன்று விழுமோ என்ற அச்சத்தை தந்த காற்சட்டை… ஆமிக்காரனை நினைவிற்குக் கொண்டு வந்த காலணி.. “அம்மா இது என்ர ப்ரெண்ட்” ஆரணி இப்பிடியொருவனை எனக்கு அறிமுகப்படுத்தினால் என்னால் ஏற்றுக்கொள்ள முடியுமா? நான் ஏற்றுக்கொண்டாலும் குமார் கொண்டு போட்டுவிடுவார்.. வசந்தமலர் தனக்குள் சிரித்துக்கொண்டாள்..

குமார் வேலை முடிந்து வீட்டுக்கு வந்து அவசர அவசரமாய்ச் சாப்பிட்டு விட்டு அடுத்த வேலைக்குப் ஓடும் நேரம் இது..மீன் குழம்பு, மீன் பொரியல், கீரை, பருப்பு குமாரிற்குப் பிடித்த உணவு வகைகள். வசந்தமலருக்குத் திருப்தியாய் இருந்தது.. “அடடா கீழ் அலுமாரிக்குள் மாமா தந்த ஊர் ஊறுகாய் இருக்கே..ச்சீ சொல்லாமல் போயிட்டேனே கீரையோடு கொஞ்சம் ஊறுகாயைப் போட்டுப் பிசைந்து சாப்பிட குமாருக்கு நல்லாப் பிடிக்கும் .ம் பரவாயில்லை இரவு வந்ததும் எடுத்துக்குடுக்கலாம்.. ஆரணி தங்கையோடு வீடு வந்து சாப்பிட்டு விட்டு, ரீவி பார்க்கத் தொடங்கிருப்பாள்.. இல்லாவிடின் குப்புறப்படுத்து கால்களை மேலும் கீழும் ஆட்டியபடியே ரெலிபோணில் யாருடனாவது அரட்டை அடித்துக்கொண்டிருப்பாள்.. ஆண்களுடன் யாருடனாவது கதைக்கிறாளா என்பதைக் கண்காணிக்க வேணும்.. குட்டிப்பெட்டை நிஷாதான் அம்மா வரும் நேரத்தை அடிக்கடி மணிக்கூட்டில் பார்ப்பதும், பின் ரீவியைப் பார்ப்பதுமாக இருப்பாள்.. இன்றைக்கு எப்படியும் எட்டாம் வாய்பாட்டைப் பாடமாக்க வைக்கவேண்டும்.. பிள்ளைகளுக்கு ஏன்தான் இவ்வளவு வீட்டு வேலையைக் கொடுக்கிறார்களோ.. பாவங்கள் தூக்க முடியாமல் புத்தகங்களை கழுதைபோல் முதுகில் பொதியாய்.. முகுந்தன் அசைந்தான்..

வேலை முடிந்து வீட்டிற்குச் செல்லும் அவசரத்தில் ரோட்டில் வேகமாகச்சென்று கொண்டிருந்த கார்களின் அதிர்வு முகுந்தனின் நித்திரையைக் கெடுத்திருக்க வேண்டும்.. மெல்லக்கண் விழித்து ஒற்றைக்கையை வசந்தமலரின் கழுத்துப் பின்புறத்துக்குள் நீட்டி முகத்தோடிழுத்து வாய்பதித்து ஈரப்படுத்தினான்.. பின்னர் சின்னச் சிணுங்கலுடன் கண்களை மூடி மூடித்திறந்து “என்ன நேரம்?”

“ நாலரையாகுது”

“ சொறியக்கா”

“ எதுக்கு”

“நித்திரையாப் போயிட்டன்”

“பரவாயில்லை”

“உடம்பு சரியான அலுப்பாயிருந்துது” சுளி விழுந்த சிரிப்போடு கண்ணடித்தான்..

வசந்தமலர் மெளனமாய் கை விரல் நுனியில் எதையோ தேடியபடியிருந்தாள்

“ போர் அடிச்சுதா?”

“ இல்லை நான் காத்தோட அள்ளுப்பட்டுப் போற ஸ்னோவைப் பாத்துக்கொண்டிருந்தன்.. பிறகு கொஞ்சம் யோசிச்சன்”

“ என்னத்தை”

“ என்னை உன்னை என்ர வாழ்க்கைய”

“ ஏதாவது கிடைச்சுதா”

இச் வசந்தமலர் முகம் சுளித்து அலுத்துக்கொண்டாள்.. பின்னர் மெளனமாக முகுந்தனைப் பார்த்தாள்.. “ நான் செய்யிறது பிழையாடா?” கேட்ட படியே நெல் வரம்பில் விரல்களை அளையவிட்டாள்.. வியர்வையோடு கலந்து எண்ணெய் பிசுபிசுப்பில் இருந்தது அவன் தலை.. “ இப்ப ரெண்டு வருஷமாச்சு எத்தின தரம் இதைக் கேட்டிட்டீங்கள்..” வசந்தமலரின் கைவிரல்களை எடுத்து எண்ணிய படியே முகுந்தன் சிரித்தான்..

“ தெரியேலை சில நேரம் என்னை நினைச்சாலே எனக்கு வெறுப்பா இருக்கு” வசந்தமலரின் பார்வை தூர வெறிக்க முகம் வாடிப்போனது..

“ அக்கா இண்டைக்கு நீங்கள் சந்தோஷமாத்தானே இருந்தனீங்கள்.. அதுதான் முக்கியம் மற்றதுகளை விடுங்கோ..” அவள் கைவிரல்களை தன்னுக்குள் அடக்கி இறுக்கிக்கொண்டான்.. வியர்த்திருக்கும் அவன் கைகளின் ஈரம் பட்டு வசந்தமலர் உடல் சிலிர்த்துக்கொண்டது..

“ இல்லேடா” என்றவளை இழுத்து அணைத்துக் கொண்டான்

“ விடடா”

“ ஏனக்கா”

“ வீட்டை போற நேரம் வருகுது”

“ இன்னும் ஒரு மணித்தியாலம் இருக்கு”

“ அதுக்கு”

அன்று அவள் சிறிதும் எதிர்பாராத விதமாக ஒரு பரந்த வெளியில் முற்றிலும் பனிபடிந்திருக்கும் ஒரு பாலைவனப்பகுதில் தனது காரை நிறுத்திவிட்டு “இண்டைக்கு இஞ்சதான் நிக்கப்போறம்” என்று அவன் சொன்னபோது ஏதோ அவன் விளையாடுகிறான் என்று முதலி;;ல் வசந்தமலர் எண்ணினாள்.. அவன் தான் இருந்த சீட்டை சரிய விட்டு கைகளைப் பின்புறமாகப் போட்டு அவளை விழுங்கி விடுவதுபோல் பார்த்த படியே “அப்புறம்” என்ற போது அவன் விளையாடவில்லை என்பதைப் புரிந்து கொண்டாள் “உனக்கென்ன விசரா இந்த வெளியில நடுவுக்க காரை நிப்பாட்டிப்போட்டு.. ஆரும் கண்டாலும்” அவள் சுற்றுமுற்றும் பார்க்க.. அவளைத் தன் மேல் இழுத்துப் போர்த்துக்கொண்டான்.. “ஏன் எல்லாத்துக்கும் பயப்படுறீங்கள்.. பாருங்கோ. எவ்வளவு வடிவா இருக்கு.. சுத்திவர வெள்ளைப் போர்வை.. தூரத்தில சின்னதா ஊருற கார்கள் காத்துச் சத்தம்.. மேல நீலமாய் மேகம்.. அதுக்குக் கீழ நானும் நீங்களும் கட்டிப்பிடிச்சபடி” அவள் தலைமயிரை குலைத்து தன் முகத்தில் பரவவிட்டான்..
“ ம்.. உனக்கு விசர் முத்திப்போச்சு.. யாராவது பார்த்தால் நான் சரி.. வேலைக்கும்; போகாமல் உன்னோட வந்து கூத்தடிச்சுக்கொண்டு.. பேசாமல் வா.. நாங்கள் வழமையாப் போற இடத்துக்கே போவம்.. நான் காசு வைச்சிருக்கிறன்.. யோசிக்காதை..” தன்னை அவனிடமிருந்து விடுவிக்க முயன்று முயன்று தோற்றுப்போய்ப் புலம்பினாள்.. அவன் அவள் புலம்பலைப் பொருட்படுத்தாமல் தனது பற்களால் அவள் தாடைஇ காதுஇ மூக்கு என்று மெல்லஇ மெல்ல கெளவ. “ இப்ப என்ன செய்யிறாய்.. ஜயோ உனக்கு உண்மையிலேயே விசர்தான் பிடிச்சிட்டுது..” கைகளால் அவன் நெஞ்சைத் தள்ளித் தன்னை அவள் விடுவிக்க முயன்றாள். “தாலிக்கொடிய கழட்டுங்கோ” அவன் பார்வையில் பாசிஇ திடுக்கிட்ட வசந்தமலர்.. “என்னடா சொல்லுறாய்.. இந்த வெளிலிய காருக்க..ஜயோ நான் மாட்டன்” அவளின் கைகளைத் தன் ஒற்றைக் கையால் இழுத்துப் பிடித்தபடியே.. மறுகையால் அவளின் உடையைக் களையத்துடங்கினான். சுற்றும் முற்றும் பயத்துடன் பார்த்தாள் வசந்தமலர்..கைகள் நடுங்கியது..இருந்தும் மறுக்கமுடியவில்லை.. நடுத்தெருவில் நிர்வாணமாய் நிற்பதான பயத்துடன் கூடிய கிளர்ச்சி அவளிற்குப் புது அனுபவமாகவும் பிடித்துமிருந்தது.. அவர்களின் அசைவினால் வினோதமாக ஒலி எழுப்பும் கார்.. இடையிடையே தவறுதலான அழுத்தத்தால் ஹோர் அடிக்க திடுக்கிட்டு பின் சிரித்து.. கோபப்பட்டுஇ வெட்கப்பட்டு.. அவன் மேல் சரிந்தாள்.. அகண்ட பரந்த வெளியில் மெல்லிய நீலத்தில் வானம்.. நிர்மலமாய் பனிப்படிவுகள்.. பொன் கீற்றாய் கதிரொளி காரின் கண்ணாடியில் தெறித்து மின்ன.. கண்கள் சொருகி, அனுங்கி குழந்தைகளும், குமாரும் கனவு போல் வந்து போக..

வசந்தமலர் முகுந்தனையே கண்வெட்டாமல் பார்த்தாள்.. இன்னும் என்னவெல்லாம் அதிசயங்கள் காட்டி என்னை திக்குமுக்காட வைக்கப்போகிறானோ..

“ சரி வா ஒரு கோப்பி வாங்கிக் குடிச்சிட்டு பஸ் கோல்ட்டில என்னை இறக்கிவிடு நான் கொஞ்சச் சாப்பாட்டுச் சாமான்கள் வாங்கவேணும்”

“ நானும் வாறன் பிறகு உங்கள வீட்டில இறக்கி விடுறன்”

“ அதெல்லாம் வேண்டாம்”

“ ம்.. உங்கட வீட்டையும் சொல்லமாட்டீங்கள், புது வேலை இடத்தையும் சொல்ல மாட்டீங்கள். நான் நினைச்சா எல்லாத்தையும் ஒரு நிமிஷத்தில கண்டு பிடிச்சிடுவன் உங்களுக்குப் பிடிக்கேலை அதுதான்..”

வசந்தமலர் முறைத்தாள்.. “ அந்தப் பக்கம் உன்ர காரைக் கண்டனோ மவனே நீ அதோட சரி..

“ கோவத்திலையும் நீங்கள் நல்ல வடிவா இருக்கிறீங்கள்”

“ வழியாதை வா போவம்” சீப்பை எடுத்து தலையைச் சரிசெய்தாள்.. முகத்தை தண்ணீர் சீலை கொண்டு ஒத்திவிட்டாள்.. கொஞ்சம் பவுடர் போட்டாள்

முகுந்தன் கண்வெட்டாமல் அவளையே பாத்துக்கொண்டிருந்தான்..“ பக்றறி வேலை முடிஞ்சு வீட்டை போகோக்கை யார் இப்பிடிக் கச்சிதமாப் போகப்போகீனம்.”
“ அதுக்கில்லை உன்ர மணம் அடிக்காமல் இருக்கவேணும்” சிரித்தாள். பின்னர் சீப்பை அவனிடம் நீட்டினாள்.. மீண்டும சிரித்தாள் “என்னடா உது கேயர் ஸ்டைல்.. கறுப்பங்களுக்குத் தலைமயிர் வளராது அதாலை அவங்கள் ஏதோ செய்யிறாங்கள்.. நீ எதுக்கு.. உனக்குத்தானே நல்ல மயிர் இருக்கு”

“ இல்லேக்கா இதுதான் இப்ப ஸ்டைல்..இது பழைய காலத்து கறுப்பங்களின்ர தலை பின்னிற முறையாம் திரும்ப வந்திட்டுது.. இப்ப எல்லாரும் செய்யீனம்..”

வசந்தமலர் கொட்டாவி விட்டாள்.. நேரத்தைப் பார்த்தாள்..” சரி என்னைக் கடையில இறக்கி விடு. வேலை முடியிற நேரமாகுது..” என்ற படியே கான்ட் பாக்கைத் திறந்து ஒரு இருபது டொலர் தாளை எடுத்து அவனிடம் நீட்டினாள்..

“ நானேல்லோ உங்களுக்கு காசு தரவேணும்”

“ உப்பிடிப் பகிடிகள் விடாதை எனக்குப் பிடிக்கேலை” கோபமாய்ச் சொன்னவள்.. “இவ்வளவு நேரமாக் கார் ஸ்டாட்டிலேயே இருந்தது போய்க் கொஞ்சம் பெட்றோல் அடி” அவன் கைக்குள் காசைத் திணித்தாள்.. பின்னர் தாலிக்கொடியை எடுத்து கழுத்தில் மாட்டி உள்ளே விட்டாள்.. மாட்டும் போது ஒரு முறை கண்ணை மூடிப்பிரார்த்தித்துக் கொண்டாள் போல் இருந்தது..

“ பதினொண்டுக்கு போன் அடிப்பீங்களே..” இந்த இரண்டு வருஷமாக முகுந்தனைச் சந்திக்காத நாட்களில் பதினொருமணிக்கு அவனுக்கு போன் அழைத்துக் சில நிமிடங்களாவது கதைப்பதை வசந்தமலர் ஒருநாளும் தவற விட்டதில்லை.. முகுந்தனின் நண்பர்கள் கூட உன்ர பதினொருமணிப் பெட்டை என்று பகிடியாகக் கதைப்பதுண்டு.. முகுந்தனும் நண்பர்கள் மத்தியில் வசந்தமலரை ஒரு பாடசாலை மாணவியாகவே பிரதிமை பண்ணி விட்டிருந்தான்..

“ பிள்ளைகள் படுத்தாப்பிறகு பாப்பம்”

“சரி பரவாயில்லை நாளைக்கு அடியுங்கோ” சொன்னபடியே காருக்குள் பாடல் ஒன்றை அதிர விட்டு ஒற்றைக் கையால் ஸ்டியரிங்கை சுளற்றிக் கோப்பிக் கடையை நோக்கி ஓட்டினான்.. வசந்தமலர் ஸ்கார்பால் தனது தலையைச் சுற்றி மூடியபடியே கார் சீட்டைப் பதித்து விட்டு தன்னை வெளி உலகத்திற்கு மறைக்க முயன்று கொண்டிருந்தாள்..

முகுந்தன் தனது தொடர் மாடிக்கட்டிடத்துக்குள் நுழைந்த போது கருவாட்டு மணம் மூக்கைத் தாக்கியது.. இரண்டு மூன்று நாளாகக் கழுவப்படாத பாத்திரங்கள்.. சப்பாத்துடன் ஒட்டி வந்து அங்கும் இங்கும் பதிந்து போயிருந்த பனிச்சேறு.. தாறு மாறாகப் போடபட்டிருந்த படக்கொப்பிகள்.. தண்ணீர் காணாமல் காய்ந்து போயிருந்த பூச்செடிகள்.. சிகரெட் துண்டுகள்.. பியர் போத்தல்கள்.. கஞ்சா உதிர்வுகள்.. தாண்டி உடைகளைக் களைந்து விட்டு சுடுநீரில் உடல் வலி தீரக்குளித்தான்.. சாரம் மாற்றிக் கட்டிலில் விழுந்த போது தொலைபேசி அனுங்கியது.. இலக்கத்தைப் பார்த்தான் சித்தன்.. எடுப்பமா விடுவமா என்று மனம் முடிவு செய்வதற்கு முன்பே கைகள் ரிசீவரை எடுக்க உதடுகள் “ ஹலோ” என்றது.. “ டேய் எங்கேடா போட்டாய்.. பகல் முழுத்தலும் அடி அடியெண்டு அடிச்சனான்..”

மறுபக்கத்தில் சித்தனின் குரல் அலறியது..

“ வேலை தேடி அலைஞ்சு போட்டு வாறன் மச்சான்.. அலுப்பா இருக்கு அதுதான் படுத்துக் கிடக்கிறன் “

“ கிடச்சுதோ”

“ எங்கை மச்சான் பாப்பன்.. ஒண்டு அம்பிடாமலே போப்போகுது.. அதுசரி உனக்கு இண்டைக்கு வேலை இல்லையே..”

“அதை ஏன் மச்சான் கேக்கிறாய்.. போனனான் லேஓவ் தந்து அனுப்பிப்போட்டான்கள்.. “
“ ஏனடா”

“ என்னவோ வேசைமக்கள் பிஸ்னஸ் லொஸ்ட்டில போகிது எண்டு கனபேரை வெட்டிப்போடான்கள்.. அதுதான் உனக்கு அடிச்சனான் மனசுக்கு ஆறுதலா ஒரு சுத்து அடிப்பம் எண்டு.. “

“ சுத்து இல்லேடா.. இருந்ததை ராத்திரி அடிச்சிட்டன்.. சிகரெட்டும் இல்லை.. கையில காசும் இல்லை..” அலுத்தான்..

“ என்னை வந்து ஏத்து காருக்கு காஸ் அடிச்சுப் போட்டு சுத்து வாங்கிப் பத்துவம்..”
வசந்தமலர் தந்த இருபது டொலரைப் பத்திரப்படுத்தியபடியே சித்தனைப் பாக்கக் கிளம்பினான் முகுந்தன்.

வசந்தமலர் வீட்டிற்குள் நுழைய “அம்மா” என்று ஓடிவந்து கட்டிக்கொண்டாள் குட்டிப்பெட்டை நிஷா.. “அம்மா பிள்ளைக்கு குக்கீஸ் எல்லாம் வாங்கிக்கொண்டு வந்திருக்கிறன்” பெட்டியை எடுத்துக் கொடுத்துவிட்டு “ ஹாய் ஆரணி கோம் வேர்க் முடிச்சிட்டீங்களோ” மகளின் தலையை வருடி அவளுக்குப் பிடித்த சொக்லெட் பாரை எடுத்து நீட்டி உள்ளே சென்று உடைகளைக் கழைந்து துவைக்கப்போட்டு நன்றாக உடல் தேய்த்துக் குளித்தாள்.. முகுந்தனின் வியர்வையுடன் கூடிய சிகரெட் வாடை உடலில் ஒட்டி அவளை போதைக்குள்ளாக்கியது.. வெட்ட வெளியில் நிர்வாணமாய் காருக்குள் தான் இருந்ததை எண்ணி குற்ற உணர்வோடு சேர்ந்த திருப்பி மனதில் எழுந்து எழுந்து அவளை உலுக்கிப்போட்டது. குமார் அங்கும் இங்குமாகப் போட்டு வைத்த அவன் உடைகளை எடுத்து மடித்து வைத்து.. குழந்தைகளுக்குச் சாப்பிடக் குடுத்து.. பாடத்திற்கு உதவி செய்து.. குமாரிக்கு பிடித்ததை சமைத்து வைத்து.. கட்டிலில் வந்து விழுந்து கொண்டாள்.. விட்டத்தை விறைத்து மீண்டும் தன் வாழ்விற்கு அர்த்தம் காண முயன்று தோற்றுப் போனாள்..தான் யாரை ஏமாற்றுகின்றாள்.. குமாரையா? குழந்தைகளையா? முகுந்தனையா? இல்லை என்னை நானே ஏமாற்றுகின்றேனா என்பதில் பல காலமாக அவளிற்கு குழப்பம். முகுந்தனுடன் அவளுக்குண்டான உறவின் பின்னர் குழந்தைகளுடன் சிடுசிடுப்பதை..குமாருடன் குரல் உயர்த்தி அலுத்துக்கொள்வதை.. சொல்லப்போனாள் அவள் குடும்ப உறவு முன்பு இருந்ததை விட இறுக்கமாகிப்போயிருந்தது.. இது எல்லாம் தன் குற்ற உணர்விற்கு அவர்களுக்குக் கொடுக்கும் லஞ்சமா என்ற பரிதவிப்பும் இடையிடையே அவளை வாட்டுவதுண்டு.. இருந்துமென்ன எல்லோரும் சந்தோஷமாக இருப்பது தானே முக்கியம்..அவள் கண்கள் குழப்பங்களுடன் மெல்ல மெல்ல மூடிக்கொண்டது..

முதல் முதலில் முகுந்தனை வேலைத்தளத்தில் வசந்தமலர் சந்தித்தபோது அவளிற்கு வேடிக்கையாகவும் கொஞ்சம் அவமானமாகவும் இருந்தது.. ஈழத்தமிழன் என்று பெருமையாகச் சொல்லிக்கொள்ளும் தோற்றத்தில் அவன் இல்லை.. எப்போதும் போதையில் காரணமின்ற சண்டை போடும்.. துப்பாக்கி தூக்கும்.. பத்திரிகைகளில் அன்றாடம் அடிபடும் பலரில் ஒருவன் என்பதை பாத்த மாத்திரத்தில் அவள் உணர்ந்து கொண்டாள்.. அவனைப் பார்ப்பதை பேசுவதை இயன்ற அளவிற்குத் தவிர்த்து வந்தும் அவள் போதாத வேளை என்று எண்ணும் வண்ணம் மகள் நிஷாவிற்கு உடம்பு சுகமில்லாமல் போய் பாடசாலையில் இருந்து அழைப்பு வர கொட்டும் பனிக்குள் பஸ் பிடித்து நேரத்திற்குப் போய்ச் சேரமுடியுமா என்று தவித்தபோது தானாக வந்து உதவுவதாக முன்நின்றான் முகுந்தன் சிந்திக்க நேரமின்றி அவனின் உதவியைப் பெற்றுக்கொண்டவள்.. பின்னர் காய்ந்து போன உணவை அவன் மென்று மென்று விழுங்கும் போது தன் உணவில் கொஞ்சமாகப் பகிர்ந்து.. பின்னர் கொஞ்சமாகக் கதைத்து.. காலப்போக்கில் அவன் மென்மையான பக்கங்கள் கண்டு அதிர்ந்து.. சகஜமாகப் பழகும் நிலை வந்த போது ஒருநாள்.. சமைத்துக்கொண்டு கொண்டு நின்ற வசந்தமலரின் காதில் படிக்கட்டால் உருண்டு கதறியபடி விழுந்த நிஷவின் குரல் கேட்டு பதறித்திரும்பியவளின் கண்ளை அருகே திறந்து விட்டிருந்த கதவின் மூலை தாக்க கண்டிப்போன கண்களுடன் ஓடிப்போய் நிஷாவை அவள் அனைக்க மனைவியையும் மகளையும் படியில் கிடத்தி ஜஸ் கட்டிகளால் மாற்றி மாற்றி ஒத்தடம் பிடித்த கணவனின் நகைச்சுவையை முகுந்தனுடன் பகிர்ந்து சிரிக்க எண்ணி அவன் அருகில் போய் அவள் அமர்ந்த போது பதட்டத்துடன் அவள் கைகளைப் பற்றி அழுத்திய படியே “உங்கட மனுஷன் உங்களுக்கு அடிக்கிறவரா அக்கா” என்றவனின் கைகளின் வியர்வை உடலை சிலிர்க் வைக்க அவன் பார்வையை மிக அருகில் சந்தித்த வசந்தமலரில் உடலில் ஈரம் கசிந்தது.. அவனில் இருந்து வந்த அந்த சிகரெட்டுடன் கூடிய வியர்வை மணம் சின்னதாக அவள் உடலை நடுங்கச் செய்ய மென்று விழுங்கித் தன்நிலை மறந்து அவன் தோளில் சாய்ந்தாள்.. அவள் தலையை வருடி “அழுங்கோ அக்கா அப்பதான் உங்கட வேதனை குறையும்” வருடியவனின் குரல் கேட்டு ஏனோ விம்மினாள் வசந்தமலர்..

அதன் பின்னர் பணத்திற்காகப் பல்லைக் கடித்துக்கொண்டு வேலைத்தளத்தில் மாய்ந்தவளிற்கு வேலைக்குப் போவது பிடித்துப் போனது.. பதினைந்து வருடதிருமண வாழ்வு மீண்டும் அர்த்தத்ததைத் தந்தது.. முகுந்தனின் அணைப்பு.. தொடுகை வெட்கமற்ற பேச்சு எல்லாமே அவளிற்கு புதிய அனுபவமாய் அவள் இரத்த ஓட்டத்தை வேகப்படுத்தியது.. குமாரை அவள் வெறுக்கவில்லை.. முகுந்தனை அவள் காதலிக்கவுமில்லை.. ஆனால்..குழந்தைகள் வளர்ந்து விட்டார்கள் என்பதால் தன்னை வயதானவளாக உருமாற்றி உணர்வுகள் மெல்ல மெல்ல உறைந்து போய் விட்டதாக எண்ணி வாழ்ந்தவளை மீண்டும் உலுப்பி விட்டிருந்தான் முகுந்தன்..

கஞ்சா அடிச்ததில் இருவரின் கண்களும் சிவந்து போயிருந்தன.. குளிர்காய கோப்பிக்கடைக்குள் இருந்தபடியே வருவோர் போவோரை அளந்து கொண்டிருந்தார்கள்.. வசந்தமலரின் மணம் கிறக்கம் இடையிடையே முகுந்தனின் நினைவில் வந்து அலைந்து கொண்டிருந்தது.. தான் உறவு வைத்திருக்கும் அத்தனை பெண்களைப் பற்றியும் சித்தனிடம் கதை அளக்கும் முகுந்தனுக்கு ஏனோ வசந்தமலர் பற்றி வாய் திறக்க முடியவில்லை.. வசந்தமலர் மேல் தனக்கு உண்மையான காதலோ என்று அவனிற்கு அடிக்கடி பயமாக இருந்தது.. வசந்தமலரின் குரலை ஒருநாள் கேட்காவிட்டாலும் அவனிற்று எதுவோ போல் இருக்கும்.. மற்றைய பெண்களைப் போலில்லாமல் மணிக்கணக்காக அவளுடன் கதை அளக்க அவனுக்குப் பிடித்திருந்தது.. வசந்தமலருடனான தனது உறவைப் புனிதமானதாக எண்ணி வசந்தமலர் பற்றி எந்த ஒருமனிதனும் தவறாகக் கதைத்துவிடக்கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருந்தான்.. கணவனை இழந்தவளிற்கு வாழ்க்கை குடுத்தால் அது உத்தமம்.. கணவனால் துன்புறுத்தப்படும் ஒரு பெண்ணிற்கு வாழ்வில் சில இன்பங்களைக் காட்டினால்.. தன்னைத் தேற்றிக்கொண்டான் அவன்..

வேறு தமிழர் இல்லாததால் அக்கா அக்கா என்று வேலைதளத்தில் ஆரம்பித்த உறவு சாப்பாடு பகிர்வதில் தொடங்கி.. பஸ் தரிப்பில் இறக்கி விடுவதில் போய் ஒருநாள் கண்களுக்கு கீழே கட்டி பட்டுப்போயிருந்த இரத்தத்தைப் பார்த்தபோது நெருக்கம் கொண்டது.. கணவனிடம் காணாத அன்பு அரவணைப்பை வசந்தமலரிற்கு தான் கொடுப்பதாக எண்ணிப் பெருமை கொண்டான்.. மெல்ல மெல்ல தன்னுடன் பழகும் இளம் பெண்களிடமிருந்து விலகி நேரம் கிடைக்கும் போதெல்லாம் வசந்தமலருடன் உறவுகொள்ளத் தொடங்கினான்.. “டேய் என்னை விட்டிடாதை.. என்னை ஏமாத்திப்போடாதை.. வேற ஒரு பெட்டைகளோடையும் போகாதை..” அவள் கொஞ்சியபோது அந்த அன்புஇ காதல்இ மோகம் கண்டு விறைத்து துவண்டு குழந்தை போல் அவள் மடியில் முகம் புதைத்தான். “உன்னைக் கலியாணம் கட்டவேண்டாம் எண்டு நான் சொல்லேலை.. நீ கட்டிற நேரம் வரேக்க நானே விலகிப் போறன் ஆனால் இப்ப வேறை ஒண்டும் வேண்டாம்” அவனிடம் சத்தியம் வாங்கிக்கொண்டாள்..

மாதங்கள் நாட்களாகி மறைந்து போக..முகுந்தனின் மனதில் முற்றாக வசந்தமலர் இடம் பிடித்துக்கொண்டாள்.. சித்தன் வேறு வேலை எடுத்து பிஸியாகி விட வசந்தமலருடன் தொலைபேசியில் கதைப்பது, சந்திப்பது.. இப்படியாக..இப்படியாக..

இன்றுடன் ஒரு கிழமையாயிற்று வசந்தமலரின் குரலைக் கேட்டு.. முகுந்தனிற்கு தலையே வெடித்துவிடும் போலிருந்தது.. அவள் தொலைபேசி இலக்கம் அவனிடம் இல்லை.. ஏன் வீண் பிரச்சனை நானே ஒவ்வொருநாளும் உன்னுடன் கதைக்கிறேன் என்று தொலைபேசி இலக்கத்தை கொடுக்க மறுத்திருந்தாள் வசந்தமலர்.. சித்தனிடம் மனம் விட்டுக் கதைக்கும் துணிவு அவனுக்கில்லை.. திருமணமாகி இரண்டு பெண் பிள்ளைகளிற்குத் தாயான ஒருத்தியுடன் தான் உறவு வைத்திருப்பது.. அதை உண்மையான காதலாக மனதுக்குள் பூஜித்து அவள் குரல் கேட்காது உடைந்து போவது பற்றி எவ்வளவுக்கு நண்பனாக இருப்பினும் சொல்ல முடியுமா? அவன் என்னைக் கேவலமாகப் பார்ப்பான் இல்லாவிட்டால் கிண்டல் அடிப்பான் இரண்டையும் தாங்கும் மனப்பக்குவம் முகுந்தனிடம் இருக்கவில்லை.. மூளை குழம்பிய நிலையில் சாப்பிட மனமின்றி கஞ்சாவைப் புகைத்துப் புகைத்துத் துவண்டு போனான். இன்றுடன் ஒரு கிழமையாயிற்று வேலையில்லை கையில் பணமில்லை.. இந்த நிலை தொடர்ந்தால் தான் மீள்ளாது போய் விடுவேனோ என்று பயந்து எழுந்து தன்னை திடப்படுத்த முயன்று தலையில் சுடுநீரை வாரி இறைத்துக் குளித்தான்.. பாவம் வசந்தமலர் வீட்டில் ஏதும் பிரச்சனையோ தெரியவில்லை.. அவள் மேல் அன்பை வைத்திருந்து என்ன பிரயோசனம்.. வேண்டிய நேரத்திற்கு ஆறதல் சொல்ல தன்னால் முடியவில்லையே..ஏக்கமாக இருந்தது அவனிற்கு.. இன்று அவள் அழைப்பாள் இன்று எப்படியும் வசந்தமலரின் குரலைத் தான் கேட்கமுடியும் என்ற நம்பிக்கையுடன் வயிறு புகைந்து போக கோப்பி;க் கடையை நோக்கிப்புறப்பட்டான்..

முகுந்தனின் கைகள் குளிர்ந்து போயின. வாய் விட்டுக்கதறுவதற்குக் கூட முடியாத நிலை.. பொங்கிப் பொங்கி வந்த அழுகையை தனக்குள்ளேயே மென்று, மென்று தோற்றுப்போய்க் கொண்டிருந்தான்.. அங்குலம், அங்குலமாகத் தான் அழகுபார்த்து முகர்ந்து, முத்தம் கொடுத்தவை எல்லாம் அடங்கிப்போயிருந்தது அவனுக்குக் கனவு போலிருந்தது.. ‘முந்தி எங்களோட வேலை செய்த பிள்ளை வசந்தமலரெண்டு.. உனக்கு நினைவிருக்கோ என்னவோ.. அக்சிடென்ரில செத்திட்டுதாம்.. இண்டைக்கு பாக்கிறதுக்கு வைக்கினம் நாங்கள் வேலையாக்களெல்லாம் சேந்து போறம்.. நீ வரப்போறியே..” அந்த வயதான பெண்மணி கேட்டபோது.. முகுந்தன் சுருண்டு விட்டான்.. தலையை சுவரில் அடித்து, அடித்துக் கதறியாகி விட்டது.. கண்கள் வீங்கிப்போய் விட்டன.. ஆனால் அவன் இயல்பாக இருக்க வேணும் ‘பாவம் அவ்வளவு வயசும் இல்லை.. ரெண்டு பொம்பிளப்பிள்ளைகள்.. புருஷன் தான் தனியக் கஷ்டப்படப்போகுது.” என்று மற்றவர்களுடன் சேர்ந்து சப்புக்கொட்ட வேண்டும்.. தன்னால் முடியுமா.. கடைசியாக ஒருமுறை கைகளில் நடுக்கமின்றி.. பொங்கி வரும் கண்ணீர்த் துளிகளை சுரப்பிக்குள் திரும்பவும் தள்ளி தன்னால் முடியுமா? கட்டிலில் குப்புறப்புரண்டு கதறியவன்.. வசந்தமலரைக் கடைசியாகப் பார்க்கும் ஒரு சந்தர்ப்பத்தை இழக்க விரும்பாது அழுத்தி, அழுத்தி குளிர் தண்ணீரை முகத்தில் அடித்துக் கண்களின் வீக்கத்தையும் சிவப்பையும் போக்கமுயன்று மற்றவர்களுடன் கூடி வசந்தமலரின் உடல் பார்வைக்காக வைக்கப் பட்ட மண்டபத்திற்குள் நுழைந்து விட்டான்..

வசந்தமலரின் முகத்தில் புன்னகை தெரிந்தது.. மெல்லிய சிவப்பு நிறப்பட்டில் உயிர்ப்போடிருந்தாள் அவள்.. வரிசையில் நின்று மெல்ல நகர்ந்து வசந்தமலரைக் கடைசியாக ஒருமுறை சில நிமிடங்கள் பார்த்து விட்டு வாய்விட்டுக் கதறிக்கொண்டிருக்கும் குமாரையும், பிள்ளைகளையும் அணைத்து ஆறுதல் சொல்லிவிட்டுத் தமது கடமை முடிந்ததாய் போய்க்கொண்டிருந்தார்கள் பலர்.. முகுந்தன் அந்த வயதான பெண்மணியின் கைகளை இறுகப்பற்றிய படியே ‘என்னைத் தனியாக விட்டுவிடாதே என்ற பாணியில் மெல்ல நகர்ந்து கொண்டிருந்தான்.. அவள் பார்வையில் தெரிந்த கேள்விக்குறியைப் பற்றிக் கவலைப்படும் நேரமல்ல அது.. புன்னகைக்கும் வசந்தமலரின் முகத்தில் ஒரு தெளிவு, நிம்மதி தெரிந்தது.. உடல் சிதறாமல் அழகோடிருந்தது முகுந்தனுக்கு ஆறுதலைத் தந்தது.. வயதான பெண்மணியின் கையை இறுக, இறுக அழுத்தித் வசந்தமலரிற்கு தனது கடைசி அஞ்சலியை மனதுக்குள் முணுமுணுத்தான்.. வசந்தமலரின் பெண்களை உரிமையோடு தலைவருடி ஆறுதல் சொன்னவன் குற்ற உணர்வோடு கடமைக்காக குமாரின் பக்கம் திரும்பியபோது குமாரின் கண்களின் தெரிந்த அந்தக் குரூரம் முகுந்தனை ஒருமுறை நடுங்கச் செய்தது.. கால்கள் தடுமாற பின்னே ஒரு அடி எடுத்து வைத்தனைப் பார்த்து ஏளனமாக ஒரு சிரிப்பை எவரும் பார்க்காத வகையில் வீசினான் குமார்..

ஊதல் காற்றுடன் கூடிய வெண்பனி மூடலில் வீதியோரம் விறைத்தபடியே நடந்து கொண்டிருந்தான் முகுந்தன். அவன் கண்களில் கண்ணீரில்லை எல்லாமே விறைத்துப் போயிருந்தன.

- பெப்ருவரி 2005 

தொடர்புடைய சிறுகதைகள்
“கணன் மாமாவும், மாமியும் கனடா வந்து நிக்கினம்.. ஒரு கிழமைக்கு என்னோட தங்கச் சொல்லிக் கேட்டனான்.. உன்ர அறையிலதான் விடப்போறன் நீ தம்பியோட ஷெயர் பண்ணு” அம்மா சொல்லி விட்டுப் போய் விட்டாள். தம்பி அவசரமாக தன்ரை அறைக்குள் புகுந்து கொண்டான். ...
மேலும் கதையை படிக்க...
புகாரை அப்பித் தேய்த்து கண்களைப் பொருத்தி உற்று நோக்க தூரத்தில் அசைவின்றி எல்லாமே நிற்பதாய் ஒரு பிரமை. மிரண்ட புறாக் கூட்டம் வட்டமடித்து மீண்டும் அதே இருப்பைப் தேடி வந்தது. எப்போதும் எதுவுமே நடக்கலாம். நடக்கும் வரை எதிர்பார்ப்புகளோடு தொடரும் வாழ்வு. “சாப்பாடு ...
மேலும் கதையை படிக்க...
பயணம் நிச்சயமாகி விட்டது. .எப்படியாவது யன்னலருகிலுள்ள சீட்டை புக் பண்ணுங்கள் என்ற போது “என்ன கடைசி நேரத்தில இப்பிடி கேக்கிறீங்கள்” என்று அவன் சினப்பது தெரிந்தது.. “வரேக்க ஒரு பட்டு வேட்டி சால்வை வாங்கிக்கொண்டு வருவன்” என்றதும்.. வினோதமான ஒரு ஒலியுடன் ...
மேலும் கதையை படிக்க...
மிகமிக நீண்ட துாரத்தில் முகில்களில் சாயையால் அவள் ஒருகால் மடித்து பிருஷ்டம் சரியப்படுத்திருந்தாள். தொப்புள்கொடியின் விடுபடலின் அவஸ்தையாய் இழுபட்டு மிதந்துகொண்டிருந்த அவன் கைகள் கிளைகளாய் நீண்டு அவள் இடுப்பில் மெல்ல நகர்ந்து காயங்களின்றி இறுக்கி, இழுத்தது. முழங்கால் மடித்து குதியினால் அவன் ...
மேலும் கதையை படிக்க...
'வாழாவெட்டி ' என்று சமூகத்தால் விழிக்கப்படும் தாயினால் வளர்க்கப்பட்டவன் நான். இரண்டு அறைகளைக் கொண்ட மண்ணாலான கொட்டில் வீட்டின் முன்னே, உச்சி வெய்யில் நேராய் இறங்க, தன்னை ஒடுக்கி கந்தல் சேலையால் தலையை மூடிக் குந்தியிருந்து, கிடுகு பின்னி பாரமாய் சுமந்து ...
மேலும் கதையை படிக்க...
ரெக்ஸ் எண்டொரு நாய்க்குட்டி..
சூன்யம்
பெண்கள்: நான் கணிக்கின்றேன்
ஒரு நீண்ட நேர இறப்பு
நஷ்ட ஈடு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)