மகளுக்காக…

 

கடற்கரைக்குக் காற்று வாங்கச் சென்ற அலமேலு இடியை வாங்கிக் கொண்டு திரும்பி வந்து சோபாவில் அமர்ந்தாள்.

சேகரும் திவ்யாவும் நெருங்கி அமர்ந்து சுண்டல் தின்று மகிழ்ச்சியாக இருந்த காட்சி அவளால் நம்ப முடியவில்லை. நம்பாமலும் இருக்க முடியவில்லை. இடியின் உறுத்தலாய் இன்னும் மனதை விட்டு விலகாமல் இம்சை.

திவ்யாவிற்காக செண்பகம் பட்டபாடு கொஞ்சமில்லை. பிறந்த ஆறு மாதத்திலேயே தாயும் மகளையும் தவிக்க விட்டுவிட்டு எவளோடோ ஓடினவன்தான் பெற்றவன். அப்புறம் திரும்பிப் பார்;க்கவி;ல்லை. ஏன் இன்றுவரை இருக்கானா இல்லையா தெரியவில்லை.

காதலுக்காக வீட்டைத் துறந்து…. கணேசனே கடவுள் என்று வந்தவளுக்கு…. அந்த கடவுளே காணாமல் போனபிறகு…..குச்சு வீட்டில் பிழைக்க வழி தெரியாமல் கூழுக்கும் கதி இல்லாமல் கிடந்தவளைக் காப்பாற்றி கரை சேர்த்தது இந்த விதவை அலமேலுதான். இவ்வளவிற்கும் இருவருக்கும் ஒட்டுமில்லை, உறவுமில்லை. ஏழ்மையின் பிடிப்பில் ஒருவருக்கொருவர் அன்பு, அனுதாபம்.

இருவரும் அந்த கிராமத்தில் இருக்கப்பிடிக்காமல் ஏதோ ஒரு முடிவெடுத்து பட்டினம் வந்தார்;கள். ஒரு ஓலைக்குடிசையில் ஒண்டிக்கொண்டு சித்தாள் வேலையில் பழகினார்கள். யார் நல்ல காலமோ தெரியாது. இவர்கள் சித்தாட்களாக வேலை செய்த கட்டிடத்தில் ஒரு நாள் படப்பிடிப்பு நடந்தது. அன்று அந்த இயக்குநரின் கண்ணில் பட்டாள் செண்பகம். அடுத்து பெயர் கூட மாற்றாமல் ஓகோ.

அந்த இயக்குநர் ரொம்ப நல்லவர். அப்படி இப்படி ஆசைப்படாதவர். செண்பகத்திடம் ;புகை படிந்திருந்த அழகை, திறமையை துலக்கி, விலக்கி, தோண்டி எடுத்து உச்சத்திற்குக் கொண்டு வந்து விட்டார்.

இந்த இயக்குநரையும் செண்பகத்தையும் இணைத்து எழுதாத பத்திரிக்கைகளேக் கிடையாது. அவரும் இவளும் அவைகளைக் கண்டு கொள்வதே இல்லை. உண்மை இருந்தால்தானே உறுத்த. இல்லை என்கிற போது…..? அது குப்பை.

அப்படியும் ஒரு நாள் செண்பகம் அந்த இயக்குநரிடம், ”சார்! நம்மைப் பத்தி இப்படி கன்னாபின்னான்னு எழுதுறாங்க. அதுல உங்களுக்குக் கோபம், வருத்தம் இல்லையா ? ” கேட்டாள்.

அதற்கு அவர், ”குப்பையை மதிச்சாலும் கோபுரமாகாது. மதிக்காம இருந்தாலும் கோபுரமாகாது. அப்புறம் எதுக்குக் அதைப் பத்தி சிந்தனை, கவலை ? ” கேட்டார்.
”இதையெல்லாம் உங்க மனைவி படிப்பாங்களா ? ” செண்பகம் விடவில்லை.

”படிப்பாள்.!”

”அப்புறம் ? ”

”சிரிப்பாள்.!”

”சார் !!”

”அவ்வளவு நம்பிக்கை.!”

”சரி. இந்த பொய்யை மெய்யாக்கனும்ன்னு உங்க மனசுல என்னைக்காவது தோணினதுண்டா ? ”

”உனக்கு தோணிச்சா ?”

”இல்லை.”

”எனக்கும் இல்லை. செண்பகா.! எனக்கு நல்ல மனைவி, மக்கள் அமைஞ்சிருக்காங்க. அப்புறம் எதுக்கு வீணாசை ?! இந்தத் துறையில இனாமா கிடைக்குதுன்னு எதையும் எடுத்துப் பூசிக்கக்கூடாது. அதுதான் நல்ல மனுசாளுக்கு அழகு. இதுல ஒரு சிலர் பேர் உதாரணமாய் இருக்காங்க. அதுல நானும் ஒருத்தன்.” சொன்னார்.

படப்பிடிப்பு இடைவேளை. தங்களைச் சுற்றி குழுவினரே கூடி இருக்கிறார்கள் என்கிற உணர்வின்றி, ”ஐயா..ஆ !” என்று அவர் காலில் விழுந்து வணங்கி கலங்கினாள் செண்பகம். அருகிலிருந்த அலமேலும் அந்த உணர்ச்சிப் பிரவாகத்தில் கரைந்து கண்களைத் துடைத்தாள்.

கைக்குழந்தையை வைத்துக்கொண்டு நடிப்புத் தொழில் செய்வதென்பது சாதாரண விசயம் இல்லை. சுமக்கும் பொறுப்பை அலமேலு ஏற்றுக் கொண்டாலும் குழந்தை பசியென்று கத்தினால் நடிப்பை விட்டு ஓடிவந்து… நிறைய இயக்குநர்களிடம் திட்டு வாங்கி இருக்கிறாள்.

ஒரு நாள் ஒரு இயக்குநர், ”இப்படி வேலையை வீணடிச்சா அடுத்து யாரும் உங்களுக்கு வாய்ப்புக் கொடுக்க மாட்டாங்க.” சொன்னார்.

”பரவாயில்லே சார். இந்தத் தொழில் இல்லேன்னா….கௌரவமா பொழைக்க பழைய சித்தாள் தொழில் இருக்கு.” சொன்னாள்.

ஏன் ? இப்படி கேட்ட கதாசிரியர்கள், உதவி இயக்குநர்கள், மொத்தப் பேர்களிடமுமே இதே பதிலைச் சொன்னாள்.

அடுத்து இவளிடம் யாரும் இது பற்றி பேசவில்லை. கெட்டதிற்கு…… குழந்தை கை கேடையம், காவலாகவும் இருந்தாள். அதையும் தாண்டி வருபவைகளைச் செண்பகம் தடுத்தாள், மறுத்தாள்.

பெற்ற பெண்ணின் மேல் செண்பகத்திற்கு அளவுக்கதிமான பாசம்.

”அலமேலுக்கா ! என் பொண்ணு நல்லா படிச்சு டாக்டர், இன்ஞினியர்; ஆக விருப்பமில்லே. எல்லாரும் மதிக்கிற கலெக்டராகனும். சத்தியமா இந்தத் தொழிலுக்கு வர விடமாட்டேன். அசந்தா… ஆளைக் கொத்திக் குதறும் தொழில். முகச் சாயம் அடிக்கிற ஒப்பனை ஆளிலிருந்து….ஆடை வடிமைப்பு, அது இது அத்தனை பேர்களிடமும் மரக்கட்டையாய் நிக்கனும். ஒளிப்பதிவாளர், இயக்குநர், நடனக் கலைஞர்கள் எல்லாம் சொல்றபடி செய்யனும். ஜொள்ளு வழிவதைத் தொடைக்கனும் படுக்கைக்கு அழைக்கிறவனுக்கு தடுப்பு சொல்லனும்ன்னு இப்படி ஆயிரத்தெட்டு குளறுபடி. இப்போ மொத்தத்துக்கும் ஆபத்தாய்….அரசியல்வாதிகள், ரவுடிகள் புகுந்து அட்டகாசம். ஆசிட் வீச்சு, கொலைன்னு தப்பிக்க முடியாத அளவுக்கு மிரட்டல.; வாய்ப்புப் பிடிக்கனும்ன்னு வேற விருந்து அது இதுன்னு பெண்கள் வலிய போய் நாசம். திவ்யாவை இப்படி சீரழிய விடமாட்டேன். கலெக்டர்தான். !”

”அப்புறம் கலியாணக் கதையைக் கேளு. நம்ம ரெண்டு பேருக்கும் உள்ளது போக…மத்ததெல்லாம் அவளுக்குத்தான். முடிக்கொரு பவுன் கோர்ப்பேன். தம்பதிகளுக்குத் தங்கக் கட்டில் கொடுத்து சென்னைப் பட்டினமே திரும்பிப் பார்க்கிற அளவு திருமணம் முடிப்பேன்.”

”சரி சரி. கனவு, கற்பனைகள் போதும்.” அலமேலுதான் அவளை அடக்குவாள். ஆசுவாசப் படுத்துவாள்.

அந்தத் தாயின் மொத்த கனவுகளை இதோ திவ்யா தகர்க்கிறாள். தாயின் கால்ஷீட்டுகளைக் கவனிக்கும் இளைஞன் சேகர் மேனேஜரைக் காதலிக்கிறாள். எப்படி ஒட்டி உட்கார்ந்து….????

நினைத்துப் பார்க்கவே தலை சுற்றியது. அலமேலுவிற்கு.

செண்பகத்திற்கு இது தாங்கவே தாங்காது.!! வழி ?….

யோசனையில் அப்படியே இறுகி… சோபாவில் அமர்ந்திருந்தாள் அலமேலு.

மணி 7.00.

உள்ளே வந்த திவ்யா வழியில் அமர்ந்திருந்த அலமேலுவை அழைக்காமல் நேரே அடுப்படி சென்று காபியோடு வந்து அவள் அருகில் அமர்ந்து அருந்தி….

”பெரியம்மா ஒரு சேதி !” என்றாள்.

”அதுக்கு முன்னாடி நான் உனக்கு ஒரு சேதி சொல்லனும்…”

”சொல்லுங்க ? ” காபியை முடித்து கீழே வைத்தாள்.

”இந்தக் குடும்பத்துல என்னை எப்படி நினைக்கிறே ? ”

”என்ன பெரியம்மா கேள்வி.! நீ இல்லேன்னா இந்த குடும்பமே இல்லே. நீதான் இந்தக் குடும்பத்துக்கு மூத்தவள், முதல். உன் பேச்சுக்கு இங்கே மறுபேச்சுக் கிடையாது.”

”அப்படின்னா என் பேச்சைக் கேள். சொல்றதைச் செய்.”

”சொல்லுங்க ? ”

”உன் காதலைக் கொலை செய்.”

”பெரிம்மா….ஆ!” திவ்யா அதிர்ந்தாள், அலறினாள்.

”செண்பகம் சத்தியமாய் இடிஞ்சிடுவாள், சாய்ஞ்சிடுவாள்!”

திவ்யாவிற்கு இடி இடி மேல் இடியாய் மீள முடியாத அதிர்ச்சி.

”என்ன பெரிம்மா சொல்றீங்க? ”

”அவ காதுக்குப் போறதுக்கு முன்னாலேயே அதை அழிச்சுடு. கலைச்சுடு.”

திவ்யா கண்களுக்குள்ளிலிருந்து கண்ணீர் புறப்பட்டு வழிந்தது.

”அதுக்கான காரணம் வேணாம்மா. சொன்னால் உன்னால தாங்க முடியாது.”

”வேணாம் சொல்லவேணாம் அக்கா. திவ்யா சேகர் திருமணம் நிச்சயம் நடக்கும்!” என்றபடி செண்பகம் உள்ளே வந்தாள்.

அலமேலும் திவ்யாவும் அவளை அதிர்ந்து பார்த்தார்கள்.

”படப்பிடிப்பு விட்டு வந்து வாசல்ல நின்னு நான் நீங்க பேசுன பேச்செல்லாம் கேட்டேன். சேகர் நாலு நாளைக்கு முன்னாடியே என்கிட்ட எல்லா விசயத்தையும் சொல்லிட்டார். மகளுக்காக கனவுகளைக் கலைக்கலாம். ஆசாபாசத்தைத் துறக்கலாம்.! அதனால இனி தப்பு தவறு கூடாதுன்னு சரியாய்க் கண்டிச்சு இவுங்க காதலுக்குப் பச்சைக் கொடி காட்டிட்டேன். அக்கா ! உங்ககிட்ட சொல்ல நேரம் இல்லே. மன்னிச்சுக்கோங்க.” சொல்லி மகள் அலமேலு இடையில்; அமர்ந்தாள்.

திவ்யா மலர்ந்து, ”அம்மா !” என்று அவள் தோளில் முகம் பதித்து கேவினாள்.

இன்னும் அதிர்வு அகலாத அலமேலுவை செண்பகம் ஆதவராக அணைத்து கலங்கினாள்.

அந்த கண்ணீரில் கரைவது செண்பகம் – சேகர் உறவு என்பது அலமேலுவிற்கு துள்ளியமாகத் தெரிந்தது.!! 

தொடர்புடைய சிறுகதைகள்
லதாஸ்ரீக்குப் பொன்னாடைப் போர்த்தி விருது கொடுத்ததும் அரங்கமே உற்சாகமாய்க் கை தட்டியது. முதல் வரிசையில் அமர்ந்திருந்த சந்தோஷ் மட்டும் முகத்தில் எந்தவித சந்தோச சலனமில்லாமல் ஒப்புக்குக் கை தட்டினான். ''லதாஸ்ரீ இந்த வருடம் இந்த நாட்டின் சிறந்த நடிக்கைகான விருதைப் பெற்றதைப் போல் ...
மேலும் கதையை படிக்க...
புத்தம் புது புல்லட்டில் வந்து இறங்கிய பிள்ளையைப் பார்த்தப் பெற்றவர்களுக்கு அதிர்ச்சி. சேகர் வண்டியை வாசலில் நிறுத்திவிட்டு வீட்டிற்குள் நுழைந்தான். '' எதுடா... இது...? '' - அன்னபூரணி குரலில் லேசான பதற்றம். '' அலுவலகத்துல லோன் போட்டு வாங்கினேன். '' - அமர்ந்தான். '' ஏன்...? ...
மேலும் கதையை படிக்க...
நான் வீடு வந்து சேர்ந்த வெகு நேரத்திற்குப் பிறகு இரவு ஏழு மணி சுமாருக்கு... சொல்லவா கூடாதா என்கிற நீண்ட போராட்டத் தயக்கத்தில் ‘‘ என்னங்க...! ‘‘ மெல்ல அழைத்தாள் என் மனைவி இந்திரா. ‘‘ என்ன...?‘‘ பக்கத்தில் வந்தவளைத் திரும்பி பார்த்தேன். ...
மேலும் கதையை படிக்க...
ஆர்த்தி மனசுக்குள் ரொம்ப நாட்களாகவே ஒரு சந்தேகம், உறுத்தல். ' இன்றைக்கு எப்படியும் இதை தெளிவு படுத்திக் கொள்ள வேண்டும் ! ' - என்று நினைத்தவள் அருகில் நின்ற அம்பிகாவை அழைத்துக் கொண்டு தனிமையில் அமர்ந்து தினசரி படித்துக் கொண்டிருந்த சோமசுந்தரம் ...
மேலும் கதையை படிக்க...
இருளும் ஒளியும் கலந்த மசக்கையான நேரம். பக்கத்து வீட்டில் ஏதோ கரைச்சல். சோமசுந்தரம் மிராசு, அவரின் கூலி ஆள் சங்கன், மிராசுவின் மனைவி செண்பகம்.... என்று குரல்கள் மாறி மாறி கேட்டது. கொஞ்ச நேரத்தில் சோமசுந்தரத்தின் மகன் ராமு என் வீட்டிற்குள் நுழைந்தான். படித்துக்கொண்டிருந்த என்னிடம் ...
மேலும் கதையை படிக்க...
வீணாகலாமா வீணை…..!
விபத்து..!
அவர்கள் அடிமைகள் அல்ல….
மாமன் மனசு..!
நேர்க்கோடு..!

மகளுக்காக… மீது ஒரு கருத்து

  1. Muthu says:

    காரை ஆடலரசன் கதைகள் அருமை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)