பொக்கிசம்

 

தம்பிமுத்துவுக்கு இப்போது அறுபத்து எட்டு வயது. கண்பார்வை மங்கிக் கலங்கலாக உருவங்கள் உருகித் தெரிகிறது. அவசரமாய் கண்ணாடியை மாட்டினால் மட்டும் அவை உருப்படியாக மீண்டும் தெரிகின்றன. நினைவுகள் பல கனவுகள்போல தூரத்தில் நிற்கின்றன. சில ஞாபகங்கள் சில வேளைகளில் மட்டும் வருகின்றன. பல நினைவுகள் ஞாபகத்தில் இருந்து நிரந்தரமாய் மறைந்தே போயின. முதுமை மீண்டும் மழலைப் பருவத்தை வலுவில் அவருக்கு அறிமுகம் செய்து வைக்கிறது. அவரை இயற்கை தன்விருப்பில் வலுவாகத் தழுவ எண்ணிய காலம் இது.

அவரது அழகான வாழ்க்கை உலகின் அழகிய தீவில் தொடங்கியது. அந்த அழகிய தீவு ஒரு முறை தீக்குளித்தது போதாது என்று மீண்டும் மீண்டும் பலமுறை தீக்குளிக்க எண்ணியது. அதுவும் ஒரு இனத்தை சிதையேற்றுவதில் குறிப்பாக அது மும்மரமானது.

தம்பிமுத்துவின் முன் அழகிய தீவா அருமையான உயிரா என்கின்ற தெரிவு அந்த அநியாயத்தின் பின்பு முன்வைக்கப்பட்டது. தம்பிமுத்து சாதாரண மனிதனாக ஒரு முடிவு எடுத்தார். தம்பிமுத்துவின் வாழ்க்கை நதியில் அகப்பட்ட நாணற்புல் போல அவரின் கட்டிற்குள் இல்லாது அதுகின் இஸ்ரப்படி நடைபோட்டுக் கடைசியாகக் கரை ஒதுங்கிய இடமாக நோர்வே முடிவாகிப் பலகாலம் ஆகிவிட்டது. தம்பிமுத்துவிற்கு மாத்திரம் அல்ல அவரது பல நண்பர்களுக்கும் அதுவே முடிவாகியது அல்லது கதையாகியது. இப்படியாக அழகிய தீவில் இருந்து ஆதங்கத்தோடு வந்தவர்கள் வரும் போது சில பொக்கிசங்களைத் தங்களோடு காவி வந்தார்கள். காவி வந்த பொக்கிசங்கள் அவர்களைப் பொறுத்தமட்டில் அவர்களின் உயிரைவிட மதிப்பு மிக்கவையாக இருந்தன. அதை யாரும் பொறுப்பானவர்களிடம் ஒப்படைத்தால் மட்டுமே தங்களுக்கு நிம்மதி உண்டாகும் என்பது அவர்களுக்கு விளங்கியது. அந்தப் பொக்கிசங்களை உடனடியாக ஒட்டுமொத்தமாக யாரிடமும் கொடுத்துவிட முடியாது. சிறிது சிறிதாகவே கொடுக்க வேண்டும் என்பது அனைவரும் அறிந்த உண்மை. பொக்கிசத்தைக் கொடுக்கும் போது அதை வாங்குபவர்களும் அக்கறையாகப் பாதுகாக்கும் எண்ணத்தோடு வாங்க வேண்டும். அப்படி வாங்கினால் மட்டுமே அந்தப் பொக்கிசம் தொடர்ந்தும் பாதுகாக்கப்படும்.

பல இளையவர்களுக்கு அந்தப் பொக்கிசத்தைப் பற்றிக் கதைப்பதே வெறுப்பைத் தந்தது. அவர்களுக்கு வெறுப்பைத்தந்தாலும் இப்போது முதுமை முதுகில் சவாரி செய்யும் பொக்கிசத்தைக் கொண்டு வந்தவர்கள் அவர்களைச் சுயமாக இருக்க விடுவதில்லை. அவர்கள் தங்கள் பொக்கிசத்தைப் பாதுகாப்பதிற்கும், இளையவர்களின் தலையில் வலுக்கட்டாயமாக ஏற்றி வைப்பதற்கும், அங்கங்கே பல அருங்காட்சியகங்களை உருவாக்கி வைத்திருந்தனர். அந்த அருங்காட்சியகங்கள் பலவும் பொதுப் பணத்தில் உருவாகி இன்று தனிமனிதர் சொத்துக்களாகப் போவதற்காய் அடிபடுவதை வேறு ஒரு கதையில் சொல்ல வேண்டும்.

பிள்ளைகளை அந்த அருங்காட்சியகங்களுக்குக் கூட்டிச் செல்வது என்றால் அந்தப் பிள்ளைகளுக்கு தீ மிதிப்பது போன்ற அவஸ்தை. அவர்கள் எப்படி எல்லாம் இதில் இருந்து தப்பிக்கலாமோ அப்படி எல்லாம் தப்பிக்க முயல்வார்கள். அருங்காட்சியகத்தில் என்ன இருக்கிறது என்பது அவர்கள் எண்ணம். தமக்கு அறிமுகம் இல்லாத பழையதைப் பார்ப்பதில் அவர்களுக்கு எந்தச் சுவாரசியமும் கிடையாது. முயற்சிகள் எல்லாம் திருவினையாகும் என்பது எப்போதும் உண்மையாக இருப்பதில்லை. அது அவ்வப்போது பிழைத்துவிடுவதும் உண்டு. பல இளையவர்களின் வாழ்கையில் அது பிழைத்தது. அவர்கள் தலையில் காவி வந்ததை இவர்கள் தலையில் இறக்கி வைப்பதில் அவர்கள் மிகவும் குறியாக இருந்ததால் பல இளையவர்களின் எண்ணங்களுக்கும், விருப்புகளுக்கும் மதிப்புக் கொடுக்காது வலுவில் அவர்களை அந்த அருங்காட்சியகங்களுக்கு இழுத்துச் சென்றார்கள். தாங்கள் சுமக்காதவை, தங்களுக்குச் சுமக்கக் கிடைக்காதவை போன்ற அனைத்தையும் குருவியின் தலையில் பனம்பழத்தை வைப்பது போல இளையவர்கள் தலையில் அந்தச் சுமையை இந்தப் பொருத்தம் அற்ற இடத்தில் வைத்தார்கள்.

இப்படியாக வன்முறை நடக்கும் போது காலம் கரைபுரண்டு ஓடியது. இளையவர்களான குருவிகள் இறக்கை விரித்துப் பறக்கத் தொடங்கினார்கள். பல குருவிகள் பனம்பழம் பாரம் என்று அதைத் தூக்கி எறிந்து விட்டுச் சுகந்திரமாக தமது காட்டின் கீதம் பாடத் தொடங்கின.

இருந்தும் ஒரு சில பழைமை பயிலும் குருவிகள் மாத்திரம் பனம்பழம் என்றாலும் பரம்பரையாக வந்தது என்கின்ற பெருமையோடு சுமக்க முடியாத சுமையை சுமந்து திரிந்தன. அது பெருமையா அல்லது மூளைச் சலவையா என்றும் சிலர் விவாதம் செய்தனர். என்றாலும் அதை வெளிப்படையாக விவாதிப்பதற்கு யாருக்கும் துணிவு இருக்கவில்லை.
இந்த நேரத்தில் தம்பிமுத்துவின் வயது வேகமாக அவரின் இவ்வுலக வாழ்வை முடிக்க எண்ணியது. அதனால் அவர் சேடம் இழுத்தபடி படுக்கையில் கிடந்தார். அவரது நல்ல காலம் அவரை முதியோர் இல்லத்தில் விடவில்லை. அது அவருக்குக் கிடைத்த அதிஸ்ரம் என்று அவர் எண்ணினார்.

அவர் ஏன் இப்படி சேடம் இழுத்துக் கொண்டு கிடக்கிறார் என்பது பலருக்கும் விளங்கவில்லை. இப்படி இருக்கும் போது அவரது மகள் வேறு ஒரு இடத்தில் இருந்து அவரை உயிரோடு கடைசியாகப் பார்க்க ஒரு நாள் மாலை நேரம் வந்தாள். அவள் பனம் பழத்தைத் தலையில் தாங்கும் குருவியை போன்றவள். அவள் அக்கறையாக வாங்கிய பொக்கிசத்தை பாதுகாத்து வந்தாள். அவளுக்கு ஏன் தம்பிமுத்துவின் உயிர் பிரிய மறுக்கிறது என்பது விளங்கியது.

அவள் தம்பிமுத்துவைப் பார்த்துவிட்டுத் தான் பத்திரமாக வைத்திருந்த பொக்கிசத்தில் ஒன்றை எடுத்து உரைத்து உரைத்து அதை அவர் காதில் ஊற்றினாள்.

மகள் தந்தைக்கு ஆற்றிய உதவியால் தம்பிமுத்துவின் மூச்சு அடங்கியது. அவர் காவி வந்த பொக்கிசங்களும் இனி…?

- ஓகஸ்ட் 2018 

தொடர்புடைய சிறுகதைகள்
அம்மாவிடம் போக வேண்டும். அம்மாவைப் பார்க்க வேண்டும். அந்த அவா ஒயாத அலையாக மனதின் கரையை நோக்கி ஆர்பரிக்கிறது. அது என்பிடரி பிடித்து எப்போதும் முன்னே தள்ளிக்கொண்டு இருக்கிறது. நான் அம்மாவிடம் போகாமலும் விடலாம். நான் அங்கு போனாலும் போகாவிட்டாலும் அம்மாவைப் பொறுத்தவரையில் அது ...
மேலும் கதையை படிக்க...
நாளை ஞானம் என்கின்ற அஞ்ஞானத்திற்கு பாலிணைவினால் சந்ததி பெருக்கும் சடங்கு.. அதாவது திருமணம். பிறக்கும் போதே தன் பிறப்பை உணர முடியாத, பிண்டத்தோடு அவதரித்து விடுகின்ற மோகம். காமம் என்கின்ற தீராப்பிணி. இறக்கும் போதும் மரிக்க விரும்பாத அதன் அடம். ஞானத்திற்கு ...
மேலும் கதையை படிக்க...
திவைத்தா என்கின்ற வர்த்தகமையத்தின் முன்பிருந்த அந்தப் பரந்த வெளிக்கு இயற்கையே வெள்ளைக் கம்பளம் விரித்தது போன்ற அழகு. பனிக்காலத்தின் குழந்தைப் பருவத்தைத் சுதர்மமாக ஏற்ற இயற்கை. அது தனக்குத்தானே பருவகாலத்தில் கொட்டும் பனியின் பலாபலனால் விதவை வேடம் தரித்த அவஸ்தை. புதுப் ...
மேலும் கதையை படிக்க...
வேலை முடிந்து அலுப்பு அவனைப் பிடித்து உலுப்பச் சுகுமாரன் சுரங்கரதத்தில் வந்தான். இன்று வெள்ளிக்கிழமை. இந்த நாள் வருவது பலருக்கும் மிகவும் சந்தோசம் தரும் ஒரு நிகழ்வு. ஆனால் வந்த வேகத்தில் அது போய்விடுவதுதான் மிகவும் துக்கமான உண்மை. இருந்தும் காலம் ...
மேலும் கதையை படிக்க...
பக்கத்தில் இருந்த அமுதனின் கையை வினோதன் சுரண்டினான். வேலை முடித்துப் போகும் களைப்பில் அந்தரித்த அமுதனுக்குக் கோபம் பற்றிக் கொண்டு வந்தது. இன்று மத்தியானம் அவன் சாப்பிட நேரம் கிடைக்கவில்லை. ஒரு நாளும் மறக்காத, மீறாத செயலை இன்று அமுதன் மீறிவிட்டான். ...
மேலும் கதையை படிக்க...
அம்மா
இயற்கைக்கு
பிரம்ம ஞானம்
அவனே அவனைப் பார்த்து…
புகையின் பின்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)