பேசாதவன்

 

அன்று அம்மாவை எப்படியும் பார்த்து விடுவது என்று மனதில் உறுதியெடுத்துக் கொண்டான் கணேசன். இப்படித்தான் ஒவ்வொரு வாரமும் நினைத்துக் கொள்கிறான். ஆனால் போக முடியவில்லை. ஏதாவது வேலைகள் இருந்து கொண்டே இருக்கிறது. வேலைகளோடு வேலையாய், அதையும் ஒரு வேலையாய்க் கருதித்தானே சென்றாக வேண்டும். அப்படி ஒரு வேலையாய் நினைத்துச் செய்வதானால,; போக, பார்க்க என்று வருவதுதானே அது. அதில் விருப்பமில்லை இவனுக்கு. போனால் அம்மா கூட ஒரு நாள் முழுக்க இருந்தாக வேண்டும். இருக்க வேண்டும். அப்பொழுதுதான் மனம் நிறையும்.
மனம் நிறையும் என்பதைவிட அன்று ஒரு நாள் இவளைத் தனியே விட வேண்டும். அதில்தான் மனம் திருப்தியுறும். நிச்சயம் தான் அம்மாவுடன் இருக்கும் பொழுதுகளில் இவள் தொலைபேசியில் கூடத் தொடர்பு கொள்ளப் போவதில்லை. தொடர்பு கொண்டால்; அம்மாவுடன் பேச வேண்டி வரும். அதில் அவளுக்கு இஷ்டமில்லை. அதனால் அந்த ஒரு நாளின் பொழுதுகளில் அவளின் தொல்லையில்லை.
மாலை வீடு திரும்பியபின்தானே பிரச்னை. அதை அப்பொழுது பார்த்துக் கொள்ளலாம். மனசாட்சி எங்கோ ஒரு மூலையில் உறுத்திக் கொண்டிருக்கக் கண்டுதானே தொலைபேசியில் பேசுவதைத் தவிர்க்கிறாள்.

எந்த ஒரு விஷயத்திற்கும் சரி, தவறு என்று இரண்டுதானே இருக்க முடியும்? மனிதர்களின் குணாதிசயங்களுக்கு ஏற்ப நியாயங்கள் மாறிவிடக் கூடுமா என்ன? அல்லது சூழல்களுக்கு ஏற்ப ஒன்றை ஏற்க முடியாமல் போய் விடுமா? உலகத்தில் மாற்ற முடியாத சில நல்லவைகளுக்கு என்றுமே அழிவில்லையே? அவை உடன் வந்துகொண்டே இருந்தால்தானே வாழ்க்கையின் செம்மை என்பதற்கான அர்த்தம் முழுமைப்படும்? மொழியின் அடிப்படையான இலக்கணங்கள் மாறுபடும்போது மொழி சிதைந்து போகிறதல்லவா? அதுபோல் வாழ்க்கையின் அடிப்படையான, ஆழமான, சில நல்லியல்புகள், மதிப்புமிக்க விழுமியங்களுக்கு என்றுமே அழிவு என்பது கிடையாதல்லவா?

தெரிகிறது. ஆனால் மனது ஏற்க மறுக்கிறது. என்னவோ ஒரு பிடிவாதம். இவளுக்கு மட்டும் என்ன, வயது இப்படியே இருந்து கொண்டிருக்குமா? வருடா வருடம் ஒரு வயது கூடாதா? அப்பொழுது இவளும் அம்பது, அறுபது, எழுபது என்று எட்ட மாட்டாளா? அப்படி எட்டும்போது அதற்கேற்றாற்போல் இவளும் தளர மாட்டாளா? இதே இளமை என்றும் நிலைத்திருக்குமா இவளுக்கு மட்டும்?

கண்ணாடியில் நின்று எங்கோ முளைத்ததுபோல் தெரியும் ஒரே ஒரு நரைத்த முடி எது என்று மட்டும் உன்னிப்பாகத் தேடத் தோன்றுகிறது? அது எதன் அடையாளம்? முதுமை பயமுறுத்துவதன் அடையாளம்தானே அதைத் தேடிப் பிடுங்கி எறியத் தோன்றுகிறது? எத்தனை நாளைக்கு இப்படிப் பிடுங்குவாய் நீ? ஒன்று இரண்டாகி, இரண்டு நான்காகி, நான்கு எட்டாகி, பிறகு அங்கங்கே என்று பரவும்போது உன் உடம்புத் தோலையும் சேர்த்துப் பார்க்க வேண்டுமே? அன்று கண்ட மேனி அழியாமல் அப்படியேவா இருக்கும்? என்னதான் எண்ணெயைத் தேய்த்துத் தேய்த்துப் பளபளப்பாக்கினாலும், காய்ந்து போய் ஒரு வறட்சியைக் காண்பித்து உன்னைப் பார்த்து இளிக்குமே? அப்பொழுது என்ன செய்வாய்? உனக்கும் முதுமை என்ற ஒன்று உண்டல்லவா? பிறகு ஏன் அதை நீ மதிக்க மறுக்கிறாய்? எப்படிச் சாவு என்ற ஒன்று நிச்சயமாகத் தெரிந்த ஒன்றாக விளங்குகிறதோ, அதைப் போல் இந்த முதுமை என்பதும் எல்லோருக்கும் பொதுவான ஒன்றுதானே? நீ வேண்டாம் என்றால் சரி வரவில்லை என்று நின்றுவிடப் போகிறதா? குழந்தைப் பருவத்தில் இருந்து உன் உருவம் என்னவெல்லாம் மாற்றங்கள் அடைந்து வந்திருக்கின்றன என்பதைப் படிப்படியாக அறிந்துதானே வந்திருக்கிறாய்? அதைத் தவிர்க்க முடிந்ததா உன்னால்? உனதும் உன் கண்களின் முன்னால் காணும் உருவங்களும் மாற்றங்கள் கொள்வது தவிர்க்க முடியாதவை தானே? பின் ஏன் அதை ஏற்க மறுக்கிறாய்? என் தாயை மறுதலிக்கும் நீ, நாளை அதே நிலையை எட்ட மாட்டாய் என்பது என்ன நிச்சயம்? அப்படி நின்றாலும் பரவாயில்லை, இன்று இப்படித்தான் என்பது மூடத்தனமாகத் தோன்றவில்லையா உனக்கு? உன் பெற்றோர்கள் உன்னை இப்படிச் சொல்லியா வளர்த்திருக்கிறார்கள்? உனக்கு ஏராளமான நல்லவைகளைப் போதித்த அவர்கள், அந்த நல்லவைகளிலிருந்து நீ இவற்றையெல்லாம் பிரித்திருப்பாய் என்று அறிய வந்தால் எத்தனை சோகம் கொள்வார்கள்? ;காலமும் நிகழ்வுகளும் எல்லோருக்கும் பொதுதானே? உனக்கு மட்டும் என்று தனி நியதியா என்ன?

கண்களைத் திறக்க மனமில்லாமல் படுத்திருந்தான் கணேசன். பக்கத்தில் மாலினி தூக்கக் கலக்கத்தில் என்னவோ உளறினாள். அவளை உலுக்கி அதைச் சரிசெய்யக் கூட இவனுக்கு மனமில்லை. உளறட்டும். நன்றாக உளறட்டும். மனதையும், எண்ணங்களையும் விகல்பமின்றி, நிச்சலனமாய் வைத்துக் கொண்டால்தானே உறக்கம் நிம்மதியாக வரும்? அதில் ஏராளமான கசடுகளை வைத்திருந்தால்? உளறு, நன்றாக உளறு. உனக்கு நீயே அதிர்ச்சி கொண்டு எழு. உடம்பில் பொங்கும் வியர்வையை, நடுக்கத்தை நீயே உணர். எதற்காக இது? என்று யோசிக்க முடிந்தால் யோசி. அதில் ஏதேனும் நல்லது தோன்றினால் அதை தரிசிக்க முயல். இல்லையேல் இப்படியே கிடந்து உழலு. காலம் உன்னைப் புரட்டிப் போடுகிறதா பார்ப்போம். நடக்கவில்லையென்றால் அப்படியே அழிந்து படு.

எந்த மனிதனின் தவறுகளும் அவனோடு மட்டுமே அழிந்து பட்டதில்லை. அவை ஏதேனும் ஒருவரால் சத்தியமாய் உணரப்பட்டிருக்கும். அந்த ஒருவர் உன் மகனாய் இருப்பான் நிச்சயம். அவன் உன்னை உணருவான். உன் காலம் முடிவதற்குள் உன் செயல்களுக்கான எதிர்வினைகளை நீ எதிர்கொள்வாய். அதனை உணர்ந்து வருந்துவது ஒரு வகை. உணராமலே மரிப்பது இன்னொரு வகை. ஆனால் உன் தவறுகள் மற்றவர்களால் உணரப்படுவதுதான் உனக்கான தண்டனை. அவர்களின் நினைவுகளிலிருந்து நீ அழிந்து படுவாய். காலம் உன்னை மதிப்பிழக்கச் செய்யும். மனிதர்களின் வரலாறுகள் இப்படித்தான் பேசுகின்றன.

இத்தனை நினைக்கிறாய், இத்தனை பேசுகிறாய்? உன் ஆண்மை எங்கே போயிற்று இவ்விஷயத்தில்? உனக்கு நீயே புலம்பிக் கொண்டிருப்பதுதான் ஆண்மையா? எது ஆண்மை என்று நீ கருதுகிறாய்? உனக்கு நீயே யோசித்து நல்லவன்போல் உன்னை நீயே கருதிக் கொண்டு அமைதி காப்பதுதான் ஆண்மையா? ஆண்மை என்பது நியாயத்தை எடுத்து வைத்து, வாதாடி, அதன் உண்மையை நிலை நிறுத்துவதுதானே? அந்தத் தாத்பர்யத்தை நல்லபடி உணரச் செய்வதுதானே? அதை முழுமையாக நீ செய்து விட்டாயா? அதை எந்த அளவுக்கு அவள் உணர்ந்திருக்கிறாள் என்பது உனக்குத் தெரியுமா? ஒரு வேளை எந்த நல்லவைகளும் அவளால் நேர் கோணத்தில் உணரப் படாமல் இருந்தால்?

அது எப்படி? கழுதை வயதாயிற்று. இவளுக்கு நான் பாடம் நடத்த வேண்டுமா? அவசியமில்லை. அப்படிச் சொல்லி ஒதுங்கி விட்டால்? அவள் சொல்வதுதானே நிறைவேறிக் கொண்டிருக்கிறது? அதைத் தவறு என என்று நீ அவளை உணரச் செய்வாய்?

உணரச் செய்வது என்ன? இதுதான் நியாயம் என்பது அவளுக்குச் சொல்லித்தான் தெரிய வேண்டுமா?

அப்படியென்றால் ஏன் செய்யவில்லை? அதை நிலை நாட்டுவதில் என்ன தயக்கம்? ஒரு பண்பாட்டு அடிப்படையில் சுமுகமாக எல்லாமும் நிறைவேற்றப்பட வேண்டும் என்று உன் மனம் விரும்புகிறது. அதுதானே? அதற்கு ஒரே வழி என்ன? நீ அவளிடம் வெளிப்படையாகப் பேசுவதுதான். இதுதான் நியாயம் என்பதைச் சரியாக அவளை உணரச் செய்வதுதான். நீ எதிர்பார்ப்பதை அவளே தன் வாய் வாய்விட்டுச் சொல்ல வேண்டும் என்று உன் எதிர்பார்ப்பு இருக்குமானால், அது நடக்காது போனால், ஒன்று அவளுக்குத் தெரிந்தும் அமைதி காக்கிறாள், தன்னையறியாமல் தவறு செய்கிறாள் என்று பொருள். அல்லது அவள் அப்படி இருப்பதன் மூலம் உனக்கும் அதில் என்னவோ உன்னையறியாத ஒப்புதல் இருக்கிறது என்று பொருள். நீ அவளைக் கை நீட்டிக் குற்றம் காண்பித்து நீ தப்பித்துக் கொள்ளப் பார்க்கிறாய்? அதுதானே? நீ தெளிவாக அவளிடம் N;பசினாயா? இதுதானே கேள்வி?

நானென்ன அவளிடம் போய்க் கெஞ்ச வேண்டுமா? நான் சொல்வது சரிதான் (சொல்ல நினைப்பது) என்று அவளுக்குத் தெரியாதா? என் அமைதியைப் பயன்படுத்திக் கொண்டு அவள் நன்மை அடையப் பார்க்கிறாளா? நன்மை அடைந்து கொண்டிருக்கிறாள்! அதுதானே!! நா எங்கே சொன்னேன்…நீங்கதானே கொண்டுபோய் வெச்சீங்க? நாளைக்கு உன்னையே திருப்பலாமே அவள்?

“எங்கம்மா என்கூடதாண்டீ இருப்பா! அத யாரும் தடுக்க முடியாது…இஷ்டம்னா இரு…இல்லன்னாப் போ…அதப்பத்தி எனக்குக் கவலையில்ல…”

போய்விட்டாளே பாவி! எனக்கென்ன என்று போய்விட்டாளே?

“கணேசா! நீ இருக்கிறது சரியில்லை…என்னைக் கொண்டு பேசாம அந்த முதியோர் இல்லத்துல விடு…போய் அவளை அழைச்சிண்டு வா…நா வாழ்ந்து முடிச்சவ…நா இருந்துக்கிறேன்…உங்கப்பாவோட வாழ்ந்த காலத்துலயே நா திருப்திப் பட்டுட்டேன்…அவருக்கு மேல எனக்கு ஒண்ணுமேயில்ல..நீங்க வாழ வேண்டியவா..உங்களுக்கு இன்னும் நிறையக் காலமிருக்கு…அவுங்க வீட்ல கேள்விப்பட்டாங்கன்னா என்னைத்தான் குத்தம் சொல்வாங்க…இந்தக் கிழவி ஏன் அங்க போய் ஒண்டின்டிருக்கான்னு…அந்தக் கெட்ட பேர் எனக்கு வேணாம்…”

செய்தி எப்படித் தெரிந்தது. எப்படிப் புறப்பட்டு வந்தாள்? பாவி! அதுவாகவே நடக்கட்டும் என்று காத்திருந்தாளோ? இன்று வரை அம்மாவப் போய் ஒரு தரம் பார்த்திட்டு வருவோம் என்று ஒரு வார்த்தை சொல்லவில்லையே? என்ன மனுஷி இவள்?

எழுந்தான். காலைக் கடன்களை முடித்தான். கிளம்பி விட்டான்.

“டிபன் சாப்பிடலையா? தோசை வார்க்கிறேன்…சட்னி அரைச்சிருக்கேன்…சாப்டு;ட்டுப் போங்க…..”

“உன் டிபன் எவனுக்கு வேணும்? எங்கம்மா மேல அன்பில்லாத உன் கரிசனை எனக்குத் தேவையில்லை…உன் டிபனை நீயே சாப்பிடு…நீயே நல்லாக் கொட்டிக்கோ…”

சொன்னானா? இல்லையே! அவன்பாட்டுக்கு இறங்கிப் போய்க் கொண்டிருந்தான்.

இது இப்பிடித்தான் என்பதுபோல் அவள் பார்த்துக் கொண்டிருந்தாள்.

‘கணேசா, நீ செய்யுறது சரியில்லை…’ அம்மாவின் குரல் இவனைத் தடுத்தது.

“இருக்கட்டும்மா, இதுலதான் எனக்கு ஒரு ஆறுதல் கிடைக்குது…” பதிலுக்கு இவன் சொன்னான்.

அவனைப் பார்க்க அவனுக்கே பரிதாபமாயிருந்தது. 

தொடர்புடைய சிறுகதைகள்
யதார்த்தம்
அப்பா, லெட்ரீன் குழாய் ஒழுகுது'' சொல்லிக் கொண்டே வேகமாய் வெளியே வந்தான் சதீஷ். கதவைப் படாரென்று சாத்தும் சத்தம். அதனைத் தொடர்ந்து டொக், டொக்கென்று விளக்குகளை சத்தமெழ அணைக்கும் சத்தம். ஒரே ஆர்ப்பாட்டம்தான். போவது கழிப்பறைக்கு. அதற்கு குளியலறை லைட்டையும் சேர்த்து ஏன் ...
மேலும் கதையை படிக்க...
தினமும் அந்த வீட்டைக் கடந்துதான் போய்க் கொண்டிருக்கிறேன். அதுதான் சுருக்கு வழி. கடந்து செல்லும் அந்த ஒரு கணத்தில் என் பார்வை அங்கே திரும்பாமல் இருந்ததில்லை. காலையில் தண்ணீர் வந்ததற்கு அடையாளமாய் அங்கே சுற்றிலும் ஈரமாக இருக்கும். ப்ளாஸ்டிக் குடங்களில் தண்ணீர் ...
மேலும் கதையை படிக்க...
“என்னங்க…என்ன பேசாம நின்னுட்டிருக்கீங்க…போங்க…போங்க…போய்க் கூப்பிடுங்க…” – என் கையைப் பிடித்து இழுக்காத குறையாக என்னை வாசலை நோக்கி விரைவு படுத்தினாள் சாந்தி. இவள் எதற்காக இப்படிப் பரத்துகிறாள் என்பது எனக்குத் தெரியும். அறையிலிருந்தே மேனிக்கே ஜன்னல் வழியாகப் பார்த்தேன். ராஜப்பாதான் போய்க் கொண்டிருந்தார். ‘பாவம், ...
மேலும் கதையை படிக்க...
அந்த நெனப்புலதான் அவ பார்க்குறாங்கிறது எனக்கு நேத்துத்தான் தெரிஞ்சிச்சு… எத்தனையோவாட்டி ராசுக்கட்டி சொல்லியிருக்கான்…போடா ஒனக்கு வேற வேலையில்லன்னு நானும் உதறியிருக்கேன்…ஏன்னா என்னவிட மூணு நாலு வயசு பெரியவ அந்த மீனாப்பொண்ணு. அவள நிமிந்துகூட நா பார்த்ததில்ல…என்னாத்துக்குங்கிற நெனப்புதான்….ஏற்கனவே படிக்காத கழுத, ஊரச் ...
மேலும் கதையை படிக்க...
எங்கேயாவது கண்ணில் பட்டுவிடுவாரோ என்றிருந்தது. வெளி வேலையாகக் கிளம்புகையில் கண்கள் பரபரவென்று தேடத்தான் செய்கின்றன. அதற்குள்ளேயுமே யாரேனும் வாசலில் சத்தம் கொடுத்தால் இவர்தான் வந்து விட்டாரோ என்று நினைக்க வைத்தது. நிச்சயமாக விசாரித்துக் கொண்டு அவரால் வர முடியும். தன் பெயர் ...
மேலும் கதையை படிக்க...
யதார்த்தம்
மனசு…
வரும்….ஆனா வராது…
அவன் இவன் அவள் அது…!
சுழல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)