Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

நீலாம்பரி

 

தோட்டக்கார வேலு, எட்டு போல உடம்பை வளைத்து, “”கும்பிடுறேனுங்கம்மா…” எனக் கூறிய போது, அவர்கள் வீட்டில் மிகப்பெரிய மாறுதல்களை அந்தக் கும்பிடு ஏற்படுத்தப் போகிறது என சாந்தாவுக்குத் தெரியவில்லை. பின்னாலேயே மாமியார் கமலா, “”என்ன வேலு… எப்படி இருக்கே?” என்று வந்தாள்.
சாதாரணமாக, அந்த வீட்டில் தோட்ட வேலை முடித்தபின், புல், கிளை முதலியவற்றை மூட்டை கட்டிக் கொண்டு சென்று விடுவது வேலுவின் வேலை. யாரிடமும், எதுவும் பேச மாட்டான். கமலா மட்டும், தோட்டத்திலிருந்து கறிவேப்பிலை, மாங்காய் பறித்துத் தரச் சொல்வாள். இன்று என்னவென்று தெரியவில்லை.
“”அம்மா… ஒரு ஜாதிப்பசு வந்திருக்கு… கிராமத்துல இருந்து மச்சான் சொல்லி அனுப்பி இருக்காரு. நல்ல சுழியாம். பத்து லிட்டர் பால் கொடுக்கிறதாம். அதை, வாங்கலாம்ன்னு இருக்கேன்…” என்றான்.
நீலாம்பரிகமலாவுக்கு, ஏதோ பணத்துக்காக வேலு அடிபோடுவது போலத் தோன்றியது. ஏற்கனவே நிறைய அனுபவப்பட்டிருந்ததால், கமலாவின் மகன் சுதர்சனம், கடன் கொடுப்பதில்லை என உறுதி பூண்டிருந்தார். அவள் மன நிலையை வேலு அறிந்தது போல, “”எனக்கு பணம் எதுவும் வேண்டாம்மா…” என்றான்.
சாந்தாவுக்கும், கமலாவுக்கும், “அப்பாடா…’ என்றிருந்தது.
“”மாடுகட்ட இடம் இல்லம்மா… அய்யா உத்தரவு தந்தா, இந்த தோட்டத்தில ஒரு பக்கமா கட்டிக்கலாமான்னு கேட்க வந்தேன்.”
அதுவரை, “சன்னி’ என்ற நாய், அவர்கள் வீட்டில் வளர்ந்து வந்தது. சமீபத்தில், அது இறந்து போக, சுதர்சன் குடும்பத்தில் ஒரு சோகம் இருந்தது. சாந்தாவுக்கு ஒரு ஆசை. மாடு வந்தால் மங்களகரமாக இருக்குமே என நினைத்தாள். பல விதமான செடி கொடிகள் இருந்தும், ஒரு பக்கம் நிறைய நிலம் காலியாகவே இருந்தது. அதில் வரும் வேண்டாத புல் செடிகளைத் தான், வேலு தினமும் சுத்தம் செய்து வந்தான்.
“”நான் பையன் கிட்டப் பேசறேன் வேலு… சாயங்காலம் வா…” என்று, அந்தப் பேச்சுவார்த்தைக்கு முற்றுப் புள்ளி வைத்தாள் கமலா.
சுதர்சன், அந்த ஊரில் மிகப் பெரிய ஆடிட்டர். மயிலாப்பூரில் நண்பர்கள் அடுக்குமாடிக்குச் சென்று விட்டாலும், தன் தகப்பனாரின் பூர்வீகச் சொத்தான நான்கு கிரவுண்டுடன் கூடிய வீட்டில், தியாகராய நகரிலேயே இருந்தார்.
தகப்பனார் இறந்தபின், தாய் கமலா, மனைவி சாந்தா, மகள் பிரியாவுடன் அமைதியாக வாழ்ந்து வந்தார். எல்லாருக்கும் உதவும் குணம், மிக ஆழ்ந்த சட்ட அறிவு, கம்பீரமானத் தோற்றம், எப்போதும் நகைச்சுவைப்பட பேசும் அவரது பேச்சுக்கள், இவை, அவரை மிகவும் உயர்வாக மதிக்கத்தக்கதாக இருந்தது.
“”என்னம்மா… ஆபிஸ் ரூம் வரை வந்திருக்கே… என்ன விஷயம்?” என்றான்.
முன்பே சாந்தாவும், கமலாவும், வேலுவின் மாட்டை கட்ட தோட்டத்தில் இடம் கொடுக்கலாம் என்று தீர்மானித்து விட்டனர். பையன் சம்மதம் வேண்டுமே!
“”இல்லப்பா… நம்ம வேலு, ஒரு மாடு வாங்கியிருக்கானாம்…” என இழுத்தாள்.
“”பசு மாடுன்னா, பால் வாங்கிக்கோயேன்… இதற்கு என்னிடம் என்ன கேள்வி?”
“”மாடு கட்ட அவன் வீட்ல இடமில்லையாம். அதான், நம்ம தோட்டத்திலே கட்டிக்கட்டுமான்னு கேட்கிறான்.”
“”என்னம்மா இது… மெட்ராசுல, அதுவும் தி.நகர்ல யாராவது வீட்ல மாட்ட கட்டுவாளா? உனக்கு இதனால என்ன உபத்திரவம் வரும்ன்னு தெரியாது. முன்ன அப்பாகிட்ட பல தடவை கேட்டிருக்கியே, சின்னதா பசு வளர்க்கறேன்னு… அப்பா எப்பவாவது சரின்னு சொல்லி இருக்காரா!” என்றான்.
“”அதனாலதாண்டா கேட்கறேன்… அப்பவே ரொம்ப ஆசை; அவர் ஒத்துக்கல. தோட்டத்துல நிறைய இடம் இருக்கு. ஒரு மாசம்தானாம். அப்புறம் அவன் குடிசைய போட்டு, வீட்டிலேயே வச்சுப்பானாம்…”
அம்மா ஆசைப்பட்டால், உடனே அதை நிறைவேற்றி விடுவான் சுதர்சன். இது சற்று சிக்கலானது. நேரிடையாக அவர் எதுவும் செய்யப் போவதில்லை.
ஆனால், வரும் உபத்திரவங்களுக்கு அவன் தான் தீர்வு காண வேண்டும். அவன் மவுனமாக இருப்பதைப் பார்த்து, பசு வளர்ப்பது, காலையில் பசுவின் தரிசனத்தின் மகிமை எல்லாம் கூறி, ஒரு வழியாகத் தன் மகனிடம் சம்மதம் வாங்கி விட்டாள் கமலா.
ஒரு சுபயோக சுபதினத்தில், “நீலாம்பரி’ என்ற வேலுவின் ஜாதிப்பசு, ஆடிட்டர் சுதர்சனத்தின் வீட்டு வாசல் கிழக்கு மூலையில் வந்து, தன் சாம்ராஜ்யத்தைத் தொடங்கியது.
“கமலா… பசு வாங்கியிருக்கியாமே… பல்லு சுழி பாத்தியா?’ என்று கோவிலில் மங்களம் கேட்க, “சாந்தா… ஆனாலும், உங்க மாமியாருக்கு, பரம்பரை கலாசாரம், பூஜை இதிலெல்லாம் ரொம்ப ஆசை போல இருக்கு. தினமும் கோ பூஜை பண்றாளாமே?’ என தோழிகள் கேட்க, “என்ன சுதர்சன்… அம்மா ஆசைப்பட்டான்னு, பசு மாடு வாங்கிட்டேளாமே?’ என நண்பர்கள் சுதர்சனைக் கேட்க, “மாடு வேலுவுடையது; இடம் மட்டும் தான் கொடுத்துள்ளோம்…’ என்று, எல்லாருக்கும் புரிய வைக்க ஒரு வாரம் ஆனது.
தினமும் இரண்டு லிட்டர் பாலை கமலாவுக்கு அளந்து கொடுத்துவிட்டு, பாக்கியை வீட்டுக்கு எடுத்துச் செல்வதாக ஏற்பாடு. ஆனால், மாடு கறக்கும் போதே, வரிசையாகப் பலர் வந்து கேட்கவும், கமலா, “”பாவம் வேலு… சின்னக் குழந்தையை வைச்சுண்டு இருக்கா. நல்ல பால் வேணும்… கொஞ்சம் கொடேன்…” என்று கூறவும், அங்கேயே பால் வியாபாரம் ஆரம்பித்து விட்டது.
அடுத்த சில நாட்களில், வெள்ளிக்கிழமை என்றால், அக்கம் பக்கத்துப் பெண்களுடன், கமலாவும், சாந்தாவும் கோ பூஜை செய்ய ஆரம்பித்தனர்.
சுதர்சன் அன்று அம்மாவை அழைத்தான்.
“”அம்மா…ஒரு மாசம் ஆகப் போகிறது நீலாம்பரி வந்து. வேலு குடிசை போட்டானான்னு கேட்டியா?”
“”சுதர்சன்… காத்தாலே காபி, இப்போ எப்படி இருக்கு பாத்தியா? பாக்கெட் பாலையே சாப்பிட்டு நாக்கு மறத்திடுத்து. காலங் கார்த்தாலே, நல்ல முதல் தர டிகாஷன் போட்டு, பசும்பால் காய்ச்சி காப்பி கலந்து குடிக்கிற சுகம் எங்கேயாவது வருமா? ஏன்… நீ கூடத்தான் எவ்வளவு தடவை, “அம்மா… காபின்னா இதுதான் காப்பி…’ன்னு சொல்லுவியே,” என்றாள்.
அம்மா பேச்சை மாத்துகிறாள்.
“”அதெல்லாம் இருக்கட்டும்… குடிசை போட்டாச்சா? மாடு எப்போ இங்கேயிருந்து போகும்ன்னு நான் கேட்டேன்னு வேலு கிட்ட கேளு,” என்றான்.
மறுநாள் வேலுவிடம் பேச்சை ஆரம்பிக்க நினைத்த கமலாவிடம், “”அம்மா… இப்ப நீலாம்பரியை கவனிச்சீங்களா? உங்களைப் பார்த்தாலே சந்தோஷத்துல வாலை ஆட்டுது. அய்யா ஆபிசுக்குப் போக கார்ல ஏறும்போது, தலையை ஆட்டி சல்யூட் அடிக்குது சாந்தா. அம்மா ஏதாவது பழம், கிழம் கொடுப்பாங்க. அப்போ ஆசீர்வதிக்கிற மாதிரி தலையை ஆட்டுதே. நல்ல புத்தியுள்ள மாடும்மா…” என்றான்.
புகழ்ச்சியால் மகிழ்ந்த கமலா, பிறகு கேட்கலாம் என்று விட்டு விட்டாள். இரண்டு வேளை பால் கறக்கும் நேரம் போக, வேலுவைக் காண்பது அரிதாக இருந்தது. நாட்கள் நகர்ந்தன.
“”அப்பா…” என்று கூப்பிட்டு கொண்டே அருகில் வந்த மகள் பிரியாவை, என்ன என்பது போலப் பார்த்தான் சுதர்தன்.
“”என்னப்பா… நானும், என் தோழிகளும் ஷட்டில் விளையாடற இடத்தை மாடு கட்ட அனுமதிச்சுட்டே. ஏதோ கொஞ்ச நாள்தான் என்று பார்த்தால், பாட்டியும், அம்மாவும், வேலுவே மாட்ட அழைச்சுண்டு போறேன்னு சொன்னாலும், விடமாட்டா போல இருக்கு. இந்த கன்னுக்குட்டி அழகாத்தான் இருக்கு. ஆனாலும், நான் கொடைகானல்ல இருந்து வாங்கி வந்த ரோஜாச் செடியை எல்லாம் தின்னுடுத்துப்பா. சீக்கிரமா வேலுகிட்டச் சொல்லி, மாட்ட அவன் வீட்டுக்கு அனுப்புங்கோ, ப்ளீஸ்…” என்றாள்.
பாட்டியிடமும், அம்மாவிடமும் சொன்னால் ஒன்றும் நடக்காது என்பது அவளுக்குத் தெரியும். கல்லூரியில் படிக்கும் அவளுக்கு, தோழிகள் பரிகாசம் வேறு பொறுக்க முடியவில்லை.
சுதர்சனும், தினமும் பார்த்துக் கொண்டு தான் இருந்தான். சில நாட்கள் வெளியூர் சென்று திரும்பும் போதும், நீலாம்பரியை நிரந்தரமாக தன் வீட்டில் வைத்துக் கொள்ள அம்மா ஆசைப்படுவது போலப் பேசியது, அவருக்கு ஆச்சரியம் அளித்தது. மேலும், அவரது மனைவி, மாமியாருக்குச் சரியான ஜால்ராவாக இருந்தாள்.
கமலா அன்று, “”சுதர்சன்… சாந்தாவுக்கு இருந்த ஒத்தைத் தலைவலி போயிடுத்தாம். நீ கூட ஏதோ ஆடிட்டிங்கில் மிக நல்லதாக செய்வதற்கு பாராட்டு கிடைச்சதுன்னு சொன்னியே பாத்தியா? இப்ப பிரியா ரொம்ப நன்னாப் படிக்கிறா. எல்லாம் நீலாம்பரி வந்த வேளை தான்,” என்றாள்.
“”அம்மா… சாந்தாவுக்கு ஒத்தத் தலைவலி போனது, பிரியா தோழியோட அப்பா கொடுத்த சித்த வைத்திய மாத்திரைகள். எனக்கு கிடைச்ச பாராட்டு, என் கடுமையான உழைப்பு. பிரியா செமஸ்டர் தேர்வு நெருங்கறதால நன்னாப் படிக்கிறா. இதுல ஏம்மா நீலாம்பரியை இழுக்கறே?” என்றான்.
கமலாவுக்கு இது சற்று ஏமாற்றம் தான். அதற்குள் அவளது உறவினர்கள், “கோ பூஜை’ பார்க்க வருவதாக வேறு கூறிவிட்டனர். பையன் இப்படி எதிர்க்கிறானே என வருத்தப் பட்டாள்.
ஒரு ஓய்வு நாளில், வேலுவைச் சந்தித்த சுதர்சன், மாட்டை தன் வீட்டிலிருந்து அழைத்துச் செல்லுமாறு கூறி விட்டார். அதற்காகக் குடிசை போடக் கூட வேலுவுக்கு பணம் தருவதாகக் கூறினார்.
வெள்ளிக்கிழமை கமலா, “கோ பூஜை’ முடித்து, சனிக்கிழமை அழைத்துச் செல்ல சம்மதம் தெரிவித்தாள். மறுபடியும் யோசித்து, “”வேலு ஸ்திரவாரம் வேண்டாம். ஞாயிற்றுக்கிழமை நீலாம்பரியை அனுப்பறேனே…” என்றாள்.
சுதர்சன் வீட்டிலிருந்து நீலாம்பரி போய்விட்ட மூன்றாம் நாள், கமலாவின் சிநேகிதி நேரில் வந்தாள். “”கமலா… தஞ்சாவூர் பக்கம் போயிருந்தேனா… அங்க நம்ம மங்களம் மாமியைப் பார்த்தேன். உன்னைப்பத்தி விசாரிச்சதுக்குப் பிறகு, குன்னியூர் பரம்பரை ராஜகோபால் குடும்பத்தில், ஒரு பையன் வரன் பார்ப்பதாகவும், பையன் நன்றாகப் படித்து, நல்ல வேளையில் இருப்பதாகவும் சொன்னாள்.”
“”குன்னியூர் பரம்பரையா?” கமலம்மாள் ஆச்சரியப்பட்டாள்.
“”ஆமாம். யாரோ நீ, “கோ பூஜை’ பண்ணி, பசுவை வீட்டில் வைச்சிருக்கிறதாச் சொன்னாளாம். பையனின் பாட்டி, இந்த வீட்லதான் பெண் எடுக்கணும்ன்னு ஒத்தக் கால்ல நிக்கறாளாம். ஆமாம்… வாசல்ல என்ன வெரிச்ன்னு இருக்கு… பசு மாடு எங்கே?” என்றாள். கமலாவுக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. மாடு போன விவரம் சொல்ல மனமில்லை.
அடுத்த இரண்டு நாட்களில் பிள்ளை வீட்டுக்காரருடன் தொலைபேசியில் பேச்சு வார்த்தை நடந்தது. அவர்கள் மிகவும் அன்புடன் பேசியது, சுதர்சனுக்கு மிகுந்த திருப்தியாக இருந்தது. விரைவில் நேரில் வந்து, சுதர்சனத்தின் குடும்பத்தை சந்திக்க ஆவலாக இப்பதாகக் கூறியதும், கமலாவுக்கு ரொம்ப சந்தோஷமாக இருந்தது.
பிறகு அவர்கள் வருவதற்கு முன், பையனின் பாட்டி, கமலாவை தொலைபேசியில் அழைத்து, “”கமலா… நாங்க ஒரு வெள்ளிக் கிழமையிலேயே வர்றோம். நீங்க, “கோ பூஜை’ பண்றதைப் பார்க்க எங்களுக்கு ரொம்ப ஆசை!” என்று கூறி முடித்தாள். விஷயம் தெரிந்து கொண்ட சுதர்சன், கார் டிரைவர் பழனியை அழைத்து, “”ஏம்பா… வேலு இருக்கிற மங்களபுரம் உனக்கு தெரியுமா? அவனை அவசரமாக பார்க்கணும்…” என்றான்.
வேலுவைப் பார்த்துப் பேசியபின், சிவப்புக் கம்பள விரிப்பு மரியாதையுடன், தன் பழைய இடத்திற்கு வந்தது நீலாம்பரி. சுதர்சனத்தின் மகள் பிரியா கல்யாணம் நிச்சயம் ஆயிற்றோ, இல்லையோ தெரியாது. நீலாம்பரிக்கு சாஸ்வதமாக, ஆடிட்டர் சுதர்சன் வீட்டுத் தோட்டத்தில் இடம் கிடைத்து விட்டது.

- ராஜேஸ்வரி ராமலிங்கம் (டிசம்பர் 2010)

ராஜேஸ்வரி ராமலிங்கம்
வயது: 67, மத்திய அரசு பணியில் இருந்து ஓய்வு பெற்றவர். கவிதை, கதை எழுதுவதில் ஆர்வமுள்ளவர். நிறைய கவி அரங்கங்களில் பங்கு கொண்டு, கவிதை படிப்பது இவரது பொழுதுபோக்கு. பல இதழ்களில், இவரது கவிதை, கதைகள் வெளியாகியுள்ளன.

டி.வி.ஆர்., நினைவு சிறுகதை போட்டியில் ஆறுதல் பரிசு பெற்ற சிறுகதை – 7 

தொடர்புடைய சிறுகதைகள்
மருமகள் தன்னை வசை பாடுவது பருவதம் காதில் விழுகிறது. பல தடவை மகனிடம் சொல்லியும் கேட்கவில்லை என பருவதம் சற்று மனவருத்ததுடன் இருந்தாள். மகன் வீட்டிற்குள் நுழைத்தார். “நான் உன் தங்கையை பார்த்துட்டு வரேன்ப்பா. அவள பார்த்து ரொம்ப நாள் ஆச்சு. கண்ணுக்குள்ளயே ...
மேலும் கதையை படிக்க...
“ஏய்! எங்கே புறப்படறே? சாப்பிட்ட தட்டைக் கழுவக்கூட முடியலியோ மகாராணிக்கு?” அவசரமாக வேலைக்குக் கிளம்பிக்கொண்டிருந்த அஞ்சனா பதைத்துப்போய், குரல் கேட்ட திசையை நோக்கித் திரும்பினாள். வசவு தொடர்ந்தது: “இந்த திமிரு பொறுக்க முடியாமதானே விரட்டி விட்டுட்டுட்டான் அந்த மகானுபாவன்!” `யாரும் என்னை விரட்டலே. ...
மேலும் கதையை படிக்க...
காலை பத்து மணி! பத்தாம் திகதி. ஞாயிற்றுக்கிழமை.... தினத்தாள் கலண்டரின் தாளைக் கிழிப்பதற்காக நோட்டம் விட்ட அனிதா, அதில் பொறிக்கப்பட்டிருந்த வாசகத்தை ஒரே மூச்சில் படித்தாள்! உன் கடமையில் தவறும்போது மட்டும் வருத்தப்படு! முப்பது வருடம் வாழ்ந்தவனும் இல்லை. முப்பது வருடம் தாழ்ந்தவனும் இல்லை! “இதுக்கு ஒண்ணும் குறைச்சல் ...
மேலும் கதையை படிக்க...
ரவி தூரத்தில் வருவது தெரிந்ததுமே, டிபன் சாப்பிட்டுக் கொண்டிருந்த சுப்ரமணியம் பாதியிலேரே எழுந்து மகனை சந்தோஷமாய் வரவேற்றார். “என்னப்பா… எப்படி இருக்க…?’ ரவி கேட்டான். “நல்லா இருக்கேன்டா… நீ எப்படி இருக்க…? ராதா எப்படி இருக்கா…? குழந்தை விவேக் எப்படி இருக்கான்?’ சுப்ரமணியன் பாசத்துடன் கேட்டார். “….ம்… ...
மேலும் கதையை படிக்க...
ஈரம்
"டேய் கபாலி... உன்னையெல்லாம் அந்த சாமி சும்மாவே விடாதுடா... இந்த கையால ரிக்ஷா வலிச்சு வலிச்சு, எம்மாந் துட்டு தந்திருப்பேன். உனக்கு நன்றியே இல்லையேடா... தோ... கொசுறு துட்டு அம்பது ரூவா, அத கடனா கேட்டா அழுவுறே... தூ.'' கபாலியை தண்டிக்கும்படி, கடவுளிடம் ...
மேலும் கதையை படிக்க...
உயிரோடு உறவாடு
அணைக்க மறந்ததேனோ!
புதிய பாதை
பாசம் – ஒரு பக்க கதை
ஈரம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)