கங்கையல்ல காவிரி…

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: March 19, 2023
பார்வையிட்டோர்: 2,999 
 

கும்பலை ஏற்றிக்கொண்டு அந்த பஸ் நகர்ந்த பிறகு, பிளாட்பாரத்தில் இரண்டு மாணவிகள் மட்டுமே நிற்கின்றனர். அதில் ஒருத்தி அந்தச் சிறுமி; மற்றொருத்தி பெரியவள் – இன்றைய பெரும்பாலான சராசரி காலேஜ் ரகம். அவள் மட்டுமே குடை வைத்திருக்கிறாள். அவளது கருணையில் அந்தச் சிறுமி ஒதுங்கி நிற்கிறாள். சிறுமியைப் பார்த்தால், கல்லூரியில் படிப்பவளாகவே தோன்றவில்லை. ஹைஸ்கூல் மாணவி போன்ற தோற்றம். அவளது தோற்றத்தில் இருந்தே அவள் வசதி படைத்த குடும்பப் பெண் அல்ல என்று சொல்லிவிட முடியும். ஒரு பச்சை நிறப் பாவாடை; கலர் மாட்ச்சே இல்லாத – அவள் தாயாரின் புடவையில் கிழித்த – சாயம்போய் இன்ன நிறம் என்று சொல்ல முடியாத ஒருவகை சிவப்பு நிறத் தாவணி. கழுத்தில் நூலில் கோத்து பிரஸ் பட்டன் வைத்துத் தைத்த ஒரு கறுப்பு மணிமாலை. காதில் கிளாவர் வடிவத்தில் எண்ணெய் இறங்குவதற்காகவே கல் வைத்து இழைத்த – அதிலும் ஒரு கல்லைக் காணோம் – கம்மல்.’இந்த முகத்திற்கு நகைகளே வேண்டாம்’ என்பதுபோல் சுடர்விட்டுப் பிரகாசித்துப் புரண்டு புரண்டு மின்னுகின்ற கறை படியாத குழந்தைக் கண்கள்.


ச்சே..மேலே படிக்க விடாமல் தொடர்ந்து ஒலித்த கைப்பேசி யமுனாவுக்கு எரிச்சலூட்டியது.

அவளுக்கு அடுத்து என்ன நடக்கப்போகிறதென்ற ஆவல் தடைப்பட்டு விட்டதா என்றால்.இல்லவே இல்லை.

எத்தனை முறை படித்துவிட்டாள்?

அப்படியே பார்க்காமல் ஒரு வரி விடாமல் சொல்லமுடியும். பள்ளியில் படிக்கும் போது தான் அந்தக் கதை அவள் விரும்பிப் படிக்கும் பத்திரிகையில் வெளிவந்தது..

அன்றிலிருந்து அந்த எழுத்துச் சிற்பியின் ஒரு கதையைக் கூட விடாமல் தேடித்தேடி படித்து விடுவாள் யமுனா..

எல்லாக் கதைகளையும் பைண்ட் பண்ணி பத்திரமாய் தன் அலமாரியில் வைத்து பூட்டி வைத்திருக்கிறாள்.. யாரையும் தொட விடமாட்டாள்..

இப்போது கல்லூரியில் இரண்டாம் ஆண்டு தத்துவம் படிக்கிறாள்..பொழுது போகாத நேரம் அவருடைய கதைகள்தான் அவளுக்கு உற்ற தோழி .

குறிப்பாக இந்தக் கதை. கடைசி வரை கதாபாத்திரத்தின் பெயரே தெரியாமல்.அடுத்து வந்த இதன் தொடர்ச்சியில் அறிமுகமான கங்கா!

கங்காவை இன்னும் முழுவதுமாக புரிந்து கொள்ள முடியாமல் தவிக்கிறாள்.

பள்ளியில் அவள் படிக்கும்போது ஏறக்குறைய கங்காவின் வயது இருக்குமா?

இல்லை. சிறுமி போலத் தோற்றமளித்த கங்கா கல்லூரியில் அல்லவா படிக்கிறாள்!

புரிந்தும் புரியாத வயதில் அந்தக் கதை அவளுள் ஒரு கிளர்ச்சியை உண்டாக்கியது.

இதுபோல் தனக்கும் ஒரு சந்தர்ப்பம் அமைந்தால், தான் என்ன செய்திருப்போம் என்று எண்ணும்போதே விதவித கங்காவாய் மாறியிருக்கிறாள்.

“நோ..தாங்ஸ்”

“மைண்ட் யுவர் ஓன் பிஸினஸ்”

“போடா பொறுக்கி.”

“தாங்யூ ஸோ மச்“

அவனைத் தொட விட்டிருப்பாளா? இல்லை அவளும் கங்காவைப்போல, மழையில் நனைந்த ஒரு கோழிக்குஞ்சைப்போல அவனது அணைப்பில் ஒரு நிமிடம் தன்னிலை மறந்து…‌‌

சிலநாட்கள் யமுனா தூக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்து விடியற்காலை உறங்கியிருக்கிறாள். அத்தனை தாக்கத்தை அவளுள் ஏற்படுத்திய கதை.

கைபேசி “காவேரி” என்றது..

“ஹலோ..என்னடி இந்த நேரத்துல? இன்னும் தூங்கலியா?”

“தூக்கம் வரல.ஆமா! நீ என்ன பண்ற?”

“கெஸ் பண்ணு பாக்கலாம்.”

‘மத்தியானத்திலிருந்தே விட்டுவிட்டு மழை பெய்துகொண்டிருக்கிறது.’

“என்ன சரியா?”

“பயங்கர கில்லாடி நீ.. அப்புறம்?”

பேசி முடிக்கும்போது மணி ஒன்றாகியிருந்தது!


யமுனாவும் காவேரியும் நர்சரி வகுப்பிலிருந்து பள்ளி இறுதி ஆண்டு வரை ஒன்றாகவே படித்தவர்கள்.

இருதுருங்களாயிருந்ததாலோ என்னவோ இருவரிடையே இருந்த நட்பு ஒரு காந்த சக்தியால் பிணைக்கப்பட்டிருந்தது.

காவேரியால் ஒரு இடத்தில் உட்கார்ந்திருக்க முடியாது.யமுனாவோ ஒரு புத்தகத்தை எடுத்து வைத்துக் கொண்டால் மணிக்கணக்கில் சுற்றி என்ன நடக்கிறது என்பதையே மறந்து விடுவாள்..

கல்லூரி அவர்களை வேறு வேறு பாதையில் பயணிக்க வைத்தது.ஆனால் அவர்களது நட்பு இன்னும் இறுகியதே தவிர குறையவில்லை..

யமுனாவின் பொறுமை காவேரியிடம் இல்லை.காவேரியின் அவசர புத்தியும் , வெளிப்படையான பேச்சும் யமுனாவிடம் மிஸ்ஸிங்.

“ஆமா..விடிய விடிய அப்படி என்னதான் பேசுவீங்க?”

“ஏண்ணா?? யாரச் சொல்ற.?”

“வேற யாரு? உன்னருமைத் தோழி காவேரி தான்!”

“ஒட்டு கேட்டியா.?”

மதனுக்கு காவேரியை குழந்தையிலிருந்தே பரிச்சயம்.. ஆனால் இப்போதெல்லாம் காவேரி வந்தால் அவன் அவளைத் தெரியாத மாதிரி நடந்து கொள்கிறான்.. அவளும் அவனைப்பற்றி ஒன்றுமே கேட்பதில்லை..

யமுனாவை முட்டாள் என்று நினைத்து விட்டார்களா?

“மதன் விடிய விடிய பேசினது நீயா நானா ? மழுப்பாம சொல்லு.”

“ஏய் யமுனா! என்ன சொல்ல வர??”

“எனக்கு எல்லாமே புரியுது மதன்.. நீயும் காவேரியும் அடிக்கடி வெளியில பாத்து பழகுறது, ஃபோன்ல மணிக்கணக்காக பேசறது. அப்புறம் ஒண்ணுமே நடக்காத மாதிரி வீட்டுல பாத்தா ‘நீ யாரோ? நான் யாரோ?’”

“ம்ம்ம். அவ எனக்கு ஒரு நல்ல ஃப்ரண்ட்.. அவ்வளவுதான்..நீயா எதையாவது பெரிசா கற்பன பண்ணாத”

“எனி வே.உங்களோட ஃபரண்ட்ஷிப் தொடர வாழ்த்துக்கள்.”

“தாங்யூ டியர் சிஸ்.”


யமுனா கையிலிருந்த புத்தகத்தை பிடுங்கி கட்டிலில் எறிந்தாள் காவேரி..

“ஏய்.. ஏய். வாட்ஸ் திஸ் நான்சென்ஸ் .?? அப்படியே உன்ன கழுத்த நெறிச்சு கொல்லலாமான்னு தோணுது. சுவாரசியமான கட்டத்துல போயி..கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசன.?”

“விடு.. நான் கழுதையாவே இருந்துட்டு போறேன்.சரி..எத்தன வாட்டி படிச்ச கதையை திரும்ப திரும்ப படிப்ப.?அப்பிடி என்னதான் இருக்கு அந்த கதைல? “

“நீயே படிச்சு பாரேன்.படிச்சாத்தான் இந்தக் கதையோட அர்த்தமே புரியும்”

“ப்ளீஸ்டி..எனக்கு பொறுமையே கிடையாது..நீ சொல்லப் போறியா இல்லியா.??
ஆரம்பம் மட்டும் நான் சொல்லவா??

‘மத்தியானத்திலிருந்தே விட்டு விட்டு மழை பெய்து கொண்டிருந்தது.’

கைகளைப் பெரிதாகத் தட்டினாள் யமுனா..

“உனக்கு சாகித்திய அகாதமி விருது நிச்சயம்”

“அப்படின்னா.?”

“ஞான சூன்யம்”

“சரி.. கதையைச் சொல்லு.”

“நடுவுல உன் கமென்ட் எல்லாம் தேவையில்லை. வாய மூடிட்டு கேக்கணும்”

“ஐ வில் ட்ரை மை பெஸ்ட்.”

கதை முடிந்து விட்டது!

“என்ன காவேரி..அழறயா?”

“நோ.நோ.. ! ஒய் ஷுட் ஐ?”

“ஆனா அந்தப் பொண்ணு.. அதான் கங்கா..அவ சரியான கோழை. இதப்போய் பிரமாதமா வீட்ல சொல்லுவாளா?”

“என்ன சொல்ற காவேரி.?? இது எவ்வளவு பெரிய விஷயம்.? அதுக்குத்தான் கதைய படிக்கணும்னு சொன்னேன். கங்காவோட மனக்குமுறலை வார்த்தையால சொல்லி விளங்க வைக்க முடியாது.. ஒரு வரி விடாம படிக்கணும்”

“அவ முன்னப்பின்ன தெரியாதவன நம்பி, அதுவும் ஒரு பணக்கார இளைஞன நம்பி கார்ல , கொட்ற மழையில ஏறும் போதே இதெல்லாம் எதிர்பார்த்திருக்கணும்..அப்புறம் நடந்ததுக்கெல்லாம் அவளும் உடைந்தைதானே! இத அப்படியே விட்டிருக்கலாம்..பெரிய மெலோட்ராமா எல்லாம் தேவையே இல்ல.”

“காவேரி..நீ கங்காவோட உணர்ச்சிகள புரிஞ்சுக்கவே இல்ல! நீ மாடர்ன் கேர்ல்னு எனக்கு நல்லா தெரியும்..ஆனா இவ்வளவு தூரம் இன்சென்ஸிடிவ்வா இருப்பன்னு நினைக்கல.”

“ஸோ. அந்த ஒரே நிகழ்வில அவ கற்பிழந்தவள்னு சொல்ல வரியா.? உண்ம தெரிஞ்சா யாரும் அவள கல்யாணம் பண்ணிக்க மாட்டான்னு நினைக்கிறியா..?”

யமுனா திகைப்பில் மௌனமானாள்.


தேர்வுகள் நெருங்கிவிட்டது.. ஒருமாதம் அவரவர் வீட்டில் மொபைலையும் மறந்து படிப்பில் மூழ்கி விட்டனர் யமுனாவும் காவேரியும்..

மதனும் வேலை காரணமாக ஒருமாதம் சிங்கப்பூர் போயிருந்தான்.

ஒரு மாதம் கழித்து சந்திந்ததால் இருவருக்கும் பேசித்தீர்க்க நிறையவே இருந்தது..

“யமுனா. ஒருவாரம் நாம எங்கியாவது டூர் போலாமா?? ஏற்காடு.., ஊட்டி மாதிரி!”

“இப்போ முடியாது காவேரி! அண்ணா வேற ஊர்ல இல்லை..அப்பா , அம்மாவ தனியா விட்டுட்டு போனா அண்ணா திட்டுவான்”

“தொணைக்கு தெரிஞ்சவங்க யாரையாவது வச்சிட்டு போனா என்ன?”

இரண்டு பேரும் ஏற்காடு வந்து முழுதாய் ஒரு நாள் கழிந்திருக்கும்..

மழை தூறிக்கொண்டே இருந்தது.

லேடி சீட் பார்க்க பார்க்க அலுக்காத சுற்றுலாத்தலம்.

சேலம் முழுவதும் கண்கொள்ளாக் காட்சியாகத் தெரிந்தது..

மாலை நாலு மணிக்கே இருட்டி விட்டது..

மழை பெரிதாக தூற ஆரம்பித்தது..

நனைந்து கொண்டே நடக்க ஆரம்பித்தனர்..

மழை வலுத்தது..நல்ல வேளை , கையில் குடையிருந்தது.. அதையும் மீறி தொப்பலாக நனைந்து விட்டார்கள்.

இரண்டு மூன்று கார்கள் அவர்களைத் தாண்டி சென்றதேயொழிய , யாரும் அவர்களைக் கண்டுகொண்டதாகவே தெரியவில்லை.

“யமுனா..பாரு! ஒத்தனாவது நின்னு “ஏறிக்குங்க”ன்னு சொல்றானா பாரு! அதுவும் இரண்டு அழகான பொண்ணுங்க!”

“ஏன்.? காவேரி.வம்ப விலைக்கு வாங்கணுமா?”

“ஓ! நீ அதையே நெனச்சிட்டு இருக்கியா? தேர் ஆர் மெனி டீஸன்ட் பீப்பிள் யூ நோ.”

அவள் சொல்லி முடிக்கும் முன் ஒரு இன்னோவா அவர்களை உரசுவது போல வந்து நின்றது..

“எங்க போகணும்.?? தொப்பமா நனஞ்சிருக்கீங்களே! கமான்! கெட்டின். ! நாங்க ட்ராப் பண்றோம்”

கேட்டது ஒரு பெண். இருபது வயதிருக்கும்.. கணவன் கையில் ஸ்டியரிங். தேன்நிலவு தம்பதியர்.

ஒரு நிமிடம் தயங்கினார்கள்.

“யோசிக்க நேரமில்ல. தேர்ஸ் கோயிங் டு பீ தண்டர் ஷவர். கெட் இன் க்விக்!”

திறந்த கதவுக்குள் நுழைந்தனர்.

“கோல்டன் நெஸ்ட்”

“போ ப்ராப்ளம்.”

“தாங்யூ!“


குளிருக்கு இதமாக சுடச் சுட டீயும் , பக்கோடாவும் சுகமான காம்பினேஷன்.‌

“யமுனா..பாத்தியா.? பயந்துகிட்டே இருந்தா வேலைக்கு ஆகாது!”

“ஆனாலும் ஆல்வேஸ் தேர்ஸ் சம் ரிஸ்க் இன்வால்வ்ட். என்ன?? நான் சொல்றது காதுல விழுகுதா.?? இவுங்களக்கூட நான் தனியா வந்தா நம்ப மாட்டேன். “

“ம்ம்ம். நீ சொல்றதும் சரிதான்..”

“யமுனா. ரொம்ப நாளாவே எனக்குள்ள உறுத்திட்டு இருக்கிற ஒரு விஷயம்..இப்போ சொல்லலனா என் மண்ட வெடிக்கும்போல இருக்கு.”

காவேரி தலையைப்பிடித்துக் கொண்டாள்..

யமுனா பயந்து விட்டாள்.. அவள் பக்கத்தில் வந்து அவளை அணைத்தபடி.,

“ஆர் யூ ஓக்கே.?”

“ம்ம்ம். உங்கிட்ட பேசினா ஓக்கே ஆயிடுவேன்..”


“அன்னிக்கு நம்ப பள்ளிக்கூடத்துல கல்சுரல்ஸ்.. கடைசி வருஷம். நான்தானே கல்சுரல் செக்ரட்டரி.. இதுமாதிரி எந்த வருஷமும் இருந்ததில்லைன்னு சொல்ல வைக்கணும்னு ஒரு வீம்பு..நீ வீட்ல திட்டுவாங்கன்னு பத்து மணிக்கு கிளம்பி போயிட்ட.

அதுபாட்டுக்கு போயிட்டே இருந்தது.. ஒரு மணிக்குத்தான் முடிஞ்சது.

வனஜா என்ன ஆட்டோ ஸ்டாண்ட்ல எறக்கி விட்டுட்டு போய்ட்டா.

ஒரு ஆட்டோ கூட இல்ல.. மழை.. விட்டு விட்டு தூறல ! ஒரேடியா கொட்ட ஆரம்பிச்சது..

ஒரு காரும் என் பக்கத்துல வந்து நிக்கல. நானேதான் வேலியில போற ஓணான தூக்கி மடியில விட்டுகிட்டேன்.

கலசுரலுக்கு வந்த பசங்க அது வழியாதான் பைக்ல கத்திகிட்டே போயிட்டிருந்தாங்க.

நானு கையக் காட்டி ஒரு பையன நிறுத்தினேன்..

ஹெல்மட் போட்டு , ரெயின் கோட் போட்டிருந்ததால் யாருன்னு சுத்தமா தெரியல..

நல்லவேளை! ஒரு குடைய எடுத்து குடுத்து , ‘ஏறிக்கோ’ ன்னான்.

“எங்க வீடு?”

“ஆழ்வார்பேட்”

வழியில ஒரு சந்துல திரும்பினான்..

“எனி ப்ராப்ளம்”

“ஒரு நிமிஷம்..என் அபார்ட்மென்ட்டுக்கு போய் பைக்க நிறுத்திட்டு, சட்டையை மாத்திட்டு கார எடுத்துட்டு போலாம்..மழையில பைக் ஓட்ட முடியல..நீ வேற தொப்பலா நனஞ்சிருக்க. அட்லீஸ்ட் தொடச்சுட்டாவது போ”

அவன் பேசினதுல எந்த உள்நோக்கமும் எனக்கு தெரியல.

ஆனா! வீட்டுக்குள்ள நடந்ததென்ன?

கங்காவுக்கு நடந்ததுக்கும், எனக்கு நடந்ததுக்கும் முடிவு ஒண்ணுதான்.

ஆனா ஆரம்பம் நிச்சயம் வேற.

கங்கா மாதிரி நான் ஒண்ணும் தெரியாத அப்பாவியோ , கோழையோ இல்ல.

ஒரு அறை குடுத்துட்டு , சுலபமா வெளியே வந்திருக்கலாம்! ஏன் அப்படி செய்யல?

அப்புறம் அவன நான் சந்திக்கவே இல்ல..

கொஞ்ச நாள்ல நான் அந்த சம்பவத்தை மறந்து போனேன்..

இல்ல..மறந்து போனதா நடிச்சிட்டிருக்கேன்..இப்போ வரைக்கும்..

முள்ள பிடுங்கி எறிஞ்சாலும் , அது உடஞ்சுபோய் கொஞ்சம் உள்ளேயே சிக்கின மாதிரி.

யமுனா! நான் பண்ணினதுக்கு பேரென்ன? நான் கெட்ட பொண்ணா? இத நான் அப்பா, அம்மாகிட்ட உடனே சொல்லியிருக்கணுமா? இதுக்கு முழுக்க முழுக்க நான்தான் காரணமா? எனக்கு மற்ற எல்லோரையும் மாதிரி இந்த சமூகத்தில வாழ அருகதை உண்டா.? சொல்லு யமுனா!


மதன் இப்போதெல்லாம் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாய் யமுனாவுக்கு தோன்றியது.

“யமுனா! நீ ஏற்காடு போய்ட்டு வந்து ரொம்பவே மூட் அவுட்..சும்மாவே அநாவசியமா ஒரு வார்த்தை வாயில வராது. இப்போ சுத்தம்!

ஊட்டி , ஏற்காடு மாதிரி ஹில் ஸ்டேஷன் போய்ட்டு வந்தா புத்துணர்ச்சி தானே வந்து ஒட்டிக்கும்னு சொல்வாங்க. நீ அப்படியே தலைகீழா மாறிட்ட!

உன்னோட காவேரியும் தானே வந்தா?”

“அண்ணா. எனக்கு முன்னாடியே உனக்கு எல்லாமே தெரியும். இல்லியா? ஆமா! காவேரி எப்படி இருக்கா?”

ஒரு வினாடி நிலை தடுமாறிப் போனான் மதன்.

சமாளித்துக் கொண்டே,

“ஐ திங் ஷி ஸீம்ஸ் டு பீ வெரி சியர்ஃபுல்.”

“அப்புறம்.?”

“அப்படின்னா.?”

“அண்ணா! நான் உங்கிட்ட மூடி மறைக்க விரும்பல..நேராகவே கேக்கறேன். நீ காவேரிய காதலிக்கிறியா.?? அவளைத் தான் கல்யாணம் பண்ணிக்கப் போறியா?“

“அது வந்து. யமுனா.”

“டெல் மீ யெஸ் ஆர் நோ.”

“யெஸ்.”

“நோ.”

“என்ன சொல்ற யமுனா? ஏன் அவள் உன்னோட உயிர்த்தோழியாச்சே! அவள எனக்கும் ரொம்ப பிடிக்கும்னு உனக்கு தெரியாதா..?”

“நான் இப்போ சொல்லப்போறத கவனமா கேளு. அப்புறம் உன் முடிவ சொல்லு!”

ஒரு எரிமலை.. பூகம்பம்.சுனாமி.. அட்லீஸ்ட் ஒரு இடி..மின்னல்.. எதிர்பார்த்த யமுனா ஏமாந்து போனாள்.

மதனின் முகம் தெளிந்த நீரோடை போல்.. இளம் சூரியனைப் போல்..தண்ணிலவைப்போல்.. அன்றலர்ந்த தாமரை போல்!

“மதன்.. நான் சொன்னத கேட்டு மலைச்சுப் போய்ட்டியா? பேசு மதன்! நான் சொன்னது எல்லாமே சத்தியம். உன்னால நம்ப முடியல இல்ல.? இப்போ சொல்லு. காவேரி வேணுமா. வேண்டாமா.?”

“வேணும்..கண்டிப்பா வேணும்”

“மதன். ஆர் யூ க்ரேசி. அப்பா அம்மாவுக்கு தெரிஞ்சா நொறுங்கிப் போயிடுவாங்க மதன்.”

“யமுனா.. இதெல்லாம் எனக்கு எப்பவோ தெரியும்..எங்களுக்குள்ள ஒரு ரகசியமும் கிடையாது. உங்கிட்ட அவ இத சொல்லணும்னு ரொம்பநாள் துடிச்சுகிட்டு இருந்தா.

இது எனக்கும் அவளுக்கும் மட்டுமே சம்பந்தப்பட்ட விஷயம்.

ஆனாலும் உன்னோட அபிப்பிராயம் அவளுக்கு முக்கியமானதா பட்டது. நான் எவ்வளவோ சொல்லியும் கண்டிப்பா உங்கிட்ட மட்டும் ஷேர் பண்ணியே தீரணும்னு ஒரு வீம்பு.

ஆனா நீ இப்படி ஒரு முடிவ எடுத்திருப்பன்னு அவ கனவுலகூட நெனச்சு பாத்திருக்க மாட்டா..

யமுனா. உனக்குப் பிடிச்ச கதையில வர கங்கா வேற..இப்போ நீ பாக்குற காவேரி வேற..

சந்தர்ப்பமும் சூழ்நிலையும் மனுஷன ஒரு வினாடி நிலை தடுமாற வைக்கலாம்..இதுலேயிருந்து தப்பிக்க முடியாம தவறு செஞ்சிட்ட ஒரே காரணத்துக்காக வாழ்நாள் முழுசும் தண்டனையை அனுபவிக்க விடாம தடுத்தாங்களே கங்காவோட அம்மா. அவளும் அந்தக் கால பிரதிநிதிதானே..

நீ கங்காவ விட்டு வெளிய வா!

கங்கா நம்ப வீட்டுக்கு வெளியில இருக்கும்போது அவளோட உணர்ச்சிகளைப் புரிஞ்சு கிட்டு, அவள அப்படியே ஏத்துகிட்ட உனக்கு, அவ நம்ம வீட்டுக்குள்ள நொழஞ்சதும் ஏன் இந்த வெறுப்பும், அவமானமும்? சொல்லு யமுனா!

செய்த தவற உணர்ந்து அத, தான் மனதார நேசிக்கறவுங்கிட்ட கொஞ்சமும் மறைக்காம சொல்லவும் தைரியம் வேணும். காவேரியையும் புரிஞ்சுக்க முயற்சி பண்ணு யமுனா!

இரண்டு நதியின் பிரவாகமும் வேற வேற! ஆனா இரண்டுமே புனிதமானதுதான்..தூய்மையானதுதான்!“


யமுனாவுக்கு நிச்சயம் முடியும். கங்காவைப் புரிந்து கொண்டவளுக்கு காவேரியைப் புரிந்து கொள்ள முடியாதா என்ன?

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *