Warning: Cannot modify header information - headers already sent by (output started at /home/content/42/10186442/html/index.php:2) in /home/content/42/10186442/html/wp-content/themes/Clipso/functions.php on line 189
Sirukathaigal - Sirukathai - Short Stories in Tamil

தெளிந்த மனம்

 

சொன்னா கேளுடா..இன்னும் மூணு நாளைக்கு அம்மாகிட்ட தூங்க கூடாது.

ஏன் பாட்டி? என்றான் நகுல்.

“அவ தீட்டுடா..கிட்ட போனா உன் துணியிலயும் ஒட்டிக்கும். நீ வேற வீடு பூரா அலைவ..” என்றாள் குணவதி.

“அவ்ளோ தான” என்று மட மடவென்று ஆடைகளை களைந்து விட்டு ஓடிச் சென்று அம்மாவை கட்டி பிடித்து கொண்டான் நகுல். சிரித்து கொண்டே தன் நான்கு வயது மகனை வாஞ்சையாய் அணைத்தாள் சுபா.

சுகவனம்! அந்த வட்டாரத்தில் ஓரளவுக்கு எல்லோருக்கும் தெரிந்த வீடு. மாமனார் சுந்தரமும் மாமியார் குணவதியும் குடும்பத்தலைவர்கள். சோமு அவர்களின் ஒரே மகன். சுபா, சோமுவை திருமணம் செய்து கொண்டு வந்து ஐந்து ஆண்டுகள் ஆகி விட்டன. கணவன் சோமுவும் மாமனாரும் சேர்ந்து குடும்ப தொழிலான சிமெண்ட் ஏஜென்சியை கவனித்து கொள்கிறார்கள். சுந்தரம் நாள் கிழமை தவறாமல் பூஜை புனஸ்காரங்களை கடை பிடிப்பவர். சமீப காலமாய் தொழில் சற்று நலிவடைய, இவர்களின் ஆன்மீக ஈடுபாடு அதி தீவிரமானது. வாரம் ஒருமுறை பீச்சுக்கும் பார்க்குக்கும் சென்றவர்கள் இப்பொழுது கோவிலை தவிர வேறெங்கும் செல்வதில்லை, வருட சுற்றுலாவும் ஆன்மீக சுற்றுலாவாக மாறி போனது.

தினந்தோறும் அதிகாலையில் எழுந்து குளித்து முடித்து, வீடு முழுவதும் துடைத்து வைக்க வேண்டும். மூன்று வகையான பூக்கள் தனித்தனியே கட்டி வைக்கப்பட்டு, காலை நேர பூஜைக்கு தயாராய் இருக்க வேண்டும். அனைத்து வியாழன் மற்றும் சனிக்கிழமை முக்கிய விரத நாட்களாகும். பெண்கள், மாத மூன்று நாட்கள் தனியறையில் இருக்க வேண்டும். சுகவனம் இல்லத்தில் இதெல்லாம் எழுதப்படாத விதிகள்.

தீட்டுன்னா என்னம்மா? சுபாவின் கழுத்திலிருந்த தாலி செயினை திருகி கொண்டே கேட்டான் நகுல்.

“சொன்னா உனக்கு புரியாதுடா” என்ற சுபாவை பார்த்து, ப்ளீஸ்..ப்ளீஸ்’மா என்று கன்னத்தை தடவி கொண்டே கேட்டான். இனி இவன் விட மாட்டான் என்று யோசித்தவள் “அது வந்து மாசம் பூரா நான் வேலை செய்யிறேன் இல்ல.. அதனால எனக்கு மூணு நாள் ரெஸ்ட்டு கொடுத்திருக்காங்க” என்றாள்.

“அப்ப பாட்டிக்கு என்னைக்கு ரெஸ்ட்டு” என்றவனை பார்த்து, “பாட்டிக்கெல்லாம் ரெஸ்ட்டு கிடையாது” என்றாள் சுபா. “ஏன்மா.. ப்ளீஸ் சொல்லுங்க..” என்று மீண்டும் சுபாவின் கன்னத்தை தடவினான். “நாளைக்கு சொல்றேன்..இப்ப தூங்கு” என்று தட்டி கொடுக்க ஆரம்பித்தாள். சிறிது நேரத்தில் நகுல் தூங்கி விட்டான்.

மறு நாள் காலை நகுல் சோபாவில் அமர்ந்து டி.வி பார்த்து கொண்டிருந்தான். குணவதி பூஜையறையை சுத்தம் செய்து கொண்டிருந்தாள். இரண்டு நிமிடத்திற்கு ஒருமுறை மெதுவாக எழுந்து கதவை பிடித்து கொண்டு நின்றாள். “உஷ்ஷ்..அப்பாடா..” என்றபடி மீண்டும் குனிந்து தரையை துடைத்தாள். துடைத்து முடித்ததும், அழுக்கு தண்ணீர் உள்ள வாளியை தூக்கி கொண்டு மெதுவாக சில அடி நடந்தாள். வாளியின் பாரம் தாங்காமல் சில வினாடிகள் கீழே வைத்தாள், பிறகு மீண்டும் தூக்கி கொண்டு நடந்து பின் வாசலுக்கு சென்றாள்.

நகுல் ஓடி சென்று “பாட்டி நான் தூக்குறேன்” என்றபடி வாளியை பிடித்தான்.

“வேணான்டா தங்கம், உன்னால முடியாதுடா..” என்றாள் குணவதி.

“குடுங்க பாட்டி” என்று வாளியை தூக்க முயற்சித்தான், ஆனால் அவனால் முடியவில்லை. “சொன்னேனில்லடா குட்டி..” என்று கூறிவிட்டு அழுக்கு தண்ணீரை கிழே ஊற்றினாள். பிறகு மீண்டும் பைப்பை திறந்து வாளியில் தண்ணீர் பிடித்தாள். “வேணும்னா ஒரு உதவி செய்.. தண்ணீர் நிரம்பியதும் பைப்பை மூடிடு” என்று நகுலிடம் கூறி விட்டு சமயலறைக்கு சென்று விட்டாள்.

வாளி நிறைந்தது கூட தெரியாமல் தண்ணீரில் விளையாடி கொண்டிருந்தான் நகுல். அந்த பக்கமாக வந்த சுந்தரம் பைப்பை மூடினார். நகுல் நிமிர்ந்து தாத்தாவை பார்த்தான்.

“தாத்தா..இந்த வாளியை தூக்குங்க பாப்போம்..” என்றான்.

சுந்தரம் சிரித்து கொண்டே வாளியை தூக்கினார். ஓரிரு வினாடிகளுக்கு மேல் தூக்க முடியாமல் கீழே வைத்து விட்டார். “பாட்டி அங்க இருந்து தூக்கிட்டு வந்தாங்க” என்றான் நகுல்.

“அட பாவமே! ஓஹோ.. சுபா இன்னும் ரெண்டு நாளைக்கு எதையும் தொட மாட்டா இல்ல..” என்று நினைத்து கொண்டார்.

டேய் கன்னுகுட்டி..இன்னைக்கு சனி பிரதோஷம்.. தாத்தா கோவிலுக்கு போறேன்.. நீயும் வரியா?

வரேன்..வரும்போது சாக்லேட் வாங்கி தருவீங்களா?

சிரித்து கொண்டே “சரி” என்றார்.

அன்று மாலை, பிரதோஷ தரிசனம் முடிந்து சிவன் கோவில் வராண்டாவில் உள்ள சிமெண்ட் பெஞ்சில் சுந்தரமும் நகுலும் அமர்ந்தார்கள்.

நகுல் குட்டி.. நந்தி காதுல என்னமோ சொன்னியே..என்னா அது?

நந்தி கிட்ட சொன்னத யாருகிட்டயும் சொல்ல கூடாதுன்னு பாட்டி சொல்லியிருக்காங்க..

உனக்கு சாக்லேட் வேணுமா..வேணாமா? என்றபடி குறும்பாக கண் சிமிட்டினார். “ஐயோ தாத்தா..” என்று தலை மீது கை வைத்து அழகாக சிணுங்கினான் நகுல். “சரி உங்க கிட்ட மட்டும் சொல்றேன், வேற யாருகிட்டயும் சொல்லிடாதீங்க..” என்றான்.

“யாருகிட்டயும் சொல்லமாட்டேன்..” என்றார் சுந்தரம்.

சுந்தரத்தின் காதில் மெதுவாக “பாட்டிக்கும் அம்மா மாதிரியே மூணு நாள் ரெஸ்ட் வேணும்னு வேண்டிகிட்டேன்” என்றான் நகுல்.

சட்டென்று சுந்தரத்தின் முகத்தில் சிரிப்பும் குறும்புத்தனமும் மறைந்தது. ” சரிப்பா.. மேல கோபுரத்தை பார்த்து கும்பிட்டுக்கோ” என்றார். நகுல் நிமிர்ந்து கோபுரத்தை பார்த்து கும்பிட்டான்.

அதெல்லாம் யாரு தாத்தா? என்று கோபுரத்தில் உள்ள சிலைகளை கை காட்டி கேட்டான்.

அதுவா.. சிவன், பார்வதி, முருகன், விநாயகர், நந்தி என்று அவருக்கு தெரிந்ததை கூறினார் சுந்தரம்.

இந்த கோவில் தானே தாத்தா அவங்க வீடு?

ஆமான்டா கன்னுக்குட்டி..

அவங்களும் தினமும் பூஜை செய்வாங்களா?

“கண்டிப்பா.. தினமும் பூஜை செய்வாங்க..” என்றார் சுந்தரம்.

அப்போ பார்வதி தான் தினமும் பூஜை ரூம் தரையை எல்லாம் சுத்தம் செய்வாங்களா?

“இல்லப்பா..அங்க பாரு” என்று, கோவில் பணியாள் தரையை சுத்தம் செய்து கொண்டு இருந்ததை காண்பித்தார்.

ஓஹோ..அப்ப பார்வதிக்கும் மூணு நாள் ரெஸ்ட்டா..? என்றான் நகுல். சுந்தரம் பதில் சொல்லாமல் அமைதியாக இருந்தார்.

ஏன் பார்வதி சிவன் மடியில உக்காந்திருக்காங்க?

சிவனுக்கு பார்வதிய ரொம்ப பிடிக்கும், அதனால தான்.

உங்களுக்கு பாட்டியை பிடிக்குமா தாத்தா..?

“டேய் வாலு..போதும் கிளம்பலாம் வா” என்று நகுலை அழைத்து கொண்டு கோவிலை விட்டு கிளம்பினார்.

கோவில் வாசலுக்கு அருகே இருந்த ஒரு பழைய சாமான்கள் வைக்கும் அறையை காட்டி, “இங்க தான் பார்வதி மூணு நாள் ரெஸ்டு எடுப்பாங்களா?” என்றான் நகுல்.

சுந்தரம் எதுவும் பேசாமல் நகுலை அழைத்து கொண்டு கோவிலை விட்டு வெளியேறினார்.

இரவு திடீரென்று தூக்கம் கலைந்ததால் தண்ணீர் குடிக்க போனார் சுந்தரம். குணவதி பூக்களை கட்டி கொண்டிருந்தாள். சுவர் கடிகாரத்தில் மணி பதினொன்று பத்து என்று காட்டியது. தண்ணீர் குடித்து விட்டு வரும் போது, சுபா உறங்கி கொண்டிருந்த அறையை பார்த்தார். கோவிலில் பார்த்ததை போலவே பழைய சாமான்களால் நிறைந்திருந்தது. அவருடைய அறைக்கு வந்து படுத்தார், தூக்கம் முழுவதுமாக கலைந்திருந்தது.

கண்களை மூடி கொண்டு யோசித்தார். “நாம் இவர்களை மரியாதையாக நடத்துகிறோமா? ஒரு பெண் குழந்தை இருந்திருந்தால் மருமகளின் பாடு புரிந்திருக்குமோ என்னமோ.. இவர்களுக்கு இதுவரை என்ன செய்திருக்கிறோம்? நகை புடவை வாங்கி கொடுத்தால் ஆயிற்றா.. உனக்கு இது பிடித்திருக்கிறதா, உன்னால் முடியுமா, முடியாதா என்று எதுவுமே கேட்டதில்லையே. மனைவியிடமோ இல்லை மருமகளிடமோ வரதட்சணை என்று எதுவும் கேட்கவில்லை, அதனால் என்னை நானே உயர்வாக நினைத்து கொண்டிருக்கிறேனோ? இன்று ஒரு குழந்தை கேட்கிறதே, உனக்கு பாட்டியை பிடிக்குமா என்று.. மனைவியை பிடிக்கும் என்றால் சிவபெருமானை போல மடி மீது வைத்தல்லவா தாங்க வேண்டும்”, உள்மனதின் கேள்விகள் சுந்தரத்தை துளைத்தது.

“நான் அலுங்காமல் பூஜை செய்வதற்கு வீட்டு பெண்கள் இவ்வளவு பாடு பட வேண்டுமா? வீட்டு தெய்வங்களாகிய பெண்களை சிறுமைப்படுத்தி செய்யும் பூஜைக்கு என்ன பெரிதாக பலன் இருக்க போகிறது?”. புரண்டு புரண்டு படுத்தார், ஆனால் மனம் அமைதியாகவில்லை. சிறிது நேரத்தில் குணவதி அறைக்குள் வந்து கட்டிலின் ஓரத்தில் அமைதியாக படுத்தாள். ஏனோ சுந்தரத்திற்கு இன்று குணவதியை அணைத்து கொள்ள வேண்டும் போல் இருந்தது.

மறுநாள் காலை வழக்கத்திற்கு மாறாக சற்று சீக்கிரமே எழுந்து விட்டார் சுந்தரம். ஹாலில் அமைதியாக அமர்ந்து கொண்டிருந்தார். சற்று நேரத்தில் வெளியே வந்த குணவதி, முதலில் வாசலை சுத்தம் செய்வதா இல்லை இவருக்கு காபி போடுவதா என்று தடுமாறினாள்.

குணா..மெதுவாக அழைத்தார் சுந்தரம்.

சொல்லுங்க..

காபி கொடும்மா..என்றார்.

சிறிது நேரத்தில் சூடாக காபியுடன் வந்த குணவதியிடம், “நீயும் கொஞ்சம் உட்கார்” என்றார். காபியை சரிபாதியாக இன்னொரு டம்ளரில் ஊற்றி “இந்தாம்மா குடி..” என்று நீட்டினார். “இதென்ன புதுசா இருக்கு” என்று நினைத்து கொண்டே டம்ளரை வாங்கி கொண்டாள் குணவதி.

“இப்பெல்லாம் கால் அடிக்கடி நடுங்குதும்மா, தரை வழுக்கிடுமோன்னு பயமா இருக்கு.. இனிமே தினமும் வீடு பூரா துடைக்க வேண்டாம். அதுவுமில்லாம ரொம்ப நேரம் உட்கார முடியல, அதனால விசேஷ நாளை தவிர மத்த நாளெல்லாம் சாதாரணமா கும்பிடலாமுன்னு இருக்கேன். நம்ம தோட்டத்து பூவே நல்லா இருக்குன்னு எல்லோரும் சொல்றாங்க, அதுவே போதும். வேணும்னா வெளியில இருந்து பூ மாலை வாங்கிக்கலாம்.” என்றார்.

“டாக்டர் கிட்ட போகலாமாங்க..” என்ற குணவதியிடம், “கொஞ்ச நாள் போகட்டும்மா, அப்புறமா போகலாம்” என்றார்.

சிறிது நேரத்தில் சோமு வந்தான். “என்னப்பா..உங்களுக்கு ஒடம்பு சரியில்லன்னு அம்மா சொன்னாங்க.. டாக்டர்கிட்ட போகலாமா? என்றான்.

“கொஞ்ச நாள் போகட்டும்பா..” என்றார்.

அப்புறம் சோமு, இன்னொரு விஷயம்..

சொல்லுங்கப்பா..

இனிமே சுபாவ எல்லா நாளும் உங்க ரூம்லயே படுத்துக்க சொல்லு. நகுல் வேற வளர ஆரம்பிச்சுட்டான். அந்த பழைய சாமான்கள் இருக்கிற ரூம சுத்தம் பண்ணி, அவன் படிக்கறதுக்கும் விளையாடறதுக்கும் குடுத்துடலாம்..

சுந்தரத்தை ஆச்சர்யமாக பார்த்து கொண்டே “சரிப்பா..” என்றான் சோமு.

காலையில் தூங்கி எழுந்தவுடன் ஹாலுக்கு வந்த நகுல், குணவதி டி.வி பார்த்து கொண்டே காய் நறுக்கி கொண்டிருப்பதை பார்த்தான். “என்ன பாட்டி..இன்னைக்கு வீடு துடைக்கலயா..” என்றான்.

இனிமே எனக்கு ரெஸ்டு’டா குட்டி..

“எனக்கு தெரியும்..எனக்கு தெரியும்..நான் நேத்தே நந்தி சாமி காதுல சொல்லிட்டேனே..” என்று ஓடி வந்து குணவதியின் கழுத்தை கட்டி கொண்டான் நகுல். 

தொடர்புடைய சிறுகதைகள்
பாம் பாம்...பேருந்துகளின் ஹாரன் சத்தம், விர்ர்ரூம்..கிரீச்.. சர்ர்க்க்...டூ வீலர்களின் உறுமலும் பிரேக் சத்தமும் அந்த காலை நேரத்தை பரபரப்பாக்கி கொண்டிருந்தன. காலை ஏழு முப்பத்துக்கே வெகு வேகமாக இயங்க ஆரம்பித்து விடுகிறது கோவை மாநகரம். ஜெயன் மேன்ஷனை விட்டு வெளியே வந்தான், ...
மேலும் கதையை படிக்க...
என்னங்க.. இங்க வந்து பாருங்க..காலையிலேயே ஆரம்பிச்சிட்டாங்க.. புனிதாவின் அழைப்பை கேட்டு கிச்சன் போர்ட்டிகோவிற்கு வந்தான் சரவணன். என்ன ஆச்சு..என்று கேட்டவனிடம், பக்கத்திலிருந்த காலி மனையை நோக்கி கை காட்டினாள். அங்கு மூன்று மதுப்பிரியர்கள் மது அருந்தி கொண்டு இருந்தனர். நீங்க ஆம்பளைங்க எல்லாம் சேர்ந்து போய் ...
மேலும் கதையை படிக்க...
ராகவன் கண்ணை மூடி கொண்டு அமர்திருந்தார். முந்தைய நாள் இரவு திடீரென்று பவித்ராவின் அலறல் சத்தம் கேட்டு, சந்தோஷின் அறைக்குள் ஓடினார். அங்கே பாதி கண்களை மூடியபடி, வாயில் பால் போன்ற திரவம் வழிய, தலை தொங்கியவாறு சந்தோஷ் கட்டிலில் கிடந்தான். ...
மேலும் கதையை படிக்க...
என்னங்க..ஞாயித்து கிழமை காஞ்சிபுரம் போயிட்டு வரலாங்க.. இல்லமா..அன்னைக்கு நானும் எங்க குரூப் மெம்பர்ஸும் மெரினா பீச்ச சுத்தம் செய்ய போறோம். நிறைய வி.ஐ.பி எல்லாம் வர்றாங்க.. ப்ளீஸ்'ங்க..இப்படி பொறுப்பில்லாம பேசறீங்களே.. இங்க பாரு சுசி, நீ தான் கொஞ்சம் கூட சமூக பொறுப்பில்லாம பேசற..ரொம்ப கஷ்டப்பட்டு ...
மேலும் கதையை படிக்க...
சந்தியா..ப்ளீஸ்..கொஞ்சம் யோசியுங்க.. இல்லைங்க சுபாஷ்...நான் நல்லா யோசிச்சு தான் இந்த முடிவுக்கு வந்தேன்.. தீர்மானமாக கூறினாள் சந்தியா. அடுத்த ஆறு மாசத்துல ப்ரோமோஷனும் சம்பள உயர்வும் இருக்கு, நான் ஏற்கனவே உங்க பேரை ரெகமெண்ட் பண்ணிட்டேன்..அதுவும் இல்லாம நீங்க, ரொம்ப வருஷமா இங்கேயே இருக்கீங்க. ...
மேலும் கதையை படிக்க...
தனுசு ராசி அன்பர்களே! உங்களுக்கு இன்று.. பிரபல ஜோதிடர் வாய் திறக்கவும், என் மனைவி டிவியை ஆப் செய்யவும் சரியாக இருந்தது. பார்த்துகிட்டு இருக்கேன்'ல..என்றேன் கோபமாக. தினமும் இதை கேட்காவிட்டால் எனக்கு அந்த நாளே ஓடாது. நேரமாச்சு..நான் பதிவு செய்து அனுப்பறேன்..பொறுமையா ஆபீஸ்'ல உக்கார்ந்து ...
மேலும் கதையை படிக்க...
அர்ச்சனா வாசலில் செருப்பை கழற்றி விட்டு வீட்டிற்குள் நுழைந்தாள். மணி சரியாக இரவு எட்டு பத்து. அர்ச்சனாவின் பதினோரு வயது மகன் நகுல், கணவன் நிரஞ்சன் மற்றும் மாமியார் ஹாலில் அமர்ந்திருந்தனர். நிரஞ்சன் போனில் யாருடனோ பேசிக் கொண்டிருந்தான். உஷ்..அப்பாடா..என்று சோபாவில் அமர்ந்தவளை ...
மேலும் கதையை படிக்க...
தானசீலன்
அஞ்சுவது அறிவார் தொழில்
இதுவும் கடந்து போகும்
பொறுப்பு
உளைச்சல்
இந்த நாள் இனிய நாள்
நேர்த்திக்கடன்

தெளிந்த மனம் மீது 2 கருத்துக்கள்

  1. Jagan says:

    Thanks Sister for your appreciation.

    The society yet to change a lot. I hope the next generation are not giving much importance to these mythological belief.

  2. Vani says:

    Sir, really nice to read a story like this n appreciate you very much…mostly men are like sugavanam n somu in our society. So men are always following their father or grand father or someone has to tell about women, y they don’t think? Because sugavanam also had a mother n somu also had a mother ..y they didnt think ?not in your story sir but in real life….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)