Warning: Cannot modify header information - headers already sent by (output started at /home/content/42/10186442/html/index.php:2) in /home/content/42/10186442/html/wp-content/themes/Clipso/functions.php on line 189
Sirukathaigal - Sirukathai - Short Stories in Tamil

கிளிஞ்சல்கள்

 

(1998ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அவளுக்கு மணம் ஆகவில்லை.

அவளை அடுத்து இந்தக் கேள்விக் குறி எழுகிறது. வாக்கியத்தின் முடிவில் அமைவது இது. அவளோடு பேசுகிறவர்கள் இதைத் தவறாமல் பயன்படுத்துகின்றனர். எப்பொழுது என்பது அவளைப் பற்றிய வினா

வயதானவர்கள் அவர்களைப் பற்றி விசாரிக்கும் போது எழுவது “எப்படியிருக்கிறீர்கள்? உடம்புக்கு ஒன்றும் இல்லையே?” என்பது. இந்த வைத்தியர்களுக்கு அவர்கள் வழக்கமான பதில் சொல்ல வேண்டி நேருகிறது. சர்க்கரை இருநூற்று ஐம்பது பி.பி. அதிகம் இல்லை; இவற்றை வைத்துத்தான் நாழிகைக் கணக்கு நிறுவப் படுகிறது. “பரவாயில்லை” இந்த ஆறுதல் அளிக்கப் படுகிறது. வேறு என்ன அவர்களைப் பற்றிக் கேட்க முடிகிறது.

விசாரணை நல்லுறவுகளுக்கு அவசியம் தேவைப் படுகிறது. ”விசாரித்தானா” என்று அவர் சொல்லாமல் இருக்க வேண்டும்.

இவளைச் சந்திக்கின்றவர்கள் கேட்கும் வழக்கமான கேள்வி : ”எப்பொழுது கல்யாணம் செய்து கொள்ளப் போகிறாய்?” – அது அவள் முயற்சியில் இருப்பது போன்ற கேள்வி அது.

அவளும் பத்து என் இருபது வருஷங்களாக இதே பதில் தான் சொல்லி வருகிறாள். “அதற்கென்ன என்ன அவசரம்?” என்று திருப்பிக் கேட்டுக் கொண்டிருந்தாள். அவளுக்கு இப்பொழுது நாற்பது எட்டுகிறது. ஆனால் அவளைப் பார்க்கின்றவர்கள் அப்படிச் சொல்லுவது இல்லை; அதற்குக் காரணம் அவளை இளமையாகவே வைத்துப் பார்க்கும் ஆர்வம்தான்.

“அறிவுக் கதிர்கள் ஒன்று இரண்டு வெளிப்பட் டாலும் அவற்றை மறைக்கக் கரு மை பயன்படுகிறது. பல்லிழந்தால் ‘செட்’ உதவுகின்றது. நிறம் மாறினால் அதன் தரம் கெடுவதில்லை ; மை ஊட்டப்படுகிறது.

கண்களுக்கு மை தீட்டப்பட்டு வந்தது. அது இப்பொழுது உச்ச நிலையை எட்டுகிறது; அதற்குக் கிடைத்த உயர்வு அது.

கூந்தல் அதைப் பற்றிப் பேசும் காலம் இது அல்ல; அதற்காகவே காவியப் புலவர்கள் பத்துப் பாடல்களை எழுதிக் கொண்டிருந்தனர்; அதற்கு அவசியம் இங்கு ஏற்படவில்லை. வெட்டுகளுக்கு உள்ளாகி வெளிவரும் படம் அது; சென்சார் செய்யப்பட்டுச் சீவி விடப்பட்ட ஒன்று.

பார்க்க அவள் கவர்ச்சியைத் தந்தாள்; என்றாலும் மடித்து வைத்த தாள்கள் சில கோடுகளைப் பெறத்தான் செய்கின்றன. நிறைய துகள்கள் அந்தக் கோடுகளை நிரப்பத் தேவைப்பட்டன. அவள் நிறம் அவள் உடன் பிறந்தது. அது அவள் கால வேகத்தைத் தடுத்து நிறுத்தி யது. ‘மங்கையர்’ கழகத்தில் அவள் ஒரு அங்கத்தினர் என்று அவள் ஏற்கப்பட்டாள்.

அந்த நிறம் அவள் தாய் தந்தது. அவள் தோலை அப்படியே இவளுக்கு உரித்து வைத்தாள் என்றால் அது மிகையாகாது. பழுப்பு நிறத்தில் சிறிது இழப்பு அவ் வளவுதான்.

அவள் தாய் தங்க நிறம். அதை அவள் தக்க விலைக்கு விற்க முடிந்தது. வைர வியாபாரி அவளைக் குத்தகைக்கு எடுத்தான் என்று பேசிக் கொண்டிருந்தார்கள்.

இரண்டு வீடுகளை அவள் பெயருக்கு எழுதி வைத்தான். ஒன்று அவள் குடியிருப்பதற்கு; மற்றொன்று அவள் குடித்தனம் நடத்துவதற்கு. அதன் வாடகைப் பணம் வீடு தேடி வந்தது. அதை அவள் வங்கியைத் தேடிச் சேமித்தாள். வசதிகள் வந்த அவன் அசதியைப் போக்கின; அவன் தங்கும் மடம் அது ஆகியது.

அவள் இன்று சாயி பக்தர். பங்காரு அடிகள் அவளுக்கு விதிவிலக்கு அல்ல. வயிறு தெரியும் அவர் படம் மாட்டப்பட்டிருந்தது.

காமகோடி அவள் வீட்டு மேல் மாடியில் இடம் பெற்றிருந்தார். “நான் இருக்க பயமேன்?” என்று அபயம் அளித்த உருவப்படம் அவளுக்கு நம்பிக்கை அளித்தது. அவள் சாயி பக்தர். அதனால் அவள் வீட்டு நாய் தவிர மற்ற எல்லாவற்றிற்கும் அவர் பெயர் சூட்டு விழா நடத்தியிருக்கிறாள். “சாயி நிலையம்” என்றும் அந்த வீட்டுக் கல் அறைந்து கொண்டிருந்தது.

இப்படித்தான் வாழ வேண்டும் என்பது சம்பிர தாயம். சமுதாயக் கட்டுக்கோப்பு; இவற்றை அவள் மதித் தவள்தான். ஆனால் எப்படியும் வாழலாம்; நாங்கள் விதிவிலக்குகள் என்று சமாதானம் கூறினாள்.

அந்த அம்மையார் அடிக்கடி கோயிலுக்கு வருவார். நெற்றியில் பொட்டு; அது சிகப்பு; தங்க நிறம்; அதனால் அவள் முகத்துக்கு மஞ்சள் நிறம் தேவைப்படவில்லை. அது மறைந்து கிடந்தது. அதை அவன் விரும்பியது இல்லை. அவன் வாங்கித் தந்த வண்ணப் பொடிகள் மணமும் தந்தன.

அவள் மங்கலமாகக் காட்சி அளித்தாள். பட்டுப் புடவை தவிர அவள் துட்டுக் கொடுத்து வேறு எதுவுமே வாங்கியது இல்லை. அது அவளுக்குத் தேவைப்பட்டது.

மற்றவர்களைவிட அவள் கோயில் அர்ச்சகர்க்கு அதிகம் தந்தாள். அதனால் அவன் கூடுதலாகப் பூச்சரம் தந்தான்; அவள் வெளியே வரும்போது தாலிச் சரத்தோடு அதுவும் சரிந்து அழகு செய்தது.

கட்டிய தாலி அவள் கழற்றியது இல்லை . அது அவளுக்குத் தேவைப்பட்டது.

வைரக் கம்மல் ஒளி அவளைத் தனித்துப் பிரித்துக் காட்டியது. அதன் விலையைக் கேட்டு விசாரித்தவர்கள் பலர், வாங்கும் போது இருந்த மதிப்பு இப்பொழுது கூடிவிட்டது. இரண்டையும் அவள் தவறாமல் கூற நேர்ந்தது.

வசதி இருந்தது; கார்கள் புதிதாக உற்பத்தியாகி வெளிவருகின்றன புதிய திரைப் படங்கள் போல; காரை அவள் அடிக்கடி மாற்றி வந்தாள். ஆளை மட்டும் அவள் ஒரே ஒரு முறைதான் மாற்றினாள்.

அந்தப் புதிய ஆள் அவன் அவளுக்கு வேண்டி யதை வாங்கித் தந்தான்; கணக்கில் வராத பணத்தை அவன் அவளுக்குக் காணிக்கையாக்கினான். அவன் உபரிப் பணத்தை அவன் தன் உபரி மகிழ்ச்சிக்கு அவளுக்குக் கொடுப்பதில் சிரமம் இல்லை ; வருமான வரித் துறைக்குத் தருவதைத் தரும் காரியத்துக்குச் செலவு செய்தான்.

அவன் வருவது போவது அவளுக்குத்தான் தெரியும்; மற்றவர்களுக்கு அவன் விளம்பரம் ஆவது இல்லை; நீலக் கண்ணாடி அவன் வருவதை அவன் காரில் மறைத்தது. கண்களுக்கு அணியும் நீலக் கண்ணாடியைக் காருக்கே பூட்டிவிட்டான். அது அவனுக்குக் குளிர்ச்சி தந்தது. அவள் துணிந்து அவனோடு வெளிப் பயணம் செய்தாள்.

அவன் மனைவி இவளால் கண்ணகியாயினாள்; அவளுக்கு இவன் எந்தக் குறையையும் வைக்கவில்லை. இரண்டு பிள்ளைகள்; இரண்டு பெண்கள்; கூட்டிப் பார்த்தால் நான்கு. அவர்கள் போதும்; அந்த அம்மை யாருக்கு நிறைவைத் தந்தது. இவனால் கூட்டல் கணக்குப் போடத் தேவையில்லை; அவன் கழித்தல் கணக்கு அவர்களுக்கு ஒரு வகையில் நிம்மதியைத் தந்தது. அவர் கள் தாய்மையில் மனநிறைவு கண்டார்கள்.

இந்த விவரம் எல்லாம் தேவையில்லை. என்றாலும் இப்படியும் சில சிவபார்வதிகள் சீலம் உள்ளது என்பதைக் கூற வேண்டியுள்ளது.

இந்தச் சிவபார்வதிக்கு ஒரு மகள் காலாவதி ஆகிவிட்டாள். அவள் எப்படி இறந்தாள்? அது எல்லாம் பழைய கதை. பூர்வ ஆசிரமத்துக் கதை. டாக்டர் கேட்ட தொகை தர இயலாமையால் அவளை இவள் இழக்க நேர்ந்தது. பழையவன் ஒரு குமாஸ்தா; அவன் கற்ற பாடம் அது; அதனால் அவளுக்கு அவன் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை; ‘எங்கிருந்தாலும் வாழ்க’ என்று வாழ்த்துக் கூறினான். ஸ்ரீதரின் படம் அவனுக்கு இவ் வகையில் உதவியது.

இந்தக் கதைகள் எல்லாம் எதற்காக! இப்பொழுது இந்தப் பெண் இவளுக்கு ஒரே மகள்; அந்த அன்பர் ஒரே தந்தை . வளர்ப்புத் தந்தை என்ற புதிய பதவி அவனுக்குக் கிடைத்தது.

அவன் அவள் வளர்ப்புக்கு எந்தப் பொறுப்பும் ஏற்க வில்லை. அவளேதான் வளர்ந்தாள். என்றாலும் அந்தத் தலைமை அவனுக்கு வாய்த்தது. அவள் மட்டும் அவனை அப்பா’ என்று கூப்பிட்டது இல்லை; கூப்பிடவும் தோன்றவும் இல்லை. ஏன் ஒருவரை அவள் கூறி விட்டதால். அவனைக் குறிப்பிட அவளுக்கு அகராதியில் சொல் கிடைக்கவில்லை . அவன் மட்டும் அவளைப் பெயர் வைத்து அழைக்க முடிந்தது.

அவள் முப்பதிலும் இப்படித்தான் கூறினாள். “மணத்துக்கு அவசரம் இல்லை ” எனக் கூறினாள். நாற்பது அவளிடம் நகர்ந்து வருகிறது. இப்பொழுதும் அப்படித்தான் சொல்லுகிறாள்.

அவள் ஏன் அடிக்கடி கண்ணில் படுகிறாள்? அவளைப் பற்றி ஏன் நாம் கவலைப்பட வேண்டும்.

ஏனோ தெரியவில்லை; அரித்துக் கொண்டே இருக் கிறது.

அவள் இளமை கழிகிறது; அவளுக்கு மணம் நடக் குமா நடக்காதா.

அவள் கடற்கரையில் கிளிஞ்சல்களைப் பொறுக்கு கிறாள்; பொறுக்கிக் கொண்டே இருக்கிறாள். முத்துகள் கிடைக்கவில்லை. வெறும் சத்தைகள்தான் படுகின்றன.

நிறம் இருக்கிறது; கற்றிருக்கிறாள்; செல்வம் இருக் கிறது; அதனால் அவள் எந்தத் தொழிலையும் தேட வில்லை .

வேலியைக் கடந்துவிட்டாள்; வேலி அவளுக்குக் காப்பாக இருந்தது. முள் வேலிதான்; உள்ளே இருந்தால் அவளுக்குக் காப்புக் கிடைத்திருக்கும்.

அவள் கிளிஞ்சல்களைத்தான் தேடுகிறாள்; அவற் றைத் தூக்கி எறிகிறாள்; இன்னும் அந்த விளையாட்டுப் பருவத்திலேயே இருக்கிறாள். என்ன செய்வது? இப்படி யும் பலர் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

- கிளிஞ்சல்கள் (சிறுகதைத் தொகுப்பு), முதற் பதிப்பு: செப்டம்பர் 1998, அணியகம் பதிப்பகம், சென்னை  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)