Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

கார்த்திக்கின் அப்பா!

 

“கண்ணைக் காமிங்க. மருந்து விடணும்..’ என்று சிஸ்டர் சொன்னதும், கார்த்திக், அப்பாவைப் பார்த்தான்.

“அப்பா, கண்ணை நல்லா காமிங்க. சிஸ்டர் மருந்து விடணுமாம்’ என்றான். கண்களில் சொட்டு மருந்தை விட்டதும், “ஆ… ஆ… எரியுது, எரியுதுடா!’ – துடித்தார் அப்பா. “அப்படித்தான் கொஞ்சம் எரியும். சரியாயிடும்!’ என்றாள் நர்ஸ்.

கையில் கொடுத்துவிட்டுப் போன பஞ்சு உருண்டையை எடுத்துக் கண்களிலிருந்து வழிந்த மருந்தைத் துடைத்து விட்டான் கார்த்திக்.

“என் பக்கத்திலேயே இரு. எங்கயும் போயிடாதே. டாக்டர் வந்ததுமே என்னைப் பார்த்துடச் சொல்லு!’ என்றார் அப்பா.

“சொல்றேன் அப்பா. ஆனா நமக்கு முன்னால வந்து காத்திருக்கறவங்களைப் பார்த்துட்டுதான் நம்மைக் கூப்பிடுவார். கொஞ்சம் பொறுமைøயா இரு’.

“கண்ணைத் திறக்காதீங்க!’ என்று அதட்டல் குரலில் எச்சரித்துவிட்டுப் போனாள் சிஸ்டர். உடனே கண்ணை இறுக மூடிக் கொண்டார் அப்பா. “மருந்துதான் ஊத்தியாச்சே, அப்புறம் கண்ணைத் திறந்தா என்னவாம்?’ என்று கேள்வி கேட்டார் அப்பா.

“கண்ணை டயலேட் பண்ணினாத்தான் காடராக்ட் வளர்ந்திருக்கான்னு பார்க்க முடியும்பா. அதுக்குத்தான் கண்ணை மூடிக்கச் சொல்றாங்க.’

கண்ணிலிருந்து வழிந்த நீரைத் துடைக்க, பஞ்சைக் கேட்டான் கார்த்திக். அப்பா தேடினார். அது எங்கே விழுந்திருக்க வேண்டும். சிஸ்டரைக் கேட்டு இன்னொரு பஞ்சு உருண்டையை வாங்கிக் கொண்டு, முகத்தில் வழிந்திருந்த நீரைத் துடைத்தான்.

“பக்கத்திலேயே இருடா, எழுந்து எழுந்து போயிடாதே!’ என்றார் அப்பா.

கார்த்திக் பொறுமையாக இருந்தான். அப்பாவைப் பற்றி அவனுக்கு நன்றாகத் தெரியும். அவரை வீட்டில் தனியாக விட்டுவிட்டு ஆபீஸ் போய்விட்டு வருவதற்குள் நூறுவிதப் புகார்கள் வைத்திருப்பார். “நீ ஏம்ப்பா கவலைப்படறே? சர்வென்ட்மெய்ட் வந்தா அவ பாட்டுக்கு அவ வேலையச் செய்துட்டுப் போகப் போறா. மத்தியானத்துக்கு டிபன் மேடையிலேயே இருக்கு. எடுத்து டேபிள்ல வச்சுட்டு சாப்பிட்டு, ஃபிளாஸ்க்ல இருக்கற காஃபியைக் குடிச்சுட்டு, கொஞ்சம் டெஸ்ட் எடுத்துக்கிட்டா நான் சாயந்தரம் வந்துடறேன் இல்லே?’ என்று ஒவ்வொரு நாளும் சமாதானம் சொல்வான். எங்கே வெளியில் போவதானாலும் கையோடு கூட்டிக் கொண்டு போகவேண்டும். அவரால் பதில் சொல்ல முடியாத சமயங்களில் எல்லாம் தயங்காமல் கார்த்திக் பதில் சொல்லியாக வேண்டும். “எனக்கு சரியா பதில் சொல்ல வரலேடா,’ என்பார். இத்தனைக்கும் வயது அப்படி ஒன்றும் எழுபதோ எண்பதோ ஆகிவிடவில்லை. அறுபதைத் தாண்டி இருக்கிறது. அவ்வளவுதான்.

கார்த்திக் அப்பாவுடன்தான் எல்லா நேரத்திலும் இருக்கவேண்டும் என்பது எப்படி சாத்தியம்? அம்மா இருந்தவரை அவள்தான் அவருடைய பயங்களைப் பகிர்ந்துகொண்டாள். அவள் போனபிறகு, கார்த்திக்கு அவை வந்து சேர்ந்தன.

ஒரு கல்யாணத்தி“னபோது, விருந்தினராக வந்த ஒர் அம்மாவும் மகனும் கார்த்திக்கின் கவனத்தைக் கவர்ந்தார்கள். அம்மாவைக் கூட்டிக்கொண்டு வந்ததே பெரிய தயவு மாதிரி நடந்துகொண்டான் அந்த பிள்ளை. “உன்னோட கைத்தடியைத்தான் வச்சுண்டிருக்கியே, என்னை வேற பிடிச்சுக்கணுமா?’ என்று கேட்டான். விழப்போன அம்மாவைப் பார்த்து. அவளைத் தனியாக உட்கார வைத்துவிட்டு, அவன் அழகான பெண்களைத் தேடித் தேடிப் போய்ப் பேசினான். சாப்பாடு முடிந்ததும், அவள் சிறு பையில் வைத்திருந்த மருந்து பொட்டலத்திலிருந்து மாத்திரையை எடுத்துச் சாப்பிட்டபோது, “ஆமா, நீ வியாதிக்காரின்னு எல்லா மனுஷாளுக்கும் தெரியணுமாக்கும். உள்ளே வை. வீட்டுக்குப் போனதும் முழுங்கிக்கோ!’ என்றான் கொடூரமாக. கார்த்திக்கு ஆத்திரமாக வந்தது. “இப்படிக்கூடவா ஒரு மகன் இருப்பான்? அப்பாவிடம் ஒரு நாள், ஒருவேளை இப்படி நடந்து கொண்டுவிட முடியுமா?’ பக்கத்து இலையில் உட்கார்ந்திருந்த பெண்மணி தான் அந்த அம்மாவின் கையைப் பிடித்துக் கொண்டு கை கழுவும் இடத்துக்கு அழைத்துச் சென்றாள். மகன் முன்னாலேயே வேகமாக நடந்து போய், ஐஸ்க்ரீம், வெற்றிலை பாக்கு பழம் என்று தேட ஆரம்பித்துவிட்டான். “நாம் ஒரு தடவையாவது அப்பாவை இப்படிப் பொது இடத்தில் அவமரியாதையாக நடத்தியதுண்டா,’ என்று அவனை எண்ண வைத்தது.

இத்தனைக்கும் அந்தப் பையன் ஐந்து நட்சத்திர ஓட்டலில் பெரிய பொறுப்பில் இருந்தான். ஹாஸ்பிடாலிடி இண்டஸ்ட்ரி! அதில் வேலை பார்க்கிற மகனே இப்படி தம் தாயாரிடம் நடந்துக்கொண்டால் எப்படி?

இந்த ஒப்பீடு மனத்துக்குள் ஓடிக் கொண்டிருக்கும்போதே, சிஸ்டர் வந்து மறுபடி சொட்டு மருந்து விட்டாள். “ஒரு தடவை விட்டால் போதாதா?’ என்று கேட்டார் அப்பா. அதையும் அவனிடம்தான் கேட்டார். “டயலேட் ஆகலேன்னா விடத்தானே வேணும்!’ என்று அவள் சொன்னதையே பதிலாக கார்த்திக் அப்பாவிடம் தெரிவித்தான்.

மறுபடி அந்த அம்மாளும் மகனும்தான் நினைவுக்கு வந்தார்கள்.

“மனைவி ஊரில் இல்லை. இருந்திருந்தால் அவளைத்தான் அழைத்து வந்திருப்பான். அம்மாவை வீட்டில் விட்டுப் பூட்டிவிட்டு வந்திருப்பான்!’ என்று பக்கத்தில் இருந்தவர் அடித்த கமென்ட் கார்த்திக்கைக் கிள்ளியது.

“எங்கே இருக்கே, கார்த்திக்?’ என்று அரைக்கண்ணைத் திறந்துகேட்டார் அப்பா. “இங்கேதான் இருக்கேன் அப்பா. எங்கேயும் போயிடலே!’ என்றான் பரிவுடன்.

சிஸ்டர் வந்து “ப்பாவின் கண்களைத் திறந்து டார்ச் லைட் அடித்துப் பார்த்துவிட்டு, “அடுத்து நீங்கதான். டாக்டர் பெல் அடிச்சா போயிடுங்க!’ என்றாள்.

“நீங்க ஒரே பையனா?’ என்று விசாரித்தார் பக்கத்துக் கண் நோயாளி. “இல்லே எனக்கு ஒரு சிஸ்டர் இருக்கா,’ என்றான் கார்த்திக். “இருந்தான்னு சொல்லு!’ என்று திடீரென்று உறுமினார் அப்பா. கார்த்திக் மௌனமாக இருந்தான். அவள் வேறு ஜாதிக்காரனை திருமணம் செய்துகொண்டுபோன பிறகு, அப்பாவுக்கு அவள் இறந்து காலமாகிவிட்டாள். அம்மாவை எதுக்கெடுத்தாலும் நச்சரிக்க ஆரம்பித்தது அதிலிருந்து அதிகமாகியது. அம்மாவும் போய்ச் சேர்ந்த பிறகு, அவன்தான் அவருடைய சகல முணுமுணுப்புகளுக்கும் வடிகாலாக இருந்தான். ஒரு ஞாயிறு கிடையாது, ஒரு விடுமுறை கிடையாது. எங்கேயும் போக விடமாட்டார். பக்கத்திலேயே இருக்கணும். கார்த்திக் இருந்தான். கூடவே இருந்தான்.

“எனக்கு சரியா பதில் சொல்லவல்லேன்னா நீ சொல்லுடா!’ என்பார் அப்பா. அவருக்கு அப்படியும் ஒரு பயம். கார்த்திக் கம்பீரமாக, மிலிடரி ஆசாமி மாதிரி இருப்பான். அவனுக்குத் தாம் பிறந்ததே ஏதோ அப்பாவைக் காபந்து பண்ணிக் கொண்டிருப்பதற்குத் தானோ என்றுகூட சில சமயம் தோன்றும். அந்த நினைப்பைக்கூட அப்போதே அழித்துவிடுவான். இப்போதைக்கு அப்பாதான் முக்கியம்.

டாக்டரின் மணி ஒலித்தது. கார்த்திக் அப்பாவின் கையைப் பிடித்து அழைத்துக் கொண்டு அவர் அறைக்குள் நுழைந்தான். அவர் பரிசோதனை முடிந்து, “அடுத்த வாரம் ஆபரேஷன் வச்சுக்கலாமா?’ என்று கேட்டார்.

“எத்தனை நாள் ஆஸ்பத்திரியில் இருக்கணும், டாக்டர்?’ என்றார் அப்பா பயத்துடன்.

“ஜஸ்ட் ஒன் அவர். அப்புறம் மறுநாள் வந்து கட்டைப் பிரிச்சுக்கலாம்,’ என்று டாக்டர் சொன்னதும், அப்பாவின் முகத்தில் அப்படி ஒரு சந்தோஷம். “நீங்களே மறுநாள் கூட்டிண்டு வரணும்னு இல்லே. உங்க மிஸஸ் இருந்தா அவங்களை அனுப்பினாலும் போதும், நீங்க ஆபீசுக்கு லீவு போட வேண்டாம்!’ என்றார் டாக்டர் கார்த்திக்கிடம் பரிவுடன்.

“இல்லே டாக்டர், நானே வரேன். அப்பாவுக்கு நான் கூட துணை மாதிரி இருந்தாத்தான் சந்தோஷம். நிம்மதி.’

“ஜஸ்ட் எ மினிட், மிஸ்டர் கார்த்திக்!’ என்றார் டாக்டர். “அவரை வெளியே உட்கார விட்டுட்டு வாங்க!’

“என்னை ஏன் தனியா வெளியே இருக்கச் சொல்றீங்க? ஏதானும் சீரியஸா? என் கண் போயிடுத்தா?’ என்று பதறினார் அப்பா.
“நோ, நோ. அப்படி எல்லாம் ஒண்ணும் இல்லே. ஜஸ்ட் எ பெர்சனல் க்வஸ்சென், அவ்வளவுதான்.’

அப்பாவை வெளியே உட்கார வைத்துவிட்டு உள்ளே வந்து டாக்டருக்கு எதிரே உட்கார்ந்தான் கார்த்திக்.

“மிஸ்டர் கார்த்திக், உங்க அப்பாவுக்கு ஏதாவது சைகியாடிரிஸ்ட் சிகிச்சை தேவையாக இருக்குமா? ரொம்ப நெர்வஸா இருக்கார். ஒரேயடியா எல்லாத்துக்கும் பயப்படறார்.’

“சரியாப் போச்சு. அதெல்லாம் ஒண்ணும் தேவையே இல்லே. ஹி ஈஸ் நார்மல். தனியா இருக்கக் கொஞ்சம் பயம். சிஸ்டர் மேல ரொம்ப பாசம் வச்சிருந்தார். அவளோட முடிவுனால என் மேல இருக்கிற பொசஸிவ்நெஸ் பிடி கொஞ்சம் அதிகமாயிட்டுது. அவ்வளவுதான். உங்க ஹெல்ப் தேவையா இருந்தா உங்களை அப்ரோச் பண்றேன், டாக்டர்,’ என்றான் கார்த்திக், அப்பாவை விட்டுக்கொடுக்காமல்.

வெளியே அப்பா படபடப்புடன் காத்திருந்தார். கார்த்திக் அறியாத வயதிலேயே சிசுவாக அவனைத் தத்து எடுத்து, தம் பிள்ளையாக வளர்த்துப் படிக்க வைத்து ஆளாக்கிய உண்மையை, கார்த்திக்குக்கு யாரும் தெரிவிக்காத வரையில், தமக்கு எந்தவிதக் கவலையும் இல்லை என்று நிம்மதியாக அமர்ந்திருந்தார் அப்பா.

-சாருகேசி (பிப்ரவரி 2012) 

தொடர்புடைய சிறுகதைகள்
கார் வந்து நின்றவுடன் ஒரு அதிகாரி வந்து கார் கதவை திறந்து விட இறங்கிய கல்பனாவுக்கு மீண்டும் ஒரு வணக்கத்தை வைத்த அந்த அதிகாரி உள்ளே வாங்க மேடம் என்று அழைத்து,சென்றார். அலுவலக்த்தில் ஒவ்வொரு டேபிளில் இருப்பவர்களை அறிமுகப்படுத்திக்கொண்டே வந்தார்.அந்த அதிகாரி. ஒவ்வொருவரும் ...
மேலும் கதையை படிக்க...
நான், நிருபர்!
''தம்பி, சுப்ரமணின்னு என் ஃப்ரெண்ட், உன்னைப் பார்க்க வருவான். அவனோட மகனுக்கு ஏதோ பிராப்ளமாம். கலங்கிப் போயிருக்கான்.'' - டெல்லியில் இருந்து அலைபேசியில் ஒலித்த அண்ணன் குரலில் பதற்றம். பிரபல புலனாய்வுப் பத்திரிகையில் சீனியர் கரஸ்பாண்டென்ட்டாக இருக்கும் எனக்கு, இதுபோல உதவிக் குரல்கள் ...
மேலும் கதையை படிக்க...
“என்னங்க சாப்பிடத் தட்டு வச்சாச்சு. சாப்பிட வரீங்களா?”-மனைவி ஜெயந்தியின் குரல் கேட்டு சங்கரன் வியந்தார். பசிக்குது. சீக்கிரம் சாப்பாடு போடு என்று சொன்னால்கூட டிவி சீரியலைவிட்டு எழுந்து வர மனமில்லாமல் கொஞ்சம் இருங்க. ‘இப்ப முடிஞ்சிடும், வரேன்’ என்று உட்கார்ந்திருப்பவள் இன்று ...
மேலும் கதையை படிக்க...
“ மைசூருக்கு பக்கத்திலேயாமே? சாந்தா சொன்னாள் “ செல்லம்மாள் குரலில் குதூகலம் தெரிந்தது. இனிமே லீவுக்கு மாயவரம் போக வேண்டாம். புது இடம் ஒன்று கிடைத்து விட்டது. வருடா வருடம் மாயவரம் போய் பிள்ளைகளும் செல்லம்மாவும் அலுத்துப் போயிருந்தார்கள். மூன்று வேளையும் சோறு, ...
மேலும் கதையை படிக்க...
காலை நேரம். மேகம் இறுக்கமாக இருந்தது. மழை வருவது போல புழுக்கம் நிரம்பி வழிந்தது. வானில் கருமேகங்கள் சூழ்ந்து நிரம்பி கிடந்தன. ஆட்கள் நடமாட்டம் இல்லாத ஊரின் வடக்கே இருந்த கன்னித்தோப்பின் நாவல்மர நிழலில் புழுங்கை என்கிற செந்தாமரை நின்று கொண்டிருந்தான். ...
மேலும் கதையை படிக்க...
இரு தோழிகள் வேறு வேறு எண்ணங்கள்
நான், நிருபர்!
தகுதி
வானவில் வாழ்க்கை
பயித்தம் செடிகளுக்கு பிறகான காலைப்பொழுதுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)