உழைத்த பணம்

 

வீட்டில் மளிகை தீர்ந்து விட்டது என்பதை முருகன் மனைவி குழ்ந்தைகள் முன்னால் சப்தமிட்டு கூறிய போது இவனுக்கு என்றும் வரும் கோபம் அன்று அதிசயமாய் வராமல் ‘பார்க்கலாம்’ என்று சொன்னதை அவன் மனைவி அதிசயமாய் பார்த்தாள்.

‘பார்க்கலாம்’ என்று சொல்லிவிட்டானே தவிர அண்ணாச்சி கடை முன்னால் தலையை சொறிந்து அவநம்பிக்கையுடந்தான் நின்றான்.

அண்ணாச்சி.. என்று இழுத்தான்,

என்ன பம்புக்காரரே பாக்கி இந்த மாசம் அப்படியே நிக்கே! என்று முன்னெச்சரிக்கையாய் இழுக்க

இந்த மாசம் மழை நிறைய பேஞ்சுருச்சு அண்ணாச்சி! அதனால மோட்டார் பம்பு வேலைக கம்மியாத்தான் வந்துச்சு, அடுத்த மாசம் மழை வெறிச்சா கண்டிப்பா மோட்டார் வேலைக்கு கூப்பிடுவாங்க, மொத்தமா கணக்கை முடிச்சுப்போடறன் அண்ணாச்சி, குழைந்தான்.

இந்த மாதிரி எத்தனை பேர் சொல்வதை அண்ணாச்சி கேட்டிருப்பார்,

சரி சரி சீக்கிரம் முடிக்கபாக்கற வழியைப்பாரும் என்று அடுத்த ஆளை பார்க்கபோனார்,

இவன் அவசர அவசரமாக அண்ணாச்சி இப்ப கொஞ்சம் மளிகை கொடுத்தா நல்லா இருக்கும் இழுத்தான்,

அண்ணாச்சி முகத்தை தூக்க வில்லை என்றாலும், குரலில் கடுமை ஏற்றி இப்படி வாங்கிட்டே இருந்தா பின்னாடி எப்படி கட்டுவீரு, என்றவர் கடைப்பையனை கூப்பிட அவன் இவன் அருகில் வந்து கையை நீட்ட இவன் தயாராய் கையில் வைத்திருந்த மளிகை பட்டியலை அவன் கையில் திணித்தான்.

ஒரு வழியாக மளிகை சாமான்கள் கட்டப்பட்டு இவன் சைக்கிள் காரியரில் ஏறி வீடு வந்து இறங்கிய போது இவன் குழைந்தைகள் இவனை சந்தோசமாகப்பார்க்க இவன் மட்டும் கடன் பாக்கி அண்ணாச்சி கடையில் இரட்டிப்பானதை நினைத்து மனதுக்குள் வருந்தி மளிகை பிரச்னை முடிந்தது அடுத்த பிரச்னை என்ன வருமோ என் நினைக்கும்போதே பிரச்னை வீட்டுக்காரர் ரூபத்தில் இவன் கதவை தட்டியது.

மூணு மாசமாச்சு வீட்டு வாடகை கொடுத்து, சீக்கிரமே காலி பண்ணிடுங்க இந்த மாதிரி மாச மாசம் உங்களோட தொங்க முடியாது, வீட்டுக்காரரின் கர்ணகடூரக்குரல் வீட்டைச்சுற்றியுள்ள அத்தனை குடித்தனக்காரர்கள் காதுகளுக்கும் சென்றது, இது ஒரு எச்சரிக்கை என்பது வீட்டுக்காரரின் எண்ணம், ஆனால் அவமானத்தில் குன்றிப்போனது முருகனின் மனம்.

இன்னும் ஒரு வாரம் பொறுத்துக்குங்க மூணு மாச வாடகையையும் செட்டில் பண்ணிடுறேன் கெஞ்சினான்.

இது மாதிரி ஆயிரம் முறை சொல்லிட்ட ஆனா வாடகைதான் வந்த பாட்டை காணோம்.இன்னும் ஒரு வாரம்தான் டைம் அதுக்குள்ள வாடகை வரலேன்னா தயவு தாட்சணை பார்க்கமாட்டேன்.

அடுத்த வீட்டை பார்க்கபோனார் வீட்டுக்காரர்.

பத்து ஒண்டுக்குடித்தனம் கொண்ட வீடுகளுக்கு அவர் முதலாளி.தன்னைப்போலவே பக்கத்து வீட்டுக்காரர்களுக்காக வருத்தப்பட்டது இவன் மனம். அதே நேரத்தில் இந்த மூன்று மாத வாடகை பணத்தை எப்படி புரட்ட முடியும் என இவன் மனம் மலைக்க தொடங்கியது, அடகு வைக்க தன் மனைவியிடம் ஏதேனும் நகை இருக்குமா என நினைத்தான்

ஏய்யா ..நான் வேணா வேலைக்கு போறேனே, பக்கத்து மில்லுக்கு ஆளு வேணுமாம் கேட்ட மனைவியிடம் வேலைக்கு போகச்சொல்ல மனம் துடித்தாலும் குழைந்தங்க ஸ்கூல் விட்டு வந்தவுடன் அம்மாங்குமே! அது வேறு மனசை சலனப்படுத்தியது.

காலையில் இவன் தொழில் செய்யும் இடத்திற்கு சென்றபோது பக்கத்து கடைக்காரர் முருகா நம்ம கந்தசாமி அவுக தோட்டத்துல மோட்டார்ல தண்ணீ ஏற மாட்டேங்குதாம் இப்பத்தான் ஆள் வந்து சொல்லிட்டு போச்சு அவர் சொன்னவுடன் சந்தோசத்துடன் சைக்கிளை மிதித்தான் முருகன், அவனுக்கு மளிகை பாக்கி, வீட்டு வாடகை, அனைத்தும் ஞாபகத்துக்கு வந்தன. ஏனெனில் கந்தசாமி அவர்கள் கொஞ்சம் தாராளம், கை நிறைய கொடுப்பார். அதனால் அவர் தோட்டம் மூன்று கிலோமீட்டர் என்பது அவனுக்கு பெரிய தூரமாக தெரியவில்லை

வேலை முடிய நடு இரவு ஆகிவிட்டது, மோட்டார் உள்ளேயே பழுது ஆகியிருந்தது, இவனே டவுனுக்கு போய் எல்லா சாமான்களையும் வாங்கிவந்து மாட்டி மோட்டார் ஓடி தண்ணீர் தோட்டத்தில் பாய்ந்த பின்னரே
இவனுக்கு அப்பாடா என்றிருந்தது, நினைத்தது போலவே அவனுக்கு திருப்தியாய் பணம் கொடுத்தார்.

கவுண்டரிடம் சொல்லிவிட்டு கிளம்பும்போது ஏண்டா இந்நேரத்துக்கு போகணுமுன்னு என்னடா அவசரம்? உன் ஊட்டுக்காரிக்கு போனைபோட்டு காலையிலே வர்றேன்னு சொல்லிட்டு இங்கேயே படுத்து எந்துருச்சு காலையிலே போ, என்று அக்கறையாய் சொன்னவரிடம் இல்லீங்கய்யா நான் கிளம்பறேன் என்று சொல்லிவிட்டு வேகமாய் சைக்கிளை மிதித்தான்.

கொஞ்சம் தொலைவு வர வர இருள் கண்ணை மறைக்க ஆரம்பித்தது, பயம் வேறு மனதில் ஊற்றெடுக்க ஆரம்பித்தது, இரண்டு கிலோ மீட்டர் வந்திருப்பான் திடீரென்று ஒரு பைக் இவனுக்கு எதிராக வந்து இவனை வழிமறித்தாற்போல் நின்றது அதிலிருந்த இருவரும் இறங்கி இவனை நகர விடாமல் பிடித்துக்கொண்டனர்.

ஒருவன் கையில் வைத்திருந்த கத்தியைக்காட்டி குத்திவிடுவது போல் வைக்க மற்றொருவன் முருகனின் சட்டைப்பைக்குள் கையைவிட்டு துழாவியவன் முகத்தில் பெருத்த ஏமாற்றமே இருந்தது

ஒரு சில துண்டு பீடிகளும், கொஞ்சம் சில்லறை காசுகளுமே தட்டுப்பட்டன்,

ஏண்டா நாயே ஒண்ணுமில்லாம இந்நேரத்துக்கு இங்க எதுக்குடா சுத்தறே?

ஓங்கி ஒரு அறை விட்டு, ஓடறா நாயே என்று விரட்டி விட்டனர். என்ன நடந்தது என்பதைக்கூட கிரகிக்க முடியாமல் இருந்த முருகன் விட்டால் போதும் என்று என தாறு மாறாக சைக்கிளை மிதித்தான்.

கொஞ்ச தூரம் வந்த பின்னரே அவன் தன்னிலை பெற்றான். ஆமாம் கவுண்டர் கொடுத்த பணத்தை சட்டைப்பையில்தானே வைத்தோம், பிறகு எப்படி இவர்கள் கையில் கிடைக்காமல் போயிற்று, அவனுக்கு கவலை வந்து சூழ்ந்தது.

பணம் என்னாச்சு? வழியில் பணத்தை தவறவிட்டுவிட்டோமா? கவுண்டர் தன் கையில் பணத்தை கொடுத்ததும், தான் அதை சட்டைப்பையில் வைத்ததும், நன்றாக ஞாபகம் வந்தது, அதன் பின் எப்படி பணம் தன் சட்டைப்பையில் இருந்து மறைந்தது? திரும்பி சென்று வழியில் தேடிப்பார்ப்போம் என்றால் திருடர்களை நினைத்து பயமாக இருந்தது. எப்படி வீடு வந்து சேர்ந்தான் என்று அவனுக்கே தெரியவில்லை.

இந்நேரம் வரை விழித்திருந்து காத்திருந்த அவன் மனைவி இவன் கதவை தட்டியவுடன் சடாரென சென்று கதவை திறந்தாள்.

மோசம் போயிட்டேண்டி! என்று இவன் தன் மனைவியிடம் நடந்ததை அனைத்தையும் புலம்பினான்.

கடவுள் இப்படி என்னை கஷ்டப்படுத்தறாரே என்று கண்ணீர் விட்டான், இவன் அழுகையை பார்த்த இவன் மனைவி பேசாம போய் படுய்யா! காலையில போய் பார்த்துக்கலாம், குழந்தைக எல்லாம் தூங்குது, பக்கத்துல உள்ளவங்க எல்லோரும் தூங்கணும்ல, அவனை படுக்க வைத்தாள், படுத்தும் புலம்பிக்கொண்டே இருந்தவன் அப்படியே களைப்பினால் தூங்கிவிட்டான்.

தட தட கதவை தட்டும் சத்தம் கேட்டு இவன் மனைவி கதவை திறந்த பொழுது விடிந்திருந்தது, இவனும் தூக்கம் கலைந்து வெளியே வந்தான்.

வெளியில் கந்தசாமி தோட்டத்தில் வேலை செய்யும் ஆறுச்சாமி நின்றிருந்தான்,

ஏம்ப்பா நீ பாட்டுக்கு பணத்தை கிணத்து மேட்டுல வச்சுட்டு வந்துட்ட நல்ல வேளை கவுண்டர் பார்த்தாரு இல்லேண்ணா கிணத்துக்குள்ள விழுந்துருக்கும், வெள்ளென கொண்டு போய் கொடுத்துருன்னு அனுப்பிச்சாரு.

அப்பொழுதுதான் முருகனுக்கு ஞாபகம் வந்தது ரிப்பேர் முடிந்து மோட்டார் தண்ணி எடுத்து வெளியே விழும்போது இவன் கை கால் கழுவ சென்றதும், பணம் தண்ணீரில் நனைந்து விடும் என்று சட்டைப்பையில் இருந்து எடுத்து கிணத்து மேட்டில் வைத்ததும், பின் அதை மறந்து விட்டு கிளம்பியிருக்கிறோம்.

மனசெல்லாம் மகிழ்ச்சி! உழைத்த பணமல்லவா!! 

தொடர்புடைய சிறுகதைகள்
வீட்டிற்குள் நுழையும்போது இரவு 7.30 ஆகி விட்டிருந்தது ராகவனுக்கு. அவர் மனைவி வாசலிலேயே காத்திருந்தாள். ஏங்க, இன்னைக்கு இவ்வளவு லேட்? எதுவும் பேசாமல் துணிமணிகளை கழட்டி விட்டு கொடியில் தொங்கிய துண்டை இடுப்பில் சுற்றிக்கொண்டு புழக்கடை சென்று வாளியில் இருந்த தண்ணீரை ...
மேலும் கதையை படிக்க...
துறையூர் என்னும் நாட்டை மகதவர்மன் என்னும் மன்னன் ஆட்சி புரிந்து வந்தான். அவனிடம் ஏராளமான படை வீரர்கள் இருந்தனர்.அத்ற்காக மற்ற நாட்டுடன் போர் புரிய வேண்டும் என்ற எண்ணம் இல்லாமல், அந்த படை வீரர்களைக்கொண்டு உள் நாட்டு பாதுகாப்பை பலப்படுத்தினான். இதன் மூலம் ...
மேலும் கதையை படிக்க...
காலையில் ஐந்து மணியில் இருந்து காத்திருக்கிறான் ராகவன், இன்னும் பால் பூத் திறக்கப்படவில்லை, தூக்கமும் கெட்டு, சும்மாவே காத்திருப்பது மிகவும் கஷ்டமாக இருந்தது,கோபமாக வந்தது ராகவனுக்கு, அதற்குள் பூத்காரர் அவசர அவசரமாக வந்து கடையை திறந்து சாரி சார் லேட்டாயிடுச்சு என்றவர் ...
மேலும் கதையை படிக்க...
இரவு மணி இரண்டு இருக்கும். அந்த தெரு விளக்குகள் ஒரு சில எரியாமல் இருந்ததால் அந்த இடங்களில் இருள் சூழ்ந்து இருந்தது. அந்த ஏரியாவே ஒரு சத்தமும் இல்லாமல் அமைதியாக இருந்தது. வாகனங்களின் நடமாட்டம் கூட இல்லை. பாதையை ஒட்டி பங்களாக்கள் ...
மேலும் கதையை படிக்க...
“மகாத்மா காந்தி நினைவு” பள்ளியில் அடுத்த வாரம் பள்ளிஆண்டு விழா வருகிறது. அந்த விழாவிற்கு புதிதாக வந்திருக்கும் போலீஸ் அதிகாரி ஜீவானந்தம் அவர்கள் விருந்தினராக வருகிறார் என்று பள்ளி தலைமையாசிரியர் அறிவித்தார்.அங்குள்ள மாணவ்ர்களுக்கு ஒரே மகிழ்ச்சி. ஏனென்றால் ஜீவானந்தம் அவர்கள் இந்த ...
மேலும் கதையை படிக்க...
ராகவனின் எண்ணம்
திட்டமிட்டு வேலை செய்தால்
தினம் தினம் அணியும் முகமூடி
திருட வந்தவன்
திருட்டுப்பட்டம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)