உறுத்தல்..!

 

வெகுகாலத்திற்குப் பிறகு நண்பன் அவினாசைப் பார்க்க ஆவல். பேருந்து ஏறிச் சென்னைக்குச் சென்றேன்.

பேருந்து நிலையத்தில் ஆட்டோ பிடித்து , அவன் வீட்டு வாசலில் போய் இறங்கியதுமே சொல்லி வைத்து வரவேற்பது போல் மாடியில் நின்று…

“வாடா ! “மலர்ச்சியை வரவேற்றான். எனக்கே அது ஆச்சரியமாக இருந்தது.

வீட்டினுள் நுழைந்ததும்…

“வாங்கண்ணா…! “அவன் மனைவி கோப்பெரும்செல்வி வாய் நிறைய வரவேற்றாள்.

ஆணொன்றும், பெண்ணொன்றும்……. அறையில் மதிய தூக்கம் போட்டுக் கொண்டிருந்தார்கள்.

வழக்கமான விசாரிப்புகளுக்குப் பின்….

என் எதிரில் கணவன் அருகில் அவன் மனைவி…..

“உங்க நண்பர் சரி இல்லீங்க…”திடீரென்று வார்த்தையை விட்டாள்.

நான் துணுக்குற்றுப் பார்த்தேன்.

“நான் சொல்றது உண்மை. முன்னைக்கு இப்போ இவர் அதிகம் மாறிட்டார்.!”

நான் அவள் அருகில் அமர்ந்திருக்கும் நண்பனைப் பார்த்தேன்.

அவன் இவள் சொல்வதை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளவில்லை.

மெலிதாக சிரித்தான்.

அவள் தொடர்ந்தாள்.

“வீட்ல அலுத்து சலித்து உட்காரமுடியல. எப்பப் பார்த்தாலும் அதை எடு. இதை எடு தொல்லை. வீட்டுக்குள்ள ஒரு குப்பை இருக்கக்கூடாது. ஏன் பெருக்கலன்னு சுத்தம். குழந்தைகள் கூச்சல் போட்டால்…சத்தம் போடக்கூடாதுன்னு அதட்டல். நான் இதுங்களை அதட்டினா.. செல்லம் கொடுக்கிறார். படிங்கன்னு சொன்னா,…. அதிகம் படிக்க வேணாம் . விளையாடுங்க…துரத்தறார். என் பேச்சைக் கேட்காம அவர் இஷ்டத்துக்கு வளர்க்கிறார். அப்புறம் எப்படி குழந்தைகளுக்கு என் மேல பயம் வரும்..? “நிறுத்தினாள்.

“ஏன்டா..”நான் அவனைப் பார்த்தேன்.

“விடுடா. வீட்டுக்கு வீடு இதெல்லாம் சாதாரணமா நடக்கிறது. “சொன்னான்.

“ஏங்க ! வீடுன்னா குப்பைகள் இருக்காதா..? குழந்தைகள் சத்தம், சச்சரவுகள் இருக்காதா..? எதுக்கும் தொட்டா… குத்தம்.! வைச்சா குத்தம்.! அது மட்டுமா..? தண்ணிப் பிடிக்கக் கத்தல். பாத்திரம் துலக்கும்போது… எதுக்கு அதிகம் உருட்டுறே, உடைக்கிறேன்னு மிரட்டல். பால் வாங்க கத்தல். எப்போதும் இவர்கிட்டேயிருந்த கத்தல் ! கத்தல்! கத்தல்! ரெண்டு பேர் சம்பாதிக்கிற வீட்ல இப்படி கூச்சல் வரலாமா..? கீழே வரைக்கும் கேட்குது. வாசல் தெளிக்கிற வேலைக்காரிகூட…ஐயா ஏம்மா இப்படி கூச்சல் போடுறார்..? உங்களை ஓட ஓட தொரத்துறார்..?ன்னு கேட்கிறா. அவமானமா இருக்கு. ! “கமறி …. கண்களின் ஓரம் கசிந்த நீரைத் துடைத்தாள்.

எனக்குப் பாவமாக இருந்தது.

“அலுவலகம் விட்டு களைத்து வீட்டுக்கு வந்து நிம்மதி இல்லீங்க. தினம் தினம் இவர் பண்ற கூத்து வேதனையா இருக்கு. தா… தாங்க முடியாமத் தற்கொலைப் பண்ணிக்கலாம்ன்னு தோணுது. விட்டு விலகி விவாகரத்து வாங்கிகிட்டு ஓடிப்போயிடமான்னு கூட பைத்தியக்காரத்தனமான யோசனை வருது.”குமுறினாள்.

நான் மவுனமாக இருந்தேன்.

“நீங்களாவது நல்லது, கெட்டது சொல்லிப் போங்க. அவளும் வேலைக்குப் போறவள்தானே ! அனுசரிச்சிப் போன்னு புத்திமதி சொல்லுங்க. இதுக்கு மேலேயும் இவர் திருந்தி, சரியாகலைன்னா…. மேலே சொன்ன ரெண்டுல ஒன்னு நடக்கும் !.. “பம்மி முகத்தைத் துடைத்துக் கொண்டு உள்ளே சென்றாள்.

நண்பன் ரொம்ப நல்லவன். ஏனிப்படி திடீரென்று மாறிப்போனான்..? !

கெட்ட சவகாசம் எதுவும் தொற்றி விட்டதா..? மனைவி கண்டுபிடித்து தட்டிக் கேட்டு விடுவாள் ! என்கிற பயத்தில் , அதை மறைக்க அவளை அதட்டி மிரட்டுகின்றானா..?

“வாடா..”என்றழைத்துக் கொண்டு வெளியில் நடந்தேன்.

சிறிது தூரம் நடந்ததும்…

“என்ன ! பயங்கர குற்றப்பத்திரிக்கையா இருக்கு..! ஏதாவது தப்பு தண்டா பண்றீயா..? “பார்த்தேன்.

“ஐயய்யோ..! இல்லைடா…!!…”பதறினான்.

“சின்ன வீடு..?”

“சாமி சாத்தியமா அப்படியெல்லாம் ஒன்னும் கிடையாது !”

“பின்னே ஏன் இப்படிப் பண்றே..?”

“வீட்ல குப்பை இருந்தா கோபம் வராதா..? மாடியில் ஒரு நாளைக்கு ஒரு தடவை தண்ணி வரும். அந்த சமயத்துல ஒழுங்கா பிடிச்சி வைச்சுக்கலேன்னா ஆத்திரம் வராதா..? என் மேல் உள்ள கோபத்தைக் குழந்தைகள் மேல் காட்டி துவசம் பண்ணினால் எரிச்சல் வராதா..? “அடுக்கினான்.

இவன் சொல்வதும் நியாயம்தான். ! அதற்காக இவன் பக்கம் சாயமுடியுமா…?

“இருந்தாலும் நீயும் அனுசரிச்சுப் போகனும்டா. கோப்பெரும்செல்வியும் உன்னை மாதிரி அலுவலக வேலை செய்து களைச்சு வர்றவள்தானே..!”

மெளனமாக வந்தான்.

ஆனாலும் எனக்கு மனம் நிறைவாய் இல்லே.

எங்கோ அழுத்தமான சிக்கல் இருக்கிறது. அதை எடுத்துவிடவில்லை என்றால் இவன் மனைவி வாழ்க்கை வெறுத்து தற்கொலை, விவாகரத்து முடிவெடுக்கலாம். அதில் எது நடந்தாலும் குழந்தைகள், வாழ்க்கை நாசம் ! – எனக்குத் தெளிவாகத் தெரிந்தது.

எங்கே இருக்கிறது சிக்கல்..? யாரிடமிருக்கிறது தவறு..? – யோசித்தேன்.

நண்பன் நல்லவன். பால்ய வயதிலிருந்தே பழக்கம். எந்த கெட்ட பழக்க வழக்கங்களும் இல்லை . இருந்தாலும் மனதிலே ஒன்றும் வைத்திருக்க மாட்டான். இப்போது சந்தேகப்பட்டுக் கேட்டதற்கும் இல்லை சொல்கிறான். ஆக…ஆள் தவறேதும் செய்யவில்லை.

ஒருவேளை மனைவியின் நடத்தை மீது சந்தேகமா.? தவறாகக் கேள்விப்பட்டிருக்கின்றானா..? அதற்காக அவளை இப்படி தண்டிக்கின்றான், வதைக்கின்றனா .?

அப்படியும் கூட இருக்கலாம். அவள் அதை மறைத்து கொடுமைகளை மட்டும் கூறுவதாகவும் இருக்கலாம்.

அவளும் நல்ல இடத்துப் பெண். ஒழுக்கமானவள். இப்படி இருக்க வாய்ப்பில்லை. ! – அப்புறம் எப்படி இந்த கோளாறு.? !

சிக்கல் தீர்க்காமல் வீடு திரும்புவதில்லை. ! – முடிவெடுத்துக்கொண்டு மறுநாள் அவள் அலுவலகம் சென்றேன்.

அங்கு உள்ளூர் நண்பன் ஒருவன் உண்டு. அவனை விசாரித்தால் உண்மை விளங்கும். என்பது என் கணிப்பு.

கோப்பெரும்செல்வி எம்.காம். உதவி மேலாளர். அவள் அறைக்கு அடுத்துதான் அவன் இருக்கை. நான் அவள் அறையைத் தாண்டும்போது எழுதிக்கொண்டிருந்தாள். ஆகையால் அவள் என்னைக் கவனிக்கவில்லை.

நண்பன் குசலம் விசாரித்தான்.

அதற்குள் அவள் அறையிலிருந்து அழைப்பு மணி சத்தம்.

அவள் அறை வாசலில் நின்ற கடைநிலை ஊழியன் கந்தசாமி உ நுழைந்தான்.

“கந்தசாமி ! ராமசாமியை வரச் சொல்..? “- அவள் குரல் கேட்டது.

அவன் வந்து நண்பன் அருகிலிருக்கும் அவரிடம் சொல்ல…. ராமசாமி உள்ளே ஓடினார்.

“நான் சொன்ன வேலையெல்லாம் முடிச்சாச்சா..? “அதட்டலாய்க் கேட்டாள்.

“கொஞ்சம் இருக்கு. மேடம் !”

“நேத்திக்கே முடிக்க வேண்டியது..”

“இப்போ கண்டிப்பா முடிச்சிடுவேன்.”

“இன்னும் ஒருமணி நேரத்துல அது என் மேசைக்குக் கண்டிப்பா வரனும்.,”கறாராய் ச் சொன்னாள்.

“சரிங்க மேடம். ! “இவர் பணிவாய்ச் சொன்னார்.

“அப்படியே சிவாவை வராகி சொல்லுங்க..”

அவர் வெளியே வந்து சிவா உள்ளே சென்றான்.

“வேலையைச் சரியா செய்யணும். நிறைய தப்பு.”

“மே… மேடம் !”

“எடுத்துக்கிட்டுப் போய் சரியா முடிச்சி வாங்க..”

அவன் அவள் தூக்கிப் போட்ட பைலோடு முகம் தொங்கி வெளியே வந்தான்.

அங்கு இருந்த அடுத்த சில நிமிடங்களிலேயே எனக்குச் சிக்கல் புரிந்து விட்டது.

சிறிது நேரத்தில் அவள் அறையில் சத்தம் இல்லை. வேறு எவரும் இல்லை.

நான் அறைக்கதவைத் தட்டிவிட்டு உள்ளே நுழைந்தேன்.

“அண்ணா… நீங்க…?”எதிர்பாராத சந்திப்பில் திகைத்தாள்.

“உன்னை இங்கே சந்திக்க ஆசை !”எதிரில் அமர்ந்தேன்.

“என்ன விஷயம் அண்ணே…?”

“உன் பிரச்சனைக்குத் தீர்வு கண்டாச்சு !”

“என்னண்ணே..?”

“காரணம் நீ…”

“அண்ணே…!”

“நீ கொஞ்சம் பொறுத்துப் போகனும்.”

“புரியல…?”

“ஆமாம் கோப்பெரும்செல்வி. உன் கணவன் உன்னை விட பதவியில் இறக்கம். சாதாரண எழுத்தர். திருமணத்துக்குப் பிறகு… நீ மேலும் மேலும் படித்து இந்த உயர் பதவிக்கு வந்துட்டே. இந்த பதவி, அதனால் அதிக சம்பளம்.. இதெல்லாம் உன் கணவனை வெருட்டுது. இங்கே உள்ள அதிகாரத்தோரணையை வீட்டிலும் காட்டி தன்னை அடக்கி விடுவேன்னு அவனுக்கு உள்ளுக்குள்ள பயம். அடுத்து… உன் சம்பளம். இது தன்னை வாயடைச்சுடுமோ என்கிற பீதி. அதனால் தன்னை உன் கணவன், நீ தனக்கு அடங்கியவள், கட்டுப்பட்டவள்ன்னு நிலை நிறுத்த படாத பாடு படுறான். இந்த தாக்கம்தான் வீட்டில் அந்த அதட்டல், உருட்டல், அதிகாரத்தோரணை. இதை நீ உணர்ந்து …. அலுவலகத்தில் நான் அதிகாரத் தோரணையில் இருந்தாலும்..நான் இங்கே வாழ்க்கைத் துணைவி , இரண்டு பேரும் சமம். யாரும் மேல் கீழ் கிடையாது. முக்கியமா உனக்குக் கட்டுப்பட்டு , அடங்கி நடக்கும் மனைவின்னு நீ அவனுக்குச் சொல்லாலும் செயலாலும் நடந்து அவன் உள்ளுக்குள் உட்கார்ந்திருக்கும் …பயம், பீதி, தாழ்வு மனப்பான்மையைத் துரத்திட்டா…என் நண்பன் உனக்கு மறுபடியும் பழைய கணவனாய் இருப்பான். ! “சொன்னேன்.

சிறிது நேரம் அமைதியாக இருந்த கோப்பெரும்செல்வி…..

“ஆமாம்ண்ணே! நீங்க சொல்றது சரி. “சொன்னாள். 

தொடர்புடைய சிறுகதைகள்
இருபது வருடங்களாக பாரீசில் வேலை பார்க்கும் எனது மைத்துனன் வருடா வருடம் மகர ஜோதிக்கு ஐயப்பன் மலைக்கு வருவான். வரும்போது கூடவே துணைக்கு ஒரு ஆளையும் இழுத்து வருவான். இரண்டு வருடங்களுக்கு முன் இரண்டு வெள்ளைக்காரர்களை அழைத்து வந்தான். சென்ற வரும் ஒரு ...
மேலும் கதையை படிக்க...
நினைக்க இதயம் கனத்தது. அது நெஞ்சுக்குள் ஆழமான காயமாக வலித்தது. எவ்வளவு பெரிய இடி. ! இதை நாம்தான் தாங்கிக் கொண்டோமா...? ! என்பதே அவனுக்குச் சந்தேகமாக இருந்தது. வீட்டை விட்டு எவ்வளவு தூரம் வந்திருப்போம் ..! என்பது அவனுக்குத் தெரியவில்லை. இருந்தாலும் கண்டைக்காலின் ...
மேலும் கதையை படிக்க...
'தாயினும் சிறந்ததோர் கோவிலும்மில்லை ! ' என்று யார் சொன்னது..? தவறு. ' தந்தையிலும் சிறந்ததோர் கோவிலுமில்லை ! ' - என்றிருக்க வேண்டும். ஆமாம் ! எனக்கு அப்படித்தான் சொல்லத்தோன்றுகின்றது. அம்மாவை நினைக்க நினைக்க.... அப்படியொரு ஆத்திரம் வருகின்றது. அப்பாவை அவள் அந்த பாடு ...
மேலும் கதையை படிக்க...
எதிர்பாராதவிதமாக நந்தினியைப் பூங்காவில் தன்னந்தனியே பார்த்ததும் எனக்குள்ளிருந்த ஆசை துளிர்விட்டது. இவள் என் பால்ய சினேகிதி. ஒரே ஊர். பக்கத்துப் பக்கத்துத் தெரு. நாங்கள் ஒரே பள்ளிக்கூடம். ஒரே வகுப்பில்தான் படித்தோம். சின்ன வயசிலேயே அவள் பேரழகி. அப்போதிருந்தே எனக்கு அவள் மீது ஒரு ...
மேலும் கதையை படிக்க...
துக்க வீட்டில் பூ, பொட்டு, தாலி இல்லாமல், வெறுங்கழுத்தாய் மைதிலியைப் பார்த்த எனக்குப் பேரதிர்ச்சி. 'எப்படி...எப்படி... இப்படி ..? ' ஒரு விநாடிக்குள் எனக்குள் ஓயாத கேள்விகள். மைதிலி என் தாய்மாமன் மகள். என் அம்மாவிற்கு மூன்று அக்காள்கள், ஒரு அண்ணன், ஒரு தங்கை. ...
மேலும் கதையை படிக்க...
வேர்கள்
தீர்ப்பைத் திருத்துங்கள்..!
அம்மா..!
அவள்…!
வித்தியாசமான விகிதாச்சாரங்கள்….!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Sirukathaigal

FREE
VIEW