உடையாத கொலு பொம்மைகள்!

 

சிதம்பரம் பூங்கா.

மாலை ஆறுமணிக்கு வழக்கமாக கூடும் அந்த ஐந்து முதிய நண்பர்களும் ஒதுக்குபுறமாக இருக்கும் இரண்டு பெஞ்சுகளில் உட்கார்ந்து கொண்டு அவரவர் வீடுகளில் தங்களுக்கு நடக்கும் மரியாதை குறைவான விஷயங்களை வேதனையோடு சொல்லிக் கொண்டிருந்தார்கள்! அவர்கள் எல்லோருக்கும் சுமார் என்பது வயசு இருக்கும்!

எல்லோரும் பதவியில் இருந்து ஓய்வு பெற்று, இருபது வருஷங்களுக்கு மேலான பென்சன் வாங்கும் முதியவர்கள்!

பதவி காலத்தில் சம்பாதித்த வீடு, வாசல், பாங்கு பேலன்ஸ் எல்லாம் மகன், மகளுக்கு கொடுத்து விட்டு, ஓய்வுக்கு பின் அவர்கள் சம்பாதித்த சுகர், பிரஷர், மூட்டு வலி, இடுப்பு வலிகளை எல்லாம் தங்களிடமே பத்திரமாக வைத்திருப்பவர்கள்!

“வர வர எங்கள் வீட்டில் யாருமே என்னை மதிப்பது இல்லை! ஏதோ வேளைக்கு வேளை நாய்க்கு சோறு போடுவது போல் கொண்டு வந்து தட்டை வைத்து விட்டுப் போகிறா என் மருமக… வீட்டில் பையன் இல்லா விட்டால் அவள் டைனிங் டேபிளில் ஓங்கி தட்டை வைக்கும் பொழுது சாப்பாடு எல்லாம் சிதறுகிறது!….அதன் பின் அதை எப்படி சாப்பிட மனசு வரும்?…” என்று விசும்பி விசும்பி அழுதார் சுந்தரம்!

அந்த முதியவர் கூட்டத்திலேயே பக்குவப் பட்ட மனுஷன் திருமலை தான்! அவர் சிரித்துக் கொண்டே சொன்னார்.

“ சுந்தரம்! உனக்கு வயசுக்கு தக்க பக்குவம் இன்னும் வரலே! நீ ஓய்வு பெற்ற புதுசில் எல்லா வீட்டு வேலைகளையும் இழுத்துப் போட்டுக் கொண்டு, விழுந்து விழுந்து எல்லோருக்கும் செய்தாய்!… வீட்டுக்குத் தேவையான ..எலெட்க்ரிக் பில் கட்டுவது…சொத்து வரி கட்டுவது…மளிகைக் கடைக்குப் போய் சாமான்கள் வாங்கி வருவது… என்று எல்லோருக்கும் உதவியாய் இருந்தாய்… எல்லோரும் கூப்பிட்டு அன்பாக ஆளுக்கொரு வேலை சொன்னாங்க…இப்ப உனக்கு என்பது வயசாகி விட்டது…வீட்டிலேயே எழுந்து நடமாட உனக்கு மற்றவங்க உதவி தேவைப்படுகிறது… அதனால் முடிந்தவரை எல்லோரும் உன்னிடம் தப்பித்துக் கொள்ளத் தான் பார்ப்பாங்க!…..முதுமை வந்தா இயலாமையும் கூட வந்திடும்!…….அப்ப நாம் எல்லாவற்றையும் சகித்து கொள்ள பழகிக் கொள்ள வேண்டும்!.. அப்பத் தான் மனசு பாரம் இல்லாம இருக்கும்!”

“திருமலை!…என் மருமகள் ‘காலா காலத்தில் போய் சேராமல் இருந்து கொண்டு என் உசிரை வாங்குது இந்த சனியன்!..’.. என்று என்னை பார்க்கும் பொழுதெல்லாம் முணு முணுத்துக் கொண்டே போவாள்…அப்புறம் எப்படியடா அந்த சாப்பாடு உள்ளே போகும்?.” என்ற் துண்டை வாயில் வைத்துக் கொண்டு அழுதார் பொன்னுசாமி.

“ ச்சே! நிறுத்துங்கப்பா உங்க புராணத்தை!.. வந்தவுடனே ஆளாளுக்கு ஆரம்பிச்சு விடறீங்க!.. ‘பார்க்”கிலாவது காற்றாட நாலு வார்த்தை சந்தோஷமா பேசிக் கொண்டிருக்கலாம் என்றால் விட மாட்டீங்க போலிருக்கே?… இந்தக் காலத்திலே வயசான பெரியவங்களையும்,……உபயோகமில்லா பொருளை யாரும் விரும்ப மாட்டாங்க!..”

“திருமலை…. நீ பேசறது கொஞ்சம் கூட நல்லா இல்லே!..நாங்க என்ன சட்டி பானையா..உபயோகம் இல்லேனு போட்டு உடைக்க… நாங்க அவங்களைப் பெத்து வளர்த்தவங்க..எங்களுக்கு உசிரு இல்லே?… எத்தனை கஷ்டப் பட்டு அவங்களை படிக்க வச்சு …கடன் வாங்கி கல்யாணம் பண்ணி வச்சு… ரிடையர் ஆன பொழுது கிடைச்ச கிராஷூவிட்டி முழுப் பணத்தையும் அவன் வீடு கட்டக் கொடுத்தேன்… அந்த நன்றி கொஞ்சமாவது வேண்டாம்… பொண்டாட்டி பேச்சை கேட்டு விட்டு… பெத்த அப்பன் நாலு நாளா காய்ச்சல் என்று சொல்றேன்… மழை காலம் அப்படித் தான் இருக்கும்.. நாலு நாளிலே எல்லாம் சரியாகப் போய் விடும் என்று சொல்லி விட்டுப் போறான்!..” என்று கொதித்துப் போனார் ராகவன்.

“ இந்த ராக்கெட் யுகத்திலே வயசாகி தள்ளாமை வந்திட்டா எல்லா முதியவர்கள் நிலைமையும் இது தான்! ..நம்மாலே அவர்களுக்கு எந்த உபயோகமும் இல்லே! அவங்களுக்கு உபத்திரவம் தான்!…அதற்கு முடிவும் எப்போது என்றும் அவர்களுக்குத் தெரியலே…. அதனால் தான் அவர்கள் அப்படி நம்ம மனசு நோகும்படி பேசறாங்க!…… உபயோகம் இல்லாத எந்தப் பொருளாக இருந்தாலும் சரி…அது மனிதனாக இருந்தாலும் சரி அவர்களுக்கு ஒன்று தான்!.. நாம உயிரை விட்டால் தான் அவர்கள் தப்பிக்க முடியும்! வயசான பெற்றோர்களை கவனித்துக் கொள்வது, பெற்ற குழந்தைகள் கடமை என்பது சென்ற தலைமுறையோடு போய் விட்டது!….இந்த நவீன காலத்தில் அவர்களுக்கு எத்தனையோ அவசர வேலைகள்…. நம்ம ரத்தம் தானே!…இதுவரை நாம எவ்வளவுவோ தியாகங்கள் செய்து விட்டோம்…இந்த அவமானங்களையும் அவர்களுக்காக நாம் பொறுத்துக் கொண்டால் தான் கடைசி காலத்தில் நாம நிம்மதியாகப் போய் சேர முடியும்!…”

“என் திருமலை!.. இப்படி ஈசியாச் சொல்லறே?..வயசாகி தள்ளாமை வந்திட்ட..பையன் மருமகன், பேரன் பேத்தி எல்லோரின் அலட்சியத்தை சகித்துக் கொண்டு தான் கடைசி காலத்தை நாம் ஓட்ட வேண்டுமா?.” என்று வேதனையோடு கேட்டார் பொன்னுசாமி!

“ஆமா!…பொன்னுசாமி! சில உண்மைகள் சுடும்! சில உண்மைகள் கசப்பாக இருக்கும்!

இனி வருங்காலத்தில் வயசாகி தள்ளாமை வந்தா… முதியவர்களை அவர்கள் பெற்ற குழந்தைகள் கூட கவனிக்க மாட்டாங்க என்ற உண்மை சுடும்!

வயசான கடைசி காலத்தில் பாங்கு பேலன்ஸ் இருந்தா அது நம்மை நன்றாக கவனித்துக் கொள்ளும் என்ற உண்மை கூட கசக்கும்!

நான் போன வாரம் பொதிகை சீனியர் சிடிசன் ஹோமில் இருக்கும் நம்ம பாஸ்கரனை பார்க்க போயிருந்தேன்.

சொன்னா நீங்க நம்ப மாட்டீங்க… அவனுக்கு தனி கட்டில் மெத்தை டி.வியோடு ஒரு தனி ரூம். நேரத்திற்கு, நேரம் சாப்பாடு டிபன் எல்லாம் ரூமிற்கே வருது…… நான் போனவுடன் இண்டர்காமில் கூப்பிட்டு இரண்டு காப்பி கொண்டு வரச் சொன்னான். பத்து நிமிஷத்தில் காப்பி வந்து விட்டது.. வாரம் ஒரு முறை டாக்டர்கள் ரூமிற்கே வந்து ‘மெடிகல் செக்கப்’ செய்கிறார்களாம்! தினசரி, வார, மாத பத்திரிகைகள் ரூமிற்கே வந்து விடுகிறது.. அவனுக்குப் பிரியப் பட்டவர்களுடன் மட்டும் பேசுகிறான். அந்த ஹோம் ஊழியர்கள் அவனை மரியாதையுடன் நடத்துகிறார்கள்.

பாஸ்கரன் கூட தன் பையனை நல்லா படிக்க வச்சு அவனுக்கு ஒரு வேலை வாங்கி கொடுத்த கல்யாணமும் செய்து வச்சான்… அதே சமயம் அவன் சேமிப்பு, பிராவிட்ண்ட் பணம், கிராஷூவிட்டி பணத்தை எல்லாம் தன் பெயரில் வங்கியில் டிபாசிட் செய்து அதற்கு வரும் வட்டி பதினைந்தாயிரத்தையும் ஹோமிற்கு 5 ம் தேதியே கட்டி விடுவானாம். அந்த ஹோம் நிர்வாகிகள் அவனிடம் நன்றியோடு இருக்கிறார்கள். கேட்டதை செய்து தருகிறார்கள்.

பாஸ்கரன் தன் குடும்ப கடமைகளோடு, தன் எதிர்காலத்திற்கு ஒரு பாது காப்பு வேண்டும் என்று ஒரு தொகையை சேமித்து வைத்திருந்தான். பையன் கேட்டபோது என் காலத்திற்குப் பிறகு உனக்கு கிடைக்கும்படி வங்கியில் எழுதி கொடுத்திருக்கிறேன். வயசான காலத்தில் உங்களுக்கு சிரமம் கொடுக்கக் கூடாது என்று தான் இங்கு வந்து விட்டேன் என்று சொல்லி விட்டானாம். பையனும் மாதம் ஒருமுறை பலகாரம் கொண்டு வந்து பார்த்து விட்டுப் போகிறானாம்!…இனி வரும் தலை முறையாவது கால மாற்றத்தை ஏற்றுக் கொண்டு தான் தீர வேண்டும் என்பது தான், நான் தெரிந்து கொண்ட கசப்பான உண்மை! இல்லா விட்டால் நம்மைப் போல், பாசத்திற்கும் அன்பான நாலு வார்த்தைகளுக்கும் ஏங்கி ஏங்கியே சாக வேண்டியது தான்!…”

“ஆமா திருமலை!.. இனிமேல் நாம் ஒன்றும் செய்ய முடியாது! எல்லாவற்றையும் பொறுத்துக் கொண்டு, யார் எதைச் சொன்னாலும் …நம்ம குழந்தை தானே என்று பொருத்துக் கொண்டு அமைதியாக இந்த முதுமை பருவத்தை ஓட்டி விடுவதைத் தவிர வேறு வழியே இல்லை!..”

“சுந்தரம்!…ரொம்ப உணர்ச்சி வசப்பட்டால் நம்ம உடம்பும் சேர்ந்து நமக்கு கஷ்டத்தை கொடுக்க ஆரம்பித்து விடும்!..இந்த மாசம் நவராத்திரி வருகிறது எல்லோருடைய வீட்டிலும் கொலு வைப்பார்கள்.. நவராத்திரி கொண்டாட்டம் முடிந்ததும், உடைந்த பொம்மைகளை வெளியே தூக்கி எறிந்து விடுவார்கள். உடையாத பொம்மைகளை பரண் மேல் போட்டு வைப்பாங்க.. அடுத்த வருஷ உபயோகத்திற்காக! நாமும் கூட உடையாத பொம்மைகள் தான்!..ஏன் என்றால் நமக்குத்தான் பென்ஷன் வருதே!..” என்று சிரித்துக் கொண்டே சொன்னார் திருமலை!

அதன்பின் அந்த உடையாத பொம்மைகள் எல்லாம் எழுந்து மெதுவாக அந்த பந்தய சாலையில் நடை பழகின!

- காமதேனு 6-10-2019 

தொடர்புடைய சிறுகதைகள்
இடியோசை இன்ப சாகரன் அந்தக்கட்சியின் அங்கீகரிக்கப்பட்ட முதல் நிலைப் பேச்சாளர். கிளைக் கழகச் செயலாளர்களும், கட்சி நிர்வாகிகளும் அவர் ‘டேட்ஸ்’ வாங்க படாத பாடு படுவார்கள். காரணம் பிரியாணி கொடுத்து, காசு கொடுத்து, லாரி வாடகை கொடுத்து கூட்டத்திற்கு ஆட்கள் தேட வேண்டியதில்லை. ...
மேலும் கதையை படிக்க...
இரவு இரண்டு மணி.நல்ல தூக்கம். திடீரென்று “.......சத்தியமா எனக்குத் தெரியாதுங்க!....எனக்குத் தெரியாமலேயே அவங்க செய்திட்டாங்க!.....” என்று தூக்கத்தில் உளறிக் கொண்டே எழுந்து உட்கார்ந்தார் அருணாசலம்! மனைவி மணிமாலா எழுந்து லைட் போட்டு, கணவனின் அருகில் வந்து ஆறுதலாகக் கைகளைப் பிடித்துக் கொண்டாள். கொஞ்ச நாளாவே அருணாசலம் ...
மேலும் கதையை படிக்க...
உடல் ஆரோக்கியத்திற்கு நடைப் பயிற்சி அவசியம் என்று டாக்டர்கள் சொன்னாலும் சொன்னார்கள் அதிகாலை நேரத்தில் நகரத்தில் திரும்பிய பக்கமெல்லாம், ஆண், பெண் வித்தியாசம் இல்லாமல் நடைப் பயிற்சி தான்! ஐம்பது வயசானவர்கள் நடைப் பயிற்சி செய்வதில் ஒரு அர்த்தம் இருக்கிறது! ஆனால் எங்கள் காலனியில் ...
மேலும் கதையை படிக்க...
அந்த மாநிலத்தில் செல்வாக்குள்ள அந்தக் கட்சியின்தொண்டர் அணியின் மாநாடு மிகச் சிறப்பாகநடந்தகொண்டிருந்தது. கட்சித்தலைவர் தொண்டர்களின் எல்லா சந்தேகங்களுக்கும் விளக்கம் சொல்லிக் கொண்டிருந்தார். ஒரு தொண்டர் தயங்கிக் கொண்டே கேட்டார். “தலைவரே!...தப்பா நினைக்கக் கூடாது....எனக்கு நீண்ட நாளா ... ஒரு சந்தேகம்....இருக்கு..” “தைரியமா..கேளு...எந்த சந்தேகமாக இருந்தாலும் நான் தீர்த்து ...
மேலும் கதையை படிக்க...
அன்று அதிகாலை நான்கு மணிக்கே சமையறையில் லைட்டைப் போட்டுக் கொண்டு, பாத்திரங்களை உருட்டிக் கொண்டே பேசும் சத்தம் வீட்டில் யாரையும் தூங்க விட வில்லை! அந்த வீட்டின் மூன்று மருமகள்களும் தலைக்கு குளித்துக் கொண்டு, ஆளுக்கு ஒரு வேலையை இழுத்துப் போட்டுக் கொண்டு ...
மேலும் கதையை படிக்க...
“ஏண்டி!....இன்னைக்கு எத்தனை பேர் இன் பாக்ஸில் வந்தாங்க!...” “அதை ஏண்டி கேட்கிறே?....இன்னைக்கு மட்டும் இருபத்தி ஐந்து பேர்!......அடேயப்பா அவர்கள் விடற ஜொள்ளு மட்டும் செல் போனிலிருந்து கீழே கொட்டறதா இருந்தா… சென்னை மழை வெள்ளத்தை விட அதிகமாப் போய் விடும்!....” என்று சொல்லி ...
மேலும் கதையை படிக்க...
சரவணன் சீமான் வீட்டுப் பிள்ளை. சிறுவயசிலிருந்தே ஜாலியாக இருந்து பழகி விட்டான். அதே சமயம் படிப்பில் ஸ்கூல் பஸ்ட். அதனால் பெற்றோர் அவன் விஷயத்தில் அதிகமாக அலட்டிக் கொள்ளாமல் அவன் இஷ்டப்படி விட்டு விட்டார்கள்! பிளஸ் டூ முடித்தவுடன் அவன் விருப்படி சென்னை ...
மேலும் கதையை படிக்க...
“ சித்தப்பா!..வரவர உங்க போக்கே சரியில்லே!...நாங்க சொன்னக் கேட்டிட்டு பேசாம இருக்கனும்!.....உங்க இஷ்டத்திற்கு எதையும் செய்யக் கூடாது!...உங்களுக்கு எங்களை விட்டா யார் கொள்ளி போடுவாங்க?..” என்று அண்ணனின் மூத்த மகன் செல்வ மணி சத்தம் போட்டான். “ சித்தப்பா!...இந்த வயசிலே கோயில், குளம், ...
மேலும் கதையை படிக்க...
“ ஏய்!...சித்ரா!...உனக்கு எத்தனை தடவை சொல்லறது… ‘பாத் ரூம்’ லிருந்து குளிச்சிட்டு வரும் பொழுது ஹீட்டரை ஆப் செய்திட்டு வர வேண்டுமென்று?...”என்று சத்தம் போட்டாள் சித்ராவின் தாய் விமலா. “ அம்மா!..மறந்து போச்சு!..அதற்கு எதற்கு இப்படி கத்தறே?...” “ ஏண்டி ஹாலிருந்து எழுந்து வரும் ...
மேலும் கதையை படிக்க...
கட்டாயம் ஹெல்மெட் போட வேண்டும் என்று நீதிமன்ற உத்திரவு வந்து, அதை காவல் துறை தீவிரமாக அமுல் படுத்தத் தொடங்கியதில் நந்த குமாருக்கு ரொம்ப சந்தோஷம்! வீட்டில் எல்லோருக்கும் டூவீலர் இருக்கிறது! காலையில் அக்கா சித்ரா ஆபிஸுக்குப் போக ஸ்கூட்டியை எடுக்கும் பொழுது, ...
மேலும் கதையை படிக்க...
நெருக்கம்!
பயம்!
நடைப் பயிற்சி!
கலவரம்!
ஆன்மா சாந்தியடையுமா?
இன் பாக்ஸ்!
முறை!
கொள்ளி!
அந்தரங்கம்!
மகிமை!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)