Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

தோழனுமாகிய காதலி

 

“அவனெல்லாம் மனுசனா…… மிருகமா……. எட்டு வருசத்தில் எட்டு பிரசவம்…. நாலுப் புள்ளங்க நாலு அபாஷசன்கள்…. பொம்பள எப்படித் தாங்குவா?….. மனுசனா பொறந்தா கொஞ்சமாவது அறிவிருக்கவானா… அறுவை பண்ணிக்க… இல்ல லூப்பாவது போடுன்னு சொன்னேன்… கேட்க மாட்டிற… போய் உம் புருசன கூப்பிட்டு வா”
அரசு குடும்ப நல மருத்துவமனையின் பெண் டாக்டர் யாரையோ காட்டுக் கூச்சலாகத் திட்டி கொண்டிருந்தார்.

“டாக்டர்… அவரு வர மாட்டேங்கிறாரு… வேலை இருக்காம்” மெல்லிய சன்னமான பெண்ணின் குரல் தயக்கத்துடன் பதில் சொல்லிற்று

டாக்டரின் குரல் இன்னும் சூடாகி வெடித்தது.

“இன்னா நெனச்சிருக்காங்க… பொம்பளங்க இன்னா ஆம்பிளங்களுக்கு சுகம் தரும் மிஷினா-… அட் லீஸ்ட் நீரோத்தாவது பயன்படுத்துங்கன்னு கிளிப் பிள்ளைக்கு சொல்ற மாதிரி சொல்லி அனுப்பினேனே…..”

“அவருக்கு நிரேத் போடுரது பிடிக்க மாட்டேங்குது. டாக்டர்….என்ன கெஞ்சினாலும் கேட்க மாட்டுராரு”
துயரமும், இயலாமையும் ஆழமாய் தோய்ந்து அந்த பெண்ணின் குரலில் ஒலிந்தது. அது அந்த பெண்ணின் குரல் மட்டும் அல்ல என்பது தனது பல ஆண்டுகள் தொழில் அனுபவத்திலும், தனிப்பட்ட சொந்த அனுபவத்திலும் இதை அந்த பெண் டாக்டர் நன்றாகவே உணர்ந்து இருந்தார். வேறு வழியின்றி அந்த பெண் டாக்டர் சுருதி கொஞ்சம் தேய்ந்து ஒலித்தது.

“அய்ந்து மாத கைக்குழந்தை வைச்சிருக்கம்மா… ஆண் வாரிசு வேணும்ன்னு வரிசையா நாலு குழந்தைங்கல பெத்திட்டம்மா… இடை இடையே நாலு அபாஷசனும் நடந்திருச்சு… உடம்பில் ஒன்னுமில்லை. இப்ப உன் உடம்பு இருக்கிற நிலையில் இன்னொரு கருகலைப்பு ஆப்ரேசன் பண்ணவோ, புள்ளைய பொத்துக்கிறதோ முடியாதும்மா… இந்தா இந்த மாத்திரைகளையாவது ஒழுங்கா வேலா வேளைக்கு சாப்பிடு….” என்று டாக்டர் அலுத்துக் கொண்டு சொன்னார்.

டாக்டர் அறையில் நுழைவாயிலில் இருந்த மனோன்மணிக்கு டாக்டரின் கோபத்தின் ஆழம் நன்றாகப் புரிந்து இருந்தது. அடுத்தாக டாக்டரை சந்தித்தால் தன்னிடமும் இவ்வாறு எரிந்து விழுவாரா என்று தயங்கி தயங்கிக் கொண்டிருந்தாள்.

அவள் பின்னால் அமர்ந்திருந்த பெண்ணின் கைக்குழந்தை வீல் என்று அலறி அழுதது. அந்த குழந்தையால் நோயின் வாதை தாங்க முடியவில்லை போலும். குழந்தைகள் தங்களால் இயன்ற அளவிற்கு நோயினை தாங்கி விளையாடி கொண்டும், சிரித்துக் கொண்டும் இருக்கும். முடியாத பொழுது மட்டுமே இப்படி வீறிட்டு அழும் ஆர்ப்பாட்டம் செய்யும் என்று மனோன் மணிக்கு அனுபவத்தில் தெரிந்து இருந்தது. அந்த கைக்குழந்தையின் தாய் கண்களால் கெஞ்சினாள். அவளை டாக்டரிடம் முதலில் போகச் சொல்லி விட்டு மனோ அடுத்த முறைக்காக காத்திருந்தாள்.

இயல்பாவே டாக்டர் மனோவை விசாரித்தார். அந்த பெண்ணிடம் காண்பித்த எரிச்சலை அவர் இவளிடம் காண்பிக்கவில்லை. ஏற்கனவே அந்த டாக்டர் மனோவிற்கு அறிமுகம் இருந்தது. ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு மனோமணியும், உதயகுமாரும் இந்த டாக்டரிடம் ஆலோசனைக்காக வந்திருந்தனர்.

“மனோவின் பெற்றோர் எதிர்ப்பை மீறி எங்க காதல் திருமணம் நடந்துள்ளது. எங்களுக்கு இடையே ஒருத்தருக்கு ஒருத்தர் புரிதல் வளரனும்…. எங்கள் இருவரில் யாருக்காவது நிரந்தர வேலை கிடைக்கனும்… அதுவரையில் குழந்தை பிறக்கிறத தள்ளி போடனும். அதற்குதான் உங்களிடம் வந்திருக்ககோம்” என்று உதயகுமார் அன்றைய சந்திப்பில் கூறியதை டாக்டர் ஆச்சரியத்துடன் பார்த்தார்.

கல்யாணம் நடந்த அடுத்த பத்தாவது மாதத்தில் குழந்தை பெற்றால் தான் ஆண்மை என்று நினைக்கும் ஆண்கள் உலகத்தில் உதயகுமார் சற்று வித்தியாசமானவராக அந்த டாக்டருக்கு தெரிந்தார். இயற்கையான வழிகளிலும், செயற்கையான முறைகளிலும் குடும்பம் கட்டுபாடுகள் பற்றிய பல செய்திகளை அப்பொழுது டாக்டர் அவர்களிடம் பகிர்ந்து கொண்டார்.

அதன் பிறகு பல நேரங்கள் மனோன்மணி அந்த டாக்டரிடம் சென்றுள்ளார். அவளின் பிரவசத்தை அவர்தான் கவனித்தார். மனோவிற்கு நல்ல படியாக சுகப்பிரவசம் நடந்ததில் அந்த டாக்டரின் பங்கு முக்கியமானது.

தற்பொழுது வேறு பிரச்சனையில் டாக்டர் ஆலோசனைக்காக வந்து இருந்தார்.

ஆறு ஏழு மாத கைக்குழந்தை இருக்கையில் கர்ப்பம் தரிப்பதற்கு வாய்ப்பு இருக்கின்றதா என்பதை அறியவே மனோ டாக்டரிடம் வந்து இருந்தாள். அதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும், ப்ரியட் ரேகுலராய் ஆகாத பொதும் சில சமயங்களில் கர்ப்பமாக வாய்ப்புள்ளதாக அந்த பெண் டாக்டரும் கூறினார். அப்படி கர்ப்பமாவதும், குழந்தை பெறுவதும் குழந்தைக்கும் தாய்க்கும் நல்லது அல்ல. இருவரின் உடலும் மனமும் பாதிக்கும் என்றார் டாக்டர்.

“ஒரு குழந்தைக்கும் மற்றொரு குழந்தைக்கும் இடையே குறைந்தது இரண்டு ஆண்டுகளாவது இடைவெளி இருப்பது அவசியம்” என்று வானொலி விளம்பரம் போல் சொல்லி விட்டு அவர் சிரித்தார்.
பின்பு அவள் கணவர் உதயகுமாரை பற்றி டாக்டர் விசாரித்தார். அவர் மனோன்மணியிடம் விரிவாக பேசிக் கொண்டிருந்தார். இதற்கு முன்னர் தான் சத்தம் போட்டு திட்டிய பெண்களின் நிலைமையை ஆதங்கத்துடன் வெளிப்படுத்தினார்.

மனோவிடம் கர்ப்பத்திற்கான பரிசோதனை செய்யும் படி சீட்டு எழுதி தந்தார்.

மறுநாள் பரிசோதனையில் முடிவு கர்ப்பத்தை உறுதி செய்து விட்டிருந்ததை விளக்கினார். மேலும்,
“கருகலைப்பு நா செய்யரது இல்லம்மா.. நா அந்த பாவத்தை செய்வதில்லை.. எனக்கு தெரிந்த டாக்டரிடருக்கு சீட்டு தருகிறேன்” என்றார். கருகலைப்பதற்கு சில மாத்திரைகளையும் எழுதி தந்தார்.

ஆனால், அவைகள் எந்த பயனும் அளிக்கவில்லை. கருகலைப்பு ஸ்பெஷஸ்டிடம் மனோ சென்றாள்.
இயற்கையின் தேர்வுகள் சில சமயங்களில் பாராபட்சமாகயும் ஆச்சியமானதாகவும் உள்ளது. மனித இனத்தின் மறுஉற்பத்தியில் ஆண் பெண் பாலர் இருவருக்கும் சம பங்கு என்பது இல்லை. பெண்களுக்குதான் கூடுதல் சுமையும் பொறுப்பும் வலியும் அதிகமாகும். எந்த பெண்ணிற்கும் பிரசவமும், கருகலைப்பும் உயிர் போய் உயிர் பிழைக்கின்ற துன்பியல் நிகழ்வுதான்.

பிரசவத்தின் விளைவான தாய்மையின் உள்ளக் கிளர்ச்சியும், மறு உற்பத்தியில் தங்களது பிரதியைப் போன்ற புதிய உயிரினை படைக்கிற ஆற்றலும், அதிசயமும் அத்துன்பத்தினை, வலியினை மறக்கடிக்கின்றன! கருக்கலைப்பு பெண்ணின் உயிரினுள் மெல்ல மெல்ல முகிழ்ந்து பல நாட்களாய் உருக் கொண்ட உயிரை ஒரு நாளில் சிறிது சிறிதாக சிதைத்து எடுப்பது என்பது அவளின் மன அழுத்தத்தை, வலியை உச்சத்திற்கு கொண்டு செல்கின்றது. மனோமணியை உச்சம் தலை மயிர்கால்களிலிருந்து உள்ளங்கால் ரேகைகள் வரை உயிர்வதையின் வலி மின்னலாய் கிழித்தெரிந்தது. அவள் முழுவதுமாய் துவண்டு நிலைகுலைந்து போனாள்.

ஆப்ரேசன் முடிந்து ஒருமணி நேரம் கழிந்து நர்ஸ் மெதுவாக மனோவைத் தாங்கலாய் அழைந்து வந்தாள். உதயகுமர் அவளைத் தாங்கி பிடிக்க வந்தார். அப்பொழுது அவள் பார்த்த பார்வை எரித்து விடுவதாக இருந்தது. நீயும் நானும் சேர்ந்து செய்த செயலுக்கு தான் மட்டும் கொடும் வலியை அனுபவிப்பதாக அவளின் பார்வை குற்றம் சாட்டியது. குமட்டி, குமட்டி காறி துப்பினாள். அது இயல்பானதா அல்லது தன்னை நோக்கியா என்று அவரால் முடிவு செய்ய முடியவில்லை. அவரும் வாடி வதங்கி பேனானர்.

கைத்தாங்கலாக ஆட்டோவில் அமர வைத்தார் ஒருகளித்து வாந்தி எடுத்தாள். உதயகுமாரின் சட்டை முழுவதும் வாந்தியானது. சட்டையை கழட்டி ஒரு ஒரமாக மடக்கி வைத்தார். கடையில் சோடாவை வாங்கி மெதுவாக அவளுக்கு குடிக்க கொடுத்தார்.

“சாரி…இனிமேல்……தொடவே வேண்டாம்” என்று கையைத் தொட்டார்.

“சீ ஆம்பளவர்க்கமே இப்படிதான்”

அவனின் கையைத் தட்டி விட்டாள். அவளின் உடலின் உயிரினவாதை அந்த அளவிற்கு இருந்தது.

“சாரி……சாரி…மன்னிச்சிடு…. மன்னிச்சிடு”

இந்த சொற்களை எத்தனை தடவை பரிதாபமாய், கெஞ்சலாய் எவ்வாறு எல்லாம் சொல்லி இருப்பார் என்பது உதயகுமாருக்கு தெரியாது. வலியில் அவள் அரற்றி கொண்டு இருந்தாள்.

அடுத்த இரு வாரங்கள் வேலைக்கு விடுமுறை எடுத்து கூடவே இருந்து அவளையும், குழந்தையும் கவனித்து பாராமரித்தார். அவளுக்கு விரைவில் உடல் நலம் தேறினாள். வலியின் நினைவுகள் படிபடியாய் கரைந்து போனது. அவளின் மனக்காயமும், அவரின் மனக்காயமும் ஆறமால் கிடந்தன. நாட்களும், வாரங்களும் கடந்தும் அது மறையவில்லை;

இருவரும் இணைந்து செய்த செயலுக்கு ஒருவரை பொறுப்பாக்கும் இயற்கையின் தேர்வை தான் குறையாக்க வேண்டியிருக்குமே தவிர உதயகுமாரை எப்படி பொறுப்பாக முடியும் என்று அவள் நினைத்தாலும், அந்த கருகலைப்பின் பொழுது இரத்தக் கவுச்சி வாடை அவளை விட்டு அகல மறுத்தது. அடிக்கடி தனிமையில் இருக்கையில் உதயகுமாரை சந்தித்து முதல் நிகழ்ந்த நினைவுகளை அசைப் போட்டாள். காதலித்து மகிழ்ந்த நாட்கள் நெஞ்சில் நிழலாடின! இப்பொழுது நடந்தது போல் அவைகள் உள்ளது.

சிலரை சிலருக்கு பார்த்த மாத்திரம் பிடித்து போய் விடுகிறது. இதற்கும் இயற்கையின் தேர்வு காரணமாக உள்ளது. இன்னும் சொல்லப் போனால் இருவருக்கும் இடையில் கெமிஸ்டிரி இணைக்கின்றது எனலாம். பள்ளி, கல்லூரி, அலுவலகம் நட்புகளிலிருந்து காதல் வரைக்கும் இந்த கெமிஸ்டிரி இயங்குகிறது.

முதல் பார்வையிலேயே அவளுக்கு அவரிடம் ஈர்ப்பு ஏற்பட்டது. கல்லூரி விடுதி வாழ்க்கை மனோன்மணிக்கு பல தோழிகளை அறிமுகப்படுத்தி இருந்தது. தோழிகளின் மூலமாக சமூகம் பற்றிய சிந்தனைக்கான இலக்கியமும், நட்பு வட்டமும் அவளுக்கு அறிமுகமாயின. அந்த வட்டத்தில் உதயகுமாரும் இருந்தார். கல்லூரியில் நடந்த போராட்டங்களில், சமூக பிரச்சனைகளில் அவரின் ஆர்வமும் மனோ அவர்பால் நெருங்க காரணங்களாய் அமைந்தன. நட்பாக, தோழமையாகவே முதலில் அந்த உறவு இருந்தது. கல்லூரி இறுதியில் இந்த உறவு அந்த எல்லையுடன் இல்லை என்பதை அவள் புரிந்து கொண்டாள்.

அவள் கண்ணில் தெரிந்த காதலை, அவள் பார்வையில் பொதிந்திருந்த காதலை அவர்கள் இருவரும் உணர்ந்து இருந்தாலும் வெளிப்படுத்தாமல் பிரிந்துனர்.

அவள் வீட்டில் எப்படியும் அவளின் திருமணத்தை முடிக்கும் போக்கில் மாப்பிள்ளை பார்க்கும் படலத்தை தொடங்கினர். கல்யாண சந்தையில் தானொரு பொம்மைதான் என்பதை உணர்ந்த பொழுதில் மனோன்மணிக்கு எழுந்த சங்கடங்கள் சொல்லி மாளாது!

இதிலிருந்து தப்பிக்க முதுகலைப் பட்டப்படிப்பில் அவள் சேர்ந்தாள். உதயகுமாரும் அந்த நகரில் உள்ள கல்லூரியில் படித்தார். போராட்டங்களில், பொது கூட்டங்களில் சந்திப்புகள் தொடர்ந்தன. அவரிடம் தனது காதலை உறுதிபடுத்திக் கொள்ள அவள் முனைந்தாள். அவன் முதலில் பிடிகொடுக்கவில்லை.

மிகுந்த தயக்கத்திற்கும் பிறகே அவளின் காதலானகினான். பிற்பட்ட சாதியை சேர்ந்த அவளின் பெற்றோர் தாழ்த்தப்பட்ட சாதியை சேர்ந்த அவனுக்கு மணமுடிக்க சம்மதிக்க மாட்டார்கள் என்பது அவன் தயக்கத்தின் அடிப்படை! தனிப்பட்ட தனது காதல் உணர்வுக்காக நல்ல நண்பனை, தோழனை சிக்கலுக்குள் இழுத்து விடக் கூடாது என்பதாக உதயகுமாரின் சிந்தனை இருந்தது. ஆனாலும் கூட காதல் தான் வென்றது.

சமூக சிந்தனையும், அதில் ஊற்றி நின்ற தோழனும் அவளின் வாழ்க்கைப் பயணத்தில் அவசியமாகி இருந்தது. அந்த காதலில் திளைத்து ஊற்றி நின்றாள்.

பெற்றோரிடம் சாடைமாடையாக பக்கத்து இலைக்குப் பாயசம் கேட்கும் பாவனையில் தனது காதலை விளக்கி சம்மதிக்க வைக்க முடியுமா என்று பார்த்தாள். அப்பாவின் கருத்தை சொந்த சாதிக்குள் காதலித்தாள் பரவாயில்லை என்கின்ற அளவிற்குதான் அவளால் நகர்த்தி தள்ளிக் கொண்டு போக முடிந்தது. வேறு வழியின்றி அவள் அவனுடன் ஒடி போய் விட்டாள்.

காதலர்கள் இணையர்களாக பேராசிரியர் தலைமையில் தோழர்கள் முன்னிலையில் இணைந்தனர். அவளின் தந்தை ஆள் அம்புகளுடன் படை எடுத்து வந்தார். சாதி கோத்திரத்தின் ஒரு கிளை முறிவதை சாதிக்காரர்கள் தடுக்க விரும்பினர். மனோன்மணியின் உறுதி அவளின் தந்தையை, சாதிகாரர்களை நிலைகுலைய வைத்தது. நடுத்தெரு புழுதியில் ஒப்பாரி அவர் . அவ்வளவு பெரிய பாரிய உடம்பு மண்ணில் கிடந்தது பரிதாபமாக இருந்தது. ஒருகணம் தனது விடுலாமா என்று கலக்கத்துடன் சிந்தித்தார். அவள் அவனை எரித்து விடுவது போல் பார்த்தாள். இறுதியில் காதலின் கடைக் கண்ணில் தெரிந்த காதல் தான் வென்றது.

காதலில் மட்டுமல்ல வாழ்க்கையிலும் அவர் வெற்றி கொண்டார்கள். அந்த வெற்றியின் அடையாளமாக சில ஆண்டுகளில் அவள் பெற்றோர்களிடம் உறவை புதுப்பிக்க அவர்களால் முடிந்தது. உதயகுமாரின் அணுகுமுறை இதில் முக்கியமாக இருந்தது.

காதலின் பரிசாக ஐந்தாம் ஆண்டில் மகள் பிறந்தாள். இந்த மகிழ்ச்சியில் அவர்கள் நெருக்கம் இன்னும் அதிகமாகியது. அது இயல்பானதாக இருப்பினும் அதில் ஏற்பட்ட வலிகள் அவர்களிடம் தற்போது மனக்கசப்புகளை விதைத்திருந்தன. சிறியதொரு விரிசலையும் ஏற்படுத்தி இருந்தது.

இந்த மனக்கசப்பை எப்படி முடிவுக்கு கொண்டுவருவது என்று அவள் சிந்தித்து கொண்டிருந்தாள். அப்பொழுது டாக்டர் தோழரிடம் இருந்து அலைபேசி அழைத்தது.

“உங்க வீட்டுக்காரர் எனது ஆஸ்பத்திரியில் சேர்ந்து உள்ளார்” என்று கூறி விட்டு வைத்து விட்டார்.

மனோன்மணி பயந்து போனாள். குழந்தையை தூக்கிக்கொண்டு ஆட்டோவில் ஏறி “என்னமோ… ஏதோ…” என்று பதறி அடித்து சென்றாள்.

“வாங்க வாங்க எப்படி இருக்கீங்க….நலமா?” என்று சிரிப்புடன் டாக்டர் விருந்துக்கு அழைப்பது போன்று அவளை வரவேற்றார்.

அந்த டாக்டர் ரொம்ப கிண்டல் பேர்வழி என்று அவளுக்கு தெரியும். அவளுக்கு எரிச்சல் பற்றிக்கொண்டு வந்தது. கொஞ்ச நேரத்தில் பதற்றத்தை ஏறிபடுத்தினாரே என்று கோபப்பட்டாள்.

“இன்னா….தோழர் விளையாடுரீங்களா!….” என்று கடுகடுவுடன் கேட்டாள்.

“நா ஏம்மா விளையாரேன்… உங்க தோழர்தான் ரொம்ப விளையாடிட்டோன்று நினைச்சு கிட்டு வாரிச்சு இல்லாத இருக்க அறுவை பண்ணிக்ட்டாரு”.

“இவரெல்லாம் எப்படிம்மா புரட்சி பண்ணுவாரு வாக்கிடாமி என்பது மைனர் ஆப்ரேசன்தான்.. மயக்க மருந்து கொடுக்கல்லண்ணா என்ன… வலிய வலின்னு கத்தராரு…இவரு போலிஸ் சித்ரவதைய எப்படி தான் தாங்குவாரோ….எப்படிதான் புரட்சி நடக்கப் போதோ..” என்று அரை மயக்கத்தில் தான் அறுவை செய்த பொழுது உதயகுமார் வலியில் துடித்ததை நக்கல் பண்ணிச் சொல்லிக் கொண்டு சென்றார்.
அவரின் கிண்டலை ரசிக்கும் நிலையில் அவள் இல்லை. கதவை தள்ளி கொண்டு அந்த சிறிய அறைக்குள் நுழைந்தாள். உதயகுமார் புன்னகையுடன் வரவேற்றார். அந்த வலிக்கு இந்த வலி சரியாக போச்சு என்பதாக அவர் பார்வை அர்த்தம் சொல்லிற்று.

இந்த ஆறு லூசா என்ன என்று அவளுக்கு தோன்றியது.

“நமக்கு ஒரு குழந்தையே போதும்….. அதற்கு துணைக்கு வேண்டுமானால் போரில்…. சுனாமியில்… அனாதையாக்கப்பட்ட குழந்தைகளில் ஒன்றை தத்து எடுத்துக்கலாம் என்ன?”என்றார்.

அவர் அருகில் அவள் அமர்ந்தாள், அவள் கையை எடுத்து தனது கைக்குள் உதயகுமார் வைத்து மெல்ல இறுக்கமாய் பரிவுடன் பற்றினார்.

“சக தோழனான உனது வலியை, கண்ணீரை புரிந்த கொள்ளவில்லையானால் நா மனுசனே இல்ல…. இன்னும் ஒரு மணியில் வீட்டிற்குப் போய்விடலாம்” என்று அவர் சொன்ன பொழுது வெளிப்பட்ட அன்பில் அவள் நெழிந்து போனாள்.

காதலனாகிய தோழனை இறுக அணைத்து முத்தமிட்டாள். அவன் காதலாகி கசிந்து உருகையில் மெய் மறந்து உச்சிக்கும் அந்த ரோசா லக்சம்பர்க்கின் இரு மந்திரச் சொற்களை அவள் மெல்ல அவன் காதில் முணுமுணுத்தாள்.

“காம்ரேட் ……லவ்வர்…”

அந்த நெருக்கம் தந்த வலியில் அவனும் சிணுங்கினான்.

“அன்பு.. தோழா….. ஆசை…காதலியே..” 

தொடர்புடைய சிறுகதைகள்
அவர்களை எதிர்பார்த்து இருந்தேன். அந்த நல்ல நாள் இவ்வளவு சீக்கிரம் வரும் என்று நினைக்கவில்லை. வெள்ளிக்கிழமையன்று எனது வீட்டின் கதவைக் கியூ போலீசார் தட்டினர். ஐயா கூப்பிடுகிறார் என்று ’அன்புடன்’ வெள்ளை வேனில் அள்ளிப்போட்டுப் பறந்தனர். நாளும் அதிகரிக்கும் விலையேற்றம், நெருக்கடிகளில் இருந்து ...
மேலும் கதையை படிக்க...
கத்திரி வெயில் மண்டடையைப் பிளந்து கொண்டிருந்தது. அனல் வீசுவதைத் தாங்க முடியாமல் பல வகையான நவீன வசதிகள் இருந்தும் மனிதர்களே முடங்கி கிடைக்கையில், பாவம்……. தெருநாயால் என்ன செய்ய இயலும்? வேலிகாத்தான் புதர்கள் மட்டும் ஆங்காங்கே பசுமையாய் காட்சி அளித்தது. அப்படியான ...
மேலும் கதையை படிக்க...
தூக்கம் அறுபட்டு முழிப்பு தட்டியது. அனிச்சையாகவே அரிசி கழுவின நீர், சோறு வடித்த கஞ்சி தண்ணீர், மீதியான சாதமென அனைத்தும் கலந்து புளித்து கிடந்த கழுநீரைக் குடத்துடன் எடுத்து வந்து கண்ணுசாமி மாட்டுத் தொட்டியில் ஊற்றினார். பொதபொதன்னு ஊறிப் போயிருந்த புண்ணாக்கை ...
மேலும் கதையை படிக்க...
நீண்ட பெரிய ஆயிரம் கால்களுடைய பூரான் அவன் பாதத்தில் நுழைந்து முழங்கால், தொடை, வயிறு, மார்பு வழியாக கடகட.. டக்டக்வென ஊர்ந்து சென்று மூளையைப் பிராண்டியது. திடுமென்று பாண்டி விழித்து கொண்டான் கடிகாரத்தைப் பார்த்தான். நள்ளிரவு பன்னிரெட்டை முட்கள் காட்டின. அதிகாலை ...
மேலும் கதையை படிக்க...
விசில் சத்தம் கேட்ட மறுவினாடி பல்லவன் ஒட்டுநர் வேகமாக பேருந்தை ஒட்டினார். வண்டியை நிறுத்துமாறு கையை கையை ஆட்டிக் கொண்டு எதிரில் வேகமாக ஒருவர் ஒடி வந்தார். பேருத்தை நிறுத்துவதில்லை என்ற முடிவுடன் ஒட்டுனர் ஒட்டும் பொழுது ஒருகணம் நிதானித்தார். ஊனமாகி சூம்பி ...
மேலும் கதையை படிக்க...
கீற்று
கொடிதினும் கொடியது
மனைப் பாம்பு
தத்தனேரி சுடுகாடு
ஊனம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)