சினமிகுந்தால் அறம் கெடும்

 

கடல் அலைகள் ஆர்ப்பரித்து ஓடி வந்து அனிஷ் கால்களை தழுவிச் செல்ல, அதை ரசிக்காமல் அவன் சிந்தனை வேறு எங்கோ சுழன்றுக் கொண்டிருந்தது. கடற்கரையில் நடக்கும் எதுவும் அவன் காதுகளில் கேட்கவில்லை. அவன் நண்பன் அழைப்பது மட்டும் அவன் காதில் கேட்டுவிடுமா என்ன?

“என் காதலில் உண்மையில்லையா? நான் எங்கு தவறு செய்தேன்?, நான் பலமுறை யோசித்தாலும், என் மீது எந்த தவறும் இருப்பது போல் தெரியவில்லையே, பிறகு ஏன் என்னை நிராகரித்தாள்?, நான் என்ன வேண்டுமானளவு, சாப்பிட்டு விட்டு தூக்கியெறியும் மாங்கொட்டையா? என்னை பைத்தியக்காரனாக புலம்ப வைத்துவிட்டு அவள் மட்டும் நிம்மதியாக இருப்பாளா? விடமாட்டேன் இருக்க” என்று அவன் தானாக பேசிக் கொண்டிருந்தான்.

பலமுறை அழைத்தும் அவன் திரும்பி பார்க்காததால், அனிஷின் அருகில் அமர்ந்த முத்து அவன் தோளை குலுக்கி, “என்ன அனிஷ் யாரை விடமாட்டேன் என்று சொல்ற”

“வா முத்து நீ எப்போ வந்தே?, நீ எப்பொழுதும் வேலை நேரம் முடிந்ததும் வீட்டுக்கு கிளம்பி விடுவாய், இன்னைக்கு கடற்கரைக்கு வந்திருக்கே”

“காலையிலிருந்து உன்னைப் பார்த்துக் கொண்டுதான் இருக்கேன் அனிஷ், உன் முகம் சரியில்லை, உன் கவனம் வேலையில் இல்லை, நீ எதையோ நினைத்து யோசித்துக் கொண்டே இருக்க”

“ஒன்றுமில்லை முத்து கொஞ்சம் உடம்பு சரியில்லை, அதனால் வேலையில் கவனம் செலுத்த முடியவில்லை”

“நீ இன்று செய்த வேலை அனைத்தும் தவறு, உனக்கு உடம்பு சரியில்லையா? மனது சரியில்லையா? என்ன ஆச்சு அனிஷ், இன்றைக்கு ஷகஜூ வரவில்லையா”

“அவள் இனிமேல் வரவே மாட்டாள் முத்து, என்னை ஒரேடியாக வேண்டாமென்று போய்விட்டாள், நான் அவளை விட்டுவிடுவேனா விடமாட்டேன்”

“வேண்டாமென்று போனவளை நீ என்ன பண்ண போற, அதையே நினைப்பதால் என்ன ஆகப் போகிறது சொல்லு”

“அப்போ இத்தனை நாள் என்னை காதலிக்கிறேன்னு சொல்லி, என்னை ஏமாற்றிவிட்டு போனவளை சும்மா விடச் சொல்றியா?”

“அவள் ஏமாற்றினாள் என்பதைவிட நீதான் ஏமாந்திருக்கே, அவளுடைய காதல் உண்மையா என்று தெரியாமல், அதை காதல் என்று நினைத்து ஏமாந்தது நீதான்”

“என்ன சொல்ற முத்து நான் ஏமாந்தேனா? அப்போ அவள் என்னிடம் உருகி உருகி பேசியது, இதையெல்லாம் பார்த்து நாந்தான் ஏமாந்து போனேனா”

“அனிஷ் இப்போ அதைவிடு, உங்க இருவருக்குள்ளும் என்ன பிரச்சினை”

அனிஷ் அன்று நடந்த நினைவுக்குச் சென்றான், ஷகஜூ, “அனிஷ் இந்த ஞாயிற்றுக் கிழமை நாம ஏதாவது ரிசார்ட் போகலாம்”

“இப்ப அங்கெல்லாம் எதுக்குமா, அதுவும் ஞாயிற்றுக் கிழமைன்னா வாய்ப்பே இல்லை, அன்று ஒரு நாள்தான் வீட்டில் எல்லோருடனும் இருப்பது”

“என்ன அனிஷ் ஒரு நாள்தானே இந்த வாரம் மட்டும் வாங்க”

“உனக்கு நன்றாகவே தெரியும், ஞாயிறு மட்டும் வீட்டில்தான் வெளியில் சென்றாலும் குடும்பத்துடன்தான் செல்வேன்னு”

“தெரியும் அனிஷ் ஒரே ஒருமுறை, நாம ரிசார்ட் போய்ட்டு வரலாம், அப்புறம் உங்களை கூப்பிடவே மாட்டேன்”

“சரி அப்படின்னாலும் ரிசார்ட் வேணாம், வேறு எங்காவது போலாம்”

“ஏன் அனிஷ் வேறு எங்கு போனாலும், நமக்கு தனிமை கிடைக்காது, ரிசார்ட்ல நாம தனியா ஜாலியா இருக்கலாம்”

“ஷகஜூ இன்னும் நமக்கு கல்யாணம் ஆகவில்லை, அதுக்கு முன்னாடி நாம் இப்படி கடற்கரையில், சந்திப்பதோடு நிறுத்திக் கொள்வோம், அதுதான் நமக்கு நல்லது புரிஞ்சிக்கோ”

“என் மேல் எனக்கு நம்பிக்கை இருக்கு, உன் மேல உனக்கு நம்பிக்கை இல்லையா அனிஷ்”

“யார் மேல யாருக்கு நம்பிக்கை இருக்குன்றது முக்கியமில்லை, தேவையில்லாத பிரச்சினைகளுக்கு, நாம் இடம் கொடுக்க வேண்டாம்ன்னு நினைக்கிறேன் ஷகஜூ”

“அப்படி என்ன பிரச்சனை வரப் போகுது, நீ எதுக்கு தேவையில்லாம பயப்படறே”

“நீ தெரிந்தும் தெரியாத மாதிரி பேசறீயா ஷகஜூ, கல்யாணத்துக்கு முன்னாடி நாம் அங்கெல்லாம் போனால், பார்ப்பவர்கள் நம்மைதான் தவறாக நினைப்பாங்க, உனக்கு இது தெரியாதா”

“மற்றவர்களுக்காக நாம் வாழக் கூடாது, நமக்காக மட்டும்தான் வாழனும் அனிஷ்”

“நல்ல பேச்சுதான், ஆனால் அது எல்லா இடத்துக்கும் நேரத்துக்கும் சரியாகாதும்மா, அதுவும் ரிசார்ட் போகனும்ன்னா, செலவை யோசித்துப் பார்த்தியா, நான் குடும்பத்திற்காக நிறைய செய்ய வேண்டியிருக்கு, அதுவரை இந்த மாதிரி தேவையில்லாத செலவு நமக்கு வேண்டாமே”

“ஓ! அப்போ செலவு பண்ண யோசித்துதான், அப்படிப் பேசினாயா? அதை நேரடியாவே சொல்லியிருக்கலாமே, அதுக்கு ஏன் நல்லவன் மாதிரி வேஷம் போடனும்”

“நீ என்ன பேசற, நான் இரண்டுக்கும் சேர்த்துதான் சொல்கிறேன், எனக்கு தங்கையின் படிப்புச் செலவு, அவளுக்கும் நமக்கும் திருமணம் செய்யும் செலவு, நமக்குன்னு குடும்பம்ன்னு ஆகிவிட்டால், அதுக்கு இப்பவே சேர்த்து வைத்தால்தான் முடியும்”

“என்ன அனிஷ் இப்பவே செலவு பண்ண, இவ்வளவு கணக்கு பார்க்கிறே, கல்யாணம் முடிந்தால் கணவன்ற உரிமையில், எல்லாத்துக்கும் கணக்கு பார்ப்பே, என்னால் அப்படி ஒரு வாழ்க்கை வாழ முடியாது அனிஷ்”

“அப்ப அப்ப செலவு செய்துவிட்டால், எதிர்காலத்துக்குன்னு ஒன்றும் வேண்டாமா, ஒரு அவசர தேவைக்கு கூட, நாம இன்னொருத்தரை எதிர்பார்க்க சொல்றியா, நான் நடுத்தர வர்க்க குடும்பம்தான் அதற்கேற்றாற் போல்தான் என்னால் செலவு செய்ய முடியும்”

“இதுதான் உன் முடிவா அனிஷ், என்னால் அப்படி இருக்க முடியாது, ஆசைப்பட்டதை அனுபவித்துவிடனும், பின்னாடி வருவதை அப்புறம் பார்த்துக் கொள்ளலாம், ஆனால் நீ எதிர்காலத்தை நினைத்து இப்பவே, சாதாரண சந்தோஷத்தைக் கூட அனுபவிக்க முடியாது என்கிறே, அப்படி என்னால் இருக்க முடியாது அனிஷ்”

“அதனால் என்ன சொல்ல வர ஷகஜூ, இப்ப ரிசார்ட்டுக்கு போய்தான் ஆகனும்ன்னு சொல்றியா”

“இல்லை உன்னோட வாழ்க்கை என்பதை, என்னால் நினைத்துப் பார்க்கவே முடியவில்லை, இரண்டு பேரும் வேறு வேறு கருத்துக்களால், ஒன்றாகா வாழ்க்கை வாழ முடியாது அனிஷ்”

“அப்போ உனக்கு பணம் மட்டும்தான் முக்கியமா?, காதல் குடும்பம் இதெல்லாம் முக்கியமில்லையா”

“அதெல்லாம் முக்கியம்தான் அதுக்காக, நம்முடைய ஆசைகளுக்கு தடை போட்டுக் கொள்ளக் கூடாது அனிஷ்”

“நான் உன்னுடைய ஆசைகளுக்கு தடை போடச் சொல்லலியே, இப்போ தேவையில்லை கல்யாணம் முடியட்டும், நீயும் என்னுடன் சேர்ந்து குடும்பத்தை தாங்குவாய், அப்போது நம் ஆசைக்கு யாரும் தடை போட முடியாதும்மா”

“ஓ! நான் சம்பாதிப்பதை வைத்துதான் எனக்கு செலவு செய்வாய், உன் சம்பாத்தியத்தில் எதுவும் செலவு செய்யமாட்டாய் அப்படித்தானே”

“ஏய் நான் அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை, நாம் எல்லாம் ஒரே குடும்பமான பிறகு………”

“உன் குடும்பத்தை நீ தாங்கலாம், நான் தாங்க வேண்டிய அவசியம் என்ன இருக்கு”

“என்னம்மா என்னை கல்யாணம் செய்தால், என் குடும்பத்தை, உன் கும்பமாக நினைக்க மாட்டியா?”

“நமக்குன்னு கல்யாணம் ஆன பிறகு, நீ நான் மட்டும்தான், வேறு யாருக்கும் இடமில்லை”

“என்னை பெற்று வளர்த்து படிக்க வைத்து ஆளாக்கிய, என் பெற்றோர்க்கு நான் தோள் கொடுக்க வேணாமா, சுயநலவாதியா உன் பின்னாடி வரச் சொல்றியா”

“வேண்டாம், நீ என் பின்னாடி வர வேணாம் அனிஷ், இதுக்கு மேல நீ எதுவும் பேச வேணாம், நான் கிளம்பறேன் இனிமேல் உன்னுடன் பேச எனக்கு ஒன்றுமில்லை, இதோடு எல்லாம் முடிந்துவிட்டது” என்று சென்றுவிட்டாள்.

“பிரச்சினைன்னு எதுவும் இல்லை முத்து, தேவையில்லாம செலவு செய்கிறாள், என்னையும் செய்ய வைக்கிறாள், அதை வேண்டாமென்று சொன்னேன், அதுக்கு இப்பவே இப்படி கணக்கு பார்க்கிறே, கல்யாணம் செய்த பிறகும் இப்படிதான் செய்வாயான்னு, சண்டை போட தொடங்கிவிட்டாள், வாக்குவாதம் பெரிதாகி எதுவும் தேவையில்லை என்று சொல்லிவிட்டு போய்விட்டாள்” என்று தன் நண்பனிடம் சொல்லி முடித்தான் அனிஷ்.

“இது என்ன காதல் பணத்துக்காகதான் பழகினாளா, இப்போ போனவளை நினைத்து, எதற்கு நீ புலம்பிக் கொண்டு இருக்கே”

“இந்த மாதிரி பொண்ணுகளை, சும்மாவிடக் கூடாது முத்து, இவளுக்கு கொடுக்க போற தண்டனை மற்றவங்களுக்கு ஒரு பாடமா இருக்கனும்”

“சரி அதுக்கு என்ன பண்ண போற அனிஷ்”

“அவளை கொலைப் பண்ண போறேன், அவளுக்கு காதலோட வலி என்னன்னு தெரியனும் முத்து”

“நல்ல யோசனை அனிஷ், அப்படியே செய்துவிடு, அவளை கொலை செய்துவிட்டு பிறகு என்ன பண்ண போற”

“இதோ இந்த கடலில் விழுந்து சாகப் போறேன்”

“அவளிடம் உன் குடும்பத்தை, விட்டுக் கொடுக்காமல் பேசிவிட்டு, இப்ப நீ எடுத்திருக்கும் முடிவு, அருமையான யோசனை அனிஷ், அப்போதான் உன் குடும்பத்தில் உள்ள எல்லோருக்கும், ரொம்ப சந்தோஷமா இருக்கும்”

“என்ன சொல்ற முத்து, அவங்களுக்கு எப்படி சந்தோஷமா இருக்கும்”

“அனிஷ் அந்த குடும்பத்தைப் பார், அந்த குடும்பம் மாதிரிதான் உன் குடும்பமும்”

“அவங்களை எதுக்கு பார்க்க சொல்ற முத்து”

“அந்த குடும்பத்தில் உன்னை மாதிரி ஒருத்தர் இருக்கிறார் பார், அவர் செய்வதை எல்லாம் கவனி, அவங்க வீடு பக்கத்தில் என்றுதான் நினைக்கிறேன், தினமும் மாலை நேரத்தில் கடற்கரைக்கு வராங்க”

“அதுகென்ன முத்து கடற்கரை பக்கத்தில் வீடு இருந்தால், தினமும் வரதான் செய்வாங்க”

“அவர் அவங்க அம்மா அப்பாவை எவ்வளவு அன்பாக கவனிக்கிறார், அதே நேரத்தில் கற்பமாக இருக்கும், தன் மனைவியையும் பார்த்துக் கொள்கிறார், தன் அண்ணனுக்கு உதவியாக அவர் தங்கை எல்லாம் செய்கிறாள்”

“அந்த இடத்தில் உன் குடும்பத்தை நினைத்துப் பார், அந்த மகிழ்வான நேரத்தை உன்னால் உணர முடியவில்லையா அனிஷ்”

“முத்து நீ இப்போ என்ன சொல்ல வரே எனக்கு புரியல”

“உங்க அம்மாவை நினைத்துப் பார், உன்னை பத்து மாதம் வயிற்றில் சுமந்து இருந்தாங்களே, அந்த வலி என்னன்னு உனக்கு தெரியலையா?, அவங்க எல்லா வலியையும் தாங்கிக் கொண்டு உன்னை பெற்றெடுத்தாங்களே, அந்த வலி உனக்கு தெரியலயா, உன்னை வளர்க்க உன் அம்மா பட்ட வலி உனக்கு தெரியலயா அனிஷ்”

“என்ன முத்து அதெல்லாம் எனக்கு எப்படி தெரியாம இருக்கும்”

“அந்த பெரியவரைப் பார், தன் மகன் செய்வதையெல்லாம், எவ்வளவு சந்தோஷமாக பார்த்துக் கொண்டிருக்கிறார், உன் அப்பா உன்னை படிக்க வைத்ததிலிருந்து, இன்னைக்கு நாற்பதாயிரம் சம்பளம் வாங்குறீயே, அதுக்குள்ள தகுதியை வளர்ப்பதற்க்கு, அவர் பட்ட கஷ்டமும் வலியும் தெரியலயா”

“என்னை படிக்க வைக்க பணம் கட்ட முடியாமல், அதற்காக கடன் வாங்கி, அந்த கடனை அடைக்க, அதிக நேரம் வேலை பார்த்தாரே, அதை எப்படி என்னால் மறக்க முடியும் முத்து”

“அப்பா இவ்வளவு கஷ்டப்பட்டது, உன்னை ஒரு கொலைகாரனா பார்ப்பதற்கா, நம் மகன் தன் தங்கையை படிக்க வைத்து, நல்ல இடத்தில் அவளை கல்யாணம் செய்துக் கொடுப்பான்ற நம்பிக்கையோடு இருக்காங்களே, அவங்களுக்கு நீ செய்யப் போற காரியத்தால் ஏற்படும் வலி உனக்கு தெரியலயா அனிஷ்?”

“முத்து அப்போ ஷகஜூவை நான் காதலித்து, இப்போ பைத்தியகாரன் மாதிரி இருக்கேனே, உனக்கு அது தெரியலயா?”

“ஆமா ஆமா அனிஷ் அந்த வலியைப் பற்றி யோசிக்கு முன், உன் தங்கையை நினைத்துப் பார்த்தியா, அண்ணன் தகப்பானாக இருந்து, தனக்கு செய்ய வேண்டிய, எல்லா கடமைகளையும் செய்வான், தாய்மாமனாக தன் பிள்ளைகளுக்கும் செய்வான் என்ற ஆசையில் இருக்கும், உன் தங்கைக்கு நீ செய்யப் போகும் காரியத்தால் ஏற்படும் வலி என்னன்னு தெரியுமா?”

“என்ன முத்து அப்பா அம்மா இருக்காங்களே, அவளை பார்த்துக்க மாட்டாங்களா”

“கொலைகாரனின் தங்கைன்னு, யாரும் கல்யாணம் செய்துக் கொள்ள முன் வரமாட்டாங்க, உன் தங்கையின் நிலைமையை யோசித்துப் பார் அனிஷ், அண்ணனா உனக்கு எந்த பொறுப்பும் இல்லை அப்படிதானே, அதைவிட உன்னை ஏமாற்றிப் போன எவளோ முக்கியம், கூடப் பிறந்த தங்கை முக்கியமில்லை”

“நான் அப்படிச் சொல்லவில்லை முத்து, என் வாழ்நாள் முழுவதும் என் கூட வருவாள்ன்னு ஷகஜூவை எவ்வளவு விரும்பினேன், அவளுக்காக எதையும் செய்ய இருந்தேன், தேவையில்லாததைக் செய்யாதே என்று சொல்வது தவறா அதற்காக என்னை வேண்டாம் என்று சொல்லிவிட்டாள், அப்போ அவளுக்கு பணம்தானே பெரிதாக தெரிந்து இருக்கு, காதலைவிட பணம்தான் பெரிது என்று நினைத்தவளை சும்மாவிடச் சொல்றியா முத்து”

“நம்முடையை கடைசி மூச்சு நிற்கும் வரை, நம்மை கூடவே வைத்துக் காப்பாற்றுவான் என்று நினைத்துக் கொண்டு இருப்பவர்களை, நீ அனாதையாக விட்டுச் சென்ற பிறகு, உன்னை பெற்றவர்கள் படப்போகும் வலியை உன்னால் உணர முடியவில்லை, உன் தங்கையின் வாழ்க்கை உனக்கு பெரிதாக தெரியவில்லை, ஷகஜூ செய்ததுதான் உனக்கு பெரிதாக தெரிகிறது, நீ செய்யப் போகும் செயல் அவர்களுக்கு ரொம்ப சந்தோஷத்தைதானே தரும், போ போய் அவளை எப்படி கொலை செய்வது என்று யோசி”

“பார் அந்தக் குடும்பத்தைப் பார், அந்த இடத்தில் உன் குடும்பத்தை நினைத்துப் பார், அந்த சிறு பெண்ணை உன் தங்கையாக நினைத்துப் பார், உன் குடும்பத்தைப் பற்றிய அக்கறை கொஞ்சமாவது இருந்தால், புது மனிதனாக எழுந்து வா வீட்டுக்குப் போகலாம், உன் உறவுகளோடு சந்தோஷமாக இரு”

வெகு நேரம் அமைதியாக அருகில் இருந்த அந்த குடும்பத்தையே கவனித்துக் கொண்டிருந்த அனிஷ், “இவ்வளவு நேரம் முட்டாளாக யோசித்திருக்கிறேன், நான் கொலைகாரனாக நின்றால், தங்கையின் வாழ்க்கை என்னாவது, குடும்பத்திற்காக அவளிடம் பேசியவன், கோபத்தில் என் குடும்பத்தையே மறந்துவிட்டேனே, என்னையும் என் குடும்பத்தையும் நேசிப்பவள் கண்டிப்பாக வருவாள்” என்று சிந்தனையிலிருந்து மீண்டவன் “முத்து வா வீட்டுக்கு போகலாம்” என்றான். 

தொடர்புடைய சிறுகதைகள்
“அனு உனக்கு உடம்பு சரியில்லை என்று சொன்னாயே, இப்போது எப்படி இருக்கிறாய், மருத்துவரிடம் சென்றாயா” “பரவாயில்லை வனிதா மருத்துவரிடம் போகவில்லை, எனக்கு சரியாகிவிட்டது, அதனால் போகவில்லை பள்ளிக்கு வந்துவிட்டேன்” “உன் முகம் சரியில்லையே வாட்டமாகவே இருக்கிறதே, நீ மருத்துவரிடம் போயிருக்கலாமே” “ஆமா வனிதா ரொம்ப சோர்வாக ...
மேலும் கதையை படிக்க...
குறளரசன் அமைதியாக அமர்ந்து தன் கதையைப் பற்றி ஆழமாக சிந்தித்துக் கொண்டிருந்தான், திடீரென்று ஞானயோதயம் பிறந்தது போல் எழுதத் தொடங்கினான், மீண்டும் சிந்திக்கத் தொடங்கினான். ஆழ்ந்த சிந்தனையில் இருக்கும் போது, அதை கலைக்கும் விதமாக ஒரே சத்தம், அந்த சத்ததில் அவன் கற்பனை ...
மேலும் கதையை படிக்க...
அஸ்வின் நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவன் அப்பா, அம்மா, அண்ணன் என்று அந்த வீட்டின் செல்ல பிள்ளையாக வளர்ந்து வருபவன். சென்னையில் தனியார் கல்லூரியில் பிஏ வரலாறு மூன்றாம் ஆண்டு படித்து வருகிறான். அஸ்வின் கல்லூரியின் முதலாமாண்டு காலடி எடுத்து வைத்த அன்றே, காதல் ...
மேலும் கதையை படிக்க...
“பரமு உன் பொஞ்சாதி நிறை மாசமா இருக்கா, அதனால் எங்கேயும் போகாத, தங்கச்சி கூடவே இரு, இந்த நேரத்துல நீ பக்கத்திலதான் இருக்கனும்” “நான் எங்கேயும் போகமாட்டேன் தேவா, ஆனால் வேலை வந்துட்டா என்ன பண்ண” “ஆமா பரமு நீ கலெக்டர் உத்தியோகம் பார்க்க, ...
மேலும் கதையை படிக்க...
சென்னை கிளைக்கு அஜய்யை மாற்றல் செய்திருந்தார்கள். இன்னும் பத்து வருடங்கள் சென்னை கிளையில்தான் வேலை பார்க்க வேண்டும். அதனால் குடும்பத்தை அழைத்து வருவதற்கு முன் வீடு பார்த்துவிட்டால், அவர்கள் வந்து குடியேறுவதற்கு வசதியாக இருக்கும் என்று வீடு பார்க்கத் தொடங்கினார். அஜய் வேலை ...
மேலும் கதையை படிக்க...
வினை
கதையாசிரியர்
காதல் சொல்லப் போறேன்
விலை மதிப்பு
வாடகை வீடு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)