உரிமை

 

மாநிலக் கல்லூரியில் இளங்கலை உளவியல் பிரிவில் என் முதலாம் ஆண்டு ஆரம்பித்தது. நாங்கள் பத்து மாணவர்கள் ஒன்பது மாணவிகள். மதுரையில் என் பாட்டியின் கண்டிப்பான வளர்ப்பும், வீட்டிலுள்ள கோவிலில் தினப் பூஜையும், அவர் நடத்திய பஜனை மண்டபத்திற்கு வரும் பெண்களை அக்கா, தங்கை, அத்தை, மாமி, பாட்டி என்று அழைக்க வேண்டி வந்த திணிக்கப்பட்ட நிர்ப்பந்தமும், பாலுணர்வு புரிந்தும் புரியாத நிலையில் ஒரு அழகிய இளம் பெண்ணைப்பார்த்து ஒரு ஆணுக்கு ஏற்படும் இயற்கையான அழகுணர்வே பஞ்சமகா பாதகங்களுள் ஒன்று என்ற குற்ற உணர்வை ஏற்படுத்திய மனநிலையும், என்னுள் சற்று தாராளமாகவே சங்கோஜ பாவத்தை வளர்த்திருந்தன. கல்லூரிக்கு வந்த பிறகும் சகமாணவிகளுடன் சாதாரண விஷயங்களைப் பற்றி ஓரிரு வாக்கியங்கள் பேசுவதற்குள் உடலில் ஒரு நடுக்கம் ஏற்பட்டது. முகம் வியர்த்துக் கொட்டியது.

முதலில் என்னுடன் சகஜமாகப் பேசியது ரோஸி ஜான் தான். என்னமோ என்னுடன் நெடுங்காலம் பழகியதுபோல் எடுத்த எடுப்பிலேயே அவள் என்னுடன் பேசிய முதல் வாக்கியங்கள் : ‘என்ன ராஜ், இண்ணெக்கி அட்டகாசமா சட்டை போட்டிருக்கே? யாரையாச்சும் காதலிக்கிறாயா? யார் அந்த அதிர்ஷ்டசாலிப் பெண் ?’ எனக்கு உண்மையிலேயே தூக்கி வாரிப் போட்டது. முகத்தில் வழக்கமாக வழியும் வியர்வையுடன் சற்று அசடும் சேர்ந்து வழிந்தது. மிகவும் கஷ்டப்பட்டு வரவழைத்துக் கொண்ட, புன்சிரிப்பு என்று நான் நம்பிய ஒன்றை வெளிப்படுத்தினேன். அவளும் சிரித்துக்கொண்டே சென்றுவிட்டாள். எனக்கு அதிர்ச்சி இன்னும் நீங்கவில்லை. புது மாதிரியான சட்டை நான் போட்டால் ரோஸிக்கு ஏன் அது அட்டகாசமாகப் படவேண்டும்? அட்டகாசமான சட்டை போடவேண்டுமென்றால் ஒரு காதலி ஒருவனுக்கு இருக்கவேண்டுமா? எனக்கு வாழ்க்கைப்படப் போகிறவள் அதிர்ஷ்டசாலியாகத்தான் இருக்கவேண்டும் என்று ரோஸி ஏன் நினைத்தாள்? அன்று இரவு தூங்க ஒரு diazepem தேவைப்பட்டது.

ரோஸி பார்ப்பதற்கு அழகாகவே இருந்தாள். அவளிடம் எனக்கு ரொம்பவும் பிடித்த ஒன்று அவள் மூக்கின் நுனி சற்று தூக்கலாக இருந்தது. ஒரு ரோமானிய அம்சம்.

ஓராண்டு கழித்து மறு ஆண்டு வந்து அதுவும் கழித்து மூன்றாம் ஆண்டு இறுதியில் இருந்தோம். ரோஸியும் நானும் இந்நேரம் மிகவும் நெருங்கிப் பழகிக் கொண்டிருந்தோம். இப்பொழுதெல்லாம் எனக்கு வியர்த்துக் கொட்டுவதில்லை. மூன்று கலை நிகழ்ச்சிகளுக்கும், அடிக்கடி கல்லூரிச் சிற்றுண்டிச் சாலைக்கும் தோராயமாக ஒரு இருபது ஆங்கிலப் படங்களுக்கும் சேர்ந்தே சென்றாகி விட்டிருந்தோம். என்னை அவளுக்கு ரொம்பவும் பிடித்துவிட்டிருந்தது. என்னைப்போல் ஒரு இனிய நண்பன் கிடைக்க அவள் கொடுத்துவைத்தவள். அவள் வாழ்க்கையில் நான் கலந்து விட்டால் வேறு ஏதும் தேவையில்லை. நான் புளகாங்கித்துக் கொண்டிருந்தேன். இரவில் அவள் பளிச்சென்ற புன்னகை பூக்கும் முகமும், முகத்தில் குறிப்பாக அவளது அழகிய மூக்கும் ஏன் கண் முன் தோன்றிக் கொண்டிருந்தன. எனக்கு ஏதேதோ கற்பனைகள். சாதாரணமாக உளவியல் படிப்பவர்கள் ஒரு உறவை.உறவின் அடிப்படையை, உணர்வுகளை சித்திரவதை செய்து காரண அலசலில் மூழ்கி மூர்க்கத்தனமான அர்த்தங்களை அவற்றிற்கு ஏற்படுத்தி, உறவிலுள்ள இனிமையை காரண ரீதியில் காயப்படுத்துவார்கள். நல்லவேளை, எனக்கு எங்கள் உறவை அப்படியெல்லாம் செய்யத் தோன்றவில்லை. எங்கள் உறவில் ஒரு இனிய கவிதை இழைந்தோடிக் கொண்டிருப்பதாகவே பட்டது. எனக்குள் ஒரு குறை. அவளை இதுவரை தொட்டதில்லை. என்னுள்ளிருந்த பாட்டி என்னை விட்டு ஒழியவில்லை. நான் என்ன செய்யட்டும்?

என சகமாணவர்கள் ரோஸியையும் என்னையும் சேர்த்து கன்னாபின்னா என்று கழிப்பறை சுவர்களில் எழுதியோ, ஆட்டீன் படத்தையும் அம்புக் குறியையும் வரைந்தோ, எங்கள் உறவில் அவர்களுக்குள்ள அக்கறையைப் பிரகடனப் படுத்திக் கொள்ளவில்லை. என்ன இருந்தாலும் உளவியல் மாணவர்கள் கண்ணியமானவர்களே. மூன்று ஆண்டுகள் ஒரு உறவு சுமுகமாக இருந்ததற்கு ஆண்டவனுக்கு நன்றி சொல்லத் தோன்றியதோ இல்லையோ, என வகுப்புத் தோழர்களுக்கு நிச்சயமாக மானசீகமாக நன்றி தெரிவித்துக் கொண்டேன்.

இறுதி ஆண்டு பல்கலைக் கழகத் தேர்வுக்கு இன்னும் இரு தினங்களே இருந்தன. மாலை, என் அறையில், மனநலம் பாதிக்கப்பட்டவர்களின் உளவியலைப் பற்றி நான் ஆழ்ந்து படித்துக் கொண்டிருந்தேன். விடுதியின் பையன், என்னைத் தேடி ஒரு இளம் பெண் வந்திருப்பதாக அறிவித்துவிட்டுப் போனான். எனக்கு குழப்பமாக இருந்தது. மனநலம் குன்றியவர்களைப் பற்றிப் படித்துக் கொண்டிருந்தது ஒரு காரணமாக இருக்கலாம். மேலும், எந்தப் பெண்ணும் என விடுதி தேடி வந்ததுமில்லை. உடனே சட்டை பாண்டை மாட்டிக்கொண்டு தலையை ஒருவாறு சரிசெய்து கொண்டு அவசரமாக வாசலின் அருகே உள்ள பார்வையாளர்கள் அறைக்கு விரைந்தேன்.
எனக்கு ஒரே ஆச்சரியம். அங்கு ரோஸி எனக்காகக் காத்துக் கொண்டிருந்தால். அவளுக்கு படித்துப் படித்து அலுத்து விட்டதாம். ஒரு மாறுதலுக்காக கடற்கரைக்குச் செல்லவேண்டும் என்று தோன்றியதாம். நான் கூட இருந்தால் சந்தோஷமாக இருக்குமாம். அறைக்கு சென்று கதவைப் பூட்டிவிட்டு அவளுடன் கிளம்பினேன். வழி நெடுக இனிமையான அன்னியோன்னியங்களை பேச்சால் பகிர்ந்துகொண்டு மணற்பரப்பில் வெகு தூரத்தைக் கடந்து அலைகள் மணலைத் தொடும் இடத்திற்கு வந்துவிட்டோம். எனக்கு மிகவும் இன்பமான மாலைப் பொழுது. இன்னும் ஓரிரு மாதங்களுள் நாங்கள் திருமணம் செய்து கொள்ளப்போகிறோம். நாங்கள் ஏற்க்கனவே செய்து கொண்ட முடிவுதான். அந்த எண்ணத்தில் ‘நான்’ என்று நம்பிக்கொண்டிருக்கும் ஒன்றுக்கு ஒரு பாதுகாப்பு உணர்வு. ஏதேதோ இனிய எண்ணங்கள்.

ரோஸிக்கு என்ன தோன்றியது என்று என்னால் ஊகிக்க முடியவில்லை. நாங்கள் அப்பொழுது உட்கார்ந்திருந்தோம். ‘ராஜ். கொஞ்சம் என செருப்பைப் பார்த்துக்கோயேன்.நான் அலையிலே நின்னுட்டு வர்ரேன்’ என்று இனிமையாகச் சொல்லி, செருப்பை சிரத்தையுடன் அவசரப்படாமல் கழற்றி என முன்னாள் விட்டுவிட்டு அலைகளை நோக்கிச் சென்றுகொண்டிருந்தாள். அவள் பின்னழகையோ நடை எழிலையோ ரசிக்க எனக்கு அப்பொழுது நிச்சயம் தோன்றவில்லை. எனக்கு ஒன்று உடனே நினைவுக்கு வந்தது. நான் மதுரையில் அடிக்கடி சென்று கொண்டிருந்த கோவில் வாசலில் அழுக்குச் சைட்டையும் கிழிந்த அரைக்கால் சட்டையும் போட்டுக்கொண்டிருந்த ஒரு பத்து வயதுச் சிறுவன் கோவிலுக்கு வரும் பக்தர்களிடம் பத்து பைசா வாங்கிக்கொண்டு அவர்களது காலணிகளைப் பாதுகாத்துக் கொண்டிருந்தான்.

மாநிலக் கல்லூரியை விட்டு நான் வெளியேறி 20 ஆண்டுகள் ஆகின்றன. என மனைவியின் பெயர் ரோஸி இல்லை. 

தொடர்புடைய சிறுகதைகள்
(மீறல் வகைமையில் ஒரு சிறுகதை) பீடி ஒரு கலாச்சாரக் குறியீடு... கலாச்சாரப் பாதுகாவலர்கள் மன்னிக்காவிட்டால் பாதகமில்லை. சூழலியல்வாதிகள் கண்டனம் தெரிவிக்கவும், ஓஸோன் படலத்தில் பொத்தல். மனப்படலத்தில் gopi4 ஏராளமான பொத்தல்கள் . வாயில் சதா நிக்கோட்டினை நாடும் விழைவு. புகைத்தலின் உதயம் : 16.10.68 இரவு. ...
மேலும் கதையை படிக்க...
''பிரச்சனெ பெரிஸ்ஸா ஒண்ணுமில்லீங்க.'' ''பரவாயில்லெ, எதுவானாலும் சொல்லுங்க..அவங்களுக்கு என்ன பிரச்சினென்னு முழுஸ்ஸாத் தெரிஞ்சாத்தான் உதவி செய்யிறதுக்கு எங்களுக்குச் சுலபமா இருக்கும்.'' ''கொஞ்ச நாளாவே சிடுசிடுங்கறது, எங்கிட்டே எரிஞ்சு விழுறது, கொழந்தைகங்களெப் போட்டு மொத்தறது இப்பிடியாயிருக்குதுங்க. சமாதானப்படுத்துனாகூட கோபம் தணியிறதில்லெ..'' ''வீட்டுலெ ஏதாச்சும் சிக்கலாச்சா?'' ''சிக்கலுன்னு என்னெத்தெங்க சொல்றது? ...
மேலும் கதையை படிக்க...
மாரிச்சாமி அந்தப் பெண் -- மருத்துவரின் அறையில் இருந்தான். அது ஒரு சிறிய பொது மருத்துவமனை. அவன் கேட்டான், 'இந்த நிக்கோடின் அடிமைத்தனத்தை நிறுத்த மனநல மாத்திரைகள் தருவீர்களா ? ' என்று. 'என்ன ? ஒரு நாளைக்கு எத்தனை ஊதுகிறீர்கள் ? ' ...
மேலும் கதையை படிக்க...
எங்கள் அலுவலகம் அடையாறில் இருந்தது. மோபெட்டில் முக்கால் மணி நேரப் பயணம். போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டால் ஒரு மணி நேரம். நெரிசலின் கனத்தைப் பொறுத்து ஒன்றரை மணிநேரம்; இப்படி... அந்த அலுவலகத்தில் சேர்ந்து இரண்டு மாதங்கள் கழிந்திருந்தன. ஓர் ஒரு மாதத்தில் சக ...
மேலும் கதையை படிக்க...
அதிகாலையிலிருந்தே பலத்த மழை. சென்னை அருகே புயலாம். தொழிற்சாலை நேரம் முடிந்து, தள்ளிப்போட முடியாத ஒரு முக்கியமான விஷயத்தைப் பற்றி சக ஊழியர் குதரத் உல்லா பாட்சாவுடன் பேச, அவரது இல்லத்திற்குச் சென்று, பேசி முடித்துவிட்டு, சுமார் ஒன்பது மணியளவில் தன் வீட்டை ...
மேலும் கதையை படிக்க...
நீங்கள் சர்க்கஸ் பார்த்திருப்பீர்கள். கரடி மோட்டார் சைக்கிள் விடுவதை, யானை ஆசையுடன் அழகியைத் தன் தும்பிக்கையால் தூக்குவதை, நாய் தீ வளையத்தினூடே தாவி வெளியேறுவதை, குதிரைகள் வட்டமாய் ஓடுவதை, புலி இரட்டைக் கயிற்றில் நடந்து சிரமப்படுவதை எல்லாம். மேலோட்டமாக பார்க்க போனால் ...
மேலும் கதையை படிக்க...
பீடி
மொழி அதிர்ச்சி
இழந்த யோகம்
ஒரு ரூபாய்க்கு ஒரு கதை
புயல்
மகான்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)