Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

இன்று, இப்படியும் ஒரு காதல் கதை

 

அந்த வேலையில் சேரும்போது அப்படி ஒரு பிரச்சினை எனக்கு உருவாகும் என்று நான் சத்தியமாக நினைக்கவில்லை. ஏழாவது அறிவு, மூன்றாவது கண் என்பது போல் பெண்களுக்கு ஒரு சக்தி உண்டு; நான் ‘கான்டீன்’ போகும் போதோ, மற்றபடி எனது தோழிகளுடன் வெளியே வரும்போதோ யாரோ என்னைக் குறிப்பாகப் பார்ப்பது போன்றதொரு உணர்வு உந்தியது.

நான் அதைப் பரிசீலனை செய்வதற்கு முன் பாரதி முந்திக் கொண்டாள்.

“நிருபமா… கவனிச்சியா, அந்தப் பையன் உன்னையே பார்க்கிறான்” என்று கான்டீனில் காபி குடிக்கையில் என் காதருகில் கிசுகிசுத்தாள். அவள் சொன்ன ‘அந்தப் பையன்’ எனக்கு 45 டிகிரிகோணத்தில் இருந்த மற்றொரு மேஜையில் இன்னொருவனுடன் அமர்ந்து குளிர்பானம் பருகிக் கொண்டிருந்தான். நான் லேசாக முகத்தைத் திருப்பிப் பார்த்தேன்.

“யாரு? அந்த ‘க்ரீம்’ கலர் ஷர்ட்டா?” என்றேன்.

“ம்… நான் ஒரு வாரமாகவே பார்க்கிறேன். உனக்கு ‘லுக்’ விட்டுக்கிட்டேயிருக்கான்” என்றாள் பாரதி. ஆக நான் முதலில் சொன்ன ஏழாவது அறிவு எக்ஸ்ட்ரா இவளுக்கும் இருக்கிறது என்று நிரூபணம் ஆகியது.

நான் அப்படியெல்லாம் அழகியல்ல; கொஞ்சம் ‘குண்டு’ என்றே சொல்லலாம். அதுவும், பாரதி மாதிரியான வற்றல்காய்ச்சி பெண்ணுடன் கோகும்போது கொஞ்சம் படு குண்டாகவே தெரிவேன். எனக்கு முகத்தில் தீர்க்கமாக இருப்பது செதுக்கியது மாதிரி மூக்குத்தான். என் மூக்குக்காக ஒருவன் என்னைப் பார்க்கிறான் அல்லது பார்ப்பான் என்பதைவிடப் பிதற்றல் இருக்க வாய்ப்பில்லை.

பாரதி அதற்குள் இன்னொரு பாணம் வீசினாள்.

‘‘உன் ‘டிரஸ்’ஸைப் பார்… அதுவும் ‘க்ரீம்’ கலர். நீ என்ன கலர் ‘டிரஸ்’ போட்டாலும் அதற்கு ‘மேட்சாக’ அவனும் அதே நிறத்தில்தான் ஷர்ட் போட்டிருப்பான்… பார்.”

”எனக்குப் புரியலை” என்றேன் நிஜமாகவே.

“ஆமா…யா… நேத்து நீ ப்ளூ கலர்ல ஸாரில வந்தல்ல.. அவனும் ப்ளூ கலர் ஷர்ட்ல வந்தான்…”

“என்ன உளர்ற…?” என்றேன் எரிச்சலுடன்.

“நான் ஒண்ணும் உளறல.. சரியாத்தான் பேசறேன். நீரூ… அவன் உன்னைப் பார்த்து ‘லுக்’ விடறத ஒரு வாரமாகவே பார்த்திட்டிருக்கேன். நீ ஒவ்வொரு நாளும் என்ன ஸாரி கட்டறயோ, சுரிதார் போடறயோ அந்தக் கலர்லதான் அவனும் டிரஸ் போடறான்…”

“அப்ப நீ அவனுக்கு ‘லுக்’ விடறன்னு சொல்லு….” என்றேன் புன்னகையுடன்.

பாரதி பெருமூச்சு விட்டாள். அப்புறம் முகமலமர்ச்சியுடன், “என்ன பண்ண…. அவன் உன்னைன்ன பார்க்கிறான்…” என்றாள்.

“எத வச்சு சொல்ற…. இந்தக் ‘கலர்’ ஈக்வேஷன்லயா?”

“அதுவும்னு வச்சுக்கயேன். இப்ப எழுந்து போறான் பாரு… நீ ‘ஜஸ்ட்’ அவனைப் பாரேன்…” என்றாள் பாரதி ரகசியக் குரலில்.

நான் புதுமைப் பெண். அவனை நேராகப் பார்த்தேன். இன்னும் சொல்லப்போனால் அப்போதுதான் அந்தப் பையனை ஒரு புதிய கோணத்தில் நோக்கினேன். கறுப்புத்தான்; அட்டைக்கரியில்லை. மாநிறத்திற்கும் ஒரு மாற்றுக் குறைவு. நல்ல உயரம். கட்டான உடல் வாகு. ‘டீக்’காக டிரெஸ் பண்ணியிருந்தான். சின்னக் கண்ணாடி. படியாமல் ஷாம்பூவில் ததும்பி நிற்கும் அடர்ந்த கிராப். சின்ன உதடுகள்.

நிச்சயமாக அசிங்கமில்லை; ரொம்ப ஹாண்ட்ஸமுமில்லை.

என் நேர் பார்வை அவன் விழிகளை சந்தித்து மீண்டபோது சட்டென்று பார்வையைத் தவிர்த்தான். அந்த ஒரு விநாடியில் ஒளிர்ந்து மறைந்த கள்ளத்தனம் அவன் மனசை உணர்த்தியது.

சற்று தூரம் போய் காற்றுக் கதவுகள் திறந்து வெளியேறுகையில் மீண்டும் ஒருமுறை திரும்பிப் பார்த்தான்.

பாரதி சொன்னது சரி… பாரதி வெற்றிப் புன்னகை புரிந்தாள்.

விஷயம் அத்தோடு முடியவில்லை; எப்படி முடியும்?

திடீரென்று ஒருநாள் எனக்கு என் கம்ப்யூட்டரில் ஒரு ‘பாப் அப்’ மெஸேஜ் வந்தது.
‘ஹி…’ புரியவில்லை. மெஸெஞ்சரைக் கீழிறக்கினேன். ஒரு விநாடிக்குப் பின் மீண்டும் தலை தூக்கியது.

‘ஹி… ஐ’ம் ஷிவா…’

இப்போது புரிந்தது. பாரதி நேற்றுத்தான் தகவல் சேகரித்து ‘நிரூ… உங்க ஆள் ‘பர்ஸ்ட் ப்ளோரி’ல் டெக்னிகல் டிவிஷனில் ஒர்க் பண்றானாம். பேர் ஷிவாவாம்…” என்றாள்.

“ரொம்ப அவசியம்” என்றேன்.

வாஸ்தவத்தில் எனக்கு அவனைப் பற்றி ஒருவிதமான அபிப்ராயமும் உருவாகவில்லை. அதற்குக் காரணம் எனக்கு வாழ்க்கையில் இருக்கும் பிரச்சினைகள். இப்போது எனக்கு காதல், கல்யாணம் என்ற பொழுதுபோக்குக்கெல்லாம் நேரமில்லை.

மீண்டும் கீழிறக்கினேன். அப்புறம் வரவில்லை.

மறுநாள் ‘கான்டீனி’ல் காபி குடிக்கையில் நானும் மாலதி என்ற வேறொரு தோழியும் அமர்ந்திருக்கையில் அதே 45 டிகிரி கோணத்தில் அந்த ஷிவா வெள்ளை முழுக்கை சட்டையில் அமர்ந்திருந்தான். அதே ஓரப்பார்வை. என்னையுமறியாமல் என் ‘டிரஸ்’ஸில் என் பார்வை பதிந்தது.

மை காட்…. நான் வெள்ளை சுரிதாரில்….

அவனைத் திரும்பிப் பார்த்தபோது அவனது உதடுகளில் ஒரு மெல்லிய புன்னகை ஒட்டிக் கொண்டிருந்தது போலிருந்தது.

பிரமையோ?

மாலதி ‘சளசள’வென்று பேசியது காதில் பதியவில்லை.

அன்று பிற்பகல் முன்பு போல் ‘ஹி… ஐ’ம் ஷிவா… மெஸெஞ்சர். இவனுக்கு எப்படி என் யாஹூ ஐ.டி. தெரிந்தது. இந்த பாரதியின் வேலையோ? ஆனால் எங்களைப் போன்று ஸாஃப்ட்வேர் நிறுவனங்களில் வேலை செய்யும் மக்களுக்கு இது ஒன்றும் பிரச்சினையில்லை.

சரி… நான் ஏன் இதற்கெல்லாம் பயப்பட வேண்டும்?

‘ஹி… ஐ’ம் நிருபமா…’ என்று பதில் அனுப்பினேன்.

பதில்: ‘ஹூர்…ர்…ரே….’ என்று வந்தது. எனக்கு சிரிப்பு வந்தது.

‘????…’ என்று பதில் அனுப்பினேன்.

‘ஹாவ் எ குட் டே… யு மேட் மை டே குட்…’ என்று பதில்.

‘தாங்க்ஸ்…’ என்று பதில் சென்றது.

அப்புறம் அமைதி. கண்ணியமானவன்தான்.

அதற்குப் பின் நாட்களில் கான்டீனில், ரிஸப்ஷனில் என்று கண்ணில் தென்பட்டாலும் லேசான புன்னகை தவிர வேறு நிகழ்வுகள் எதுவும் எனக்குத் தெரிந்தவரை நிகழவில்லை.

ஒருநாள் மதியம் நானும், பாரதியும் ஆபீஸை ஒட்டியிருந்த மரத்தடி நிழல்களில் நடந்து கொண்டிருந்தோம். அங்கேயிருந்த ஒரு பெஞ்சில் அமர்ந்தாள் பாரதி.

“இப்படி உட்கார் நிருபமா… உன்னிடம் ‘பர்ஸன’லா கொஞ்சம் பேசணும்…”

“என்னது?” என்றபடி அமர்ந்தேன்.

“நீ ஷிவாவைப் பத்தி என்ன நினைக்கிற?” என்றாள் சீரியசாக.

நான் தோள்களைக் குலுக்கினேன்.

“நான் என்ன நினைக்கணும்?”

“ஹி லவ்ஸ் யூ…”

எனக்கு நிஜமாகவே பெரிதாகச் சிரிக்க வேண்டும் போலிருந்தது. இருந்தாலும் புன்னகையுடன், “ரியலி… எத வச்சு இந்த முடிவுக்கு வந்த…?” என்றேன்.

“எனக்குத் தெரியும்.”

“உன்கிட்ட சொன்னானாக்கும்…”

“கிட்டத்தட்ட…”

“அப்படீன்னா…?”

“உனக்கு சங்கரைத் தெரியுமில்லை… என் ‘பிரண்ட்’. அவன்கிட்ட சொன்னானாம். சங்கர் டெக்னிகல்லதான் இருக்கான்.”

“இதுக்கு நான் என்ன பதில் சொல்லணும்?”

பாரதி என்னைக் கண் இமைக்காமல் பார்த்தாள்.

“உனக்கு அவனைப் பிடிக்கலையா?”

“என்ன பாரதி புரியாம பேசற… இது என்ன சினிமாவா…? கண்டதும் காதல் கத்தரிக்காய் என்று சொல்ல… உனக்கே என்னப்பத்தி முழுசாத் தெரியாது. அவனுக்கு என்ன தெரியும்? என்னையோ என் குணத்தைப் பத்தியோ, குடும்பத்தைப் பத்தியோ…? எனக்கும் அவனைப் பத்தி ஒண்ணும் தெரியாது. எதை வச்சு நான் அவனைப் பிடிக்கும் பிடிக்கலைன்னு தீர்ப்பு சொல்ல…?” என்றேன் சற்றுக் கோபமாக.

பாரதி அமைதியாக என்னைப் பார்த்தாள்.

“உன்னைப் பத்தி எல்லாம் அவனுக்குத் தெரியும்… நீ பிராமின்னு… உன் அப்பா திடீரென்று ஆறு மாசத்துக்கு முன்னால் இறந்து போனது. உனக்கு ஊமையாக ஒரு தங்கை இருப்பது. உன் தம்பி மெடிகலில் ரெண்டாம் வருஷம் படிப்பது… உன்னையும் உன் சம்பாத்தியத்iயும் நம்பித்தான் உன் குடும்பம் நடப்பது… எல்லாமே தெரிஞ்சு வச்சிருக்கான்…”

நான் அயர்ந்து போனேன்.

இன்றைய இளைஞர்களை ‘காதல்’ என்ற ஒற்றைச் சொல் எப்படி ஆட்கொண்டு வெருட்டுகிறது என்று மலைப்பாக இருந்தது.

“உனக்கு இன்னொரு விஷயம் தெரியுமா? நீ பிராமின்னும் அவனுக்குத் தெரியும். அவன் இல்லை. ஆனால் அவசரமாக அவர்கள் வீட்டில் உன்னைத்தான் கல்யாணம் பண்ணிக்கிறதாகச் சொல்லி வீட்டில் மிகப்பெரிய ரகளையாம்…”

நான் பேச்சிழந்து மரத்தின் கீழ் உதிர்ந்திருந்த இலைச்சருகுகளையே பார்த்துக் கொண்டிருந்தேன்.

வாழ்க்கை விநோதமானது, மனிதர்கள் அதைவிட விநோதமானவர்கள் என்பதை மறுப்பதற்கில்லை.

“என்ன நிருபமா… ஒண்ணும் பேச மாட்டேங்கற?” என்றாள் பாரதி.

நான் பெருமூச்சு விட்டேன். “என்ன பேசறதுன்னு வாஸ்தவமாகவே எனக்குத் தெரியலை பாரதி… இப்போதைக்கு இந்த விஷயத்தை இதோட விடு… பார்க்கலாம்” என்று எழுந்தேன்.

அன்று இரவு முழுவதும் எனக்கு உறக்கம் கொள்ளவில்லை.

இதற்கு நான் என்ன செய்ய வேண்டும்? கதைகளிலும், திரைப்படங்களிலும் விரட்டி விரட்டிக் காதலிப்பது என்பது போல் இவனும் செய்கிறானா?

காதல் என்பது இரு மனம் பொறுத்த விஷயமில்லையோ? ஒரு மனசாக ஒருவன் எப்படித் தீர்மானிக்கலாம்?

நிசத்தில் என்னுடைய நிலையில், என் குடும்பம் இருக்கும் சூழ்நிலையில் ஏற்பாடு செய்யப்பட்ட திருமணம் என்பது சற்று அசாத்தியம்தான். எவனும் வலிய என்னைக் கல்யாணம் செய்து கொள்கிறேன் என்று வரமாட்டான்தான். ஆனால்… இவன்…
வசதியான குடும்பமாகத்தான் தெரிகிறது. இவன் என்னுடைய சம்மதமோ ஆமோதிப்போ இல்லாமல் வீட்டில் எப்படிச் சொல்லலாம்? யாரைக் கேட்டு, எந்த தைரியத்தில் இவளைத்தான் கல்யாணம் செய்து கொள்ளப் போகிறேன் என்று அவன் பெற்றோரிடம் போரிட முடிவு செய்தான்?

ஆணவமா? அசட்டுத்தனமா? குழந்தைத்தனமா?

இந்தக் குழப்பத்தில் இரண்டு நாட்கள் கழிந்தது. இந்த இரண்டு நாட்களில் நான் அவனைப் பார்க்கவில்லை. என்னவோ பார்க்க வேண்டுமென்று தோன்றவுமில்லை.

நான் பொதுவாகவே ஒன்பது மணி ஆபீஸுக்கு எட்டரைக்குப் போய் விடுவேன். அன்றும் அப்படித்தான். என்னுடைய பகுதியில் நான் போனபோது வேறு ஒருவரும் வரவில்லை.
நான் ‘டெர்மினலில்’ அமர்ந்து ‘ஆன்’ செய்கையில் பின்னால் யாரோ வரும் காலடி ஓசையும், மெலிதான மணமும் வந்தன. திடுக்கிட்ட உணர்வில் திரும்பிப் பார்த்தேன்.

ஷிவா…!

கையில் ஒரு பூங்கொத்தும், வாழ்த்து அட்டையும் முகத்தில் புன்னகையுமாக நின்று கொண்டிருந்தான்.

எனக்கு ஒரு விநாடி தூக்கி வாரிப் போட்டது. இன்று என் பிறந்தநாள் கூட இல்லையே? அவனே அந்தக் குழப்பத்தைத் தெளிவித்தான்.

“ஹாப்பி வாலன்டைன்ஸ் டே!”

“ஓ….?”

மலர்கள் என்னிடம் பணிவாக நீட்டப்பட்டது. யோசனையுடன் அதை வாங்குவதா, வேண்டாமா என்று சிந்தித்தேன்.

ஒரு நிமிஷம்தான். மிகவும் கடினமான தருணங்களில்தான் தீர்க்கமான முடிவுகள் தோன்றும்.
இந்த விநாடியும், நிமிஷங்களும் எனக்கு யுகங்கள்… ஆனால் தெளிவைத் தந்த மணித்துளிகள்.
புன்னகையுடன், ‘தாங்க்ஸ்’ என்று அவனிடமிருந்து வாங்கிக் கொண்டேன்.

பின் நானே அவனைப் பார்த்து “உட்காருங்கள்” என்று எனக்கு அருகிலிருந்த இருக்கையைக் காட்டினேன்.

தயக்கத்துடனும் வியப்புடனும் அமர்ந்தான்.

நான் நேராக அவன் முகத்தையும், கண்களையும் கூர்ந்து பார்த்தேன். எல்லாவற்றிற்கும் மேலாக கண்களிலும், முகத்திலும் ஒரு குழந்தைத்தனம் தெரிந்தது.

இவனுக்கு வந்திருப்பது காதலில்லை… ஈர்ப்பு… ஏதோவொரு ‘கிரஷ்’!

என்னைக் கல்யாணம் செய்துகொண்டு இவனால் சுகமாக இருக்க முடியாது. பிரச்சினைகளில்லாத குடும்பத்தில் வந்திருக்கும் அதிர்ஷ்டசாலிக் குழந்தை. எனக்கு இவனைப் பிடித்திருக்கிறது. ஆனால், அவன் அதிர்ஷ்டசாலியாகவே இருக்கட்டும்.

எனக்கு இவனிடம் அன்பு இருக்கிறது… அது ஆக்ரமிப்பாகக் கூடாது.

“நான் ஒன்று சொல்லலாமா?” என்றேன்.

“சொல்லுங்க…”

“எனக்கு உங்களை முன்பின் தெரியாது. அதேதான் உங்களுக்கும். ஆனால் என்னைப் பற்றிய தகவல்கள் எல்லாம் சேகரித்து என்னைத்தான் கல்யாணம் செய்து கொள்வேன் என்று உங்கள் வீட்டில்கூட சொல்லி வீட்டீர்களாம்…”

“………..”

“என் விருப்பமோ, அபிப்ராயமோ கேட்காமல் இப்படி முடிவெடுக்க உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது?”

“………”
என் குரலில் கடுமை ஏறியது.

“நீங்கள் செய்த காரியம் அபத்தம். வாழ்க்கை சினிமா இல்லை… நீங்களும் சூர்யாவோ, ஆர்யாவோ இல்லை… எனக்கு உங்களை சுத்தமாகப் பிடிக்கவில்லை… தயவு செய்து என் வாழ்க்கையில் குறுக்கே வராதீர்கள்…”

அவன் முகம் சுருங்கியது.

“என்னைப் பற்றிய உங்கள் எண்ணங்களை இந்தக் காதலர் தினத்துடன் விட்டுவிடுங்கள்… இல்லாவிட்டால் நான் மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டியிருக்கும்…”

“நீங்கள்…” என்று ஏதோ கூற வந்தான்.

“ப்ளீஸ் ஸ்டாப்… யு கேன் கோ…” நெருப்புக் கோடு கிழித்தாற்போல் அனல் கக்கினேன்.
செத்த முகத்துடன் திரும்பினான் ஷிவா.

புயலடித்து ஓய்ந்தாற்போல மனசு அமைதியாக இருந்தது. சற்று நேரத்தில் பாரதி என்னிடம் வந்தாள்.

என் மேசை மீதிருந்த பூங்கொத்தைப் பார்த்தவள், “வாவ்… ஷிவா வந்து ‘ஐ லவ் யு’ சொல்லிட்டானா?” என்று கீச்சுக்குரலில் கூவினான்.

“அவனைச் சொல்ல விட்டால்தானே?” என்றேன்.

“அப்படின்னா….? நீ முந்திண்டயா?” என்றாள் பாரதி.

“ஆமாம்…”

“ஹை… என்ன சொன்னே?”

“ஐ ஹேட்யு ன்னு…”

“ஏன் நிரூ… உனக்கு அவனைப் பிடிக்கலயா?” என்றாள் பாரதி.

“எனக்கு அவனைப் பிடிச்சிருந்தது… அதனால்தான்…” என்றேன் சிரித்தபடி.

“அப்ப சரின்னு இல்ல சொல்லணும்…” என்றாள் பாரதி புரியாமல்.

“நமக்குப் பிடித்தவர்கள் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று நினைப்பதுதான் நிஜக் காதல். நாமே உரிமை கொண்டாடி அனுபவிக்க வேண்டும் என்று நினைப்பது சுயநலம்” என்றேன் நான்.

“என்னடி உளர்ற?” என்றாள் பாரதி எரிச்சலுடன்.

“உனக்குப் புரியாது…” என்றேன் நான் புன்னகையுடன். 

இன்று, இப்படியும் ஒரு காதல் கதை மீது ஒரு கருத்து

  1. Surendar says:

    நல்ல கருத்து.. சூப்பர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)