இதுவும் ஒரு காதல் கதை

 

கொழும்பு, கோட்டைப் புகையிரத நிலையத்தின் ஐந்தாவது இலக்க மேடையில் ஆண்களும் பெண்களுமாக யாழ்ப்பாணத்தை நோக்கிச் செல்லும் பிரயாணிகள் நிறைந்து நிற்கின்றனர். வழக்கமாகவே கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் போகும் ஆட்கள் அதிகம் தான். அன்று வழக்கத்தை விட அதிகமாக இருந்தது கூட்டம்.

“கொழும்பு கோட்டையிலிருந்து காங்கேசன்துறையை நோக்கிப் புறப்படும் தபால் புகையிரம் இப்போது ஐந்தாம் இலக்க மேடைக்கு வரும்” புகையிரத நிலையத்திலிருந்த ஒலிபெருக்கி அறிவிக்க ஆரம்பித்ததும் அங்கு நின்றவர்கள் தங்களுடைய பெட்டிகளையும், சாமான்களையும் கைகளில் எடுத்தார்கள். “நான் சூட்கேசை வைத்திருக்கிறன்… நீங்க ஏறி இடத்தைப் பிடியுங்கோ” என்றும் “நீங்க சாமானைப் பத்திரமா வைச்சிருங்கோ. நான் ஏறி இடம் பிடிக்கிறன்” என்று வேறு சிலரும் மற்றவர்களுக்குக் கட்டளையிட்டனர்.

புகையிரத மேடையின் ஓரத்தை நோக்கி வந்த பிரயாணிகளுள் லலிதாவும் ஒருத்தி, மெல்லிய நீல நிற மினிஸ்கேர்ட் அவள் உடலை அலங்கரித்தது. அவளின் கையில் இருந்த சூட்கேஸ் சிறிது பாரமாக இருந்தாலும் அதை அவள் பொருட்படுத்தியதாகத் தெரியவில்லை. “எப்படியாவது ரெயினில் ஒரு சீற் பிடித்துவிட்டால் போதும்” இதுதான் அவளது எண்ணம். லலிதாவுக்குப் பக்கத்தில் நீல நிற டெரிலின் சேட்டுடன் நிற்கிறவனின் பெயர் காந்தன். “லலிதாவுக்குப் பக்கத்தில் அல்லது அவளைப் பார்த்தபடி இருக்கத்தக்கதாக ஒரு பிடிக்கவேண்டும்” இப்படிக் காந்தன் எண்ணிக்கொண்டு நிற்கையில்

புகையிரதம் மேடையருகே வந்ததுதான் தாமதம், ஒருவரை ஒருவர் இடித்துத் தள்ளியபடி ஏறினார்கள்.

லலிதாவும் காந்தனும் ஏறிய பெட்டியில் , இடித்துக் கொண்டு முதலில் ஏறியவர்கள் இடத்தைப் பிடித்துவிட்டதால், இவர்கள் இருவரும் நிற்க வேண்டி நேரிட்டது. ஆட்கள் மிக நெருக்கமாக இருந்ததால் லலிதா அடுத்த பெட்டிக்கு போக முடியவில்லை. லலிதா அ;நத விட்டு அசையாததால் , காந்தன் வேறுபெட்டிக்குச் செல்ல விரும்பவில்லை.

ஸ்டேசன் மாஸ்ரர் பச்சை விளக்கை அசைத்துக் காட்டியதும் “கூ..” வென்று கூவிக்கொண்டு புகையிரதம் புறப்பட்டது. லலிதா நின்ற இடத்துக்குப் பக்கத்திலுள்ள சீற்றில் இருந்தவர்களின் மனம் ‘பெண்’ என்பதற்காக இரங்கியதும் அவளுக்கு இடம் கிடைத்தது. “தாங் யூ” சொல்லிக் கொண்டே சீற்றில் அமர்ந்த லலிதாவைக் காந்தன் மெல்லிய புன் சிரிப்புடன் பார்க்கின்றான். அந்தப் பார்வையில் ஏதோ ஓர் அர்த்தம் இருந்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் காந்தனை லலிதா கவனித்திருக்க மாட்டள்.

காந்தனும் லலிதாவும் தங்களுக்குள் ஒருவரைப் பற்றி ஒருவர் எண்ணிக் கொண்டார்கள்: இளமை இளமையை ஈர்க்கும் இயற்கையைப் பற்றி இதயங்கள் இரண்டும் சிந்திக்கத் தொடங்கின.

“இவளுக்கு நல்ல வடிவான சுருள் தலைமயிர்: விஜயாவின்ரை பல்லுப்போல எல்லாம் நலல சின்னப் பல்லு: ராஜசீயின்ரை கன்னம் மாதிரி நல்ல இதாக இருக்கு. சில பெட்டையளுக்கு மினி ஸ்கேட் பெரிய அலங்கோலமாக இருக்கும். இவளுக்கு நல்லாயிருக்கு. இவளை எப்படியாவது….” என்ற தனக்குத் தெரிந்த சினிமா நடிகைகளின் அழகோடு லலிதாவின் அங்கங்களை ஒப்பிட்டுப் பார்த்துக்கொண்டிருந்தது காந்தனின் மனம்.

லலிதாவின் மனமும் காந்தனையோ சுற்றிக்கொண்டிருந்தது. “இதிலை நிற்கிறவர் சரியாக ஜெயசங்கரை போலை அந்த டெரிலின் சேட் ஐயோ அள்ளுது. ஆள் கொஞ்சம் எண்டாலும் நல்ல வெள்ளை” இப்படியாக அவள் உள்ளம் துள்ளும் வேளையில் கண்கள் காந்தனின் முகத்தையும் முகத்தைத் தடவிக்கொண்டிருக்கும் கரத்தையும் கவனிக்கின்றன.

“வு” என்று உதட்டை உறிஞ்சிவிட்டு “இவருக்கு கை எல்லாம் நல்ல கறுத்த மயிர்: அந்தக் கூர் மீசையும்” என்று தனக்குள் சொல்லிக்கொண்டே புன்னகை ஒன்றை வெளிப்படுத்துகின்றாள். லலிதா தன்னைத் தான் பார்த்துச் சிரிப்பதாக நினைத்த காந்தனுக்குச் சிரிப்பு வருகின்றது. காந்தன் சிரிக்கும் போது கன்னங்கள் இரண்டிலும் குழி விழுவதைக் கவனித்தாள் லலிதா.

“சிரிக்கிற போது கன்னத்தில் குழி விழுந்தால் பின்னுக்குப் பெரிய பணக்காரராக இருப்பினம் எண்டு ஆச்சி அடிக்கடி சொல்லுகிறவ, இவரைப் பார்த்தால் இப்பவே செல்லப்பிள்ளை மாதிரித் தெரியுது” என்று எண்ணிக்கொண்டு வந்த லலிதாவின் உள்ளம் காந்தனின் உள்ளத்தோடும் கலந்து உறவாட விரும்பியது.

கோட்டையில் இருந்து புறப்பட்ட புகையிரதம் பொல்காவலையைக் கடந்து சென்றுகொண்டிருந்தது. லலிதா சாப்பிடும் அழகைச் சிறிது நேரம் இரசித்துப் பார்த்துக் கொண்டிருந்த காந்தன் “டொயிலெட்” டுக்குப் பக்கத்தில் வந்து நின்றான். சாப்பாடு சுற்றி வந்த கடதாசியை யன்னலுக்கூடாக வெளியே வீசிவிட்டு கை கழுவுவதற்காக “டொயிலெட்”டுக்கு வந்தாள் லலிதா. ஆட்கள் அதிகமாக இருந்ததால் “டொயிலெட்” டின் அருகில் நின்ற காந்தனை லேசாக இடித்துக்கொண்டு , நுழைந்தாள் அவள்.

‘டொயிலெட்’ டின் உட்பக்கப் பூட்டு உடைந்துவிட்டதால், லலிதா கையைக் கழுவும் போது சரியாகச் சாத்தப்படாத கதவின் இடைவெளிய+டாக அவளைக் கண்ட காந்தன், “நல்ல வெள்ளைக் கால்” என எண்ணி மகிழ்ந்தான்.

கைகழுவிவிட்டுத் தன் இருப்பிடத்துக்கு லலிதா சென்றபோது அவனும் அவளும் எதிர்பார்த்தது நடந்தது. ஒரு கணப்பொழுது நேரம் இருவரின் உடலும் ஒன்றோடொன்று உரசுப்பட்டது.

“இது நல்ல இதமாயிருக்கு” இருவரின் இதயங்களும் இப்படி எண்ணின.

மாகோ புகையிரத நிலையத்துக்குச் சமீபமாக றெயின் வந்தபோது பெரும்பாலானவர்கள் நல்ல உறக்கத்தில் ஆழ்ந்திருந்தார்கள்.காந்தனையே கவனித்துக்கொண்டு வந்த லலிதாவின் கண்களையும் தூக்கம் தன்வசப்படுத்தித் தழுவிக்கொண்டது.

“ஆழ்ந்த உறக்க நிலையிலும் அழகாகவே இருக்கிறாள்” என்று எண்ணியபடி, அவளையே பார்த்துக்கொண்டிருந்த காந்தனுக்கும் படுக்க வேண்டும் போலத் தோன்றியது. கையில் வைத்திருந்த பேப்பரைக் கதவுக்கு அருகில் விரித்து உறங்க ஆரம்பித்தான்.

காந்தனும் லலிதாவும் தங்களை மறந்த உறக்கநிலையில் இன்பக் கனவு கண்டுகொண்டிருந்தார்கள். கோட்டையிலிருந்து காங்கேசன்துறையை நோக்கிப் புறப்பட்ட புகையிரதமும் , காங்கேசன்துறையிலிருந்து கொழும்பு கோட்டையை நோக்கிப் புறப்பட்ட புகையிரதமும் அனுராதபுரத்தில் ‘செரியோ’ சொல்லிவிட்டுத் தங்கள் பிரயாணங்களைத் தொடர்ந்தன. மதவாச்சியில் மன்னார் பெட்டியைக் கழற்றிவிட்டு புகையிரதம் புறப்பட்டதும் லலிதா விழித்துக்கொண்டாள். காந்தனைக் காணாதால் பெட்டி முழுவதும் தேட ஆரம்பித்தன அவள் கண்கள். ஆசை மிகுதியால் “சீற்றில்” இருந்து எழுந்து அங்குமிங்கும் பார்க்கும் போது கதவருகில் படுத்திருக்கும் காந்தனைக் கண்டாள்.

உறங்கிக் கொண்டிருக்கும் அவனது தோற்றம் சினிமாப் படங்களில் நடிகர்கள் உறங்கும் கட்டம் போலக் கவர்ச்சியாக இல்லை. நீல நிற டெரிலின் சேட் கசங்கிக் காணப்பட்டதோடு, றெயில் பிரயாணத்துக்கே உரிய கறுத்த அடையாளச் சின்னங்களையும் பல இடங்களில் பதித்து வைத்திருந்தது. அவனது அவனது வாயில் இருந்து நீர் சிரித்தால் குழி விழும் கன்னங்களில் வெள்ளையாக உறைந்திருந்தது. கவனத்தைக் தன் பக்கம் கவர்ந்த கையிலுள்ள கறுத்த மயிர்களும் கிறீஸ் போன்ற ஏதோ ஒரு பொருளால் மறைக்கப்பட்டிருந்தன.

இந்த நிலையில் காந்தனைக் கண்டபோது- அவன் மீது அருவருப்பான அபிப்பிராயம் உண்டாகியது லலிதாவுக்கு.

“போயும் போயும் இந்தக் குரங்கையா…..” – முணுமுணுத்துக்கொண்ட உள்ளம் அவளை அப்படியே இருத்தியது.

“வவுனியா வந்திருந்தது” யாரோ சொல்லியது காந்தனின் காதில் தெளிவாக விழுந்தது. எழுந்து லலிதாவைப் பார்த்தான்.

லலிதாவின் நலல அழகான சுருள் மயிர் குலைந்து காற்றில் பறந்து திரிந்ததைக் காந்தனின் கண்கள் கண்டன. உறங்கும்போது தலைமயிர் முகத்திலும் விழுந்ததால் லலிதாவின் முகத்தில் எண்ணைத் தன்மையும் காணப்பட்டது. கண்களும் பீளையைக் கக்கி இருந்தன. வேண்டா வெறுப்புடன் பார்க்கும் கண்கள் பயங்கரத்தையும் வெறுப்பையும் உண்டாக்கியது காந்தனின் மனதில்.

“சீ…..போயும் போயும் இவளை லவ் பண்ண நினைச்சேனே!” என்று தன்னைத் தானே நொந்துகொண்டான் காந்தன்.

கோட்டையில் புகையிரதம் புறப்பட்டபோது லலிதாவும் காந்தனும் எண்ணிய எண்ணங்கள் கொடிகாமத்தை வந்து அடைந்தபோது முற்றாக மாறிவிட்டன. காந்தனைப் பார்க்க விரும்பாத காரணத்தால் லலிதா யன்னலுக்கூடாக வெளியில் தன் பார்வையைப் படரவிட்டாள்.

கொழும்பு கோட்டையில் ஆரம்பமான காதல் நினைவுகள் மாகோ வரும் வரையில் படிப்படியாக வளர்ந்து, மதவாச்சியிலிருந்து படிப்படியாக மறைய ஆரம்பித்து யாழ்ப்பாணம் வந்தபோது…

“அவள் இறங்கின பக்கத்தாலை நான் இறங்கக் கூடாது” என்று நினைத்தபடியே சூட்கேசைத் தூக்கிக் கொண்டு, பிளாட்பாரம் இல்லாத பக்கத்துக் கதவைத் திறந்து புகையிரதத்திலிருந்து இறங்குகின்றான் காந்தன்.

- தினகரன் 1971 – இலங்கை வானொலியிலும் ஒலிபரப்பப்பட்டது – நிர்வாணம் (சிறுகதை) – பதிப்பு: ஒக்டோபர் 1991 – புனித செபத்தியார் அச்சகம், மட்டக்களப்பு 

தொடர்புடைய சிறுகதைகள்
“அண்ணா வந்து விட்டாரம்மா!” ஆனந்தன் வந்து விட்டான் என்பதைச் சொல்லும் போது அருணாவின் முகத்தில் தான் எவ்வளவு ஆனந்தம்! வீடு கூட்டிக் கொண்டிருந்தவள் தும்புக்கட்டையை விறாந்தையின் ஒரு மூலையில் வைத்துவிட்டு “வாங்கண்ணா” என்றாள். பூச்செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றிக்கொண்டிருந்த ஆனந்தனின் தம்பியும் ஓடிவந்தான். ...
மேலும் கதையை படிக்க...
காலம் காத்திருக்குமா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)