அவன் அப்பிடித்தான்..

 

சத்தியனின் மனம் வெம்பியது. அவன் கைகளின் நடுக்கதை, கையிலிருந்த சிகரெட் நுனிச் சிதறல்கள் காட்டிக் கொடுத்தன. அவன் கண்கள் அடிக்கடி வீட்டினுள்ளே புகுந்து வெளியேறின. தான் தனிமைப் படுத்தப் பட்டு விட்டோம் என்ற உணர்வு, அவனை அங்குமிங்கும் நிலையின்றி உலவ வைத்தது. தன் நிலை மெல்ல உணரப்பட அவனிடமிருந்து நீண்டதொரு பெருமூச்சு வெளியேறியது.

மெதுவான அந்தப் புற்தரையில், வெறும் காலோடு நடப்பது சத்தியனுக்குப் பிடித்தமான ஒன்று. இன்று காலைகூட அவன்தான் பின் தோட்டப் புற்தரையை அழகாக வெட்டிவிட்டிருந்தான். தோட்டத்தின் ஒரு பகுதியில், அவன் வைத்த தக்காளி, பீன்ஸ் வகைகள் பூக்களும், பிஞ்சுகளுமாய்த் தமது பருவத்தைக் காட்டிக் கொண்டிருந்தன. இவ்வளவு நாட்களும் அவன் பார்த்துப் பார்த்து அழகு செய்த தோட்டமும், வீடும் திடாரென்று அவனுக்குச் சொந்தமானதல்ல என்ற உண்மை உறைக்க, அவன் உறைந்து போனான். தரை முழுக்க, அவன் புகைத்து எறிந்த சிகரெட் துண்டுகள் சிதறிக் கிடந்தன, அவன் மனம் போல்.

இன்று நான் என் உடமைகளுடன் வீட்டை விட்டு வெளியேறி விட்டால் ? அதன் பின்னர் நிச்சயமாகப் பூட்டப்படப்போகின்ற என் வீட்டுவாசல் எனக்காகத் திறக்காது. இன்று நான் நிச்சயமாக முடிவெடுத்தே ஆக வேண்டும். என் குடும்பமா ? இல்லை எனது வாழ்க்கையா ?

என் குடும்பம் என்று இருந்து விட்டால், என்னை இவர்கள் சும்மாவா விட்டுவிடப்போகின்றார்கள் ? தமது விருப்பத்திற்கும், தமது கெளரவத்திற்குமாய், என் உணர்வுகளோடல்லவா விளையாடப் போகின்றாரகள் ? அப்படியொரு இக்கட்டான நிலை வருவதற்கு முன்னால் வெளியேறி விடுவதே நல்லது. ~~என் உணர்வுகளைக் கிளறிப் பார்த்து மற்றவர்கள் கேலி செய்வதை நான் அனுமதிக்கப் போவதில்லை. இப்போதே இங்கிருந்து நான் வெளியேறியாக வேண்டும். ஆனால்.. ஆனால்..||.

அதன் பின்னர், அப்பா, அம்மா, அண்ணா, தங்கைகள் எல்லோரையும் பிரிந்து, வேறு உலகில் வேறுமாதிரி வாழ வேண்டும். என் உறவுகளைப் பிரிந்து என்னால் சந்தோஷமாக வாழ முடியுமா ? மீண்டும், மீண்டும் அவன் மனதில் இக்கேள்வி எழுந்தாலும், தன்னைத் தன் உணர்வுகளை மதிக்கத் தெரியாத, புரிந்து கொள்ள முயலாத அவர்கள் மேல் அவனுக்கு இயலாமையுடன் கூடிய கோபம் வந்தது.

ஏன் சத்தியன் எனும் மனிதனை, அவனாகவே ஏற்றுக்கொள்ள அவனது குடும்பத்தால் முடியவில்லை ? ஒருவேளை என் குடும்பம் ஏற்றுக்கொண்டாலும் இந்தச் சமூகம் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை. இந்த என் நிலையால் தங்கைகளின் எதிர்காலம் பாதிக்கப்பட்டுவிடுமா ? சத்தியனுக்குச் சிரிப்பாக வந்நது. எந்த நூற்றாண்டில் இருந்து கொண்டு நான் இப்படியெல்லாம் சிந்திக்கிறேன் ? தனி மனிதனின் உணர்வுகள் மதிக்கப் பட வேண்டும். நான் கூறுகிறேன். என்னைப்; போல் மற்றவர்களும்தான் கூறுகின்றார்கள். ஆனால் நடைமுறையில் எதுவுமே சாத்தியமற்றுப் போகின்றது. முற்போக்குச் சமூகம் என்பது வெறும் சொற்களால் ஆன ஒரு கனவு உலகு மட்டுமே. யதார்த்தம் எனும் போது, எமது சமூகத்தை நார் உரித்துப் பார்க்கும் போது, உள்ளே.. எல்லாமே வேஷம்.. இந்தச் சமூகத்திற்குள்தானே எனது குடும்பமும் அடங்கும். இதனால்தானா, எனது இந்த நிலையை எனது பெற்றோருக்கு விளங்கப்படுத்த நான் முயல்கையில், கிராமத்துப் பெண்களைப் போல் எனது அம்மா தலையில் அடித்துக் கதறினாள் ? எவ்வளவுதான் படித்துப் பட்டம் பெற்றிருந்தாலும், மற்றைய மனிதர்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளாது, ~~நீ இப்படித்தான் இருக்க வேண்டும், இப்படி இருப்பதுதான் உனக்கும் உன் குடும்பத்திற்கும் கெளரவம். அவன் குடும்பம் அவன் உணர்வுகளுக்கு வேலி போடும் போது, சத்தியன் உள்ளுக்குள்ளேயே துவண்டு போனான். நான் என்ன வேணுமென்றா இப்படி நடக்கிறேன் ?. என் உணர்வுகள் மற்றைய மனிதர்களின் உணர்வுகளிலிருந்து வேறுபட்டுப் போனதற்கு நானா காரணம் ? கோபம், அவமான உணர்வுகள் ஒன்று கூட, அவனை அறியாமலே அவன் கண்களிலிருந்து கண்ணீர் உருண்டது.

புகைந்து முடிந்து சிகரெட் கையைச் சுட சுயநினைவிற்கு வந்தான் சத்தியன். வீட்டினுள், இன்னும் அம்மா அழுது புலம்புவது கேட்டது. பாவம் அம்மா! எனக்கு ஏதோ தீர்க்க முடியாத நோய் வந்துவிட்டதாய் எண்ணி, எத்தனை வைத்தியர்களிடம் என்னை அழைத்துக்கொண்டு போனாள். ~~இது அவன் விருப்பம், இது ஒன்றும் மருந்து கொடுத்துத் தீர்க்கும் வியாதியல்ல|| என்று மனோதத்துவ வைத்தியர்கள் கூறியபோது, ~~இவங்கள் இப்பிடித்தான் சொல்லுவாங்கள் நான் உன்னை எங்கட ஆக்கள் ஆரிட்டையும் கூட்டிக்கொண்டு போகப் போறன்|| அம்மா மனம் தளராது கூற, அம்மா மனம் நோகக்கூடாது, அவளின் திருப்திக்காக என்று, அம்மா அழைத்த இடத்திற்கெல்லாம் ஒரு நாயைப் போல் பின் தொடர்ந்தான் சத்தியன்.

சத்தியனுக்கு, தான் ஆண்களால் கவரப்படுபவன் என்ற உணர்வு உணரப்பட்ட நாளும், அதனால் அவன் சிறிது தடுமாறிப் போனதும் நினைவிற்கு வந்தது. அவனுக்கு அப்போது பதினைந்து வயதிருக்கும். கொழும்பில் இருக்கும், ஒரு ஆண்கள் உயர்பள்ளியில் அவன் சேர்க்கப் பட்டான். முதல்நாள் அவன் வகுப்பறையை அடைந்த போது எல்லோருமே புதிய மாணவர்கள்.

புதிதாக வந்திருக்கும் சத்தியனின் முகம் பார்த்து, ஸ்னேகமாகச் சிரித்தவர்கள் சிலர். ஓரு எதிரியைப் பார்ப்பதுபோல் பார்த்தவர்கள் சிலர். புதிதாக ஒருத்தன் வந்திருக்கிறான் என்ற சுரத்தையே இல்லாமல், தமக்குள் கதைத்துக்கொண்டிருந்தவர்களும் இருந்தார்கள். எல்லோரையும் கடந்து, தனக்கென்னிருந்த இருக்கையில் அமர்ந்தான் சத்தியன். ஆசிரியர் வந்து பாடம் தொடங்கினார். தன்னை யாரோ உற்றுப்பார்ப்பது போலொரு உணர்வு எழ, திரும்பிப்பார்த்தான் சத்தியன். சிறிது நீலமடிக்கும் கண்கள். அகன்ற தோள்கள். சிவந்த உதடுகள். அந்த முகத்தில் பெண்மையுடன் கூடிய ஒரு தேஜஸ்.

சிறிது காலமாகவே, இரவின் அவஸ்தைகளுக்குள் அல்லாடிக்கொண்டிருந்த சத்தியனுக்கு, இந்தப் புதிய முகம் ஏதோ கூறுவது போல்ப் பட்டது. அவன் கால்களில் மின்சாரம் பாய்ந்தது. கைகள் குளிர்ந்து போன. முதற்பார்வையிலேயே சத்தியனுக்கு அவனைப் பிடித்துப் போயிற்று.

ஒரு அழகிய பெண்ணைக் கண்ட வாலிபன், எப்படி உடல் சிலிர்த்துப் போவானோ, அதே நிலையில்தான் சத்தியன் இருந்தான் அப்போது. அவனுக்குத் தன் நிலையில் சிறிது வியப்பு ஏற்பட்டது.

பக்கத்து வீட்டு நிஷா, அடிக்கடி சத்தியனின் வீடு தேடி வந்து, அவனை உரசுவது போல் நின்று வம்பு பேசுவதும், ~~அவளுக்கு உன்னில ஒரு கண், பேசாமல் ஒரு நாளைக்கு கையைப் போடடா.. நான் எண்டால் இவ்வளத்துக்கும்..|| அண்ணா காமக் கண்ணோடு சத்தியனைப் பார்த்துக் கண்ணடிக்க, சத்தியனுக்கு அருவருப்பாக இருந்ததே தவிர, உணர்வுகளில் எந்தவித மாற்றமும் எற்பட்டதில்லை.

ஆனால் இப்போது சத்தியனின் உணர்வுகளில் பல மாற்றங்கள். அந்த இளைஞனின் அழகிய முகத்தைத் திரும்பத் திரும்பப் பார்க்க வேண்டும் போலொரு உணர்வு. மனம் குழம்பிய நிலையில் மீண்டும் அவன் முகம் நோக்கினான் சத்தியன். மெல்லிய ஒரு புன்னகையுடன் சத்தியனையே பார்த்துக்கொண்டிருந்த அந்த இளைஞன், மெல்லத் தலை அசைத்தான். சிறிது கூச்சத்துடன் சத்தியனும் தலையசைத்தான். தாம் எதற்குத் தலையசைத்தோம் என்பது அவனுக்கே புரியவில்லை. ஆனால் அவனை தனக்கு மிகவும் பிடித்திருந்தது என்ற உண்மை மட்டும் சத்தியனுக்குப் புரிந்தது.

பாடசாலை இடைவேளையின் போது, தனது பெயர் ஸ்ரீபன் என்று சத்தியனிடம் தன்மை அறிமுகம் செய்து கொண்டான் அந்த இளைஞன். ஸ்ரீபன் ஒரு ஆங்கிலக் கலப்பில் பிறந்தவன் என்பதை அவன் தோற்றம் சொன்னது. சத்தியன் தன்னை அவனிற்கு அறிமுகம் செய்துவிட்டுத் தொடர்ந்து என்ன கதைப்பது என்று தடுமாறிக்கொண்டிருக்க, அங்கே வந்த ஒரு இளைஞர் கூட்டம் சத்தியனைப் பார்த்து ~~வந்த முதல் நாளே இந்தப் பெட்டையனோட சேந்திட்டாய் இனி உருப்பட்ட மாதிரித்தான்|| என்று கூறிச் சிரித்து நகர்ந்தார்கள்.

சத்தியன் கேள்விக்குறியோடு ஸ்ரீபனைப் பார்த்தான். ~~என்னை எல்லாரும் இப்பிடித்தான் கூப்பிடுறவை|| தலை குனிந்து அவன் சோகமானான். சத்தியனுக்கு, தான் சிறு வயதில் ஆண்களுடன் சேர்ந்து கொண்டு கிரிகெட், புட்போல் என்று விளையாடாமல், தங்கைகளுடன் சேர்ந்து கொண்டு, சீலை கட்டி, காப்பு, சங்கிலி போட்டு விளையாடும் போது, அவன் அண்ணா நண்பர்களுடன் சேர்ந்து கொண்டு, ~~பெட்டையன், பெட்டையன்|| என்று கூறிச் சிரித்தது கண்முன்னே வர, தன்னைப் போல் ஒருவனை, தன் உணர்வுகளைப் புரிந்து கொள்ளக் கூடிய ஒருவனைக் கண்டு கொண்ட சந்தோஷத்தில் ~~நான் அப்பிடிக் கூப்பிட மாட்டன், எனக்கு உன்னைப் பிடிச்சிருக்கு நாங்கள் நல்ல ப்ரெண்ஸா இருப்பம்|| உணர்ச்சிவசப்பட்டு ஸ்ரீபனின் கைகளைப் பற்றினான் சத்தியன். அவனிற்கு அப்படிக் கூற வேண்டுமென்று எப்படித் தோன்றியது. புரியவில்லை.. ஆனால் ஸ்ரீபனின் கை பற்றியதும் மின்சாரம் பாய்ந்தது போல் தன் உடலில் ஏற்பட்ட மாற்றம், அதே மாற்றத்தால் தாக்குண்டவனாய் ஸ்ரீபனும் ஸ்தம்பித்து நின்றது, இருவருக்கும் தமக்குள்ளான உணர்வுகள் தெளிவாக, கைகளை விடுத்துக்கொண்டு மெளனமானார்கள்.

அவர்கள் உறவு சிறிது, சிறிதாய் இறுக்கமாகி, உணர்வுகள் பரிமாறப் பட்ட வேளை, நாட்டு நிலமை மோசமாகி, சத்தியனின் குடும்பம் கனடாவிற்கு குடிபெயர்ந்து விட்டது. தம் உறவில் ஏதோ தவறு இருப்பதாக சத்தியன் எண்ணியதால், பெற்றோரிடம் ஸ்ரீபன் பற்றி மனம் விட்டுக் கதைக்கத் தயங்கினான். முடிவு. ஸ்ரீபனை அவன் இழக்க நேர்ந்தது.

கனடா வந்தபின் சில காலம், ஸ்ரீபனின் நினைவுகளால் அவன் அல்லாடிய நாட்களும் உண்டு. இருந்தும், புதிய நாடு, புதிய பாடசாலை என வாழ்க்கை முறையில் ஏற்பட்ட மாற்றங்கள், ஸ்ரீபனை அவன் சிறிது சிறிதாக மறக்க உதவின. பின்னர் பல்கலைக்கழகம் சென்று, ஜேம்ஸை சந்தித்த போதுதான், மீண்டும் அவனிடம் அந்தப் பழைய உணர்வுகள் வெளிப்படத்துடங்கின.

இப்போது சத்தியன் மிகவும் தெளிவாக இருந்தான். தன்நிலைபற்றித் தெளிவாகப் புரிந்து கொள்ளும் வயதும், பக்குவமும் அவனுக்கு இப்போது இருந்தன. தன்நிலை கண்டு, வெட்கப்படவோ, வேதனைப்படவோ இல்லை அவன். விரைவில் பெற்றோருடன், தன்நிலை பற்றிக் கதைக்கவும் அவன் முடிவு செய்திருந்தான்.

ஸ்ரீபனின் இழப்பை அவன் ஜேம்ஸிடம் கொண்ட உறவால் மீண்டும் பெற்றுக் கொண்டான். ஜேம்ஸைப்பற்றிப் பெற்றோரிடம் கதைக்கும் ஒரு நல்ல சந்தர்ப்பத்திற்காய் அவன் காத்திருந்த வேளை, அவன் சிறிதும் எதிர்பாராத வகையில் புயலாக அந்த சேதியை அவன் தாயார் கூறினாள். சத்தியனிற்கு திருமணம் செய்து கொள்ளும் வயது வந்துவிட்டதாகவும், தனது நண்பியின் மகளை அவனுக்குத் திருமணம் செய்து வைப்பதற்குத் தாம் முடிவெடுத்திருப்பதாகவும், அவனின் சம்மதத்தையும் கேட்டாள் அவள்.

தனக்கு இப்போது திருமணம் வேண்டாம் என்று சத்தியன் கூற, வழமை போல் எல்லாப் பெற்றோர்களும் கேட்கும் கேள்வியையே அவனின் பெற்றோரும் கேட்டார்கள். ~~யாரையாவது காதலிக்கிறாயா ?|| தமது கெளரவத்திற்குக் குறைவில்லாது யாரை சத்தியன் காதலித்தாலும் தாம் திருமணம் செய்து வைக்கத் தயாராக இருப்பதாக அவர்கள் சொல்ல, சத்தியனுக்குத் தனது உண்மை நிலை புரியத் தொடங்கியது.

குடும்ப கெளரவத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் தனது பெற்றோரிடம,; ஜேம்ஸிடம் தான் கொண்டுள்ள காதலை, எப்படி அவனால் கூறமுடியும். சத்தியன் மெளனமானான்.

அவனது மெளனத்தை தமக்குச் சாதகமாக்கிக்கொண்டு, திருமண ஏற்பாட்;டில் அவனது பெற்றோர் அடி எடுத்து வைக்க, வேறு வழியின்றி, ஜேம்ஸிடம் தான் கொண்ட உறவை உடைக்க வேண்டிய கட்டாயம் அவனிற்கு. வீடு உடைந்து போனது. முடிவில், சத்தியனுக்கு ஏதோ ஒரு வகை நோயென்று அவள் தாயாரும், இவன் இயற்கையில் இருந்து மாறுபட்ட ஒருவகை ஜந்து என்பதாய் அவன் தந்தையும், அவன் முகம் பார்த்துக் கதைக்கத் தயங்கிய அண்ணனும், கலங்கிய கண்களுடன் விலகிச் சென்ற தங்கைகளுமாய் சத்தியனை உலுக்கி எடுத்தார்கள்.

பல நாட்கள் போராட்டத்தின் பின்னர், சத்தியன் தன்னை மாற்றிக்கொள்ள வேண்டும், முடிவு செய்த பெண்ணையே திருமணம் செய்து கொள்ளவும் வேண்டும், மறுத்தால் இந்த வீட்;டில் அவனிற்கு இடமில்லை என்பதாய் முடிவாயிற்று.

அவனுக்குக் கொடுக்கப்பட்ட கடைசி நாள் இன்றுதான்.

சத்தியன் நிலை கொள்ளாது தவித்தான். ஒரு பெண்ணை அவனால் காதலிக்க முடியாது என்ற உண்மை தெரிந்த பின்னரும், தமது கெளரவத்திற்காகவும், இந்த சமூகத்திற்குப் பயந்தும், தனது உணர்வுகளையும், ஒரு அப்பாவிப் பெண்ணின் வாழ்க்கையையும், பலி போடத்துணிந்த தனது பெற்றோர் மேல் சத்தியனுக்கு வெறுப்பாக வந்தது.

வீடு இப்போது அமைதியாகக் காணப்பட்டது. அவனுடைய பதிலுக்காக எல்லோரும் காத்திருப்பது புரிந்தது. மேல்அறை, திரைச்சீலையை விலக்கி விட்டு, அவன் தங்கைகள் அவனைப் பார்த்துக்கொண்டிருப்பது தெரிந்தது.

அண்ணனுக்குக் கலியாணம் ஆகிவிட்டது. தங்கையும் ஒருத்தனைக் காதலிக்கிறாள் விரைவில் கலியாணம் நடக்கவிருக்கிறது. ஆனால் எனக்கு மட்டும் ஏன் இப்படியாயிற்று ? முதல் முறையாக கேள்விக் குறியானான் சத்தியன். தன்மேலேயே அவனுக்கு இரக்கம் எழுந்தது. என் இந்த நிலையால் நான் உயிராக நேசிக்கும் எனது குடும்பத்தை இழக்கப் போகின்றேன். வீட்டில் நடக்கும் ஒவ்வொரு விஷேட நிகழ்ச்சிகளிற்கும் நான் இல்லாது போகப்போகின்றேன். ஏன் என் ஏக்கம் இவர்களுக்குப் புரியவில்லை ? என்னை ஏன் ஏற்க மறுக்கின்றார்கள் ? என் அம்மா கூட என்னை ஏற்க மறுக்கிறாளே! குழம்பிக் குழம்பி, சிந்தித்துச் சிந்தித்து எஞ்சிய வெறுப்போடு ஒரு தீர்மானத்திற்கு வந்த சத்தியன், வீட்டினுள்ளே புகுந்தான். ஆவலோடு அவன் முகம் பார்த்த தாயரின் பார்வை தவிர்த்து, தன் அறைக்குள் புகுந்து கொண்டவன், தன் உடமைகளுடன் வீட்டை விட்டு வெளியேறினான். சத்தியனைத் தொடர்ந்தது, தாயாரின் அழுகை ஒலி மட்டுமே.

- உயிர் நிழல் 2004 

தொடர்புடைய சிறுகதைகள்
'அந்த எண்ணம் எனை விட்டகல நீ தான் அருள்புரிய வேண்டும் பரா பரமே ' நொய்மைப் பிண்டம்: மெல்ல, மெல்ல மேலே எழுந்து சில நிமிடங்கள் இயங்க மறந்து, பின் தொப்பென்று கட்டிலில் விழுந்தது. அசைந்து பார்க்க அச்சம் வந்தது. பெருவிரல்கள் ...
மேலும் கதையை படிக்க...
விண்ணென்று விறைத்ததுபோல் அசையாதிருந்தேன் கட்டிலில். எட்டி எட்டிப் பார்த்துச் சென்றன என் செல்வங்கள். ராகம் போட்டு வாய் பிளந்து பால் வடிய சிரித்துக் கொண்டிருந்தது இன்னுமொன்று பக்கத்தில். என் கடுப்பு எவ்வளவு நேரம். சிதைந்து விடும் விரைவில். இதுதானே என் சுபாவம். ...
மேலும் கதையை படிக்க...
மிகமிக நீண்ட துாரத்தில் முகில்களில் சாயையால் அவள் ஒருகால் மடித்து பிருஷ்டம் சரியப்படுத்திருந்தாள். தொப்புள்கொடியின் விடுபடலின் அவஸ்தையாய் இழுபட்டு மிதந்துகொண்டிருந்த அவன் கைகள் கிளைகளாய் நீண்டு அவள் இடுப்பில் மெல்ல நகர்ந்து காயங்களின்றி இறுக்கி, இழுத்தது. முழங்கால் மடித்து குதியினால் அவன் ...
மேலும் கதையை படிக்க...
'ஏதோ ஒரு வெளியில் விடுபட்டவளாய் கைகளை அகல விரித்துப் பறந்து கொண்டிருக்கிறேன். இது சுதந்திரத்தின் குறியீடு அல்ல இருக்கைக்கும் இறத்தலுக்குமான போராட்டம். வானுக்கும் மண்ணுக்குமான இடைவெளி. ஆரம்பத்திற்கும் முடிவுக்குமான தத்தளிப்பு. சிந்தனைகள் மாறிமாறி மோதி என்னைக் குழப்பதிற்குள் தள்ளி விட.. வெறுமனே ...
மேலும் கதையை படிக்க...
பயணம் நிச்சயமாகி விட்டது. .எப்படியாவது யன்னலருகிலுள்ள சீட்டை புக் பண்ணுங்கள் என்ற போது “என்ன கடைசி நேரத்தில இப்பிடி கேக்கிறீங்கள்” என்று அவன் சினப்பது தெரிந்தது.. “வரேக்க ஒரு பட்டு வேட்டி சால்வை வாங்கிக்கொண்டு வருவன்” என்றதும்.. வினோதமான ஒரு ஒலியுடன் ...
மேலும் கதையை படிக்க...
வடு
பிளாஸ்டிக்
ஒரு நீண்ட நேர இறப்பு
அமானுஷ சாட்சியங்கள்..
பெண்கள்: நான் கணிக்கின்றேன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)