சிவகாமிக்கு செல்வன் ஆன திருமலைக் குமரன்!

 

”அம்மா… சிவகாமி! உனது குறை என்னவென்று எனக்குத் தெரியும். ஆனால், உன் மணி வயிற்றில் மகவு பிறக்க வாய்ப்பு இல்லை. அதோ மேற்கில் மலை மீது இருக்கும் முருகப் பெருமான்தான் உன் குழந்தை. இன்றே அவன் சந்நிதிக்குச் செல். இனி, அவனையும் அவன் உடைமைகளையும் போற்றிப் பாதுகாக்க வேண்டியது உன் பொறுப்பு. நீ கட்டித் தந்த மண்டபத்தில் இருக்கும் நான், உனக்குச் சொல்வது இதுதான். சொன்னதைச் செய்யம்மா!”

- இஸ்லாமியத் துறவியான வாலர் மஸ்தானின் இந்த வார்த்தைகள் மனதைத் தைக்க, அந்த தருணமே… தனது வருத்தத்தை உதறி விட்டு, திருமலைக் குமரனின் கோயிலை நோக்கிப் புறப்பட்டார் சிவகாமியம்மை. ‘இனி, நான் ஆறுமுகனின் அன்புத் தாய்’ என்ற எண்ணமே அவரிடம் மேலோங்கியிருந்தது. அவர் கிளம்பியதும் வாலர்மஸ்தானும் அங்கிருந்து கிளம்பினார். அதன் பிறகு, அவர் யார் பார்வையிலும் படவில்லை.

சிவகாமிக்கு செல்வன்1மூங்கில் காடுகள், முட்புதர்கள்… என்று பல தடை களைத் தாண்டி, குமரன் குடிகொண்டிருக்கும் மலையின் அடிவாரத்தை அடைந்தார் சிவகாமியம்மை. மலையில் ஏற, சீரான பாதை இல்லை! எனினும் மகனை மனதுக்குள் தியானித்தவாறு மலை மேல் ஏறிய சிவகாமியம்மை, சரவணபவனின் சந்நிதியில் நின்றார்.

பந்தள மன்னரால் கட்டப்பட்ட சின்னஞ்சிறு மண்டபத்தில் பூஜை ஏதும் இல்லாமல், தன்னந்தனியனாக நின்று கொண்டிருக்கும் தண்டாயுதபாணியைக் கண்ட தும் சிவகாமியம்மையின் உள்ளம் உருகியது.

கண்ணில் நீர் மல்க, ”மகனே! இந்த விநாடியில் இருந்து உன்னையும், உன் உடைமைகளையும் பாதுகாப்பதே என் பணி… இது சத்தியம்!” என்றவர், முருகப் பெருமானை மனமுருகப் பிரார்த்தித்து விட்டு திருமலையில் இருந்து கீழே இறங்கினார்.

அடிவாரத்தில் இருந்து கிழக்கே ஒரு பர்லாங் தொலைவில் உள்ள ‘வண்டாடும் பொட்டல்’ எனும் இடத்தில் தங்கினார் சிவகாமியம்மை. காவி உடுத்தி துறவியாகிக் கையில் வேல் தாங்கி, கந்தனது திருத்தொண்டில் ஈடுபடலானார். சிறு மண்டபத்தில் அருள்பாலிக்கும் திருமலைக் குமரனுக்கு ஓர் அழகான மண்டபம் கட்ட வேண்டும் எனத் தீர்மானித்தவர், அதற்காகத் தனது உடைமைகளை விற்றுச் செலவு செய்தார்.

கோயில் திருப்பணிக்காகக் கைக்காசை செலவு செய்ய அஞ்சாத சிவகாமியம்மை, திருப்பணிக்குத் திருமலையில் இருந்து கல் எடுக்க அஞ்சினார். வேறு இடங்களில் இருந்து கல் வெட்டப்பட்டு, பிரமாண்ட மான தூண்களும், உத்திரங்களும் செய்து முடிக்கப் பட்டன. அவற்றை மலைக்கு மேல் கொண்டு செல்ல, இரண்டு யானைகளும் நூற்றுக்கணக்கான ஆட்களும் ஈடுபடுத்தப்பட்டார்கள்.

பெருத்த தூண்களையும், உத்திரங்களையும் பனை நாரினால் நன்கு முறுக்கப் பட்ட கயிறுகளைக் கொண்டு இழுக்கும்போது… சில நேரம், கயிறுகள் அறுந்து போயின! உத்திரமோ… தூணோ… வேகமாக மலையில் இருந்து ‘தடதட’வென உருண்டு வரும். அப்போதெல்லாம் சிவகாமியம்மை, ”முருகா! முருகா!” என்று அலறிய படியே ஓடிப் போய், தன் தலையைக் கொடுத்து அதைத் தாங்கி நிறுத்துவார்; மறுபடியும் அது மேலே இழுக்கப்படும் வரை அப்படியே இருப்பார்.

உயிரைப் பற்றிய கவலை யின்றி இப்படித் திருப்பணி யில் ஈடுபட்டிருந்தவரை துயரத்தில் ஆழ்த்தும் வித மாக, கையிருப்பில் இருந்த பனை நார்க் கயிறுகள் தீர்ந்து போய் விட்டன. அவை, திருச்செந்தூர் பக்கம் கிடைக்கும் என்பதை அறிந்த சிவகாமியம்மை, திருச் செந்தூருக்குப் போனார். அங்கே…இவருக்காக ஓர் அற்புதத்தை நிகழ்த்தக் காத்திருந்தார் திருச்செந்தூர் முருகன்!

சிவகாமியம்மை திருச்செந்தூர் அடைந்தபோது, மாசி மகத்தை முன்னிட்டு செந்தூராண்டவன் தேரில் திருவீதி உலா வந்து கொண்டிருந்தான். ஸ்வாமியைத் தரிசனம் செய்வதற்காக முயற்சித்தார் சிவகாமியம்மை.

சிவகாமிக்கு செல்வன்2ஆனால் கோயில் பணியாளன் ஒருவன், ”போ! அந்தண்டை!” என்று இழிவாகப் பேசித் தள்ளி விட்டான். தேர் முன்னால் போய் விட்டது. ‘ஸ்வாமியைத் தரிசிக்க முடியவில்லையே’ என்ற வருத்தத்துடன் கண்ணீர் உகுத்தபடி நின்றிருந்தார் சிவகாமியம்மை.

இந்த நிலையில் திடீரென்று தேர் நின்றது. ஆயிரக் கணக்கான பக்தர்கள் கூடி இழுத்தும், தேரை அசைக்கக் கூட முடியவில்லை. அப்போது, அங்கிருந்த பக்தர் ஒருவருக்கு ஆவேசம் வந்தது. ”என் பக்தை ஒருத்தி, தேருக்குப் பின்னால் கண் கலங்கி நிற்கிறாள். அவள் வந்து, வடம் பிடித்து இழுத்தால்தான் தேர் ஓடும்!” என்றார் அவர்.

உடனே, கோயில் நிர்வாகிகள் உட்பட முக்கியஸ்தர்கள் பலரும், சிவகாமியம்மையைத் தேடிப் பிடித்து அவரிடம் மன்னிப்பு கேட்டனர். பிறகு, சிவகாமியம்மை வடம் பிடித்து இழுக்க, செந்தூரானின் தேர் நகர்ந்தது. அனைவருக்கும் ஆச்சரியம். தொடர்ந்து அவர்கள் சிவகாமி அம்மையிடம் விசாரித்தபோது… அவர், பனை நார் வாங்க வந்திருப்பதை அறிந்தனர்.

பிறகென்ன! ஒவ்வொருவரும் போட்டி போட்டுக் கொண்டு, தங்களது பொறுப்பிலேயே ஏராளமான பனை நாரைத் திருமலையிலேயே கொண்டு போய்ச் சேர்த்தனர். சிவகாமியம்மையின் பக்தி திருச்செந்தூர் முழுவதும் பேசப்பட்டது.

ஒரு நாள் சிவகாமியம்மையின் கனவில் தோன்றிய முருகப் பெருமான், ”அம்மா, காளை மாடுகள் பூட்டிய வண்டியில் புளியறை என்ற ஊருக்கு நாளைய தினம் போ! அங்கு போனவுடன் வண்டியில் இருந்து காளைகளை அவிழ்த்து விடு! அவை, ஓரிடத்தில் கால்களால் மண்ணைக் கிளறும். அந்த இடத்தைத் தோண்டினால், எனது உடைமை(நிலங்)களுக்கு உண்டான ஆதாரங்கள் கிடைக்கும்” என்றார்.

செவ்வேளின் கட்டளையைச் சிரமேற்கொண்ட சிவகாமியம்மை அப்படியே செய்தார். புளியறையில், காளைகள் மண்ணைக் கிளறிய இடத்தில், இரண்டடி அகலமும் பத்தடி நீளமும் உள்ள ஒரு பெரிய கல் வெட்டு கிடைத்தது. அதில், திருமலை முருகனுக்காகப் புளியறையில் 160 ஏக்கர் நிலங்கள் வழங்கப்பட்டதாக இருந்தது. அவற்றில் விவசாய நிலங்களுடன் தோப்புகளும் அடங்கும்.

அந்த நிலங்கள் தற்போது யாரிடம் உள்ளன என்பதை அறிய விரும்பிய சிவகாமியம்மை, அதற்கான முயற்சியில் இறங்கினார். அவை, அவ்வூரில் வாழ்ந்த ராயர் ஒருவரிடம் இருப்பது தெரிய வந்தது. அவர் பண பலமும் ஆள் பலமும் மிக்கவர்.

ஆனால், சிவகாமியம்மை அதற்கெல்லாம் பயப்படவில்லை. நீதிமன்றங்களில் வழக்குத் தொடுத்தார். இறுதித் தீர்ப்பு திருவனந்தபுரம் உயர்நீதிமன்றத்தால் வழங்கப்பட்டது. வெற்றி- சிவகாமியம்மைக்கே.

திருவிதாங்கூர் ராஜ்ஜியத்தின் ஒரு பகுதியாகப் புளியறை கிராமம் இருந்த காலம் அது. ஏறத்தாழ 120 கி.மீ. தூரம்… அடர்ந்த காட்டில் வண்டி மூலமும், நடந்தும் சென்று சிவகாமியம்மை போராடி வெற்றி பெற்றது தனிக் கதை. நீதிபதி உட்பட அங்கிருந்த அனைவருக்கும் முருகனின் பெருமையை உணர்த்திய நிகழ்ச்சி அது.

‘நிலங்கள் திருமலை முருகனுக்கே!’ என்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியும், நிலங்களை ஒப்படைக்க ராயர் மறுத்து விட்டார். பல வருடங்களாக அனுபவித்த செல்வ சுகத்தை இழக்க அவர் விரும்பவில்லை. செல்வாக்கு மிகுந்த அவருக்கு, அப்போதைய அரசு அதிகாரி கள் சிலரும் ஒத்துழைப்பு கொடுத்தனர்.

”ஒரு பண்டாரப் பரதேசிப் பொம்பள! அவளால என்ன முடியுமோ பார்த்துக்கட்டும்!” என்று எக்காளமிட்டார்கள். சிவகாமியம்மை திகைத்தார். அவரது கலக்கத்தைத் திருமலை முருகன் தீர்த்து வைத்தார்.

ஒரு நாள்… சிவகாமியம்மையின் கனவில், குழந்தை வடிவில் தோன்றிய கந்தவேள், ”அம்மா… நாளையே நீ, நூறு ஏர்களுடன் புளியரைக்குப் போ. நமது வயல்களில் ஏர்களைப் பூட்டு. நீயே, முதல் ஏரை நடத்திச் செல். நானும் துணை புரிவேன்!” என்றார்.

இரவோடு இரவாக நெடுவயல், அச்சன்புதூர் முதலான இடங்களில் எல்லாம் சுற்றி, நூறு ஏர்களையும் அதற்கு உண்டான ஆட்களையும் திரட்டினார் சிவகாமி அம்மை. மறுநாள் பொழுது விடிவதற்குள்ளாகவே புளியறைக்குப் போய், திருமலைக் குமரனுக்கு உரிய நிலத்தில் ஏர்களைப் பூட்டினார். முருகனைத் தியானித்தபடி முதல் ஏரைப் பிடித்துக் கொண்டு சிவகாமியம்மை முன் செல்ல, மீதி தொண்ணூற்றொன்பது ஏர்களும் பின்தொடர்ந்தன.

ராயருக்குத் தகவல் தெரிந்தது. கட்டாரி, அரிவாள், கம்பு முதலான ஆயுதங்களைத் தாங்கிய நூற்றுக்கணக்கான ஆட்களுடன் அவர் அங்கு வந்து விட்டார்.

”ஒரு பொம்பளைக்கு இவ்வளவு திமிரா? சாமியாராப் போனவளுக்கு இந்த வேலை எதுக்கு?” என்றெல்லாம் குரல்கள் தடித்தன. அத்துடன் நிற்கவில்லை… ராயருடன் வந்தவர்கள், ஏர்களில் கட்டியிருந்த மாடுகளின் கயிறுகளை அறுத்து வீசினார்கள்.

அவ்வளவுதான். கயிற்றில் இருந்து விடுபட்ட இரு நூறு மாடுகளும் ஆவேசம் கொண்டு பாய்ந்தன. குதர்க்கம் பேசிக் குந்தகம் விளைவிக்க வந்தவர்களின் குடல்களைக் கொம்புகளால் குத்தி சாய்த்தன. தப்பிப் பிழைத்த ஒரு சிலர், கைகளில் இருந்த ஆயுதங் களை வீசி விட்டு ஓட்டம் பிடித்தனர்!

ஆள் பலத்தை விட அருள் பலமே பெரிது என்பதை ராயர் உணர்ந்தார். நிபந்தனைகள் ஏதுமின்றி நிலங்களை, சிவகாமி யம்மையிடம் ஒப்படைத்தார்.

”ஆஹா! என் மகனின் சொத்தைக் காப்பாற்றி விட் டேன்” என்று மகிழ்ந்தார் சிவகாமியம்மை.

சிவகாமியம்மை மீட்டுத் தந்த இந்த நிலங்களில் இருந்துதான், இன்றும் அதிகமான வருவாய் திருமலை முருகனுக்கு வந்து கொண்டிருக்கிறது.

இப்படிக் கோயிலை விரிவுபடுத்திக் கட்டியதுடன் சிவகாமியம்மை நிறுத்திக் கொள்ளவில்லை. கோயிலின் தினசரி வழிபாட்டு முறைகளையும், விழாக்களையும் வகுத்ததோடு, அவை நன்கு நடப்பதற்காக நிலையான திட்டங்களையும் வகுத்து வைத்தார். தன்னந்தனி ஆளாக நின்று சிவகாமியம்மை செய்த சாதனை இன்றளவும் புளியறை மக்களால் புகழப்படுகிறது.

- ஜூலை 2008 

தொடர்புடைய சிறுகதைகள்
திருமணம் பேச வந்தவர்கள் திகைத்து நின்றது ஏன்?
இயற்கை வளம் கொழித்துக் கிடந்தது. பச்சைப் பசேலென வயல்வெளிகள். பசுக் குலம் ‘அம்மா!’ என்று அழைப்பதும் அவற்றின் கழுத்து மணி ஓசைகளும் மென்மையாகக் கேட்டன. இடையர்களின் சொர்க்க பூமியாகத் திகழ்ந்தது தொண்டை நாட்டின் காரணை என்ற அந்தக் கிராமம். அங்கிருந்தவர்களின் தலைவர் ...
மேலும் கதையை படிக்க...
கைகேயி பிறந்த கதை!
கைகேயியைப் பற்றிப் பலர் பல விதமாகப் பேசிக் கொண்டிருக்கிறோம்; ஏசுபவர்களும் உண்டு. உத்தமமான கைகேயியைப் பற்றிய உண்மையான தகவல் இதுதான்! துருபதன் மகள் திரௌபதி. ஜனகன் மகள் ஜானகி. பாஞ்சாலன் மகள் பாஞ்சாலி என்பதைப் போல, கேகய மன்னன் மகள் என்பதால் கைகேயி ...
மேலும் கதையை படிக்க...
ஆதவருக்கு அருளிய ஆறுமுகக் கடவுள்!
முருகப் பெருமானின் அருள் பெற்ற அடியார்களில் ஒருவர் ஆதவர்; ராமேஸ்வரத்தில் வாழ்ந்த மகான். முருகனை துதித்து 'திருமலை முருகன் மணங்கமழ் மாலை' எனும் நூறு பாடல் களைப் பாடியவர். இவரை வணங்கி வாழ்த்துப் பெற வருவோர், பொன்னையும் பொருளையும் இவர் காலடியில் கொட்டி ...
மேலும் கதையை படிக்க...
துவாரகை நகரம் உருவான கதை!
ஆகா... விட்டேனா பார்! கண்ணனைத் தொலைத்து விடுகிறேன். படைகளே... கிளம்புங்கள்!’’ எனக் கூச்சலிட்டான் ஜராசந்தன். படைகள் கிளம்பினவே தவிர, ஏதும் திரும்பவில்லை. ஜராசந்தன் மட்டுமே திரும்பினான். பதினேழு தடவை இப்படி நடந்தது. ஜராசந்தன் இழந்த படைகளின் கணக்கை இந்த இடத்தில் சுகாசார்யர் ...
மேலும் கதையை படிக்க...
காளைகளை அடக்கி கன்னியின் கரம் பற்றிய கண்ணபிரான்!
தர்மத்தின்படி நடந்ததுடன், தன் குடி மக்களையும் அந்த வழியைப் பின்பற்றச் செய்தவர் நக்னஜித். கோசல தேசத்து அரசரான அவருக்கு சத்யா என்று ஒரு மகள். அவளது அழகுக்கு ஈடு இணை கிடையாது. அத்துடன் நல்ல குணமும் நிறைந்தவள். பற்பல தேசத்தைச் சேர்ந்தவர்களும் சத்யாவை ...
மேலும் கதையை படிக்க...
அகங்காரம் தீர்த்தான் ஐந்துகரத்தான்!
அருகம்புல்லின் அற்புதம்! வளங்கள் நிறைந்த மிதிலா தேசம். ஜனகனின் அரண்மனை! அவைக்குள் நுழைந்த நாரதரை வணங்கி வரவேற்றனர் அமைச்சர்கள். ஜனகர் மட்டும், ஆசனத்தில் அமர்ந்தபடியே வரவேற்றார்! இதைப் பொருட்படுத்தாத நாரதர், ''நீ விரும்பிய அனைத்தையும் இறைவன் உனக்கு அருள்வான்'' என்று ஜனகரை ஆசீர்வதித்தார். இதைக் ...
மேலும் கதையை படிக்க...
குருவாயூரில் சிரிக்கும் குழந்தை!
குருவாயூர் கோயில் சந்நிதி! கண்ணனின் பெருமைகளை விவரித்தார் பாகவதர். ஸ்லோகங்களை உச்சரிக்கும் பாங்கு, கிருஷ்ணர் மீதான ஈடுபாடு, இசைப் புலமை ஆகியவற்றால், இவரது பேச்சு அனைவரையும் கட்டிப்போட்டது. வாருங்கள்... அந்தச் சொற்பொழிவை நாமும் கேட்போம்: ''குழந்தை கண்ணன் அவதாரம் செஞ்சு மூணு மாசம் ...
மேலும் கதையை படிக்க...
அர்ஜுனனை வீழ்த்திய அருமை மகன்!
‘‘குந்தியின் மகனே! யாகம் செய்வதற்காக சித்ரா பௌர்ணமியன்று உனக்கு தீட்சை அளிக்கப்படும். எனவே, அஸ்வ மேத யாகத்துக்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்! உத்தம லட்சணங்கள் பொருந்திய குதிரையை சாஸ்திரப்படி அனுப்பி வை. அது இந்த உலகத்தைச் சுற்றி வரட்டும்!’’ என்றார் வியாசர். அதைக் ...
மேலும் கதையை படிக்க...
கொதிக்கும் சூளைக்குள் சிக்கிய பூனைக் குட்டிகள்!
என்ன ஆயிற்று? ''பக்தர்களுக்கு வசப்பட்டவன் நான். அவர்களுக்கு வற்றாத அருளை வாரி வழங்கவே நான் இங்கு இருக்கிறேன்'' என்ற பரந்தாமன், கோயில் கொண்டிருக்கும் இடமே பண்டரிபுரம். இங்கு, வைராக்கிய சீலரான ராக்கா, தன் மனைவி பாக்கா மற்றும் மகள் பங்கை ஆகியோருடன் வாழ்ந்து வந்தார். ...
மேலும் கதையை படிக்க...
அம்பிகை தந்த அயோத்தி!
பரமனின் பாதியாய், அனைவருக்கும் அன்னையாய் அருள் பாலிக்கும் சக்தியவளின் அருள் சுரக்கும் அற்புத மாதம் ஆடி. இந்த மாதத்தில் அம்மனை வழிபடுவதும் அவளது புகழ் பாடுவதும் எண்ணற்ற பலன்களைப் பெற்றுத் தருமாம். இதோ உங்களுக்காக... அம்பிகையின் மகிமையைச் சொல்லும்- வியாசர் இயற்றிய ...
மேலும் கதையை படிக்க...
திருமணம் பேச வந்தவர்கள் திகைத்து நின்றது ஏன்?
கைகேயி பிறந்த கதை!
ஆதவருக்கு அருளிய ஆறுமுகக் கடவுள்!
துவாரகை நகரம் உருவான கதை!
காளைகளை அடக்கி கன்னியின் கரம் பற்றிய கண்ணபிரான்!
அகங்காரம் தீர்த்தான் ஐந்துகரத்தான்!
குருவாயூரில் சிரிக்கும் குழந்தை!
அர்ஜுனனை வீழ்த்திய அருமை மகன்!
கொதிக்கும் சூளைக்குள் சிக்கிய பூனைக் குட்டிகள்!
அம்பிகை தந்த அயோத்தி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)