அம்பிகை தந்த அயோத்தி!

 

பரமனின் பாதியாய், அனைவருக்கும் அன்னையாய் அருள் பாலிக்கும் சக்தியவளின் அருள் சுரக்கும் அற்புத மாதம் ஆடி. இந்த மாதத்தில் அம்மனை வழிபடுவதும் அவளது புகழ் பாடுவதும் எண்ணற்ற பலன்களைப் பெற்றுத் தருமாம். இதோ உங்களுக்காக… அம்பிகையின் மகிமையைச் சொல்லும்- வியாசர் இயற்றிய கதை ஒன்று!

அம்பிகை தந்த அயோத்தி!அயோத்தியின் மன்னர் துருவசிந்துவுக்கு இரண்டு மனைவிகள். பட்டத்து ராணி மனோரமை குணவதி; இரண்டாமவளான லீலாவதியோ சாமர்த்தியக்காரி.

இவர்களில் லீலாவதிக்கு பிறந்தவன் சத்ருஜித். இவன் பிறந்து அடுத்த முப்பதாவது நாளில், மனோரமைக்கு குழந்தை பிறந்தது. இந்தக் குழந்தைக்கு சுதர்சனன் என்று பெயரிட்டனர்.

ஒருநாள்… வேட்டைக்குச் சென்ற மன்னரை, சிங்கம் ஒன்று தாக்கிக் கொன்றது. அயோத்தியே சோகத்தில் மூழ்கியது. ‘அடுத்த அரசர் யார்?’ என்பதை தீர்மானிக்க அரசவை கூடியது. ”சத்ருஜித்தே அரசனாக வேண்டும்” என்றார் லீலாவதியின் தந்தையான யுதாஜித். அமைச்சர்களோ, ”பட்டத்து ராணி மனோரமைக்குப் பிறந்த சுதர்சனனே ஆட்சிப் பொறுப்பேற்க வேண்டும்!” என்று வாதிட்டனர். மனோரமையின் தந்தையான வீரசேனனும் இதையே வலியுறுத்தினார்.

யுதாஜித் கோபம் கொண்டார். ”என் பேரனே முடி சூட வேண்டும். இல்லையெனில், என் வாள்தான் பேசும்!” என்று கர்ஜித்தார். இதையடுத்து யுத்தம் மூண்டது. வீரசேனனைக் கொன்றார் யுதாஜித். ”இனி என் பேரனே அரசன்” என்று கூவினார்.

தந்தை இறந்ததை அறிந்து மனோரமை அழுது புலம்பினாள். ‘அரச பதவிக்காக என் மகனையும் கொன்று விடுவார்களே’ என்று பதறியவள், தப்பித்துச் செல்ல வழி தேடினாள். அதன்படி, மந்திரி ஒருவரது உதவியுடன், ‘தந்தையின் ஈமச்சடங்கில் பங்கேற்க வேண்டும்’ என்று கூறி, சுதர்சனனுடன் அரண்மனையை விட்டு வெளியேறினாள். தந்தையின் இறுதிக் காரியங்கள் முடிந்ததும் பரத்வாஜ முனிவரது ஆசிரமத்துக்குச் சென்றாள். அவரிடம் நடந்ததை விவரித்து, அடைக்கலம் கேட்டாள்.

”வருந்தாதே. இங்கு எந்த பயமும் இல்லை. உன் மகனே அரசாள்வான்!” என்று ஆறுதல் கூறியதுடன் அடைக்கலமும் தந்தார் பரத்வாஜ முனிவர்.

இந்த நிலையில்… அயோத்தியில், தன் பேரனுக்கு பட்டாபிஷேகம் நடத்தினார் யுதாஜித். ஒருநாள், மனோரமையும் சுதர்சனனும் தங்கியிருக்கும் இடம் குறித்த தகவல் அவருக்குத் தெரிய வந்தது. ‘எதிர்காலத்தில் என் பேரனுக்குப் போட்டியாக சுதர்சனன் வருவான். எனவே, அவனையும் அவன் தாயையும் விட்டு வைக்கக் கூடாது’ என்று முடிவு செய்தவர், படைகளுடன் ஆசிரமத்தை அடைந்தார். ஆனால், பரத்வாஜ முனிவர் யுதாஜித்தை தடுத்து நிறுத்தி, எச்சரித்து அனுப்பினார்.

இதன் பிறகு எந்த பயமும் இன்றி, மகனை வளர்த்து வந்தாள் மனோரமை. அவனுக்கு ஐந்து வயதானது.

ஒருநாள், முனிகுமாரர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தான் சுதர்சனன். அப்போது முனிகுமாரன் ஒருவன், அங்கிருந்த ஒருவனைப் பார்த்து, ”க்லீபனே(பேடியே…) இங்கே வா!” என்று அழைத்தான். இதைக் கேட்ட சுதர்சனன், க்லீபன் எனும் வார்த்தையை ‘க்லீம்’ என்று புரிந்து கொண்டு, அப்படியே உச்சரித்தும் வந்தான்.

‘க்லீம்’ என்பது காமராஜ பீஜாட்சரம். தனது ஐந்தாவது வயதில் விளையாட்டாகச் சொல்லத் துவங்கிய இந்த பீஜாட்சரத்தை, 11-வது வயது வரையிலும் அடிக்கடி ஜபித்து வந்தான் சுதர்சனன்.

இதன் பிறகு, சுதர்சனனுக்கு உபநயனம் செய்து வைத்த பரத்வாஜர், வேதங்களையும் போர்க் கலைகளையும் அவனுக்கு கற்பித்தார். அனைத்தையும் சிறப்புற கற்றுத் தேர்ந்தான் சுதர்சனன்.

ஒருநாள்… நதிக்கரையில் இருந்த சுதர்சனனுக்கு அருட்காட்சி தந்தாள் அம்பிகை! செந்நிற ஆடை – ஆபரணங்களுடன், சிவந்த திருமேனியுடன், கருட வாகனத்தில் எழுந்தருளி, விஷ்ணு சக்தியாக- மகாலட்சுமி வடிவினளாகக் காட்சி தந்தாள். வில்- அம்புகள் நிறைந்த கூடு, வஜ்ஜிரக் கவசம் ஆகியவற்றையும் சுதர்சனனுக்குக் கொடுத்து மறைந்தாள்!

அப்போது, அங்கு வந்த காசி மன்னரின் தூதர்கள் சிலர், சுதர்சனனின் தேஜஸ் பொருந்திய முகத்தைக் கண்டு வியந்தனர். பிறகு, நாடு திரும்பியவர்கள், தங்கள் மன்னரின் மகளான சசிகலையிடம், சுதர்சனனின் அழகையும் வீரத்தையும் விவரித்தனர்.

அன்று இரவு… சசிகலையின் கனவில் தோன்றிய அம்பிகை, ”சுதர்சனன் என் பக்தன்; அவனை மணம் புரிந்து கொள்” என்று சொல்லி மறைந்தாள். அகமகிழ்ந்தாள் சசிகலை! மறுநாள், தேசாந்திரியான ஒரு அந்தணரும் சுதர்சனனின் குணங்களை விவரித்து, அவனை மணந்து கொள்ளுமாறு அறிவுறுத்திச் சென்றார். இதனால், சுதர்சனனை தன் கணவனாகவே வரித்துக் கொண்டாள் சசிகலை. மகளின் மனதை அறிந்த மன்னர், சுயம்வரத்துக்கு ஏற்பாடு செய்தார். மன்னர்கள் பலர் குவிந்தனர். பரத்வாஜரின் ஆசியுடன், மனோரமையும் சுதர்சனனும் சுயம்வரத்துக்கு வந்தனர்.

ஆனால், இவர்களைக் கண்டதும் வந்திருந்தவர்கள் கொதித்தனர். சுயம்வரத்துக்கு சத்ருஜித்துடன் வந்திருந்த யுதாஜித், ”இவனை இப்போதே அழித்து விட்டு, சசிகலையை என் பேரனுக்கு மணம் செய்து வைக்கிறேன்” என்று கர்ஜித்தார்.

இதே நேரம், எவருக்கும் தெரியாமல் சுதர்சனனுக்கும் தன் மகளுக்கும் திருமணம் செய்து வைத்தான் காசி மன்னன்! இதை அறிந்ததும், சுயம்வரத்துக்கு வந்திருந்த மற்ற மன்னர்கள் கோபம் கொண்டனர். அனைவரும் யுதாஜித் தலைமையில் போருக்கு ஆயத்தமாயினர்.

மாமனார் அனுப்பிய அக்குரோணி சேனைகளின் உதவியுடன் போரில் பங்கேற்றான் சுதர்சனன். அவனுக்கு ஆதரவாக சிங்க வாகனத்தில் வந்து அம்பிகையும் போர் புரிந்தாள்; எதிரிகளை துவம்சம் செய்தாள்!

பிறகு, அம்பிகையின் அருளாசியுடன் தாயார் மற்றும் மனைவியுடன் அயோத்திக்கு திரும்பினான் சுதர்சனன். மன்னனாக முடிசூடினான்.

அவனது இத்தனை வெற்றிக்கும் காரணம்.. க்லீம் எனும் மந்திரமே! விளையாட்டாகச் சொல்லி வந்த மந்திரத்துக்கே இத்தனை வலிமை எனில், அம்பிகையின் மந்திரங்களை கர்ம சிரத்தையுடன் உச்சரித்து வந்தால் எவ்வளவு மகத்துவம் கிடைக்கும்?!

நாமும், அம்பிகையின் திருநாமத்தை தியானித்து இணையில்லா அருள் பெறுவோம்.

- ஆகஸ்ட் 2009 

தொடர்புடைய சிறுகதைகள்
மரணத்தை வென்ற இல்லறத்தான்!
துரியோதனன் தர்மவான்; அன்பாளன்; இன்சொல் பேசுபவன்; பொறாமை இல்லாதவன்; இரக்க குணம் உள்ளவன்; புலன்களை வென்றவன்; தற்பெருமை பேசாதவன்; எவரையும் அவமதிக்காதவன்; விதிப்படி யாகங்களைச் செய்பவன்; புத்திமான்; வேதங்களை அறிந்தவன்; அந்தணர்களை மதிப்பவன்; வாக்கு தவறாதவன்; எல்லாவற்றுக்கும் மேலாக பராக்கிரமசாலி. இவனது ...
மேலும் கதையை படிக்க...
இந்த இருவரில் யார் என் மனைவி?
உத்தமமான சிவாசார்யரான தேவசர்மா, கயிலைவாச னான உமையரு பாகனை வழிபட்ட தீவிர பக்தர். அவருக்குத் திருமணம் நடந்தது (மணப் பெண்ணை விமலா என்றும், அவள் தங்கையைக் கமலா என்றும் வைத்துக் கொள்வோம்). திருமணத்தின்போது, விமலாவின் வயது எட்டு. உலக அனுபவம் இல்லாத சிறுமியாக ...
மேலும் கதையை படிக்க...
ஆதவருக்கு அருளிய ஆறுமுகக் கடவுள்!
முருகப் பெருமானின் அருள் பெற்ற அடியார்களில் ஒருவர் ஆதவர்; ராமேஸ்வரத்தில் வாழ்ந்த மகான். முருகனை துதித்து 'திருமலை முருகன் மணங்கமழ் மாலை' எனும் நூறு பாடல் களைப் பாடியவர். இவரை வணங்கி வாழ்த்துப் பெற வருவோர், பொன்னையும் பொருளையும் இவர் காலடியில் கொட்டி ...
மேலும் கதையை படிக்க...
பிரகலாதன் செய்த உபதேசம்
பொறுமையும் வேண்டும்... கோபமும் வேண்டும்!' சந்தேகங்கள் பலவிதம். ஒவ்வொரு வருக்கும் ஒவ்வொரு விதமான சந்தேகங்கள் எழும். உத்தம பக்தனான பிரகலாதனின் பேரன் மகாபலிக்கும் சந்தேகம் ஒன்று எழுந்தது. அது குறித்து தன் தாத்தாவிடம் கேட்டான்: ''தர்மம் தெரிந்தவரே... மேலானது எது? பொறுமையா அல்லது ...
மேலும் கதையை படிக்க...
குருவாயூரில் சிரிக்கும் குழந்தை!
குருவாயூர் கோயில் சந்நிதி! கண்ணனின் பெருமைகளை விவரித்தார் பாகவதர். ஸ்லோகங்களை உச்சரிக்கும் பாங்கு, கிருஷ்ணர் மீதான ஈடுபாடு, இசைப் புலமை ஆகியவற்றால், இவரது பேச்சு அனைவரையும் கட்டிப்போட்டது. வாருங்கள்... அந்தச் சொற்பொழிவை நாமும் கேட்போம்: ''குழந்தை கண்ணன் அவதாரம் செஞ்சு மூணு மாசம் ...
மேலும் கதையை படிக்க...
மரணத்தை வென்ற இல்லறத்தான்!
இந்த இருவரில் யார் என் மனைவி?
ஆதவருக்கு அருளிய ஆறுமுகக் கடவுள்!
பிரகலாதன் செய்த உபதேசம்
குருவாயூரில் சிரிக்கும் குழந்தை!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)