கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: January 31, 2023
பார்வையிட்டோர்: 3,667 
 

காலை 9.45 மணிக்குள் போகவில்லை என்றால் ‘ஆப்சென்ட்’ போட்டுவிடுவார்கள். நியாமான காரணத்தால் தாமதம் என்றாலும் ஏற்றுக் கொள்ளப்படாது. நான் படித்த பள்ளிகூடத்தைப் பற்றி சொல்லவில்லை. நான் வேலை செய்யும் அலுவலகத்தில் அண்மைக்காலத்தில் தோன்றிய வி(யா)தி இது. ஒன்பது நாற்பத்தைந்து என்றால் ஒன்பது நாற்பத்தைந்து தான். ஒரு நொடியும் தாமதம் ஆகக் கூடாது. முன்பெல்லாம் வருகைப் பதிவேட்டில் கையெழுத்து போட்டால் மட்டும் போதும். இப்போது ‘ஃபினக்கில்’ மென்பொருளில் லாகின் செய்ய வேண்டும்.

அலுவலகம் மூன்றாவது மாடியில் இருந்தது. லிப்ட் எல்லாம் கிடையாது. லிப்ட் வாடகை கொடுக்காததால் அலுவலக வளாகத்தின் எஜமானனான தமிழ் பேசும் சேட்ஜி மூன்றாவது மாடியின் லிப்ட் கதவை மட்டும் கட்டைகள் கொண்டு மூடி வைத்துவிட்டார். எங்கள் அலுவலகத்தை சேர்ந்தவர்கள் எல்லாம் இரண்டாவது மாடி வரை லிப்டில் சென்று, பின் படி ஏறிச் செல்கிறோம் என்பதையும் எஜமான் கண்டுகொண்டுவிட்டார். அதனால் எங்களை கண்காணிப்பதை கூடுதல் பொறுப்பாக இரண்டாவது மாடியில் நிற்கும் செக்யூரிட்டியிடம் கொடுத்து, இருநூறு ரூபாய் பணமும் கொடுத்துவிட்டார்.

அதுவும் செக்யூரிட்டி என்னைக் கண்டால் மட்டும் ‘எண்கவுன்ட்டர் செய்து விடுவது போல் முறைக்கிறார். வேறுவழியில்லாமல், மூச்சிரைக்க மூன்று மாடி ஏறி உள்ளே ஓடிச் சென்று கணினியை ஆன் செய்வது வழக்கமாகி விட்டது. என்னுடையது கொஞ்சம் பழைய கணினி. அலுவலகத்தில் இருக்கும் மற்றதெல்லாம் ரொம்ப பழைய கணினி. நான் அலுவலகத்தில் சேர்ந்த இரண்டு வருடக் காலங்களில், கணினியே இல்லாமல், தெருவின் எல்லைத் தாண்டி வந்த நாய் குட்டிப் போல் இங்கும் அங்கும் அழைந்து, ஏச்சு பேச்செல்லாம் வாங்கி, கிடைக்கும் கணினியில் வேலை செய்து வந்தேன். சிறிய நிறுவனங்களில் வேலை செய்யும் போது இப்படி சகிப்புத் தன்மை வளர்ந்துவிடுகிறது. சகிப்புத் தன்மை = அடிமைத் தன்மை என்று என் கம்யுனிச நண்பன் சொல்வான்.

அவன் ஒரு பெரிய பொறியியல் நிறுவனத்தில் மேலாளராக வேலை செய்கிறான். ஆனாலும் மற்றவர்கள் போல் எனக்கேன் வம்பு என்று வாழ்வை கழிக்காமல், பேஸ்புக்கில் தொடர்ந்து சர்வாதிகாரத்திற்கு எதிராக குரல் கொடுத்து வருகிறான். செவ்வாய்கிழமை இந்திய அரசியல், வெள்ளிக்கிழமை உலக அரசியல் என்று கிழமைக்கு ஒரு ஸ்பெஷல் பதிவு. அதற்கு லைக் போடவே ஒரு பெரிய கூட்டம். எங்கு போனாலும் சேகுவேரா டீ ஷர்ட் போட்டுக் கொள்வான். அடிமைத் தனம் கழைவோம் என்று வாட்ஸப்பில் ஸ்டேடஸ் கூட போடுவான். நெருங்கிய நண்பனின் திருமணத்திற்கு வராமல் போன அவனிடம் போன் செய்து கோபித்துக் கொண்டேன்.

“மச்சி, டீ.எல் லீவு தரமாட்டேன்னு சொல்லிடாண்டா. அவன் எங்க GM-க்கு பெட். அவன மீறி ஒன்னும் பண்ண முடியாது” விட்டிருந்தால் நண்பன் அழுதிருப்பான். ஒரு பேஸ்புக் போராளியை போனில் அழ வைத்த பாவம் எனக்கு வேண்டாம் என்று போனைத் துண்டித்துவிட்டேன்.

என் சகிப்புத் தன்மையோடு இரண்டாண்டு காலம் நான் கணினியின்றி ஓட்டிவிட, எப்படியோ என் வேலை நிரந்தரம் ஆனதும் எனக்காக ஒரு வாடகை கணினியை கொண்டு வந்து வைத்துவிட்டார்கள். நைட் ஷிப்டில் வேலைப் பார்த்துவிட்டு உறங்குபவர்களை எழுப்பினால் எப்படி விழித்துக் கொள்வார்களோ அதே வேகத்தில் தான் என் கணினியும் கண் திறக்கும். பெரும்பான்மையான நேரங்களில் நெட்வர்க் இருக்காது. மென்பொருளின் லாகின் திரைக்குள் செல்வதற்குள், ஏ.சி காற்றில் சட்டையின் வியர்வை காய்ந்து விடும். அதாவது சட்டை காலை 9.44 மணிக்குள் காய்ந்திருக்க வேண்டும். அதற்கு ஒன்பதரை மணிக்குள்ளாக அலுவலகத்தில் வலது காலை வைக்க வேண்டும்.

ஆனால் தாம்பரத்திலிருந்து மந்தைவெளி செல்வதற்குள் இரண்டு யுகங்கள் ஆகிவிடுகிறது. இரண்டாம் வகுப்பு பெட்டி நெரிசலாக இருக்கிறது என்று, ஆறுமடங்கு அதிக விலைக் கொடுத்து, முதல் வகுப்பில் பயணிக்க தொடங்கினேன். பாவம்! பலருக்கும் இரண்டாம் வகுப்பு பெட்டி நெரிசலாக இருந்துவருகிறது போலும். பர்ஸ்ட் கிளாஸ் சீசன் எடுக்காமலேயே முதல் வகுப்பில் ஏறிக்கொள்கிறார்கள். நான் வாயை மூடிக் கொண்டு ஒற்றைக்காலில் ஓரமாக நின்றுவிடுவேன். இப்போதெல்லாம் செங்கல்பட்டு-பீச் விரைவு ரயில் ஓடுவதில்லை. இரண்டு ரயில் கூட்டம் ஒரு ரயிலில். அதனால் ஒரு கால் வைக்க தான் பெட்டியில் இடமிருக்கிறது. ஆனால் யாராவது பெரியவர், “சார் இது பர்ஸ்ட் கிளாஸ். அடுத்த பெட்டில ஏறிகோங்க” என்று தேய்ந்த ரெகார்ட் போல் சொல்லி வருவார். யாரும் அவரை சட்டை செய்யமாட்டார்கள்.

“இதுக்கு செகண்ட் க்ளாஸ்லயே வந்துடலாம் போலவே!” பழவந்தாங்களில் ஏறும் ஒரு நடுத்தர வயது பெண் சலித்துக் கொள்வாள். நானும் அதையே நினைத்துக் கொள்வேன். ஆனால் இரண்டு வருடமாக அவள் முதல் வகுப்பு பெட்டியில் லேடிஸ் இருக்கையின் அருகே நின்றவாரு சலித்துக் கொண்டே வருகிறாள். நானும் “இதுக்கு செகண்ட் க்ளாஸ்லயே வந்துடலாம் போலவே!” என்று நினைத்துக் கொண்டே வருகிறேன்.

அதிலும் பறக்கும் ரயிலில் பூங்கா நகர் ரயில் நிலையத்தில் ஒரு பெரிய கூட்டம் ஏறும். பெரும்பான்மையானவர்கள் வடநாட்டிலிருந்து வந்து கூலி வேலை செய்யும் இளைஞர்கள்.

“பாய். ஹே தோ பர்ஸ்ட் கிளாஸ் ஹே” அரைகுறை ஹிந்தியில் யாராவது சொல்வார்கள். சிந்தாதரிப்பேட்டை வந்ததும் அந்த ஹிந்திக்கார இளைஞர்கள் இறங்கி இரண்டாம் வகுப்பு பெட்டிக்கு மாறிக் கொள்வார்கள். ஆனால் மீண்டும் மறுநாள் அதே இளைஞர்கள் குழுவாக முதல் வகுப்பு பெட்டியிலேயே ஏறிக் கொள்வார்கள். மறுபடியும், “பாய். ஹே தோ பர்ஸ்ட் கிளாஸ் ஹே”

அதுவும் திங்கட்கிழமை என்றால் ஊருக்கு சென்று திரும்பி வரும் திருவான்மையூர் ஊழியர்கள் பலரும் ஏறிக் கொள்வார்கள். தெலுங்கு இளைஞர் இளைஞிகள்.

“இஸ் திஸ் பர்ஸ்ட் கிளாஸ்? ஒ! ஐ டோன்ட் நோ”

அந்த ஆந்திரா தெலுங்கானா ஆசாமிகள் தாங்களாகவே கேள்வியும் கேட்டு பதிலும் சொல்லிவிட்டு ஓரமாக போய் நின்றுகொள்வார்கள். மீண்டும் அடுத்த திங்கட்கிழமை அவர்களை அதே பெட்டியில் பார்க்கலாம். எப்போதாவது டிக்கெட் பரிசோதகர் வந்தால், கரடுமுரடாக இருக்கும் இந்தி இளைஞர்களை மட்டும் பிடித்துக் கொண்டு போய் விடுகிறார். நன்றாக உடை உடுத்துபவன் எந்த தவறையும் செய்து தப்பித்துக் கொள்ள முடிகிறது. நான் நன்றாக தான் உடை உடுத்துகிறேன். அனால் டிக்கெட் எடுக்காமல் ரயிலிலோ, அல்லது முதல் வகுப்பு சீசன் இல்லாமல் முதல் வகுப்பு பெட்டியிலோ ஏற பயமாக இருக்கிறது. மாட்டினால் ஐநூறு ரூபாய் அபராதம். ஆனால் எப்போதாவது ஒரு முறை தான் மாட்ட வாய்ப்பிருக்கிறது. இது கணிதம். நிகழ்தகவுகள். அதனால் தொடர்ந்து டிக்கெட் இல்லாமல் அல்லது சரியான டிக்கெட் இல்லாமல் பயணிப்பவர், எப்போதாவது ஒரு முறை மாட்டி ஐநூறு அபராதம் கட்டுவது நஷ்டம் ஒன்றுமில்லை. ஆனால் இதையெல்லாம் தர்க்கம் செய்யும் அளவுக்கே தைரியம். செயல் படுத்தும் அளவிற்கு தைரியம் இருந்தால், நான் இரண்டாண்டு காலம் கணினி இல்லாமல் சகித்து கொண்டு வேலை செய்திருக்க மாட்டேன். என் பேச்செல்லாம் சரவணபவன் தலை வாழை இல்லை சாப்பாடு அளவிற்கு இருந்தாலும், செயல் எப்போதும் மைலாபூர் மாமி மெஸ்சின் அளவு சாப்பாடுதான்.

ஆனால் ரயில் பயணத்திற்கும் ஒரு சோதனை. இப்போதெல்லாம் எழும்பூரை தாண்டுவதற்குள் ரயிலின் ஓட்டுனர் குரங்கு பெடல் அடிக்கிறார். கொஞ்சம் தாமதமானால், கோட்டை நிலையத்தில் வேளச்சேரி ரயில் முந்திக் கொண்டு விடுகிறது. பின்னாடியே ஒரு லேடிஸ் ரயில் பல் இளித்துக் கொண்டே வரும். எல்லோரும் தலைவாரி ஜடைப் பிண்ணிக் கொண்டே போவதை பார்த்துக் கொண்டு நிற்க வேண்டும். அதுவும் அந்த லேடிஸ் பெட்டி காலியாக செல்வதைப் பார்த்து பலரும் வெளிப்படையாகவே வயிர் எரிவார்கள்.

“காலியா போது. பாதி ட்ரைன் மட்டும் லேடிஸ்கு போதாதா… ஜென்ட்ஸ் ஸ்பெஷல் உட வேண்டிதான!”

நானெல்லாம் எதுவும் சொல்ல மாட்டேன். நான் பெமினிஸ்ட். ‘Feminist’ என்ற பட்டம் கிடைக்காமல் போனாலும் பரவாயில்லை. Anti-feminist என்ற பட்டம் கிடைத்துவிட்டால் ஸ்க்ரீன்ஷாட் போட்டு சாகடித்துவிடுவர்கள். அதனால் என் நண்பன் கம்யுனிஸ்டாக இருக்கும் வரை நான் பெமினிஸ்ட்டாக இருந்துவிடலாம் என்று முடிவு செய்துவிட்டேன். லேடிஸ் ரயிலுக்கு பின்பு வரும் ரயிலில் ஏறி, 9.45 வாக்கில் மந்தைவெளி ரயில் நிலையத்தில் இறங்கி, பல தெருக்களுக்குள் ஓடி, 9.55 வாக்கில் அலுவலகத்தை அடைந்து, வருகைப் பதிவேட்டில் கையெழுத்து போட்டுவிட்டு, யாரவது பார்க்கிறார்களா என்று இருபுறமும் பார்த்துவிட்டு, கையெழுத்தின் கீழே வருகை நேரம் 9.30 என்று எழுதிவிட்டு, எதுவும் தெரியாதவன் போல், ‘வைஷ்ணவ ஜனதோ, தேனே கஹியே தே’ என்று பாடியவரே இருக்கையில் சென்று அமர்ந்துகொள்வேன். அதற்கு வேட்டு வைப்பது போல் தான் அந்த சுற்றறிக்கை வந்தது.

“….login after 9.45 will be treated as absence”

என் கடவுச் சொல்லை பக்கதிலிருக்கும் பெண்ணிடம் கொடுத்துவிட்டு போகலாம் என்றால், கைரேகை வைத்தால் தான் லாகின் ஸ்க்ரீன் திறக்கும் என்பது போல் மென்பொருளை மாற்றி விட்டார்கள். என் கட்டைவிரலை மட்டும் தனியாக அனுப்ப முடியாது என்பதால், நானே போக தான் வேண்டும்.

“டைம்க்கு வர தெரியாதா?” என்று என் உதவி நிர்வாக மேலாளர் இரண்டுமுறை திட்டினார்.

“டைம்க்கு வீட்டுக்கு விட்டா வரத் தெரியும்” என்று சொல்ல வேண்டும் என்று ஆசை தான். ஐந்து மணிக்கு அலுவலகம் முடிந்தாலும் ஏழு மணி வரை வேலை வாங்குகிறார்களே என்று கோபம் தான். ஆனால் இந்த கோபத்தையெல்லாம் சமுக வலைத் தளத்தோடு நிறுத்திக் கொள்ளும் ‘யதார்த்தவாதி’ நான். அதனால் நேரத்திற்கு அலுவலகம் செல்ல வேண்டும் என்றால், கிண்டியில் இறங்கி பேருந்தில் மாறிக் கொள்ளவேண்டும்.

ஆனால் பேருந்து கிடைப்பதிலும் பிரச்சனை. அப்படியே கிடைத்தாலும் அதில் அடித்து பிடித்து ஏறுவது பெரும் பிரச்சனை. அண்ணா பல்கலைக்கழகம் செல்லும் வருங்கால பொறியாளர் கூட்டம் தான் பேருந்து முழுக்க இருப்பார்கள். பெரும்பாலும் பல பேருந்துகள் அண்ணா பல்கலைக்கழகம் நிறுத்தத்தில் நிற்கும். ஆனாலும் அந்த மாணவர்கள் சொல்லிவைத்தாற்போல் மந்தைவெளி பேருந்திலேயே ஏறுவார்கள். இவ்வளவு மெனக்கெட்டு படிக்கும் அந்த பொறியியல் அவர்களுக்கு எந்த வகையிலும் பயன்பட போவதில்லை என்று யார் சொல்வது! “Software engineer is not an engineer bro” ஒருமுறை சொன்னதற்கு அந்த பையன் என்னை முறைத்தான். கூட்டமாக இருக்கும் இளைஞர்கள் ஆபத்தானவர்கள். சேர்ந்து அடித்துவிடுவார்கள். வாயை மூடிக் கொண்டு இருந்துவிடுவது உத்தமம்.

எப்போதாவது, காளியப்பா மந்தவெளி, மைலாபூர் என்று கத்திக்கொண்டே ஷேர் ஆட்டோக்காரன் வருவான். போதிய ஆள் ஏறவில்லை என்றால்,

“ஜி கோட்டுர்புரம் வரைக்கும் தான் போகும், கொஞ்சம் இறங்கிக்கோங்க” என்பான். அவன் இறக்கிவிட்டதை விட, சுற்றி அமர்ந்திருந்த பெண்கள் என்னைப் பற்றி என்ன நினைப்பார்கள் என்ற கேள்விதான் பிரதானமாக இருக்கும். இந்த அவமானத்தை எதிர்கொள்ள முடியாததால் தான், ஓலா உபெரை பழக்கப் படுத்திக் கொண்டேன். ஆனால் இந்த ஓலா உபெர் ஓட்டுனர்கள் பெரும்பாலும் வெளியூர் காரர்களாகவே இருக்கிறார்கள். நாம் எங்கு நிற்கிறோம் என்று அவர்களுக்கு தெரியப்படுத்துவது பெரும்பாடகிப் போகிறது. “நான் மேப்ப பாத்து வந்திருறேன் சார்” என்பார்கள். ஆனால் சாலையின் மறுபுறம் வந்து நின்றாலும், ‘Your ride is here’ என்று தான் காட்டும். அவர்களுக்கு வழி சொல்லி சக்தியை வீணடிப்பதற்கு பதில் நடந்தே போய் விடலாம் என்று தோன்றும்.

அன்று பேருந்து இல்லை, ஷேர் ஆட்டோ இல்லை. உபெர் காரனும் கத்திப்பாராவில் நின்றுகொண்டு வரவில்லை. ஆனால் நான் ஆட்டோவில் ஏறியதாக ரைடை ஆன் செய்துவிட்டான். மணி ஓடிக்கொண்டே போனது. ஒரு ஆட்டோவை பிடித்தேன். 200 ரூபாய் என்றான். வேறுவழியில்லை. ஆட்டோ கிளம்பியது. எங்கள் வளாகத்தின் முன்பு நின்ற போது மணி சரியாக 9.35. சட்டை வேர்த்தது. அலுவலகத்திற்குள் நுழைந்து வேகமாக சி.பி.யூவின் பொத்தானை அழுத்திவிட்டு நிமிர்ந்து பார்த்தால் அங்கே மானிட்டர் இல்லை. கடைசி மூலையிலிருந்த என் எச்.ஆர் நண்பனின் கேபினுக்கு ஓடினேன்.

“என் மானிட்டர பாத்தியா…!”

“அப்பறம் பேசலாம். சீக்கிரம் லாகின் பண்ணு…”

அவன் கணினியில் கைரேகை வைத்து லாகின் செய்தபோது மணி 9.44.

“ஐ.டி டிபார்ட்மென்ட்க்கு போன் பண்ணிக் கேலு” என்றான். கணினி பிரச்சனை எல்லாம் ஐ.டி துறையின் கீழ் வருகிறது. ‘ஐ.டி’ என்றதும் நிறுவனத்தில் சேர்ந்த புதிதில் ஏதோ பெரிய தொழிநுட்ப வல்லுனர்களை கொண்ட குழு என்றே நினைத்தேன். பின்தான் தெரிந்தது, பிரிண்டர் டோனார் மாற்றுவது, மவுஸ் கீபோர்ட் மாற்றுவது போன்ற மராமத்து வேலைகள் செய்யவே அவர்கள் இருக்கிறார்கள் என்று.

போன் மணி அடித்துக் கொண்டே இருந்தது. எதிர்ப்பார்த்தது போல் புதிதாக வந்த அந்த ஐ.டி மேலாளர் போனை எடுக்கவில்லை. அவன் ஒரு இளகிய மனம் கொண்ட பெங்காலி. இரண்டு வாரத்துக்கு முன்பு தான் மாற்றல் ஆகி வந்தான். அலுவலகத்தில் பெண்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் அவன் கண்கள் கலங்கிவிடுவதாக பேசிக் கொள்கிறார்கள். எப்போதும் செல் போனை காதின் மேல் அலுத்திவைத்துக் கொண்டு போன் பேசிக்கொண்டே இருப்பான். அவன் தன் மனைவியாடு பேசுவதாக நான் நினைத்தேன். அவன் அறையை அடைந்த போதும் அதையே செய்துக் கொண்டிருந்தான்,

“பாலு ஆச்சே. துமே கூப்…”

என் நண்பன் மலையாளி என்றாலும் கொஞ்சம் பங்கலா தெரிந்தவன்.

“அவன் வைப் கிட்ட பேசல… வேற யார்ட்டையோ கடலை போடறான்… ” என் எச். ஆர் நண்பன் என் காதில் கடுப்புடன் கிசுகிசுத்தான். எச். ஆர் நண்பனுக்கு திருமணம் ஆகவில்லை. அவன் கவலை அவனுக்கு.

“ரொம்ப முக்கியம், மானிட்டர் எங்கனு கேப்போம்!” நான் சொன்னேன்.

ஆண்களில் குரல் அந்த மேலாளரை கொஞ்சம் கூட அசைக்கவில்லை. அவன் தொடர்ந்து போன் பேசிக் கொண்டே இருந்தான். நான் அருகே சென்று,

“சார்” என்றேன். கோபமாக என்னை நிமிர்ந்து பார்த்தான்.

“சாரி பார் டிஸ்டர்பன்ஸ்” என்றேன்,

அவன் பங்கலாவில் ஏதோ போனில் சொல்லி போனை கட் செய்துவிட்டு, மீண்டும் என்னை கோபமாக பார்த்தான்.

“மை மானிட்டர் யூ ஹாவ் டேக்கனா சார்!”

“ஒ! அதுவா. நம்ம காயத்ரி மேடம்க்கு கண்ல ஏதோ பிரச்சனை. டியர்ஸ் வந்துகிட்டே இருக்கு. அதான் பெரிய மானிட்டரா கேட்டாங்க….”

“அவ கண்ல தண்ணி வந்தா நீ ஏண்டா தொடச்சி விடுற…” என்று எனக்குள் இருந்து யாரோ கேட்க முயல, நான் அந்த யாரோவை உள்ளேயே போட்டு பூட்டிவிட்டேன். என்னதான் இருந்தாலும் அவன் ஒரு மேலாளர். நாங்கள் உதவி மேலாளர்கள் தான். ஆனால் என் நண்பன் விடுவதாக இல்லை.

“அதுக்கு ஏன் சார் அவன் மானிட்டர கொடுத்தீங்க….” கேட்டுவிட்டான். அவன் முறைத்தான்.

“இட்ஸ் ஓகே சார். நம்ம காயத்ரி மேடம் தான. பரவால…” என்று சொல்லிவிட்டு நான் வெளியே நண்பனை இழுத்துக் கொண்டு வந்தேன்.

“உன்ட்ட சொல்லிட்டாவது எடுத்திருக்கணும், எதிக்ஸ் இல்ல…” என் நண்பன் கோபித்துக் கொண்டான்.

“ரெண்டு வருஷம் கம்ப்யூட்டரே இல்லாம ஓட்டினேன். அட்ஜஸ்ட் பண்ணிக்க வேண்டிதான்… “

“நீ அட்ஜஸ்ட் பண்ண ஆரம்பிச்சா தலைல ஏறுவானுங்க…” என் நண்பன் மேற்கொண்டு இழுத்தான்,

“டேய் சும்மா இருடா. அவன் GM-க்கு பெட்டு. இவன பகைச்சிகிட்டு ஒன்னும் செய்ய முடியாது. இவன்ட்ட வம்பு பண்ணா உனக்கு இந்த ஜென்மத்துல கேரளா ட்ரான்ஸ்பர் கிடைக்காது. எப்படியாவது இவன் கிட்ட நல்ல பேர் வாங்கப் பாரு…”

என் நண்பன் நிர்வாக மேலாளரிடம் மாற்றல் விண்ணப்பம் கொடுத்து ஒரு வருடம் ஆகிறது. அவர் அவனை நிமிர்ந்து கூட பார்க்க மாட்டேன் என்கிறார். அவரும் ஒரு வங்காளி தான்.

என் நண்பன் சில நொடிகள் யோசித்தான். அவன் மனதில் புள்ளிகளை இணைத்துப் பார்த்திருப்பான்.

“இவன்ட்ட எப்படிடா நல்ல பேர் வாங்குறது…?” பாந்துவமாக என்னிடம் கேட்டான்.

“இவன் GM-ஓட பெட்டு. இவனுக்கு….” நான் நண்பனைப் பார்த்து கண் அடித்தேன்.

“அடிபொலி” நண்பன் என் முதுகில் தட்டினான். நாங்கள் இருவரும் காயத்ரி மேடமின் கேபின் நோக்கி நடந்தோம்.

– February 2019

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *