தூங்கும் ஆறு

0
கதையாசிரியர்: ,
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: February 2, 2023
பார்வையிட்டோர்: 3,483 
 

(1990 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்).

தூங்கும் ஆறு | தோல் இருக்கச் சுளை விழுங்கி

பண்டைக் காலத்தில் மாணவர்கள் கல்வியையும் பலவித கலைகளையும் கற்றுக் கொள்வதற்கு ஆசிரியர் இருக்குமிடத்தைத் தேடிச் செல்வார்கள். ஆசிரியருடனேயே தங்கியிருப்பார்கள். பகலும் இரவும் அவரையே பின்பற்றி செல்வார்கள். ‘எழு’ என்றால் எழுந்து, ‘இரு’ என்றால் இருந்து மிகவும் கவனத்துடன் கற்றுக் கொள்வார்கள்.

தங்கள் ஆசிரியர் இருப்பிடத்திலேயே தங்கி அவருக்கு வேண்டிய பணிவிடைகளையெல்லாம் பய பக்தியுடன் செய்து மாணவர்கள் அக்காலத்தில் கற்றுக் கொண்ட முறைக்கு குரு குலவாசம் என்று பெயர்.

மாதா பிதா தெய்வம்; எழுத்தறிவித்தவன் இறைவன் ஆகும் என்றெல்லாம் ஆசிரியர்களுக்கு உயர்வு கொடுத்து அந்தக் காலத்தில் ஆசிரியர்களைக் கடவுளுக் குச் சமமாகவே கருதினார்கள். குருவின் வார்த்தைகளே வேத வாக்காக இருந்தது மாணவர்களுக்கு. குருமார்கள் எதைச் சொன்னாலும் நம்பினார்கள். அவர்கள் காட்டிய வழியிலேயே நடந்தார்கள். ஏன் என்று எதிர் பேச்சுக் கேளாமல், மழையை எதிர்பார்க்கும் வாடிய பயிர் போல் இருந்து கற்பதே மாணவர்களின் கடமையாக இருந்தது.

நல்ல குருமார்கள் கிடைத்து, அவர்களிடம் கற்றவர் கள் அறிவிலும் ஆற்றலிலும் சிறந்து விளங்கினார்கள். புலமையில் வளமையில்லாத குருமார்களிடமோ, ஆராய்ச்சி அறிவே இல்லாத குருமார்களிடமோ கற்கும் நிலையில் உள்ள சிஷ்யர்கள் ஆசிரியரைப் போலவே தாங்களும் ஆசிரியர்கள் அளவுக்கும் குறைவான அறிவுடையவர்களாகத்தான் இருப்பார்கள். அரசன் எவ்வழி குடிகள் அவ்வழி என்பது போல், குரு எவ்வழி அவ்வழி சீடர்கள் என்று கூறலாம்.

பழங்காலத்திலே ஒரு குரு இருந்தார். அவருக்கு ஐந்து சிஷ்யர்கள் இருந்தார்கள். அவர்கள் குருவுட னேயே இருந்து வந்தார்கள். மேலும் சிஷ்யகோடிகளும் உண்டு. ஆனால் அவர்கள் வெளியூர்களிலே இருந்தார்கள்.

அவருக்கு பரமார்த்த குரு என்று பெயர். மட்டி, மடையன், பேதை, மிலேச்சன், மூடன் என்பர்கள் அவருடைய ஐந்து முக்கியமான சீடர்கள் ஆவார்கள்.

ஒரு நாள் குருநாதருக்கு ஓர் ஆசை உண்டாயிற்று. தம்முடனேயே இருக்கும் அந்த ஐந்து சிஷ்யர்களைத் தவிர, அக்கம் பக்கம் சிற்றூர்களிலே வாழ்ந்து வந்த மற்ற சிஷ்யர்களையும் கண்டு உரையாடி களிப்புற்றுத் திரும்ப வேண்டும் என்பதே அவருடைய ஆசை. தம் ஆசையை அவர் சிஷ்யர்களிடம் தெரிவித்தார்.

குருநாதர் கட்டளையைத் தலைமேல் தாங்கி உடனடியாகச் செய்து முடிக்கப் பாசமுள்ள அந்த ஐவரும், “அப்படியே ஆகட்டும் குருவே. இப்பொழுதே புறப்படலாம்” என்று தயாரானார்கள்.

ஆறு பேரும் நடந்தே அங்கிருந்து புறப்பட்டார்கள். சிஷ்யர்கள் பலரையும் பார்த்து, உரையாடி மகிழ்ந்து விட்டுப் பரவசத்தோடு தங்கள் இருப்பிடம் நோக்கித் திரும்ப நடந்தார்கள். சீக்கிரமாகப் போய்ச் சேரக் குறுக்கு வழியிலே நடந்தார்கள் என்றாலும் பொழுது போய்விட்டது. இரவு வந்து விட்டது. அவர்கள் எங்கும் நில்லாமல் நடந்து கொண்டிருந்தார்கள்.

மூன்றாம் ஜாம நேரம்!

வரும் வழியிலே ஓர் ஆறு!

ஆற்றிலே அதிகமாக வெள்ளம் இல்லை.

இறங்கி நடந்து கடந்து விடலாம் என்றாலும் குருநாதருக்கு ஓர் ஐயம். எப்போதோ அந்த ஆற்றைப் பற்றி அவர் கேள்விப்பட்டிருந்தது அவர் நினைவுக்கு வந்தது.உடனே அவர் சிஷ்யர்களை நோக்கி ‘என் அன்புக்கு பாத்திரமான அருமையான சீடர்களே! சற்று நில்லுங்கள். இதோ இருக்கிறதே… இந்த ஆறு, பார்ப்பதற்குச் சாதுவைப் போல அமைதியாகத் தோன்றுகிறது.ஆனாலும் இது பொல்லாதது. நான் கேள்விப் பட்டிருக்கிறேன். இதை நம்பக்கூடாது. இது விழித்திருந்தால் யாரையும் இறங்கிக் கடந்து போக விட்டுவிடாது. ஆகவே இது தூங்கும் போதுதான் நாம் இதில் இறங்கி நடந்து, கடந்து, அக்கரைக்குச் செல்ல வேண்டும். நான் சொல்வதை அக்கறையோடு கேளுங்கள். நாம் அக்கரைக்குப் போக வேண்டு மானால், இந்த ஆறு தூங்கும் போதுதான் முடியும். ஆகவே…இப்போது தூங்கிக் கொண்டிருக்கிறதா என்பதை நாம் கண்டறிய வேண்டும். விஷயம் தெரியாமல் ஆற்றில் காலை வைக்கக் கூடாது. என்ன செய்யலாம்?” என்று குரு யோசித்தார். சிஷ்யர்களும் பலமாகச் சிந்தித்தார்கள்.

அப்போது குருவுக்கே ஓர் உபாயம் தோன்றி விட்டது. இந்த ஆற்றுக்குத் தெரியாமல் அது உறங்கு கிறதா இல்லையா என்று சோதித்து அறிந்து கொள்ள வேண்டும். இரவில் எல்லாரும் தூங்குவார்கள். ஆனால் இது பொல்லாத ஆறாயிற்றே! ஒருவேளை உறங்குவது போல் பாசாங்கு செய்து கொண்டிருந்து, நாம் இறங்குகிறபோது நம்மை விழுங்கி விட்டால் என்ன செய்வது? போனால் திரும்பிவரக் கூடியதா உயிர்?

குரு, மிலேச்சனை அன்போடு முதுகில் தட்டி, “நீ திறமையானவன். உனக்குப் பக்குவமாக நடந்து கொள்ளத் தெரியும். மெதுவாக அடிமேல் அடி வைத்துச் சென்று ஆறு தூங்குகிறதா’ விழித்திருக்கிறதா என்று அறிந்து வா!” என்று ஏவினார்.

குருவின் ஆணையை ஏற்று மிலேச்சன் உடனே ஆற்றை நோக்கி நடந்தான். சற்று முன்பு தான் குருநாதர் சுருட்டுப் பற்ற வைத்துப் புகைப்பதற்காக நெருப்பு கேட்டிருந்தார். மிலேச்சன் எங்கேயோ ஓடிப்போய், எரிந்து கொண்டு இருந்த ஒரு விறகுக் கட்டையை எடுத்துக்கொண்டு வந்திருந்தான்.

அந்தக் கொள்ளிக்கட்டையோடு மிலேச்சன் ஆற்றை நோக்கி வேகமாக நடந்து போனான். ஆற்றையடைந்த தண்ணீரில் இறங்காமல் ஜாக்கிரதையாகக் கரையின் மேலேயே நின்று கொண்டான். எட்டியிருந்தே அந்த கொள்ளிக் கட்டையை ஆற்றுத் தண்ணீரில் மெதுவாகத் தேய்த்தான். நெருப்பு தண்ணீருக்குள் நனைந்ததும் ‘சுரீர்’ என்று ஒலி எழுப்பியது, அத்துடன் தண்ணீருக்கு மேலே புகையும் வந்தது. பயந்து பதறிப் போய்விட்டான் மிலேச்சன். உடலெல்லாம் நடுங்கியது அவனுக்கு. நல்ல வேளை உண்மையைக் கண்டுபிடித்துவிட்டோம். இல்லை யென்றால் குருநாதர் கதி என்னாவது? இந்தப் பொல்லாத ஆறு இன்னும் தூங்கவேயில்லை. விழித்துக் கொண்டேயிருக்கிறது. ஆறு விழித்திருக்கும்போது இறங்கினால் அது அப்படியே விழுங்கிவிடாதா?

அடித்துப் புடைத்துக் கொண்டு ஓடிவந்தான் மிலேச்சன். அவன் இதயம் வேக வேகமாக அடித்துக் கொண்டது.

“குருவே! குருவே! நல்லவேளையாக நான் கண்டு பிடித்து விட்டேன். ஆறு விழித்துக் கொண்டுதான் இருக்கிறது. இப்போது நாம் இதில் இறங்கிக் கடக்க நினைத்தால் அது ஆபத்தில் தான் முடியும்,” என்றான் மிலேச்சன்.

“என்ன? நதி இன்னும் தூங்கவில்லையா?” என்று ஆச்சரியத்தோடு கேட்டார் பரமார்த்த குரு.

“இல்லை குருவே! அது நான் தொட்டவுடனே எப்படிச் சீறிப் பாய்ந்தது தெரியுமா? அந்த மட்டும் நான் புத்திசாலியாக இருக்கவே… ஆற்றுத் தண்ணீரில் இறங்காமல் கரைமேல் இருந்தபடியே அதைச் சோதித்துப் பார்த்ததால், உயிர் தப்பித்தேன். அப்பப்பா… இந்த ஆற்றுக்கு எவ்வளவு கோபம் வருகிறது தெரியுமா? பாம்பைப் போல சீறிப் பாய்ந்து என்னைக் கொல்லவே முயன்றது. என் முன்னோர் செய்த தவப்பயனாலும், குருநாதரின் அருளாசியாலும் என் உயிருக்கு எந்தக் கெடுதலும் நேரவில்லை” என்று மூச்சிரைக்கப் பேசினான் மிலேச்சன்.

அதைக் கேட்டதும் பரமார்த்த குரு அதிர்ச்சியுற்றுப் போய் விட்டார். அவருக்குப் போன உயிர் திரும்பி வந்ததைப் போல் மகிழ்ந்தார்.

“சிஷ்யா! உன்னை நான் அனுப்பினேனோ பிழைத்தேனோ! ஆற்றைச் சோதிக்க வேண்டும் என்ற விஷயம் முன் கூட்டியே நம் அறிவுக்கு எட்டாமல் இருந்தால் இந்நேரம் என்ன ஆகியிருக்கும்? ஆராயாமல் ஆற்றில் இறங்கியிருப்போம். எல்லாரும் அடியோடு போயிருப்போம். எல்லாம் கடவுள் செயல். அவர் நம் மைக் காப்பாற்றிவிட்டார். அந்த முன்புத்தியை நமக்குக் கொடுத்த ஆண்டவனின் கருணாகடாட்சத்தை என் னென்று சொல்வது? அவனல்லாமல் இந்த உலகத்தில் எது நடக்கும்?” என்று ஆண்டவன் அருளைக் குரு பலவாறு கூறி வியந்து பயபக்தியோடு கன்னங்களில் போட்டுக் கொண்டார். அவ்வாறே சிஷ்யர்களும் ‘பளார் பளார்’ என்று தங்கள் கன்னங்களில் மாறி மாறிப் புத்தி போட்டுக் கொண்டு வானத்தை அண்ணாந்து பார்த்தார்கள்.

“கடவுளே! உன் கருணையே கருணை எங்களைக் காப்பற்றி விட்டாய். எங்கள் குரு பக்தியும் வீண் போகவில்லை!” என்று சொல்லி சொல்லி மகிழ்ந்து போனார்கள்.

மீண்டும் அவர்கள் தீவிர யோசனையில் ஆழ்ந் தார்கள். எப்போது அந்த ஆற்றைக் கடப்பது. ஆறு எப்போது தூங்கும்?

“சிஷ்யர்களே! ஆறு தூங்கினால்தான் நாம் ஆற்றில் இறங்க முடியும். அதுவரை காத்திருப்போம். நாம் காத்திருப்பது ஆற்றுக்குத் தெரியாமல் இருப்பது முக்கியம். தெரிந்தால் அது தூங்கவே தூங்காது” என்று எச்சரித்தார் குரு.

“இப்போது என்ன செய்வது?” என்று மட்டி கேட்டு முடிப்பதற்கு முன், மடையன் தன் எண்ணத்தை வெளியிட்டான்.

“இந்த ஆற்றங்கரையிலே… அதோ அடர்த்தியான ஒரு சோலை இருக்கிறதே… அங்கே போய் பதுங்கி யிருப்போம்”

“அதுதான் சரி” என்று இருள் சூழ்ந்திருந்த அந்தச் சோலைக்கு எல்லாரும் சென்றார்கள்.

– தொடரும்…

– பரமார்த்த குரு கதைகள், முதற் பதிப்பு: செப்டம்பர் 1990, கவிதா பப்ளிகேஷன், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *