கதையாசிரியர்:
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: January 30, 2024
பார்வையிட்டோர்: 2,728 
 
 

படகுப் போன்ற கார் அந்த குடிசையின் வாயிலில் நின்றது. வாசல் திண்ணையில் அமர்ந்து, சிம்புகளை சீவுவதும், கொடிகளை ஒட்டுவதும், களிமண்ணால் பொம்மைகளை வனைவதும், அதற்கு ஆடை அலங்காரங்கள் செய்வதுமாய் ஈடுபாட்டுடன் கிறித்துமஸ்க்காக அலங்காரங்கள் செய்ய ஆயத்தம் செய்து கொண்டிருந்த சூசை, கை வேலைகளை அப்படியேப் போட்டுவிட்டு உள்ளே ஓடினான்.

முதலாளியய்யா கார் வந்து நிக்குதும்மா.. என்று சூசை சொன்னதும், ஓட்டமும் நடையுமாக வெளியே வந்தாள் சூசையின் அம்மா மேரி.

கார் ஓட்டுநர் இருக்கைக்கு வெளியே தலை குனிந்து முதலாளியய்யாவைப் பார்த்தபடி நின்றாள்.

காரின் கண்ணாடிக் கதவு ‘ஹூம்ம்ம்ம்ம்ம்’ என காருக்குள் மெல்லிய ஹூம்கார ஓசையை எழுப்பியபடி பாதி இறங்கி நின்றது. காருக்குள் உற்பத்தியான ஏசி குளிர், அதிகமாக வெளியே போய்விடக்கூடாது என்பதில் முனைப்பாக இருந்தார், கார் ஓட்டி இருக்கையில் அமர்ந்திருந்த கோடீஸ்வரர் இம்மானுவேல்.

மேரி, வீட்டுக்கு உடனேப் போயி சுத்தம் செய்யற வேலையப் பாரு. இன்னும் ஒரு, ரெண்டு மணிக்குள்ளே வந்துருவேன். வந்ததும் டெக்கரேஷன் செய்யற அளவுக்குத் தயாராக வெய்யி. பொடியனையும் அழைச்சிக்கிட்டுப் போ..” என்ற சூசையையும் சுட்டிக் காட்டிச் சொன்னார். சொன்ன கையோடு கார் கண்ணாடியை ஏற்றிவிட்டுக் கொண்டு சரக் கென கார் நகர்ந்துவிட்டது.

கையோடு கொண்டு சாக்குப் பைகள், கட்டைப் பைகள், போன்றவைகளை வாசல் கேட் அருகேயே வைத்துவிட்டு உள்ளே சென்றனர் மேரியும், சூசையும். உள்ளே நுழையும்போதே நாற்புறமும் இருந்த மலர் தோட்டத்தில் தோட்டக்காரர்கள் தேவையற்ற கிளைகளைக் கழித்துக் கொண்டிருந்தனர்.

கழித்துப் போட்ட கிரிஸ்துமஸ் மரக் கிளைகள், போகன் வில்லாக் பூக்கள் போன்றவைகளில் தனக்குத் தேவையானவற்றையெல்லாம் ஒரு பையில் எடுத்து வைத்துக் கொண்டான் சூசை.

மேரி மொதல்ல அந்த நாற்காலி எல்லாத்தையும் வெளியேக் கொண்டு போய் போர்டிகோல போடு என்றாள் முதலாளியம்மா ப்யூலா.

அதோ இருக்கு பாரு அந்தப் பழைய துணிங்க பொம்மைங்க எல்லாத்தையும் அப்புறப் படுத்து என்றாள்.

முதலாளியம்மா தந்த குப்பைக் கூடையில் அதையெல்லாம் அடைத்து சூசையிடம் கொடுத்தாள் மேரி. இதைக் கொண்டு போல் தெருவுல உள்ள குப்பை வண்டீல கொட்டிரு..” – என்றாள்.

குப்பையாகக் கருதப்பட்ட எல்லாமே, பொக்கிஷமாகத் தெரிந்தன சூசைக்கு. வெளியே கேட் ஓரம் வைத்திருந்த சாக்கில் அதைக் கொட்டிவிட்டு வந்தான்.

தொடர்ந்து, மாப் போட்டுத் தரையைத் துடைத்து, சுத்தமாக்கிவிட்டு வீடு திரும்பினர் அம்மாவும் மகனும்.

சூசைக்குச் சந்தோஷம் தாங்கவில்லை. பெரிய புதையல் கண்டதுபோல மகிழ்ந்தான். முதலாளி வீட்டிலிருந்து அள்ளி வந்த அனைத்தையும்பாங்காக அடுக்கி அழகு பார்த்தான்.

தான் வடிவமைத்தக் களி மண் பொம்மைகள் போக, மீதமுள்ள காட்சிகளுக்குத் தேவையான பொம்மைகளை தன் பாணியில் அலங்கரித்தான்.

கிறிஸ்துமஸ் மர இலைகள், கோழிக் கொண்டை, வாடா மல்லிப் புஷ்பங்கள். வண்ண வண்ண போகன் வில்லாப் புஷ்பங்கள் என அனைத்தையும் அழகாய் ஆங்காங்கேப் பொருத்தமாய் வைத்து பக்தியுடன் அலங்கரித்தான் சூசை.

கோடீஸ்வரர் இம்மானுவேல் கார் வந்து நின்றதும் அந்த கிஃப்ட் மால்’ முதலாளியே கல்லாவை விட்டு இறங்கி வந்து அவரை வரவேற்றார்.

“சார்.. இது இந்த வருஷ புது மாடல்..”,

“இது இம்போர்ட்டட் ஐட்டம் சார்..”

என்று சொல்லச் சொல்ல ஆமோதிப்பாய் தலையாட்ட, அனைத்தும் குட்டியானையில் ஏற்றப்பட்டது.

அறுபதாயிரத்துக்கு கிரடிட் கார்டு தேய்த்துவிட்டு, கடையை விட்டு வெளியேறினார் இமானுவேல்.

இன்டீரியர் டெக்கரேஷன் செய்வதில் நிபுணர்களை வரவழைத்தார் இம்மானுவேல். வாங்கப்பட்ட அலங்காரப் பொருட்கள் அனைத்தையும் அழகாய் வைத்து அலங்கரித்தனர்.

அது வீடா சொர்க்கமா என்று ஆச்சர்யப்படும் வண்ணம் அவ்வளவு அருமையாக அமைந்திருந்தன அனைத்தும்.

கிறிஸ்துமஸ் விருந்துக்காக அழைக்கப்பட்ட விருந்தாளிகள் அனைவருக்கும் ஒரு புறம் கிஃப்ட் (பரிசுப் பொருட்கள்) குவிக்கப்பட்டிருந்தன.

யாருக்கு எந்தப் பரிசு தேவையோ, அதைச் சொன்னால், அதை கிஃப்ட் பேக்’ செய்து தர ஆட்கள் நியமிக்கப்பட்டிருந்தனர்.

மெல்லிசைக் குழுவினரின் சங்கீதங்கள் செவிக்கு உணவிட, வகைவகையான இனிப்புகள், காரங்கள், ஐஸ்கிரீம்கள், பழவகைகள் என அமர்க்களமாய் வயிற்றுக்கும் உணவளிக்கப்பட்டது.

மிகவும் திருப்தியாக, இம்மானுவேல், ப்யூலா தம்பதியரை வாழ்த்திவிட்டு விடைபெற்று, தேவாலயத்தில் நடைபெறப்போகும் சிறப்புப் பிரார்த்தனைக் கூட்டத்திற்குச் சென்றனர்.

தேவாலயம் போகிற வழியில், அந்தக் குடிசை முன் அனிச்சையாக நின்றன பக்தர்களின் கால்கள்.

சூசை, தனக்குக் கிடைத்தவற்றையெல்லாம், மறுசுழற்சி முறையில் பயன்படுத்திச் செய்திருந்த கிறிஸ்துமஸ் அலங்காரம் தெருவில் சென்ற அனைவரையுமே ஈர்த்தது.

அந்த எளிமையான அலங்காரங்களில் புனிதம் நிறைந்திருந்தது. கண்டவுடன் கைக் கூப்பித் தொழத் தோன்றிது அவர்களுக்கு

Psalm 116:6

6 The LORD preserves the simple;

when I was brought low, he saved me.

இறைவன் எளியவர்களைக் காக்கிறான்;

நான் தாழ்த்தப்பட்டபோது, ​​அவர் என்னைக் காப்பாற்றினார்.

சங்கீதம் – 116.6

பூமிக்குரிய ஞானத்தால் அல்ல, கடவுளின் கிருபையினால், நாங்கள் உலகில் எளிமையுடனும், தெய்வீக நேர்மையுடனும் நடந்துகொண்டோம் என்பது எங்கள் மனசாட்சியின் சாட்சியாகும், இதுவே எங்கள் பெருமை.

கொரிந்தியர் – 1: 12

கண்களும் கைகளும் தொழ, மினிமலிசம் என்ற கொள்கையை வலியுறுத்தும் சங்கீதம், கொரிந்தியர் வசனங்கள், தேவாலயத்தின் ஒலிபெருக்கியின் வழியாகக் காற்றில் கலந்து காதுகளை நிறைத்துக் கொண்டிருந்தது.

– 25.12.2023

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *