கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமலர்
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: February 11, 2013
பார்வையிட்டோர்: 14,684 
 

குடிசை இருட் டில், அருகில் இருந்த நாடா விளக்கின் ஒளியை கூட்டி, கடிகாரத் தில் நேரம் பார்த்தாள் சரசு. மணி மூன்றை நெருங்கி கொண்டிருக்க, இன்னும் விடிய, இரண்டு மணி நேரத்திற்கு மேல் இருக்கிறதே…அவளுக்கு தூக்கம் வரவில்லை. அருகில் தலைமாடு, கால்மாடு தெரியாமல் தூங்கும் பிள்ளைகள் பரமனையும், தேவியை யும் பார்த்தாள். வள்ளியை அனுப்பி வைத்து, ஆறு மாதமிருக்குமா… பாவம் வீட்டில் வளர வேண்டியவளை, இப்படி வறுமைக்காக வேலைக்கு வெளியூருக்கு அனுப்பி வைத்து… வயசுக்கு வந்த மகள் எப்படி இருக்கிறாளோ… நேற்று, பட்டணத்துக்கு போன முத்துசாமி அண்ணன் வரும்போது, வள்ளியை இரண்டு நாள் லீவு கொடுக்க சொல்லி, அழைச்சுட்டு வர்றதா சொல்லிட்டு போனாரு…. எப்படியும் விடியற நேரம் வள்ளி வந்துடுவா… மகளை பார்க்க அந்த தாயின் மனது ஏங்கியது.
சுமைகள்“வள்ளி துணி துவைச்சு காயப் போட்டாச்சுன்னா… பெரியம்மாவுக்கு வெந்நீர் வச்சு உடம்புக்கு ஊத்திவிடு. அப்படியே பரணில் இருக்கிற பித்தளை குடத்தை இறக்கி, புளி போட்டு தேய்த்து வை…’
அடுக்கடுக்காக வள்ளிக்கு வேலைகளை சொல்லிக் கொண்டே போனாள்.
வள்ளி அந்த வீட்டிற்கு வந்ததிலிருந்து ஓய்வு, ஒழிச்சல் இல்லாமல் உழைக்கிறாள். இரண்டு பிள்ளைகள், அம்மா, அப்பா மற்றும் வாதம் வந்த பாட்டி என, பெரிய குடும்பம். எல்லாருக்கும் கூப்பிட்ட குரலுக்கு ஓடிச்சென்று, அவரவர் சொல்லும் வேலைகளை செய்யவே வள்ளிக்கு பொழுது பத்தாது.
ஊரில் அம்மா, தம்பி, தங்கச்சியோடு சந்தோஷமாக இருந்த நாட்கள், நினைவுக்கு வந்து, கண்களில் நீர் திரளும். மூன்று வேளையும் பலகாரம், சாதம், சாம்பார் என்று, நல்ல சாப்பாடு அவர்கள் கொடுத்தாலும், வீட்டில் அம்மா உருட்டி தரும் பழைய சோறும், வெங்காயமும் தான், அவள் ஞாபகத்துக்கு வரும்.
முத்து மாமா தான், அம்மாவிடம் பேசி பட்டணத்தில் வேலைக்கு சேர்த்து விட்டார். போன முறை அம்மாவிடம் கொடுக்க, சம்பளம் வாங்க வந்த முத்து மாமாவிடம், “மாமா… அம்மா, தம்பி, தங்கச்சியை பார்க்கணும் போல இருக்கு. வீட்டை விட்டு வந்து, ஆறு மாசமாச்சு. வீட்டுகாரம்மா கிட்டே சொல்லி, அடுத்த முறை வரும்போது, என்னையும் கூட்டிட்டு போ மாமா…’ என்றாள்.
“கட்டாயம் அழைச் சுட்டு போறேன் பாப்பா. வீட்லே இருக்கிற வங்க சொல்ற வேலையை செஞ்சு, நல்ல பிள்ளையாக நடந்துக்க. உன் சம்பள பணம், உன் அம்மாவுக்கு எவ்வளவோ உதவியாக இருக்கும் புரியுதா?’
தலையாட்டினாள் வள்ளி.
“இங்க பாரும்மா… வேலைக்கு வள்ளியை போல ஆள் அமையறது கஷ்டம். வாய் பேசாம சொன்ன வேலையை செய்யறா. இரண்டு நாள் தானே, அனுப்பி வை. அப்புறம் வேலையை விட்டு நின்னுக்கிறேன்னு சொன்னா, நம்ம பாடு திண்டாட்டமாயிடும்…’
பெரியம்மா சொல்லி, அனுமதி வாங்கி தர, வள்ளிக்கு ஊருக்கு போகப் போகிறோம் என்ற எண்ணமே, சந்தோஷத்தைக் கொடுத்தது.
“இங்கு வேலைகள் அதிகம். ஊருக்கு போனால் திரும்ப வரக் கூடாது. அங்கேயே அம்மாவிடம் சொல்லி, பஞ்சு மில்லில் ஏதாவது வேலை பார்த்து, அவர்களுடனே இருக்க வேண்டும். இப்படி தனிமையில் எல்லாரையும் விட்டுட்டு, ஒற்றையில் வந்து, ராத்திரி, பகல் பாராமல் உழைக்க வேண்டாம்…’ என்று எண்ணினாள்.
முத்து மாமாவுடன் ஊருக்கு கிளம்பியவளை, பெரியம்மா அழைத்தாள்.
“வள்ளி… இந்தா நூறு ரூபாய் வச்சுக்க. உன் தம்பி, தங்கச்சிக்கு சாப்பிட ஏதாவது வாங்கிட்டு போ. போனது மாதிரி, ரெண்டு நாளையிலே வந்துடுடி. நீ இல்லாம, என்னால தனியா எந்த வேலையும் செய்ய முடியாது. உன் உதவி ஒத்தாசையில் தான், இந்த பாட்டியோட வண்டி ஓடிட்டு இருக்கு. வந்துடுறியா?’
“பெரியம்மா அடிக்கடி கோபித்துக் கொண்டாலும் அன்பானவள்…’ மனதில் நினைத்துக் கொண்டாள் வள்ளி.
குடிசையினுள் நுழைந்த வள்ளியை, தழுவிக் கொண்டாள் சரசு.
“”வள்ளி… நல்லா இருக்கியா. உன்னை பார்த்து எத்தனை நாளாச்சு?”
அக்காவை கண்டதும், பரமனும், தேவியும் அவளை சூழ்ந்து கொண்டனர்.
அவள் வாங்கி வந்த தின்பண்டங்களை அவர்கள் ஆவலோடு பிரித்து சாப்பிட, கண்கள் கலங்க மகளையே பார்த்தாள் சரசு.
ராவுத்தர் கடையில், ஐம்பது ரூபாயை கொடுத்துவிட்டு, கடன் சொல்லி அரை கிலோ நெஞ்செலும்பும், கறியுமாக வாங்கி வந்து அம்மியில் மசாலா அரைத்து, வாசனையாக கறி பிரட்டல் செய்து, முட்டை பொரித்து, சாதம் வடித்தாள்.
“”ஆத்தா எதுக்கு இப்படி மாய்ஞ்சு, மாய்ஞ்சு வேலை பார்க்கிற… நான் என்ன விருந்தாளியா… உன் மவ தானே வந்திருக்கேன்.”
“”இருக்கட்டுமே… ஆறு மாசமா உனக்கு சமைச்சு போடாததை இந்த ரெண்டு நாளையிலே செஞ்சு போட றேன். நல்லது, கெட்டது சமைக்கும் போதெல்லாம் உன்னை நினைச்சுப் பேன் வள்ளி.”
“”ஆத்தா… நான் உன் கையால உருட்டிக் கொடுத்த பழைய சோத்தையும், வெங்காயத்தையும் தான் நினைச்சுப்பேன்.”
சொன்னவள், சரசுவின் கழுத்தை கட்டிக் கொண்டாள்.
தம்பி, தங்கையுடன் சிரித்து பேசி, ஆத்தா கையால் கறி சோறு சாப்பிட்டு, வள்ளிக்கு அன்றைய பொழுது சந்தோஷமாக போனது.
இரவு, ஆத்தாவின் அருகில் அவள் மேல் கையை போட்டு, படுத்துக் கொண்டாள்.
“”எனக்கோசரம் இன்னைக்கு வேலைக்கு லீவு போட்டுட்டியா ஆத்தா…”
“”ஆமாம். நாளைக்கும் வரலைன்னு சொல்லிட்டேன். என்ன… ரெண்டு நாள் கூலி பணத்தை பிடிச்சுக்குவாங்க; போகட்டும். உன்னோடு இருக்கிற திருப்தி கிடைக்குதே… அது போதும். அப்புறம் நீ ஊருக்கு கிளம்பிடுவே. எப்ப உன்னை திரும்ப பார்க்க போறேனோ தெரியாது.”
“”பரமனும், தேவியும் நல்லா படிக்குதுங்களா ஆத்தா?”
“”படிக்க வைக்கணும் வள்ளி. என்னோட ஆசை, கனவெல்லாம், என்ன தெரியுமா… இரண்டையும் நல்லா படிக்க வச்சு, ஒரு டீச்சராக, ஆபிசராக இந்த சமுதாயத்தில், அதுங்க ளுக்கு ஒரு அந்தஸ்தை ஏற்படுத்தி, நம்ப தரித்திரத்தை போக்கணும். நாமளும் தலை நிமிர்ந்து வாழ முடியும்ன்னு நிரூபிக்கணும்.
“”உன்னோட அப்பன், இப்படி மூணு பிள்ளை களை கொடுத்துட்டு, என்னை தனிமரமாக தவிக்க விட்டு ஓடி போனானே… இடிஞ்சு போயி அழுதிட்டு இருந்த என் கண்ணீரை துடைச்சது யார் தெரியுமா… நீ தான் கண்ணு. உனக்கு ஆறு வயசு இருக்கும். “அம்மா அழுவாதே. நான் உனக்கு இருக்கேன்…’கிற மாதிரி நீ பார்த்த பார்வை…
“”அன்னைக்கே தெரிஞ்சுட்டேன். உங்களை நல்லபடியாக பார்க்கணும்ன்னு என்னை தேத்திக்கிட்டு, கடுமையா உழைச்சேன். இருந்தாலும், என் உழைப்பு நம்ப வயித்தை நிரப்ப தான், சரியா இருந்துச்சு. நீ அஞ்சாம் வகுப்போடு படிக்க மாட்டேன்னு சொல்லி, என்னோடு காட்டிலேயும், மேட்டிலேயும் வேலைக்கு வர ஆரம்பிச்சே…
“”வயசுக்கு வந்த பிறகு, உன்னை நல்லபடியா பாதுகாக்கணுமே… ஒரு நல்லவன் கையில் ஒப்படைக்கிற வரைக்கும், இந்த ஆத்தாவுக்கு நிம்மதி ஏது. முத்துசாமி அண்ணன் நம்பிக்கையாக சொன்னதாலே, உன்னை வேலைக்கு அனுப்பினேன்.
“”தனி ஆளா, இந்த குடும்ப சுமையை சுமக்க முடியாம தவிச்ச எனக்கு, ஒரு தகப்பன் ஸ்தானத்திலிருந்து தோள் கொடுத்தே… இப்பவும் உன் சம்பாத்தியத்தில் தான், புள்ளைங்க படிக்குது.
“”முத்துசாமி அண்ணன், முன் பணமாக ஐயாயிரம் ரூபா நீ வேலை செய்யற இடத்திலிருந்து வாங்கிட்டு வந்து கொடுத்துச்சு. அடுத்த வருஷம், இரண்டு பேருக்கும் ஸ்கூல் பீஸ் கட்டணும். அப்பன் இருந்து நிர்வகிக்க வேண்டிய குடும்பத்தை, நீ தான் தாயி, தூக்கி நிறுத்திட்டிருக்கே.” சொன்னவளின் கண் களிலிருந்து கண்ணீர் பெருகியது, அந்த இருட்டிலும் வள்ளிக்கு நன்றாக தெரிந்தது.
“”என் மனக்குறையை சொல்லிட்டிருக்கேன். நீ அங்க எப்படி இருக்கே தாயி. உன்னை நல்லா கவனிச்சுக்கிறாங்களா. நல்ல சாப்பாடு தர்றாங்களா… வேலை ஒண்ணும் அதிக மில்லையே… அப்படி ஏதும் இருந்தா, சொல்லு தாயி. நீ அங்கே போயி தனியா கஷ்டபட வேண்டாம். இங்கேயே கூழோ, கஞ்சியோ இருக்கிறதை குடிச்சுட்டு, எப்படியாவது சமாளிப்போம்.”
“”ஆத்தா நான் கஷ்டபடறதா யார் சொன்னது. என்னை வீட்லே ஒருத்தர் மாதிரி பார்த்துக்கிறாங்க. வேலையும் அதிகம் இல்லை. என்னை பத்தி கவலைபடாதே. தம்பி, தங்கச்சியை நல்லா படிக்க வை. நீ நினைச்ச மாதிரி, நம்ப குடும்பம் நல்லா வரும். நான் உனக்கு என்னைக்குமே துணையா இருப்பேன். கவலைபடாதே ஆத்தா…”
சொன்ன வள்ளி, சுமைகல்லாக நிற்க தன்னை திடப்படுத்திக் கொண்டாள்!

– ஜூன் 2010

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *