கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி  
கதைப்பதிவு: August 19, 2023
பார்வையிட்டோர்: 2,531 
 
 

அந்த ஒருநொடியில் எல்லாம் நடந்து முடிந்துவிட்டது. இனி நான் என்னசெய்வேன்? அறை நண்பர்கள் சொன்னதுபோல எது நடந்தாலும் அது என் குடும்பத்தையே குழிதோண்டிப் புதைச்சிடுமே! பட்டுவந்த ரெண்டு லட்சரூபாய் கடன் கண்முன் கண்ணாமூச்சி ஆடியது.

மூச்சுமுட்ட வேதனையோடு காவல் நிலையத்திலிருந்த என்னை வேறொரு அறைக்கு அழைத்துச் சென்றனர். உடல் கிடுகிடுக்க நடை தள்ளாடியது.

என்னை மேலும்கீழும் பார்த்த மேலதிகாரி “என்ன நடந்தது?” என்றார்.

“வேலைமுடிஞ்சி வந்த நான் சமைச்சி சாப்பிட்டபிறகு பேஸ்புக் பாத்துகிட்டிருந்தேன். அடிக்கடி வந்த பதிவை பாத்துட்டு “இதென்ன லூசுத்தனமா இருக்கு…. ஆன்னா ஊன்னா மானமுள்ள தமிழனா இருந்தா ஷேர் பண்ணுங்கன்னு போடுறாங்க”ன்னு பக்கத்துலயிருந்த ராகவ்கிட்ட சொல்லிகிட்டிருந்த கணத்துலதான் இப்படி ஆகிடுச்சி, மேல் பெட்லயிருந்த விசுவம் என்னை குத்துகுத்துன்னு குத்திட்டான் சார்.”

“ஏன் அடிச்சான்?”

“அதுதான் சார் எனக்கும் முதல்ல தெரியல, அவன் அதுமாதிரி பதிவை அடிக்கடி போடுறவன்னு அப்புறம் ராகவ் சொன்னபிறகுதான் தெரிஞ்சது, இதுதான் நடந்தது சார், என்னை தண்டிச்சிடாதீங்க!” என் கண்கள் இந்தியப்பெருங்கடலானது.

அதன்பிறகு அவர் உதடுகள் அசையவில்லை.

குழப்பத்துடனே முன்பிருந்த அறைக்கு கொண்டு செல்லப்பட்டேன். எப்பவும் சிங்கப்பூரை சுத்திப்பாக்க வந்தவன் மாதிரியே பேசுற விசுவத்தின் பக்கம்கூட நான் போனதில்லையே! ஹாஸ்பிடல்ல போட்ட ஊசியையும் மீறி வலி படுத்தியெடுத்தது. அதைவிட நெஞ்சின் வேதனை தாங்கமுடியவில்லை!

‘என்ன செய்வார்கள்? நண்பர்கள் சொன்னதுபோல ஊருக்கு அனுப்பிவிட்டால், வாங்கிய கடனை திருப்பியடைக்க வழியேதுமில்லை குடும்பத்தோடு தற்கொலை செய்துகொள்வதைத் தவிர. ஒருவேளை ஜெயில்ல போட்டு பிரம்பால அடிச்சி ஊருக்கு அனுப்பினா….!’

“கால்வயித்துக் கஞ்சியாயிருந்தாலும் மானத்தோடு குடிக்கணும்பா” அம்மாவின் வார்த்தைகள் நெஞ்சில் நிழலாடுகின்றன.

மூச்சுவிடும் சத்தம்கூட புயல்காற்றைப்போலாகிறது. கண்கள் கடிகாரத்தின் பக்கம்போக அதிகாலை இரண்டு என்றது.

மீண்டும் காவலர் அழைத்துச்செல்ல, பயம் பழகியிருக்க, அங்கே என் கம்பெனியின் மேனேஜர் லிம். உடல் உதற இதயம் எகிறிக் குதித்துவிடுவேனென்று மிரட்டல் விடுத்தது. வந்த அன்றே ஏகப்பட்ட கண்டிஷன்களைப்போட்டு, சிங்கப்பூருக்கு வந்துவிட்டோமென்ற மகிழ்ச்சியான நிகழ்வை கலக்கமாக மாற்றியவர்.

அவர்கள் பேசிய வேகத்தில் என்னவென்று புரிந்துகொள்ள முடியவில்லை என்னால். காவலரிடமிருந்த பேப்பரை வாங்கிய லிம் கால்களை அகலவைத்து நாலே எட்டில் கட்டிடத்தைவிட்டு வெளியானார். ஒருகணம் என்ன செய்வதெனப் புரியாமல் விழித்தவன், போகச்சொல்லி காவலர் கைகாட்ட நாய்க்குட்டிபோல லிம் சென்ற திக்கை நோக்கி ஓடினேன். அவர் கார்கதவை திறந்த வேகத்திலேயே என் சப்தநாடியும் ஒடுங்கியது. எங்கே அழைத்துச் செல்கிறார்? ஏர்போர்ட்டா? எனக்கு இங்கே எல்லா ரோடும் ஒண்ணுபோலவே இருக்குங்க! வண்டி நிற்க, நான் தங்கியிருக்கும் ஹாஸ்டல். பெட்டிப்படுக்கைய எடுத்துகிட்டுப் போகணுமோ?

“எதாவது பிரச்சினைன்னா பேசமாட்டேன், செய்வேன்!” இந்த மண்ணை மிதித்த நாளன்று அவர் பேசியபேச்சு காதுகளில் ரீங்காரமிடுகிறது.

“போ…” கார் கண்ணைவிட்டு மறைந்தது.

அப்ப ஊருக்கு அனுப்பலையா? உள்ளே போகணுமா? இமாலய நிம்மதி பிறக்க, உள்ளே போனால் விசுவம்? பிளாஸ்டர்போட்ட முகத்தை நடுக்கத்துடன் கைகள் தடவுகின்றன!

அடிமேலடி எடுத்துவைத்து அறையை அடைய ஏகப்பட்ட குறட்டைச் சத்தங்கள், குலதெய்வத்தை வேண்டியபடி லைட்டைப் போடுகிறேன். கட்டிலின் மேலிருந்த மானமுள்ள தமிழனின் பெட்டிப்படுக்கைகளை காணவில்லை.

– சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகம் நடத்தும் கதைக்களத்தில் (மே 2017) இரண்டாம் பரிசு பெற்ற சிறுகதை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *