கதையாசிரியர்:
தின/வார இதழ்: சுதேசமித்திரன்
கதைத்தொகுப்பு: சரித்திரக் கதை
கதைப்பதிவு: April 15, 2023
பார்வையிட்டோர்: 1,246 
 

 (2001ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அதியமானிடமிருந்து தூதராக வந்திருந்த ஒளவையாரைத் தனது படைக் கொட்டிலுக்கு அழைத்துச் சென்றான் தொண்டைமான் இளந்திரையன். 

கம்பீரமான தோற்றத்தோடு விளங்கிய அந்த ஆயுதசாலை முழுதும் ‘பளபள’ வென்று மின்னும் புத்தம் புதிய ஆயுதங்கள் நிறைக்கப்பட்டுக் கிடந்தன. 

நீள நீளமான வேல்கள் ஒருபுறம். கைப்பிடிகளோடு கூடிய வட்டவடிவமான கேடயங்கள் ஒருபுறம். ஒளி வீசும் வாள்கள் மலைபோலக் குவியல் குவியலாகக் கிடந்தன. வில்கள் வரிசையாக அடுக்கப்பட்டிருந்தன. கூரிய அம்புகள் நிறைய வைக்கப் பட்டிருந்த அம்பறாத் தூணிகள் கட்டித் தொங்கவிடப் பட்டிருந்தன. யானைமுக படாங்கள், குதிரைச் சேணங்கள், இரும்புக் கவசங்கள் மிகுந்திருந்தன. எங்கு பார்த்தாலும் போர்க் கருவிகள் நிறைந்து விளங்கியது அந்த மாளிகை. 

ஆயுதங்கள் எல்லாம் எண்ணெய் பூசப்பெற்றுத் துருவேறாமல் பாதுகாக்கப்பட்டிருந்தன. அழகுக்காக ஆயுதக் குவியல்களின் மீதும் அடுக்குகளின்மீதும் மயில் தோகைகளால் அலங்கரித்திருந்தார்கள். எண்ணெயால் ஆயுதங்களுக்கும் தன் இயல்பால் மயில் தோகையையும் மினுமினுப்பாகத் தோன்றின. சில ஆயுத வரிசைகளின்மேல் பூக்களால் தொடுக்கப்பட்ட மாலைகளையும் அணிவித்து இருந்தார்கள். பார்த்தால் எத்தகை யவர்களுக்கும் பிரமிப்பையூட்டக் கூடியதாக இருந்தது அந்தப் பெரிய ஆயுதசாலையின் காட்சி. 

வன்மை வாய்ந்த வீரர்கள் பலர் அந்த ஆயுத சாலையைச் சுற்றிக் காவல் புரிந்து வந்தார்கள். தொண்டைமானுடைய ஆயுத் பலத்தின் பெருமையை விளக்குவதற்கு அந்த ஆயுத சாலை ஒன்றே போதும். கண்கண்ட சான்றாகக் காட்டி விடலாம். 

ஒளவையார் இதைப் பார்க்க வேண்டும்; பார்த்துப் பிரம்மிக்க வேண்டும் என்பதற்காகவே தொண்டைமான் ஒளவையாரை அழைத்து வந்து ஒவ்வொரு பகுதியாகப் பெருமிதத்தோடு காட்டிக் கொண்டிருந்தான். 

ஒளவையார் தன் நாட்டிலிருந்து திரும்பிச்சென்று அதியமானைக் கண்டு, “அதியா! தொண்டைமானுடைய படைச் சாலையைப் பார்த்தேன். அதில் நிரம்பியுள்ள ஆயுதங்களின் எண்ணிக்கையைப் பார்க்கும்போது பயம் கொள்ள வேண்டியிருக்கிறது. உன்னைவிட அவன் வலிமை பெரிதாக இருக்கும்போலத் தோன்றுகிறது” என்று அவனிடம் சொல்லும் படியாகச் செய்துவிட வேண்டும் என்பதும் தொண்டைமானின் ஆசை! ‘அப்படி ஒளவையார் போய்க் கூறினால் அதியமான் உடனே பயந்துபோய்ப் படையெடுப்பையே நிறுத்திவிடுவான்’ என்றெண்ணிக் கொண்டான் அவன். 

”ஒளவையாரே! இந்தப் பெரிய மாளிகைதான் என் படைச்சாலை. பாருங்கள்! இந்த மாளிகையே காணாதபடி ஆயுதங்களை நிரப்பி வைத்திருக்கிறேன்.” 

“அப்படியா?” 

தொண்டைமான் தன் பெருமையைப் பற்றியே அளந்து கொண்டு வந்தான். ஒளவையார் சுருக்கமாக ஓரிரு வார்த்தை களாலேயே அவன் பேச்சுக்குப் பதில் கூறிக்கொண்டு வந்தார். 

இன்னும் ஆயுதங்கள் கொல்லர்களிடமிருந்து வந்து சேரவில்லை. இதுவரை செய்து முடித்திருக்கும் ஆயுதங் களாலேயே இந்த மாளிகை நிரம்பிவிடும் போலிருக்கிறது.’ 

“ஓஹோ…” 

“இதோ! இவைகள் எல்லாம் அம்புகள்; இவைகள் எல்லாம் புதிதாகச் செய்த வேல்கள்; இந்த மாதிரி அமைப்புள்ள வேல்களை இதுவரை எந்த அரசனுமே செய்ததில்லை. என்னுடைய இந்தப் படைச் சாலையிலிருக்கும் இவ்வளவு ஆயுதங்கள் தமிழ்நாட்டில் வேறு எந்த அரசனுடைய படைச்சாலையிலாவது இருக்க முடியுமா? ஔவையாரே! நீங்கள் கூறுங்கள்.” அவனுடைய இந்தக் கேள்விக்கு என்ன பதில் கூறுவதென்று தெரியாமல் முதலில் திகைத்தார் ஔவையார். பின் ஒருவாறு தம்மைச் சமாளித்துக் கொண்டு, 

“ஆமாம்! ஆமாம்! இவ்வளவு ஆயுதங்கள் வேறு யாரிடம் இருக்க முடியும்? உன்னிடம் அளவுக் கதிகமான ஆயுதங்கள்தாம் இருக்கின்றன” என்று ஒத்துப் பாடினார். 

“அளவுக்கு அதிகமான ஆயுதங்கள் மட்டுமில்லை. என் படைபலமும் இப்போது அதிகமாகத்தான் இருக்கிறது. எந்த அரசனும் இப்போது சுலபமாக இந்த நாட்டின் மேல் படையெடுத்து வென்றுவிட முடியாது!” 

“ஓஹோ, அப்படியா.?” 

“வில், வாள், வேல், கவசம் என்று எவ்வளவு அழகாகவும் வரிசையாகவும் ஆயுதங்களை அடுக்கி முறைப்படுத்தி 

வைத்திருக்கின்றேன் பார்த்தீர்களா?” 

“ஆமாம்! ஆமாம்!.” 

“அது சரி! உங்கள் அதியமானுடைய படைச்சாலை இந்த மாதிரி இருக்குமா? அதைப் பற்றி என்னிடம் ஒன்றுமே கூறமாட்டேன் என்கிறீர்களே!’ 

“அதியமானைப் பற்றி நீ கேட்க வேண்டும் என்று விரும்புகிறாயா?” 

“கட்டாயம் விரும்புகிறேன் அம்மையாரே!” 

“அப்படியானால் சொல்லுகிறேன். தெரிந்து கொள். ஆனால் ஒன்று..” 

“என்ன?” 

”நான் சொல்வதைக் கேட்டு நீ என்மேல் கோபித்துக் கொள்ளமாட்டாயே?” 

“சொல்லுங்கள், உங்கள் மீதும் எனக்குக் கோபம் வருமா, என்ன?” 

“இங்கே உன்னுடைய ஆயுதங்கள் மயில் தோகையால் அலங்கரிக்கப்பெற்று மாலை சூடிக்கொண்டு எண்ணெய் பூசப்பட்டு விளங்குகின்றன. காம்புகளும் நுனியும் செம்மை செய்யப் பெற்று விளங்குகின்றன. உன் படைச்சாலையைச் சுற்றிக் காவல் வைத்திருக்கிறாய். ஆனால் பாவம்! இந்த ஆயுதங்கள் ஒரு முறையாவது போரில் பயன்பட்டதாகத் தெரியவில்லை. மினுமினுப்பு அழியாமல் அப்படியே புதிதாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கின்றன.” 

“எங்கள் அதியமானுடைய ஆயுதங்களோ, பகைவர்களோடு போர் செய்து அடிக்கடி கொல்லனின் உலைக்களத்திற்குச் சென்று செப்பம் செய்ய வேண்டியனவாக இருக்கின்றன. காம்பும் நுனியும் முறிந்தும் சிதைந்தும் ஆண்மை வெளிப்படவே பயன்பட்டுக் கொண்டிருக்கின்றன, அவன் ஆயுதங்கள். இருந்தால் செல்வத்தைப் பலர்க்கும் பகிர்ந் தளிப்பான். இல்லையானாலும் பலரோடு உடனுண்டு மகிழ்வான். ஏழைகளைக் காப்பாற்றுபவன். இவ்வளவு சிறப்புக்களையும் கொண்ட எங்கள் அரசன் அதியமானுக்கு உண்மையிலேயே வீரமுண்டு. படைச்சாலையை அழகாக அலங்கரிக்கத் தெரியாது அவனுக்கு. அவைகளை எப்படிப் பயன்படுத்துவது என்பது மட்டும்தான் தெரியும்.” 

தொண்டைமான் ஒளவையாரை நிமிர்ந்து பார்க்சுத் திராணியின்றித் தலைகுனிந்தான். அவர் தன்னைச் சமாத்தியமாக அவமானப்படுத்திவிட்ட விதம் அவனை வெட்க முறச் செய்தது. ‘நீ வீரனில்லை! அழகு பார்க்க ஆயுதம் செய்கிறவன்-என்று மட்டந் தட்டிவிட்டார். பேச வாயில்லை அவனுக்கு’ ஒளவையாருடைய தூது வெற்றி பெற்றுவிட்டது. 

இவ்வே, பீலி அணிந்து மாலை சூட்டிக்
கண்திரள் நோன்காழ் திருத்தி நெய்யணிந்து
கடியுடை வியனகர் அவ்வே அவ்வே 
பகைவர்க் குத்திக் கோடுநுதி சிதைந்து 
கொற்றுறைக் குற்றில மாதோ என்றும் 
உண்டாயிற் பதம் கொடுத்து 
இல்லாயின் உடன் உண்ணும் 
இல்லோர் ஒக்கல் தலைவன் 
அண்ணல் எங்கோமான் வைந்நுதி வேலே!  (புறநானூறு-95) 

இவ்வே = இங்கே, பீலி = மயிற்கண், கண்திரள் = பொருந்து, வாய் = திரண்ட, நோன்காழ் = வலிய காம்பு,கடியுடை = காவல் பொருந்திய = அவ்வே = அங்கே, கோடு = காம்பின் பகுதி, நுனி கொற்றுறைக்குற்றிலம் கொல்லனது உலைக்களம், பதம் உணவு, இல்லோர் = ஏழையர், ஒக்கல் = சுற்றம், வைந்நுதி = கூரிய நுனி, கோமான் = அதியமான்.

– புறநானூற்றுச் சிறுகதைகள், இரண்டாம் பதிப்பு, டிசம்பர் 2001, தமிழ்ப் புத்தகாலயம், சென்னை

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *