வீரச்சிதைவு!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: January 2, 2024
பார்வையிட்டோர்: 1,849 
 
 

உத்தமனுக்கு மனம் படபடவென அடித்துக்கொண்டது. உடல் பதட்டத்தால் நடுங்கியது. காவலுக்கு நின்றிருந்தவனை ஒரு நாட்டின் இளவரசி திடீரென கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தால் யாருக்குத்தான் உயிர் பயம் வராது? உயிருக்கு பயப்படாமல் எதிரி நாட்டு வீரர்களை எதிர்த்துப்போரிட்டு மார்பில் பல விழுப்புண்களைத்தாங்கிய வீரன் என்றாலும் ஒரு பெண்ணின் செயலுக்கு பயப்படும் கோழையாகிவிட்டதை எண்ணி கவலை கொண்டான். தனக்குள் வானுயர வளர்ந்திருந்த வீரம் ஒரு பெண்ணால் சிதைந்து போவதை அவனால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.

ஒரு பெண்ணைக்காக்க அரண்மனையில் இருப்பதை விட மண்ணைக்காக்க நாட்டின் எல்லையில் இருப்பது நல்லது என நினைத்தவன் தன் தளபதியை சந்தித்து தன் விருப்பத்தைச்சொன்னான்.

“இளவரசிக்கு உன்னைத்தான் பிடித்திருக்கிறது”.

மன்னரும் இளவரசியின் விருப்பப்படியே காவலர்களை நியமிக்குமாறு உத்தரவிட்டிருக்கிறார். இளவரசிக்கு திருமணமாகி அவரது கணவரது நாட்டுக்கு போனாலும் அங்கேயும் நீயே காவலுக்கு நிற்க வேண்டியது வரலாம்” என தளபதி வர்மன் கூறியதைக்கேட்டு மயக்கமே வரும் போல் இருந்தது.

வெட்டப்போகிற ஆட்டின் கழுத்தில் போடப்படும் மாலையாக இருந்தது அவரின் பேச்சு. இளவரசி விரும்பும் அளவுக்கு தான் அழகானவனும் இல்லை. அரசனும் இல்லை. சாதாரண காலாட்படை வீரன். என்னைப்போய் இளவரசி விரும்புகிறாள் என்றால் எனது நேரம் வலுத்திருக்க வேண்டும். அல்லது இளவரசிக்கு நேரம் கெட்டிருக்க வேண்டும். இந்த விசயம் மன்னருக்குத்தெரிந்தால் தன்னை அரண்மனையைச்சுற்றியுள்ள அகழியில் இருக்கும் முதலைக்கு உணவாக்கி விடுவார் என நினைத்த போது பதட்டம் கூடியது.

“என்ன காவலரே… ஒரே யோசனையில் ஆழ்ந்து போய் விட்டீர். நான் நான்கு முறை அழைத்தும் எனது பேச்சு காதில் விழவில்லை. வீட்டைப்பற்றிய யோசனையா? அல்லது காதலி யாராவது இருக்கிறாரா?” இப்படியொரு கேள்வி இளவரசி முத்தரசியிடமிருந்து வரும் என உத்தமன் எதிர்பார்க்கவில்லை.

“இல்லையில்லை. அப்படியெதுவும் இல்லை. இரவு தூங்காததால் உடல் சோர்வு. என்னை மன்னித்து விடுங்கள் இளவரசியாரே….” என குனிந்து வணங்கி கேட்டுக்கொண்டான்.

“இந்த வளைந்து, நெளிந்து, வணங்கி பேசுவதெல்லாம் என்னிடம் வேண்டாம். நீ, வா, போ என பேசலாம். தற்போது நான்கு முறை அழைத்தும் பேசாததற்கு ஒரு சிறிய தண்டனை இருக்கிறது. அதை மட்டும் ஏற்றுக்கொள்ள வேண்டும். உள்ளே வாருங்கள் ” என உத்தமனின் இரும்பு போன்ற கையை பூப்போன்ற இளவரசியின் வலது கை பற்றிய போது அச்சத்தின் உச்சத்தையே பார்த்தான்.

அந்தப்புறத்தில் வேலை செய்து கொண்டிருந்த பணிப்பெண்களை அழைத்து உத்தமனுக்கு பன்னீரால் குளிக்க ஏற்பாடு செய்தாள். அரசருக்குரிய ஆடையை அணிந்து கொள்ளச்சொன்னாள். பஞ்சணை தயாராக அவனை வரவேற்றது. உயர் ரக வாசனைப்பொருட்களின் நறுமணம் மூக்கை முதலாக மகிழ்வித்தாலும் மனபயம் கொஞ்சம் கொஞ்சமாக அவனது உயிரைத்திண்ணத்துவங்கியது.

இளவரசியின் மேனியழகு சிலிர்க்க வைத்தது. ‘சொர்க்கம் என்பது இதுதானா? சுந்தரி என்பவள் இவள்தானா?’ என ஒரு பக்கம் மனம் மகிழ்ச்சியை கொண்டாடத்தயாரானது. 

“அன்பே” எனக்கூறிய படி வீரன் உத்தமனைத்தொட்டுத்தழுவிட அருகில் வந்த இளவரசியின் நலினமான நடையழகிலும், நம்ப வைக்கும் நடிப்பிலும் தங்களை மறந்து ரசித்த பார்வையாளர்கள் விசிலடித்து, கை தட்டி வரவேற்றதால் முதல் வரிசையில் அமர்ந்திருந்த நாடக அமைப்பாளர் முகத்தில் மகிழ்ச்சி பொங்கிட, எழுந்து நின்று கைதட்டியதைப்பார்த்த நாடக நடிகர்கள் ஒரு மாத சம்பள பாக்கி இன்று தங்களுக்கு கிடைக்கப்போகிறது என்பதையெண்ணி மகிழ்ந்தனர்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *