கதையாசிரியர்:
தின/வார இதழ்: இதயம் பேசுகிறது
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: September 6, 2023
பார்வையிட்டோர்: 3,280 
 
 

“ஏய் கிழவா… துட்டு வச்சுருக்கியா?”.

கேட்டவனுக்கு ரெளடிக்கான சகல அம்சங்களும் இருந்தன. நிறைய குடித்திருந்தான். பஸ் ஸ்டாப்பை ஒட்டிய மரத்தடியில் சரிந்திருந்தான்.

சிவராம சாஸ்திரிகள் குரல் வந்த திசையை வெறுப்புடன் பார்த்தார். பார்த்ததும் துணுக்குற்று வேறு பக்கம் முகம் திருப்பிக் கொண்டார்.

அவர் போதாத காலம் 18-ம் நம்பர் பஸ் இன்னும் வரவில்லை. வேறு ஏதாவது பஸ் வந்தால்கூட பரவாயில்லை. இந்த இடத்தை விட்டு ஒழியலாம் என பதைபதைப்புடன் நோட்டம் விட்டார்.

பஸ் ஸ்டாப்பில் கூட்டம் ஓரளவிற்கு இருந்தாலும் வேடிக்கை பார்ப்பதாகத்தான் இருந்தது. மக்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாய் நின்று கொண்டு பஸ் வரவையும் அவனின் அடுத்த நடவடிக்கையையும் பார்த்தவாறு இருந்தனர். ஒரு சிலர் பயத்துடன் தள்ளி நின்றனர்.

அவன் சிரமப்பட்டு எழுந்து நின்றான். உடம்பு தள்ளாடியது. அருகில் படுத்திருந்த நாயை ஓங்கி ஒரு உதை விட்டான். அது ஈன ஸ்வரத்தில் முனகிக் கொண்டே ஓடி மறைந்தது.

“…த்தா. கூப்டன்ல. இங்க வாடா…” பஸ் ஸ்டாப் பயணிகள் கொஞ்சம் கலவரம் அடைந்தார்கள். ஏதோ விபரீதம் நடக்கப் போகிறது என்பதை உணர்ந்து முகம் சுளித்தார்கள்.

அவன் நெருங்கிவிட்டான். சாஸ்திரிகள் மிகக் கலவரமானார்.

“போடா… எங்கிட்ட வம்பு வச்சுக்காதே… போலீசைக் கூப்பிடுவேன்.”

“போலீஸ்… பெரிய போலீஸ். எங்கிட்ட வருவானா ஒரு பய. காசு எங்க வச்சுருக்க. மரியாதையா கொடுத்துடு. இல்லே நடக்கறதே வேற.”

சாஸ்திரிகள் சட்டை அணியவில்லை. பணத்தை வேட்டியில் முடிந்திருந்தார். மிக ஒல்லியான தேகம். திமிறினார்.

அவன் குடித்திருந்தாலும் வலுவான பிடியினால் சீக்கிரமே கீழே விழுந்தார். ‘நச்’ என்று பின் மண்டை தரையில் பட்டது.

இறுக்கிக் கட்டிய வேட்டி லேசாக அவிழ்ந்து, காசுகள் சிதறின.

“என்ன… நீங்கள்ளாம் பார்த்துண்டு இருக்கேளே. கேட்கப்படாதோ? இவனுக்கு சாவு வரமாட்டேங்கறதே…”

வயசானவர் அலறியது எல்லோ மனசையும் பிழிந்தது. பின் மண்டையில் கல் குத்தியிருக்க வேண்டும். ரத்தம் லேசாக வந்தது.

“நாங்களும் பார்த்துக்கொண்டே இருக்கோம். ரெளடித்தனமா பண்ணறே ராஸ்கல்?” கூட்டத்திலிருந்து ஒரு சிலர் அவன் மீது பாய்ந்தனர். சிதறிய காசுகளை அள்ளிக் கொண்டிருந்த அவன் நிலை குலைந்து விழுந்தான்.

அவ்வளவுதான்! தர்ம அடி தொடங்கி விட்டது. சிறிது நேரத்தில் பெரும் கூட்டம் சேர்ந்து விட்டது.

ஒரு சிலர் ஓடி வந்து சில்லரைக் காசுகளையும் பறந்த ரூபாய்களையும் பொறுக்கி அவரிடம் கொடுத்தனர். சிவராம சாஸ்திரிகள் குலுங்கி குலுங்கி அழுதார்.

“சார், ஏன் சார் அழுவுறீங்க? பலமா அடி பட்டுடுச்சா? ஆட்டோ எடுத்தாரட்டுமா?”

“குழந்தைகளா. அடி உடம்புல இல்லப்பா. மனசுல… மனசுல…” பெரிசாய் வாய் விட்டு அழுதார். நெஞ்சில் ஓங்கி ஓங்கி அறைந்து கொண்டார்.

“என்ன சார்? சொல்லறது புரியல்லே.”

“நீங்கள்ளாம் அடிச்சு மொத்தறேளே. அவன் வேற யாருமில்லேப்பா. என் பையன்பா… என் பையன்… எல்லாம் என் ஜன்மாந்திர பாவம்பா… பாவம். உருப்படாம போய் பேரு கெட்டு, என் மானத்தை வாங்கறான். இவன் செத்துத் தொலைஞ்சா என்ன ?”

இவருக்கு இப்படிப்பட்ட பிள்ளையா ?

கூட்டத்தினர் விக்கித்துப் போயினர்.

– 1995 நவம்பர் 26 இதயம் பேசுகிறது

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *