காற்றும் கதிரவனும்

0
கதையாசிரியர்:
கதை வகை: மொழிபெயர்ப்பு
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: June 16, 2023
பார்வையிட்டோர்: 6,113 
 
 

நானும் நீயும் உள்ளவரை நான், நீ, எனது ,உனது என்ற எண்ணங்களில் இருந்து பிரபஞ்சத்தில் எதற்கும் விடுதலை இல்லைப் போலும்.இந்த எண்ணங்கள் இல்லை என்றால் நானும் நீயும் இணைந்த எமக்குமட்டுமல்ல பிரபஞ்சத்தை படைத்தவனுக்கும் சுவாரசியம் இல்லாது போயிருக்கக் கூடும்.

இந்த எண்ணங்களிலிருந்து காற்றும் கதிரவனும் கூடத் தப்பிவிடவா முடியும்….?

காற்றுத் தேவனுக்கு பிரபஞ்சத்தில் தனது ஆற்றல் தான் பெரிது என்று ஒரு எண்ணம்….கதிரவன்தான் தனது ஆற்றலை உரசிப் பார்க்க ஓரளவுதானும் தகுதி வாய்ந்தவன் என்று அவனுள் ஒரு நினைப்பு..

காற்றுக்கு என்று ஒரு சக்தி, கதிரவனுக்கு ஒன்று ஒரு சக்தி.இரண்டும் வெவ்வேறு பரிமாணம் கொண்டவை. அவை தம்மளவில் தனித்துவமானவையும்கூட .

ஆனால் காற்றுக்கு ஏனோ குடைச்சல் .

சும்மா காய்ந்திருந்த கதிரவனை வம்புக்கு இழுத்தான் காற்றுத்தேவன்.

இரு ஆற்றல்களும் உண்மையாக மோதிக் கொண்டால் …அழிவு பெரிதாயிற்றே, வல்லரசுகள் தினவெடுத்து மோதும் போது, நடுவில் அகப்பட்ட நாடுகள் அவஸ்தைப்படுவது போல..இந்தப் பேறாற்றல்கள் மோதிக்கொண்டால் அல்லல் படப்போவது கிரகங்கள்…தானே கதிரவனுக்கு மோதிக்கொள்வதில் சிறிதும் சிரத்தையில்லை , சோம்பலோ சோம்பலாக இருந்தது,

பெரிய மோதல் வேண்டாம் ஒரு குட்டி மோதல்…இல்லை இல்லை அதுவும் வேண்டாம்… சின்னிவிரல் சுண்டலாய்,..ஒரு குஞ்சு மோதலாய்…மோதிக்கொள்வோம் என்றான் கதிரவன்…

அதுவும் சரிதான். அளவு பெரிது சிறிது என்பதா பிரச்சினை…? விகிதாசாரந்தான் முக்கியம். ஒப்புக்கொண்டான் காற்றுத்தேவன்.

பிரபஞ்சத்தைப் படைத்தவனுக்கோ சற்று ஏமாற்றம்தான். பெரிசாய் ஒன்றும் நடக்கப் போவதில்லை. பொழுது போகாது வெறுத்துக் கிடந்தவனுக்குச் சிறிதாகவேனும் ஒரு சம்பவம் நடப்பதையிட்டுத் திருப்திதான்…

பூமிப்பந்தின் ஏதோ ஒருமூலையில் ஒரு சிறு குறும் புள்ளித் துணுக்காய் மனிதன் ஒருவன் நடந்துகொண்டிருந்தான், அவன் கழுத்தினை அழகிய மேக வண்ணச் சால்வை ஒன்று அலங்கரித்துக் கொண்டிருந்தது.

கதிரவனுக்கு இலக்கு புலப்பட்டுவிட்டது.

கதிரவன் “காற்றுத்தேவனே! அந்தப்பாதசாரியின் கழுத்தில் உள்ள சால்வையினை யார் அகற்றுகிறாரோ அவர்தான் வெற்றியாளர், ஒப்புக்கொள்கிறாயா..?”.

காற்று “ஆம் ஒப்புக்கொள்கிறேன்”

உற்சாகத்துடன் பதில் அளித்தான் அவன்.

கதிரவன் – “முதலில் உன் முறை… தொடங்கு உன் வேலையை” சொல்லியவாறே தனது கதிர்க்கரத்தின் வெம்மையைத் தணித்துக் கொண்டான் கதிரவன்.

காற்றுத் தேவன் சற்று பலமாய் வீசினான். அதேசமயம் சூழலில் இருந்த குளிர்ச்சியையும் காவிவந்தான்.

காற்றின் வேகத்தால் நடக்கச் சிரமப்பட்ட அந்த மனிதன் குளிராலும் நடுங்கினான்..அதனால் காற்றில் பறக்காதவாறு சால்வையைப் பற்றி எடுத்துக் கழுத்தைச்சுற்றி மூடிக் கட்டி முடிச்சும் போட்டுக்கொண்டான்.

இதனால் காற்றால் எவ்வளவு முயன்றும் அவனைச் சிரமத்துக்கு உள்ளாக்க முடிந்ததே தவிர அவனது சால்வையின் முடிச்சை அகற்ற முடியவில்லை.

காற்றுத் தேவன் களைத்துப் போனான்…

தனது இயலாமைக்காக வருந்திய போதும் இப்பொழுதும் கதிரவனும் தோல்வியைத் தழுவுவான் என்றே அவன் நம்பினான்..

“இப்பொழுது உனது முறை . முயன்று பார்” எனச் சற்று ஏளனத்துடனேயே அவன் கதிரவனுக்கு வழிவிட்டான்.

கதிரவன் எதுவும்பேசாது தனது கதிர்வழியே வெப்பத்தை அதிகரித்தான்.

காற்று தன்னால் இயன்றவரை வீசி வெப்பத்தைத் தணிக்க முயன்ற போதும் அவனால் ஓரளவுக்கு மேல் முடியவில்லை.

பாதசாரியின் உடல் வெப்பத்தினால் வேர்க்கத்தொடங்கிற்று. அவன் தனது சால்வையையும் மேல் சட்டையையும் களற்றியவனாய் பெரும் நிழல் பரப்பியிருந்த மரத்தின் கீழ் அமர்ந்து ஆசுவாசப்படுத்திக் கொண்டான். முன்பு அவனை நடுங்கச் செய்த காற்றுத் தேவன் இப்பொழுது வெப்பத்தைத் தணிக்க அவனுக்கு உதவியிருந்தான்.

“என்ன கொடும் வெய்யிலடா, இந்தக் காற்று மட்டும் வீசாவிட்டால் புழுங்கியே செத்திருப்பேன்.” என்று கதிரவனை ஏசவும் காற்றுத் தேவனைப் பாராட்டவும் செய்தான் பாதசாரி .

காற்றுத் தேவன் தோல்வியால் வெக்கித் தலை குனிந்த போதும் பாதசாரியின் பாராட்டால் சற்று ஆறுதலடைந்தான்.

“சற்று முன்பு குளிரால் நடுங்கியது இந்த மனிதனுக்கு மறந்துவிட்டது” கதிரவனாலும் தனது வெற்றியை முழுதாய் அனுபவிக்க முடியவில்லை. .

படைத்தவன் இதழ் கடையில் புன்னகை ஒன்று மலர்ந்து .

– கிரேக்கமொழி மூலத்தின் (கி மு 15ஆம் ஆண்டு) தழுவல்

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *