கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: January 4, 2024
பார்வையிட்டோர்: 2,672 
 
 

ராஜா ‘நாணயம்‘ என்ற தலைப்பில் ஒரு சிறுகதை எழுதி தாமரை என்கிற வார பத்திரிகைக்கு அனுப்பியிருந்தான். ஒரு மாதம் கழித்து கதை பிரசுரமாகி காம்ப்ளி மென்ட் காபி தபாலில் வந்தது. கதை எடிட் செய்யப்படாமல் அப்படியே பிரசுரமாகி இருந்தது கண்டு தலை கால் புரியவில்லை. அடுத்த வாரமே சன்மானத் தொகை ரூபாய் 150 க்கான காசோலையும் கிடைக்கப் பெற்றான்.

கதையைப் படித்த ராஜாவின் பெற்றோர் பாராட்டினர். அக்கம் பக்கத்து நண்பர்கள் சிலரும் படித்து விட்டு வாழ்த்துகள் தெரிவித்தனர்.

இப்பொழுது பிரச்சினை என்னவென்றால் அந்தத் தாமரை வார இதழைக் காணவில்லை. ஹாலில் உள்ள மர அலமாரியில் வைத்ததாக நியாபகம். ஆனால் அலமாரி சுத்தமாகத் துடைத்து விட்டாற் போலிருந்தது. வேறு புத்தகம் கடைகளில் கிடைக்கும் வாங்கிக் கொள்ளலாம். அதில் ராஜாவிற்கு இஷ்டமில்லை. பத்திரிகை ஆஃபிஸிலிருந்து வந்த புத்தகம். அதன் மீது கொண்டிருக்கும் நேசமும் ஆத்மார்த்தமும் அவனுக்குதான் தெரியும். அந்தப் புத்தகம் காணாமல் போனது மனசுக்கு கஷ்டமாயிருந்தது.

“ராஜா, என்னப்பா தேடறே? ஏதாவது முக்கியமான டாக்குமென்ட் காணோமா?”

ராஜா அருகில் வந்து அவன் தந்தை கேட்க அலமாரியில் வைத்திருந்த ‘ தாமரை’ இதழ் காணாமல் போனது பற்றி மிகவும் வருத்தத்துடன் சொன்னான் ராஜா.

“அடாடா ! நேத்துதான் உங்கம்மா அலமாரியில் இருந்த பேப்பர்களை பழைய பேப்பர்காரனுக்குப் போட்டாள். ஒருவேளை நீ தேடற அந்தப் புஸ்தகமும் சேர்ந்து போயிருக்கும். எதுக்கும் அம்மாவைக் கேளு!”

தந்தை சொன்னதைக் கேட்டு தலையில் இடி விழுந்தாற் போல் துடித்துப் போனவன், வில்லில் இருந்து புறப்பட்ட அம்பு மாதிரி விரைந்தோடினான் கிச்சனுக்கு.

“அம்மா, நேத்து பழையப் பேப்பர்களை யாருக்குமா போட்டே?” என பட படத்தான்.

“எதுக்கு கேட்கறே?” ஒன்றும் புரியாமல் அம்மா கேட்க பட படப்பு அதிகமானது ராஜாவிற்கு.

“அதொடு கூட என் கதை வந்திருந்த தாமரை புஸ்தகமும் வெச்சிருந்தேன். நீ பேப்பர்களோட அந்தப் புஸ்தகத்தையும் சேர்த்து போட்டுட்டியேம்மா!” ஏறக்குறைய அழும் நிலைக்கே வந்துவிட்டான் ராஜா.

“எனக்கென்னடா தெரியும்? ஏன், நீ ஜாக்ரதையா புஸ்தகத்தை உன்னோட ரூமுக்குள் வெச்சிருக்க வேண்டியதுதானே. இப்போ வந்து என்னைக் குற்றம் சொல்றே!” பதிலுக்கு சாடினாள் அம்மா.

“சரி, யாரும்மா வந்து வாங்கினாங்க?”

“மாணிக்கம்.”

மாணிக்கம் யாரென்று தெரியும் . தெருக்கோடியில் ‘தேவி’ பழைய பேப்பர்ஸ் வாங்கும் கடையின் சொந்தக்காரன்.

உடனே கடைக்கு பறந்தான் ராஜா. ஆனால் கடையில் மாணிக்கத்தைக் காணவில்லை. மாறாக அவனது மகன் அமர்ந்திருந்தான். அவனை தெரியும் ராஜாவிற்கு. பையனுக்கும் ராஜா இன்னாரென்று தெரியும்.

“வாங்க சார்! என்ன சார் வேணும்?”

மேலே அண்ணாந்து பார்த்தான் ராஜா. கண்களுக்கு , கயிற்றில் வரிசையாகத் தொங்கிக் கொண்டிருந்த பத்திரிகைகளுக்கு இடையில் ‘தாமரை ‘ இதழும் தெரிந்தது. அதன் அட்டையின் மேலே போட்ட தன் இனீஷியலைக் கண்டதும் போன உயிர் திரும்பி வந்தாற் போல் இருந்தது. நல்ல வேளை, யாரும் தாமரை இதழை வாங்க வில்லை…அவனுக்கு ஆசுவாசமாக இரு ந்தது.

“தம்பி, அந்தத் தாமரை புக் வேணும்” ராஜா சுட்டிக் காட்டிய புத்தகத்தை எடுத்த பையன் அதன் விலையைப் பார்க்க 30 ரூபாய் என போட்டிருந்தது.

“சார், 15 ரூபா கொடுங்க.” என புத்தகத்தை நீட்டினான் பையன்.

விலையைக் கேட்ட ராஜா திடுக்கிட்டான்.

“டேய், ஒரு கிலோ பேப்பர் வாங்கிக்கிட்டு உங்கப்பா இருபது ரூபாதான் கொடுப்பாரு. நீ புக்குல பாதி விலை கேட்குறயே, அநியாயமா தெரியல்லே?” கோபத்தில் இரைந்தான் .

“அதெல்லாம் எனக்குத் தெரியாது சார்! இஷ்டமிருந்தா கேட்ட பணத்த கொடுத்துட்டு புக் வாங்கிட்டுப் போங்க. இல்லேன்னா வேற ஒருத்தர் வாங்கிக்கிறேன்னு சொல்லிட்டுப் போயிருக்கார்.. அவருக்காகதான் நான் வெயிட் பண்ணிக்கிட்டிருக்கேன்“ கூசாமல் பொய் சொன்ன பையனின் நிர்தாட்சியமான போக்கு ராஜாவை யோசிக்க வைத்தது.

வேறு வழியில்லாமல் அவன் கேட்ட 15 ரூபாவை கொடுத்து விட்டு இதழைப் பெற்றுக் கொண்டான் ராஜா. பத்திரிகை ஆஃபிஸ் அனுப்பிய அதே இதழ். காணாமல் போய் திரும்பக் கிடைத்ததில் திருப்தி கலந்த சந்தோஷம்!

ராஜா வீட்டுக்குத் திரும்பிய சிறிது நேரத்தில் மாணிக்கம் சைக்கிளில் வந்தான்.

“வா மாணிக்கம். எங்க இவ்வளவு தூரம்?” ராஜா விசாரிக்க, “சார், கடைக்கு வந்து புஸ்தகம் வாங்குனீங்களா?” மாணிக்கம் கேட்டான்.

“ஆமாம் மாணிக்கம்! நேத்து எங்கம்மா தெரியாம பேப்பர்ஸ் கூட தாமரை புக்கையும் சேர்த்துப் போட்டுட்டாங்க . அதை வாங்கதான் உன் கடைக்கு வந்திருந்தேன்.“

“சரி, எவ்வளவு கொடுத்தீங்க?”

“உன் பையன் கேட்ட பணம் பதினைஞ்சு ரூபா கொடுத்தேன்.“

“தப்பு சார்!”

“ஏன் மாணிக்கம் பணம் கம்மியா…?”

சட்டென இடைமறித்தவன், “அய்யோ, அதில்ல சார்! முப்பது ரூபா புக்கை ரெண்டு ரூபாய்க்கும், ஐம்பது ரூபாய் புக்கை ஐந்து ரூபாய்க்கும் பையன் கிட்ட விற்கச் சொல்லியிருந்தேன். ஆனால் அநியாயத்துக்கு பதினைந்து ரூபாய்க்கு விற்றிருக்கான். அதோட புக் பேப்பர்ங்க கூட மிக்ஸாகி வந்திடிச்சு. அப்படி ஒண்ணும் வெயிட் இருக்காது. அதுக்கு விலை கெடையாது.. இந்தாங்க சார் நீங்க கொடுத்த பதினைஞ்சு ரூபா.” ராஜா கையில் பணத்தை திணித்து விட்டு திரும்பிச் சென்றான் மாணிக்கம்.

ஏறக்குறைய தான் எழுதிய ‘நாணயம்‘ என்கிற சிறுகதையில் சிருஷ்டித்த ஓரு கதாபாத்திரம் போல் மாணிக்கம் விளங்க சிலிர்த்துக் கொண்டான் ராஜா.

Print Friendly, PDF & Email

2 thoughts on “நாணயம்!

  1. தங்களின் மேன்மையான பின்னூட்டத்
    திற்கு மிக்க நன்றி திரு விஜய் அவர்களே !

  2. இதில் கதையின் போக்கு சிறப்பாக உள்ளது. கதாபாத்திரங்கள் அளவாடு பேச விடப்பட்டிருக்கின்றன. பெரும்பாலும் தேவையற்ற வசனங்கள் இல்லை என்று சொல்லலாம்.

    ஆனால் கதையின் கரு மிகவும் பழையது; இன்றைய யதார்த்தத்திற்கு அப்பாற்பட்டதாய் உள்ளது. ஏன் இந்த வறட்சி ஏற்படுகிறது? எத்தனையோ சம்பவங்கள், கருத்துக்கள் பேசப்படாமலும், எழுத்தில் ஆவணப்படுத்தப்படாதா என்ற ஏக்கத்திலும் கிடக்கின்றன.

    இன்றைய காலக்கட்டத்தில் தனிமனித ஒழுக்கங்கள் இல்லை என்றோ, அது வெளிப்படுவதில்லை என்றோ கூற முடியாது. ஆனால் அது வெளிப்படுத்தப்படும் முறைகள் நிறைய மாறிவிட்டிருப்பதைப் பார்க்க முடிகிறது.

    எவ்வளவோ சிரமங்களுக்கு மத்தியிலும், தார்மீக மனசாட்சிக்குக் கட்டுப்பட்டு நடக்கும் மனிதர்கள் இன்றைக்கும் இருக்கிறார்கள் என்றாலும், இவர்களின் வெளிப்பாடு நிறைய மாறி உள்ளது.

    ஒரு காலத்தில் ரோட்டில் எங்காவது ஒரு பொருள் கிடைத்தால், அதை போலிஸாரிடம் ஒப்படைத்து விடுவார்கள். இன்று ரோட்டில் கிடைக்கும் பொருளை யாரும் போலிஸாரிடம் ஒப்படைப்பதில்லை. அதேவேளையில் அதை எடுப்பவர் எல்லோருமே அப்பொருளுக்கு ஆசைப்படுவதும் இல்லை.

    அவ்விதத்தில் ரோட்டில் கிடைத்த பொருளின் மதிப்பும், எடுத்தவருக்கு அதன் தேவையும், அவரின் தனிமனித இயல்பும் ஒன்றோடொன்று ஊடுருவி அந்த நபர் ஒரு முடிவுக்கு வருகிறார். சில இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் இருக்கும் என்பதால், அந்தப் பொருள் எடுக்கப்பட்ட இடமும் கூட இன்றைய காலக்கட்டத்தில் ஒரு முக்கிய காரணியாக மாறி விடுகிறது.

    ஆகவே தனிமனித ஒழுக்கம் இன்று முற்றிலும் சீரழிந்து விடவில்லை என்றாலும், இந்தக் கதையில் வருவதைப் போன்ற நிலையில் இல்லை என்றே எனக்குத் தோன்றுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *